வடிவழகு- மதுராதிபதேர் அகிலம் மதுரம்!

raasa-leela
கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அனைத்துமே இனிமை நிரம்பியது. இந்த இனிமையை ஆழ்ந்து, அனுபவித்து, உணர்ந்தும், ரசித்தும் பாடல்களில் அவற்றை வெளிப்படுத்தியும் உள்ளனர் அடியார்கள். அவனைக் காண்பதே ஒரு சுகானுபவம். அவனது மோஹன வடிவத்தினை அணு அணுவாக ரசிப்பதா? அல்லது மோஹன் எனத் தன் மயக்கும் வடிவ அழகினாலேயே ஒரு பெயர் பெற்ற அவனுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களைக் கண்டு வியந்து அவை எவ்வாறு அவனுடைய திருவுருவுக்குப் பொருந்துகின்றன என வர்ணிப்பதை ரசிப்பதா?
ஒரு குழந்தையைப் பார்க்கும் போது ‘இவனுடைய கண் இவன் தந்தையுடையதைப் போலுள்ளது,’ எனவோ, ‘இவனுடைய சுருட்டைத் தலைமயிர் தாயினுடையதைப் போலுள்ளதே,’ என்றோ வியந்து மகிழ்கின்றோம். அது போன்றே, சிறு மகவிற்கு, அது ஆணோ பெண்ணோ, விதம்விதமாக ஆடை அணிமணிகள் புனைவித்து, அலங்காரம் செய்து அழகு படுத்திக் கண்டு களி கொள்கிறோம். அப்படிப்பட்ட குழந்தை, ஆண்டவனாகவே, ஸ்ரீ கிருஷ்ணனாகவே இருந்து விட்டால் என்ன செய்வோம்? அவனுக்கென்று சில அடையாளங்கள்- நாமாகக் கற்பித்துக் கொண்டது: மஞ்சள் பட்டுப் பீதாம்பரம், புல்லாங்குழல், கொண்டையில் மயில்பீலி, காதில் மகர குண்டலம் என நாமாகவே வரையறுத்துக் கொண்டு அவ்வண்ணமே மனக்கண்ணில் அவனைக் கண்டு களிக்கிறோம். நம் வீட்டு ஆண் குழந்தைகளைக் கிருஷ்ணனாகவே கொண்டாடுகிறோம்.
இதற்கே நாம் இவ்வளவு ஆனந்தம் அடைந்தால், உண்மையாகவே கிருஷ்ணன் குழந்தையாக அவதரித்தபோது எப்படி இருந்திருக்கும்?
கோகுலத்தில் ஒருவருக்கும் தலைகால் புரியவில்லை! உன்மத்தம் கொண்டு, ஆனந்தத்தின் எல்லையில் நின்று களிக்கின்றனர். அவன் வடிவழகைக் காண்பதா? யசோதை அவனுக்குச் செய்த அலங்காரங்களைக் கண்டு ரசிப்பதா? அவன் செய்யும் குறும்புகளைக் கண்டு பொய்க்கோபம் கொள்வதா? தங்கள் காரியங்கள் அனைவருக்கும் மறந்து விட்டன. எப்போதும் கிருஷ்ணனின் நினைவாகவே, அவனைக் கண்டு களிப்பதிலேயே ஆழ்ந்து விடுகிறார்கள்.
கோகுலத்தில் ஒருபெண் மற்றவர்களைக் கூவி அழைக்கிறாள்: “அடி பெண்களே! விரைந்து வாருங்கள். வந்து, திருமகள் போன்ற தேவகி பெற்று கருங்குழல் கொண்ட யசோதைக்குக் கொடுத்த அந்தக் குட்டிக் கண்ணன் தன் தாமரை போன்ற பாதங்களை வாயிலிட்டுச் சுவைக்கும் அழகினை வந்து காணுங்களடி,” என்பாள்.
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே!
பவள வாயீர்! வந்து காணீரே! (பெரியாழ்வார் திருமொழி- 3)
இன்னொருத்தி, ‘நவரத்தினங்கள் மாறி மாறிச் சேர்ந்திருப்பது போன்ற பத்து கால் விரல்களைப் பாருங்கள்,’ என்பாள்; வேறொருத்தி, ‘வெள்ளித் தண்டைகள் அணிவிக்கப்பட்ட கணைக் கால்களைப் பாருங்கள்,’ என்பாள். இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் அவனது ஒவ்வொரு அழகையும் பேசிப் பேசி மகிழ்கின்றாள். வெண்ணெய் திருடி உண்டவனை மத்தால் அடிக்க வரும் அன்னைக்குப் பயந்து தவழ்ந்தோடும் அவனது முழங்காலின் அழகு, தூங்கும் அவனது திருத்தொடைகளின் அழகு, யசோதை கயிற்றினால் கட்டி வைத்த தழும்புடன் கூடிய வயிற்றின் அழகு, திருமார்பில் அசையும் கௌத்துபம், தோள்கள், சங்க சக்கரம் ஏந்திய திருக்கைகள் என ஒவ்வொரு அங்கமாகக் கண்டு களிக்கின்றனர்.
குட்டிக் கிருஷ்ணனை அன்னை நீராட்டுகின்றாள். அப்போது அங்கு அவனைக் காண வந்த ஒரு பெண் அன்பும் ஆவலும் மீதூர ஒடோடிச் சென்று அவன் நீராடும் அழகைக் காண மற்ற பெண்களை அழைக்கின்றாள்: “வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய பெண்களே! யசோதைப் பிராட்டி மென்மையாக அரைத்த மஞ்சளைக் கொண்டு கண்ணனை நீராட்டி, அவனது நாக்கை வழிப்பதை வந்து காணுங்கள். அவனுடைய மழலைப் பேச்சழகையும், கண்ணழகையும், வாயின் அழகையும் அந்த வாயில் தவழும் புன்சிரிப்பின் அழகினையும், மூக்கின் அழகினையும் வந்து பாருங்களேன்!” என நெகிழ்ந்து தாயன்பில் உருகுகின்றாள் அவள்.
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே,
மொய்குழலீர்! வந்து காணீரே! (பெரியாழ்வார் திருமொழி- 3)
குழந்தைகளைக் கொஞ்சும்போது, அந்தக் கடவுளே குழந்தையாய் நம்மை உய்விக்க வந்திருக்கிறான் என்று கூறிக் கொஞ்சுவது தாய்மார்களின் இயல்பு. இங்கும் அவ்வாறே பகவானே வந்து குழந்தையாக அவதரித்துள்ளான் எனக் கூறி மகிழ்கின்றனர் பெண்டிர். ஆனால் உண்மையாகவே அந்தத் திருமாலே குழந்தையாக வந்துதித்திருப்பதை அவர்கள் உணர்ந்திலர். ஆயினும் இந்த ‘அறிந்தும் அறியாத’ அறியாமையில் அவர்கள் அடையும் ஆனந்தம் தான் என்னே! அனைத்துமே அந்த மாயக் கண்ணனின் செயலல்லவா?
“வாங்களடி பெண்களே! இந்த பூமி, மலைகள், கடல், ஏழு உலகங்கள் அனைத்தையும் தனது வயிற்றில் வைத்துக் காக்கும் பகவானே இங்கு இந்தப் பிள்ளையாய் அவதரித்துள்ளான். இவனுக்கு, இந்தக் குழந்தைக்கு அழகு செய்கின்ற மகரக் குண்டலங்களைப் பாருங்கள்! ” என ஆனந்திக்கிறாள் இன்னொரு மாது.
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக் குழைஇவை
திண்ணம் இருந்தவா காணீரே,
சேயிழையீர்! வந்து காணீரே! (பெரியாழ்வார் திருமொழி- 3)
கிருஷ்ணனை இவ்வாறு ஆழ்ந்து அனுபவித்த பெரியாரான பெரியாழ்வார் இவ்வாறு ஆயர்குலப் பெண்களின் நிலையில் தன்னை இருத்திக் கொண்டு கிருஷ்ணனைக் கண்டு களித்து மகிழ்கிறார்.
லீலாசுகர் என அறியப்பட்ட பில்வமங்களர் எனும் மகான் சிறு குழந்தையாகிய கிருஷ்ணனின் திருமேனியழகை வெகு நுணுக்கமாகக் கண்டு ரசிக்கிறார்.
‘ஆயர்பாடிக் குழந்தையின் வடிவு உலகை மயக்கும் வடிவு- ஜகன்மோஹனீம் மூர்த்திம்; அவனுடைய கறுத்த புருவங்கள் அழகுற வளைந்து அமைந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன; அடர்த்தியான புருவ மயிர்கள் கருணை வெள்ளம் பொழியும் கண்களின் சலனத்தினால் அசைகின்றன; மென்மையான அமுதம் பொழியும் மொழியினைப் பேசும் உதடுகள் சிவந்துள்ளன; இனிய குழலோசையை அவை எழுப்புகின்றன; இந்த உனது இனிய குழந்தைத் திருவடிவை நான் காண ஆசைப்படுகிறேன் கிருஷ்ணா…….’
ஆநம்ரா-மஸித ப்ருவோருபசிதா-மக்ஷீண-பக்ஷ்மாங்குரேஷ்
வாலோலா-மனுராகிணோர்-நயனயோரார்த்ராம் ம்ருதௌ ஜல்பிதே
ஆதாம்ரா-மதராம்ருதே மதகலா-மம்லான-வம்சீரவேஷ்-
வாசாஸ்தே மம லோசனம் வ்ரஜசிசோர்-மூர்த்திம் ஜகன்மோஹினீம்.
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-1.54)
கிருஷ்ணனை ‘வ்ரஜ சிசு’ என அழகாக வர்ணிக்கிறார். குழந்தையாகக் கண்டு தன் உள்ளத்தில் இருத்தி, அன்பையும், ஆசையையும் பொழிந்து கொண்டாடும் அந்த சுந்தர வடிவத்தை, தான் தனது மனக்கண்ணில் கண்டு மகிழும் புருவத்தின் சிறு சலனத்தையும், அவற்றின் வளைந்த அடர்ந்த அமைப்பையும், அவை பொழியும் அமுதமயமான நோக்கினையும், இனிய மொழி பேசும் உதடுகளையும் நேரில் காணும் ஆசையை வெளியிடுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் பலப்பல ஸ்லோகங்கள் குழந்தை கிருஷ்ணனின் திவ்ய வடிவினை இவ்வாறு வெகு அழகாகச் சித்தரிக்கின்றன.
ஸ்ரீமத் வல்லபாச்சாரியர் என ஒரு பெரியார், மதுராஷ்டகம் என ஒரு ஸ்லோகத்தை இயற்றியுள்ளார். கிருஷ்ணனை அவர் ‘இனிமையானவற்றின் இனிமையான நாயகன்’ என வர்ணிக்கிறார்.
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ரிதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம்
அவன் அதரங்கள் இனிமை; வதனம் இனிமை; இனிமையான உள்ளம் கொண்டவன்; முகம் இனிமை; கண்கள், புன்சிரிப்பு, நடை, பேசும் சொற்கள், உடை, பாவனை, குழலோசை, செய்கைகள், என அவன் சம்பந்தப்பட்ட அனைத்துமே இனிமை என்கிறார். ஒவ்வொரு ஸ்லோகத்திலும் இனிமை- மதுரம் எனும் சொல் ஏழு முறை அனாயாசமாகக் கையாளப் பட்டுள்ளது; (கீழே கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது) அதிசயமான பொருள்களைத் தந்து நம்மை மகிழ்விக்கின்றது. கீழே இன்னும் ஒரு ஸ்லோகம்:
வேணூர் மதுரோ ரேணூர் மதுரா
பாணீர் மதுரௌ பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம்   (மதுராஷ்டகம்)
குழலோசை, பாத தூளி, கரங்கள், கால்கள், நடனம், அவனுடனான நட்பு, அனைத்துமே இனிமை! ஒவ்வொரு சொல்லையும் விளக்க ஒரு கதையையே சொல்லி விடலாம். அதற்கு ஒரு பிறப்பு போதாதே! அவனுடைய இனிமையை அருகாமையில் இருந்து அனுபவித்த கோபிகையர் எத்தனை கொடுத்து வைத்தவர்கள்.
மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி, நாரயணீயத்தில் கிருஷ்ணனின் திருவுருவை தான் காணும் ஒரு தெய்வீகக் காட்சியாக கடைசி தசகத்தில் கேசாதிபாத வர்ணனையாகத் தருகின்றார். குழந்தை எனக் கண்டு மகிழ்ந்து கொண்டாடிடும் வடிவம் என்னவென்று உணர்ந்த உன்னத நிலை! அவனில் ஆழ்ந்து விட்ட மனம்; அதன் எண்ணங்கள்; அவன் திருவுருவின் சௌந்தர்யத்தில் நிலைபெற்று விட்ட ஆத்மா; ‘தன்’னை இழந்து விட்ட மெய்ம்மறந்த நிலை- இதைத்தான் பட்டத்ரியின் ஸ்லோகத்தில் நாமும் கண்டு அனுபவிக்கிறோம்:
“என் முன்பு ஒரு நீல வண்ண ஒளி நீலோத்பல மலர்களின் திரளைப் போலக் காண்கின்றது; என் உள்ளும் புறமும், அமிர்தத்தில் மூழ்கி விட்டது போன்ற ஒரு உன்னதமான உணர்வைப் பெற்றுள்ளன; அந்த ஒளியின் ஊடே ஒளிப்பிழம்பாக ஒரு சிறு குழந்தை வடிவை நான் தரிசிக்கிறேன்; ஆனந்தத்தில் எல்லையில் நின்று மயிர்க்கூச்செடுத்தவர்களாக இருக்கும் முனிவர்களும் நாரதரும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றனர்; உபநிஷதங்கள் அழகான மங்கையர்கள் போல அவனைச் சுற்றி நிற்கின்றனவே!”
அக்ரே பஸ்யாமி தேஜோ நிபிடதரகலா யாவலீ லோபநீயம்
பீயூஷாப்லாவிதோஹம் ததநு ததுதரே திவ்யகை சோரவேஷம்
தாருண்யாரம்ப ரம்யம் பரமசுக ரஸாஸ்வாத ரோமாஞ்சிதாங்கைர்
ஆவீதம் நாரதாத்யைர் விலஸதுபநிஷத் ஸுந்தரீ மண்டலைச்ச
(நாரயணீயம்- 100ம் தசகம்-1)
அக்குழந்தை வடிவின் சுருண்ட குழல் கற்றைகள், கண்கள், முகம், கைகள்,வயிறு, கால்கள் என வர்ணித்து, அவன் பாதங்களே உலகில் எல்லாரும் மிகவும் விரும்பும் ஒன்றாகும் என்றும் கூறுகிறார். இது அன்பின் மிகுதியான ஞானானந்த முதிர்ச்சி நிலை. படிக்கப் படிக்க நம் கண்களில் நீர் பெருகுகிறது.
இவ்வாறே ராஸக்ரீட வர்ணணத்தில் (69ம் தசகம்) ஒரு பாடல்; சந்த நயமும், சொல் நயமும் , பொருள் நயமும் மிகுந்து நம்மை அவன் திருவடிகளுக்கே அழைத்துச் சென்று விடும்
கேசபாசத்ருத பிஞ்சிகாவிததி ஸஞ்சலன் மகர குண்டலம்
ஹாரஜால வனமாலிகா லலிதம் அங்கராக கன சௌரபம்
பீத சேலத்ருத காஞ்சி காஞ்சிதம் உதஞ்சதம்சு மணி நூபுரம்
ராஸகேலி பரிபூஷிதம் தவஹி ரூபமீச கலயாமஹே.
(நாரயணீயம்- தசகம் 69-1)
‘கிரீடத்தை அலங்கரிக்கும் மயில்பீலிக் கொத்து; காதுகளில் அசைந்தாடும் மகர குண்டலங்கள்; அழகான முத்துமணி ஆபரங்களுடன் கலந்து ஆடும் வாசமும் நிறமும் மிகுந்த மலர்மாலைகள் தவழும் கழுத்து; கஸ்தூரியும் சந்தனமும், வாசனைப் பொருட்களும் பூசப்பெற்று நறுமணம் கமழும் உடல்: மஞ்சள் பட்டுப் பீதாம்பரத்தின் மேலணியப்பட்ட காஞ்சி எனும் இடையணி; கிணு கிணுவென இனிமையாக ஒலிக்கும் மணிகள் அமைந்த கால் நூபுரங்கள்; ராஸ நடனத்திற்குத் தேவையானவாறு அலங்கரித்துக் கொண்ட அழகுத் திருவுரு!’
ஸ்லோகத்தினைப் படிக்கும் போதே நமது உள்ளமும் அவனுடன் சேர்ந்து நடனமிடவில்லை? அதுதான் நாராயணீயத்தின் பெரும் சிறப்பு.
சிறிது வேறு பக்கம் நோக்குவோமாயின், ஒரு அழகான, மலையாளத் திரைப்படப் பாடல்; அடிமைகள் எனும் திரைப்படத்தில் வாளயார் என்பவரால் எழுதப்பட்டு, பி. சுசீலா அவர்களால் பாடப்பட்டது. மிக எளிமையான ஆனால் உணர்ச்சி பூர்வமான அன்புச் சொற்களால் அமைந்தது.
‘செட்டி மந்தாரம் துளசி பிச்சக மாலைகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னே கணி காணணம்.
மயில்பீலி சூடிக் கொண்டும் மஞ்ஞத்துகில் சுத்திக் கொண்டும்
மணிக்குழல் ஊதிக் கொண்டும் கணி காணணம்….’
‘நீ சிவந்த கொத்துக் கொத்தான வெட்சிப்பூக்கள், மந்தார மலர்கள், துளஸி, பிச்சி ஆகிய வாசமிகுந்த நறுமலர்களாலாகிய மாலைகளை அணிந்து கொண்டு, மஞ்சள் பட்டுப் பீதாம்பரத்தை உடுத்திக் கொண்டு, மயில் பீலியைத் தலையில் கொண்டையில் செருகிக் கொண்டு, குழலூதிக் கொண்டு எனக்குக் காட்சி தா,’ என வேண்டும் அன்பின் உரிமை…
கேரளத்தில் ‘கணி காணுவ’தென்பது ஒரு அருமையான தருணமாகக் கருதப்படுகின்றது. காலையில் கண் விழித்ததும் முதலில் காணும் கண்ணுக்கினிய நல்ல காட்சி தான் ‘கணி காணல்’ என்பது- நாள், நல்ல நாளாகச் செல்ல இது துணை நிற்கும் என ஒரு நம்பிக்கை! குட்டிக் கிருஷ்ணனைக் ‘கணி கண்டால்’ என்ன பரமானந்தம்! நம் மனதிற்குகந்த குழந்தை வடிவம் நம் எண்ணப்படி அழகாகக் காட்சி தர வேண்டி நிற்கும் அடியாரின் அன்பு நிலை இது.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையாக இளங்கோவடிகள் கூறுவார்:
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை; கண்ணும்
திருவடியும் கையும் கனிவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே!
(சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை)
அந்தக் கரிய மாயவனின் கண்ணும், திருவடிகளும், கைகளும், கனிவாயும் தரும் திருவுருவ அழகைக் காணாத கண்களும் கண்களோ? அவை புண்கள் அன்றோ? அவன் திருவுருவைக் காணும் போது கண்கள் இமைக்கவும் மறக்க வேண்டும்; இல்லையெனில் அக்கண்கள் அவனை முற்றுமாகப் பார்த்து ரசிக்க இயலாதாம்! வளமான கற்பனை; அத்தகைய அழகு வடிவம் கொண்டவனாம் திருமால் (கிருஷ்ணன்).
கிருஷ்ணனின் இந்த இனிமையான திருவடிவைப் பெண்கள் வர்ணித்து பாடுகிறார்கள்: அழகான இனிமை வாய்ந்த அன்னமாச்சாரியர் பாடல்.
‘சின்னஞ்சிறு குழந்தை இவன்; இப்படிப்பட்ட அற்புதக் குழந்தையை நாங்கள் யாருமே இதுவரை கண்டதில்லையே!
‘கருமுகில் போன்ற தலைமயிர்; சின்னஞ்சிறு குழந்தை தத்தித் தத்தித் தவழ்கிறான் பார்! காலில் சிறு மணிகள் ஒலிக்கும் சதங்கைகளை அணிந்திருக்கிறான் பார்! யசோதை அன்னையை விட்டகலாத குழந்தையைப் பார்!’
சின்னி சிசுவு சின்னி சிசுவு என்னடு
சூடவம்ம இடுவண்டி சிசுவு-
தோயம்பு குருல தோடா தூகேடி சிரசு சின்ட
காயல வண்டிஜாதள கமுல தோடா ம்ரோயுசுண்ண
கனகபு முவ்வல பாதால தோடா பாயக
யசோத வேன்ட பாராடு சிசுவு (அன்னாமாச்சார்யர் பாடல்)
குழந்தைக் கிருஷ்ணனும் அவன் அழகு வடிவமும், அலங்காரங்களும் யார் கருத்தைத் தான் கவரவில்லை?
‘நீலக்கடல் போலும் நிறத்தழகா, உந்தன் பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிகவாகுதே,” என்று இதனால் தானே ஊத்துக்காடு வேங்கட கவி பாடி வைத்தார்.

(கிருஷ்ண லீலைகள் தொடரும்)