[stextbox id=”info” caption=”பிஞ்சிலே பழுத்தவர்கள்”]
முன்பொரு காலத்தில் -அதாவது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் சொல்கிறோம். காலம் இப்போது இறக்கை கட்டிப் பறக்கிறதே, அதனால் பதினைந்து வருடங்கள் என்பது ஒரு நூறாண்டுகள் போலத்தான், இல்லையா?- உலகுக்கே புதுப்பாதை காட்டும் அதிசயங்களாக பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று சிலரைச் சொல்வார்கள். இன்று அப்படி யாரைச் சொல்வது என்றால் ஒரே குழப்பம். ஏனென்றால் தெருவுக்குத் தெரு இளைஞர்களும், நடுவயதினரும் புதுப்புது கண்டு பிடிப்புகளைக் கொண்டு வந்திருப்பதாக டமாரமடிக்கிறார்கள். ஒரே விளம்பரக் கூச்சல், குழப்பம். உண்மையில் அப்படி ஒரு அதிசயப் பொருளைக் கண்டு பிடித்துச் சந்தைக்கு யார் அளிக்கிறார்கள் என்பது அப்படி ஒன்றும் எளிதாகப் புரிவதில்லை.
இருந்தும் பானைக்குள்ளிருந்து மேலேறத் துடிக்கும் நண்டுகளின் கூட்டத்திலிருந்து, சில நண்டுகள் எப்படியோ மேலேறி வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன, இந்த நண்டுகளில் சில உண்மையிலேயே நண்டு சிண்டுகள். அதாவது குழந்தைகள், சிறுவர்கள், பதின்ம வயதினர். இவர்களில் சில இந்தியச் சிறார்களும் உண்டு.
ஷுபம் பானர்ஜி என்கிற 13 வயதுப் பையன், கலிஃபோர்னியாவில் சாண்டா க்ளாரா என்ற ஊரில் வசிப்பவன். இவன் பார்வையற்றோர் படிக்கும் விதமாக மிக மலிவான செலவில் அச்சடிக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கி இருக்கிறானாம். சிறுவர் விளையாட உதவும் லெகோ என்கிற ப்ளாஸ்டிக் அச்சுக் கட்டைகளைக் கொண்டு இந்த எந்திரம் தயாராகி இருக்கிறது. இவனது நிறுவனம் இந்த எந்திரங்களைத் தயாரிக்கப் போகிறதாம்.
ரோஹன் அக்ரவால், 14 வயதுப் பையன், குபர்டினோ என்கிற ஊரில் கலிஃபோர்னியாவில் வசிப்பவன். ரொபாடிக்ஸ் நிறுவனம் ஒன்றைத் துவங்கி இருக்கிறான்.
பென் பாஸ்டர்நாக் என்ற ஆஸ்திரேலியப் பையனுக்கு வயது 16. இவனை ஃபேஸ்புக், கூகிள் ஆகிய நிறுவனங்கள் அங்கு வந்து பேச அழைத்திருக்கின்றனவாம். இவன் உருவாக்கிய ஒரு ஐஃபோன் விளையாட்டு அரை மிலியன் பேர்களால் இறக்கி விளையாடப் பயன்பட்டிருக்கிறது.
ஷ்ரேயா ஷங்கர் என்கிற 18 வயதுப் பெண்ணையும், மிங் ஹார்ன் என்கிற இன்னொரு 18 வயதுப் பெண் பற்றியும் இந்தச் சிறு கட்டுரை பேசுகிறது. படித்துப் பெருமைப்படுவீர்களோ, பெருமூச்சு விடுவீர்களோ, பாராட்டுவீர்கள் என்று நம்புகிறோம்.
[stextbox id=”info” caption=”காஃப்கா ஏன் எழுதினார்?”]
காஃப்கா ஒரு விசித்திரமான மனிதர் என்பதில் நம் யாருக்கும் ஐயம் இராது. நம் என்கையில் அவரது எழுத்தைப் படித்திருக்கிறவர்களைத்தான் குறிக்கிறோம். அவர் எழுதியதைப் படிக்காதவர்களுக்கும் அரசல் புரசலாகத் தகவல்கள் கசிந்திருக்கும்தான். அதுவும் தமிழகத்தில் காஃப்காவைச் செத்த எலி என்றெல்லாம் வருணித்திருக்கிறார்களாமே? அது ஒரு காலம். பின்னால் காஃப்காவின் புத்தகம் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்ததாக நினைவு. பொதுவாக அவருக்குத் தமிழர் நடுவே அத்தனை நல்ல பெயரில்லை. ஏதோ முற்போக்குகளின் எதிரி என்ற ஒரு பிம்பம் இருக்கிறது.
ஆனால் காஃப்கா விசித்திரமானவர் என்பது எதனால் என்றால், அவர் வாழ்வை மிக நேசித்தவர், அதைப் பூரணமாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் என்பது இருக்கிறது. அதில் உலக மாந்தரில் பெரும்பாலானோர் அடங்குவார் என்பதால் காஃப்கா சாதாரணமானவராகி விடுவாரா என்ன? ஏனெனில் பூரணமாக அனுபவிப்பது என்றால் ஏராளமான பொருட்செலவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது என்று அர்த்தமில்லை. காஃப்காவை பொறுத்தவரை எழுதுவது என்பதே கூட அப்படி ஒரு முழுமையான வாழ்வுக்குப் பாதை. அங்கேதான் அவர் நம் போன்ற சாதாரணர்களிடம் இருந்து பாதை பிரிந்து போகிறார்.
உலகைத் தூய்மைக்கும்,உண்மைக்கும், மாறுதல்களுக்கு உட்படாத நீடிப்புக்கும் உயர்த்தினால்தான் ஆனந்தம் கிட்டும் என்று கருதுபவர் அவர். இருபது வயதிருக்கும்போது அவர் எழுதுகிறாராம் (ஒரு நண்பருக்கு) ‘கடவுள் நான் எழுதுவதை விரும்பவில்லை, ஆனால் நானோ- எழுதித்தானாக வேண்டும்.’ எழுதுவது என்பது சுயத்திற்கு எதிரானது, ஒரு பயங்கரத்துக்கு ஆட்படுவது, சாத்…தானுக்கு உட்படுவது என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறார்.
தன் வாழ்வின் இறுதி நிலையில் தன்னைப் பற்றிச் சொன்னதாம் இது: ’திருமணம் செய்யவியலாத மகன், தன் பெயரை மேலெடுத்துச் செல்ல ஒரு வாரிசைக் கூடக் கொடுக்கவியலாதவன், 39 வயதில் ஓய்வூதியம் பெற்றவன்; எதிலும் ஒட்டாத விதமான எழுத்தை எழுதுபவன், அதுவோ மீட்சியையோ, அல்லது என்றென்றைக்குமான வீழ்ச்சிக்கோ தன் ஆன்மாவைச் செலுத்துவதைத்தான் குறிக்கோளாகக் கொண்டது.’
மேலும் படித்தால் தெரிகிறது. காஃப்காவின் கற்பனையில் எழுதும் ‘தான்’ என்பதன் உள்ளே பல செயலமைப்புகள், பல இலாகாக்கள், பல சட்ட திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. அவருடைய ‘அரண்மனை’ என்கிற நாவலில், இப்படி பல உருவங்கள், தோற்றங்கள், செயல்பாடுகள் கொண்ட தன்மைகளைப் பற்றித்தான் உருவகமாக்கிப் பேசுகிறார் காஃப்கா என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.
தன்மையையே (self) மாற்றமையாக ஆக்கி அதனுடன் ஒரு உறவு கொள்ள முயன்ற எழுத்து காஃப்காவுடையது என்பதாக நிறுவ முயல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். படிக்கப் படிக்க அதிசயங்கள் கொண்ட புத்தகமாக இருக்கும் என்று தோன்றுகிற இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயம் இங்கு இலவசமாகப் படிக்கக் கிட்டுகிறது.
http://press.princeton.edu/chapters/s8791.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”50 அதிபுத்திசாலி நிறுவனங்கள்”]
எம் ஐ டி என்கிற பொறியியல் பல்கலை அமெரிக்காவின் முதல் நிலைப் பல்கலைகளின் வரிசையில் வைத்துக் கருதப்படுகிறது. எம் ஐ டியின் புத்தகப் பதிப்பகம் ஏராளமான சிறப்பான புத்தகங்களை வெளியிடுகிறது, அவற்றில் நிறைய தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் எல்லாம் கூட வெளியிடப்படும் புத்தகங்கள். ஒரு எடுத்துக் காட்டாக இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.
https://mitpress.mit.edu/books/decentralization-and-local-governance-developing-countries
இப்புத்தகத்தில் எழுதிப் பங்கெடுத்ததோடு அதன் தொகுப்பாசிரியராகவும் இருந்தவர்கள், இந்தியாவில் பத்திரிகை வாசகர்களுக்குப் பரிச்சயமான பத்தியாளரும், பொருளாதார நிபுணர்களுமான பிரனாப் பர்தனும் திலிப் முகர்ஜியும் ஆவர்.
இந்தப் பல்கலையின் ஒரு சிறப்பான வெளியீடாக அதன் டெக்னாலஜி ரெவ்யு பத்திரிகையைச் சொல்லலாம். இந்தப் பத்திரிகை அவ்வப்போது ஒரு சர்வே போல வெளி உலகின் சில அம்சங்களை நோக்கி ஒரு பட்டியல் தயாரித்து வெளியிடும். ஜூலை/ ஆகஸ்ட் 2015 க்கான பத்திரிகை இதழில் உலகின் சிறந்த 50 நிறுவனங்களின் பட்டியல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தப் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லலாம்.
http://www.technologyreview.com/lists/companies/2015/
[/stextbox]
[stextbox id=”info” caption=”மேலைப் பண்பாடு உலகில் எப்படிப் பரவியது?”]
மேற்கின் பண்பாடு எப்படி உலகில் சில நூறாண்டுகளில் பரவியது என்பதை ஒரு விடியோ ஆறு நிமிடங்களில் காட்டுகிறது. அதை இந்தச் சுட்டியில் பார்க்கலாம். இது முழுக்க மேலைப் பார்வையில் கிட்டத்தட்ட மேட்டிமைத் தொனியில் சொல்லப்படுகிறது என்பதையும் கவனியுங்கள். கிருஸ்தவத்தை நம்புவோர் பலியாக்கப்படுகிறார்கள் என்ற வழக்கமான பிலாக்கணத்துடன் கூட இது துவங்குவதை எல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால் பயனுள்ள தகவல் கிட்டும்.
http://aeon.co/video/society/charting-culture-an-animated-map-of-notable-births-and-deaths/
[/stextbox]
[stextbox id=”info” caption=”எரிக் க்ஹோமேஹ்- ஃப்ரெஞ்சுப் புது அலை சினிமாவின் ஒரு நட்சத்திரம்”]
எரிக் ரோமர் என்று நாம் இங்கிலிஷில் படிக்கும் பெயர் அது. ஃப்ரெஞ்சு உச்சரிப்பு மேலே கொடுக்கப்பட்டது போல ஒலிக்கிறது. 🙂
50களில் துவ்ங்கி உலக சினிமாவைப் புரட்டிப் போட்ட ஃப்ரெஞ்சுப் புது அலை என்கிற திரைப்பட ‘இயக்கம்’ ஒரு முனைத்தானது அல்ல என்று நிறைய பேர் எழுதிப் படித்திருப்பீர்கள். ரோமர் இந்த அலையில் ஒரு முக்கியப் புள்ளி, ஆண் பெண் உறவுகளில் அறவுணர்வைப் பற்றி நுண்மையான கவனிப்புகள் கொண்ட மென்மையான படங்களை எடுத்தவர் என்று அவர் புகழப்படுகிறார். இவர் பலரைப் போல ஏதேதோ கருக்களைக் கொண்ட படங்களை எடுக்காமல் அனேகமாக நம்பிக்கைக்குரிய உறவுக்கும், தூண்டுதலுக்கு இரையாகி பாதை மாறுவதற்கும் இடையே உள்ள இழுபறியைப் பற்றிய பல கதைகளையே தொடர்ந்து படமாக்கி இருக்கிறார்.
நல்ல கலைஞர்களைச் சில அடைப்புகளுக்குள் அடைப்பது கடினம். தொடர்ந்து மாறிக் கொண்டும், மாற்றுவதை உத்தேசித்தும் இயங்குவோர் கலைத்தன்மையால் உந்தப்படுவது அதிகம், கருத்தியலால் உந்தப்படுவது குறைவு. அதற்கேற்ப ரோமர் (அல்லது க்ஹோமேஹ்!!) தன் படங்களை சில கருக்களின் பல கோணங்களையே திரும்பத் திரும்பக் கலைத்துப் போட்டு உருவாக்கியவர் என்று ஒரு புறம் வருணிக்கப்பட்டாலும், அறச்சிக்கல்களைப் பல கால கட்டங்களில் பொதிந்த கதைகள் மூலம் யோசித்துப் பார்த்திருக்கிறார் என்பதை நாம் கருதலாம். இவருடைய ஒரு வாக்கியத்தை இக்கட்டுரை ஒளியூட்டிக் காட்டுகிறது. ’சிற்றளவிலுள்ள அழகு உன்னதமான கலையாகிறது. இதை நாம் ஓவியங்களில் ஏற்கிறோம். சினிமாவில் ஏன் இப்படிக் கூடாது?” என்று 1961 இல் பத்திரிகையில் எழுதி இருக்கிறாராம். இவருடைய சினிமா இந்தக் கருத்தைப் பொதுவாகப் பின்பற்றி அமைந்ததாக நிக் பிங்கர்டன் என்கிற இந்த விமர்சகர் கருதுகிறார்.
ரோமரின் சினிமா பற்றித் தெரிந்தவர்களுக்கும், தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும் இந்தக் கட்டுரை சிறிது நேரமாவது ஆழ்ந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.
http://www.artforum.com/film/id=54724
[/stextbox]