அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில் புகுத லோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின் நூசலாடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் கால வேலான்.
(கம்ப.328)

 
லண்டன் ரயில் நிலையத்தில் அந்தக் குட்டிக் கரடி வந்து இறங்கும். அதனுடைய கழுத்தில் “இந்தக் கரடியை கவனித்துக் கொள்ளுங்களேன்!” என்று எழுதியிருக்கும். இந்தக் காட்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செப்டம்பர் மாதம் 1939க்கு பின் செல்ல வேண்டி இருந்தது. லண்டன் மாநகரத்தை குண்டு போட்டுத் தாக்குவார்களோ என அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஜெர்மனியுடன் போரிடுவதற்காக தந்தையர் எல்லாம் போர்முனைக்குச் சென்றுவிட, அன்னையர் எல்லாம் செவிலியர் ஆகிவிட, அனாதைகளாக ஆன குழந்தைகளை சித்திகளும் மாமிகளும் ரயில் ஏற்றி கிராமப்புறமாக அனுப்பி விடுகின்றனர்.

evacuees-station

போர் முடிந்து சொந்த வீட்டுக்கு, லண்டன் நகருக்குத் திரும்ப பல்லாண்டு காலம் ஆகலாம். ’பேடிங்டன்’ படத்தில் வரும் அழகுக் கரடியும் பெரு நாட்டில் இருந்து கள்ளத்தோணி ஏறி விசா இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்குள் குடிபுகுகிறது. அங்கே நட்ட நடுவில் அது அமர்ந்திருந்தாலும், எந்தப் பயணியரும் அதை கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவரின் அவசரம் + வேலை. ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரௌன் குடும்பத்தினர் வந்து சேர்கிறார்கள். எப்போதும் உற்சாகமாக இருக்கும் கரடியும், “எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நான் வசிப்பதற்கு இல்லம் தருவீர்களா!?” எனக் கேட்கிறது.

paddington_bear_movie_trains_station_railways_rails_wait_adoption_kids_wwii_world_war_two

அதே மாதிரி அனாதரவான நிலையில் இருந்தாலும், ‘தி கிரேட் மேன்’ (பெரிய மனிதன் – The Great Man – ஃபிரென்ச் “Le grand homme”) படத்தின் பத்து வயது பாலகன் காஜி (Khadji) பாரிஸ் ரயில் நிலையத்தில் பரிதாபமாக முகம் காட்டி, எவரிடமும் இறைஞ்சவில்லை. இது அவனை மையத்தில் கொண்ட படம்தான். ஆனால் கதையின் நாயகன் அவனில்லை. மாறாக, இது போரைக் குறித்த படம் எனலாம். அப்படியே, நாடு விட்டு நாடு தாவும், அல்லது துரத்தப்படும் வந்தேறிகளின் குடிஅமர்வில் உள்ள சிக்கல்களைச் சுட்டும் படம் எனலாம். தொழில் முறை நட்பு, படிப்படியாக நல்நேசமாகி பரஸ்பரம் ஓங்கும் புரிதலால் உறவிற்குக் கொணரும் கண்ணியத்தை உணர்த்தும் படம் எனலாம். தம் கட்டுப்பாட்டை அங்கீகரிக்காது ஆனால் களைய முடியாது வேரூன்றி விட்டு, பெருகியும் வரும் அன்னியக் கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சும் மரபுவாத நாட்டின், புதிய தலைமுறை அனாதைக்கு — மகனின் பாசத்தை உணர்த்தி, உலர்ந்த வாழ்வைத் துளிர்க்க வைத்து அர்த்தப்படுத்தும் சிறுவனின் கதை எனலாம்.

french_film_cinema_sarah_movie_director_immigrant_alien_russia_chechen_muslim-islam_the-great-man

படத்தைப் பல்வேறு அத்தியாயங்களாக அதன் இயக்குநர் சாரா லியானோர் (Sarah Leonor) பிரித்திருக்கிறார். முதல் அத்தியாயம் ஆஃப்கனிஸ்தானில் துவங்குகிறது. மார்கோவ் (நடிகர் சுர்ஹோ சுகாய்போவ்) என்பவரும் ஹாமில்டன் (நடிகர்: ஜெரமி ரேனியர்) என்பரும் அங்கே காவல் காக்கிறார்கள். இருவரும் அத்யந்த நண்பர்கள். ஒருவருக்கு தாகம் எடுத்தால், இன்னொருத்தர் தண்ணீர் குடித்தால் அந்த தாகம் அடங்கும் என்று பின்னணியில் சிறுவனின் குரல் ஒலிக்கிறது. பாலை நிலத்தில் சிறுத்தையின் தடயம் கிட்டுகிறது. மேய்ச்சல் மிருகங்களின் எலும்புகள் கிடக்கின்றன. அவர்களுடைய கனவில் சிறுத்தைப்புலி வருகிறது. அந்தக் கானல் மிருகத்தைத் தேடி வெகுதூரம் அலைகிறார்கள். அப்போது ஹாமில்டன் சுடப்படுகிறான். அவனை மிகுந்த பிரயத்தனப்பட்டு, அவனின் தோழன் மார்க்கோவ் காப்பாற்றுகிறான். ஆனால், அவனைத் தூக்கி வரும் வழியில் தன் கைத்துப்பாக்கியை இழக்கிறான. அதற்கான தண்டனையாக, அவன் இராணுவத்தில் பணியாற்றிய காலகட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிகிறான். அப்படியானால் அவனுக்கு ஃப்ரெஞ்சுக் குடியுரிமை கிட்டாமல் போகும், மறுபடி ராணுவத்தில் சில வருடங்கள் பணியாற்ற வேண்டி வரும் குடியுரிமை பெறுவதற்காக.
இராணுவத்தில் மார்கோவ் சேர்ந்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. செசன்யாவில் இருந்து பஞ்சம் பிழைக்க பிரான்ஸிற்கு அடைக்கலம் புகுகிறான் மார்க்கோவ். அவனுடைய மனைவி ருஷியாவின் தாக்குதல் போரில் இறந்துவிட்டாள். அவனுக்கு இருப்பதோ ஒரேயொரு மகன். செசன்யாவிலிருந்து கூட வந்த அகதிகளில் அண்டை வீட்டுக்காரர்களிடம் வளரும் மகனுக்கோ, தந்தையற்ற வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கம் கலந்த அச்சம் உடன் சேர்ந்த, பதின்ம வயது ஆற்றாமை, கோபம். இப்பொழுது மகனுடன் நேரம் கழிக்காவிடில், மீண்டும் மகனை, நல்லதொரு குடிமகனாக்க இயலாது என்பதை உணர்ந்த மார்க்கோவ், அதிகாரபூர்வ குடியுரிமையைக் கானல் நீராக்கி விட்ட பிரெஞ்சு இராணுவ வாழ்க்கையைத் துறந்து, சட்டத்தை மீறிய வந்தேறியாக மாறுகிறான்.
குடிமக்களுக்கே வேலை கிடைப்பது பிரான்ஸில் யூனிகார்ன் குதிரைக்கொம்பாக, பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், அத்துமீறி உள்நுழைந்து, படைப்பிரிவில் இருந்தும் விலக்கப்பட்ட மார்க்கோவ் என்பவனுக்கு எப்படி வேலை கிடைக்கும்? என்னதான் சக அகதிகளின் ஒத்தாசை இருந்தாலும், வருமானமில்லாத ஒரு இளைஞன், பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த மகனுடன் எவ்வாறு பாந்தமாக, பாசமான தந்தையாக உறவாட முடியும்? ஆனால் முயல்கிறான்.
இனவெறியைச் சகஜமாக ஊடக வெளியில் பாராட்டும் அமெரிக்காவை விட, உலகுக்கே அறச்சிந்தனையைச் சொல்லிக் கொடுப்பதாக மார் தட்டி நிற்கும்  ஃபிரான்சு போன்ற யூரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள், எவ்வாறு வேட்டையாடப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்தப் படத்தில் காட்சிகளால், வசனங்களால், குறிப்பால் உணர்த்தப்படுகிறது. படத்தில் பல காட்சிகளில் நெடிய வசனங்கள் கிடையாது. குறிப்பாகச் சொன்னால், மகனும் தந்தையும் ஒன்றுசேரும் இடத்தைச் சொல்லலாம். மகனோடு மீண்டும் ஒரு உறவை உருவாக்க முயலும் தகப்பன், பாரிஸ் நகருக்குக் குடி போகிறான். முதலில் நகரைச் சுற்றிப் பார்த்தபடி மகனோடு பேச முயல்கிறான். மகனின் நல்வாழ்க்கைகாகத்தான் போருக்குச் சென்றேன் என்பதை பெரிய உரையாடல் மூலம் சொல்வதற்கு தந்தை மார்க்கோவ் முயல்கிறான். அந்த நெடிய சொற்பொழிவைக் கேட்க விரும்பாத மகன் காஜி, எதிர்ப்புறமாகச் சென்று ஈஃபில் டவரின் ஒய்யாரத்தையும் பூட்டுகளால காதலைச் சொல்லும் பாலங்களையும் பார்ப்பது போல் ஓடி விடுகிறான். அந்த புதிய நகரின் ஈர்ப்பும், மாபெரும் பாரிஸ் நகரத்தின் கட்டிடப் பிரும்மாண்டங்களும் பகல் முழுவதும் மனதில் படர, கூட இருக்கும் வளர்ந்த ஆணின் இருப்பு சிறுவனின் மனதில் தூலமான, நம்பகமான இருப்பாக ஆகத் துவங்குகிறது, நதியில் படகில் போகும்போது இரவின் குளுமையும் அவனைத் தந்தையை நோக்கி, கதகதப்பை நாடி இட்டுச் செல்கிறது. பாலம் மறைக்கும்போது வெளிச்சம் தடுக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் இருந்து வெட்டவெளியில் படகில் பயணிக்கும்போது நிலவின் வெளிச்சம் அப்பாவை அரவணைக்க வைக்கிறது. இருவரும் நெருங்குகிறார்கள்.
இந்த மாதிரி காட்சிகளைக் காதலில் பார்த்து இருப்போம். இரவின் நீல நிறத்தில் நண்பர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இருப்போம். ஆனால், தாய்மண்ணற்ற பிரதேசத்தில், வீடற்ற நாட்டில், தந்தையைக் கண்ணால் நாள்பட பார்த்தே இராத பாலகனின் மனதின் வெறுமையைப் பொறுமையாக அதே நேரம் தன் இயலாமையையும் வெளிப்படுத்தியபடி, தான் பொறுப்பானவன் என்பதையும் உணர்த்தியபடி, வளர்வதில் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதையும் உணர்த்தியபடி, மகனின் பாசத்தை, நெருக்கத்தை அடையப் பாடுபடும் தந்தை; நம்ப விரும்பினாலும் நம்புவதால் மறுபடி இழப்பு நேர்ந்தால் அதைத் தாங்குவதெப்படி என்று அனுபவமற்ற அச்சத்தோடு இருக்கும் சிறுவன்; இருவரிடையே நிகழும் மௌனக் கணங்களில் நடக்கும் பரிமாற்றங்கள், சுற்றிலும் பெரும் இயக்கத்தில் சுழலும் நகரம், நதி, படகு, பயணம் -இப்படிச் சிறு நேரத்தில் ஒரு புறவெளியும் அகவெளியும் பிணைவதைக் காட்டி நம்மையும் நமக்குள்ளிருக்கும் சக மனிதத்தைப் பார்க்க வைக்கிறார் இயக்குநர்.
அப்படி தகப்பனும், மகனும் மறுபடி நெருங்குவதுதான் நடக்கும் என்று நமக்குத் தெரியும், ஆனாலும் எப்படி நடக்கப் போகிறது என்று அறியாத நமக்கு அது நடக்கும் நேர்த்தியில் ஏதோ தெரியாததைத் தெரிந்து கொள்ளும் குதூகலம் பற்றிக் கொள்கிறது. இதுதான் கலைநயத்தின் அளிப்பு.
ஃபிரெஞ்சு புரட்சியின்போது அரசியல் கொள்கைகளைப் பரவலாக்க கலைப் படைப்புக்களின் பெருக்கம் உதவியது. பிரஞ்சுப் பேரரசை நெப்போலியன் உருவாக்கியபோது செய்தி என்பது தேசிய உணர்வைப் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார். மற்ற நாடுகளும் நெப்போலியனை பின்பற்றி, எதிர்ப் பிரச்சாரமாக அவனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்க ஆரம்பித்தன. கீழே ஜெர்மனிய அரசின் பிரச்சார போஸ்டரைப் பார்க்கலாம். இதில் ‘தி கிரேட் மேன்’ என்று பிரான்ஸில் சொல்பவரை, ‘வெறும் எலி’ என்று சித்தரிக்கிறார்கள்.

napolean_mice_the-great-man1

பிரெஞ்சு நாட்டின் அடிநாதமாக Liberté, égalité, fraternité (விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்) என்பதைச் சொல்கிறார்கள். அதைத்தான் இந்தப் படம் தேடுகிறது. ஒரு தேசத்தில் அன்னிய மக்கள், அதிகமாக உள் நுழைய நுழைய, அந்த தேசத்தின் கொள்கைகள் எவ்வாறு மாறுகின்றன? புதிதாகக் குடிபுகுந்தவர்கள், அந்த தேசத்தின் மையச்சரடோடு ஒத்துப் போவார்களா? அன்னியநாட்டில் இருந்து நுழைபவர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு, தங்கள் விழுமியங்களை விதைப்பார்கள்? அல்லது மண்ணின் மைந்தர்களுக்கே அத்தகைய விழுமியங்கள் புரியாத மர்மமா? வந்தேறிகள்தான் அந்த மதிப்பீடுகளின் அசல் தன்மையைப் போதிப்பவர்களாவாரா?
குடியேற்றமும், மண்ணியல்பும் எதிரெதிரானவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவை ஒன்றிணைந்தால்தான் வாழ்வு சாத்தியம் என்பதும் இல்லை. ஆனால் சேர்ந்தியங்குவது என்றில்லாமல் வாழ்வு இருதரப்பினருக்கும் கிட்டாது.
சிரியா வேண்டாம். தற்போதைய சிரியாவில் இருந்து தப்பிக்க முயலும் ஆசிய நாட்டினரைக் கூட யூரோப்பியருடன் ஒப்பிட வேண்டாம். சில மாதம் முந்தைய கிரேக்கப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஜெர்மானியர், தங்களின் சொந்தச் சகோதரர்களுக்காக, தங்கள் கைக்காசைக் கொடுக்க முன்வந்தார்கள்?
கில்கமேஷ் காதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இரு நண்பர்களின் கதை. கில்கமேஷும் அவனுடைய தோழர் என்கிடு என்பவரும் தோழர்களாகவே தங்கள் பயணத்தைத் துவங்கவில்லை.  ஹம்பாபா என்னும் கோர விலங்கைத் தேடி, அந்த மாபெரும் இராட்சத மிருகத்தை வேட்டையாடுவதற்காக, பெரியோரின் சொல்லைக் கேளாமல், கில்கமேஷ் மற்றும் என்கிடு, தங்களின் பயணத்தை மேற்கோள்கின்றனர். இந்தப் படத்திலும் அவ்வாறே, மார்க்கோவும் ஹாமில்டனும் சிறுசிறு பிணக்குகளுக்குப் பின் தங்கள் திறமைகளை அறிந்து, உற்ற பந்தங்கள் ஆகின்றனர். இந்தப் படத்தில் சிறுத்தைப்புலியை துரத்த வேண்டாம் என்னும் தங்களின் மேல் அதிகாரியில் சொல்லைக் கேளாமல், இரு நண்பர்களும் அந்த தேடும் பயணத்தை எடுக்கின்றனர். கிலகமேஷுக்கு பயமுறுத்தும் கனாக்கள் வருகின்றன. என்கிடு அவனின் கனவுகளை நல்லெண்ணங்களாக உணர்த்தி, சாகசத்தைத் தொடர்கிறான். நண்பன் என்கிடுவின் மரணத்திற்குப் பிறகு, மரணமற்றப் பெருவாழ்வை நோக்கிய தேடலை கிலகமேஷ் மேற்கொள்கிறான். இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.
தீவிரவாதம் என்னும் சிறுத்தைப்புலியைத் தேடி அடக்க நினைத்த மார்க்கோவ் என்னும் என்கிடு இறந்துவிடுகிறான். அவனின் உற்ற தோழனாலும் அதை சட்டென்று அடக்க முடியாது. ஒரு தந்தையாக, அனாதையான குழந்தையை இரட்சிப்பதில், தன்னுடைய இறவாத்தன்மையை உணர்வதாக ஹாமில்டன் என்னும் கில்கமேஷைப் பார்க்கிறோம். அப்படியானால், தாய்மைக்கு, இங்கே என்ன இடம் என்பதை பெண் இயக்குநர் சாரா சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பெண்ணாக இருப்பதினாலேயே, ஒரு ஆணிற்குள் அடக்குண்டு இருக்கும் பொறுப்பையும், குழந்தைமையைப் பேணும் தாய்மை குணத்தையும் அவரால் பூடகமாக உணர்த்தமுடிகிறது. ஆண் இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் ஆண் கதாபாத்திரங்கள் ஆவேசமாக இயங்குவார்கள். துப்பாக்கியும் கையுமாக, இரத்தம் படிந்த கறைகளுடன் போர்களில் உலா வருவார்கள். அது ஆடவர்களின் ஆண்மையை நிலைநிறுத்துவதற்காக ஆடவர் எடுக்கும் படம். இது மனிதரின் குணத்தை உணர்த்துவதற்காக, பெண்கள் அதிகம் உலா வராதத் திரைக்கதையில், ஆண்களின் நிஜமான பராக்கிரமத்தைப் போரில்லாத, வன்முறை இல்லாத அன்றாட வாழ்வெனும் களத்திலிருந்து பெறலாமென்று உணர்த்தும் பெண் எடுத்த படம். திரைப்படத்தின் தலைப்பையேப் பாருங்களேன். தி கிரேட் மான் – மாபெரும் ஆண்மகன்: ஆண்மகனுக்கு என்ன இலட்சணம்?
இந்தப் படத்தில் பெரிய கதாபாத்திரங்களில் பெண்கள் கிடையாது. ஆண் என்பவன் வாள் ஏந்துவான்; சுட்டுத் தள்ளுவான்; சாப்பாட்டைக் கொண்டு வருவான்; அதெலாம் இங்கே காண்பிக்கப்படுகிறது. ஆனால், நல்ல மனிதர் என்பவர், சக மனிதருக்கு மரியாதை தருவார். அவரின் நிலை, நாடு, அரசியல், இனம், மொழி, மதம், போன்ற சின்னங்களை ஒதுக்கி, சக நேசனாக நடத்துவார். இந்த உலகமோ, சொந்த நாடோ, அதைச் செய்யாவிட்டாலும் கூட… தன்னுடைய அண்டை அயலாரை அவ்வாறு நடத்துபவரே ‘தி கிரேட் மேன்’.
இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போரில் அடிமைகளாக ஆனவர்களை வெற்றி கொண்டவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும்? வேண்டாத சண்டையின் நடுவே அகப்பட்டு கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? இதற்கெல்லாம் சரியான பதில் எவரிடமும் கிடையாது. ஆனால், ‘தி கிரேட் மேன்’ அதற்கான விடைகளை நோக்கி நம்மை செலுத்துகிறது.

oOo

அன்னியத்தை நீக்கும் பேராண்மை

தற்கால ஃப்ரெஞ்சுப் படங்களின் குணாம்சமாகத் தெரியும் சில உத்திகளால் படத்தை நிரப்பி இருக்கிறார் இயக்குநர். அவற்றில் ஒன்றாக, படத்தின் கட்டமைப்பும் உள்ளீடும் ஒன்றையொன்று தாங்கிப் பிடிப்பதோடு ஒன்றை மற்றது விளக்குவதாகவும் அமைந்திருக்கின்றன. பிணைப்பு பளுவாகாமல், ஒன்றிய இயக்கமாகி விடுகிறது. ஒன்று தூக்கலாக அமைந்து கவனத்தைக் கவ்வினால் மற்றது தன் பின் தேங்கிய இருப்பில் ஒன்றாத இயக்கமாகக் காட்சிகள் அமைந்து உறுத்தத் துவங்கும். சில சமயம் சிறந்த இயக்குநர்களிடம் கூட இந்த இணைப்பில் அபசுருதி நுழைந்து நம்மை அன்னியமாக்கும். அண்டோனியானியின் ரெட் டெஸர்ட் படத்தை இன்று பார்த்தால் அதில் கருத்தியலால் நகர்த்தப்படும் காட்சிப்படுத்தலின் செயற்கைத் தன்மை உறுத்தவே செய்கிறது.
அன்னியப்படுத்தலைச் சொல்ல வந்த படம் அன்னியமாக்கி வைப்பதால் அந்த ‘அனுபவத்தை’ நமக்குக் கொடுப்பதில்லை. மாறாக அதே இயக்குநர் தன் பாஸஞ்சர் படத்தில் அதே வெறுமை சூழ்ந்த வாழ்வின் இறுக்கத்தால் விலகிப் போகும் நபர் ஒருவனின் வாழ்வைச் சித்திரிக்கையில் அவ்வப்போது வாழ்வின் ஈர்ப்பை அவன் பிடிக்க முனைந்து அதில் தோற்பதைக் காட்டுவார். அந்த ஈர்ப்பும், விலகலும் நமக்கு அன்னியப்படுதலைக் கொடுத்து விடும். காட்சிப்படுத்தலும் ‘கதை’யைக் காட்டாமல் கதையாக இல்லாமல் வாழ்வுக்குள் ஒரு சாளரமாக இருக்கும்.
ஒரு வகையில் கலை என்பது ஒரே நேரம் இந்த சாளரத்தன்மையைக் கொண்டதாகவும், அதை மறக்கடித்த ஈடுபாட்டை நம்மிடம் கொடுத்து விடுவதாகவும் இருக்கையில் அது வெற்றி பெறுகிறது. கலையின் நோக்கம் வெற்றி பெறுவதல்ல, மாறாக நம்மை நம்மிடமிருந்து அகற்றி நம்மில் வேறொன்றை நிரப்புவது. இதையேதான் இந்த ஃப்ரெஞ்சுப் படமும் முயல்கிறது. அனேக நேரம் அது தன் நோக்கத்தை நிறைவு பெறச் செய்து விடுகிறது எனலாம். ஆயினும் ஃப்ரெஞ்சு மொழி தெரியாத பார்வையாளரால் இப்படத்தின் ஒரு அவசிய அம்சத்தை நழுவ விட்டு விடுகிறோம் என்ற எண்ணத்தை அகற்ற முடியவில்லை. இத்தனைக்கும் படத்தில் வசனம், பேச்சு என்பன மிக மிகக் குறைவுதான்.
ஆனால் அகதிகள், அன்னியத்தன்மை, குடியேற்றம், ஃப்ரெஞ்சுத்தன்மை, இணைப்பு, ஒன்றுதல் என்ற பல கருத்துகளை முன்வைக்கும் ஒரு படத்திற்கு எத்தனை குறைவான பேச்சும் உரையாடலும் இருந்த போதும் மொழியும் மொழி சார்ந்த பண்பாடும், பண்பாடு சார்ந்த உடலியக்கங்களும் ஆணி வேராகத்தானிருக்கும் என்று நாம் ஊகிக்கிறோம்.
இந்தப் படத்தைப் பொறுத்த வரை மேற்படி அம்சங்களால் நாம் பார்வையாளராகவே கொஞ்ச நேரமாவது இருக்கிறோம். அதைக் கதை சொல்லும் முறை ஓரளவு நிவர்த்தி செய்யவே அதிலிருந்து நமக்கு விடுவிப்பு கிட்டுகிறது. கதை சொல்லும் முறையில் ஒரு முக்கிய அம்சம் ஒலித் துண்டுகளின் பாணி.
பார்வையாளர்களாகவே இருந்து விடும் நம்மில் பலரும் படங்களின் பின்புலத்தில் இயங்கும் ஒலிகளால் நாம் தூண்டப்படுவதையும், அலைக்கழிக்கப்படுவதையும், கிளறப்பட்டு தளர்த்தப்படுவதையும் உணர்கிறோம், மறுவினை தெரிவிக்கிறோம், ஆனால் அறிந்திருக்கிறோமா என்றால் அனேகப் படங்களில் அப்படி நேராது. அனுபவம்தான் அறிவு என்று வாதிடலாம். ஆனால் பாகுபடுத்தல் என்று வரும்போது அறிதல் என்பதற்கு வேறொரு தளம், வேறொரு நோக்கம் எழுகிறது. இப்படத்தில் அந்த அறிதல் நோக்கிய உந்துதல் முதலிலிருந்தே நம்மிடம் தூண்டப்படுகிறது. ஒலிகளை வைத்துப் படத்தில் வெறும் உணர்ச்சித் தூண்டுதலை மட்டும் தேடிப் பெறாமல் இந்த இயக்குநர் அவற்றிடையே ஒரு தனி இயக்கம் கொண்ட மேல்நிலைப் பாணியைக் கொடுத்துக் கதைக்குக் குடை நிழலாக்குகிறார் அதை.
அப்படி ஒரு தூண்டுதல் படத்தின் ஒலிக் கட்டமைப்பிலேயே கிட்டி விடுகிறது. அது இப்படத்தில் நாயகம் கொண்ட ஓர் இருப்பு. போர்க்களத்தில் துவங்கும் படத்திற்கு நமக்கு உடனே புரியும்படியான விதத்தில் அன்னியப்பட்டுத் தெரியும் சிறுவனின் குரலோடு படம் துவங்கும். ஒரு சிறுவனின் பள்ளிக்கு அவன் தந்தை எழுதும் குறிப்பு ஒன்றோடு, அதன் உள்ளடக்கத்தை அவன் சொல்வதோடு படம் முடியும். இடையில் சில அத்தியாயங்களாக நகர்த்தப்படும் கதையில், தன் வாழ்வில் ஊடுருவிய இரு ஆண்களின் போர்க்கால நட்பைப் படம் சித்திரிப்பதே கூட அனேகமாக ஒரு சிறுவனின் குரலில் சொல்லப்படும் கதையாகத்தான் நடக்கிறது. கதை சில நேரம் நடக்கிறது, வெகு சில நிமிடங்களில் ஓடுகிறது, பின் மெல்ல இழைகிறது. ஸ்தம்பிதத்தைக் கொணர்கிறது. பின் பளீரென்று தாவி இருவர் வாழ்வில் பெரும் மாறுதல்கள் நடந்தேறி விட்டன, இப்போது இருவர் வாழ்வுமே தனி உயிர்ப்புடன் இன்னொரு அத்தியாயமாகி விட்டன என்றும் சொல்கிறது.
துவக்கக் காட்சிகள் எதார்த்தமாகப் போர்க்களம் என்னும் சம்பவமில்லாத வெறுமையில் விரிகின்றன, ஆனால் குரல் காட்சியில் இருக்கும் வீரர்களின் பங்கெடுப்பில்லாத புனைகதையாக அந்தச் சம்பவங்களைச் சுருக்குகிறது. இப்படி உரை என்று பார்த்தாலும் படம் அந்த உரையோடு விளையாடி இருப்பதாகத் தெரிகிறது.
கதைத் துண்டுகள் ஊடே கதையின் துவக்கம், நடு, இறுதிக் கணுக்களிடையே சூட்சும முடிச்சுகளைப் போடுகிறார் இயக்குநர். கதை முடிவில் சிறுவன் தன்னை இப்போது வளர்க்கும் ஆணை மிருகம் என்று தன் பள்ளியின் வகுப்புக்கு அவன் எழுத வேண்டிய ஒரு பயிற்சிக் கட்டுரையில் குறிக்கிறான். அதை அவன் இழி சொல்லாக எழுதவில்லை, எதார்த்த விவரணையாக எழுதுகிறான். ஏனெனில் ஹாமில்டன் இரவில் உழைத்துப் பகலில் உறங்கும் ஒரு மனிதன். படத்தைத் துவக்கும் சம்பவத்தின் பின்னே உள்ளது இரவில் வேட்டையாடும் ஒரு சிறுத்தை.
சிறுத்தை வேட்டைக்குப் பிறகு நடந்த சம்பவங்களில் இருவர் வாழ்வும் தடம் புரண்டது கதையைத் துவக்குகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவதோடு, ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதும் அங்கு ஆழமாகத் துவங்குகிறது. படத்தின் முடிவில் சிறுவன் மிருகம் என்று வருணித்த ஆணுடன், தன் தந்தையின் நண்பன் என்று மட்டுமே அறிந்தவனுடன், நம்பத்தக்கவன், பராமரிப்பவன் என்ற புரிதலோடு, ஆதரவை சந்தேகமின்றி, பயமின்றிப் பெற முடிபவனாகப் பழகத் துவங்குகிறான்.
மலைப் பிரதேசப் பாலையில் துவங்கிய படம், அலை தீர்ந்த நீர்ப்பெருக்கில் மிதக்கும் படகில் முடிகிறது. முன்பொரு படகில் அன்னியனாகத் தனக்கு ஆகியிருந்த தன் அப்பாவோடு நெருங்கி வர நகரும் சிறுவன், இங்கு இன்னொரு படகில், அன்னியனாகத் தன் வாழ்வில் நுழைந்த இரண்டாவது ஆண் ஒருவனை வளர்ப்புத் தகப்பனாக மாறி வருபவனை நம்பிக்கையோடு நெருங்குகிறான். ஒளியும், பிம்பங்களும் இப்படித் துவக்கத்திலும் இறுதியிலும் வெறும் கண்ணாடியின் பிரதிபலிப்பாக இல்லாமல், பின்னதில் முன்னது இருந்த நிலையை நமக்கு நினைவூட்டும் உறவு கொண்ட பிம்பங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. வார்த்தைகளில்லாக் கதை நகர்த்தலில், அசரீரி கதை சொல்லாத நிலையில் இந்த வகை இணைப்புச் சுட்டல்கள் கலை வழியே நம்மை நிஜம் போன்ற ஒரு புனைவில் அமிழ்த்துகின்றன.
குறிக்கோள் இல்லாது பெரு நகரில் தகப்பனும் மகனும் அலையும் ஒரு தினத்துப் பயணத்தில் படகுப் பயணம் என்பதே ஒரு குறியீடு போல அமைவது தற்செயலாகவோ திட்டமிட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அனுபவமாக நமக்குள் உறைகின்ற பயணம் அது. உணர்தலின் மூலம் புரிவது என்பதை இதில் பெறலாம். மூடுபனியில் பயணிக்கும் படகு, நதிக்கு மேலே உள்ள பாலங்களினடியில் செல்கையில் இருளில் கவிழ்ந்ததாகி, பின் ஒளியில் நுழையும்போது தெளிவாகி- உறவுகளும் இப்படித்தான் புகைமூட்டங்களாலும், ஒளி துலக்கங்களாலும் பயணமாகின்றன.
இந்தப் படகுப் பயணத்திலும் உரையாடலைக் குறைத்து ஒளியால், நிழலால், பிம்பத்தால் எதெதையோ சொல்ல வரும் இயக்குநர், ஆங்காங்கே இசைத் துண்டுகளாலும் நம் எதிர்பார்ப்பைத் தகர்த்து சகஜ நிலையில் நாம் ஆழ விடாமல், கதையில்லா நிலையை நாம் அயர்வோடு ஏற்க விடாமல் ஆக்குகிறார். பாரிஸின் நடைபாதைகளில், கட்டிடங்களின் படிக்கட்டுகளில் தகப்பனும் மகனும் நடக்கையில் அசாதாரணமான இசைத் துணுக்குகள் நம்மை நிமிர்த்துகின்றன. ஆனால் அவை காட்சியில் ஒரு உணர்வைக் காட்டி அதில் நம்மை ஆழ்த்துவதில்லை. மாறாக இருவருமே புறவெளியிலும் அன்னியச் சூழல், உள்வெளியிலும் அன்னியச் சூழல் என்று தன்னை எங்கும் பொருத்தி வைக்க முடியாது தத்தளிப்பதை அந்த இசைத் துண்டுகளில் அசாதாரணத் தன்மை நமக்கு உணர்த்துகிறது என்று தோன்றுகிறது.
இந்த ஒலிக் கட்டமைப்பு, காட்சிக் கட்டமைப்புடன் இசைவதைத்தான் முதலில் சுட்டினேன்.
இனி இப்படத்தின் மறைபொருளாக உள்ள பண்பாட்டு அரசியலைச் சற்று கவனிப்போம். ஆமாம், கதை ஒரு பெரும் அரசியல் சமூகப் பிரச்சினையை இரு தனி மனித வாழ்வின் அவலங்கள் மூலம் அணுகுவதால் பெரிய பிரசங்கங்கள், கருத்தியல் பாவனைகளை எல்லாம் தன் தோளில் சுமக்கத் தேவை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
அதே நேரம் ஒவ்வொரு தனி மனிதனும் தீவல்லதானே, பெரும் நதியாகப் பிரவஹிக்கிற பண்பாட்டு இயக்கத்தில் அவர்கள் இறங்கி நனையவே செய்கிறார்கள். ஒவ்வொரு நனைப்பையும் இப்படம் இரக்கமின்றிப் பார்க்கிறது. அல்லது நம்மை வெளி நிறுத்தி, கதை மாந்தர் அந்த முக்குளிப்பால் என்ன ஆகிறார் என்று பார்க்க வைக்கிறது. நம்மிடம் எந்த மறுவினையையும் படம் எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக அலைகிறதான ஒரு தோற்றம் இருக்கிறது. அது உண்மையில்லை. படம் நம்மை விரும்பி அழைத்துப் போகிறது என்பது அவ்வப்போது தெரிந்து விடுகிறது. இப்படி வருணிக்க நமக்கு இயலும்படி ஆக்கி இருப்பதுதான் இந்தப் படத்தின் தனித்தன்மை. நாம் காட்சியில் நடுவில் இருந்தபடி பார்வையாளனாகவும் இருப்பதை அறிகிறோம்.
படம் இந்த பண்பாட்டு அரசியலை நேரடியாகக் கையிலெடுக்காமல் சிறு சுட்டல்கள் வழியே கொடுத்து நம்மை நுண்மைப்படுத்தி விட்டு, தன் போக்கில் போய் விடுகிறது. பிரச்சினைகளை நேரடியாக எடுத்து அலசி, அடித்துத் துவைத்து முடிவுகளை எதிர்பார்த்து கலைப்படைப்புகளை அணுகுவோருக்கு இந்த வழுக்கி நகர்தல் மிக ஏமாற்றமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கனவே தமக்கே யோசிக்கத் தெரிந்தவர்களுக்கு, கலை என்பது பாடம் நடத்த உருவாக்கப்படுவதில்லை என்று தோன்றுவோருக்கு, இந்தப்படம் ஏற்றது. செசன் அகதிகள் வெறும் பொருளாதார அகதிகள் மட்டுமில்லை. ஏகாதிபத்திய ரஷ்யாவின் பலியாட்கள் மட்டுமில்லை. அவர்கள் யூரோப்பியரே போன்றவர் ஆனால் முழுதும் அப்படியுமல்ல. ஃப்ரெஞ்சு பேசுகிறார்கள் ஆனால் அது தத்தும் ஃப்ரெஞ்சு, தவழும் ஃப்ரெஞ்சு. நடந்து ஓடும் ஃப்ரெஞ்சோ, வளர்ந்த மனிதர்களின் மொழியோ அல்ல. இத்தனைக்கும் மேல் அவர்கள் கிருஸ்தவர்களும் அல்ல. ஆம், முஸ்லிம்கள் வேறு. கிட்டத்தட்ட எல்லாத் தளங்களிலும் ஃப்ரெஞ்சு மக்களின் இன்றைய மனோநிலைக்கு ஒவ்வாத எல்லாக் குணங்களையும் ஒருங்கே கொண்டவர்கள்.
படம் முதல் பகுதியின் நாயகனைச் சித்திரிக்கையில் இந்த ஒவ்வாமைக்கான குணாம்சங்களோடு துவங்காமல் அவருடைய உலக மனித சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் குணங்களோடு சித்திரித்துத் துவங்கி ஒவ்வொரு கட்டமாக அவரது அன்னியத்தன்மையை கொணர்கிறது. ஒரு இடத்திலும் நம் முகத்தில் அறைந்து காட்டுவதில்லை. மார்கோவின் முஸ்லிம் மூலாதாரத்தை ஒரு சிறு சுட்டலில் சொல்கிறார் இயக்குநர். ஹாமில்டன் உற்ற நண்பனாகி விட்ட நிலையில் பழைய ராணுவ முகாம்களில் இளம் ஆண்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்தும் சொற்களால் பகடி செய்யும் பண்பாட்டைத் தொடர முயல்கிறான். ஆனால் சொந்த வாழ்வில் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவிக்கும் மார்கோவ், அந்தப் பகடியில் இறங்க அத்தனை ஈடுபாடு இல்லாதிருக்கிறான். குண்டடிபட்ட காயங்களிலிருந்து இன்னும் முழுவதுமாகத் தேறாத ஹாமில்டன் உயிரோடு இருப்பதையே மிக ரசிக்கும் நிலையில் இருப்பதால் மார்கோவின் அடங்கிய தன்மை அவனுக்கு அத்தனை பிடிப்பதில்லை, அத்தனை ரசிப்பதில்லை, புரிவதும் இல்லை. ஹாமில்டனுக்குத் தான் ஒரு குடிமகன் என்பதில் உள்ள லாபங்கள் அத்தனை பெரியவை என்பது கூடத் தெரியவில்லை. அவை இல்லாதவருக்கு அவற்றின் அவசியமும், வாழ்வாதாரத் தன்மையும் பிரும்மாணடமாகத் தெரியும் என்பது ஹாமில்டனுக்குச் சிறிது சிறிதாகத் தெரிகிறது.
மார்கோவை ஒரு நாய் என்று அழைத்து வேடிக்கை செய்ய முயலும் ஹாமில்டன் திடீரென்று இறுக்கமாகி கடுமையாகும் மார்கோவைப் புரியாமல் பார்க்கிறான். மார்கோவ் ஹாமில்டனுக்குக் கறாராகச் சொல்கிறான், நான் ஒரு நாய் இல்லை. அதுவும் ரஷ்ய நாய் இல்லை.
மார்கோவ் முதல் தடவையாக செச்சன்களின் இரண்டு அடையாள நிலைகளைப் புரிந்து கொள்கிறான். அவர்கள் ரஷ்யர்களிடம் ஒடுக்கு முறையைச் சந்தித்தவர்கள், அவர்கள் நாய்களை விரும்பாத முஸ்லிம்கள்.
பிறகு தன் மகனுக்கு சட்டத்துக்கு வெளியே வாழும் தாம் எப்படி எந்த நிலையிலும் சமாளிக்க வேண்டும், எப்படிச் சிறு கருவிகளையும் பயன்படுத்தி, தகவலை ஒளித்து, பிடித்து விசாரிக்கும் காவலர்களிடம் எதையும் காட்டிக் கொடுக்காமல் தப்பித்து வாழ வேண்டும் என்பதை எல்லாம் சொல்லித் தரும்போதும் அந்த அடையாள அரசியலின் மாற்று முகத்தைத்தான் காட்டுகிறார்.
சிறுவன் சட்டத்தின் காவலர்களால் பிடிக்கப்பட்டு அனாதைச் சிறுவர் விடுதியில் சேர்க்கப்படுவதை விரும்பாது இரவோடு தப்பிக்க முயல்கையில் விடுதிச் சுவர் தாண்டிக் குதிக்கையில் எதிரே ஹாமில்டன் தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கிறான். நமக்குப் படிப்படியாகத் தெரிகிறது ஹாமில்டனும் ஒரு அனாதை, இப்படி ஒரு விடுதியில் வளர்ந்து பெரும் சமூகத்துடன் ஒட்டி வாழாத ஒரு அன்னியன் என்று.
காயம்பட்டு மருத்துவ மனையில் இருக்கும் படையாள் ஹாமில்டன், தான் உயிர் மீண்டதை மிகவும் ரசித்து, தன் உடலைக் கடுமையாக வருத்திப் பழைய உறுதித்தன்மை, ஆரோக்கியம், படைவீரனின் தயார் நிலை ஆகியவற்றைப் பெற விழைகிறான். உடற்பயிற்சியில் வீராப்புடன் ஈடுபடும் அவனுக்கு மார்கோவைப் பார்க்க வருகையில் மார்கோவ் ஒரு ஹோட்டலின் முகப்பில் காவலாளாக, ஏவலாக நிற்பது உண்மையால் சுடுவதாக இருக்கிறது.
குடிமகன் மார்கோவ் தன் நடத்தையை ஒவ்வொரு கணமும் கவனத்தோடு பார்த்து ஜாக்கிரதையாக வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்கத் தேவை இல்லை. நடத்தை கெட்டுப் போனவனாகக் கூட அவனுக்கு ஃப்ரெஞ்சு சமூகத்தில் ஓரிடம் இருக்கும். குற்றவாளியாக ஆனால் கூட அந்த இடம் பறி போய் விடாது. ஃப்ரெஞ்சு லீஜினராக பாசறையில் சிக்கி இருக்கையில் கூட அவன் இன்னும் ஒரு குடிமகனே. ஆனால் மார்கோவ் அப்படி அல்ல. அவன் வைத்திருக்கும் இந்த குற்றேவல்கார நிலை கூட ஹாமில்டன் கொடுத்த ஒரு அடையாள அட்டையினால் கிட்டியது. அதைப் பயன்படுத்துவதே ஒரு குற்றம். தவிர அவன் ஒரு சட்ட அங்கீகாரம் இல்லாத வந்தேறி. அவன் தன் ஒவ்வொரு செயலையும் அடக்கி வாசிப்பது அவசியம். இல்லாவிடினும் ஃப்ரெஞ்சு சமூகத்தின் கட்டுப்பெட்டிப் பண்பாட்டில் ஒரு முஸ்லிமான அவன் தன் நிலையை வெளிக்காட்டாமல் வாழ்தலும் அவசியம்.
இதைக் கதை முதலிலேயே நிறுவுகிறது. மார்கோவ் புதர்களிடையே கவனமாகப் பதுங்கி சிறுத்தை வேட்டையில் இருக்கிறான். மார்கோவ் தன் இயல்புக்கு ஏற்றார்போல காய்ந்த ஆற்றுப் படுகையில் திறந்த வெளியில் ஆபத்தை எதிர்பாராமல் ஓடிப் போகையில் சுடப்படுகிறான். சுடப்பட்டுக் காயமாகி ஒரு பாரமான ஹாமில்டனுக்கு ஒரு கண்டிப்பும் கிட்டுவதில்லை, தண்டனையும் இல்லை. அவனைக் காப்பாற்றிப் பெரும்பாடு பட்டுச் சுமந்து வந்து பாசறையில் சேர்த்த மார்கோவுக்குத் தண்டனையோடு அவனுடைய வாழ்வாதாரமும் பறிக்கப்படுகிறது. குடியுரிமை அட்டை கொடுக்கப்படுவதில்லை.
இன்னொரு விதத்தில் பண்பாட்டு அரசியலைக் கவிழ்க்கிறார் இயக்குநர். காம்யுவின் நாவலிலிருந்து இன்று வரை அரபுகளின் தோற்றம் ஃப்ரெஞ்சு மற்றும் இதர யூரோப்பியர் மனதில் கட்டுப்பாடில்லாத, ஆடம்பரமான, கோலாகலமான, தீவிர உணர்ச்சி வசப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதக் கூட்டம் என்றுதான் இருக்கிறது. இஸ்லாம், கடுமை, கட்டுப்பாடு என்பதெல்லாம் இன்னொரு புறம் இருந்தாலும் அவை பெண்களைத்தான் கட்டுப்படுத்தும். அரபு ஆண் என்பவன் இன்னுமே யூரோப்பிய பெண்ணுலகுக்கு ஒரு அச்சுறுத்தல்தான். அதற்கேற்றார்போல அரபு பிலியனேர்கள், கோடீஸ்வரர்கள் யூரோப்புக்கு வருகையில் பெரும் செல்வில் தீவிரமான நுகர்வில் ஈடுபடுவது இந்தக் கற்பனைக்கு எந்த முடிவும் இல்லாதபடிக்கு வைக்கிறது.
இந்தப் படத்தில் ஏழை பாழையாக வாழும் மார்கோவ் மிக அமைதியாக, மிகக் கட்டுப்பாடாக, உணர்ச்சிகளைக் கூட அளந்து வெளிப்படுத்தி, பிற பெண்களோடு உறவை நாடாது தவிர்ப்பவனாக எல்லாம் காட்டப்பட்டு, ஹாமில்டன் மரபுச் சித்திரிப்பில் அரபு ஆண்கள் எப்படிக் காட்டப்படுகிறார்களோ அந்தக் குணங்களோடு இருப்பவனாகச் சித்திரிக்கப்படுகிறான். இது புரட்டிப் போட்டு அன்னியனைச் சாதாரணனாக ஆக்கும் சிறு அரசியல் நகர்வு. உறுத்தாத நுண்மை இதில் மிளிர்கிறது.
கதைத் துவக்கத்திலிருந்து கதையில் ஒரு நிச்சயமின்மை தொடர்கிறது ஒரு காரணம் அனேகக் கட்டங்களில் கதையை நகர்த்துவது ஒரு சிறுவனின் விவரணை. எது உண்மையாக நடந்தது, யாருக்குத் தெரியும்?
இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் படத்தைப் பார்த்தால் அனுபவத்தின் மூலம் கிட்டும் மகிழ்ச்சி உங்களுக்குக் கிட்டட்டுமே, ஏன் சொல்லிக் கெடுக்க வேண்டும்.
ஒரு விடியோ- படம் எப்படி எடுக்கப்பட்டது என்று விளக்கும் விதமாக:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.