என்னைப் போல எண்பதுகளில் வளர்ந்தவர்கள் பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசீனோ நடித்த ஸ்கார் ஃபேஸ் (Scarface) என்ற திரைப்படத்தைப் பார்த்திருக்கலாம். அதில் அல் பசீனோ க்யூபா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அகதியாக வந்த ஒருவன் போதை மருந்து வியாபாரத்தில் பெரும் பணக்காரனாக மாறுவதைக் காட்டியிருப்பார்கள். மயாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட வன்முறையும், துப்பாக்கிச் சண்டையும் நிறைந்திருக்கும். சந்தேகமில்லாமல் அந்தப் படத்தில் தனக்களிக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து அல் பசீனோ அபாரமாக நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தின் பின்னனி அன்றைக்கு அமெரிக்காவில் உண்மையில் நிலவிய போதை மருந்து கலாச்சாரத்தை எடுத்துக் காட்டியது.
ஆனால் அல் பசீனோ நடித்தது அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டுவரப்படும் போதை மருந்தை, அதற்கு அடிமையானவர்களிடம் விற்கும் ஒரு தாதாவாக மட்டுமே. தென்னமெரிக்க நாடுகளில் தயாராகும் கொகைனை அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டுவந்து சேர்ப்பது அத்தனை எளிதானதல்ல. அதனை வெற்றிகரமாகச் செய்தவர்கள் தென்னமெரிக்க நாடான கொலம்பியாவைச் சேர்ந்த டிரக் கார்டெல்கள் எனப்படும் போதை மருந்து கடத்தல் கும்பல்கள். அதில் அன்று மிக முக்கியமானவராய் இருந்தவர் பாப்லோ எஸ்கோபார். யாருமே நெருங்க முடியாத, பிடிக்க முடியாத ஒரு மனிதனாக வாழ்ந்த எஸ்கோபாரைப் பற்றி பல திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.
சிறிது நாட்களுக்கு முன்னால் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) தயாரித்த நார்கோஸ் (Narcos) என்றொரு பிரபலமான தொடரை பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமடைந்திருக்கும் தொடரான இது கொலம்பிய போதை மருந்து கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரின் (Pablo Escobar) சுயசரிதை. பத்து கதைப் பாகங்கள் (எபிசோட்) வரைக்கும் இதுவரை வந்திருக்கிறது. இனிமேலும் பாகங்கள் தொடர்ந்து வருமென்று நினைக்கிறேன். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடராக அல்லது சினிமாவாக எடுக்கப்பட்ட/ எடுக்கப்படும் சுயசரிதைகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நாடகத்தனமாக இருக்கும் அல்லது சகிக்கவே முடியாதபடிக்கு சம்பந்தப்பட்டவரைக் கேவலப்படுத்தியிருப்பார்கள் அல்லது உச்சாணிக் கொம்பில் செயற்கையாக தூக்கி வைத்துக் கொண்டடியிருப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அந்தவகை விதிவிலக்குதான் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய இந்த தொடரும்.
நடிகர்கள் தேர்விலும், நடிப்பிலும், எடுக்கப்பட்ட விதத்திலும் நன்றாகவே இருக்கிறது. எஸ்கோபராக நடிப்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நிஜ நபரின் நடை, உடை, பாவனைகளைப் பிரதி செய்து அமெச்சூர்தனமாக நடிக்காமல் எஸ்கோபாரின் ஆளுமையை நம் கண் முன் நிறுத்தும் விதமான நடிப்பு. வாய்ப்பிருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம் என சிபாரிசு செய்தாலும் இத்தொடரில் காணப்படும் அளவுக்கதிகமான வன்முறை குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். குழந்தைகளுடன் பார்ப்பதற்கு நிச்சயமாக உகந்ததல்ல. பத்து Scar face திரைப்படங்களுக்கு இணையானவை இந்த பத்து பாகங்களும் என்று வைத்துக் கொள்ளலாம்.
வன்முறையும், கொலையும், இரத்தமும் போதை மருந்து கடத்துபவர்களின் தினசரி வாழ்வு. தென்னமெரிக்க நாடுகளில், குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் போதை மருந்து கடத்தலும் அதன் தொடர்பான படுகொலைகளும் தினசரி செய்திகள்தானே? எஸ்கோபார் இதில் உச்சத்தில் இருந்த ஆசாமி. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் அமெரிக்காவிற்குக் கடத்தி விற்பனை செய்த போதை மருந்தினால் எஸ்கோபாரின் ஒரு நாளைய வருமானம் 67 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக எஸ்கோபாரை Forbes பத்திரிகை வெளியிட்ட பிறகு அமெரிக்க அரசாங்கத்தின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. கொலம்பிய அரசாங்கம் அமெரிக்க அரசின் அழுத்தத்திற்கு உட்பட்டுத் தன்னை கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்பக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த எஸ்கோபார் அதற்காக செய்த படுகொலைகள் ஏராளம். ஒரு கொலம்பிய ஜனாதிபதியும், ஏராளமான அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும், போலிஸ்காரர்களும் கொல்லப்பட்டார்கள்.
ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பது, தேர்தலில் நின்று ஜெயிப்பது என்று தன்னை ஏழை பங்காளனாக காட்டிக் கொண்ட எஸ்கோபார் நினைத்திருந்தால், கொஞ்சம் தன்னைத் திருத்திக் கொண்டிருந்தால் கொலம்பிய ஜனாதிபதியாகவே ஆகியிருக்க முடியும்.. ஆனால் கிரிமினல்கள் எப்போதும் கிரிமினல்களே என்பதற்கு பாப்லோ எஸ்கோபார் ஒரு உதாரணம். தன்னைக் கைது செய்து அமெரிக்கவிற்கு பிடித்துக் கொடுக்க நினைக்கும் கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக நாளொரு வெடிகுண்டும், படுகொலைகளும் செய்யும் எஸ்கோபாருடன் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சமாதானம் செய்து கொள்கிறது கொலம்பிய அரசாங்கம். அதன்படி, போதை மருந்து கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுக்கிறோம் என்று அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் கொலம்பிய பார்லிமெண்டின் ஏகோபித்த ஆதரவுடன் நீக்கப்படுகிறது. செத்தாலும் கொலம்பியாவில்தான் சாவேன்; ஒருபோதும் அமெரிக்கச் சிறையில் சாக மாட்டேன் என்பது எஸ்கோபரின் சபதம். இரண்டாவது, எஸ்கோபர் தானே கட்டிய சிறையில்(!), ஆம், அவரே கட்டிய சிறையில், தண்டனை அனுபவிப்பார் என இன்னும் பல நிபந்தனைகள். அத்தனைக்கும் ஒத்துக் கொண்டு சமாதானமாக போகிறது கொலம்பிய அரசாங்கம். எஸ்கோபார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் லெவலில் ஒரு சிறையைக் கட்டிக் கொண்டு அவரின் கூட்டத்தோடு அந்தச் சிறையில் சிறைவாசமிருக்கிறார். போதை மருந்து கடத்தல் தங்கு தடையின்றி நடக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய இயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இறுதியில் எஸ்கோபாரை சுட்டுக் கொன்று விட்டார்கள். இருந்தாலும் போதை மருந்து கடத்தல் இன்றைக்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
oOo
பெரு நாட்டின் மலைகளில் வளரும் கோகா இலைகளிலிருந்து (Andean Coca) தயாரிக்கப்படும் கோகைன் உலகில் மிகப் பெருவாரியாக உபயோகிக்கப்படும் போதை மருந்துகளில் ஒன்று. கோகோ இலைகளில் இயற்கையாக இருக்கும் கோகைன், தென்னமெரிக்க இந்தியர்களால் (செவ்விந்தியர்கள்) ஏறக்குறைய 5000 வருங்களுக்கும் மேலாக உபயோகிக்கப்பட்டது. வெற்றிலை மெல்வது போல கன்னக் கதுப்புகளில் அடைத்துக் கொண்டு மிக மெதுவாக உண்ணப்படும் கோகோ இலைகள் தங்களைப் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருப்பதை முதன் முதலில் உணர்ந்தவர்கள் தென்னமெரிக்க இந்தியர்களே. கோகோ இலைகளை மெல்லுவது ஒரு சமுதாய பண்பாகவும், மருந்தாகவும், மதச் சடங்குகளைச் செய்ய உதவும் சாதனமாகவும் அவர்களால் பயன்படுத்தப்பட்டது. வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய ஒரு செவ்விந்தியன் தன் வாயில் கோகோ இலைகளை அடைத்துக் கொண்டு பயணம் செய்வது வழக்கமாக இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் நடக்கையில் ஏற்படும் களைப்பை உணராமலிருக்கச் செய்வதற்காக அவர்கள் கோகோ இலைகளை மெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
மனித உடலில் இயற்கையாக உள்ள தடுப்புகள் காரணமாக ஒரு மனிதள் அளவு கடந்து கோகோ இலைகளைத் தவறுதலாகத் தின்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அவன் இரத்தத்தில் கலக்கும். எனவே நேரடியாக கோகோ இலைகளைத் தின்னும் செவ்விந்தியர்கள் மத்தியில் மாரடைப்போ அல்லது பக்கவாதமோ ஏற்படுவதில்லை. ஆனால் அதுவே பதப்படுத்தப்பட்ட கோகைன் பவுடராக மாறுகையில் பின்னர் அது உபயோகிக்கப்படுகையில் நேரடியாக இரத்த நாளங்களை அடைவதால் உண்டாகும் பாதிப்புகள் பயங்கரமானவை.
பொதுவில் கோகா நான்கு விதங்களின் உட்கொள்ளப்படுகிறது.
ஒன்று, முதலில் சொன்னது போல கோகா இலைகளை மென்று தின்பது. பெரும்பாலான பெரு நாட்டு பழங்குடியினர் செய்வது இது. உலர்த்தப்பட்ட கோகா இலைகளை சூடான நீரில் போட்டுக் குடிப்பது (Maté de coca). இவ்வாறு குடிப்பதால் வயிற்று உபாதைகளுக்கு நல்ல பலன் கிடைப்பதால் இன்றைக்கும் ப்ரேசில் போன்ற நாடுகளில் பொது இடங்களில் மக்கள் குடிப்பதைப் பார்க்கலாம்.
இரண்டு, கோகா பேஸ்ட்டாக (cocaine sulphate) உபயோகிப்பது. கோகைனின் மிக மோசமான, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய விளை பொருளான கோகா பேஸ்ட் பெரும்பாலான தென்னமெரிக்கச் சேரிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. செடியிலிருந்து உருவியெடுக்கப்படுக் கோகா இலைகள் பிளாஸ்டிக் வாளிகளில் இடப்பட்டு, அத்துடன் தண்ணீர் மற்றும் சல்ஃப்யூரிக் ஆசிட் கலக்கப்படும். பின்னர் போதை மருந்து தயாரிப்பவர்கள் அந்த வாளிகளினுள் ஏறி வெறும் கால்களில் தொடர்ந்து மிதிப்பார்கள். அதில் கிடைக்கும் கூழ் பின்னர் வடிகட்டப்பட்டு பேஸ்ட்டாக்கப்படும். மிகக் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அந்த பேஸ்ட் தென்னமெரிக்க நாடுகளில் சிகரெட்டுடன் கலந்து புகைக்கப்படுகிறது.
மூன்றாவது முறையான கோகைன் ஹைட்ரோ க்ளோரைட் (cocaine hydrochloride) வாசனையற்ற, வெண்மை நிறமுடைய ஒரு பொடி (powder). கோகைனுக்கு அடிமையானவர்களால் இந்தப் பொடி மூக்கின் மூலமாக உறிஞ்சப்படுகிறது. வெறும் 20 முதல் 30 சதவீதம் வரையே ரத்த நாளங்களில் கலக்கும் சக்தி கொண்டதாக இருந்தாலும் இதனைத் தயாரிப்பது மிகக் கடினமானதொரு வேலைதான். கோகா பேஸ்ட் கெரஸினில் கழுவப்பட்டுப் பின்னர் குளிர வைக்கப்படும். கெரஸின் நீக்கப்பட்ட பின்னர் கோகைன் உப்பாக மாறி அது வைக்கப்பட்டிருந்த தொட்டியினடியில் தங்கிவிடும். பின்னர் மெத்தைல் ஆல்கஹாலில் கரைக்கப்படும் கோகைன் சிறிது நேரத்தில் மீண்டுமொரு முறை உப்பாக, கிரிஸ்டலாக மாறும். அது மீண்டுமொருமுறை சல்ஃப்யூரிக் ஆசிட்டில் கரைக்கப்பட்டு, பொட்டசியம் பெர்மாங்கனேட், பென்ஸால், சோடியம் கார்பனேட் முதலியவற்றுடன் கலக்கப்படுகிறது. இறுதியில் தங்கும் உப்பு போதை அடிமையாளர்களுக்கு வினியோகிக்கப்படும்.
நான்காவது முறை freebase எனப்படும் crack cocaine. இதுவே அமெரிக்காவில் பெருமளவு புழக்கத்திலிருக்கிறது. பல கேடுவிளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த பின்னர் உருவாகும் க்ராக் கொகைன் உடனடியாக ரத்தத்தில் கலக்கும் தன்மையுடையது. ஒருமுறை இதற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.
oOo
ஹிப்பிக் கலாச்சரம் மிகுந்திருந்த 1960-களில் மாரியுவானா எனப்படும் கஞ்சாவே அமெரிக்கர்களின் பொதுவானதொரு போதை மருந்தாகவிருந்தது. கஞ்சாவுடன் LSD மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருள்களே அமெரிக்கர்களால் உபயோகிக்கப்பட்டன. பெரும்பாலான கஞ்சா அர்ஜண்டினா, பிரேசில், சிலி போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 1970-களில் மிகச் சிறிய அளவில் கோகைன் சூட்கேஸ்களிலிலும், மீன்பிடி படகுகள் மூலமாகவும், விமானப் பயணிகள் மூலமாகவும் அமெரிக்காவிற்குள் கடத்திவரப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிரபலமாக இருந்த டிஸ்கோ கலாச்சாரத்தின் மூலமாக கோகைன் மெல்ல, மெல்ல அமெரிக்கர்களை வந்தடைந்தது. குறிப்பாக வால் ஸ்ட்ரீட்டின் பங்குச் சந்தை புரோக்கர்களின் மத்தியில் கோகைன் மிகப் பிரபலமாகத் துவங்கியது. சமீபத்தில் வெளிவந்த Wolf of Wallstreet போன்ற திரைப்படங்களில் இதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒருவகையில் வால் ஸ்ட்ரீட்டின் போதைத் தேவையே பாப்லோ எஸ்கோபார் போன்றவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாகியது எனலாம்.
1980களில் அமெரிக்கர்களின் கோகைன் தேவை கூடிக்கொண்டே போவதை அறியும் எஸ்கோபார் அதைப் பல வழிகளிலும் அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறார். தென்னமெரிக்காவின் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் கோகைன் கொலம்பியாவிற்குள் கொண்டுவரப்பட்டு தூய்மையாக்கப் பட்ட பின்னர் கடத்தல்காரர்கள் (mules) மூலமாக அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. கொலம்பியாவின் ஏழைகள், குறிப்பாக பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.உதாரணமாக, ஆணுறைகளில் (condoms) அடைக்கப்படும் கோகைகனை அந்தப் பெண்கள் விழுங்க வைக்கப்பட்டு, அவர்கள் அமெரிக்காவிற்குள் கடத்த வைக்கப்பட்டார்கள். எஸ்கோபார் அந்தப் பெண்களுக்கு பணத்தை அள்ளி வீசினார் எனினும் எதிர்பாராத மரணங்களுக்குக் குறைவில்லை. ஆணுறை வயிற்றினுள்ளேயே வெடித்துத் திறப்பதின் மூலம் இறந்த பெண்களை ஆராயும் அமெரிக்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடிக்கிறத்தார்கள். போதை மருந்து கடத்தல்காரர்கள் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.
எஸ்கோபாரிடம் பணிபுரிந்த ஒரு ஜெர்மானியன் மூலமாக பெரும்பாலான கோகைன் கடத்தல் பஹாமாஸ் தீவுகள் வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டது. சின்னஞ்சிறு விமானங்களில் ஏற்றப்பட்ட கோகைன், அமெரிக்க ராடர்களின் கண்ணில் படாமல் தாழப்பறந்து ப்ளோரிடா மாநிலத்தின் சிறிய விமான தளங்களில் இறங்கின. டன் கணக்கில் கோகைன் அமெரிக்காவிற்குள் புழங்க விடப்பட்டது. ஒரு கட்டத்தில் ஏறக்குறைய 660 டன் கோகைன் அமெரிக்கர்களினால் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வெறும் ஒரு வருடத்திய கணக்கு அது என்றால் எவ்வளவு கோகைன் உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம். அமெரிக்க போதை மருந்துக் கடத்தல் அதிகாரிகளும், போலிசாரும் பஹாமாஸ் வழியாக வரும் போதைக் கடத்தலை தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் எஸ்கோபார் அனைத்து சட்ட பூர்வ வழிகளின் வழியாகவும் கோகைனைக் கடத்துவதை நிறுத்த அமெரிக்கர்களால் முடியவில்லை என்பதே உண்மை. ஃபிரிட்ஜிற்குள், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள், பழரசத்தில் கலந்து, சாக்லேட் தயாரிக்க உதவும் கோகோவில், சிலி நாட்டு திராட்சை ரசத்தில் கலந்து, பெரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவாட்டினுள் வைத்து என எஸ்கோபாரின் ஆட்கள் அத்தனை வழிகளையும் உபயோகித்தார்கள்.
கொலம்பியாவில் சுத்தமாக்கப்பட்ட ஒரு கிலோ கோகைனைத் தயாரிக்க $1000 டாலர்களே ஆன நிலையில், அதே ஒரு கிலோ கோகைன் எஸ்கோபரின் ஏஜெண்டுகளால் அமெரிக்காவில் $70,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1980 மற்றும் 90களில் அமெரிக்காவுக்குள் கடத்தப்பட்ட கொகைனில் 80 சதவீதம் எஸ்கோபாரின் மெடலின் கார்ட்டெலினால் கடத்தப்பட்டதுதான். இதன் மூலம் பாப்லோ எஸ்கோபார் ஒரு ஆண்டிற்கு 5 பில்லியன் (ஆம்; ஐந்து பில்லியன்) அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தார். எண்பதுகளில் அமெரிக்கா ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 600 டன் (ஆம்; 600 டன்) போதை மருந்தை நுகர்ந்ததாக தோராயமான கணக்கு. இதன் மூலம் இந்தக் கடத்தல் தொழிலில் எவ்வளவு பணம் புழங்கியிருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
எஸ்கோபார் மற்றொரு பக்கம் தன்னை ஏழைகளின் ராபின்ஹுட் ஆக சித்தரித்தது. எஸ்கோபார் வளர்ந்த கொலம்பியாவின் Medellín பகுதி ஏழைகள் நிறைந்தது. வறுமையும், வேலையில்லத் திண்டாட்டமும் நிறைந்த மெடலின் அருகிலிருந்த நகரங்களின் குப்பைத் தொட்டியாக உபயோகப்பட்டுக் கொண்டிருந்தது. குப்பைகளைக் கிளறி அதில் கிடைக்கும் பொருட்களை விற்றுக் காலம் தள்ளும் நிலையிலிருந்த மெடலின் பகுதி மக்களைக் கவர எஸ்கோபார் பணத்தை வாரியிறைத்தார். ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட மைதானங்கள் கட்டப்பட்டன. மெடலினின் சேரிப்பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு புதிய நிரந்தரக் கட்டிடங்கள் எஸ்கோபரினால் கட்டித்தரப்பட்டன. அந்தக் கட்டிடங்கள் இன்றைக்கும் நின்று கொண்டிருக்கின்றன. இறுதியில் மெடலினில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த எஸ்கோபாரைச் சுற்றி வளைத்த போலிஸ்காரர்களால் தப்பியோடுகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்கள் பொருளீட்டித் தந்த எஸ்கோபாரின் போதை மருந்து கடத்தும் சாம்ராஜ்யத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது கொலம்பிய மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்தது. அத்துடன் தென்னமெரிக்காவில் தனது வலுவான ஆதிக்கத்தைக் கொண்டிருந்த அமெரிக்க அரசினையும் எஸ்கோபார் எதிர்த்துக் கொண்டதுவும் அவரது அழிவுக்குக் காரணமாயிற்று. தன்னை எதிர்த்தவர்களை, தனக்கு எதிராக நடந்து கொள்பவர்களை அது நண்பர்களானாலும் சரி அல்லது அரசியல்வாதிகளானாலும், நீதிபதிகளானும் சரி, பாப்லோ எஸ்கோபார் விட்டு வைப்பதில்லை. அதுவே எஸ்கோபாரின் அழிவுக்கும் காரணமாயிற்று.
1949-ஆம் வருடம் கொலம்பியாவின் ஆண்டியோக்கியாவில் (Antioquia) விவசாயியான தகப்பனுக்கும், பள்ளியாசிரியையான தாய்க்கும் மகனாகப் பிறந்த பாப்லோ எஸ்கோபாரின் குற்றச் செயல்கள் அவரது மிக இளம் வயதிலேயே ஆரம்பமாகின. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே கல்லறைகளின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த கற்களைத் திருடி பின் அவற்றை பேனமாவைச் (Panama) சேர்ந்த கடத்தல்காரர்களிடம் விற்பதில் எஸ்கோபாரின் குற்ற வாழ்க்கை துவங்கியது. பின்னர் 1970களில் எஸ்கோபார் கொகைன் வியாபாரத்தில் நுழைந்தார். ஈவு இரக்கமற்றும், எப்பாடு பட்டேனும் தான் பெரும் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற இலட்சியத்துடனும் அலைந்த எஸ்கோபாருக்கு கொகைன் வியாபாரம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அந்த குணங்களே எஸ்கோபாரை மிகக் குறுகிய காலத்திலேயே உலகின் மிகப் பெரும் வலிமையுடைய, வன்முறையை உபயோகிக்கத் தயங்காத உலக கிரிமினல்களின் வரிசையில் முதலிடத்தில் கொண்டு நிறுத்தின.
காலச் சூழலுக்கேற்பத் தன்னை திருத்திக் கொண்டிருந்தால் எஸ்கோபார் ஏழை நாடான கொலம்பியாவின் தலையெழுத்தை மாற்றி இருக்கலாம். ஆனால் கிரிமினல்கள் எப்பொழுதும் கிரிமினல்களே. இறுதியில் எஸ்கோபார் நிம்மதியாக வாழமுடியாமல் துரத்தப்பட்டு தெரு நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
எந்தக் கொம்பனையும் விட கர்மா வலியது.