விளக்கு விருது – 2014

தமிழில் கவனிக்கப்படும் விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான சி.மோகன், கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் ஊக்கத்துடன் செயல்படுகிறவர். படைப்பு மையப் பார்வையையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தும் இவருடைய செயல்பாடு, சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் தீவிர வாசிப்பு கொண்டவர். எழுத்து தவிர ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய கலைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
இந்த ஆண்டுக்கான விளக்கு விருது விமர்சகர் சி.மோகனுக்கு வழங்கப்படுகிறது. சொல்வனம் சார்பில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Vilakku_Award_Winners_Tamil_Literature_Faces_Names_People_Writers_Authors_Solvanam_C_Mohan_Thamil

அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பாகிய ‘விளக்கு‘ புதுமைப்பித்தன் நினைவு இலக்கியப் பரிசொன்றை நிறுவி தமிழ்ப் படைப்பிலக்கிலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்துவரும் படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கிக் கெளரவித்து வருகிறது.
1995ல் தொடங்கி இதுவரை

 1. சி.சு.செல்லப்பா,
 2. பிரமிள்,
 3. கோவை ஞானி,
 4. நகுலன்,
 5. ஹெப்சிபா ஜேசுதாசன்,
 6. பூமணி,
 7. சி.மணி,
 8. பேராசிரியர் ராமானுஜம்,
 9. ஞானக்கூத்தன்,
 10. அம்பை,
 11. தேவதேவன்,
 12. வைதீஸ்வரன்,
 13. விக்ரமாதித்யன்,
 14. திலீப்குமார்,
 15. தேவதச்சன்,
 16. நுஹ்மான்,
 17. பெருமாள் முருகன்,
 18. கோணங்கி

ஆகிய படைப்பாளிகள் விளக்கு அமைப்பால் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
2014ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்கு சி.மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எழுத்தாளர்கள், வைதீஸ்வரன்,வெளி ரங்கராஜன், அம்ஷன்குமார் ஆகியோர்  நடுவராக இருந்து விளக்கு விருதுக்கான இத்தேர்வை செய்துள்ளனர்.
எழுத்தாளர் சி.மோகன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர். பதிப்பாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், புனைவு எழுத்தாளராகவும்,மொழிபெயர்ப்பாளராகவும், நுண்கலை விமர்சகராகவும் தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள் செய்துவருபவர். அவருடைய அண்மைக்கால நாவல்களான `விந்தை ஓவியனின் உருவச் சித்திரம்` மற்றும் `ஓநாய் குலச்சின்னம்(மொழிபெயர்ப்பு) ஆகிய படைப்புகள் தமிழ்ச்சூழலில் வரவேற்பையும், கவனத்தையும் பெற்றவை.
ரூ.75000/- க்கான காசோலையும்,பாராட்டுப் பத்திரமும் அடங்கிய இவ்விருது இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் விழாவொன்றில் எழுத்தாளர் சி.மோகனுக்கு வழங்கப்படும்.

பொன். வாசுதேவன்
ஒருங்கிணைப்பாளர்
விளக்கு அமைப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.