அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"

Jairam_Ramesh_To_the_Brink_and_Back

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடக்கும் போது, சிலருக்கு அதில் பங்காற்றவும், அதை அருகில் இருந்து பார்க்கவும் கிடைக்கும் வாய்ப்புகள், நல்லூழின் விளைவுகள் எனலாம். ஜெய்ராம் ரமேஷ் அதிர்ஷ்டசாலி!
மும்பை ஐஐடியில் பொறியியல் பயின்று, பின்னர் கார்னகி மெலான் பல்கலையில் பப்ளிக் பாலிஸி படித்தார். அதன் பின்னை எம் ஐ டியிலும் படித்தவர்.
80 களின் இறுதியில், இந்தியாவின்  ஏற்றுமதி சுணங்க, அந்நியச் செலாவணி நெருக்கடி உருவாகி வந்தது. அப்போது, இந்தியாவின் அரசியல் சூழலும் ஒரு சீராக இல்லாத காலம்.  89 ல் , ராஜீவ் தோற்று,  வி.பி சிங், சந்திரசேகர் என மைனாரிட்டி அரசுகள் நடந்த காலம். இன்னொரு புறம், அத்வானி, மும்முரமாக அரசியல் ரதம் ஓட்டிக் கொண்டிருந்தார்.  வி.பி சிங், பதவியேற்ற பின் தேசத்துக்கு ஆற்றிய முதல் உரையிலேயே, கல்லாப் பெட்டி காலி என முகாரி பாடி மொத்த தேசத்தின் நம்பிக்கையையே குலைத்தார். அடுத்து வந்த சந்திரசேகர் அரசின்  நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, நிலைமையைச் சமாளிக்க இந்தியாவின் தங்கத்தை அடகு வைத்து டாலர் புரட்டி சில மாதங்களைச் சமாளித்தார். பின்னர் அந்த அரசு வீழ, மீண்டும் தேர்தல்.
இச்சூழலில், நடந்த தேர்தலின் மத்தியில் ராஜீவ் கொலை செய்யப்பட, காங்கிரஸ் 232 எம்பித் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், மெஜாரிட்டி இல்லை. நாட்டின் நிதி நிலைமை அபாயகரமான கட்டத்தை எட்டியிருந்தது. டாலர் கையிருப்பு 11 நாட்களுக்கான இறக்குமதித் தேவை அளவே இருந்தது
 
அப்போது ஏற்கனவே,  ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.
நரசிம்ம ராவ் பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பு (ஜூன் 20) ,  பிரணாப் டா என அன்போடு அழைக்கப் படும் பிரணாப் முகர்ஜி எகானமிக் டைம்ஸ் இதழுக்கு ஒரு நேர்காணல் அளிக்கிறார். அது கிட்டத் தட்ட புது அரசின் நிதியமைச்சரின் நேர்காணல். ஆனால்,  ஜூன் 22 ஆம் தேதி, நிதியமைச்சராக நியமிக்கப் படுபவர் மன்மோகன் சிங். சிங்கின் தேர்வுக்குப் பின்னால் இருந்த காரணங்கள் மிக அழகாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. நிதிநிலை மிக அபாயகரமாக இருந்த காலத்தில், சரி செய்யத் தேவை ஒரு பொருளாதார நிபுணர் – அரசியல்வாதியல்ல என்னும் பார்வை மிக முக்கியத்துவம் பெற – நரசிம்ம ராவ், சிங்கைத் தேர்ந்தெடுக்கிறார்.  அநேகமாக, ப்ரணாப்டா ஒருவரைத் தவிர மற்றவர் அனைவரும் அம்முடிவு மிகச் சரியானது எனச் சொல்கிறார்கள்.
சிங் பதவியேற்ற முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கொஞ்சம் அரசியல் சரியில்லாமல் பேசி விட, அவருக்கு பொதுவெளியில் குட்டு விழுகிறது.  அதற்குக் காரணம் நம்ம ஊர் சிதம்பரம். 1991 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முதல் முறையாக, காங்கிரஸ் அடைய வேண்டிய இலக்குகளுக்கு, 100 நாள், 365 நாள், 730 நாள், ஆயிரம் நாள் எனத் துல்லியமான காலக்கெடுக்களைக் கொண்டிருந்தது.  அப்படி வேண்டும் என வாதிட்டு, ப்ரணாப்டா போன்ற சீனியர்களின் அதிருப்தியை வென்று தேர்தல் அறிக்கையை வரவைத்தவர் அவர். ஆனால், 100 நாட்களுக்குள் விலைக் குறைவு என்பதெல்லாம் இயலாத காரியம் என்பது போல சிங் பேட்டியில் சொல்லிவிட, அரசுக்கும் முதல் ப்ரச்சினை எழுகிறது. நரசிம்ம ராவ் அதிருப்தி அடைந்தாலும் அதைச் சமாளித்து விடுகிறார்.
அடுத்தபடியாக, உலக வங்கிக்கு, அரசு செய்யப் போகும் சீர்திருத்தங்களைப் பற்றிய ஒரு அனஃபிஷியல் ஒரு பக்கக் கட்டுரை போகிறது. நரசிம்ம ராவ் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அந்தச் சந்திப்பில், புது நிதியமைச்சர், நாட்டின் நிதிநிலைமையைப் பற்றி அனைவருக்கும் ஒரு அப்டேட் தருகிறார். உலக வங்கிக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தைப் பற்றிப் பேசுகிறார். நிலைமையின் அவசரத்தை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். ஆனால் அனைவருமே, எந்தச் சூழலிலும், மானியங்கள் கைவிடப்பட்டு விடக் கூடாதென்ற நிலையில் இருந்தனர் என்கிறார் ஜெய்ராம்.
செய்ய முடிவு செய்த முதல் காரியம், டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் குறைத்தல். இச்செயலின் பின் ஒரு பெரும் ஒவ்வாமை இருந்தது. 1966 ல், இந்திரா காந்தியின் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்புக் குறைக்கப் பட்டது. அது, ஒரு பெரும் தோல்வி என்னும் கருத்து அப்போதைய அரசு வட்டாரங்களில் உறுதியாக நம்பப்பட்டது. பெரும்பாலான  பொருளாதார அறிஞர்கள்,  (பெரும்பாலும் பெங்காளிகள்), இது தற்கொலைக்குச் சமானம் எனக் கருதினர். ஆனால், சர்தாரோ, ரூபாயின் மதிப்பைக் குறைத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த முடிவு, ஒரு பெரும் ரிஸ்க்தான்.  நரசிம்ம ராவ், பெரும் ஊசலாட்டத்திற்குப் பின் சம்மதிக்க,  முதல் நிலை மதிப்புக் குறைவு நடக்கிறது. அது நடந்து முடிந்த 48 மணிநேரத்தில், இரண்டாம் நிலை மதிப்புக் குறைவு நடக்கிறது. அதற்குள், டென்ஷனாகிப் போன நரசிம்ம ராவ், இரண்டாம் நிலையை நிறுத்துமாறு காலை 9:30 மணிக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுனருக்குப் போன் செய்கிறார் – ஆனால், இரண்டாம் நிலையும் காலை 9 மணிக்கே நிறைவேற்றப்பட்டு விடுகிறது. ஆனால், இந்த முடிவு, நிதியமைச்சர் மற்றும் பிரதமர் இருவர் மட்டுமே எடுத்த முடிவு. இதை அவர்கள் மந்திரிசபையில் விவாதிக்க வில்லை. 1966 அனுபவத்தில், இம்முடிவுக்கு அவர்கள் மந்திரிசபையை நாடினால், ஒத்துழைப்பு கிடைக்காது என்பதே அதன் காரணம்.
யோசித்துப் பார்த்தால், இது மிகத் தைரியமான முடிவு என்றே தோன்றுகிறது. நாட்டின் பணத்தின் மதிப்பைக் குறைப்பது, அந்நாட்டின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்தும் (ஏற்றுமதி செய்யப் படும் பொருட்களின் விலை குறைந்து சர்வ தேசச் சந்தையில் ஏற்றுமதி அதிகரிக்கும்) என்பது பொருளாதார விதி.  இதனால், இறக்குமதி செய்யப் படும் பொருட்களின் மதிப்பு அதிகரித்தாலும், ஒப்பு நோக்க, ஏற்றுமதி, இறக்குமதியை விட, மிக அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்பது நம்பிக்கை. ஆனால், 1966 ல் நடந்த மதிப்புக் குறைத்தல் நடவடிக்கையினால், ஏற்றுமதி எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. எனவே, இது ஒரு பெரும் தோல்வி என்பதே நிபுணர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால், 1980களில், பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப் பட,  90 களில், நாட்டின் உற்பத்தித் துறையும், வேளாண் பொருள் ஏற்றுமதித் துறையும் ஓரளவு ஏற்றுமதிக்கான தரம், திறன் இரண்டிலும் 66 ஐ விட மேம்பட்டிருந்தது. ஆனால், எவ்வளவு மேம்பட்டிருந்தது என்பது பற்றிய ஒரு தீர்ப்பு என்பது தனி நபரின் கருத்து. அந்த அளவில், நிதியமைச்சரின் சொந்த முடிவு என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், 66க்குப் பின், 70களில், வெளிநாட்டில் வேலை செய்து, இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் ஒரு பெரும் மக்கட் தொகை உருவாகி இருந்தது என்பதையும் நிதியமைச்சர் மிக் நன்றாக அறிந்திருக்க வேண்டும். 20 சதத்துக்கும் அதிகமாக மதிப்புக் குறைக்கப் பட, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த உழைப்பாளிகளுக்கு அது ஒரு மினி ஜாக்பாட். முடிவுகளுக்கு சந்தைகள் மிகச் சாதகமாக வினையாற்றின. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு டாலர்களை அனுப்பத் துவங்கினர். இந்த முதல் வெற்றி, நிதியமைச்சருக்கும், ப்ரதமருக்கும் மிகப் பெரும் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவருமே, அரசியல் தலைவர்களுக்கே உரிய கவர்ச்சி எதுவும் இல்லாதவர்கள். சொதப்பியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று இன்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
அரசியல் முடிவு எடுக்கும் விதத்தில், இது ஒரு பெரும்பாடம்.  சில தடவை, முடிவெடுக்கும் பாரம்பரிய வழிமுறையைப் பின்பற்றலாம். சில தடவை, அதை மிக லாவகமாகத் தாண்டிப் போகலாம். இது தலைமையில் இருப்பவர்களின் தனிப்பட்ட முடிவு – discretion.  இது ஒரு அசாதாரணத் தலைமைப் பண்பு.  இதைச் சரியாக உபயோகித்து வெற்றி பெருபவர்கள் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறார்கள்.
பாராளுமன்றத்தில் இது பற்றிய விவாதம் நடக்கையில், சிங், அதை மிக தைரியத்துடன் எதிர்கொள்கிறார்.  66 தோல்வி பற்றி பேசுபவர்களுக்கு, சுதந்திரத்துக்கு முன்பு வரை, இந்திய ரூபாயின் மதிப்பை செயற்கையாகக் குறைவாக வைக்கப் பட்டு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் படும் பொருள்களை, இங்கிலாந்து மிகக் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்ளையடித்தை நினவூட்டுகிறார்.  எனவே, இந்தியாவின்  ஏற்றுமதி வளரவேண்டுமெனில், இந்திய ரூபாயின் மதிப்புக் குறைக்கப் பட்டேயாக வேண்டும் என்று வாதிடுகிறார். இந்திய ஏற்றுமதியின் திறன் என்பது, அவர் தனது டாக்டர் பட்டத்துக்கு எடுத்துக் கொண்ட தலைப்பும் கூட.
அடுத்து அவர்கள் எதிர்கொண்ட இன்னொரு கேள்வி. நாம் கட்ட வேண்டிய கடனை கட்ட வேண்டிய தேதி மற்றும் இதர நிபந்தனைகளை மாற்றம் செய்ய நிறுவனங்களிடம் பேரம் பேசினாலென்ன என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. ஆனால், அப்படிச் செய்வது கிட்டத் தட்ட கடன் கட்ட முடியவில்லை எனத் திவால் நோட்டீஸ் கொடுப்பது போல் தான். நிதியமைச்சர் மிகப் பிடிவாதமாக இதைச் செய்ய மறுக்கிறார். மட்டுமல்லாமல், இந்தியா, தான் வாங்கியுள்ள கடனை, குறிப்பிட்ட தவணைகளுள் நிச்சயமாகச் செலுத்தும் என்று மிகத் தெளிவாக அறிவிக்கிறார். இதுவும் ஒரு பெரும் தலைமைப் பண்பைக் குறிக்கும் செயல்.
இறுதியாகத்  தொழில் கொள்கை மாற்றம்.  ராகேஷ் மோகனும், ஜெய்ராமும் சேர்ந்து ஒரு வரைவை உருவாக்குகிறார்கள்.  நிதியமைச்சரின் ஆதரவோடு. ஒரு கட்டத்தில், நிறுவன அமைப்புகளுக்கான அமைச்சகத்தின் – monopolies and restrictive trade practices commission என்னும் ஒரு பெரும் ட்ராகனைப் போட்டுத் தள்ள வேண்டியிருக்கிறது. அதன் ஜூனியர் மந்திரியான ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு அதில் பெரும் விருப்பில்லை.  சிங் அவரை அழைத்து, ரங்கா (அவரின் செல்லப் பெயர்) வின் தந்தையான மோகன் குமாரமங்கலத்துக்கும் அவருக்குமான நட்பைப் பற்றிப் பேசி அவரை ஒத்துக் கொள்ள வைக்கிறார்.  ப்ரதமர் ஜூலை 9 ஆம் தேதி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க புது தொழில் கொள்கைகளை விரைவில் அறிவிப்போம் என ஒரு உரையாற்றுகிறார் . ஜூலை 12 ஆம் தேதி, இவர்கள் தயாரித்த அந்த நோட், ஒரே ஒரு பாரா மட்டும் இல்லாமல் அப்படியே அரசின் கொள்கையாக இந்துஸ்தான் டைம்ஸில் வெளியாகிறது.  இதுவும் மந்திரிசபையில் விவாதிக்கப் படவில்லை. ஒருவேளை, தனது குறிப்பு ரகசியமாக வெளியாகிவிட்டதோ என பீதியாகி விசாரிக்க, ஒரு மந்திரப் புன்னகை பதிலாகக் கிடைக்கிறது.
ஜூலை 15 ஆம் தேதி, லோக்சபாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் வெல்கிறது.   ஜூலை 19 தான் உண்மையான தேர்வு. மந்திரிசபையில் பெரும் அதிருப்தி.. நாம் நடந்து வந்த பாதையை முற்றிலுமாக மாற்றிவிட்டோம் எனக் கொதிக்கிறது பழம் கும்பல்.  நிதியமைச்சரும், ஜெய்ராம் போன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, புதிய பொருளாதாரக் கொள்கைகளை, ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி என்ற பெயர்களோடு கலக்கி, மானே, தேனே பொன்மானே எல்லாம் சேர்த்து, மீண்டும் சமர்ப்பிக்கிறார்கள்.  இந்த முறை, இந்தக் கொள்கைகளை ஆதரித்து, மிகத் திறம்பட வாதாடி, அனைவரின் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் அன்றைய வியாபார மந்திரி சிதம்பரம். மந்திரிசபை ஒத்துக் கொள்கிறது. இதில் பெரும் பங்கு, இறப்பதற்கு முன்பு, ராஜீவ் கவனமாக எழுதியிருந்த தேர்தல் அறிக்கையைச் சாரும் எனச் சொல்லும் ஜெய்ராம், மீண்டும் பதவிக்கு வந்துவிடுவோம் என நம்பிய ராஜீவ் மிக சிரத்தை எடுத்து எழுதியது என்கிறார். நம்புவோம். இறந்த தலைவரின் கனவு என்னும் ஒரு செண்டிமெண்ட் இங்கே வெல்கிறது.
இதற்குப் பின் தான், மன்மோகன் சிங்கின் கனவு பட்ஜெட் வருகிறது. ஜுலை 24 ல்.  கிட்டத் தட்ட செய்ய வேண்டிய கொள்கை மாற்றங்கள் அனைத்துமே பட்ஜட்டுக்கு முன்பே முடிந்துவிடுகிறது. அதை ஒரு ஆவணப் படுத்தும் ஒரு தொகுப்பே இந்த பட்ஜட்.  மிகப் ப்ரமாதமாக எழுதப்பட்ட உரையின் இறுதியில், “ சரியான சமயத்தில் எழும் ஐடியாவை உலகின் எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஒரு பெரும் பொருளாதாரச் சக்தியாக எழுவதும் அப்படி ஒரு ஐடியா “ என்று விக்டர் ஹ்யூகோவை மேற்கோள் காட்டி முடிக்கிறார். எவ்வளவு உண்மை!
சரளமான நடையில் எழுதியிருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.  இந்தியாவின் மிக முக்கியமான நெருக்கடி காலகட்டத்தில் அரசின் உள்ளே நடந்த விஷயங்களைப் படிப்பது ஒரு த்ரில்லர் கதையப் படிப்பது போல் இருக்கிறது. முக்கியமான ஆவணம். காங்கிரஸ் நெடியடித்தாலும், நெருக்கடி நிலையில், அரசியல் சார்புகள் விலகி, தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் மேலெழுந்து உண்மையான, சரியான நிபுணர்கள் வெற்றிகரமாகக் கையாண்ட ஒரு பிரச்சினை.
 

Rupa_Jairam_Ramesh_Jayram_Manmohan_Singh_PV_Narasmiha_Raoபெயர்: To the brink and back
ஆசிரியர்: ஜெய்ராம் ரமேஷ்.
பக்கங்கள்: 228
விலை: ₹395.00
வெளியீடு: ரூபா பப்ளிகேஷன்ஸ்

One Reply to “அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"”

  1. நல்ல அறிமுகக் கட்டுரை, ஆனால் சினிமா விமர்சனப் பதிவில் கதையைச் சொல்லி விடக் கூடாது என்னும் புதிய இணையக் கொள்கை போன்று, இதிலும் ஆசிரியர் அதிகம் புத்தக பொருளடக்கத்தை எழுதாது இருக்கிறார். பின்புலம் பற்றி நிறைய வரிகள் எழுதியவர், சற்று கூடுதலாக உள்ளே உள்ள பகுதிகள் குறித்தும் எழுதி இருக்கலாம்.
    முடிவு தெரிந்தே வாசித்தாலும் ராமாயணமும் , மகாபாரதமும் எப்படி ஈர்ப்பைத் தருமோ அது போன்றே இம்மாதிரியான புத்தகங்கள், உள்ளடக்கம் அரிது வாசித்தாலும் ஈர்ப்பாகவே இருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.