வாசிப்பதற்கான அவகாசம்

books

ஆறு மாதங்களுக்கு முன் நான் தகவல் சமுத்திரத்தில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இணையமும் அதிலுள்ள அத்தனை அற்புதங்களும் ஒற்றைத் தொடுகையில் அளிக்கக்கூடிய வாசிப்பு இன்பங்களுக்கு அளவேயில்லை என்றிருந்தேன்- விக்கிப்பீடியா, டிவிட்டர், பாட்காஸ்டுகள், நியூ யார்க்கர், மின்அஞ்சல், டெட் உரைகள், பேஸ்புக், யூட்யூப், அவ்வப்போது பார்க்கக்கூடிய பஸ்ஃபீட், ஏன், ஹார்வர்ட் பிசினெஸ் ரிவ்யூவும்கூட. சொல்லிக்கொண்டே போகலாம்.
இணையத்தின் ஆனந்தங்களுக்கு அளவில்லை, இப்போதும் தொடர்கின்றன. ஆனால் இது எப்போதும் நமக்கு ஆனந்த அனுபவத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இதில் சில கஷ்டங்களும் இருக்கின்றன. வேலைநேரத்தில் கவனமின்மை, வீட்டில் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இருக்கும்போது கவனமின்மை. டிஜிடல் தகவல்களுக்கான தேவை ஒரு அரிப்பு போல் தொடர்ந்து இருந்து கொண்டிருந்ததால், நான் எப்போதும் மனஅழுத்தம் நிறைந்த ஒரு சூழலில் கரையேற முடியாமல் தவித்துக் கொண்டே இருந்தேன். என் மனஅழுத்தத்துக்கு ஒரு எலெக்ட்ரானிக் தன்மை இருந்தது, என் கண் முன்னிருந்த மின்திரையின் பிட்டுகளும் பைட்டுக்களுமாய் கவிந்த மனஅழுத்தம் என்று சொல்லலாம். தாள முடியாத அழுத்தம், தளர்ந்து போனேன்.
சென்ற ஆண்டு முழுவதற்கும் சேர்ந்து நான்கே நான்கு புத்தகங்கள்தான் வாசித்திருக்கிறேன் என்பதை ஒரு நாள் உணர்ந்தபோதுதான் இது அத்தனையும் கூர்மையாய் என் கவனத்தைத் தாக்கிற்று- திடுக்கிடும் விஷயம்தான், ஆனால் ஆச்சரியமான ஒன்றாக இருக்கவில்லை. இது மூன்று மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கணக்கு வருகிறது, ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தின் நான்கில் ஒரு பங்கு வாசித்திருக்கிறேன்.
நான் புத்தக வாசிப்பை நேசிப்பவன். புத்தகங்களே என் பெருவலி, புத்தகங்களே என் பிழைப்பு. நான் புத்தகப் பதிப்புத்துறையில் வேலை செய்பவன். இலவச ஆடியோ புத்தகங்களுக்கான உலகின் மிகப்பெரிய நூலகம், லைப்ரிவோக்ஸ் நிறுவனத்தைத் துவக்கியவன் நான். ஆன்லைன் புத்தக வடிவமைப்புக்கான மென்பொருள் அளிக்கும் ப்ரெஸ்புக்ஸ் என்ற நிறுவனத்தை நிர்வகிப்பதில் என் நேரத்தின் கணிசமான பொழுதைச் செலவிடுகிறேன். இதுவரை பதிப்பிக்கப்படாத நாவல் ஒன்றை என் மேஜை டிராயரில் எங்கேயோ வைத்து மறந்திருக்கிறேன்.
நான் புத்தகங்களை நேசிக்கிறேன், ஆனால் வாசிப்பதில்லை. உண்மையைச் சொன்னால், என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை. முயற்சி செய்தேன், ஆனால் ஒவ்வொரு முறையும், மூன்றாம் வாக்கியம் அல்லது நான்காம் வாக்கியத்துக்கு வரும்போது எனக்கு மின்மடல் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன், அல்லது தூங்கிப் போயிருந்தேன்.
டிஜிடல் தகவல்கள் என் வாழ்வின் பிற கூறுகளின் மீது செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்க புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது உதவுமா என்று அப்போதுதான் நான் யோசித்துப் பார்த்தேன். தகவல்கள் மிதமிஞ்சிய எண்ணிக்கையில் அலையலையாய் நம்மை மூழ்கச் செய்வதிலிருந்து தப்பிக்க நாம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வேகத்தைத் தணிப்பது உதவும் வழியாகுமா? அதாவது, அடுத்தடுத்து தொடர்ந்து வரும் புதுத் தகவல்கள் டிஜிடல் ஓடையில் நம்மை இழுத்துச் செல்வதால் ஏற்படும் மனச்சுமைக்கு முறிமருந்தாய், நிதானமாய் தகவல்களைப் பெற்றுத் தரும் தகவமைப்பு- புத்தகங்கள்-, பழைய காலத்துக்குரிய புத்தகங்கள், பாம்பின் விஷமே முறிமருந்து ஆவதுபோல் செயல்படுமா? பணியிடத்தில், வீட்டில், புத்தகம் வாசிப்பதில் என்று எந்த விஷயத்திலும் என்னால் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை- கவனம் குவிப்பதற்கான வழிகளைக் கண்டறிவதால் என் கவனக்குலைவு நிலை குணமாகுமா, அதற்கு புத்தகங்கள் தகுந்த சாதனங்களா?
நவீன தகவல் அமைப்புகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூரோசயன்ஸ் துறையின் ஆய்வுகள் உதவுகின்றன. பிற அனைத்தையும்விட புதிய தகவல்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மனித மூளைகள் உருவாகியிருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது- சில ஆய்வுகள், சோற்றுக்கும் சம்போகத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்துவத்தை மூளை புதிய தகவல்களுக்கு அளிப்பதாகச் சொல்கின்றன. நீங்கள் உங்கள் இமெயில் அக்கவுண்டின் ரிப்ரஷ் பட்டனைத் தட்டுவதும், டிவிட்டர் டிஎம் வரும்போது உங்கள் கைபேசியில் ஒலிக்கும் மெஸ்சேஜ் அலர்ட்டும் புதிய தகவல்கள் கிடைக்கப் போவதற்கான கட்டியங்கள். உடனே உங்கள் மூளையில் டோபமைன் என்ற நியூரோடிரான்ஸ்மிட்டர் சுரக்கிறது. வரப்போகும் இன்பங்களை வரவேற்கத் தயாராய் நம்மை விழிப்பு நிலைக்கு இட்டுச் செல்லும் தன்மை டோபமைனுக்கு உண்டு. இயற்கை அமைப்பில் நம் மூளையின் பின்னல்கள் எதுவெல்லாம் டோபமைன் சுரக்க உதவுமோ அவற்றை நோக்கிச் செல்லும் வகையில் உருவாகியிருக்கின்றன.
இதில் சுழற்சி முறை கற்பித்தல் உத்தி ஒன்று இருக்கிறது – புதுத்தகவல்கள்- டோபமைன்- இன்பம். இந்தச் சுழல் வட்டத்தின் காரணமாகவே மின்அஞ்சல் ரிப்ரெஷ் பட்டனைத் தட்டி இன்பம் தேடும் வகையில் உங்கள் மூளையின் நியூரல் வழித்தடங்கள் அமைந்திருக்கின்றன. உங்கள் மூளைக்குத் தீனி போட மின்அஞ்சல் பெட்டியில் காத்திருப்பது என்னவோ அக்கவுண்டிங் பிரிவைச் சேர்ந்த டேவ் அனுப்பிய மற்றுமொரு மின்மடல்தான் என்றாலும் புத்தம்புதுத் தகவல்களின் வசீகரம் இப்படி இருக்கிறது.
பேஸ்புக்கில் நீங்கள் காணொளியில் பூனைகளைப் பார்க்கும் ஒவ்வொரு இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் முறையும் இந்த வளையம் மேலும் வலுவாகிறது. அதிலும் இது உடைக்கக் கடினமான வளையம். நம்மை எப்போதும் கவனக்குலைவு நிலையில் வைத்திருப்பதற்கான கச்சித இயந்திரத்தை உருவாக்கத் தேவைப்படும் பொறியியலுக்கும் பொருள் வடிவமைப்புக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் செலவு செய்வதைப் போன்றது இது. இந்தத் தகவமைப்பு நம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தத்தக்க வகையில் கச்சிதமாகக் அமைக்கப்பட்டிருக்கிறது.
புதிய தகவல்களைப் பெறுவதில் மூளைக்குள்ள போதைப் பழக்கம் பிரச்சினையின் ஒரு பக்கம்தான். இதன் மறுபக்கம், ஒன்று மாற்றி இன்னொன்று என்று தாவித் திரும்பி வருவதில் நமக்கு ஏற்படும் செலவினம்.
பொதுவாக, மனித மூளை என்பது உடல் எடையில் இரண்டு சதவிகிதம் இருக்கும். ஆனால் அது உடலின் ஆற்றலில் இருபது சதவிகிதத்தைச் செலவிடுகிறது என்று சொல்கிறார் டேனியல் லெவிடின் என்ற நரம்பியல் விஞ்ஞானி. மூளை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் அது எத்தனை சக்தி எடுத்துக் கொள்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் ஓய்வெடுக்கும்போது அல்லது ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும்போது உங்கள் மூளையும் ஓய்வு நிலையில் இருக்கிறது. அப்போது அதற்கு மணிக்கு பதினொரு கலோரிகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு மணி நேரம் முழு கவனத்துடன் படிப்பதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு கலோரிகள். ஆனால் புதுப்புது தகவல்களைச் சேகரித்து உள்வாங்கிக் கொள்ளும் மூளைக்கு ஒரு மணி நேரத்தில் அறுபத்து ஐந்து கலோரிகள் தேவைப்படுகின்றன. அதுவே வெவ்வேறு விஷயங்களை மாற்றி மாற்றி படிப்பதானால் நிலை இன்னும் மோசம்.
எனவே ஒவ்வொரு முறை உங்கள் வேலையை நிறுத்தி வைத்து நீங்கள் இமெயில் அக்கவுண்ட்டைச் செக் பண்ணும்போதும் உங்களுக்கு நேரம் மட்டும் விரயமாவதில்லை, உங்கள் சக்தியும் விரயமாகிறது. “ஒரே விஷயத்தில் கவனம் இருக்கும் வகையில் தங்கள் காலத்தைத் தகவமைத்துக் கொள்கிறவர்கள் நிறைய சாதிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஏற்படும் களைப்பு குறைவாக இருக்கிறது, அந்த வேலையைச செய்து முடிக்கும்போது குறைவான எண்ணிக்கையில்தான் நியூரோகெமிக்கல்கள் செலவாகியும் இருக்கின்றன”, என்கிறார் லெவிடின்.
அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?
என் பணிநாள் என்று பார்த்தால் அது வேகமாக விரையும் டிஜிட்டல் தகவல்களை மையப்படுத்தியதாக இருக்கிறது- விசைப்பலகை, பளிச்சிடும் பெரிய ஒரு திரை, இணையத் தொடர்பு, உள்ளே வரும் தகவல்கள், வெளியே செல்லும் தகவல்கள், உடனே எதிர்கொள்ளப்பட வேண்டிய அவசரச் சிக்கல்கள், அவசரமாய் அணைக்கப்பட வேண்டிய நெருப்பாய்ப் பற்றி எரியும் பிரச்சினைகள். நான் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதில் வேண்டுமானால் சிறிது மாற்றம் செய்து கொள்ளலாம். ஆனால் எனக்கும் சரி, நம்மைப் போன்ற பலருக்கும் சரி, வேலை நேரத்தில் பெருக்கெடுத்தோடும் டிஜிடல் தகவலோடையைத் தப்ப வழியில்லை. வேலை நேரத்துக்கு வெளியே டிஜிட்டல் தகவல்கள் என்னை நெருங்காமல் பார்த்துக் கொள்வது மட்டுமே என் விஷயத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் என் ஆற்றல்களைக் குவிக்க புத்தக வாசிப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். டிஜிடல் தகவல்களிடமிருந்து என்னைத் துண்டித்துக் கொள்ளவும், நிதானமாய்ச் செல்லும் தகவல்களுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும் அத்தனை காலம் எனக்கு இன்பம் அளித்த புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
என் நோக்கங்கள் இரண்டு- புத்தகங்கள் வாசிக்க வேண்டும், டிஜிடல் மிகைச்சுமையிலிருந்து என் மூளையை மீட்க வேண்டும். அதற்காக மூன்று விதிகளை வகுத்துக் கொண்டிருக்கிறேன்-
1. வீடு திரும்பியதும் என் லாப்டாப், ஐபோன் இரண்டையும் கைக்கு எட்டாத தொலைவில் தள்ளி வைக்கிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்குத்தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. நாம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு நம் பணிச்சூழலில் இருக்கிறது. ஆனால் இரவு எட்டேகால் அல்லது பத்தேகால் தாண்டி அலுவல் தொடர்பாக, உடனே பதில் எழுதியாக வேண்டிய மின்அஞ்சல்கள் வருவது மிகக் குறைவு. மாலை வேளைகளில் நான் வேலை செய்தாக வேண்டிய சிக்கலான சந்தர்ப்பங்கள் அமைவதுண்டு. ஆனால் பொதுவாக, முந்தைய நாள் எக்கச்சக்கமான மின்அஞ்சல்களைக் கையாண்டு களைத்திருப்பதைவிட, நன்றாக ஓய்வெடுத்து, அடுத்த நாள் காலை தெளிவான மனநிலையில் நான் வேலைக்குச் செல்வது எனக்கு முக்கியமாக இருக்கிறது.
2. வாரநாட்களில் நான் இரவு சாப்பிட்டபின் நெட்பிளிக்ஸ் பார்ப்பதில்லை. தொலைக்காட்சி பக்கமே போவதில்லை. இணையத்தைத் தொடுவதில்லை. இதுதான் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இரவு சாப்பிட்டபின் சும்மா இருக்கும் அந்த ஓரிரு மணி நேரம்தான் எந்த வேலையும் இல்லாத சுதந்திர காலம். எனவே குழந்தைகள் தூங்கப் போனதும் பாத்திரங்களைக் கழுவி முடித்ததும் என்ன செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை- புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். பெரும்பாலும் படுக்கையில் படுத்துக் கொண்டு. சில சமயம் வெளியே சொன்னால் நம்ப மாட்டாத அதிகாலைப் பொழுதில். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் இதுதான் சுலபமாகக் கைகூடியிருக்கிறது. மீண்டும் வாசிக்க நேரம் ஏற்படுத்திக் கொள்வது என்பது உண்மையான சந்தோஷமாகக் கிடைத்திருக்கிறது. இது தவிர, நான் தொலைகாட்சி பார்க்கும் நேரம் இப்போதெல்லாம் இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது.
3. மின்னும் திரைகள் எதற்கும் படுக்கையறையில் இடமில்லை, கிண்டில் மாத்திரம் விதிவிலக்கு. டிஜிடல் மிகுச்சுமையை விட்டு விலக நான் எடுத்த முதல் முடிவு இது. வேறு விதிகளை அவ்வப்போது மீறினாலும், இந்த விதியை உறுதியாகக் கடைபிடிக்கிறேன். படுக்கைக்கு பக்கத்தில் ஐபோன் ஐபேட் என்று எதுவும் இல்லாத காரணத்தால் விடியற்காலை மூன்றரை மணிக்கு மின்அஞ்சல் பார்க்கும் தூண்டுதல் எனக்கு இருப்பதில்லை, விடிந்ததும் காலை ஐந்து மணிக்கே டிவிட்டருக்குப் போய் என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்பதில்லை. மாறாக, தூக்கமற்ற, உறக்கம் கலைந்த கணங்களில் நான் என் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஏறத்தாழ உடனடியாகத் தூங்கிப் போகிறேன்.
இந்த மூன்று விதிகளும் என் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இப்போதெல்லாம் எனக்கு இன்னும் அதிக நேரமிருக்கிறது- அடுத்த தகவல் பைட்டைத் துரத்திச் செல்லும் தொடர் கட்டாயத்திலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன். மீண்டும் புத்தகம் வாசிப்பதால் யோசிப்பதற்கும் நினைவுகளில் ஆழ்வதற்கும் நேரம் கிடைத்திருக்கிறது. இதனால் நான் என் வேலையில்கூட இன்னும் கவனமாக இருக்கிறேன், எந்த நெருக்கடியும் இல்லாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மனவெளியும் கிடைத்திருக்கிறது. முன்னைவிட மன அழுத்தம் குறைந்திருக்கிறது, சக்தி கூடியிருக்கிறது.
பணியிடத்திலும் நமக்கு மட்டுமேயுரிய தனியிடத்திலும் டிஜிடல் தகவலோடையை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம் என்பது நம் அனைவருக்கும் இன்னும் பல பத்தாண்டுகள் பெரும் சவாலாய் இருக்கப் போகிறது. தகவல்கள் இன்னும் துரிதமாக வரப் போகின்றன, இன்னும் பெரிய அளவில் வரப் போகின்றன. இணையத்துக்கு இருபது வயதுதான் ஆகிறது, ஸ்மார்ட்போன்கள் வந்து பத்து வருஷம்கூட ஆக்வில்லை.
தகவல்களின் சூழமைவில் எப்படி வாழ்க்கை நடத்துவது என்பதை நாம் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். தகவல்களுக்கு ஏற்றச் சூழமைவை எப்படி மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றியமைப்பது என்பதற்கான் விடை தேடும் நிலையில் இருக்கிறோம். இதில் நாம் வெற்றி காண்போம்- மனிதர்களாகவும் தொழில்நுட்பத்தைக் கட்டமைப்பவர்களாகவும் இதில் நாம் தேர்ச்சி பெறுவோம். இடைப்பட்ட காலத்தில் புத்தக வாசிப்பு உதவியாக இருக்கும்.

மூலம்Harvard Business Review: How Making Time for Books Made Me Feel Less Busy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.