ஹாரி எவரெட் ஸ்மித் ஒரு ஓவியர்; திரைப்படகர்த்தா; வித்தியாசமானப் பொருள்களை சேமிப்பவர். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை மானுடவியலாளராக உணர்ந்தவர். ஈஸ்டர் பண்டிகையின் போது ஒளித்து வைக்கப்படும் முட்டைகளில் துவங்கி பல்வேறு விஷயங்களை கர்மசிரத்தையாகத் தொகுத்தவர். நியு யார்க்கரில் அவர் சேமித்த காகித விமானங்களைப் பார்க்கலாம்.
விண்ணைத்தொடும் நியு யார்க்கின் மாடகோபுரங்களில் இருந்து தரையில் வந்துவிழும் காகித விமானங்களை அவர் தெருவில் இருந்து பொறுக்குவார். சில சமயம் உயிரைப் பணயம் வைத்துக் கூட, விரைந்தோடும் டாக்ஸி வாகனம், அந்த காகிதத்தைக் குப்பையாக்குவதற்கு முன் பாய்ந்து சென்று விமானத்தைக் காப்பாற்றுவார். ஒரு சமயம் அந்தக் காகித விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. காத்தாடியைத் துரத்தும் சிறுவனைப் போல், பலூனைத் தொட்டு தரையிறக்கும் குழந்தை போல், அந்த காகித விமானம் செல்லும் சாலையெல்லாம் சென்று, இறுதியில் அதைப் பிடித்து, தன் சேமிப்பகத்தில் வைத்திருக்கிறார்.