மூன்று சிகரங்கள்

“வாங்களேன் இந்த தடவ” என்றார் நண்பர்.நண்பர் என்னை வாஞ்சையுடன் அழைத்தது மூன்று சிகர சவால் (3 peaks challenge) என்றழைக்கப்படும் மலையேறும் பயணத்திற்கு. இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஸ்காட்லாந்தின் உயர்ந்த சிகரமான பென் நெவிஸ் (1344 மீட்டர்) , இங்கிலாந்தின் உயர்ந்த சிகரமான ஸ்காஃவல் பைக் (978 மீட்டர்), வேல்ஸின் உயர்ந்த சிகரமான ஸ்னோடோன் (1085 மீட்டர்) ஆகிய மூன்று சிகரங்களையும் ஏறி முடிக்க வேண்டும், அதுவே மூன்று சிகர சவால்.

peaks

ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) நற்காரியங்களுக்கு நிதி திரட்டுவோரும், சாகச வெறியர்களும் வருடா வருடம் கோடையில் கூட்டம் கூட்டமாக இச்சவாலில் ஈடுபடுவர்.
ஒவ்வொரு சிகரமும் குறைந்தது ஐந்து மணி நேர சாலை வழி பயண தூரத்தில் உள்ளது. ஒரே நாளில் உணவு , உறக்கம் எல்லாம் பார்க்காது செய்து முடிக்க வேண்டிய சவால் இது.
ஆயிரம் மீட்டருக்கு மேலுள்ள ஒவ்வொரு சிகரத்தையும் ஐந்து மணி நேரத்திற்குள் ஏறி , இறங்க உச்ச கட்ட தேக ஆரோக்கியம் மிக அவசியம்.
நண்பர் அனுதினமும் நடை பாதைகளில் தலை தெறிக்க ஒடுபவர். ஓடி ஓடியே எங்கள் பகுதி ரோட்டை எல்லாம் தேய்த்து விட்டார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டே உண்டு. உடலை பேணுவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர். அவருக்கு இச்சிகரங்களை ஏறுவது மூன்றாவது முறை.
நான் குறைந்தது என் உயரத்திற்கு இருக்க வேண்டிய எடையை விட , இருபது கிலோ மேலதிகமாய் சுமந்து கொண்டு , நடந்தால் தரைக்கும் , எனக்கும் வலிக்கும் என மெதுவாய் நடப்பவன்.
இறகுப்பந்து விளையாடுவதை தவிர என் உடலை வேறு எதற்கும் வருத்திக் கொள்ளாதவன். எனக்கு நடப்பது, நீச்சல், விளையாட்டுக்கள், மலையேறுதல் முதலியவற்றில் ஆர்வம் உண்டு ஆனால் எதையும் தொடர்ச்சியாய் செய்வதில்லை.
“வண்டி ஓட்ட கூப்புடிறிங்களா?” என்றேன், நான் வசிக்கும் ஊரில் என் நண்பர்களுக்கு நானே ஆஸ்தான சாரதி, உற்சாக பானம் அருந்தாமலே நான் உற்சாகமாக இருப்பதற்கு அவர்கள் எனக்கு கொடுத்திருக்கும் செல்ல பதவி! “அட இல்லைங்க சீரியசா தான் , நேரத்துல ஏற முடியலனா திரும்பி எறங்கிருங்க, நீங்க முழுசா ஏறணும்னு ஒன்னும் இல்ல, ஒரு நல்ல அனுபவமா இருக்கும்ல” என்றார்.
ஏழு பேர் போவதாக முடிவாகியிருந்தது, அதில் ஐந்து பேருடன் நான் ஏற்கனவே ஒரு முறை ஸ்னோடோன் மலை மட்டும் ஏறி இருக்கிறேன். அவர்கள் வேகத்திற்கு முடியாவிட்டாலும் பெரிதாக சிரமபடாமல் மலையேறி முடித்திருந்தேன். நண்பர் பேச பேச லேசாக ஆசை துளிர்த்தது. இம்முறை வேரோரு நண்பர் வண்டி ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளதால் நான் ஓட்ட வேண்டி இருக்காது, அதுவும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. இந்நண்பர் குழாமோடு பயணம் செய்வது எனக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் இனிய அனுபவமாகவே இருந்துள்ளது, அது இன்னோரு பெரிய உந்துதல் . அரை மணி நேரத்தில் “மூணு மலதான ,ஏறிறுவோம்” என்று சொல்லும் அளவுக்கு தயார்ஆகிவிட்டேன்.
ஏழு பேருக்கான விமான டிக்கெட், விடுதி அறை அனைத்தும் ஏற்கனவே பதிவு செய்துவிட்டனர். அடுத்த நாளே எனக்கான விமான டிக்கெட்டும் , விடுதி அறையும் பதிவு செய்துவிட்டேன்.
இப்பொழுது வாடகை கார் எடுப்பதில் ஒரு சிக்கல். நண்பர்கள் ஏழு இருக்கை கொண்ட காரை வாடகைக்கு எடுக்கலாம் என்று நினைத்திருந்தனர், நான் சேர்ந்து கொண்டதால் அது முடியாது. எட்டு அல்லது ஒன்பது இருக்கைகள் கொண்ட வண்டி ஏதேனும் உள்ளதா என்று கூகிளில் தேடிக்கொண்டிருக்கும் போது ஒட்டுனருடன் கூடிய சிற்றூந்து நாமே ஓட்டிக்கொள்ளும் வாகன வாடகைக்கு விளம்பரபடுத்த பட்டிருந்தது. இங்கிலாந்தில் வண்டி வாடகை குறைவு , ஒட்டுனர் கட்டணம் மிக அதிகம். எதற்கும் தொலை பேசுவோம் , அவ்வளவு மலிவாக இருந்தால் நல்லது என்றெண்ணி அந்த நிறுவனத்திடம் பேசினேன். உண்மையிலேயே அவ்வளவு மலிவாகத்தான் இருந்தது. பதினைந்து பேர் அமரக்கூடிய சிற்றூந்தை ஓட்டுனருடன் வாடகைக்கு அமர்த்தினோம்.
என்னையும் மலையேறும் குழுவில் சேர்த்து கொண்டதை கேள்வி பட்டு மேலும் இரு நண்பர்கள் விருப்பம் தெரிவிக்க, அவர்களையும் சேர்த்து பத்து பேர் கொண்ட குழுவானோம்.
பயண திட்டத்தின் படி எங்களூரில் இருந்து க்லாஸ்கோ (Glasgow) விமானம் மூலம் செல்வது, அங்கிருந்து ஓட்டுனர் சிற்றூந்தில் எங்களை ஏற்றி கொண்டு ஃபோர்ட் வில்லியம் அழைத்துச் செல்வார். பென் நெவிஸின் அடிவாரத்தில் இருக்கும் சிற்றூர் ஃபோர்ட் வில்லியம். அங்கு விடுதியில் இரவு தங்கல்.
அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பென் நெவிஸ் ஏற வேண்டும். பதினோரு மணிக்குள் மலை இறங்கி சிற்றூந்தில் ஏறி விட வேண்டும்.
சிற்றூந்து பதினொன்றே காலுக்கு கிளம்பி ஆறு மணி நேர பயணத்தில் ஸ்காஃவல் பைக் சென்று சேரும்.
ஐந்தரை மணிக்கு ஏற ஆரம்பித்து பத்தரை மணிக்குள் இறங்கி மறுபடி சிற்றுந்து.
அங்கிருந்து இரவு பத்தே முக்காலுக்கு கிளம்பி நான்கு மணி நேர பயணத்தில் சிற்றுந்து ஸ்னோடோனை அடையும். அதிகாலை மூன்று மணிக்கு ஏற ஆரம்பித்து ஆறு மணிக்குள் சிற்றுந்திற்கு திரும்பி விட்டால் 24 மணி நேர சவால் நிறைவுறும். பன்னிரெண்டு மணி நேர பயணம், பன்னிரெண்டு மணி நேரம் மலையேறுதல். பன்னிரெண்டு மணி நேரத்தில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 42 கிலோமீட்டர்கள்.
திட்டத்தை பார்த்தவுடன் தெரிந்துவிட்டது இதற்கு பயிற்சி மிக முக்கியமென. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தெருக்களில் நடை பயிற்சியும் , வாரத்தில் இரு நாட்கள் உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியுமாக என் மூன்று சிகர சவாலுக்கான ஆயத்தங்களை தொடங்கினேன்.
ஒரு வழியாய் பயிற்சி முடிந்து விமானத்தில் க்லாஸ்கோ சென்று, அங்கிருந்து எங்கள் ஓட்டுனர் ராபர்ட் தன்னுடைய சிற்றூந்தில் எங்களை ஏற்றிக் கொண்டு ஃபோர்ட் வில்லியம் சென்று சேர்த்தார்.
ஹாஸ்டலில் இருந்து காலை ஆறு மணிக்கு வாடகை காரில் பென் நெவிஸ் அடிவாரத்திற்கு கிளம்பினோம்.
பென் நெவிஸ் தகவல் மையத்தை வாடகை கார் அடைந்தது.
மலையேற உதவும் குச்சிகள், முதுகில் தேங்காய் தண்ணீர் நிரப்பிய நீர் மூட்டை சகிதம் இறங்கினேன்.
ஏற்கனவே இரு முறை வந்தவர்கள் விடு விடுவென ஏற ஆரம்பித்தனர்.
நான் என் உயரத்திற்கு குச்சியை சரிசெய்வதற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆரம்பமே சற்று சிரமமான ஏற்றமாய் இருந்தது. பாறைகளுக்கு இடையில் சிறு மண் பாதை மேலே மேலே என நெளிந்து வளைந்து ஏறி சென்று கொண்டிருந்தது.
பத்து நிமிட நடையில் எனக்கு மேல் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.
இந்தளவிற்கு ஏற்றமுள்ள மலை பாதையை ஐந்து மணி நேரத்தில் ஏறி இறங்க வெறும் பயிற்சி மட்டும் போதாது, உடல் எடையும் சரி விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.
மேலும் ஒரு பத்து நிமிடம் , பின் தங்க மனமின்றி என் நண்பர்களின் வேகத்திலேயே ஏறிக் கொண்டிருந்தேன். நுரையீரல் காற்று, காற்று என்று கதற ஆரம்பித்தது.
இதற்கு மேல் அதே வேகத்தில் செல்வது முடியாது என்பது தெரிந்தது, என் வேகத்தை குறைத்தேன்.
நண்பர்களுக்கும் எனக்குமான தூரம் சிறிது சிறிதாக அதிகரித்து, ஒவ்வொருவராக என் கண் பார்வையிலிருந்து மறைந்தனர்.
எனக்கு பின்னால் வந்த குழுக்கள் என்னை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
நடையின் வேகத்தை நிர்ணயிக்க முன்னால் யாரும் இல்லாததால் என் வேகம் மிகவும் குறைந்தது, என் நன்பர்களுக்கும் எனக்கான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது.
நிமிர்த்தி வைத்த பெரிய வெல்லக்கட்டி மேல் எறும்பு போல் மெதுவாக பென் நெவிஸின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு ஏரியை சென்றடைந்தேன். இவ்வேரி மலைப்பாதையின் நடுப்புள்ளியில் உள்ளது. இங்கிருந்து மேலே ஏறினாலும் கீழே இறங்கினாலும் ஒரே தூரம்தான்.
அங்கே நின்று எனக்கு மேலும் கீழும் இருந்த இயற்கையை கண் தூக்கி பார்த்தேன். என்னை சுற்றி ஓங்கி எழுந்த மலை சிகரம் , பச்சை கம்பளம் , ஸ்படிக நீரோடைகள், தெளிந்த நீர் நிறைந்த ஏரி. பேரழகும் , பேரழிலும் எனைச் சூழ்ந்திருக்க மலைத்து போய் நின்றிருந்தேன். எத்தனை கவிஞர் மீள மீள வர்ணித்தாலும் வர்ணனைகளில் சிக்காத இப்பேரழகை ரசிப்பதற்கே மானுடர் மீண்டும் மீண்டும் மலைகளையும், காடுகளையும் தேடிச் செல்கின்றனர் போலும்.
குறித்த நேரத்தில் முடிக்க வேண்டுமெனில் உடனே கிளம்ப வேண்டும் என உள்ளே அடித்துக்கொண்டிருந்தது. மனமில்லாமல் நடக்க தொடங்கினேன். இது வரை இழந்த நேரத்தை இந்த ஏற்றத்தில் ஈடு செய்து விடுவது என முடிவு செய்து நடையை எட்டிப்போட்டேன்.
பச்சை மறைந்து பாறைகள் நிறைந்த மலைப்பாதை தொடங்கியது. இப்பாதை முன்பிருந்ததை விட இன்னும் செங்குத்தாக மேலே ஏறியது. இருப்பினும் வேகத்தை குறைக்காமல் சீராக நடந்து கொண்டிருந்தேன், இதற்குள் என் நடையில் ஒரு லயமும் அமைந்துவிட்டதால் பெரிதாக மூச்சிறைக்காமல் ஏற முடிந்தது.
ஒரு அரை மணி நேர நடைக்குப் பின், எங்கள் குழுவில் இருந்து ஒருவரை சந்தித்தேன். சிகரத்தை அடைந்து விட்டு மீண்டும் இறங்கி கொண்டிருந்தார்!. நான் சிகரத்தை அடைய இன்னும் ஒன்றரை மணி நேரமாவது ஆகும் என்றார். எனக்கு இறங்க மனமில்லை , இன்னும் சிறிது ஏறிவிட்டு இறங்கி விடுகிறேன் என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்து விட்டு மீண்டும் மேலேற தொடங்கினேன். ஒன்றரை மணி நேரத்தை ஒரு மணி நேரமாக்கிவிடும் நோக்கத்தில் நடை வேகத்தை இன்னும் சற்று கூட்டினேன். கால்கள் லயம் தப்பின. அப்படியே கால் மணி நேரம் நடந்திருப்பேன். ஓரு திருப்பத்தில் என் இடது தொடையில் தசை பிடித்து கொண்டது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. காலை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பாறையில் சென்று அமர்ந்தேன். வலி சுண்டி சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. அருகில் நண்பர்களும் இல்லை, காலை கீழே ஊனவே முடியவில்லை.
இவ்வளவு செங்குத்தான பாதையில் லயமற்று, வேகமாக வேறு நடந்தது நன்றாக என் கால் தசையை பதம் பார்த்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். மேலே ஏறி கொண்டிருந்த ஒரு குழு என்னை பார்த்து விட்டு அருகில் வந்து ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டனர். நிலைமையைச் சொன்னேன், அக்குழுவின் தலைவரை போல் இருந்தவர் தசை பிடித்த இடத்தில் பரபரவென தேய்த்து விட்டார், என்னை எழச் செய்து சில காலுக்கான நீட்டல் பயிற்சிகளை செய்ய வைத்தார். ஓரிரு நிமிடங்களில் தசை பிடிப்பு இளகி வலி குறைந்தது. பாதை செங்குத்தாக இருப்பதால் சிறு சிறு அடி எடுத்து வைத்து நடக்குமாறு சொன்னார், இல்லாவிட்டால் மீண்டும் தசை பிடிப்பு வரும் என எச்சரித்து விட்டு அவர் குழுவுடன் கிளம்பினார்.
மீண்டும் மெதுவாக ஏற ஆரம்பித்தேன், இறங்கி போக இன்னும் மனதில்லை!. இன்னொரு நண்பரும் இறங்கி கொண்டிருந்தார், அவரிடம் அடுத்தவருடன் இறங்குகிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் மேலேறினேன். வரிசையாக என் குழுவை சேர்ந்த நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். பாதையில் திட்டு திட்டாக உறை பனி தெரிய ஆரம்பித்தது. மேலும் இரு நண்பர்கள் இறங்கி வந்தனர். நான் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து சிகர உச்சியை அடைய நான் நடக்கும் வேகத்தில் ஏற குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்றனர். நான் அவர்களுடன் இறங்காமல் ஏறினால் என்னால் மொத்த குழுவும் ஒரு மணி நேரம் தாமதமாகும். வேறு வழியில்லை , அவர்களுடன் சேர்ந்து இறங்க ஆரம்பித்தேன். இறங்குவது சுலபமாகவே இருந்தது , ஓட்டமும் நடையுமாய் வேகமாக இறங்கி , எங்களுக்காக காத்திருந்த சிற்றூந்தில் சென்று ஏறினோம். அப்படியும் ஒரு மணி நேர தாமதம்!, பென் நெவிஸில் இருந்து பதினொரு மணிக்கு கிளம்புவதாக திட்டம், பனிரெண்டு மணிக்கு கிளம்பினோம்.
சிற்றூந்து இப்பொழுது ஸ்காஃவல் பைக்கை நோக்கி கிளம்பியது. வழியில் நெடுஞ்சாலை சேவை நிலையத்தில் பதினைந்து நிமிடம் நிறுத்தி மதிய உணவை முடித்துக் கொண்டோம்.
மாலை ஆறு மணிக்கு ஸ்காஃவல் பைக்கின் அடிவாரத்தை சென்றடைந்தோம். ஏற்கனவே ஒரு மணி நேர தாமதமாகையால் ஒட்டுனர் ராபர்ட் ஸ்காஃவல் பைக்கை நான்கு மணி நேரத்தில் ஏறி முடிக்காவிடில் ஸ்னொடன் செல்வதற்கு மேலும் தாமதமாகும் என்று அனைவருக்கும் நினைவூட்டினார். சாதாரணமாக நல்ல மலையேற்ற பயிற்சி உள்ளவர்களுக்கே ஸ்காஃவல் பைக் ஏறி இறங்க ஐந்து மணி நேரம் பிடிக்கும். இம்மலையிலும் என்னால் சிகரம் தொட முடியாது என்பது ஏறுவதற்கு முன்னாலேயே தெரிந்துவிட்டது. இருப்பினும் முடிந்தவரை ஏறுவோம் என கிளம்பினேன். மலையேற்றத்தின் ஆரம்பத்தில் இம்முறை நண்பர்களின் வேகத்திற்கு ஓரளவு ஈடு கொடுத்து ஏறினேன். ஸ்காஃவல் பைக் பென் நெவிஸை விட செங்குத்தான ஏற்றம் கொண்ட பாதையை கொண்டிருந்தது. நூலேணியை மலையில் சாய்த்து வைத்து ஏறுவதை போல நேர் குத்தாக நெளிந்து நெளிந்து ஏறிச் சென்றது பாதை. அரை மணி நேரத்தில் நுரையீரல் காற்றுக்கு தவிக்க ஆரம்பித்தது. பென் நெவிஸில் செய்தது போல் ஒரே அடியாய் வேகத்தை குறைக்காமல் மிதமான வேகத்திற்கு மாறினேன். இம்முறை இரண்டு நண்பர்கள் உடன் இருந்ததால் நடை வேக நிர்ணய பிரச்சனை இல்லை. நாங்களே ஆச்சரியபடுமளவுக்கு எங்கள் வேகம் நான்கு மணி நேரத்தில் முடித்துவிடக்கூடிய அளவில் இருந்தது. சிறிது சந்தோசப்பட்டு கொண்டிருக்குபோதே மேகம் திரண்டு பாதையை மூடத் தொடங்கியது. மலையில் தட்ப வெட்பம் சடுதியில் மாறிவிடும். ஐந்து நிமிடத்தில் இரண்டடிக்கு மேல் எதையும் பார்க்க முடியவில்லை. சிகரத்திற்கு இன்னும் முக்கால் மணி நேரத்தில் சென்றடைந்து விடக்கூடிய உயரத்திற்கு சென்று சேர்ந்தோம். மழை வலுத்து பெய்ய தொடங்கியது.
இப்பொழுது ஓரடி முன்னால் இருப்பதை பார்ப்பதே பெரிய சவால். என்னுடன் இருந்த நண்பர்களுக்கும் ஸ்காஃவல் பைக் ஏறுவது இதுவே முதல் முறை , மூவருக்கும் வழி தெரியாது. வழி தெரியாமல் அதுவும் பாதையே தெரியாத பேய் மழையில் ஸ்காஃவல் பைக் போன்ற நெட்டுக்குத்தான மலையை ஏறுவது மிக ஆபத்தானது. தொலைந்து போனாலும் பரவாயில்லை என வீம்பாக ஏறலாமா அல்லது திரும்பி இறங்கி விடலாமாவென இரு மனதாய் சில நிமிடங்கள் கீழும் மேலுமாய் ஊசலாடி கொண்டிருந்தோம். அப்போழுது ஒரு பெரும் காற்று என்னை இரண்டடி முன்னால் தள்ளி விட்டு சென்றது, எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. பாதை தெரியாத கும்மிருட்டு, பேய் மழை , பாறைகளையே புரட்டி போடும் வலுவுள்ள பெரும் காற்று , மலை ஏறும் போது எதெல்லாம் உயிருக்கு ஆபத்தோ அது அனைத்தும் ஒன்றாக திரண்டு வந்து எங்கள் முன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. இதற்கு மேல் ஏறிச்செல்வது மூடத்தனம் என திண்ணமாய் தெரிந்தது , விடு விடு வென இறங்க தொடங்கினோம். சுழன்றடிக்கும் மழையிலும் , பீறிட்டடிக்கும் பெரும் காற்றிலும் கீழே விழாமல் இறங்குவது பெரும் போராட்டமாய் போனது. உடன் வந்த நண்பர் இருமுறை கால் வழுக்கி விழுந்து விட , மிகவும் எச்சரிக்கையாய் ஒவ்வொரு அடியாய் இறங்கினோம். காற்று கீழுருந்து மேல் அடித்ததால் நல்ல வேளையாக காற்று தள்ளி விழும் தொல்லை இல்லாது போனது. காற்று சற்று திசை மாறி அடித்திருந்தால் நாங்கள் அங்கேயே அமர்ந்திருக்க வேண்டியதுதான். நாங்கள் சிற்றூந்து வந்து சேர்ந்த முக்கால் மணி நேரத்தில் மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தனர். காற்றிலும் , மழையிலும் இருந்து தப்ப வேகமாக ஓடினோமோ என்னவோ மூன்றரை மணி நேரத்தில் அனைவரும் சிற்றூந்தில் இருந்தோம். இதில் ஐந்து நண்பர்கள் மூன்றரை மணி நேரத்தில் பேய் மழையிலும் , பெரும் காற்றிலும் சிகரத்தை தொட்டுவிட்டு வந்தது மேலும் சிறப்பு.
நீர்புகாதிருக்க வடிவமைக்க பட்ட சப்பாத்து (boot), மேலாடைகள் , உள்ளாடைகள் என அனைத்தும் இந்த பேய் மழை முன் தோற்று போயின. தொப்பலாக நனையாத ஆட்களே அச்சிற்றூந்தில் இல்லை. முடிந்த வரை எங்களை உலர்த்திக்கொண்டு ஸ்னோடன் நோக்கி பயணமானோம்.
விடிகாலை நாலரை மணிக்கு ஸ்னோடன் சென்று சேர்ந்தோம். கடைசி சிகரமாகையால் கண்டிப்பாக சிகரம் தொடலாம். எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக நடக்க ஆரம்பித்தேன். ஸ்னோடனின் முதல் கட்ட மலைப்பாதை சாதரண சமவெளி நடைப்பாதை போன்றே இருந்தது. நான் ஏற்கனவே ஏறிய மலையாதலால் தொலைந்து போகும் பயமும் இல்லாமல் உற்சாகமாக நடந்தேன். அரை மணி நேரத்தில் முதல் கல்மலை வந்தது. ஸ்னொடனின் சிறப்பு இம்மலையில் சில இடங்களில் பாறைகளிலும் , கற்களிலும் தொற்றி ஏற வேண்டும், நடை பாதை கிடையாது. தொற்றி தொற்றி ஏறி , நண்பருடன் மலைப் பாதை ஒன்றை வந்தடைந்தேன். பெரிதாக சிரமபடாமல் இருவரும் மலைப்பாதையில் நடந்து சிகரத்தை சென்றடைந்தோம்.
சிறிது நேரம் அங்கே நின்று விட்டு , இறங்க ஆரம்பித்தோம். நான் அரக்க பரக்க ஓட பிடிக்காமல் சுற்றிலும் பார்த்து ரசித்துக்கொண்டே மெதுவாக இறங்கி கொண்டிருந்தேன். உடன் வந்த நண்பர் வேகமாக இறங்கி விட்டார். நான் மற்றொரு குழுவுடன் சேர்ந்து வேறொரு வழியில் இறங்க ஆரம்பித்தேன். இவ்வழியில் அதிகம் பாறையேறுதல் தான்,மலைபாதை மிக குறைவு. குரங்கு போல் குதித்து, தாவி, தொற்றி என மலை இறங்குவது உற்சாகமான புது அனுபவமாய் இருந்தது. பாறைகளில் தொற்றியே இறங்குவதால் வெகு விரைவில் மலையிறங்கி விட்டோம்.
கீழே வந்தவுடன் முதல் வேளையாக உணவகத்திற்கு சென்று சூடாக உணவு தருவித்து உண்டோம். முப்பது மணி நேரத்தில் முதல் சூடான சமைத்த உணவு!.
ஒரு சிகரத்தை மட்டுமே தொட்டு திரும்பி இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்தது.
மீண்டும் இப்பயணத்தை மேற்கொள்ளவேண்டும் , ஆனால் அடுத்த முறை மூன்று சிகரங்களையும் கண்ணார கண்டு ரசிக்க வேண்டும். வெற்றி கொள்ளும் வெறியுடன் வேக வேகமாக ஓடாமல் , இம்மலைகள் வாரி வாரி வழங்கும் பேரழில் காட்சிகளை ரசித்து கொண்டே ஏற வேண்டும். இயற்கை நம்மை அதனிடம் ஒப்புகொடுத்துவிட்டு ரசிப்பதற்கானது, ஏறி மிதித்து வெற்றி களிப்படைவதற்கானதல்ல, இதுவே இப்பயணம் எனக்குள் ஏற்படுத்திய எண்ணம்.
அடுத்த முறை, இருபத்தி நான்கு மணி நேரம் முப்பத்தி நான்கு மணி நேரமாய் ஆகக் கூடும். இம்மலைகளின் அழகை ரசிக்க அதை விட கூடுதலாகவே நேரம் செலவிடலாம் , தவறில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.