சக்தி… மனசில் நிறையும்போது…

freedom

பண்டிகைகள் சீசன் இது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல வகை பண்டிகைகள் பலவிதமாக கொண்டாடப்படுகின்றன…. நவராத்திரி சமயத்தில குஜராத்தில் ஆடப்படும் கர்பா நடனம் வெகு பிரசித்தம். தெருவில் அல்லது அருகில் இருக்கும் திறந்தவெளியில் அக்கம்பக்கத்தோர் மற்றும் உற்றார் உறவினர் என்று சேர்ந்து இரவு வேளையில் பூஜை செய்த கையோடு உல்லாசமாக நடனம் ஆடுவார்கள். இதில் கலந்து கொள்ளாத குடும்பமே அனேகமாக இருக்காது எனலாம். ஆண்கள் பெண்கள் கலந்து ஆடும் இந்த நடனத்தில் சிறு குழந்தைகளும் விதம் விதமாக உடையணிந்து ஆடுவது பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். அவரவருக்கு ஆயிரம் கவலைகள் இருந்தாலும் கைகளையும் கால்களையும் வீசி உடலை ஒரு லயத்தோடு, இனிய இசைக்கேற்றவாறு ஆடும்போது மனசு லேசாகிப்போகும் என்பதென்னவோ உண்மை.
கர்னாடகாவில் நவராத்ரியில் மைசூர் அரண்மனையின் விளக்கு அலங்காரமும் மைசூர் மகாராஜாவின் யானைமீது பவனியும் பிரபலமான டூரிஸ்ட் அம்சங்கள்.
மேற்கு வங்காளத்தின் 10 நாள் காளி பூஜையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வங்காளிகள்இருக்குமிடமெல்லாம் எதிரொலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் கொண்டாட்ட சூழ்நிலையில் நாடே பங்கு கொள்ளும்.
கொண்டாட்டங்கள் மனசை லேசாக்கி உற்சாகமூட்டும் என்பதை நம் முன்னோர் நம்பினர். இது போன்று பண்டிகைகள், கேளிக்கைகள் என்று நிறையவே நம் கலாசாரங்களில் இரண்டறக் கலந்துள்ளன.
இசை,ஒவியம் அல்லது பலவித கைவேலைகள் அல்லது நாம் செய்யும் தொழிலைத் தவிர வேறு ஏதோ ஒன்றில் ஒரு ஆர்வம்….. போன்றவை பல சமயங்களில் அலைபாயும் மனதை ஒருமனபடுத்தும். வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தையும் இனிமையும் இவை கொடுக்கின்றன என்பது இன்றைய மனத்தத்துவ உண்மை.
மனச்சோர்வு என்பது இன்று குழந்தைகளுக்குகூட இருக்கிறது என்கிறார்கள். கேட்கவே சங்கடமான விஷயம். கவலையின்றி ஆடிப்பட்டும் வயதில் மனச்சோர்வா? ஆனால் கவனம் இப்படி பலவிதங்களில் பாயும்போது மனச்சோர்வு அண்ட வாய்ப்பே இல்லை. இந்த வகையில்தான் இந்தியர்களின் வாழ்வு முறை அமைந்துள்ளது. தமிழகத்தில் நவராத்திரி சமயத்தில் கொலு என்று பலவித பொம்மைகளை அலங்காரமாக வைத்து அக்கம்பக்கத்தில் உள்ள்வர்களை வீட்டுக்கு அழைத்து வெற்றிலைப் பாக்கு கொடுக்கும் சம்பிரதாயம் இருக்கிறதே… இந்த சடங்கின் பின்னர் தான் எத்தனை அர்த்தம் இருக்கிறது?
1970 களில் கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நாங்கள் குடியிருந்தபோது நவராத்திரி சமயத்தில் நம் மண் பொம்மைகள் கிடைக்காமல் குழந்தையின் விளையாட்டு பொருட்களையும் பத்திரிகைகளிலிருந்து சில படங்களைக் கத்தரித்து அட்டையில் ஒட்டி, படிகளில் நிற்க வைத்து கொலு வைத்தேன் . அப்படி நான் கத்தரித்து ஒட்டிய படங்களுள், காஞ்சிப் பெரியவர், கடவுள் படங்கள் இவற்றுடன் மோனோலிஸா படமும் ( அழகாக இருந்ததே..!)என் கொலுவில் இருந்தன. தாம்பூலத்திற்கு அழைத்திருந்த பெண்களில் அக்கம் இருந்த ஐரோப்பியர் மற்றும் ஆப்பிரிக்க பெண்களும் உண்டு. வந்திருந்த பெண்களில் ஒருவர் கேட்டார்: “பூஜை என்றீர்கள். சரிதான். ஆனால் மோனோலிஸா படத்தையும் இந்த பஸ், விமானம் போன்ற பொம்மைகளையும் கடவுள் படங்களுடன் ஏன் வைத்துள்ளீர்கள்?” என்றார்.
எனக்கு முதலில் எப்படி விளக்கி பதில் சொல்வதென்று புரியவில்லை. ஒரு கணம் அசந்தாலும் விரைவில் சமாளித்துக்கொண்டு நான் மனப்பூர்வமாக நம்பியதை அவருக்கு எடுத்து விளக்கினேன். “இந்தப் பிரபஞ்சம் (Universe)முழுவதும் ஒன்றாக இயங்கும் ஒரு சக்திதான் கடவுள் என்று நாங்கள் நம்புகிறோம். நவராத்ரி கொலு மூலமாக அகண்டம் முழுவதும் பரிமளிக்கும் இந்த சக்தியை அகண்டத்தின் பல ரூபங்களில் அந்த சக்தியின் பிரதிபிம்பமாக பார்த்து வழிபடுகிறோம்.. அதனால்தான் நம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் சாம்பிள் வடிவங்களாக கொலுவில் இடம் பெறுகின்றன.” என்று விவரித்தேன்.
சக்தியை வழிபடுகிறோம் என்ற ஆன்மீக நம்பிக்கைத்தவிர, இப்படிப் பலருடன் கலந்து பழகும் வாய்ப்பை, நம் மனதிற்கு உற்சாகமளிக்கும் வாய்ப்பை இந்தப் பண்டிகை அளிக்கிறது.
இப்படி பல அர்த்தங்கள்; பல பரிமாணங்கள் ஒவ்வொரு பண்டிகையிலும் உண்டு.
சென்னையில் டிசம்பர் சீசன் தவிர, இது போன்ற பண்டிகைக் காலங்களிலும் பலவித இசைக் கச்சேரிகள் மூலைக்கு மூலை களைக் கட்டிவிடும். இப்போதெல்லாம் சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளைத் தவிர இசை க் கலைஞர்கள் தனிப்பட்ட முறையில் சில வீடுகளில் அழைப்பேற்று பாடுவதுமுண்டு. இசையில் பெரும் ஆர்வம் உள்ள சில நண்பர்கள் கேட்டுக்கொண்டால் ஒருவரது வீட்டில் சென்று இவர்கள் பாடுவார்கள். குறிப்பிட்ட சிலர் ஒன்று கூடி ரசிக்கும் நிகழ்ச்சிகள் இவை. தெரு மூலைகளில் சின்னதாக மேடை போட்டு பாடுவதும், கோவில்களில் நடை பெறும் இசைக் கச்சேரிகளும் பெரும்பாலும் அனைவருக்கும் தரம் வாய்ந்த இசை எளிதாகக் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் நடை பெறுகிறது.
கச்சேரி என்றால் பட்டுபுடவையும், காண்டீன் உணவையும் தாண்டி, நல்ல இசையை அனுபவிக்கும் ரசிகர்கள் அதிகம்.
வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்தும் இந்தப் பண்டிகைகளை இந்தியர்கள் எங்கிருந்தாலும் விடாமல் பின்பற்றும்போது நாம் இருக்கும்இடங்களில் ஒரு விதத்தில் நேர்மறை – பாஸிட்டிவ் – சக்தி அலைகளைப் பரப்புகிறது.
பிரபஞ்சம் நிறைந்த சக்தியைப் பற்றிப் பேசும்போது, அப்பல்லோ 17 விண்களத்தில் சந்திரனுக்கு சென்று 3 நாட்கள் அங்கே வாழ்ந்த Eugene Cernan என்கிற விண்வெளி வீரர் இந்தியா வந்திருந்த சமயம் தன் சந்திர வாழ்க்கையைப் பற்றி இந்தியஊடகங்களுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. அவரது பேட்டியிலிருந்து ஒரு சாம்பிள்:
ஓவர் டு Eugene Cernan:
“250,000 மைல்களுக்கு அப்பால் நமது பூமி வாழ்க்கையின் கணக்குபடி 75 மணி நேரம் சந்திரனில் வாழ்ந்துள்ளேன். அது ஒரு பிரமிப்பான, அமானுஷ்யமான அனுபவம். இந்த பிரபஞ்சத்தில் உயிர் நிலைகள் வாழும் ஒரே கிரகமான பூமியை, தூரத்திலிருந்து வெறும் ஒரு கிரகமாக மேலிருந்து பார்க்கும் அனுபவம் மிக வித்தியாசமானது.
சாதாரண மனிதர்களுக்கு கிட்டாத ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. கடவுள் நம்பிக்கை எனக்கு என்றுமே உண்டு. முதன் முதலில் அப்பொல்லோ 10ல் சென்றபோதுதான் இந்த அகண்டத்தைப் படைத்தவர் என்று ஒருவர் இருக்கவேண்டும் என்று என் மனதில் முதல் முறையாக உள் மனதில் உணர்ந்தேன். பூமிக்கு அப்பால் அத்தனை தூரம் போகும்போதுதான் தள்ளியிருந்து அதன் முழு கம்பீரத்தையும் அழகையும் கவனிக்க முடிகிறது. துளிக்கூட பிறழாத ஒரு லயத்தில் பூமியின் சுழற்சி, அதைச் சுற்றிலும் ஒரு கும்மிருட்டு, கண்ணுக்கெட்டியவரை ஒரு முடிவில்லா உணர்வு(infinity), என்று கவனிக்கும்போது நம் மனதில் ஒரு அமைதி வந்து உட்கார்ந்து கொள்கிறது. விவரிக்க இயலாத ஒரு உணர்வு அது. அங்கே பூமியின் நேரம், காலம், அல்லது வேறு எந்த பாகுபாடுகளோ, வரைமுறைகளும் கிடையாது.
அப்படி ஒரு காலமற்ற விண்வெளியில் நான் இருக்கும்போது நமக்கு மிஞ்சிய அந்த சக்தியின் அருகாமையை உணர முடிகிறது. அந்த நிமிஷத்தில்தான் விஞ்ஞானத்தின் நியாங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன என்று நிச்சயமாக புரிந்துபோனது. பூமியின், மற்றும் அகண்டத்தின் பிழையில்லாத செயல்பாடைக் கவனிக்கும்போது ஏதோ இவையெல்லாம் தானாகவே – இயற்கையாகவே அல்லது தற்செயலாக இயங்கிக் கொண்டுள்ளன என்று சொல்லத்தோன்றவில்லை. ஏதோ ஒரு சக்தி இந்த இயற்கையின் சீ ரான சுழற்சியின் பின்னே இயக்கிக்கொண்டுள்ளது என்றுதான் தோன்றிற்று.
இவற்றையெல்லாம் படைத்தவரும், இயக்குபவரும் நிச்சயமாக இருக்க வேண்டும். அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அப்போல்லோ 17ல் மறுபடி போனபோது சென்ற முறை நான் பெற்ற அனுபவங்கள் பிரமையா உண்மையா என்று கண்டறிய வாய்ப்பு கிடைத்தது. என் உணர்வுகள் நிஜமானவை என்று உணர்ந்தேன். சந்திரனிலிருந்து பூமியைப் பார்ப்பது, படைத்தவரின் வீட்டு வாசலிலிருந்து வேடிக்கைப் பார்ப்பது போன்றதொரு உணர்வு. அது நம் நிஜ நிலையை -அகண்டத்தின் செயல்பாடுகளில் நாம் எத்தனை சிறிய அம்சம் – புரிய வைக்கிறது. நம்மைப் பணிய வைக்கும் ஒரு உணர்வு அது. ” இப்படி மேலிருந்து நான் உணர்வதை – பார்ப்பதை நீயும் பார் ” என்று படைத்தவர் சொல்வது போல் தோன்றிற்று. இதை அனுபவித்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
என் கடிகாரம் பூமியின் காலத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் அந்த ‘காலமற்ற” ஒரு உணர்வில் இந்த கடிகார முட்கள் வெறும் இயந்திர அசைவுகள்தாம். – பூமியுடன் ஒரு சின்ன தொடர்பு – அவ்வளவுதான். அப்படி ஒரு அகண்டத்தின் பிரமாண்ட அசைவுகளைக் கவனிக்கும் நிலையில் நிற்கும் போது, காலம் என்பதற்கே அர்த்தம் வேறு.
ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு நிலையில் காலத்தை எந்த அளவுகோலால் அளக்க முடியும்? காலம் என்பது நாம வாழும் பூமி வாழ்க்கைக்கு தேவையான, நாமாக அமைத்துக்கொண்ட ஒரு கோடு. காலை மாலை அல்லது பகல் என்ற ஒரு கால வித்தியாசமில்லாத நிலையில் படைப்பின் நிதர்சனம் புரியும் அனுபவம் அது….” என்கிறார் இந்த விண்வெளி வீரர்.
விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்துவிட்டு வரும் பல விண்வெளி வீரர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது இது போன்ற உணர்வுகளைப் பதிவு செய்கிறார்கள்.
விண்வெளியில் சூன்யத்திற்கிடையேயும் மன நிறைவாய் பலவித அனுபவங்களை ரசிப்பதற்கு நல்ல மனப்பக்குவம் வேண்டும். ஆனால், அதேபோல் – அல்லது அதற்கு நேர்மாறாக – இங்கே பூமியில் பலவித அனுபவங்களுக்கிடையே சூன்யத்தை சந்திப்பவர்களும் உண்டு. மனத்திண்மை குறைவே காரணம்.
சோதனைக் காலங்களில் தொய்ந்து போகாமல், தளராமல் இருப்பது மிகவும் அவசியம். பிரச்சனை என்று வந்தவுடன் வாழ்க்கையே முடிந்துபோனதுபோல் ஒடிந்துவிடாமல் அடுத்து ஆக வேண்டியது என்ன, எப்படி பிரச்சனையைச் சமாளிக்கலாம் என்று ஆக்கபூர்வமாக எண்ணுவது வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு கலை.
மனிதன் உற்சாகமாகவோ அல்லது கவலையாகவோ இருப்பது பெரும்பாலும் அவன் கையில்தான் இருக்கிறது என்பார்கள். எந்த சூழ்நிலையை எந்தவித மனோபாவத்தில் அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது நம் கவலைகளும் உற்சாகமும். கோப்பையில் பாதி நீர் இருக்கும்போது அதை பாதிக்கோப்பைக் காலி என்று குறைபடுகிறோமா அல்லது பாதி கோப்பை நிரம்பியிருக்கிறது என்று மகிழ்கிறோமா என்பதுதான் வாழ்க்கையின் ரகசியம்.
சிலர் எந்த மாதிரி சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு வேண்டுவது கிடைத்தாலே கூட அதிலும் ஏதோ ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். இப்படி அவர்கள் வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின்மை அல்லது உற்சாகமின்மையுடன் நோக்குவதால் அவர்கள் எண்ணப் போக்கில் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கம் உண்டாவதில் தடங்கல் ஏற்படுகிறது. எதிர்மறை(negative) எண்ணங்கள் எதிர்மறையான தாக்கங்களயும் விளைவுகளையும் இன்னும் அதிகரிக்கும் என்று இவர்கள் ஏனோ உணர்வதில்லை.விளைவுகள் பாதகமாக ஆகும்போது மறுபடி எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். இப்படி இது ஒரு சங்கிலித் தொடர்போல் நீடிக்கும்.
இந்த மாதிரி எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட முதல் வழி, இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று மனதார விழைய வேண்டும். பின்னர் அதிலிருந்து விடுபட உண்மையாகவே முயல வேண்டும்.. தினசரி வாழ்க்கையில் ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டால் கூட, ” நான் என்ன செய்வது…? எனக்கு எல்லாமே இப்படி தடங்கலாகதான் ஏற்படுகிறது. எல்லாம் என் துரதிர்ஷ்டம்தான்.” என்று கோட் ஸ்டாண்டில் சட்டையை மாட்டுவது போல் தயாராக ஏதாவது ஒரு பதில் வைத்துக்கொண்டு மேலும் ஒரு மூலையில் சுருண்டுவிடுவதால் பிரச்சனைத் தீரப்போவதில்லை.
“தடங்கல்கள் ஏற்படும்போது மனம் தளரதானே செய்யும்? எப்படி சந்தோஷமாக இருக்க முயலும்? என்னால் முடியாது..” என்பது இவர்களின் அடுத்த பதிலாக இருக்கும். எப்போது முடியாது என்று மனதுள் தீர்மானித்துவிட்டோமோ நம்மால் உண்மையாகவே முடியாதுதான் போலிருக்கிறது என்று உள் மனதும் நம்ப ஆரம்பித்துவிடும். முதலில் முடியாது என்ற சிந்தனையை அகற்ற முயல வேண்டும்.
ஒரு இடத்திற்குப் பயணம் செய்யும்போது வாகனத்தின் டயர் பழுதடைந்துவிட்டால் தளர்ந்து உட்கார்ந்து விடுகிறோமா என்ன? எப்படி சரி செய்து பயணத்தைத் தொடரலாம் என்றுதானே நினைக்கிறோம்? வாழ்க்கையையும் இந்த நோக்கோடுதான் அணுக முடிந்தால் பிரச்சனைகள் அகல ஆரம்பிக்கும். ஒவ்வொருமுறை தடங்கல் வரும்போதும் அதைத் தாண்டி எப்படி வெளி வந்து பயணத்தைத் தொடர்வது என்று யோசனை செய்ய வேண்டும். செல்லும்பாதை சரியில்லை என்று பட்டால் சட்டென்று திசையை மாற்றி இதமாக இருக்கும் வழியைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு ஆக்க பூர்வமான முறை.
எனக்குத் தெரிந்த ஒருவர் எப்போதும் இது சரியில்லை…அது சரியில்லை…பொழுது போகவில்லை…என்று புலம்பிக்கொண்டே இருப்பார். அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாட்கள் அல்லது விஷயங்கள்தாம் என்ன என்று சில சமயம் தோன்றும். பொழுது போகவில்லை என்று குறை படுகிறாரே என்று சில வழிகளைச் சொன்னால் “அது சரிப்படாது… இது எனக்கு தெரியாது…” என்று ஏதோ சொல்லி சமாளிப்பாரே தவிர புலம்பல் என்னவோ நிற்காது!
இவர்களைப்போன்றவர்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறார்களா அல்லது கவலைப்படுவதே இவர்களுக்கு ஒரு சுவாரசியமான பொழுது போக்கா என்ற கேள்வி எழுகிறது! ஒரு சூழ்நிலை அல்லது மனோபாவம் நமக்கு ஒத்துவரவில்லை அல்லது சங்கடம் அளிக்கிறது என்றால் அதைவிட்டு வெளிவருவது எப்படி என்றுதானே சிந்தனை செல்லும்? புலம்பிக்கொண்டே எப்படி அதிலேயே உழல முடியும்?
தன் கஷ்டங்களையே பெரிதாக நினைத்து பிறர் தங்களைக் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாங்கள் பிறருக்கு என்ன உதவி செய்யலாம் என்ற ரீதியில் சிந்தனையைச் செலுத்தினால் மனசு லேசாகும்.இன்னொரு வழி பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துவது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் அல்லது அறிந்தவர்களிடம் உண்மையான அக்கறையுடன் பழகுவது – ஒரு சின்ன புன்சிரிப்பு; ஒரு சில நிமிடங்கள் ஈடுபாட்டுடன் அளவளாவல் போன்றவை – மனசில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
இந்த மாதிரி வினோதமான சங்கடத்தில் அல்லது சுயப் பச்சாதபத்தில்(self-pity) சிக்கிக் கொள்பவர்கள் இப்படி ஒரு தீர்மானம் போட்டுக் கொண்டால் தெளிவு பிறக்கலாம்:
“பிரச்சனைகள் வரும்போது பிரச்சனை என்ன என்பது எனக்கு முதலில் புரிய வேண்டும்; அந்த சூழ்நிலையில் என் விருப்பம் என்ன என்பது புரிய வேண்டும்; என் விருப்பத்திற்கு ஏற்ப வழி துலங்குகிறதா என்று தேடும் மனப்பக்குவம் வேண்டும்; பின்னர் சவாலை நிறைவேற்ற அல்லது எதிர்கொள்ள மனோதிடம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவையெதுவும் இயலாத நிலையில், தீர்வும் என் கையில் இல்லாத பட்சத்தில், சங்கடத்தைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வு கட்டாயம் வரும் என்று நம்பிக்கையுடன் மனதை இதர செயல்பாடுகளில் அல்லது கடமைகளில் செலுத்த வேண்டும்.”
இந்த அகண்டப்பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொருவரும் தூசியைவிட மிகச்சிறிய துளிதான் என்ற உணர்வும், நம்மைத் தாண்டி இயங்கும் இந்தப்பிரபஞ்சத்தின் செயல்பாட்டின் பிரமாண்டத்தை பற்றிய உணர்வும் இருந்தால், நம் பிரச்சனைகள் பெரிதாக தெரியாது. அப்படித் தள்ளி நின்று நம் பிரச்சனைகளை ஆராயும்போது நமக்கு ஒரு தெளிவும் விடைகளும் கிடைக்கும்.

4 Replies to “சக்தி… மனசில் நிறையும்போது…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.