ஜனநாயக நாட்டில் சில சமயங்களில் தனிநபரான தலைவர்களின் மூலமாக மட்டுமே ஜனநாயகம் முன்னேறும். ஒரு நாட்டின் தலைவர், தனிப்பட்ட தலைவராக மட்டுமே அல்லாமல் கோடானு கோடி மக்களின் ஆதர்சங்களை பிரதிபலிக்கும் தலைவராகிறார். கோடானு கோடி மக்களின் ஆழ்மனப் பிரதியாக லட்சிய உருவமாக அவர் உருவெடுக்கிறார். அவரிடம் நமது லட்சியங்களை நமது எதிர்பார்ப்புகளை நமது கொள்கைகளைக் காண்கின்றோம் அந்தக் கோடானு கோடி நல்லெண்ணங்களின் தொகுப்பாக அவர் உருவாகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கடந்த செப்டம்பர் 27,28 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை மாகாணமான கலிஃபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்திருந்தார். பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களைச் சென்று பார்த்தார். ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்
பிரதமரின் கலிஃபோர்னியா வருகைக்கான நோக்கங்களைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்:
- இந்தியாவில் பிரதமர் மோதி திட்டமிட்டு வரும் டிஜிட்டல் இந்தியா (”எண்ணியல் இந்தியா”) என்ற மாபெரும் திட்டத்திற்கான தொழில் நுட்ப மற்றும் கட்டுமான – நிர்மாணப் பணிகளுக்கான ஆதரவுகளை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோருதல்
- இப்பகுதியில் உள்ள ஏராளமான இந்திய வம்சாவழியினர்களை இந்தியாவில் தொழில் துவங்குமாறு, தங்கள் நிறுவனங்களை இந்தியாவில் துவக்குமாறு கோருதல்
- இப்பகுதி வாழ் தொழில் முனைவோர்களிடத்தும், இந்தியர்களிடத்தும் — இந்தியாவின் மாறி வரும் அரசியல் பொருளாதாரச் சூழல்களையும், தொழில் துவங்குவதை வசதியாகச் செய்யத் தன் அரசு செய்து வரும் ஏற்பாடுகளையும் விளக்குதல்
- இப்பகுதி வாழ் இந்தியர்களைச் சந்தித்து — இந்தியாவுக்கு அவர்கள் ஆற்றி வரும் பணிகளுக்கு நன்றி கூறுதல். இந்தியா சந்தித்து வரும் மாற்றங்களையும், அது எதிர் கொண்டுள்ள கஷ்டங்களையும் விளக்குதல்
- அமெரிக்க அரசியல்வாதிகளிடமும் நிறுவனங்களிடமும் இந்தியர்களின் வலிமைகளாக, நாடெங்கிலும் இப்போது கிட்டும் தொழில் அறிவையும், அரசியல் பொருளாதார ஒற்றுமையையும் பறைசாற்றுதல். அவர்களுக்கு தனிப்பட்ட கவனிப்பையும் மரியாதையும் உருவாக்கி அமெரிக்க அரசின் கவனத்தைக் கோருதல்
இவை தவிர்த்து இன்னும் பல நோக்கங்களும் பிரதமரின் பயணத் திட்டமாக இருந்திருக்கலாம். இப்போதைக்கு மேலே சொல்லப்பட்டவற்றை சாதிக்கவென நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளையும், அவை தரப் போகும் பலன்களையும், இத்திட்டங்களை எதிர் நோக்கியுள்ள சவால்களையும், சங்கடங்களையும், சிக்கல்களையும் இங்கு சற்று காணலாம்.
நான் மோதியை வரவேற்க சான் ஓசே விமான நிலையம் சென்றிருந்தேன். காவல்துறையின் பந்தோபஸ்துகள் முன்னே வர பின்னால் வண்ண விளக்குகள் ஒளிர போலிஸாரின் கார்கள் வந்து கொண்டிருந்தன அதைத் தொடர்ந்து மோதியின் 15 வாகனங்களும் ஃப்ரீமாண்ட்டில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் பாதையில் நுழைந்தன. மதியம் 1.30 மணிக்குத்தான் விமானநிலையத்திலிருந்து அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு கூடியிருந்த இந்தியர்களிடம் எல்லாம் கை குலுக்கி விட்டுச் சாப்பிட்டு விட்டு 3 மணிக்கு டெஸ்லா மோட்டார்ஸில் இருந்தார். ஒரு ஐந்து நிமிட ஓய்வு கூட எடுக்காமல் ஒரு மணி நேரத்திற்குள் அடுத்த நிகழ்ச்சி வருமாறு, தனது நிகழ்ச்சி நிரலை அவ்வளவு நெருக்கமாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
நியூயார்க்கில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு அந்த கடும் வெயில் நாளில் சில நிமிடங்கள் கூட ஓய்வு எடுக்காமல் தன் பணியில் தனது நோக்கத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாகச் செயல் படுகிறார் என்பதை வந்திருந்தவர்கள் உடனே அறிந்தார்கள்.
oOo
டெஸ்லா நிறுவனம் உலகத்தின் எரிசக்திப் பயன்பாட்டின் பாதையையே மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். (தொடர்புள்ள சொல்வனம் கட்டுரை: கருவிகளின் இணையம் – தனியார் போக்குவரத்து உலகம் – பகுதி 3). அதன் தலைவர் ஈலான் மஸ்க் இந்த உலகும் இயங்கும் விதங்களை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பவர். சாதனை மனிதர்.
அரசியலில் மோதி போன்று அறிவியல் தொழில் நுட்பத்தின் மோதி அவர். (தொடர்புள்ள கட்டுரை: எந்தக் காரிலும் இல்லாத ஒன்று…) அவர் நிறுவனம் தயாரிக்கும் மின்கலம் கொண்டு இயங்கும் மாடல் எஸ் கார்கள், ஒரு முறை முழுதும் மின்னூட்டம் செய்தால் 300 மைல்கள் ஓடக் கூடியவை. பெட்ரோல் தேவையில்லை. காரை மின்னூட்டம் செய்யத் தேவையான மின்சாரத்தை உருவாக்கும் சூரியவொளித் தகடுகளைத் தயாரிக்கும் ஸோலார் ஸிட்டி (SolarCity) என்னும் சூரியஒளி வழி சக்தி நிறுவனத்தையும் அவர் நடத்துகிறார். (தொடர்புள்ள கட்டுரை: எண்ணெய்யும் தண்ணீரும்: கடவுள் பாதி, மிருகம் பாதி). ஸோலார்சிடி நிறுவனம் கலிஃபோர்னியா வீட்டுக் கூரைகளையெல்லாம் சூரியவொளிக் கூரைகளாக மாற்றி வருகின்றது. சூரியப்பலகங்கள் உருவாக்கும் மின்சாரத்தை சேமிக்கும் சிறிய சுவற்றில் மாட்டும் கலன்களையும் டெஸ்லா நிறுவனம் புதிதாக வடிவமைத்து நவீனமாகத் தயாரிக்கின்றது.
இவை தவிர இவரது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்வெளி நிறுவனம் குறைந்த செலவில், துரித காலத்தில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுகிற முயற்சியில் இருக்கிறது. அவரது நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் இந்தியாவின் எரிசக்தி தேவையை பெரும் அளவில் குறைக்கக் கூடியவை. அவரது கார்களும் சூரியவொளித் தகடுகளும் மின்கலன்களும் (பேட்டரி) இந்தியாவில் உற்பத்தி செய்யவும் டெஸ்லாவின் திறமூல தொழில்நுட்பங்களை இந்தியாவில் பெரும் அளவு பயன் படுத்தவும் பிரதமர் முயற்சி செய்கிறார். அதன் விளைவு இந்தியாவின் எதிர்காலத்தை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடியது.
டிஜிடல் இந்தியாவிற்காக எடுத்து வரும் முயற்சிகளுக்கும் பிரதமரின் டெஸ்லா விஜயத்திற்கும் ஈலான் மஸ்க்குடனான அவரது சந்திப்பிற்கும் என்ன முக்கியத்துவம்? சரியான ஒப்பந்தங்கள் உருவானால் இந்தியாவின் எரிசக்தி தேவை பெரும் அளவு குறையும். இந்தியாவின் வாகனஙகள் எல்லாம் நச்சுப்புகை கக்காத, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்கல வாகனங்களாக மாறும். பெரும் அளவில் மாசு கேடுகள் குறையும். இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பு அதிகரிக்கும். ஸ்பேஸ் எக்ஸுடனான ஒப்பந்தங்களும் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு பரஸ்பரம் உதவும்.
இவற்றைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதம மந்திரி, கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கும் சென்று அங்கும் உரையாறினார். அவர்களின் பல்வேறு பயன்பாடுகளை இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை ஆலோசித்தார்
இதையெல்லாம் விட முக்கியமானவை, இந்த மாதிரி முயற்சிகளை இத்தனை பெரிய அளவில், இவ்வளவு முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் இந்தியாவில் இருந்து செய்ததில்லை. சீனா போன்ற நாடுகள் அமெரிக்க மற்றும் மேற்கத்திய பெருவணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தில் வந்து எங்கள் நாட்டில் ஐஃபோன் தயாரியுங்கள் என்று கூறுவார்கள். வெளிநாட்டில் வாழும் வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலவாணி ஈட்டித் தரும் இந்தியர்களை ஒரு பொருட்டாக மதித்து நேரில் வந்து சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து உரையாடுவதில் மோதி முன்னோடியாக இருக்கிறார். மோதி ஒவ்வொரு நாட்டிலும் சென்று அங்கு வாழும் இந்தியர்களுடன் உரையாடி வருகிறார். அவர்களை இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்.
கணினி வழியும் நிரல்கள் மூலமாகவும் கோடிக்கணக்கான வேலைகள் இந்தியாவில் உருவானாலும், இங்கு வந்த மத்திய மந்திரிகள் கொள்கை பரப்பு செயலாளராகத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சென்று அவர்களின் குறைகளை அறிந்து, நிவர்த்தி செய்ய உறுதியளித்து இந்தியாவிற்கு வருமாறு இவ்வாறு நேரடியாக அழைப்பு விடுத்ததில்லை. இந்தியாவின் மற்ற தலைவர்களில் இருந்து, தற்போதைய பிரதம மந்திரியை இது வித்தியாசமாக உணரவைக்கும்.
கலிஃபோர்னியாவில் இறங்கியவுடன் முதன் முதலாக டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவன வளாகத்திற்கு அதிகாரபூர்வமாக கால்பதித்தார் பிரதமர். ஆனால், அதற்கு முன்பாக மோதி இப்பகுதி வாழ் குஜராத்திகளிடமும் மற்றும் பல இந்தியர்களிடமும் பேசி விட்டு வந்திருந்தார். இரு நாட்களிலும் தொடர்ந்து பல்வேறு தரப்பிலான இப்பகுதி வாழ் இந்தியர்களை சந்தித்துக் கொண்டேயிருந்தார். சி இ ஓக்களின் (CEO) சந்திப்புகள் தவிர பிற அமெரிக்க இந்தியர்களும் அவரை தொடர்ந்து சந்தித்தும் பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பிப்பதுமாக இருந்தனர். அமெரிக்கா வாழ் குஜராத்தி பட்டேல்கள், ஆந்திர மாநிலப் பிரதிநிதிகள், பஞ்சாப் சீக்கியர்கள் என்று ஏராளமான பல்வேறு இந்திய மாநில மக்களும் அவரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை அவரிடம் அளித்தனர். இது வெறும் முதலீடுகளுக்கான பயணமாக மட்டுமே அமையாமல், தொழில்முனைப்போடு புதிய விஷயங்களை தாய்நாட்டில் துவக்க நினைக்கும் இந்தியர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் நம்பிக்கையை விதைக்கவும் அவர்களை மதித்துச் சந்தித்து, உறுதி அளித்து. நிறைய வாய்ப்புகளை இந்தியாவில் ஆரம்பிக்கவைக்கும் பயணமாகவும் அமைந்திருந்தது.
இந்தியா போன்ற தொலை தேசங்களில் இருந்து வரும் சில அதிகாரிகளும் பல மந்திரிகளும் தங்கள் பயணத்திட்டத்தை சரியாகத் திட்டமிடாமல் பாதி நேரம் அலுப்பிலும் களைப்பிலும் ஜெட் லாகிலும் தூங்கிக் கொண்டேயிருப்பார்கள். இன்னும் சிலர் பண்டங்களை வாங்குவதிலும் பொழுதுபோக்கிற்குமே முதலிடம் அளிப்பார்கள்.
ஆனால் பிரதமர் மோதி இவர்கள் அனைவருக்கும் எதிராக, தான் வந்து இறங்கிய நொடியில் இருந்து அளவற்ற சக்தியுடனும் எல்லையில்லா ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வந்ததை நேரடியாகக் கண்டுணர முடிந்தது. அவரது 36 மணி நேர விஜயத்தில் அவர் நான்கு மணி நேரங்கள் மட்டுமே தூங்கியிருந்திருப்பார். நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் நிறுவனங்களுக்குச் சென்று அவற்றின் இயக்கத்தை பார்த்து அறிவதிலும்; அவற்றின் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதிலும்; அரசாங்கத் தலைவர்கள், பொது மக்கள் என்று சகல தரப்பினரிடமும் தன்னை எளிதாக அணுகவைப்பதிலும்; நிதி முதலீடு கோருவதிலும் தன் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பாரதத்தின் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு ஒரு துளிக்கூட வீணாக்காமல் செயல்பட்டார். இதைப் போன்ற அளவற்ற சக்தியுடன் செயல் பட்டதைப் பார்க்கும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகமும் கரைபுரண்டோடும் ஆர்வமும் உண்டானது. இதை நேரடியாகக் கண்டு உணர்ந்து இதைச் சொல்கிறேன்
டெஸ்லா மோட்டார்ஸிற்கு அடுத்ததாக, தனது எண்ணியல் இந்தியா திட்டத்தினை நிறைவேற்ற அமெரிக்காவின் முக்கியமான நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். சிஸ்கோ நிறுவனத்தின் ஜான் சேம்பர்ஸ், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, க்வால்காம் நிறுவனத்தின் பால், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ட்ஸக்கர்பர்க், அடோபி நிறுவனத்தின் தலைவர் என்று பலர் பங்கேற்றனர்.
மோதி முன் வைக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றால் என்னவென்று பார்ப்போம். அது வெறுமே இந்தியா முழுக்க பரவலாக அகலப் பாட்டை இணைய இணைப்பு கொடுப்பதோடு முடிவதில்லை.
எண்ணியல் இந்தியா திட்டம் என்பது அரசாங்கத்தின் மென்பொருள், இணைய மற்றும் அனைத்து சேவைகளையும் இந்தியா முழுவதற்கும் இணைப்பதற்குத் தேவையான அனைத்து விதமான வலை இணைப்பு கட்டுமானங்களையும் உருவாக்குவது. மேகக் கணினியம் (க்ளவுட் டேட்டா செண்ட்டர்கள்) அமைத்தல், கடைசி இணைப்பு வரையிலும் தேவையான வழிச்செயலிகள் (ரவுட்டர்கள்), வழங்கிக் கணினிகளை (சர்வர்) கட்டமைத்தல், அகலப் பட்டை அலைவரிசைகளை அதிகரித்தல், பயன்பாட்டுகளுக்குத் தேவையான மென்பொருள்களை உருவாக்குதல், அலைப்பேசி (மொபைல்) இணைப்புகளுக்கும் சேவைகளுக்குமான கட்டுமானங்களை உருவாக்குதல், இந்தக் கட்டுமானங்கள் தகவல்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான பாதுகாப்பு (செக்யூரிட்டி) வசதிகளை உருவாக்குதல்; அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும் பொது மக்களுக்கும் பிற பயனர்களுக்கும் இணையம் மூலமாக வழங்குதல்; எந்த சேவைக்காகவும் எந்தவொரு பொது மக்களையும் அரசு அலுவலகங்களுக்கு வராமல் காத்திருக்க வைக்காமல் காசு கொடுக்கத் தேவையில்லாமல் நேரடியாக எவர் தலையீடும் சிபாரிசும் இல்லாமல் வழங்குதல் போன்ற எண்ணற்ற நோக்கங்களை உள்ளடக்கியதே எண்ணியல் இந்தியா திட்டமாகும். அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நிதி முதலீடுகளும் தொழில் நுட்பங்களும் தேவை.
அவற்றை இந்தியாவிலேயே உருவாக்குவதற்காகவே அவற்றை உருவாக்கும் நிறுவனங்களிடம் வேண்டுவதற்காகவும் அவர்களை நேரில் சந்தித்து இந்தியாவின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்களை உதவ வேண்டியுமே பிரதமர் இப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இங்குள்ள இந்தியர்களை சந்திப்பதும் அவர்களிடம் பேசுவதும் அவரது முக்கியமான நோக்கம் அல்ல. பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களின் உதவிகளைக் கோருவதே அவரது முக்கியமான நோக்கம். நேரில் வந்து அவர்கள் நிறுவனத்திற்கே சென்று உதவியைக் கோருவது அந்த நிறுவனங்களிடம் பெரும் நன் நம்பிக்கையையும் நட்புணர்வையும் உருவாக்கும். நமக்குத் தேவையென்றால் நாம் தான் மலையை நோக்கிச் செல்ல வேண்டும். மலை நம்மை நோக்கித் தானாக வராது என்பதை உணர்ந்தவர் மோதி. சீனாவைப் போல் திருட்டுத்தனமாக, இந்த நுட்பங்களைக் கொள்ளையடிக்காமல், வெளிப்படையாக மோதி இயங்குகிறார்.
ஆக டிஜிடல் இந்தியாவின் மூன்று முக்கிய நோக்கங்களானவை
- எண்ணியல் கட்டுமானங்களை உருவாக்குதல்,
- அரசாங்கத்தின் சேவைகளை நேரடியாக எண்ணியல் தொழில்நுட்ப இணைய வசதிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்லுதல் மற்றும்
- எண்ணியல் தொழில்நுட்பம் குறித்தான விழிப்புணர்வையும் பரவலான பயன் பாட்டையும் மக்களிடம் உருவாக்குதல் ஆகியவையே
அவரது பயணத்தின் நோக்கம் பெரும்பாலும் வெற்றியை அடைந்திருக்கிறது என்பதை அவர் சந்தித்துள்ள நிறுவனங்களின் தலைவர்கள் அளித்துள்ள உறுதி மொழிகளைக் காணும் பொழுது உறுதிப் படுகிறது
சிலிக்கன் வாலி பகுதி எண்ணியல் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளிடம் பாரதப் பிரதமர் பேசியதைச் சுருக்கமாக பத்து புள்ளிகளில் கோர்க்கலாம்:
- எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக அனுமானிக்கின்றார்கள் — அது தவறு. ஒரு சாதாரண வாடகைக் காரோட்டியிடம் பேசினாலே எந்த அளவுக்கு எண்ணியல் நுட்பம் அவரது அன்றாடத் தொழிலுக்கு உதவுகிறது என்பதைச் சொல்வார். நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாகக் காண்கின்றேன். சாதாரண மக்களை வளப்படுத்துவற்குரிய அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் ஒரு கருவியாக உள்ளன.
- ஈ கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. மக்களின் தேவையை 24 மணி நேரத்தில் அல்ல வெறும் 24 நிமிடங்களில் நிறைவேற்றுவது. இந்தத் திட்டம் மூலமாக மின்ணணு அரசாங்கம் வலுப்படும். மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான, வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும். அதன் மூலமாக அரசாங்கம் மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் செலவு குறைவானதாகவும் வேகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இலகுவானதாகவும் இயங்கும்
- M-Governance: இந்தியாவின் அலைபேசி வளர்ச்சி என்பது இரட்டைப் படை எண் வளர்ச்சியாக உள்ளது. நூறு கோடி மக்களிடமும் செல்பேசி பயன்பாடு சென்றடைந்து வருகிறது. கைப்பேசி சாதனங்களின் பயன்பாடுகள் மூலமாக இந்தியாவின் அனைத்து மக்களையும் எளிதில் சென்றடைய முடியும். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் ஒரு எம் – ஆளுகை (எம் கவர்னென்ஸ்) இதன் மூலம் சாத்தியமாகும்.
- டாட்.இன்: எனது அரசாங்கத்தின் வலைத் தளமான மைகவ் டாட் இன் பயன்பாட்டினாலும் நரேந்திர மோதி என்னும் திறன்பேசி செயலியினாலும் மக்களுடன் நேரடியாக என்னால் தொடர்பு கொண்டு அவர்களின் குரலை கேட்க முடிகிறது. அதன் அடிப்படையில் செயலாற்ற முடிகிறது. அரசாங்கத்தின் இ பிஸ் (https://www.ebiz.gov.in/) தளத்திற்கு வியாபாரிகள் மற்றும் மக்களின் அரசாங்க வேலைகளை எளிதில் செய்ய உதவ முடிகிறது. வணிகர் மற்றும் பொது மக்களின் பெரும்பாலான சேவைகளை மிக எளிதாக விரைவாக ஊழலின்றி அளிக்க முடிகின்றது
- தகவல், கல்வி, தொழில் கல்வி, பொது சுகாதாரம், அன்றாட வாழ்வியல் தேவைகள், பொருளாதார பயன்பாடுகள், சிறிய மற்றும் கிராமப்புற தொழில் நிறுவனங்கள், பெண்களுக்கான வாய்ப்புகள், இயற்கை வளங்கள், சுத்தமான எரிசக்தி போன்ற அனைத்து விதமான நிர்வாகங்களிலும் எண்ணியல் இந்தியா மூலமாக பெரும் மாறுதல்களைச் செய்ய முடியும். ஆனால் இவற்றை நிறைவேற்றுவதற்கு முதலில் எண்ணியல் வேறுபாட்டை அகற்ற வேண்டும். சாதாரண அடிப்படைக் கல்வியை அளிப்பது போலவே எண்ணியல் அடிப்படை அறிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், வளர்க்க வேண்டும்
- 125 கோடி மக்களை இணையம் மூலமாகவும் அலைப்பேசி தொழில்நுட்பம் மூலமாகவும் முதலில் இணைக்க வேண்டும். ஏற்கனவே அகலப் பட்டை பயன் பாடு 63%க்கும் மேலாக கடந்த வருடத்தில் மட்டும் அதிகரித்து 35கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது. இதை மேலும் விரைவு படுத்தி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவின் 22 மொழிகளிலும் இணைய வழி சேவைகளை வழங்கவுள்ளோம். இது ஒரு அசாத்தியமான ஆனால் முக்கியமான ஒரு பணியாகும்
- நாங்கள் மிக வேகமாக இழை ஒளியிய வடங்களை (ஃபைபர் ஆப்டிக்) அமைத்து வருகிறோம். அதன் மூலமாக 6 லட்சம் கிராமங்கள் அகலப் பாட்டை இணைப்புக்களை அனுபவிக்க முடியும். அங்குள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளையும் இணைக்க முடியும். தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டமைப்பது போலவே, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு இந்த நுட்ப நெடுஞ்சாலைகளை (ஐ வேஸ்) கட்டமைப்பது முக்கியம் ஆகும். மக்களுக்கு சேவைகள் வழங்கு மையங்களை கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்கி வருகிறோம். எண்ணியல் இந்தியா திட்டம் மூலம் திறன்சார் மிடுக்கு நகரங்களை உருவாக்கவுள்ளோம்
- நாங்கள் எங்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கான கம்பியிலி (வைஃபை) அலைமையங்களான ஹாட் ஸ்பாட்களை அதிகரித்து வருகிறோம். விமான நிலையங்களில் மட்டும் அல்லாமல் ரயில் நிலையங்களிலும் கூட இலவசமாக கம்பியிலி வசதி அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் 500 ரெயில் நிலையங்களில் முதல் கட்டமாக இலவச கம்பியிலி வசதி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்
- அனைத்து பொருளாதாரங்களையும் இணைக்கும் பொழுது அவற்றைப் பாதுகாக்கத் தேவையான அரண்களையும் உருவாக்க வேண்டியுள்ளது. அதையும் செய்து வருகிறோம். மின் – பிணையங்களையும் (சைபர் செக்யூரிட்டி) அறிவுசார் சொத்துகளையும் (இண்ட்டலெக்சுவல் ப்ராப்பர்டி) உறுதி செய்வதற்கான சட்ட திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்
- இதை நிறைவேற்றுவதற்கான மனித வளமும் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. வலுவான அமைதியான வளமான இந்தியாவை உருவாக்குவதில், ஸ்திரமான உறுதியான இந்தியாவை உருவாக்குவதில் நம் அனைவருக்கும் பெரும் பொறுப்புக்கள் உள்ளன. அதை நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளையும் கோருகின்றேன்.
இந்தியத்தலைவரின் இந்த செயலூக்கம் கொண்ட உரையைக் கேட்ட சிலிக்கன் பள்ளத்தாக்கு நிறுவனங்களின் தலைவர்கள் தங்களால் என்ன வகைகளில் உதவ முடியும் என்பதையும் தெரிவித்தனர். அவையாவன:
1.கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை: 500 ரெயில்வே ஸ்டேஷன்களில் இலவச கம்பியிலி கட்டுமானங்களை கூகுள் நிறுவனம் உருவாக்கி அளிக்கும். எண்ணியல் கல்வி அறிவை வளர்ப்பதற்காக அவரவர் தாய் மொழிகளில் இணைய சேவைகளை வழங்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி வழங்கும்.
2. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தலைவர் சத்ய நாதெல்லா: தனது நிறுவனம் மேகக்கணினியின் வழங்கிகளையும் தரவு மையங்களையும் இந்தியாவில் இருந்து இயக்கும். இந்திய அரசுடன் இணைந்து குறைந்த விலையில் அகலபாட்டைக் கட்டுமானங்களை அளிக்கும். அது 5 லட்சம் கிராமங்களை இணைக்கும்.
3. க்வால்காம் நிறுவனத்தின் தலைவர் பால்: இந்தியாவின் புதிய தொழில் முனைவோர்களுக்கு 150 மில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்கும்.
4. ஆப்பிள் நிறுவனம்: தன் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவும்.
இவை தவிர இன்னும் ஏராளமான நிறுவனங்கள் ”எண்ணியல் இந்தியா” திட்டத்தின் பல்வேறு தேவைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவும் இந்த நிறுவனங்களும் பரஸ்பரம் ஏராளமான லாபங்களை அடைய முடியும்.
கலிஃபோர்னியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து உரையாடிய பின்னர் மோதி பல்வேறு இந்திய அமைப்பினர்களையும் விருந்தினர்களையும் சந்தித்து அவர்களின் குறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். தான் உரையாடிய இந்தியப் பிரமுகர்களிடம் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் தன் ஆட்சி குறித்தான எதிர்பார்ப்புகள் குறித்தும் தொடர்ந்து அக்கறையுடன் விசாரித்துக் கொண்டேயிருந்தார்.
ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு அவர்களது ஊழியர்களையும் பொது மக்களையும் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் கரகோஷங்களுடனும் பிரதமரை வரவேற்றனர். அவருடைய புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கும் அவரது நிகழ்ச்சியைக் கேட்பதற்கும் பெரும் ஆர்வம் அங்கு கரைபுரண்டோடியது.
அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். மோதியின் தாய் குறித்து மார்க் கேட்ட பொழுது மார்க்கின் பெற்றோர்களை முதலில் பாராட்டிய மோதி பின்னர் தனது தாய் தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு எவ்வாறு வீட்டு வேலைகள் செய்து கஷ்டப் பட்டு தங்களை வளர்த்தார் என்று சொல்லும் பொழுது அவரது குரல் தழுதழுத்து உடைந்து போனார். பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டு தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் சொல்லலானார். நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் இருப்பதாகவும் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அவர் சமூக ஊடகங்களில் ஒரு ஆர்வத்தின் காரணமாகவே இணைந்ததாகவும் ஆனால் அது அவரது அரசியல் பொது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினைக் கொணர்ந்ததாகவும் கூறினார். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களை தான் மக்களிடமும் பிற அரசுகளிடமும் உலகம் முழுவதும் தொடர்பு கொள்வதற்கும் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் பயன் படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
வலையில் உலாவும் சமூக ஊடகம் மூலமாக உலகத் தலைவர்களுடன் எளிதான தொடர்பில் இருக்கவும் வெளிநாட்டுத் தொடர்புகளை உடனுக்குடன் பின்பற்றவும் உதவுவதாகவும் உலகின் அரசாங்கங்களின் தவறுகளை கண்காணிக்கும் மிகப் பெரும் அமைப்புகளாக விளங்குவதாகவும் அரசாங்கங்களைக் கவனமாக செயல் படுத்த வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேல் பிரதமரை ஹூப்ருவில் அவர்களது திருவிழாவுக்கு வாழ்த்த அவர் பதிலுக்கு இந்தியில் தனக்கு நன்றி சொல்ல முடிந்ததைக் குறிப்பிட்டார். இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல்கள் நடக்கின்றன ஆனால் சோஷியல் மீடியாக்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் தனது அரசு எடை போடப் படுவதாகக் குறிப்பிட்டார்.
இன்னொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் இந்தியாவின் வளர்ச்சியில் பெண்களின் பங்கினை அதிகரிப்பதற்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் தன் அரசு பெரிதும் பாடுபடுவதாகக் கூறினார்.
ஃபேஸ்புக்கின் ’பிரதமரைக் கேள்வி கேளுங்கள்’ நிகழ்ச்சியில் மார்க் தேர்ந்தெடுத்திருந்த வினாக்களுக்கு பதில் சொன்ன பிரதமர் பின்னர் அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் வந்திருந்து அங்குள்ள தொழில்நுட்ப வல்லுனர்களையும் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் திட்டங்களையும் பார்வையிட்டார்.
கூகுள் நிறுவனத்திலும் ஃபேஸ்புக் போலவே ஆரவாரமான வரவேற்பு பிரதமருக்கு வழங்கப் பட்டது. மௌண்டன் வியூ நகரில் உள்ள கூகுள் வளாகத்தில் அவர்களது நான்கு முக்கியமான தொழில்நுட்பத் திட்டங்கள் குறித்து மோதிக்கு விளக்கப்பட்டன. நகரத்தின் தெருக்களை இருந்த இடத்திலேயே மேயும் ஸ்ட்ரீட் வ்யூ குறித்தும், அண்டத்தை உள்ளங்கையில் இருந்து துழாவும் கூகுள் எர்த் குறித்தும் அவருக்கு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப் பட்டன. ஆர்ய பட்டா வானவியல் ஆராய்ச்சி நடத்திய காகுள் என்ற இடத்தைக் காண்பிக்குமாறு மோதி கோரிய பொழுது அது அவருக்கு காண்பிக்கப் பட்டது. கூகுள் எர்த் மூலமாக வாரணாசியின் கங்கைக் கரை காண்பிக்கப் பட்டது. மேலும் கூகுளில் சுகாதார திட்டமான ப்ராஜக்ட் ஐரிஸ் அவருக்கு விளக்கப் பட்டது.
கூகுள் மூலமாக ”எண்ணியல் இந்தியா” திட்டத்திற்காக நடத்தப் பட்ட 15 மணி நேர செய்நிரலாக்க தொடர் போட்டியான ஹாக்கத்தானையும் கூகுளில் இருந்தவாறே பிரதமர் பார்வையிட்டார். அது இந்தியாவின் நாஸ்காம் மற்றும் இந்திய நிறுவனங்களின் உதவியுடன் நோய்டாவில் உள்ள டெக் மஹிந்திராவில் நடந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஒவ்வொரு தலைவர்களிடமும் ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தொடர்ந்து இந்தியாவில் தொழில் தொடங்குவதில் இருக்கும் தேவையற்ற அனைத்து சிவப்பு நாடா கட்டுப்பாடுகளும் நீக்கப் படும் என்றும் நாடு முழுவதும் தொலைத் தொடர்பு கட்டுமானங்கள் அசுர வேகத்தில் ஏற்படுத்தப் படும் என்றும் உறுதியளித்தார். அனைவரையும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ”எண்ணியல் இந்தியா” திட்டத்திற்கும் அனைத்து விதமான ஆதரவுகளையும் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தான் இந்தியாவின் சாலைகள், துறைமுகங்கள், சுகாதார, கல்வி, போக்குவரத்துக் கட்டுமானங்களை அதிகரிக்கும் அதே ஆர்வத்துடனும் வேகத்துடனும் இந்தியாவின் எண்ணியல் கட்டுமானங்களையும் அதிகரித்து வருவதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் மாலையில் அவருக்கு கலிஃபோர்னியா வாழ் இந்தியர்களினால் அளிக்கப் பட்ட மாபெரும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்
இதெல்லாம் செய்தியில் வந்தவை மட்டுமே. இன்னமும் என்ன என்ன லாபம் இந்தியாவிற்கு இதன் மூலம் வர உள்ளது என்பது போக போக தான் தெரியும்.
மோதியின் ”எண்ணியல் இந்தியா” கனவு எந்த அளவு நிறைவேறப் போகின்றது; அதில் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களின் பங்களிப்புகள் என்னவாக இருக்க முடியும்; இதனால் இந்தியாவுக்கு என்ன லாபம்; கலிஃபோர்னியா நிறுவனங்களுக்கு என்ன லாபம்; இவற்றில் ஏற்படப் போகும் சிக்கல்கள் + சவால்கள் + சோதனைகள் என்னவாக இருக்கும்; பாதுகாப்பு பிர்ச்சினைகள் எவையாக இருக்கும்; இவற்றால் இறுதியாக சாதாரண இந்தியனுக்கு விளையப் போகும் பயன்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் இன்னொரு கட்டுரையில் விரிவாக அலசலாம்.
மோடியின் சாதனைகளை விட தங்களது கலைச் சொற்பயன்பாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். தமிழில் சில கலைச் சொற்களை இந்தக் கட்டுரையில் தான் முதன்முறையாகப் படித்தேன். நன்றி ஐயா!
பாரதத்திற்காக, ஒரு தலைமகனாக உழைக்கும் மோடி அவர்களுக்கு, நாட்டின் மீது பிரியமும் அக்கறையும் கொண்ட ஒரு பிரஜையாக அவருக்கு என் வணக்கங்கள். மோடியின் உழைப்பு வீணாகாமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு பிரஜையும் அவரவர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முனைய வேண்டும். அப்படி இல்லையெனில் மோடியின் உழைப்பு விழலுக்கிறைத்த நீராக வீணாகும்.
மிக அழகாய் எழுதப்பட்ட கட்டுரை. மோதியின் ஆக்கங்கள், இந்தியாவை ஒரு புதிய உலக வரிசைப்படுத்தலுக்கு காரணமாய் அமையும் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை. இது போன்ற தாக்கங்கள், கொஞ்சம் காலம் பிடிக்கக்கூடியவை. இத்தனை நாட்கள் பலருமே பிரதமராய் இருந்திருப்பினும், மோதி மீதான எதிர்பார்ப்பு மட்டுமே, அவர் மீதான எதிர்ப்புக்கு ஈடாகவே இருக்கிறது. தொலைநோக்கும், இந்தியா மீதான காதலுமே.. இதை சாத்தியப்படுத்திவிட முடியும் ஒவ்வொரு இந்தியானலுமே.. வாழ்த்துகள்.