பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்

15 May 1985, New Caledonia --- Members of the FLNKS (Kanak and Socialist National Liberation Front) pro-independence party hold Melanesians and Wallisians loyalists hostage. | Location: Ponerihouen, New Caledonia, France. --- Image by © Philippe Boisserand/Sygma/Corbis
மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு  என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.
பிரான்சு நாட்டின் நிலப்பரப்பு 675000 ச.கி.மீ, இந்தியாவின் நிலப்பரப்பில் (3288000 ச.கி.மீ) ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு ஆனால் மக்கட்தொகையில் இந்தியாவினும் பார்க்க பலமடங்கு குறைவு (67.5 மில்லியன் மக்கள்). ஹெக்டார் ஒன்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மக்கட்தொகை என்பதால் பொருளாதாரப் பகிர்வில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லை. கிருத்துவ மதம் 80 விழுக்காடு மக்களின் மதமாக இருந்தபோதிலும், தீவிரமாக மதச்சடங்குகளை; சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் குறைவு. இனவெறி, நிறபேதம் ஆகியவை அண்மைகாலங்களில் தலைதூக்கியிருப்பது உண்மை என்கிறபோதும் நாஜிக்கள் கால அனுபவங்களை நினைவுகூர்ந்து, அக்கொடூரங்களைத் திரும்ப அழைப்பதில்லை என்றிருப்பவர்களே அதிகம். நாட்டின் ஒரே மொழியாக பிரெஞ்சு இருப்பது மிகப்பெரிய அனுகூலம்.
 
பொதுவாகவே பிற ஆயுதங்களினும் பார்க்க மொழி ஆயுதம் ஒப்பீடற்றது. தங்கள் மொழியின் பலத்தை அதன் வீச்சை மேற்கத்தியர்கள் நன்கு உணர்ந்தவர்கள். மார்க்ஸ் சமயத்தை போதைப்பொருள் என்றார். எனக்கென்னவோ மொழிதான் போதைப்பொருளாகப் படுகிறது. மேற்கத்தியர்கள் கொண்டுவந்த ஆங்கிலமும், பிரெஞ்சும், ஸ்பானிஷும் இன்று உலகின் இயல்புகளை புரட்டிப்போட்டிருக்கின்றன. தங்கள் மொழிக் கயிறுகொண்டு உலகின் பல பகுதிகளில் சுதந்திரக் குரல்வளைகள் வெகு எளிதாக நெறிக்கப்பட்டன. அதிகாரத்தால், பொருளால் சாதிக்காததை மொழியால் சாதித்தார்கள்.
கிட்டத்தட்ட 1000 கி.மீ நீளம் கிழக்கு மேற்காகவும் 1000கி.மீ நீளம் வடக்குத் தெற்காகவும் பரந்துகிடக்கிற மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பிரான்சு நாட்டின் 22 பிராந்தியங்களிலும் (தற்போதையை கணக்கின்படி கூடிய விரைவில் நிர்வாகச் செலவைக் குறைக்க இவற்றில் பதினைந்து பிராந்தியங்களை ஒன்றோடொன்று இணைத்து ஏழு பிராந்தியங்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது) தென் அமெரிக்காவில் கயானா; அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள குவாதுலூப், மர்த்தினிக் முதலான பிராந்தியங்கள்; பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு போலினெஸி, நூவல் கலெதொனி பிராந்தியங்கள்; இந்தியப் பெருங்கடலிலுள்ள ரெயூயூனியன், மயோத் முதலானவை; பிறகு அண்டார்டிக்க்கில் ‘லா த்தேர் அதெலி’ ஆகிய அனைத்துப் பிரதேசங்களிலும் பிரெஞ்சு மொழிதான் பிரதான மொழி.
பிரெஞ்சுப் பிரதேசங்களைப் பற்றி எழுத நினைத்த இவ்வேளையில், மொழிக்கும் பிரான்சுநாட்டின் அதிகாரத்தை ஆளுமையை திடப்படுத்தும் ஊட்டசக்தியாக பிரெஞ்சு மொழியின் பயன்பாடு இருக்கிறது என்பதைக் கூறுவது அவசியமாகிறது.  நாட்டில் பிராந்திய மொழிகள் உதாரணத்திற்கு அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் போன்றவை இருப்பினும் அவை பேச்சு மொழியாகவோ, சிறுபான்மையினர் மொழியாகவோ இருப்பதால் செல்வாக்கின்றி இருக்கின்றன.
பிரான்சு நாடு என்றாலே மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று என்பதில் 75 விழுக்காடுதான் உண்மை. ஏன் எனில் அதன் ஆட்சிக்கு உட்பட்ட பிராந்தியங்கள் கடல்கடந்து பிற கண்டங்களிலும் இருக்கின்றன.  காலனி ஆதிக்கத் தொடக்கத்தில்  பிரான்சு எதேச்சதிகாரமாக இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் கைப்பற்றிய தீவுப் பிரதேசங்கள் அவை. ஐரோப்பியர்களை அதிக எண்ணிக்கையில் குடியேற்றுதல், பிராந்திய உணர்வினை அழித்தல் அல்லது எதிரணியைத் திரட்டுதல், உள்ளூர் மொழி, பண்பாடு, சமயம் இபற்றை படிப்படியாக பொருளிழக்கச்செய்து தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரும்பான்மையினரின் ஆதரவில் கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்குமேல் ஆட்சி செய்துவருகிறது.
ஐரோப்பாவிலுள்ள பகுதியை ‘மேற்கு ஐரோப்பிய பிரெஞ்சுப் பிரதேசம்’ (la France métropolitaine) என்றும், மற்ற பிராந்தியங்களை கடல்கடந்த பிரெஞ்சுப் பிராந்தியங்கள்  (les collectivités d’outre-mer) எனவும் அழைக்கிறார்கள். இக்கடல் கடந்த பிராந்தியங்கள், மேற்கு ஐரோப்பாவிலுள்ள பிரெஞ்சுப் பிராந்தியங்களைக் காட்டிலும் கல்வி, பொருளாதாரம், தொழில் வளம், வேலைவாய்ப்பு அனைத்திலும் பின் தங்கியவை. பிரான்சு நாட்டின் முதன்மைப் பிரதேசங்கள் எனப்படுகிற ஐரோப்பாக் கண்டத்தில் இருக்கிற பிரெஞ்சுப் பிரதேசந்தை சார்ந்தே இக்கடல்கடந்த பிராந்தியங்கள் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். காலனிய அரசியலின் சனாதன தர்மம் இது. அவ்வபோது சமூகக் கிளர்ச்சிகள் வெடிப்பதுண்டு.  ஆனால் 1988ம் ஏப்ரல் மாதம் 22ந்தேதி  நடந்த சம்பவம், அவர்கள் தலைவிதியைத் தீர்மானிப்பதாக இருந்தது.
 
பிரான்சு நாட்டில் அதிபர் தேர்தல் நெருங்கிகொண்டிருந்த நேரம், பிரான்சு நாட்டுக்குச்சொந்தமான கடல் கடந்த பிராந்தியங்களில் நூவல் கலெதொனி பிராந்தியத்தில், கனாக் சோஷலிஸ்ட்  விடுதலை முன்னணி (Front de la Libération nationale Kanak Socialiste)  அமைப்பைச் சேர்ந்த இரு அங்கத்தினர்கள், யூனியன் கலெதொனியன் அமைப்பின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த அல்போன்ஸ் தியானு என்பவரைச் சந்திக்கிறார்கள். FLNKS உறுப்பினர்கள் இருவரும், யூனியன் கலெதொனியன் இளைஞரைச் சந்தித்த நோக்கம் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது. ஏற்கனவே அப்படியொரு கோரிக்கையையை முன்வைத்து காவல் நிலையமொன்றை முற்றுகையிட அவர்கள் கோரிக்க  நிறைவேறியுள்ளது.
ஆனால் இம்முறை அவர்கள் கோரிக்கை: நடக்கவிருக்கும் தேர்தலில் குறிப்பாக பிராந்திய நிர்வாகத் தேர்தலில் வாக்களிக்கிற உரிமை தீவின் பூர்வீக மக்களுக்கே உரியதென்றும்; அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட ஐரோப்பியருக்கு தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்க உரிமை இல்லையெனக்கூறி அரசாங்கத்திடம் தேர்தலை நடத்தக்கூடாதென்றார்கள். காவல் நிலையத்தை முற்றுகையிட முனைந்தபோது காவலர்கள் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இரண்டு காவலர்கள் உயிரிழக்கிறார்கள்.
காவல் நிலைய முற்றுகை இப்படியொரு இக்கட்டான் நிலமையில் முடிந்ததற்கு யூனியன் கலெதொனியனே காரணமென சொல்லப்படுகிறது. சிறை பிடித்தவர்கள் பிணைக்கைதிகளுடன் இரு பிரிவாக ஆளுக்கொரு திசைக்குச் சென்றனர். ஒரு பிரிவு அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு நிர்வாகத்திற்கு அடிபணிந்து சரணடைந்தது. மற்றொரு பிரிவு இடது சாரி அதிபர் பதவிலிருந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என நினைத்தார்கள்.  ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்தது.
அப்போது அதிபராக சோஷலிஸ்டுக் கட்சியை சேர்ந்த பிரான்சுவா மித்தரான் என்பவரும் பிரதமராக வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் என்பவரும் இருந்தார்கள். இருவரும்  அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள், எதிரெதிர் அணியில் நின்றார்கள். இப்பிரச்சினையில் கனாக் சுதந்திரப்போராளிகளுக்கு ஆதராவக எந்த முடிவினை எடுத்தாலும் அது பெருவாரியான ஐரோப்பிய பிரெஞ்சு மக்களின் வாக்கினை இழக்கக் காரணமாகலாம். எனவே வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ராணுவத் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளாக உள்ள காவலர்களை மீட்பதென்று முடிவெடுத்தார். இடதுசாரி அதிபர் மித்ரானும்  இதை ஏற்கவேண்டியக் கட்டாயம்.
விளைவாக ‘விக்டர் நடவடிக்கை யினால்’ (Opération Victor)   19 கனாக் போராளிகளைக் கொன்று ராணுவம் பிணைக்கைதிகளாக  இருந்த காவலர்களை ராணுவம் மீட்டது. இந்நடவடிக்கையில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள்.   ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பல போராளிகளை அவர்கள் பிடிபட்டபிறகு கொல்லப்பட்டார்கள் என்ற விமர்சனத்தை மனித உரிமை ஆணையம் வைத்திருக்கிறது. கனாக் அமைப்பினர், ராணுவம், நூவல் கலெதொனி தொடர்ந்து பிரெஞ்சு நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்கிறவர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கைக் குறித்து மாறுபட்ட கருத்தினை வைக்கிறார்கள். இந்நிலையில் வேறுவழியின்றி FLNKS பிரதிநிதி அரசாங்கத்த்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு  சில உறுதிமொழிகளைப் பெற்றதைத்தவிர பெரிதாக பலனேதுமில்லை.
அதிலொன்று 2014 -2018க் குள் பூர்வீகமக்கள் விரும்பினால் படிபடியாக ராணுவம், காவல்துறை, நீதித்துறை, நாணயம் இவை நீங்கலாக பிறவற்றில் சுதந்திரமாக செயல்படுவதற்கான அனுமதி. ஆனால் இவையெல்லாம் உண்மையில் நிறைவேற்றப்படும் என்பதற்கு  எவ்வித உத்தரவாதமுமில்லை. ஆக 1960 களில் ‘நூவல் கலெதொனி ‘பூர்வீக மக்கள் சொந்த நாடு குறித்த கண்ட கனவு 1988ல் சிதைந்த கதை இது. நூவல் கலெடொனிதவிர, கோர்ஸ், பாஸ்க் மக்கள் கூட தங்கள் சுதந்திரத்திற்காக கனவுகொண்டிருப்பவர்கள்தான். ஆனால் அக்கனவு நிறைவேற பிரான்சு நாட்டின் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் அனுமதிக்காது என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.