புடபெஸ்டை அடைதல்

ஆசிரியரைப் பற்றிய குறிப்பு:

ஜூலை 11, 2011 அன்று இந்தக் கதைக்கு ஆப்பிரிக்க எழுத்திற்கான கெய்ன் பரிசு (Caine Prize)வழங்கப் பட்டது. “ஆப்பிரிக்காவின் புக்கர்” என்று அழைக்கப் படும் கெய்ன் பரிசானது ஆண்டுக்கொரு முறை ஆப்பிரிக்க எழுத்தாளர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைக்காக வழங்கப்படுகிறது.
நோவயலெட் புலவாயோ (1981 – ) ஜிம்பாப்வேயைச் சேர்ந்த எழுத்தாளர். அமெரிக்காவின் கொர்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைஞர் பட்டம் பெற்று தற்போது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்டெக்னர் ஃபெலோவாக (Stegner Fellow) இருக்கின்றார். அவரது முதல் நாவலான “எங்களுக்கு புதுப் பெயர்கள் தேவை” (We Need New Names) 2013 மேன் புக்கர் பரிசிற்கான சிறுபட்டியலில் இடம் பெற்றுள்ளது. புக்கர் சிறுபட்டியலிற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது. இங்கு புடபெஸ்டை அடைதல் (Hitting Budapest) என்று மொழியாக்கம் செய்யப்பட்ட கதை சில மாற்றங்களுடன் நாவலின் முதல் அத்தியாயமாகவும் வந்துள்ளது

oOo

நாங்கள் புடபெஸ்டிற்குப் போய்க் கொண்டிருந்தோம்:வேசிமகனும், சீபோவும், சாமிக்குத்தெரியுமும், ஸ்போவும், ஸ்டீனாவும், நானும். நாங்கள் போகிறோம், மிஸிலிகாஸி சாலையைக் கடக்க எங்களுக்கு அனுமதியில்லை என்றாலும் கூட, வேசிமகன் அவனுடைய தங்கை பின்னத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றாலும் கூட, நாங்கள் போவதை அவள் அறிந்தால் அம்மா என்னைக் கொன்றே விடுவாள் என்றாலும் கூட. புடபெஸ்டில் திருட கொய்யாக்கள் இருந்தன. இப்போது கொய்யாக்களுக்காக , சொல்லப் போனால் எதற்காகவும் உயிரைத் தர நான் தயார். யாரோ மண்வெட்டியால் வயிற்றிலிருந்து எல்லாவற்றையும் தோண்டி வெளியே போட்டது போலிருந்தது.
அம்மாக்கள் மும்முரமாக கூந்தலை வாரிக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் சொர்க்கத்தைவிட்டு வெளியில் செல்வதற்கு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் முன்னே வரிசையாக போகும் போது மட்டும் எங்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். ஆண்கள் எப்போதும் போல் ஜாகரண்டா மரங்களுக்கு கீழே வட்டாட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததால் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை. சின்னப் பிள்ளைகள் மட்டும் எங்களைப் பார்த்துவிட்டு பின்னாடியே வர ஆசைப்படுவார்கள். ஆனால் வேசிமகன் முன்னாடி அம்மணமாய் இருந்த ஒரு குழந்தையின் பெரிய மண்டையைக் கையால் ஒங்கி விளாசியதைப் பார்த்து மற்ற குழந்தைகள் எல்லாம் திரும்பிப் போக ஆரம்பித்தார்கள்.
நாங்கள் ஓடிக்கொண்டே புதரை அடைந்தோம், முதலாவதாக வேசிமகன் , அவன் இன்று நாட்டுப்புற ஆட்டத்தில் ஜெயித்து விட்டு தன்னை தலைவன் என்று எண்ணிக் கொண்டிருந்ததால். அதற்கடுத்து நான், சாமிக்குத்தெரியும் மற்றும் ஸ்டீனா. கடைசியாக சீபோ. முன்பெல்லாம் சொர்க்கத்தில் இருந்த அனைவரையும் ஓட்டத்தில் அவள் மிஞ்சி விடுவாள். தாத்தா அவளை கர்ப்பமாக்கியதால் இப்போது அவளால் அதுபோல் ஓட முடியவில்லை. மிஸிலிகாஸியைக் கடந்ததும் வேறு ஒரு புதருக்குள் நுழைந்து, நம்பிக்கை சாலையில் பாய்ந்து, நாங்கள் ஒரு போதும் உட்காரவே முடியாத மினுமினுக்கும் விசிப்பலகைகள் கொண்ட பெரிய அரங்கத்தைக் கடந்தோம். இறுதியில் புடபெஸ்டை அடைந்தோம். சீபோ இளைப்பாறுவதற்காக ஒரு முறை நிற்க வேண்டி இருந்தது.
“நீ எப்போது குழந்தை பெற்று கொள்ளப் போகிறாய்?” வேசிமகன் கேட்டான். அவளுக்காக நாங்கள் நிற்க வேண்டியிருந்தது வேசிமகனுக்கு பிடிக்கவில்லை. அவளுடன் நாங்கள் சேர்ந்து விளையாடுவதைத் தடுக்க முயற்சித்தான்.
“எப்போதாவது ஒரு நாளில் பெற்றுக் கொள்வேன்”
“எப்போதாவது ஒரு நாள் என்றால் ? நாளையா ? வியாழனா? அடுத்த வாரமா ?”
“அவள் வயிறு இன்னமும் சின்னதாக இருப்பதை உன்னால் பார்க்க முடியவில்லையா?”
“குழந்தை வெளியே வளர்கிறது. அதனால் தான் அவை பிறக்கின்றன. வளருவதற்காக”
“ அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அதனால் தான் அது இன்னும் வயிறாகவே இருக்கிறது”
“பையனா பொண்ணா”
“பையன் தான். முதல் குழந்தை பையனாகத் தான் இருக்கக்கூடும் “
“ஆனால் நீ ஒரு பெண். முதல் குழந்தையும் கூட”
“நான் இருக்கக்கூடும் என்றேன்.”
“ நீ வாயை மூடு, அது உன்னுடைய வயிறு கூட இல்லை.”
“ அது பெண் தான் என்று நினைக்கிறேன். அது உதைப்பதை என்னால் உணர முடியவில்லை.”
“பையன்கள் உதைத்துக் கொண்டும், குத்திக் கொண்டும், தலைகளால் முட்டிக் கொண்டும் இருப்பார்கள்”
“உனக்கு பையனா வேண்டும்?”
“இல்லை. ஆமாம். ஆமாம் போல. எனக்கு தெரியவில்லை”
“குழந்தை எங்கிருந்து வெளியே வருகிறது?”
“வயிற்றுக்குள் எப்படி நுழைந்ததோ அதே வழியாகத் தான்”
“முதலில், கடவுள் அதை அங்கே வைக்க வேண்டும்.”
“இல்லை. கடவுளால் இல்லை. அதை அங்கு ஒரு ஆணால் தான் வைக்க முடியும், என் அத்தைமகள் மூசா என்னிடம் கூறினாள். சீபோ, உன் தாத்தா தானே அதை அங்கு உள்ளே போட்டது?”
அவள் தலையாட்டினாள்.
“ஒரு ஆள் அதை அங்கே வைத்தான் என்றால் , அவன் ஏன் அதை வெளியே எடுப்பதில்லை ?”
“ஏனென்றால் , பெண்களால் தான் பிரசவிக்க முடியும், மரமண்டை. அதனால் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அவர்களுக்கு முலைகள் இருக்கின்றன”
“என் மார்புகள் வளர்வதை நான் விரும்பவில்லை. எனக்கு குழந்தை வேண்டாம். எதுவுமே வேண்டாம், கொய்யாக்களைத் தவிர. “ சீபோ கூறிவிட்டு ஓடத் தொடங்கினாள். அவள் பின்னால் நாங்கள் ஓடினோம். சரியாக புடபெஸ்டின் மையத்தை அடைந்த உடன் நின்று விட்டோம். புடபெஸ்ட் வேறொரு நாடு போல் இருந்தது. எங்களைப் போல் அல்லாதவர்கள் வாழும் நாடு..
ஆனால் சாதாரணமான நாடு அல்ல – அதைப் பார்க்கையில், ஏதொ எல்லோரும் ஒரு நாள் தூங்கி எழுந்து, கதவுகளயும் ஜன்னல்களையும் மூடிவிட்டு, பாஸ்போர்ட்களை எடுத்துக் கொண்டு இதை விட மேலான நாடுகளுக்குச் சென்று விட்டார்கள் போலிருந்தது. காற்றுவெளி கூட காலியாக இருந்தது, எரிக்கப்படும் பொருட்களோ, உணவு சமைக்கப்படும் அல்லது அழுகிக் கொண்டிருக்கும் வாடையோ, எதுவுமே இல்லாமல், வெறும் காற்று மட்டும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் இருந்தது.
புடபெஸ்ட் பெரியது, சரளைக்கல்லிடப்பட்ட முற்றங்களும் உயரமான வேலிகளும், வலுவூட்டிய காரைச் சுவர்களும், பூக்களும், பழங்களால் கனத்திருக்கும் பச்சை மரங்களுமுடைய பெரிய வீடுகள் … பழங்களின் பயனை இங்கு யாருமே அறிந்திடாததால் அவை எங்களுக்காகவே காத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. பழம் தான் எங்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது. இல்லையெனில் நாங்கள் அங்கிருக்கத் துணிந்திருக்க மாட்டோம். சாலைகள் பிளந்து எங்களை மீண்டும் குடிசைகளுக்குத் திரும்பிப் போகச் சொல்லுவதை நான் எதிர்பார்த்திருந்தேன்.
நாங்கள் சீபோவின் மாமாவினுடைய மரத்திலிருந்து திருடுவோம். ஆனால் அதை எல்லாம் “திருட்டு” என்று சொல்ல முடியாது. அவருடைய மரத்திலிருந்த கொய்யாக்கள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து விட்டதால் இப்போது அன்னியர் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தோம். நாங்கள் திருடிய வீடுகளின் எண்ணிக்கையை என்னால் கணக்கிடக் கூட முடியாது. நாங்கள் எந்தத் தெருவைத் தேர்வு செய்து, அதிலுள்ள எல்லா வீடுகளைத் திருடும் வரையில் அங்கேயே இருக்க வேண்டும் என்பதை எல்லாம் சாமிக்குத்தெரியும் தான் முடிவு செய்வான். திருடிய வீடுகளை திருடப் போகும் வீடுகளுடன் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவே அவ்வாறு செய்தோம். ஒரு படிவம் போல, இது எங்களை திறமையான திருடர்களாக்கும் என்று சாமிக்குத்தெரியும் கூறினான்.
இன்று புதுத் தெருவை தொடங்கியதால் சுற்றி கவனமாக நோட்டம் விட்டோம். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன் ஒவ்வொரு கொய்யா மரத்தையும் நாங்கள் அறுவடை செய்த எஸ்ஏடிசி சாலையைக் கடந்தோம். திரைச்சீலைகள் விலகி இறக்கைகளுடைய ஒன்றுக்கடிக்கும் பையனின் சிலை இருந்த இளமஞ்சள் வீட்டின் ஜன்னலின் வெள்ளைத் திரைச்சீலைகள் விலகி ஒரு முகம் பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம். அந்த முகம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் நின்று முறைத்துக் கொண்டிருக்கையில் ஜன்னல் திறந்து ஒரு சிறிய குரல் எங்களை நிற்கச் சொல்லி கத்தியது. நாங்கள் நின்று கொண்டிருந்தோம், அவள் சொன்னாள் என்பதற்காக அல்ல. நாங்கள் யாருமே ஒடத் தொடங்காததால், அந்தக் குரல் பயப்படும்படி இல்லாததால். இசை ஜன்னலில் இருந்து தெருவில் கொட்டிக் கொண்டிருந்தது, அது க்வைடோ அல்ல, ஆடல் அரங்கிசை அல்ல, எங்களுக்குத் தெரிந்த எதைப் போலவும் அது இல்லை.
உயரமான, ஒல்லிப் பெண் ஒருத்தி கதவைத் திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். எதையோ சாப்பிட்டுக் கொண்டு எங்களை நோக்கி நடக்கையில் கையசைத்தாள். அவளது ஒல்லித்தனத்தைப் பார்த்து, ஓடுவதற்கு அவசியமில்லை என்ற முடிவிற்கு நாங்கள் ஏற்கனவே வந்து விட்டோம். அவளுக்காகக் காத்திருந்ததால் அவள் எதற்காக அல்லது எதைப் பார்த்துச் சிரிக்கிறாள் என்பதை எங்களால் பார்க்க முடிந்தது. உண்மையில் சொர்க்கத்தில் எங்களைப் பார்த்து இது வரையில் யாருமே சிரித்ததில்லை எதையும் பார்த்துச் சிரிக்கும் “எலும்பம்மாவைத்” தவிர. அந்தப் பெண் வாயில் கதவை அடைந்ததும் நின்று விட்டாள், கதவு பூட்டியிருந்தது. மேலும் அதை திறப்பதற்கான சாவியை அவள் கொண்டு வரவில்லை.
“அம்மாடி, இந்த சூட்டையும் கடினமான நிலத்தையும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது, நீங்கள் எப்படித் தான் சகித்துக் கொள்கிறீர்களோ?” அச்சுறுத்தாத குரலில் அவள் கேட்டாள். கையில் இருந்ததை ஒரு கடி கடித்து விட்டுச் சிரித்தாள். அவளது கழுத்தில் ஒரு அருமையான இளஞ்சிவப்பு நிற புகைப்படக் கருவி தொங்கிக் கொண்டிருந்தது. அவளது நீளமான பாவாடைக்கு அடியிலிருந்து எட்டிப் பார்த்த அவள் பாதங்களையே நாங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவை சுத்தமாகவும் அழகாகவும் இருந்தன, ஒரு குழந்தையின் பாதங்களைப் போல. அவள் கால் விரல்களை ஆட்டிக் கொண்டிருந்தாள். என் பாதங்கள் ஒரு நாள் கூட அப்படி இருந்து எனக்கு நினைவில்லை. ஒருகால், நான் பிறக்கையில் அவ்வாறு இருந்திருக்கக் கூடும்.
அதன் பிறகு சவைத்துக் கொண்டிருக்கும் அவளது சிவப்பான வாயை ஏறிட்டுப் பார்த்தேன். அவளது கழுத்துப் பக்கத்திலிருந்த நாளத்திலிருந்தும், அவள் தனது பெரிய உதடுகளை சப்புக் கொட்டிக் கொண்டிருந்த விதத்திலிருந்தும் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ருசியாக இருக்க வேண்டும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவளது நீண்ட கையையும் ,அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததையும் உற்று நோக்கினேன். அது தட்டையாக புறத்தே பொருக்குடன் இருந்தது. அதன் மேற்பகுதி குழைவாகவும் மென்மையாகவும் இருந்தது. அதில் நாணயங்களைப் போல ஏதோ இருந்தன, ஆழ்ந்த இளஞ்சிவப்பில், தீப்புண்களின் நிறத்தில். சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் துகள்களையும் கடைசியாக பருக்களைப் போன்ற பழுப்பு நிற புடைப்புகளையும் என்னால் பார்க்க முடிந்தது.
“அது என்ன?” சீபோ கேட்டாள், ஒரு கையால் அதை சுட்டிக் காட்டி மற்றொரு கையால் தன் வயிற்றைத் தடவிக் கொண்டே. கர்ப்பிணியாக இருப்பதால், பேசும் போதெல்லாம் தன் வயிற்றை விளையாட்டாகத் தடவிக் கொள்வதற்கு சீபோ பிரியப் பட்டாள். வயிறு மிகப் பெரிதாக இல்லாமல், ஒரு கால் பந்தின் அளவே இருந்தது.
“ஓ இதுவா? இது ஒரு காமிரா” என்று எங்களுக்குத் தெரிந்ததையே அந்தப் பெண் கூறினாள். கையை பாவாடையில் துடைத்து விட்டு காமிராவைத் தட்டிக் கொடுத்தாள். பின்னர் கையில் மீதமிருந்ததை கதவருகே இருந்த தொட்டியைக் குறி பார்த்து எறிந்தாள். குறி தப்பியதைக் கண்டு சிரித்தாள். ஆனால் எனக்கு அதில் சிரிப்பதற்கு ஒன்றும் இருப்பதாகப் படவில்லை. அவள் சிரித்துக் கொண்டிருந்ததால் நாங்களும் சிரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல் அந்தப் பெண் எங்களைப் பார்த்தாள். ஆனால் , நாங்கள் தரையில் விழவிருக்கும் செத்த பறவையைப் போல பறந்து கொண்டிருக்கும் அந்தப் பொருளைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்தோம். உணவைத் தூக்கி எறிந்த எவரையும் நாங்கள் கண்டதே இல்லை. நான் ஓரக் கண்ணால் சீபோவைப் பார்த்தேன்.
“உன் வயதென்ன?” அந்தப் பெண் சீபோவிடம் கேட்டாள், ஏதோ அதுவரை பிள்ளைத்தாச்சிகளையே பார்க்காதது போல், சீபோவின் வயிற்றை பார்ததுக் கொண்டே. ஆனால் அவளுக்கு காது கொடுக்காமல் தரையில் கிடந்த அந்தப் பொருளையே சீபோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அவளுக்குப் பத்து வயதாகிறது” சீபோவிற்காக சாமிக்குத்தெரியும் பதிலளித்தான். “எங்களுக்கு ஒன்பது வயசு, எனக்கும் அவளுக்கும், இரட்டையர்களைப் போல” சாமிக்குத்தெரியும் கூறினான் , என்னையும் அவனையும் குறித்து. “ வேசிமகனுக்கு பதினொன்று, ஸ்போவிற்கு எட்டு, ஸ்டீனாவின் வயது எங்களுக்குத் தெரியாது”
“அடேயப்பா” பெண் கூறினாள், அவளது காமிராவுடன் விளையாடிக் கொண்டே.
“உனக்கு எவ்வளவு வயதாகிறது” சாமிக்குத்தெரியும் அவளைக் கேட்டான். “ நீ எங்கிருந்து வருகிறாய்”. சாமிக்குத்தெரியும் அளவுக்கு மீறிப் பேசுவதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
“எனக்கா? எனக்கு 33 வயது ஆகிறது. நான் லண்டனிலிருந்து வருகிறேன். என் அப்பாவின் நாட்டை முதல் தடவையாக பார்க்க வந்தேன்”
“நான் ஒரு முறை லண்டனிலிருந்து வந்த இனிப்புகளை சாப்பிட்டிருக்கிறேன். பணிவு மாமா அங்கு முதல் முறையாகச் சென்ற போது அனுப்பினார். இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது அவர் கடிதம் கூட எழுதுவதில்லை”, சாமிக்குத்தெரியும் கூறினான். பெண்ணின் கோணவாய் சவைப்பதை நிறுத்தியது. அவளுடன் சேர்ந்து நானும் விழுங்கினேன்.
“நீ பதினைந்து வயது சிறுமியைப் போல் இருக்கிறாய்” சாமிக்குத்தெரியும் கூறினான். சாமிக்குத்தெரியுமின் நீளமான வாயை அவள் அறைந்து விடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவளோ ஏதோ பெருமைப் பட வேண்டிய விஷயத்தைக் கேட்டு விட்டது போல் சிரித்தாள்.
“ நன்றி,” என்றாள். நன்றி சொல்ல என்ன இருக்கிறது என்பதைப் போல் நான் அவளை நோக்கினேன். பிறகு மற்றவர்களையும். அவர்களும் இந்தப் பெண்ணை வினோதமானவளாக நிணைத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். சடைபிடித்து அழுக்காக தோன்றிய தலைமுடிக்குள் கையை விட்டுக் கோதிக் கொண்டாள். நான் மட்டும் புடபெஸ்டில் வாழ்ந்தேன் என்றால் தினமும் குளித்து, தலையை அழகாக சீவி என்னை ஒரு உண்மையான இடத்தில் வாழும் ஒரு உண்மையான நபராகக் காட்டிக் கொள்வேன்.
“உங்களுக்கு ஆட்சேபணை  இல்லை என்றால் நான் ஒரு படம் பிடித்துக் கொள்ளலாமா?”
பெரியவர்கள் எங்களைக் கேட்கும் பழக்கமே இல்லாததால் நாங்கள் பதிலளிக்கவில்லை. அவள் பின்னே சில அடி எடுத்து வைத்ததையும், அவளது முரட்டுத்தனமான தலைமுடியையும், நடக்கும் போது அவளது பாவாடை தரையைக் கூட்டிய விதமும், அவளுடைய பெரிய நகைகளையும், அகலமான கண்களையும், அவள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஒரு வடு கூட இல்லாத வழவழப்பான தவிட்டு நிற சருமத்தையும், மூக்கிலிருந்த காதணியையும், “டார்ஃபூரைக் காப்பாற்றுங்கள்” என்று கோறும் டி-ஷர்ட்டை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம்.
“சீஸ் சொல்லுங்க, சீஸ் சொல்லுங்க, சீஸ், சீஈஈஈஈஈஈஸ்” அந்தப் பெண் ஆர்வப்படுத்த என்னைத் தவிர மற்ற எல்லோரும் “சீஸ்” என்று கூறினார்கள். நான் மும்முரமாக “சீஸ்” என்றால் என்ன என்பதை நினைவு கூர முயற்சி செய்து தோல்வியுற்றேன். நேற்று எலும்பம்மா டுடு என்ற பறவையைப் பற்றி ஒரு கதை சொன்னாள் : வார்த்தைகளின் அர்த்தத்தையே தெரிந்து கொள்ளாமல் ஒரு புதுப் பாட்டைக் கற்றுக் கொண்டு பாடிய டுடு பிடித்து, கொல்லப்பட்டு ,இரவு உணவிற்காக சமைக்கப் பட்டது. ஏனென்றால் அந்த பாடலில் மக்களிடம் தன்னைக் கொன்று, சமைக்கும் படி அது யாசித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் என்னைச் சுட்டிக் காட்டி , தலையசைத்து, என்னைச் “சீஈஈஈஈஈஸ்” சொல்லும் படி கேட்டுக் கொண்டாள். நானும் அவ்வாறே கூறினேன், அவள் என்னைப் பார்த்து நன்றாகத் தெரிந்தவளைப் போல் சிரித்ததாள். முதலில் மெதுவாகக் கூறிவிட்டு “சீஸ்” “சீஸ்” என்று தொடர்ந்தேன். நான் “சீஸ் சீஈஈஈஈஈஸ்” என்று சொல்ல எல்லோரும் “சீஸ், சீஸ் சீஸ்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் நாங்கள் அனைவரும் அந்த வார்த்தையை பாடிக் கொண்டிருந்தோம். காமிரா “க்ளிக், க்ளிக்” என்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு எப்போதுமே பேசாத ஸ்டீனா எங்களை விட்டு நடக்க ஆரம்பித்தாள். அந்தப் பெண் படமெடுப்பதை நிறுத்தி விட்டு, “உனக்கு ஒன்றும் இல்லையே?” என்று கேட்டாள். ஆனால் ஸ்டீனா நிற்கவில்லை. சீபோ வயிற்றை தடவிக் கொண்டே ஸ்டீனாவைத் தொடர்ந்து சென்றாள். அதன் பிறகு அவர்கள் பின்னே நாங்களும் நடக்க ஆரம்பித்தோம்.
படம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டோம். வேசிமகன் எஸ்ஏடிசிமுனையில் நின்று, அவளை ஏச ஆரம்பித்தான். எங்களுக்கு வேண்டுமா என்று கேட்காமலேயே அவள் தூக்கி எறிந்த பொருள் என் நினைவிற்கு வந்து நானும் கத்த ஆரம்பித்தேன். மற்றவர்களும் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் கத்து கத்து கத்தென்று கத்தினோம். அவள் சாப்பிட்ட அந்த பொருளை நாங்களும் சாப்பிட வேண்டும், புடபெஸ்டில் சத்தம் போட விரும்பினோம், எங்கள் பசி தீர்ந்து போக வேண்டும். அந்த பெண் ஒன்றும் புரியாததைப் போல் எங்களைப் பார்த்து விட்டு வீட்டிற்குள் திரும்பி செல்ல விரைந்தாள். நாங்கள் அவள் பின்னால் இன்னமும் கத்திக் கொண்டிருந்தோம். எங்கள் தொண்டைகள் நமைச்சல் உண்டாகி கரகரத்தன. அவள் கதவை மூடிக் கொண்டு மறைந்த போது நாங்கள் கத்துவதை நிறுத்தி விட்டு கொய்யாக்களைத் தேடி நடக்க ஆரம்பித்தோம்.
நாங்கள் பெரியவர்களான பிறகு கொய்யாக்கள் திருடுவதை விட்டுவிட்டு வீடுகளுக்குள்ளே பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருப்போம் என்று வேசிமகன் கூறினான். அந்த நேரம் வரும் போது நான் இங்கிருக்க மாட்டேன். அத்தை ஃபோஸ்டாலினாவுடன் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சிறப்பான பணிகளை செய்து கொண்டிருப்பேன். ஆனால் இப்போதைக்கு , கொய்யாகள் தான். ஐஎம்ஃப் தெருவில் மலை போல் பார்வையை ஆக்கிரமிக்கும் வெள்ளை நிற வீட்டை தேர்வு செய்தோம். அதன் முன்னடியில் சுற்றிலும் காலியான நாற்காலிகளால் நிரம்பிய ஒரு பெரிய நீச்சல் குளம் இருந்தது.
இந்த அழகான வீட்டில் ஒரு வசதி இருந்தது: முற்றத்திலிருந்து மலை வெகு தொலைவிலும், நாங்கள் வருவதை முன்கூட்டியே கேள்விப் பட்டு எங்களை எதிர்னோக்க வெளியே ஓடி வந்ததைப் போல் கைக்கெட்டும் தொலைவில் கொய்யா மரங்கள் இருந்தன. வலுவூட்டிய காரைச் சுவர்கள் மீதேறி மரங்களை அடைந்து எங்கள் பிளாஸ்ட்டிக் பைகளை பெறிய கொய்யாக்களால் நிரப்ப அதிக நேரம் ஆகாது. இவை பெரிதாக ஒரு ஆளின் கைப்பிடி அளவில் இருந்தன. சாதாரணக் கொய்யாக்களைப் போல் மஞ்சள் நிறத்துக்குப் பழுக்காமல் வெளியே பச்சையாகவும் உள்ளே இள்ஞ்சிவப்பாக மெல்லிழைகளுடன் இருந்தது. அவைகளின் அருஞ்சுவையை விளக்க என்னால் ஒரு போதும் முடியாது.

oOo

சொர்க்கத்திற்கு திரும்பிச் செல்கையில் நாங்கள் ஓடவில்லை. புடபெஸ்ட் எங்கள் சொந்த நாட்டைப் போல , சாலையில் கொய்யாக்களைத் தின்று கொண்டு, தோலிகளை வழி நெடுகத் துப்பி அசுத்தப்படுத்திக் கொண்டும், ஒயிலாக நடந்து கொண்டிருந்தோம். சீபோ வாந்தி எடுப்பதற்காக ஏயூ சாலை முனையில் நின்றோம். இன்று அவள் வாந்தி மூத்திரத்தைப் போல் இருந்தது, ஆனால் அதை விட கெட்டியாக. அதை மூடாமல் அங்கேயே விட்டு விட்டோம்.
“என்றாவது ஒரு நாள் இங்கு வாழ்வேன், இதே போல் ஒரு பெரிய வீட்டில்.” ஸ்போ கூறினாள், பருமனான கொய்யாவைக் கடித்துக் கொண்டே. இடது பக்கம் திரும்பி , பூக்களால் சூழப்பட்டு, நீளமான படிவரிசையுடைய பெரிய நீல நிற வீட்டைச் சுட்டிக் காட்டினாள். அவள் இதைப் பற்றி நன்கு அறிந்திருந்ததைப் போல அவள் குரல் ஒலித்தது.
“நீ அதை எப்படி அடையப் போகிறாய்?” என்று நான் கேட்டேன்.
ஸ்போ சாலையில் தோலியைத் துப்பிவிட்டு, அகலமான கண்களூடன் கூறினாள் “எனக்குத் தெரியும்”
“அவளது கணவுகளில் தான் அவள் அதை அடையப் போகிறாள்” வேசிமகன் சூரியனைப் பார்த்து கூறிவிட்டு, ஸ்போ வீட்டு வலுவூட்டிய காரைச் சுவர் மீது ஒரு கொய்யாவை எறிந்தான். கொய்யா வெடித்துச் சிதறி சுவரை கரைபடுத்தியது ,இளஞ்சிவப்பாக. இனிப்பான கொய்யா ஒன்றைக் கடித்தேன். சொரசொரப்பாக இருந்தது. அறைப்பதற்கு அதிக நேரமாகும் காளைக் கொய்யாக்களின் விதைகளை கடித்தறைப்பதற்கு எனக்குப் பிடிக்காது. ஆகவே அவைகளை லேசாக மென்று கொண்டும், சில வேளைகளில் , என்ன ஆகும் என்று தெரியாதென்றாலும் முழுதாக முழுங்கியும் விடுவேன்.
“ஏன் அப்படிச் செய்தாய்?” இப்பொது அழுக்காகிய அவள் வீட்டின் வலுவூட்டிய காரைச் சுவரைப் பார்த்து விட்டு வேசிமகனிடம் கேட்டாள். வேசிமகன் இளித்துவிட்டு இன்னும் ஒரு கொய்யாவைத் தூக்கி எறிந்தான். அது குறிதப்பி சுவரில் படாமல் வாயில் கதவின் மீது விழுந்தது. நிஜக் கதவைப் போல் அந்தக் கதவு ஒலி எழுப்பவில்லை.”
“ஏனென்றால் என்னால் முடியும். ஏனென்றால் நான் விரும்பியதைச் செய்ய என்னால் முடியும். மேலும் இதனால் என்ன ஆகப் போகிறது?”
“ஏனென்றால் இப்போது தான் அந்த வீடு எனக்குப் பிடிக்கும் என்று நான் கூறியதை நீ கேட்டாய். அதனால் நீ அதை ஒன்றும் செய்திருக்கக் கூடாது. எனக்கு அக்கறையில்லாத வேறொரு வீட்டை நீ தேர்ந்தெடுக்க வேண்டியது தானே?
“சரி தான், நீ விரும்புவதால் அது உன்னுடைய வீடாக ஆகிவிடுமா என்ன ?”, அவன் எப்போதுமே கழட்டாத கருப்பு நிற ட்ராக்சூட்டின் கீழ் அங்கியையும் “கோர்னெல்” என்று அறிவிக்கும் மங்கிய ஆரஞ்சு நிற டி-ஷர்ட்டையும் வேசிமகன் அணிந்திருந்தான். “கோர்னெல்” டி-ஷர்ட்டை கழட்டி தலை மேல் கட்டிக் கொண்டான். அது அவனை அழகாக்கியதா இல்லை அசிங்கப் படுத்தியதா, அது அவன் ஆண்மையை வலியுருத்தியதா இல்லை பெண்ணாகக் காட்டியதா, இது எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவன் திரும்பிக் கொண்டு ஸ்போவைப் பார்த்துக் கொண்டே நடப்பதற்காக பின்னாடி நடக்க ஆரம்பித்தான். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நபர் தன்னை நேரில் பார்ப்பதையே அவன் விரும்பினான். எங்கள் எல்லோரையுமே அவன் அடித்திருக்கிறான், ஸ்டீனாவைத் தவிற.
“மேலும் புடபெஸ்ட் கழிவறை இல்லையே யார் வேண்டுமானாலும் உள்ளே வருவதற்கு. நீ இங்கு ஒரு போதும் வாழ முடியாது.”.
“புடபெஸ்டிலிருக்கும் ஒருவனை நான் மணந்து கொள்ளப் போகிறேன். அவன் சொர்க்கத்தைவிட்டு வேறு இடத்திற்கு என்னைக் கூட்டிச் செல்வான் : குடிசைகளை விட்டு, ‘சொர்க்கவழி’ மற்றும் ஃபம்பேக்கியை விட்டு, எல்லாவற்றையும் விட்டு….” ஸ்போ கூறினாள்
“ஹா ஹா ! உன் போன்ற ஓட்டை பல்லழகியை எவன் கல்யாணம் செய்து கொள்வான். ஏன், நான் கூட உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்,” சாமிக்குத்தெரியும் தன் தோள்பக்கம் திரும்பிக் கத்தினான். அவன், சீபோ மற்றும் ஸ்டீனா எங்கள் முன்னே நடந்தார்கள். நான் சாமிக்குத்தெரியுமின் அரைக் கால்சட்டை பின்னால் கிழிந்திருந்ததையும், கிழிந்திருந்த அழுக்கு வெள்ளைத் துணியின் ஊடே அவனது கன்னங்ங்கரியப் பிட்டங்கள் வினோதமான கண்களைப் போல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஏ யான-மண்டை, நான் உன்னிடம் பேசவில்லை” ஸ்போ சாமிக்குத்தெரியுமைப் பார்த்து கத்தினாள். “மேலும், என் பற்கள் திரும்பி வளர்ந்து விடும். அப்போது நான் இன்னமும் அழகாக இருப்பேன் என்று அம்மா சொன்னாள்”.
அவனுக்குச் சொல்ல ஒன்றுமில்லாததால் சாமிக்குத்தெரியும் “பேத்தல்” என்று அர்த்தப்படும் வகையில் கையை பலமாக வீசி சைகை புரிந்தான். ஸ்போ அழகென்று எல்லோருக்கும் தெரியும் , இங்கே எங்கள் எல்லோரையும் விட , சொர்ககத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் விட அழகு. ஏதொ எங்களுக்கு ஏற்கனவே தெரியாதது போல் அவள் இதைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் வேளைகளில் நாங்கள் அவளுடன் விளையாட மறுத்து விடுவோம்.
“அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, நான்  இந்த நாட்டைவிட்டு வெளியே செல்லப் போகிறேன். நிறைய பணம்  சம்பாதித்து திரும்பி வந்து ஒரு வீட்டை வாங்கப்போகிறேன்,  இதோ இந்த புடபெஸ்டிலோ அல்லது லாஸ் ஏன்ஜெல்ஸிலோ, ஏன் பேரிசிலும் கூட.” வேசிமகன் கூறினான்.
“நாங்கள் பள்ளிக்கு போய்க் கொண்டிருந்த போது, பணம் பண்ணுவதற்கு கல்வி அவசியம் என்று என் ஆசிரியர் மிஸ்டர் கோனோ சொன்னார். ஆமாம் அப்படித் தான் கூறினார், என் வகுப்பு ஆசிரியர்” சீபோ வயிற்றை தடவிக் கொண்டே கூறினாள். மிஸ்டர் கோனோ ஏதொ அவளது சொந்த தந்தையைப் போல, பெரிய பிஸ்தா போல, ஒரு வேளை அவள் வயிற்றில் அவர் தான் இருக்கிறார் போல, அவர் பெயரை மிகப் பெருமையுடன் அவள் உச்சரித்தாள்.
“நாம் பள்ளிக்கு போகாத பட்சத்தில் நீ எப்படி அதைச் செய்யப் போகிறாய்?” சீபோ தொடர்ந்தாள்.
“பணம் சம்பாதிப்பதற்கு எனக்கு பள்ளி தேவையில்லை. எந்த வேதபுஸ்தகத்தில்  நீ இதைப் படித்தாய் ?”
வேசிமகன் அவள் மூக்கை கடித்து விடுவது போல் அவன் முகத்தை அவள் முகத்தருகே கொண்டு வந்து, சீபோவைப் பார்த்துக் கத்தினான். சீபோ அவளது வயிறை வருடிக் கொண்டே மீதிருந்த அவளது கொய்யாவை சத்தமின்றி சாப்பிட்டாள். பின்னர் எங்களை விட்டு வேகமாக நடந்தாள்.
“ நான் என் அத்தை ஃபோஸ்தலீனாவுடன் வாழ அமேரிக்கா செல்லப் போகிறேன்; இன்னும் கொஞ்ச நாட்கள் தான், பார்த்துக் கொண்டே இருங்கள்,” நான் கூறினேன், அவர்கள் எல்லோருக்கும் கேட்கும் படியாக என் குரலை உயர்த்திக் கொண்டு. புத்தம் புது கொய்யா ஒன்றை கடிக்க ஆரம்பித்தேன், அவ்வளவு தித்திப்பாக இருந்ததால் மூன்றே கடிகளில் முடித்து விட்டேன். விதைகளைச் சவைக்க கூட நான் சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை.
“அமெரிக்கா ரொம்ப தூரம்,” வேசிமகன் கூறினான், அலுப்புடன். “ஆகாயம் வழியாக போக வேண்டிய எந்த இடத்திற்கும் நான் போக விரும்பவில்லை. அங்கே மாட்டிக் கொண்டு திரும்பி வர முடியவில்லை என்றால் என்னாகும் ? நான் தென்னாபிரிக்காவிற்கோ போட்ஸ்வானாவிற்கோ போகப் போகிறேன், நிலைமை மோசமானால் யாருடனும் பேசாமல் என்னால் சாலை மூலமாக வந்து விட முடியும்; எங்கு சென்றாலும் அங்கிருந்து சுலபமாக திரும்பி வரும்படி இருக்க வேண்டும்.”
நான் வேசிமகனை பார்த்துக் கொண்டே அவனிடம் என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஈறுக்கும் கோரைப்பல்லிற்கும் இடையே சிக்கிக் கொண்டிருந்த கொய்யா விதையை நாக்கால் விடுவிக்க முயற்சி செய்தேன். கடைசியில் விரலை உபயோகிக்க வேண்டி இருந்தது. காதுக் குறும்பியின் சுவையைப் போல அது இருந்தது.
“அமெரிக்கா ரொம்ப தூரம் தான்,” சீபோ கூறினாள், வேசிமகனுடன் ஒத்துக் கொண்டு. நாங்கள் அவளைப் பிடித்து விடுவதற்காக கையை வயிற்றிற்கடியே வைத்துக் கொண்டு சிறிது நேரம் நின்று விட்டாள். “விமானத்தில் நீ இருக்கும் போது ஏதாவது ஆகி விட்டதென்றால் ? தீவிரவாதிகள் வந்தால் ?”
அவன் அவளைப் பார்த்து சற்று முன் தான் கத்தினான் என்பதற்காக , தட்டை-முகம், கால்பந்து-வயிறு சீபோ கோற-மூஞ்சி வேசிமகனை மகிழ்விப்பதற்காகவே இப்படி கூறுகிறாள் என்று நான் நினைத்தேன். கண்ணாலேயே அவளைத் திட்டினேன், ஆனால் என் வாய் மட்டும் சவைத்துக் கொண்டே இருந்தது.
“எனக்கு அதைப் பற்றி கவலையில்லை, நான் போகத் தான் போகிறேன்,” என்று கூறிவிட்டு சாமிக்குத்தெரியுமையும் ஸ்டீனோவையும் பிடிப்பதற்காக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். சீபோவும் வேசிமகனும் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்க்கும் போது பேச்சு எங்கு போய் முடியும் என்று எனக்குத் தெறியும்.
“சரி, சரி , போ, அந்த அமெரிக்காவிற்கே போய்த் தொலை. அங்கே மருத்துவமனைகளில் வேலைக்குச் சென்று பீயை அள்ளு. நாங்கள் இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை என்று நீ நினைக்கிறாயா !” வேசிமகன் என் முதுகிற்குப் பின்னால் கத்தினான், ஆனால் நான் நடந்து கொண்டே இருந்தேன்.
என்னுடைய அமெரிக்காவைப் பற்றி அப்படிக் கூறியதால் அப்படியே திரும்பி வேசிமகனை அடித்து விடலாமா என்று யோசித்தேன். அவனை அறைந்து, முன்மண்டையால் முட்டி, கையால் அவன் வாயில் ஓங்கி ஒரு குத்து விட்டு பற்களைத் துப்ப வைப்பேன். அவன் சாப்பிட்ட கொய்யாக்கள் அனைத்தையும் அவன் வாந்தி எடுக்கும் படி அவன் வயிற்றைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தி விடுவேன். முட்டியை அவன் முதுகில் அழுத்தி, அவன் கைகளைப் பின்னால் மடக்கி, உயிருக்காக பிச்சை கேட்கும் வரையில் அவன் தலையை பின்னாடி இழுப்பேன். ஆனால் வாயை பொத்திக் கொண்டு விலகிச் சென்றேன். அவனுக்கு பொறாமை என்று எனக்கு தெரியும். ஏனென்றால் அமெரிக்காவில் அவனுக்கு யாருமே இல்லை. ஏனென்றால் ஃபோஸ்தலீனா அத்தை அவனுடைய அத்தை இல்லை. ஏனென்றால் அவன் வேசிமகன், நான் டார்லிங்.

oOo

நாங்கள் சொர்க்கத்தைஅடைவதற்குள் கொய்யாக்கள் காலியாகி விட்டன. எங்கள் வயிறுகள் அதிகமாகவே முட்டி இருந்ததால் நாங்கள் கிட்டத்தட்ட தவழ்ந்து கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு வெறும் தண்ணியை மட்டும் குடித்து, எலும்பம்மா சொல்லப் போகும் கதையைக் கேட்டு விட்டுத் தூங்கப் போகிறோம். புதருக்குள் மலம் கழிப்பதற்காக நடப்பதை நிறுத்தினோம். இருட்டுவதற்குள் இதை முடித்துக் கொள்வது நல்லது. இல்லாவிடில் யாருமே துணைக்கு வர மாட்டார்கள். புதரை அடைவதற்கு தனியாக சுடுகாட்டைக் கடந்து செல்ல வேண்டும். பேயைக் கூட சந்திக்க வேண்டி வரும்.
எல்லோரும் இடத்தைப் பிடித்தார்கள். நான் ஒரு பாறைக்குப் பின்னே குந்தினேன். கொய்யாக்களின் மோசமான அம்சம் இது தான்; அதிகமாக சாப்பிட்டால் அந்த விதைகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தி விடும். மலம் கழிக்கையில் ஒரு நாட்டையே பிரசவிப்பதைப் போல வலி எடுக்கும். நிமிடங்கள் மேல் நிமிடங்கள் கழிய , “எனக்காகி விட்டது. சீக்கிரம் முடியுங்கள்” என்று யாருமே கத்தவில்லை.
நாங்கள் அவ்வாறு எங்கள் வெவ்வேறு இடங்களில் குந்திக் கொண்டிருந்தோம். தசைப்பிடியைப் போக வைப்பதற்காக நான் என் தொடைகளைக் குத்திக் கொண்டிருக்கையில் யாரோ அலறினார்கள். மிகை முயற்சியுடன் முக்கும் போது கொய்யா விதை குதத்தைக் கீறும் போது உண்டாகும் அலறல் போல அல்ல, இது “வந்து பார்” என்றதால், நான் முக்குவதை நிறுத்தி, உள்ளாடைகளை மேலே இழுத்துக் கொண்டு, என் பாறையைத் துறந்தேன். அங்கே சாமிக்குத்தெரியும் குந்தி அலறிக் கொண்டிருந்தான். முன்னே அதற்த்தியான மரங்களின் இடையே எதையோ சுட்டியும் காட்டிக் கொண்டிருந்தான். நாங்கள் அதைப் பார்த்தோம், நீளமாக மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்ததை.
“என்னது அது?” யாரோ, எனக்கு யாரென்று தெரியவில்லை, முணுமுணுத்தார்கள். எல்லோரும் அது என்னவென்று பார்க்க முடிந்ததால் ஒருத்தரும் பதிலளிக்கவில்லை. ஒரு பெண் பச்சைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தாள். சூரியன் இலைகளுக்கிடையே பரவி எல்லாவற்றிற்கும் ஒரு வினோதமான நிறத்தை அளித்தது. அந்த நிறம் , அவளுள்ளே நெருப்புத் தணல்கள் இருந்ததைப் போல் பெண்ணின் மெல்லிய சருமம் பிரகாசித்தது.
பெண்ணின் மெலிவான கரங்கள் உயிரற்று பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளது கை கால்கள் இரண்டும் தரையைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தன. அவளை அங்கு யாரோ வரைந்ததைப் போலிருந்தது, அந்தரத்தில் தொங்கும் ஒரு நேர்க்கோடாக. அவளின் கண்கள் தான் ரொம்பவும் வெள்ளையாகக் காட்சியளித்து அதிகம் பயமூட்டியது. வாய் அகலமாகத் திறந்திருந்தது. அந்தப் பெண் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தாள். அவளின் காலணிகளின் நுனியை புல் நக்கிக் கொண்டிருந்தது.
“நாம் ஓடி விடலாம்,” ஸ்டீனா கூறினாள். அவை நாட்டுப்புற-விளையாட்டிற்குப் பிறகு ஸ்டீனா பேசிய முதல் வார்த்தைகள். ஸ்டீனா பேசினால் அதில் ஏதாவது முக்கியமான விஷயமிருக்கும். நான் ஓடத் தயாரானேன்.
“கோழை, அவள் தூக்கு மாட்டிக் கொண்டு இப்போது இறந்து விட்டிருந்தது உனக்குத் தெரியவில்லையா ?” வேசிமகன் ஒரு கல்லைப் பொறுக்கி எறிந்தான். அது பெண்ணின் தொடை மீது விழுந்தது. நான் ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அந்தப் பெண் அசையவே இல்லை.
“பார்த்தாயா, நான் தான் சொன்னேனே அவள் இறந்து விட்டாள் என்று,” வேசிமகன் கூறினான், அவன் தான் தலைவன் என்பதை எங்களுக்கு நினைவு கூர அவன் பயன் படுத்தும் அந்தக் குரலில்.
“அதற்காக கடவுள் உன்னை தண்டிப்பார்,” சாமிக்குத்தெரியும் கூறினான்.
வேசிமகன் இன்னொரு கல்லை எறிந்தான். அது “கு” என்ற சத்தத்துடன் பெண்ணின் காலை அடித்தது. அவள் இன்னும் அசையாதிருந்தாள். நான் அரண்டிருந்தேன். பிதுங்கிய வெள்ளைக் கண்ணின் ஓரத்திலிருந்து அவள் என்னைப் பார்ப்பது போலிருந்தது.பார்த்துக் கொண்டு, எனக்கே தெரியாத ஏதொவொன்றை நான் செய்வதற்காக காத்துக் கொண்டு..
“நான் போய் என் அம்மாவிடம் சொல்லப் போகிறேன்,” என்று ஸ்போ அழுது விடுவதைப் போலச் சொன்னாள். ஸ்டீனா போக ஆரம்பித்தாள், அதன் பின் ஸ்போவும் சாமிக்குத்தெரியுமும் சென்றார்கள். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். வேசிமகன் சிறிது நேரம் அங்கேயே தங்கினான், ஆனால் தோள்பக்கம் திரும்பிப் பார்த்த போது அவன் எங்கள் பின்னே வெகு அருகில் இருந்ததைக் கண்டேன். புதருக்குள் இறந்த பெண்ணுடன் அவனால் தனியாக இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும், அவன் என்னவோ தன்னை சொர்க்கத்தின் ஜனாதிபதியாக காட்டிக் கொள்ள விரும்பினாலும் கூட. நாங்கள் மீண்டும் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம், ஆனால் அதற்குப் பிறகு வேசிமகன் எங்கள் முன்னே சென்றான்.
“பொறுங்கள், யாருக்கு ரொட்டி வேண்டும்?” கொர்னெல் டி-ஷர்ட்டை தலையில் இறுக்கிக் கொண்டே அவன் கேட்டான். வேசிமகனின் இடது மார்பிற்கு சற்று கீழே நெஞ்சிலிருந்த காயத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கிட்டத்தட்ட கொய்யாவின் உள்பக்கத்தைப் போல இள்ஞ்சிவப்பாக இருந்தது.
“எங்கே இருக்கிறது?” நான் கேட்டேன்.
“பொறுமையாகக் கேள், அந்தப் பெண்ணின் காலணிகள் புதுசாக இருந்ததை கவனித்தாயா? அவை நமக்குக் கிடைத்தால், அதை விற்று ஒரு ரொட்டித் துண்டத்தை முடிந்தால் ஒன்றரை ரொட்டித் துண்டங்களைக் கூட வாங்கி விடலாம். என்ன சொல்கிறீர்கள்?”
நாங்கள் எல்லோரும் திரும்பி வேசிமகனைத் தொடர்ந்து மீண்டும் புதருக்குள் சென்றோம். விரைந்தோம்., அதன் பின் ஓடினோம், ஓடிக்கொண்டே சிரித்தோம், மேலும் சிரித்தோம். சிரித்துக் கொண்டே இருந்தோம்.

மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்

One Reply to “புடபெஸ்டை அடைதல்”

  1. சிறப்பான சிறுகதை. இந்த எழுத்தாளரின் மற்ற கதைகளை படிக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.
    கதை மாந்தர்களின் பெயர்களை ஏன் இவ்வாறு மொழி பெயர்க்கவேண்டும் என்று புரியவில்லை?
    பாஸ்டர்ட் , காட்நோஸ் என்று குறிப்பிடுதல் போதுமானது என்று கருதுகிறேன். வலிந்து பெயர்களை மொழிபெயர்க்கவேண்டிய தேவை ?. சிறு குறிப்பாக முதலில் கொடுத்துவிட்டு, பாஸ்டர்ட், காட்நோஸ் என்றே தொடர்ந்திருக்கலாம்.

    வாழ்த்துகள்,
    பிரவின் சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.