பெண்ணுக்கெதிராகவா சட்டங்கள்?

womenlaw
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 என்ன சொல்கிறதென்றால்..

“Assault or criminal force to woman with intent to outrage her modesty,-Whoever assaults or uses criminal force to any woman, intending to outrage or knowing it to be likely that he will theryby outrage her modesty, shallbe punished with imprisonment of either description for a term which may extent to two years, or with fine, or with both.”

இதில் ‘modesty’ எனும் ஆங்கில பதத்திற்கு உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் விளக்கமளித்திருக்கிறது.
அதாவது, ’’The essence of a woman’s modesty is her sex”
இந்தத் தீர்ப்பு வெளியானதும் பெண்களிடையேயும், பெண்கள் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் கேட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொன்ன விளக்கமானது இன்றைய சூழலை, எல்லா சமூக தளத்திலிருந்தும் வைத்து எழுதப்பட்டதே. இந்த சூழல் மாற மாறத்தான் மேற் சொன்ன விளக்கமும் மாறும். அல்லவா?
இன்றும் பல இடங்களிலும், பெண்ணை முடக்கிப் போட அவளின் பாலினத்தைக் குறிப்பிட்டு அல்லது அதை இழிவு செய்தலே போதுமானதாக இருக்கிறது. தலை எடுக்கும் பெண்ணா…? “அவள் கேரக்டர் சரி இல்லை” என்பதே போல… இப்படியான கருத்துக்களுக்கு பெண்களும் எதிர்வினையாற்றுவதும் இன்னும் நடக்கிறதுதானே?
பெண் மனதில், சட்டம் என்பது ஆண்களால் இயற்றப்பட்டு அவர்களாலேயே கையாளப்படுகிறது என்றும் அது ஒரு போதும் பெண்ணுக்கு துணை வராது எனும் எண்ணமும் இருப்பதாலேயே, உச்ச நீதிமன்றத்தின் இந்த வாசகத்திற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
அதைப் போலவே The Code of Criminal Precudure, 1973 ன் பிரிவு 125
பெண் ஜிவனாம்சம் கோரும் வழக்கில், விவாகரத்தான பெண் மறு மணம் செய்து கொள்ளும் வரையே அவளுக்கு ஜிவனாம்சம் தரப்படும் எனும் நீதிமன்றத் தீர்ப்பும் முதலில் பெண்களால் எதிர்க்கப்பட்டது. இது ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பைப் பறிப்பதாகவே பார்க்கப்பட்டது. உண்மையில் இந்தத் தீர்ப்பு பெண்ணின் மறுமணத்திற்கு எதிரானது அல்ல. ஏனெனில் ஜிவனாம்சம் என்பது பெண் அதுவரை அந்த குடும்பத்திற்கு ஆற்றிய தொண்டிற்கான பென்ஷன் பணம் அல்ல. இனி வரும் காலத்தில் அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவளாக இருக்கும் பட்சத்தில் அவளூக்கு ஆதரவாக தரப்படும் தொகை. வேறு திருமணம் அவள் செய்து கோண்டுவிட்ட பின் அதாவது அவளை ஆதரிக்க வேறு ஒரு கரம் நீண்டபின் இன்னும் முன்னவர் எதற்கு ஆதரவு தர வேண்டும்?
சமீபத்தில், ராமநாதபுரம் வழக்கொன்றில், adultery காரணமாக விவாகரத்து செய்யப்பட்ட பெண் ஒருவர் தன் கணவனிடம் இருந்து ஜிவனாம்சம் கோரி இருந்தார். அந்த வழக்கில் அவருக்கு மாதம் ரூ.1000/- ஜிவனாம்சத் தொகையை கணவன் தர வேண்டும் எனத் தீர்ப்பாகி இருந்தது. வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கணவன் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பென்ச்-ல், வழக்கிட்டிருந்தார். அந்த தீர்ப்பில் ’கணவனுடன் வாழும் மனைவி மட்டுமல்ல, விவாகரத்து பெற்ற ex-wifeம் கூட adultery செய்திருந்தால், அல்லது வேறொரு துணையைப் பெற்றிருந்தால், ஜிவனாம்சம் பெறத்தகுதியானவள் அல்ல” எனச் சொல்லப்பட்டிருந்தது.
இதையும் எதிர்த்து பல பத்திரிகைகளிலும், பெண்கள் அமைப்புகளின் குரலைக் கேட்க முடிந்தது…கொஞ்சம் சத்தமாகவே…
ஒரு பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை, அவளின் தேவையை நிர்ணயம் செய்ய மற்றவர் யார்? அது அவளே முடிவெடுக்க வேண்டியது அல்லவா? என்பதே இந்த தீர்ப்பை எதிர்த்தவர்களின் கேள்வியாக இருந்தது.
ஆமாம். ஒரு பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தை அவளின் தேவையை நிர்ணயம் செய்ய வேண்டியது அவள் மட்டுமே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இங்கே இந்தத் தீர்ப்பின் மூலம் … “உன் பாலியல் தேவையை நீயே தேர்ந்தெடு. ஆனால், அதற்கான விலையை என்னிடம் கோராதே” என அந்தத் துணை சொல்வதாகவே அமைகிறது. இதைப் போலவே ஆணுக்கும்… ஒரு ஆண் அடல்ட்ரி காரணமாக பெண்ணிடமிருந்து விவாகரத்தானவனாயின் அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவனாயின், பெண்ணிடம் அவன் ஜிவனாம்சம் கோர இயலாது அல்லவா?(சட்டத்தில், எவர் அண்டி இருக்கும் நிலையில் இருக்கிறாரோ அவருக்கு ஜிவனாம்சம் வழங்கப்படும். அவ்வளவே. அது ஆணுக்கா? பெண்ணுக்கா? என்பது வழக்கைப் பொறுத்தது.)
திருமணம் என்பது எப்போது பிரிவு எனும் சட்டத்தின் கட்டுக்குள் வருகிறதோ அப்போதே அதன் புனிதத்தன்மை எல்லாம் அதில் இல்லை அது ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஆக, இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தில் இன்று எதிர்பார்க்கப்படும் கூறுகளில் ஒன்றான ஒருவனுக்கு ஒருத்தி எதிர்பார்க்கப்படுவதில் தவறென்ன?
இதில் பெண்ணை இழிவு செய்யும் போக்கு ஏதும் இல்லை அல்லவா?
இதைப் போலவே காலம் காலமாக கமண்டிற்கு உள்ளாகும் இன்னொரு சட்டப்பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்தின் 497.

Adultry.-Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both, In such case the wife shall not be punishable as an abettor.

சட்டத்தில் அனேக இடங்களில் ஒருவன் எனக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் ஒருத்தி என்றும் குறிப்பிடலாம். ஆனால், இந்த சட்டப்பிரிவில் ஒருவன் எனும் இடத்தில் ஒருத்தி எனும் பதம் வராது என்பதற்கு கடைசி வரி கவனிக்கப்படுவது மிகவும் முக்கியம்.
ஒருவன், பெண்ணொருத்தி வேறு ஒருவனின் மனவி எனத் தெரிந்தும், அல்லது அப்படி நம்பக்கூடிய சூழல் இருந்தும் தெரியக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அதைப் புறந்தள்ளிவிட்டு பாலுறவு கொண்டால், அந்த உறவு பலாத்காரம் எனும் மற்றொரு குற்றமாக இல்லாதிருப்பின், அவன் ‘adultery’ எனும் குற்றத்தைச் செய்தவன் ஆவான். அதற்கான தண்டனையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்தக்க் குற்றத்திற்கு உடன் இருந்த பெண், குற்றவாளி ஆகமாட்டாள். மேலும் அவள் அவனை அந்தக் குற்றத்தைச் செய்ய தூண்டியவள் எனவும் ஆகமாட்டாள் என்கிறது.
ஆனால் அடல்ட்ரியில் ஈடுபட்ட பெண்ணை அவளது கணவன் விவாகரத்து வேண்டுமானால் செய்துகொள்ளலாம். அவளின் செயல் குற்றமாகாது.
மேலோட்டமாகப் பார்த்தால், ”பெண் என்ன பொருளா? அவளின் உரிமைக்காரனிடமிருந்து ரகசியமாக அவளை உபயோகிப்பவனுக்குத் தண்டனை? என்றும், அதே குற்றத்திற்குத் துணை போன அவளுக்குத் தண்டனை இல்லை என்பதால், அவளாக தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும்அளவுக்குக்கூட அவளுக்கு திறன் இல்லையா?” என்றும் கேள்விகள் எழத்தான் செய்கிறது.
ஆமாம். உண்மை அதுதான். அதுவும்தான். பெண் தன் துணை அன்றி தானாக வேறொருவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனோடு (அவன் திருமணமானவனோ, ஆகாதவனோ) கள்ள உறவு தொடர்வதென்பது ஆணைப் போல சுலபம் அல்ல. வெளித் தொடர்பால் ஆணுக்கு ஏற்படுவதைப் போல பன்மடங்கு துன்பத்தை அவள் சந்திக்க வேண்டி வரும். அதனாலேயே அத்தனை ரிஸ்க் எடுக்கவும் மாட்டாள். அதாவது இதில் பெண்ணின் திறன் முக்கியம் இல்லை. அவளுக்கு எதிர்ப்பு அதிகம் எனும் சூழலே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
அதை போலவே பெண் அப்படியே வேறொருவனைத் தேர்ந்தெடுத்தாலும், பெண்ணே தன் பிள்ளைக்கான தகப்பனைத் தேர்ந்தெடுப்பது என்பதே வலிய சமூகத்தை உருவாக்கும் என்பதே இயற்கை இட்ட கட்டளை. இதன் காரணமாகவும்தான் சட்டம் பிரிவு 497ஐ வடிவமைத்திருக்கிறது.வீரிய விதையை முடிவெடுக்கும் பெண்ணின் இயற்கைத் தூண்டலை சட்டம் ஆதரிக்கிறது எனவும் கொள்ளலாம்தானே?
சட்டம் சூழலுக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருக்கிறது. காலம் மாற மாற சட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டே வருகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சட்டம் ஒன்றாக இல்லை. ஏனெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூக சூழல் ஒன்றாக இல்லை. அல்லவா?
கொலை, மரணம் விளைவிக்கும் செயல் என இந்திய தண்டனைச் சட்டம் இரண்டு பிரிவுகளில் (பிரிவுகள்300,299)குறிப்பிடுகிறது. ஒருவன் மீது வந்த ஆத்திரம், தாங்க முடியாத வெறுப்பு என்பது கொலை வெறியாக மாறி, திட்டமிட்டு அவனை மரணிக்கச் செய்தால் அது கொலை. அதே சமயம் ஒருவனின் உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆளாகி, ஆனால் அதே சமயம் கொலை செய்யும் நோக்கம் எதுவுமே இல்லாமல் ஒரு அவசர நொடியில் மரணம் விளைவிக்கும் செயலை ஒருவன் செய்துவிட்டால் அது மரணத்தில் முடிந்தால் culpable homicide. இதற்கு கொலையைவிட குறைவான தண்டனையே.
ஆனால், ஒரு வழக்கில் பெண் ஒருத்தி கணவனால், கொடுமைப்படுத்தப்பட்டு அவன் மீதான அவளது வெறுப்பு தொடர்ந்து தூண்டப்பட்டு அது வெறியாக மாறி, திட்டமிட்டு அவனைக் கொலை செய்துவிடுகிறாள். சட்டப்படி அது அவசர வெறியில் செய்த கொலை அல்ல. திட்டமிட்டு நபாம் எனும் கெமிகலை கணவன் மீது ஊற்றி எரித்துச் செய்த கொலை அது. ஆனாலும், சட்டம் அதை மரணம் விளைவிக்கும் செயல் என்றே(பிரிட்டிஷ்) தீர்ப்பு கூறியது.
அதாவது வெறி ஏறியதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒருவர் எடுக்கும் கால அவகாசத்திற்கும், மரண சம்பவத்திற்கும் இடைப்பட்ட கால அவகாசமே அது கொலையா? மரணம் விளைவிக்கும் செயலா? என முடிவெடுக்க அளவிடப்படுகிறது.
ஏனெனில் பெண் தன் வெறுப்பை சட்டென ஒரு ஆணைப் போல வெளிக்காட்டும் சூழல் இல்லை. அவனை அண்டி இருக்கும் தான்,. தன் பிள்ளைகள், அவன் இறந்த பிறகு அவள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் சமூகம் இவை எல்லாவற்றையுமே கணித்தே பார்க்க வேண்டி இருக்கிறபடியால், சட்டென உணர்வுத் தூண்டலுக்கு ஆளவதில்லை. அப்படியே வெறி ஏற்பட்டாலும் அதை வெளிப்படுத்தாமல், உள்ளேயே புழுங்கும் நிலைதான் இன்றும். ஆத்திரம் அல்லது வெறியிலிருந்து அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பே இல்லாமல், தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தமையால் அது கொலை அல்ல, ‘manslaughter’ என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆக, சட்டம் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறாகத்தான் இருக்கிறது. காரணம், சமூக சூழல் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறாகத்தானே இருக்கிறது? சட்டத்திற்கு பெண்ணை இழிவு செய்யும் நோக்கம் இல்லை. நீதிமன்ற வாசகங்கள் எல்லாவற்றிற்கும் பொங்கத் தேவை இல்லை…சூழலை நாமும் அறிந்தால். அல்லவா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.