முகப்பு » அறிவியல், கட்டுரை, வானிலை ஆய்வியல், வேளாண்மை

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

இன்றைய தேதியில் உலகின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய சக்தி யார் என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் என்றோ, சீன அதிபர் என்றோ, வால் ஸ்ட்ரீட் வங்கிகள் என்றோ பல விதமான பதில்கள் வரக்கூடும். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் மேலாக, இவ்வருடம் உலகின் தட்பவெப்ப நிலையில் பெரும் மாறுதல்களை உருவாக்கி அதன் மூலம் மழைப்பொழிவையும், வெள்ளத்தையும், வறட்சியையும் தரக்கூடிய சக்தியாக எல்-நீன்யோ இருக்கிறது. இதைப் பற்றிய அறிமுகத்தை நாம் ஏற்கனவே இங்கு பார்த்தோம்.

அதில் கண்டபடி, இவ்வருடம் எல் நீன்யோ நிகழ்வு உருவாகி வலுவடைந்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதே போன்ற அளவில் எல்-நீன்யோ நிகழ்வு இருந்தது 1997-98களில்.  அந்த வருடங்களில் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் கிட்டத்தட்ட 30,000 பேர் உயிரிழக்க நேரிட்டது.  இம்முறை அதைவிட அதிகமான இழப்புகள் இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. கொலராடோவில் உள்ள அமெரிக்க தேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர் கெவின் ட்ரென்பெர்த் உலகின் ஒரு பகுதியில் கடும் வறட்சியையும் இன்னொரு பக்கம் பெரும் வெள்ளங்களையும் எதிர்பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். மேலும் இதற்காக நாம் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளவில்லையென்றால், மோசமான விளைவுகள் ஏற்படும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.

போன வருடமே வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, இவ்வருட முற்பகுதியிலும் பலவீனமான நிலையிலேயே இருந்து பின்   மே மாதத்திலிருந்து வலுவடையத் துவங்கியது. பசிபிக் கடலில் எல் நீன்யோ 3.4 என்று சொல்லப்படுகிற பகுதியில் ஆகஸ்ட் மத்தியிலிருந்து செப்டம்பர் வரையிலான கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தது. இதுதான் எல் நீன்யோ உருவாகி வலுவடைவதற்கான அடையாளம். வெப்பநிலை இரண்டு டிகிரிகள் வரை உயர்ந்ததால்,  இது வானிலையாளர்களால் ‘வலுவான எல்-நீன்யோ’ நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.   இந்த மாற்றம் காற்றின் சுழற்சியையும் வர்த்தகக் காற்றுகள் அடிக்கும் திசையையும் அடியோடு மாற்றிவிட்டது. தவிர உலக அளவில் வெப்பநிலை இவ்வருடம் வழக்கத்தை விட அதிகமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2015 தான் ஆகப்பெரிய வெப்பமான வருடம் என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது

image00
 

மேலே உள்ள படத்தில் சிவப்பு வண்ணம் அதிக வெப்பமடைந்த கடல் பகுதிகளைக் குறிக்கிறது. எல் நீன்யோ தோன்றும் பகுதியான பெருவின் கடற்கரையிலிருந்து மத்திய பசிபிக் வரை அதிக வெப்பத்துடனான கடல் பகுதியை இங்கே காணலாம்.

இவ்வருடத்திய இந்தியப் பருவமழை

மேலே குறிப்பிட்ட கட்டுரையில் பார்த்தது போல், எல்-நீன்யோ இந்த வருடத்திய தென்மேற்குப் பருவமழைப் பொழிவை பெருமளவு பாதித்தது. வழக்கத்தை விட தாமதமாகத் துவங்கிய பருவமழைக்கு, ஜூன் மாதம் மாடன் ஜூலியன் ஆஸிலேஷன் (MJO) என்கிற வெப்ப நீரோட்ட விளைவு கைகொடுத்தது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. ஆனால், ஜூலை மாதம் எல்-நீன்யோ தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டது. இந்தியாவில் பெரும்பாலான பிரதேசங்களுக்கு, குறிப்பாக, கங்கைச் சமவெளிக்கு அதிக மழையைத் தரக்கூடிய ஜூலையில் சராசரியைவிட 17% குறைவாகவே மழை பெய்தது. எப்போதும் குறைவைச் சரிக்கட்டும் ஆகஸ்டிலும் மழை அதிகாகப் பெய்யாததால் (சராசரியை விட 22 % குறைவு),  நாட்டின் ஒட்டுமொத்த மழையளவு சராசரியைவிட 14% குறைவாக இருந்தது. இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது மத்திய மற்றும் தென்மேற்குப் பிரதேசங்கள் தான் (பார்க்க .படம்). இதில் உருப்படியான ஒரே விஷயம் இந்த பாதிப்பை இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே கணித்திருந்ததுதான். மற்றொரு தனியார் வானிலை நிலையம், பருவமழைப்பொழிவு வழக்கமான அளவில்தான் இருக்கும் என்றும், அதற்கு முக்கியக் காரணியான இந்தியப் பெருங்கடல் இருமுனைவுறுப்பு (ஐஓடி) பூஜ்யத்தைவிட அதிகமாக இருக்கப்போவதுதான் என்று கூறியதும் நினைவிருக்கலாம். எல்-நீன்யோவின் பாதிப்புகளை இந்த ஐஓடி சரிசெய்துவிடும் என்ற அதன் நம்பிக்கை பொய்த்துப்போய், ஐஓடி ந்யூட்ரல் என்ற நிலையிலேயே இந்தப் பருவமழைக்காலம் முழுவதும் இருந்தது.

image01
 

இந்தப் பாதிப்பின் விளைவு சிறிது சிறிதாக இப்போது வெளிவரத்துவங்கியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்துபோய் விட்டது. பொருட்களில் விலைகள், குறிப்பாக பருப்பு வகைகளின் விலைகள் உயர ஆரம்பித்துவிட்டன. இனிவரும் நாட்களில் அரசு இந்த விளைவுகளைக் கையாள்வதைப் பொறுத்தே ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரம் எந்த திசையில் செல்லும் என்பது தெரியும். ஆனால் நல்ல வேளையாக வறட்சி என்ற நிலையிலிருந்து இந்த வருடம் இந்தியா தப்பிவிட்டது. இதற்கு இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் சரியான கணிப்பும் அதன்படி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான் காரணம். உதாரணமாக, நீர் நிலைகளிலிருந்து செல்வழிக்கப்படும் தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு விதை விதைக்க சரியான நேரங்களைப் பற்றிய ஆலோசனைகளும், சரியான மாற்றுப் பயிர்களைத் தேர்ந்தெடுக்க அறிவுரைகளும் தரப்பட்டன.

உலகளாவிய பாதிப்புகள்

‘கல்லுளி மங்கன் போன வழி காடு மலையெல்லாம் தவிடுபொடி’  என்ற சொலவாடையைப் போல், இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் எல் நீன்யோ தன் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில், இந்தோனேசியாவில் வழக்கமாக உருவாகும் காட்டுத்தீயினால் உருவாகும் புகைமண்டலத்தின் பாதிப்பு எல்-நீன்யோவினால் பன்மடங்கு அதிகரித்ததுள்ளது. வழக்கமாகப் பெய்யும் மழையளவையும் எல்நீன்யோ குறைத்துவிட்டாதால் புகைமண்டலத்தின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது. இந்தோனேசியாவைத் தவிர அதன் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், வியாட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் காற்று மண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரித்ததோடு காற்றின் தெளிவும் குறைந்துவிட்டது. கடந்த ‘வலுவான எல்-நீன்யோ’ 1997ம் ஆண்டு நிகழ்ந்தபோது இந்தப் பகுதியில் சுமார் 10000 பேர் சுவாச நோய்களால் இறக்க நேரிட்டது. இம்முறையும் அந்த வருடத்திற்குச் சமமான அளவு புகை காற்றில் கலந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வருடம் 14 பில்லியன் டாலர்கள் அளவுக்கு விவசாயம், சுற்றுலா, சுகாதாரம் ஆகிய துறைகளில் இழப்பு இருக்கக்கூடும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சு சுமார் 20 மில்லியன் மக்கள் இவ்வருட புகைமண்டலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. புகையினால் உண்டாகும் பாதிப்பு போதாதென்று, வியட்நாமின் காபி உற்பத்தியிலும் இந்நிகழ்வு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மழையளவு குறைந்ததால், நீர்நிலைகளில் தேக்கப்படும் அளவும் குறைந்துவிட்டது. இந்த வருடத்திற்கான நீர் தான் கைவசம் இருக்கிறது, அடுத்த பயிர் சுழற்சிக்கான நீர்வளம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் அங்குள்ள காபி உற்பத்தியாளர்கள்.

எல் நீன்யோவினால் வழக்கமாக பாதிப்பைச் சந்திக்கும் மற்றொரு நாடு ஆஸ்திரேலியா. எல் நீன்யோ நிகழ்வுகளின் போது அந்நாடு வறட்சியைச் சந்திப்பதற்கான வாய்ப்பு 70% என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்நட்டின் ஒரு புறம் இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டுள்ளதால், இந்தியாவைப் போலவே ‘ஐஓடி’ கைகொடுத்து, எல் நீன்யோவின் விளைவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்த்தனர் ஆஸ்திரேலிய வானிலையாளர்கள். ஆனால், அது நடவாமல், ஐஓடி ந்யூட்ரல் என்ற நிலையிலேயே தொடர்வதால், வறண்ட வானிலையே ஆஸ்திரேலியா முழுவதும் நிலவுகிறது. கோடைக்காலம் தொடங்குவதற்குள்ளாகவே, வெப்ப நிலை அதிகரித்து அங்கு புதர்களில் தோன்றும் தீ பல இடங்களில் பரவத் தொடங்கியுள்ளது. உதாரணமாக, விக்டோரியாவில் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்து கிட்டத்தட்ட 4000 ஹெக்டேர்கள் அளவிற்குப் பரவியது. இத்தகைய தீ விபத்து நிகழும் வாய்ப்பு உள்ள இடங்களுக்கு அருகே வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

ed
அட்லாண்டிக் சூறாவளிகள்

இந்த வருடம் அட்லாண்டிக் பகுதியில் அதிக புயல்கள் தோன்ற வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். உலர்ந்த காற்று மற்றும் காற்றடுக்குகளில் அழுத்தம் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுவதால், உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இந்தப் பருவகாலத்தில், கிட்டத்தட்ட ஏழு புயல்கள் வரை தோன்றலாம் என்றும் அதில் ஒன்று பெரும் சூறாவளியாக உருவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வருடம் அதிக பாதிப்புகள் இருக்காது என்று அர்த்தமில்லை. ஒரு கடுமையான சூறாவளி, பெரும் சேதத்தை விளைவிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

இதற்கு நேர்மாறாக, பசிபிக் பகுதியில் புயல்கள் அதிக அளவில் இவ்வருடம் தோன்றக்கூடும். இந்தப் பருவகாலத்தில், கிழக்குப் பசிபிக் பகுதியில் மிக வலுவான எட்டு புயல்கள் தோன்றியுள்ளன. இதுதான் பதிவு செய்யப்பட்டதிலேயே ஆகப்பெரிய எண்ணிக்கை (ஒரு பருவகாலத்தில்). அண்மையில் தோன்றிய பாட்ரீஷியா சூறாவளி பல ‘சாதனைகளை’ நிகழ்த்தியுள்ளது. இதுவரை தோன்றியதிலேயே மிக வலுவான புயல் (மணிக்கு 200 மைல்கள் வேகக் காற்று), கரையைக் கடக்கும் நேரத்தில் மிக அதிக வேகம் (மணிக்கு 165 மைல்கள்), குறைந்த அளவு நேரத்தில் வலுவான புயல் என்ற நிலையை அடைந்தது என்பது அவற்றில் சில.  மெக்ஸிகோ அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகளினாலும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு சரியான நேரத்தில் வெளியேற்றியதனாலும் பெரும் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டன.  மத்திய பசிஃபிக் பகுதியிலும் 14 புயல்கள் இதுவரை தோன்றியுள்ளன. நல்லவேளையாக பெரும்பாலான புயல்கள் நிலத்தைச் சந்திக்கவில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, இதுவரை எல் நீன்யோவின் தாக்கம் அதிகமாக இல்லை. இனிவரும் மாதங்களின் அதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, கலிபோர்னியா போன்ற இடங்கள் அதிக மழைப்பொழிவையும் பனிப்பொழிவையும் சந்திக்கக்கூடும். அங்கெல்லாம் ஜனவரியிலிருந்து மழையளவு அதிகரிக்கும்.  கடந்த சில வருடங்களாக கடும் வறட்சியைச் சந்தித்துவரும் கலிபோர்னியாவாசிகளுக்கு எல் நீன்யோ இப்படி ஒரு நன்மையைச் செய்கிறது.  எல் நீன்யோ வருடங்களில் கலிபோர்னியா வெள்ளத்தை சந்திப்பதும் வாடிக்கையாகையால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வதும் அவசியம். அதேபோலவே நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் நல்ல மழைப்பொழிவோ பனிப்பொழிவோ இருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட பசிபிக் தென்மேற்குப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாகலாம். எல் நீன்யோ இப்பகுதிகளில்  மழையளவைக் குறைத்து வறண்ட வானிலையை ஏற்படுத்துவதே இதற்கான காரணம்.

இந்தியாவின் வடகிழக்குப் பருவமழை

இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு அதிகப்படியான மழைப்பொழிவைத் தருவது வடகிழக்குப் பருவ மழை. தென்மேற்குப் பருவ மழைக்காலத்திற்குப் பிறகு, அக்டோபர் முதல் டிசம்பர் வரை வீசும் இப்பருவக்காற்றால் தான் தமிழகம் ஆண்டின் 50 % மேற்பட்ட மழையைப் பெறுகிறது. பெரும்பாலும் கீழைக்காற்றுகளாலும், வங்கக்கடலில் தோன்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களாலும் மழைப்பொழிவு ஏற்படும் இப்பருவகாலத்தில்,  கடந்த மூன்று வருடங்களாக போதுமான மழையளவு இல்லாததால் தமிழகத்தின் நீர்நிலைகளில் இருப்பு பெருமளவு குறைந்துவிட்டது. எனவே இந்த வருடம் எல் நீன்யோவால் எந்த அளவு மழையளவு மாறுபடும் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றார்போல் வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் இரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் தோன்றியிருக்கின்றன. பருவமழை தாமதமாகத் தொடங்கியதற்கு முக்கியக் காரணம், ஃபிலிப்பைன்ஸ் அருகே தோன்றிய கொப்பு என்ற புயல்தான். காற்றின் திசையை தென் மேற்காக இது மாற்றிவிட்டதால், கீழைக்காற்றுகள் தாமதமாயின. இருந்தாலும், இது மொத்த மழையளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், நவம்பரில் வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போடும் என்றும் முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. ஒரிரு புயல்கள் கூட வங்கக்கடலில் தோன்றக்கூடும். எனவே, நீர்நிலைகளைத் தூர்வாருதல், கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சுத்தம் செய்தல், மழை நீரை சேமிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு செய்வது அவசியம்.

நீடிக்கும் எல் நீன்யோ

வழக்கமாக ஒவ்வொரு முறையும் தோன்றிய பிறகு சுமார் இரண்டு வருடங்கள் இந்த எல் நீன்யோ நிகழ்வு நீடிக்கும். தற்போதைய கணிப்புகளின் படி, கடந்த வருடம் தோன்றிய இந்த நிகழ்வு, இவ்வருட குளிர்காலத்தையும் தாண்டி, 2016ன் வஸந்த காலம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் உச்சக்கட்ட பாதிப்பு இவ்வருட குளிர்காலத்தில் இருக்கலாம். கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பைப் பொறுத்தவரை, பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் முதல் மூன்று எல் நீன்யோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று மதிப்பிட்டப்பட்டுள்ளது.  அதிகரித்து வருகின்ற வெப்பநிலையைப் பார்க்கும்போது, இந்த நிகழ்வு அடுத்த வருடம் நிறைவடையும்போது முதலிடத்தைக்கூட பிடிக்கக்கூடும்.  எல் நீன்யோ அடுத்த வருடத்தின் முற்பகுதி வரை நீடித்தாலும், வரும் வருடத்தின் தென்மேற்குப் பருவமழையில் பாதிப்பு இருக்காது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இதன் பாதிப்பு நீடிக்கவே செய்யும்.

கடந்த வருடங்களைப் போல் இல்லாமால், இந்த முறை எல் நீன்யோவைச் சந்திக்க உலகில் பல நாடுகள் ஓரளவு ஆயத்தமாக இருந்தன என்றே சொல்லவேண்டும். அதன்மூலம் பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்க முடிந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் இது போன்ற இயற்கை நிகழ்வுகள் தன்னுள்ளே ஒரு ஆச்சரியத்தை, மாறுபாட்டை  கொண்டிருப்பதும் கண்கூடு.  அதனால் வரும் வருடங்களில் இதை விட அதிக ஆயத்தத்தோடு அதை எதிர்நோக்கவேண்டியிருக்கும்.

3 Comments »

 • கணபதி said:

  இந்தோனேசிய காட்டு தீ தானாக உருவானது அல்ல நுகர்வு அசுரனால் உருவாக்கப்பட்டது .
  மலைகாடுகளை பாம் ஆயில் பொருளாதாரம் அழித்து வருவது கிழக்காசியாவின் பல்லுயிர் பொருக்கத்தில் வலுவான தாக்கத்தை எதிர்காலத்மில் உருவாக்கப்போகிறது

  # 7 November 2015 at 10:45 am
 • Padmanabhapuram Aravindhan said:

  Good Article… Interesting… Thanks a lot Mr. Krishnan Subramaniyan…

  Aravindhan.K.V.

  # 18 November 2015 at 2:36 pm
 • நாவண் said:

  முற்றும் தீர்கமான விடையங்கள்.. முன்னேற்பாடகயிருந்திருந்தால் சென்னை
  இன்றைய சூழ்நிலை தவிர்த்திருந்திருக்களாம் தான்.

  சூரிய சந்திர இயக்கங்களை கொண்டு காலங்களை
  கணித்து பருவங்களை வகுத்து இயற்கை முறையாக
  முயன்றளவு பயணபடுத்திக்கொண்டிருந்த முன்னோர்களிடம்யிருந்து
  நாம் கற்கவேண்டியது இன்னும் ஏறாளம்

  # 4 December 2015 at 3:32 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.