இரவின் போதை

இரவின் போதை

night

கொல்லைப் புறத்திலிருந்து சரேலென ஒரு கரும் பாம்பு இறங்கியது போல் இரவு இறங்கியிருக்கும்.
பரந்த உலகை
ஒரு ஒட்டு கூட இல்லாமல் ஒரே பட்டுக் கருந் துகிலில் போர்த்தும்.
எவ்வெவ் காட்சியெல்லாம் உண்மையோ அவ்வவ் காட்சியெல்லாம் உண்மையல்லதாய் போல் காட்சிகள் நிழற் சித்திரம் கொள்ளும்.
அன்று நிலவுமில்லையாக இரவின் முழு வசீகரத்தில் அமைதி அழுந்த இரவின் தோள்களில் முயங்கி இன்புறும்.
பறவைகள் நீத்த வானமோ பாலைவனமாய் வெறுத்துச் சலிப்புற்றிருக்கும்.
உளவு பார்க்கும் மேகங்களும் இந்த வேளையில் ஒன்றும் செய்வதற்கில்லையென்று வெறுமனே திரியும்.
ஜன்னலின் வெளியே தந்திக் கம்பத்தில் கண்ணுறங்காது ஒரு காகம் தனிமையில் இறக்கைகளைச் சிலுப்பும்.
நெடும் பகல் கழியக் காத்திருந்த தன் அலுப்பு தீர இரவு கடல் குடிக்கும்.
போதையில் இரவு
உறங்கும் ஒவ்வொருவர் கனவுகளிலும் வித விதமாய்க் கதை சொல்லும்.
என் கனவுகளை மட்டும் தேடிக் காணாமல் அதன் கதைகள் அலையும்.
கு.அழகர்சாமி

oOo

elephant

பரிசு

அதை
திறக்க எத்தனித்து விட்டேன்
யாராலும் தீண்டப்படாததை
கடந்த பத்தாண்டுகளாக
திறக்கப்படாததை

அது நாள்பட்டமையால்
கொஞ்சம் பழுப்பேறியிருந்தது
ஆனாலும்
அலங்காரமாய் இருந்தது.

அது அழகான ரசனையோடு
கவனமாய் சுற்றப்பட்டிருந்தது.
சஞ்சலத்தோடுதான்
எடுத்தேன்

அது குறுக்கும் நெடுக்குமாய்
கட்டப்பட்டிருந்தது.
ஆசுவாசபடுத்தியபடி
பொறுமையாகதான் அவிழ்த்தேன்

முடிவில்
பிரித்து அடுக்கினேன்
வெளியே
திருமணப்பரிசாய் வந்த
அந்த ஜோடி யானைகளை

இப்பொழுது
வெற்றிடத்தை
அழுத்தத் தொடங்கியது
இரண்டு யானைகளின்
பாரம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.