குளக்கரை


[stextbox id=”info” caption=”இரண்டாம் அன்னை”]

Regina_Casé_and_Michel_Joelsas_in_The_Second_Mother

‘காஸ்டிஸம்’ என்ற இங்கிலிஷ் சொல் இந்திய இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்த வசவுச் சொல். அனேகமாக எந்த இந்துவைப் பார்த்தாலும், மனதுக்குள்ளாவது, இந்தச் சொல்லால் அவரை ‘அலங்கரித்தால்’தான் அவர்களுக்கு அடுத்த இழுப்பு மூச்சு விட முடியும்.
இந்து என்று ஒருவரை குறித்துச் சொல்வதே அவர்களின் அகராதியில் எப்படி ஒரு வசவுச் சொல்லோ, அதே போல அடுத்த அபிமான வசவுச் சொல், காஸ்டீய்ஸ்ட் என்பதும். இந்து என்று தெரியும்படியான அடையாளம் கொண்டிருக்கும் ஒருவர் பிடிக்காதவராக இருந்தால் அடைமொழியாகப் பயன்படுத்தி காஸ்டிஸ்ட் ஹிந்து என்று இங்கிலீஷில் பட்டம் சூட்டுவார்கள். அவ்வளவுதான், இனி அந்த ‘இந்து’வைப் பற்றி அவர்கள் என்னவும் தெரிந்து கொள்ள வேண்டாம், அவர்களுக்குப் பொறுப்பு விட்டு விடும்.
ஆனால் அந்தச் சொல்தான் எத்தனை பெரும் ஆயுதம்? ஒரே சொல்லால் மொத்த இந்து சமுதாயத்தையும் பொது அரங்கிலும், மக்கள் மனதிலும் மதிப்பீட்டில் வீழ்த்தும் வலுவை உலக மார்க்சியக் கொழுந்துகளுக்குக் கொடுத்தவர்கள்தான் என்னவொரு ஆசான்கள்? அதுவும் இந்தியர்களின் நடுவேயே தாம் அப்படி வருணிக்கப்படுவது வெட்கமூட்டுவதான நிலை என்று கருதுமாறு ஒரு மனநிலையைக் கொணர்ந்ததில்தான் இந்திய மார்க்சியக் கொழுந்துகளுக்கு என்னவொரு உவகை? வெற்றி மமதை. அந்த வருணனைச் சொல்லைக் கொடுத்தவர்கள் யூரோப்பிய இனவெறியர்களாக இருந்தால்தான் என்ன?
மார்க்சியர்களின் எதிரிகளான இந்துக்களுக்கு யூரோப்பிய இனவெறியர் எதிரிகள். அது ஒன்று போதாதா யூரோப்பியமும், மார்க்சியமும் கூடிக் கொண்டு மகிழ? மார்க்சிய இந்தியர்கள் மனதில் யூரோப்பியர்தான் அடையாளமிழந்த உலகப் பிரஜைகள், மனிதர்கள். இந்தியரோ, அதுவும் இந்துக்களோ இன்னும் மனிதராகவே ஆகாதவர்கள்.
ஆக, அந்தப் போர்ச்சுகீஸியச் சொல் மீது அத்தனை மோகம். சும்மா சொல்லக் கூடாது, அச்சொல்லைக் கொடுத்தது அவர்களது தந்தையர் நாடில்லையா? புனித ஆவி ஆளும் நாடாக உள்ள போர்ச்சுகல், வெள்ளையர் நாடும் கூட. புனித ஆவிக் குழுக்களும் கம்யூனிஸ்டுகளும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்லுமளவு பகைமையோடு உலவிய காலம் இருந்தது, இன்று அந்த நிலைமை மாறி ஆரத் தழுவிக் கொள்ளும் நிலை வரத் துவங்கி இருக்கிறது. இரண்டுக்கும் பொதுவான வெள்ளைமை என்பதற்கு அத்தனை சக்தி இருக்கிறது போலும்.
அதுவும் யூரோப் என்ற நிலப்பகுதியோ உலகிலேயே மிகக் கறாரான முற்போக்கும், உன்னதமான பகுத்தறிவும், கோடி சூரியப் பிரகாசம் கொண்ட அறிவு ஒளியும் கூடிய பரப்பு வேறு. அங்கு அந்தச் சொல் வேர் கொண்டு அறிவுத் திலகங்களான வெள்ளையரால் இந்தியர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பிறகு அந்தச் சொல் மீது மோகம் பிறக்காமல் இருந்தால் அதல்லவா பிழையாக இருக்கும்.
ஆனால், போர்ச்சுகீஸியர் என்னவோ இந்தச் சொல்லைப் பற்றி ஒரு குற்ற உணர்வும் இல்லாமல்தான் இன்றளவும் வாழ்கிறார்கள். தவிர, அங்கு எத்தனை காஸ்டிசம் இன்னும் இருக்கிறது என்று தெரியவில்லை. அங்கு இரண்டு பிரிவுகள் அல்லது மூன்று வகுப்புகள்தான் இருந்தது போலத் தெரிகிறது. (http://countrystudies.us/portugal/51.htm) இந்தக் கட்டுரையில் போர்ச்சுகலில் இந்தப் பிரிவுகள் இன்னமுமே தொடர்கின்றன என்பதாகச் சொல்லப்படுகிறது. சமூகத்தில் பிறப்பு வகுப்பிலிருந்து முன்னேற்றம் என்பது அன்றும் இன்றும் கடினமானது என்றும் தெரிகிறது. போர்ச்சுகலின் காலனிகளில் நிலைமை வேறு விதமாக காஸ்டிஸம் தொடர்கிறது.
கீழே உள்ள சுட்டியில் கிட்டும் திரைப்பட விமர்சனம், போர்ச்சுகீஸியக் காலனியாக வெகுகாலம் இருந்த பிராஸீல் நாட்டுப் படம் ஒன்றைப் பற்றியது. ப்ராஸீல் முழு யூரோப்பிய நாடில்லைதான், ஆனால் ஆட்சியில் உள்ளது யூரோப்பியம்தான். அதாவது போர்ச்சுகீஸியப் பண்பாடுதான். ப்ராஸீலில், முழு வெள்ளையரல்லாதவர்களான கலப்பினத்தவர் காஸ்டா எனறு அறியப்படுகிறாராம். மாறாக Chaste என்ற சொல் தூய வெள்ளையரைக் குறிக்கப் பயன்படுவது என்று தெரிகிறது. ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஒருவரைக் குறிக்கப் பயன்படும் அடையாளப் பெயரில் அந்த ‘h’ என்ற எழுத்து இல்லாது போனால் அதுதான் எத்தனை பெரிய நஷ்டத்தைக் கொணரும்? யார் சொன்னார், பெயர்களுக்கு வலுவில்லை என்று? அமெரிக்காவுக்கு மேக நோயைக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமான பங்கு வகித்த வெள்ளையரை chaste என்ற சொல்லைக் கொண்டு இன அடையாளப்படுத்தியவருக்கு அங்கதத்தில் நல்ல பயிற்சி இருக்க வேண்டும்.
இந்த பிராஸீல் நாட்டில் இருந்த, இருக்கிற ’காஸ்டீயிஸ’த்தைப் பற்றிய ஒரு சமீபத்திய திரைப்படம் பிராஸீலிய இயக்குநர் ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்னா முலயேர்ட் என்னும் பெண் இயக்குநரின் நான்காவது படம் இது. படத்தைப் பற்றிய ஒரு அமெரிக்க விமர்சகரின் விமர்சனம் இந்தச் சுட்டியில் கிட்டுவது. இவருக்கு எத்தனை தூரம் பிராஸீல் பற்றித் தெரியும் என்ற கேள்விக்கு அவர் பதில்,அவருடைய முன்னாள் ’பாய் ஃப்ரெண்ட்’ ஒரு பிராஸீலியர், அவர் வளர்ந்த வீட்டுக்கு இந்த விமர்சகர் சில கோடை மாதங்களுக்குப் போய்த் தங்கி இருக்கிறார், அந்த வீட்டில் பல பத்தாண்டுகளாக வேலை செய்து வந்த ஒரு வேலைக்கார அம்மாளின் வாழ்நிலை பற்றி இவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அவை போதுமா என்று மட்டும் கேட்காதீர்கள். மேற்கில் எதைப் பற்றி எழுதவும் சுமாரான பரிச்சயம் இருந்தால் போதும் என்று தெரிகிறது. தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர்கள் இதில் மிகத் தேர்ந்தவர்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா என்று சில நாடுகளுக்கு அங்குள்ள தமிழர்களின் அமைப்புகள் கொடுக்கும் ஏதோ ஒரு பரிசை வாங்கப் போவார்கள், அங்கு சப்வே, ட்ராம், பஸ் என்று மூன்று நாள் பயணத்தில் அந்த நாடுகளின் பண்பாடு, சமூக அமைப்பு, இன/மத/பொருளாதாரப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் உடனே இனம் கண்டு விடுவார்கள். ஊர் திரும்பியதும் புத்தகம் புத்தகமாக எழுதுவார்கள். ஏதோ அந்நாடுகளில் ஒரு பத்து வருடம் தங்கி ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதுவது போல அப்படி ஒரு ’புலமை’ இருக்கும். அவர்களுக்கே உரிய ‘மேதைப் பார்வையும் இப்புத்தகங்களில் கிட்டும். இதே முறைமையில் மேற்படி அமெரிக்க விமர்சகர் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. யாராவது ப்ராஸீலியரைத்தான் கேட்க வேண்டும்.
‘இரண்டாவது அம்மா’ (The Second Mom’) என்னும் இந்தப் படம் நம் ஊர்க் கதை போலத் தெரிந்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். வீட்டோடு தங்கி இருக்கும் வேலைக்காரியாக வாழும் ஒரு பெண் பற்றிய கதை இப்படத்தின் கதை. அந்த வீட்டின் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இரண்டாம் தாய் போல இருந்து வளர்த்த தனக்கு அவர்கள் மீது உரிமை இருப்பதாகவே பாவிக்கிறார்.
இவருடைய குழந்தை தொலைவில் உள்ள சிற்றூரில் இவருடைய குடும்பத்தாரிடம் தாய் முகமறியாது வளர்கிறவள், பள்ளிப் படிப்பு முடிந்ததும், நகருக்கு வந்து அம்மாவோடு வாழ முற்படுகிறாள். அம்மாவோடு இருந்து கொண்டு கல்லூரிக்குப் போய் கட்டிட நிர்மாணத் துறையில் பட்டம் வாங்க முடிவெடுக்கிறாள். இந்தப் பெண்ணின் வருகை எல்லாருடைய வாழ்வையும் எப்படி மாற்றுகிறது என்று நேரடியான அரசியல் பிரச்சாரமோ, கருத்தியல் விமர்சனமோ ஊடுருவாமல் எப்படி இந்த இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார் என்று விமர்சகர் மிக மகிழ்ந்து மெச்சுகிறார்.
அட, இன்னும் ஓரிரு வருடங்களில் தமிழிலோ, இந்தியிலோ இந்தப் படத்தைப் பார்க்க முடியுமே, இப்போது என்ன அவசரம் என்று சொல்லாதீர்கள். ஒரு தடவை இதைப் படித்துத்தான் பாருங்களேன்?

http://www.slate.com/articles/arts/movies/2015/08/brazilian_film_the_second_mother_reviewed.single.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த பெருங்களப்பலி”]

Indian_Holocaust_British_England_United_Kingdom_Rule_India_Raj_UK_Bharat_Asia_London_Delhi_Gandhi

மேற்குலகின் அரசுகள், தன்னார்வலக் குழுக்கள், தவிர அந்நாடுகளில் தற்போது குடியேறி இயங்கும் இந்திய இடதுசாரி சிப்பாய்கள், எவாஞ்சலிய மோகத்தில், இல்லை, வேகத்தில் இந்தியாவை அழித்து கிருஸ்தவ நாடாக்குவதுதான் தம் முதல் மற்றும் இறுதி வேலை என்று இயங்கும் சில முற்போக்கு இயக்கங்கள் என்று ஒரு பட்டியல் போடக்கூடிய அளவு பெரிய பட்டாளமே உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் வரவழைப்பதையே தம் இலக்காகக் கொண்டு தொடர்ந்து இயங்குகின்றது. இவர்களில் பலரும் மேற்கின் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப விளம்பரப்படுத்துவன, இந்தியாவின் மதக்கலவரங்கள், இனப்படுகொலைகள், காஷ்மீரில் ராணுவ அத்துமீறல்கள், குஜராத் கலவரக் கொலைகள், தவிர பிரிவினையின் போது நடந்த கொலைகள் இப்படிச் சில. இவற்றிற்கு காலாவதி ஆகும் கட்டமே கிடையாது. எப்போதும் இவை எடுத்து முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இவற்றைச் சொல்லாமல் எந்த இடது சாரியாவது ஒரு பத்துநிமிடம் பேசி விட்டார் என்றால் அவருக்கு ஏதோ மூளை கலங்கி இருக்கிறது என்று பிற இடது சாரியினர் ஐயம் கொள்ளத் துவங்கி விடுவார்கள் போலிருக்கிறது. அத்தனை மலிந்து, மெலிந்து போயிற்று இந்திய இடது சாரி இயக்கத்தின் கருத்தியலும் சிந்திக்கும் திறனும்.
சரி இத்தனை இந்தியாவைச் சாடுகிறார்களே, இவர்களுக்கு இப்படி ஒரு ‘அறச் சீற்றம்’ கொள்ள என்னவாவது உரிமை உண்டா என்று நாம் தகவல்களோடு சேர்த்து யோசிக்கத் துவங்கினால் பித்தளை இளித்துக் காரீயம் என்று உடனே தெரியும். ஒரு விஷயத்தை எடுத்துப் பார்ப்போம்.
உலகுக்கே தாம்தான் கல்வியளித்தோம், அறம் என்னவென்று சொல்லிக் கொடுத்தோம், நாகரீகத்தையே இந்தியருக்கு நாங்கள்தான் கொணர்ந்தோம் என்று மார்தட்டும் இங்கிலிஷ்காரர்களை நாம் இன்னமும் பொதுவில் காண முடியும். அவர்களில் மெத்தப்படித்த அறிவாளர்களே கூட இப்படி எல்லாம் பாமரத்தனமாக அறிக்கை விட முடிந்தவர்கள்.
இந்தியாவை 300 ஆண்டுகள் கொள்ளையடித்துக் கடும் வறுமையில் இந்தியரை ஆழ்த்திப் போன கொள்ளையர் அரசும், அதன் கீழ் வாழும் அம்மக்களும் இன்னமும் கொக்கரிப்போடு உலவக் காரணம் என்னவென்றால், அவர்களைத் தட்டிக் கேட்பாரில்லை. யார் கேட்பது? இந்தியரே அதைப் பற்றி ஏதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை, பெருவாரியான இந்தியரும், இந்திய அறிவு ஜீவிகளும், இந்திய அரசும் இந்தியாவை பிரிட்டிஷார் எப்படி எல்லாம் சிதைத்துக் கொடுமையான வழிகளில் அழித்தனர் என்பதை ஆய்ந்து நிறுவத் தீவிர முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லலாம்.
ஏன் இப்படி ஒரு அவலமான நிலை இருக்கிறது என்றால் இந்திய மனதில், அறிவில் ஊறி இருக்கிற காலனிய அடிமைத்தனத்தை இன்னொரு காரணமாகச் சொல்லலாம்.
காட்சித் துலக்கத்தைக் கொல்லும் இந்த அடர் பனி சில வருடங்களாக மெல்ல விலகத் துவங்கி இருக்கிறது. பல ஆய்வாளர்கள் வழக்கமான வெள்ளையப் பார்வையிலிருந்து விலகி நின்று, பிரிட்டிஷ் ஆட்சியின் கயமைகளைப் பற்றி யோசித்து, அக்கால வரலாற்றை விவரங்களோடு தொகுத்து அணுகத் துவங்கி இருக்கிறார்கள்.
அத்தகைய ஆய்வாளர்களில் நியுஸீலாந்தில் இருந்து இயங்கும் சர்வதேச உறவுகள் பற்றிய ஆய்வாளரான ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா ஒருவர். அவருடைய ஆய்வுகளில் ஒன்று இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய இனப்படுகொலைகள் பற்றியது. சுமார் 30 மிலியன் இந்தியரை பிரிட்டிஷ் ஆட்சி வேண்டுமென்றே பட்டினி போட்டுக் கொன்றிருக்கிறது என்ற குற்றச் சாட்டை ஆவணச் சான்றுகளோடு ராகேஷ் கிருஷ்ணா முன்வைக்கிறார்.
தாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். இப்படிச் சொல்ல மேன்மேலும் சான்றுகள் எங்கே என்று கேட்க இந்தப் ’புரட்சிகர’ அறிவு ஜீவிகளுக்குத் தோன்றியதே தவிர பிரிட்டிஷார் மீது தமக்கு ஏன் இத்தனை அசைக்க முடியாத நம்பிக்கை, சக இந்தியர் மீது ஏன் இத்தனை அவநம்பிக்கை என்ற சுயப் பரிசீலனைக்கு அங்கு இடமிருக்கவில்லை. எவாஞ்சலிய மூடுபனி அத்தனை தூரம் பார்வையை மறைக்கிறதே என்ன செய்ய?
இந்தக் கொடிய நிலைக்கு ஓரளவாவது முடிவு கட்ட ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹாவின் ஆராய்ச்சி உதவலாம் என்று தெரிகிறது. அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்கிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார் ராகேஷ் கிருஷ்ணன்.
இவரது கருத்துகள் பற்றிய ஒரு கட்டுரைக்கான சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறோம். இதைப் படித்தால் நம் மனம் கலங்கத்தான் செய்யும். ஆனால் இந்திய இடது சாரிகளின் புத்தியில் ஊறி இருக்கிற யூரோப்பிய அடிமைத்தனம் கலைய இந்த வகைக் கட்டுரைகள் எல்லாம் போதும் என்ற நம்பிக்கை நமக்கு வர வாய்ப்பில்லை. மாறாக இந்தப் ‘புரட்சி’ வீரர்கள் இந்திய தேசியம் என்பது ஃபாசிசம் என்ற அற்பக் கருத்தைத் தொடர்ந்து கிளிப்பிள்ளைகள் போலச் சொல்லிக் கொண்டு திரிவதில்தான் உற்சாகம் கொண்டு இயங்குகிறார்கள். அத்தனை தூரம் காலனியத்துக்குத் தாக்கம் இருக்கிறது. தேசியம் என்ற உந்துதல் இல்லாதிருந்தால் இன்னும் வெள்ளையருக்கு அடிமைகளாகத்தான் தாமிருப்போம் என்ற அடிப்படை உண்மை கூட உறைக்காத ‘பகுத்தறிவு’ இவர்களது.
ராகேஷ் கிருஷ்ணனின் ஆய்வு போன்ற பற்பல முயற்சிகளை இந்தியர்களில் சுயபுத்தி இன்னும் இயங்குகிற பல ஆய்வாளர்கள், பல்லாண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டால் அடுத்த தலைமுறையின் அறிவிலாவது சுயபாதுகாப்பு என்பது முதல் கட்ட நடவடிக்கை, இந்திய தேசியம் என்பது ஒரு அத்தியாவசியத் தற்காப்பு நடவடிக்கை என்பனவற்றை நாம் பதிக்க ஒரு வாய்ப்பு இருக்கும். கூடவே உலகத்துக்கே தாமே அறவுணர்வுக்கான கலங்கரை விளக்கம் என்ற யூரோப்பிய மமதைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரவும் இயலலாம்.

The British caused Genocide of Indians in Colonial India
[/stextbox]


[stextbox id=”info” caption=”‘நான் கசாப்புக்காரனா?’”]

ஈராக்கில் நிலைமை தொடர்ந்து க்ஷீணித்து வருகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. இத்தனை துன்பங்களுக்குப் பிறகு, பல லட்சம் பேரின் சாவுக்குப் பிறகு கிட்டிய ஒரு ‘ஜனநாயக’ அரசை, ஒரு நாட்டு மக்கள் எப்படி எல்லாம் வீணடித்து மறுபடி சாக்காடாக நாட்டை மாற்ற முனைந்தார்கள் என்பது அத்தனை சுலபமாக விளக்க முடியாத ஒரு விஷயம்.
ஜெர்மன் பத்திரிகை டெர் ஷ்பீகல் இந்த விஷயத்தைத் தொடர்ந்து அணுகி விளக்கங்கள் காண முயன்று வருகிறது. ஒரு சமீபத்துக் கட்டுரையில் ஓரளவு விளக்கங்களோடு, ஈராக்கின் இன்றைய சிதிலங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கத்தின் ஒரு திட்டக்குழு உறுப்பினரைப் பேட்டி கண்டிருக்கிறது. இ.ஸ் இயக்கத்தின் திட்டமே ஷியா முஸ்லிம்களைப் பூண்டோடு அழித்து, உலகெங்கும் சுன்னி முஸ்லிம்களை மட்டுமே வாழ அனுமதிப்பது என்பதுதான். என்னென்னவோ தக்கியா எல்லாம் செய்து இந்தியருக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்த எளிய உண்மை தெரிய விடாமல் இந்திய முற்போக்குகளும், திராவிடிய விஷங்களும், தமிழக முஸ்லிம் தீவிர வாதக் குழுக்களும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் நிஜம் என்னவோ இந்தக் கொலைக்கும்பலின் தொடர்ந்த இயக்கத்திலிருந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அதெல்லாம் பொய்ப் பிரச்சாரம் எனறும், யூதர்களின் உலக ஆதிக்கத்தில் கட்டுப்பட்டிருக்கும் ஊடகத்தின் பொய்கள் என்றும் தமிழகத்து எதிர்ப் பிரச்சாரம் தமிழகத்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவத் தொடர்ந்து முயல்கிறது. ஆனால் நிஜம் வெளிவந்து பொய்ப்பிரச்சாரத்தை ஓரம் கட்டுகிறது.
சமீபத்தில் பல நூறு வடக்கிந்திய மௌல்விகள் ஒரு ஃபத்வாவை வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த ஃபத்வா சொல்வது- இஸ்லாமிக் ஸ்டேட் இயக்கம் இஸ்லாத்தின் அடிப்படைகளை அழிக்க முயலும் இயக்கம் என்பது. இதுவும் ஒரு தக்கியா முயற்சியா என்பதை நாம் உடனடியாக அடையாளம் காண முடியாது. பொறுத்திருந்தால் அதுவும் புலனாகும். ஆனால் இத்தனை நூறு மௌல்விகள் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள், இஸ்லாம் என்ற பெயரை வைத்துக் கொண்டு சில பத்தாயிரம் பேர் பல்லாயிரக் கணக்கில் மேற்காசிய மக்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்பது அந்த உண்மை.
ஆனால் இதே மாதிரிதானே பல லட்சம் மக்களை அரேபியக் கொள்ளைக் கும்பல்கள் பண்டை இந்தியாவில் கொன்றார்கள் என்று இந்துக்கள் மட்டும் கேட்டு விடக் கூடாது? இந்துக்களை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொன்றழிக்கலாம், அதற்கு செமிதிய மதத்தினருக்குத் தனி உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கேரள மார்க்சியருக்கும், வங்க முற்போக்குகளுக்கும் இப்படி தமக்கு உரிமை உண்டு என்பது பல பத்தாண்டுகளாகத் தெரிந்த உண்மைதான். இந்துக்களுக்கு மட்டும்தான் தாம் வேட்டையாடப்படும் வன விலங்குகள் போல என்பது தெரிவதில்லை.
ஜெர்மன் பத்திரிகையின் இந்தக் கட்டுரையில் இஸ்லாமிக் ஸ்டேட் கொலைக் கும்பலின் வெடிகுண்டு சதித்திட்டங்களை வெற்றிகரமாக ஈராக்கில் பல இடங்களில் நடத்திய அபு அப்துல்லா என்ற நபரின் பேட்டி வெளியாகி இருக்கிறது. இந்த பேட்டியில் தெளிவாவது- உணர்ச்சி வசப்பட்டு பலரைக் கொல்லும் மனப்பிறழ்வெல்லாம் இல்லாத நபர் இவன். இவன் தெளிவாகச் சொல்கிறான், ஷியாக்களை அழிப்பதுதான் திட்டம், அதைச் செய்வதில் இவனுக்கு ஒரு குற்ற உணர்வும் இல்லை என்கிறான்.
வஹ்ஹாபியத்தின் 50 ஆண்டு கால விஷ வித்து உலகெங்கும் பரவி இருப்பதற்கு சௌதி அரேபியாவின் தொடர்ந்த பிரச்சாரம் ஒரு காரணம் என்று உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்தக் கொலைக் கும்பலின் இருப்பும், இயக்கமும் அப்படி ஒரு கடும் குறுகல் கொண்ட கோட்பாட்டின் விளைவுகள் என்பதில் நாம் ஐயம் கொள்ளத் தேவை இல்லை என்று நிறுவுகின்றன. இந்தியாவில் இந்துக்களை அழிப்பதும் இந்த இயத்தின் தொலை நோக்குத் திட்டம் என்பதும் நமக்கு இப்போது தெளிவாகி இருக்கும். இந்த பேட்டியைப் படித்து என்னவொரு கொடுமை எத்தனை ‘தெளிவான’ புத்தியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறியலாம்.

http://www.spiegel.de/international/world/a-conversation-with-an-isis-suicide-bomber-logistician-a-1043485.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”முன்னூறு மடங்கு சம்பளம்”]

CEO_worker_Compensation_Ration_Graphs_charts_Data

அமெரிக்க நிறுவனங்கள் பற்றி ஒரு பார்வை கீழே உள்ள சுட்டியில் கிட்டும். இதயமில்லாத அமைப்பு என்று முதலியத்தைச் சொல்வார்கள். இந்தக் கட்டுரை அமெரிக்க முதலியத்தின் ஒரு கோரப் பல்லைக் காட்டச் செய்கிறது. கட்டுரையை எழுதியவர்கள் அப்படி ஒன்றும் மார்க்சிய மந்திர உச்சாடனங்களைச் செய்யவில்லை என்பதாலும், முதலியத்தை அழிப்போம் என்று சூளுரைக்காததாலும், நிறைய புள்ளி விவரங்கள் கொடுப்பதாலும் இந்தக் கட்டுரையை ஓரளவு நம்பலாம் என்று தோன்றுகிறது.
இதன் சாரம்-
அமெரிக்கப் பெரு நிறுவனங்களின் மேல் நிலை ஆளுநர்கள், அதுதான் சி. இ. ஓ (CEO) என்று சொல்கிறார்களே அந்தப் பதவிகளில் உள்ளவர்கள்- அவர்களின் ஊதியம் கடந்த 40 ஆண்டுகளில் எப்படி மாறி இருக்கிறது என்று கவனித்தால் நம் எல்லாருக்கும் மாரடைப்பு வரும் என்கிறது அறிக்கை.
1978 இலிருந்து 2014 ஆம் வருடம் வரை இந்த ஊதிய வளர்ச்சியை நோக்கினால், அதை பண மதிப்பில் ஏற்பட்ட மாறுதல்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப சரி செய்து நோக்கினாலுமே கூட, அந்த ஊதிய வளர்ச்சி 997 சதவீதம். அதாவது கிட்டத்தட்ட ஆயிரம் சதவீதம் கூடுதலாக ஊதியம் எகிறி இருக்கிறதாம். அதே காலகட்டத்தில் அடிமட்டத் தொழிலாளர்களின் ஊதிய வளர்ச்சி எத்தனை? 10.9 சதவீதம். 11 சதவீதம் என்றே வைத்துக் கொள்வோம். இதுவுமே இடையில் நேர்ந்த கடும் வீழ்ச்சியிலிருந்து ஓரளவு தேறி இன்று இருக்கிற நிலையை வைத்து நோக்கினால்தான் கிட்டும் தொகை. இடையில் எத்தனை மிலியன் தொழிலாளர்கள் ஓட்டாண்டிகளாக ஆனார்களோ யார் கண்டது?
இது மனிதம் உள்ள எந்த அமைப்பாவது செய்யக் கூடிய ஒன்றா? அப்படி ஒரு கேவலத்தைச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க முதலியத்தை உலகுக்குப் பரிந்துரைத்து தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல ‘அறிவு ஜீவிகள்’ கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கருணை மார்க்கத்து நம்பிக்கையாளர்கள் வேறு. சிலர் ஐன் ராண்ட் என்ற ஒரு படு குப்பையான ‘சிந்தனையாளரின்’ பக்தர்கள் வேறு.
அதாவது எதெல்லாம் மக்களுக்குப் பரிந்துரைக்கிறோமோ, அதெல்லாம் மக்களை ஒழித்து ஓட்டாண்டிகளாக ஆக்க வேண்டும், அப்போதுதான் அவை உடனே பரவும். இந்த அடிப்படைக் கோட்பாடுதான் இன்று உலகில் பெரும் ஆகிருதியுடன் உலவுகிற பற்பல கருத்தியல்களுக்கும் ஆதார நம்பிக்கை. இவற்றில் எல்லாமே அனேகமாக மேற்காசிய மதங்களின் விளைவுகள் என்பதை மட்டும் நாம் கவனித்தால் நமக்கு ஏதோ விடிவு காலம் பிறக்க வாய்ப்புண்டு.
இந்த அறிக்கை சொல்வதை இன்னும் சற்றுக் கவனிப்போம்.
1965 இல் அடிநிலை ஊழியரை விட இந்த தலைமை செயல்திட்ட மேலாளர்களின் ஊதியம் 20 மடங்குதான் உயர்வாக இருந்திருக்கிறது. மெல்ல மெல்ல உயர்ந்து 1989 வரை கூட 58.7 மடங்குதான் உயர்ந்திருந்தது. 1990 இலிருந்து 2000 வருவதற்குள் அது 376 மடங்குக்கு எகிறியது. பின் சரிவு, எழுச்சி என்று ஊசலாடி விட்டு 2014 இல் 303.4 மடங்குக்கு உயர்ந்திருக்கிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் நூற்றுக்கு 99.9 சதவீதம் ஊழியர்களை விட அதிகம் ஊதியம் பெறும் 0.1 சதவீத ஊழியர்கள் சிலர் உண்டு. இவர்களே பெரும் பணக்காரர்கள். இவர்களின் ஊதியத்தை விடப் பன்மடங்கு அதிகம் ஊதியம் பெறுபவர்கள் இந்த தலைமை செயல்திட்ட மேலாளர்கள். (சுமார் 6 மடங்கு கூடுதல் ஊதியம்.)
18220 நிறுவனங்களின் மேலாளர்களை இந்த அறிக்கை கவனித்திருக்கிறது. இவர்கள் 500 க்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களின் மேலாளர்கள். இந்த நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கின்றன. எனவே இந்த அறிக்கை ஏதோ இடது சாரிச் சதியால் திரித்து உருவாக்கப்பட்டதல்ல.
அமெரிக்க முதலியம் என்ற அவலக்கதையைப் பற்றிச் சிறிதும் சோகச் சுவையோ, பரிதவிப்போ இல்லாது கருக்காக எழுதப்பட்ட இந்த அறிக்கையைப் படிக்குமாறு முதலியத்தின் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது சொல்வனம்.

http://www.epi.org/publication/top-ceos-make-300-times-more-than-workers-pay-growth-surpasses-market-gains-and-the-rest-of-the-0-1-percent/
பிறகு சொல்லுங்கள் இந்த அவலம் இந்தியத் தொழிலாளிகளுக்கும் நேர வேண்டுமா என்ன?
(ஏற்கனவே அப்படி ஒரு அவல நிலையில்தானே இருக்கிறார்கள் என்ற எள்ளல் பதிலாகக் கிட்டாது என்று நம்புகிறோம்.)
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.