மேற்கில் சின்னத்திரை

Books_TV_Episodes_Serials_Breaking_Bad_Sopranos__Mad_Men_Difficult_Men_Behind_the_scenes_of_a_creative_revolution

டெக்ஸ்டர் தொடரில் [1]ஒரு காட்சி வரும், டெக்ஸ்டர் ஒரு தொடர் கொலையாளி அவனுடைய கொலைப் பிடியில் இருந்து தப்பித்த ஒருவன் டெகஸ்டரின் மனைவியைக் கொன்றுவிடுவான். இதனால், டெக்ஸ்டர் மிகுந்த குற்ற உணர்வில் ஆழ்ந்திருப்பான். அவன் மனைவி, குழந்தையுடன் இருந்த வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்றால் மன நிம்மதி ஏற்படும் என்று எல்லோரும் சொன்னதால், அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு சரக்கு வண்டியை வாடகைக்கு எடுக்க செல்வான். இப்போது தான் நான் குறிப்பிடும் காட்சி வருகிறது, எந்த லாரியை எடுக்கலாம் என்று ஒவ்வொன்றாக சோதனை செய்வான். ஒரு வண்டியில் ஒரு சிறு ரத்தக் கறை தெரியும். உடனே டெக்ஸ்டரின் மனதில் ஆர்வம் ஏற்படும், அந்த வண்டியை வாடகைக்கு எடுத்து அந்த ரத்தத்தை சோதனை செய்வான். இதற்கு முன்பு இந்த வண்டியை யார் வாடகைக்கு எடுத்திருக்கிறார் என்று தகவல்களைத் திரட்டுவான். அவன் காவல் நிலையத்தில் வேலை செய்வதால் இந்தத் தகவல்களை திரட்டுவது எளிதாக இருக்கும். அந்த ஒரு ரத்தக் கறை அவன் மன நிலையை முற்றிலும் மாற்றிவிடும்.. பின்னாளில் ஒரு மிகப் பெரிய கொலைக் கும்பலை அவன் கொலை செய்வதற்கு அந்த சிறு துளி உதவியிருக்கும். ஒரு தொடர் கொலையாளியின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை இந்தக் காட்சியின் மூலம் நம்மால் உணரமுடிகிறது.
இந்தக் காட்சி போல் ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு வாரத்திலும் தீவிரமான சம்பவங்கள் தொலைக்காட்சியில் காணக்கிடைக்கின்றன.
அமெரிக்க திரைப்படங்களைப் பற்றி இணையத்தில் தேடினால் தமிழில் ஆயிரக்கணக்கான பதிவுகள் கிடைக்கின்றன. ஆனால், அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களைப் பற்றி தேடினால் சொற்பமான பதிவுகளே உள்ளன. எல்லோரும் நிஜநாடகத் தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்களோ என்று நாம் சந்தேகிக்க வேண்டாம். அமெரிக்க திரைப்படங்களுக்கு நிகராக அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு அங்கே தொலைக்காட்சி தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் தொலைக்காட்சித் தொடர் என்று சொன்னவுடன் நம் தமிழ் மெகா தொடர்களோடு ஒப்பிட வேண்டாம். தமிழில் வருவது எல்லாம் தொலைக்காட்சி தொடர்கள் அல்ல, ஒலிச்சித்திரங்கள்.
அமெரிக்கத் தொடர்களைப் பற்றி முன்பு எனக்கும் பெரிய மதிப்பு இருந்ததில்லை. தமிழ் தொடர்களை போலத்தான் அதுவும் இருக்கும் என்று அவற்றை பார்க்காமலே இருந்தேன். நான் ஆஸ்திரேலியாவில், திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போதுதான் அவற்றைப் பற்றிய தெளிவான அறிமுகம் கிடைத்தது. பிறகு ஒவ்வொரு தொடராக பார்க்க ஆரம்பித்தேன். பார்த்த பிறகு பிரமித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்கத் தொலைக்காட்சிகள் வரலாற்றை மாற்றிய பல அற்புதமான தொடர்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக OZ, சொப்ரானோஸ், பிரேக்கிங் பாட், டெக்ஸ்டர், தி வொயர், தி ஷீல்ட், போர்ட்வாக் எம்பையர் இப்படிப் பல. இந்த தொடர்களைப் பார்த்தால் அமெரிக்க கலாச்சாரத்தைப் பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் மாறிவிடும் என்பது என் நம்பிக்கை. அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் இவை மிகவும் உதவும்.
இந்தத் தொடர்களை அணுகுவதற்கு முன்பு, இவற்றின் வடிவம் மற்றும் உருவாக்கும் முறையைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இவை எதுவுமே பத்தாண்டுகளாக, தினசரி ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் அல்ல. ஆண்டுதோறும் ஒரேயொரு சீசன் என்னும் முறையில் உருவாக்கப் படுபவை. பொதுவாக ஒரு தொடரில் ஒரு வருடத்திற்கு பத்தில் இருந்து பதிமூன்று எபிசோட்கள் வரும். ஒவ்வொரு பகுதியும் சுமாராக ஒரு மணிநேரம் ஓடக்கூடியவை. பிறகு அதன் வரவேற்புக்கு ஏற்ப அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடரும். உதாரணமாக Breaking Bad ஐந்து சீசன்கள் வந்தது. Dexter எட்டு சீசன்கள் வரை வந்தது. இது முழுக்க முழுக்க அந்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சம்பந்தப் பட்டது. சில நல்ல தொடர்கள் கூட பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
இது உருவாகும் முறையும் திரைப்படத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குனர், இரண்டு அல்லது முன்று திரைக்கதை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இந்த தொடர்கள் பத்திற்கும் மேற்பட்ட இயக்குனர்கள், இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து ஒரு நிறுவனம் போல் செயல்பட்டு உருவாகின்றன. இவர்களை வழிநடத்துபவரை தலைமைப் படைப்பாளி என அழைக்கிறார்கள் (ஷோ Creator). இந்த தலைமைப் படைப்பாளிதான் ஒரு தொடர் உருவாகக் காரணமாக இருப்பார். தான் வைத்திருக்கும் கதையை அமேசான், எச்.பி.ஒ., ஷோடைம், ஹுலூ, ஏ.எம்.சி., நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பெரிய தொலைக்காட்சி நிறுவனத்திடம், ஷோ உருவாக்குபவர் சொல்லுவார். இதை ஷோ பிட்சிங் (pitching) என்று சொல்லுவார்கள். அந்த நிறுவனத்திற்கு அந்த கதை பிடித்திருந்தால் அதை எடுக்கச் சம்மதிப்பார்கள்.
பிறகு இது அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
முதலில் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், தலைமைப் படைப்பாளியின் கண்காணிப்பில் மூன்று மாத காலம் தினமும் பத்து மணி நேரம் அவர்கள் வைத்திருக்கும் கதையை விவாதம் செய்வார்கள். முதலில் அந்த தொடருக்கான தொடக்கம் (ஓபனிங்) (இது தொடர் முழுக்க வரும்). பிறகு சென்ற வாரம் என்ன நடந்தது என்பதற்கான முன்னோட்டம் (teaser என அழைக்கப்படுகிறது. இது இரண்டாவது பகுதியில் இருந்து வரும்). பிறகு ஒரு மணி நேரம் ஒரு எபிசோட் என்றால், நான்கு விளம்பர இடை வேளைகள், ஆக நான்கு பாகமாக சீன்கள் பிரிக்கப்படும். ஏனென்றால், விளம்பரம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் மீண்டும் பார்ப்பதற்காக முடிச்சு இந்த நான்கு பாகங்களின் முடிவில் இருக்க வேண்டும்.
இவையெல்லாம் சிறு அட்டைகளில் எழுதப்பட்டிருக்கும் (மென் பொருள் நிறுவனத்தில் இதே முறையை பயன் படுத்துவார்கள், ஸ்டோரி கார்ட் என்று சொல்வார்கள்). பிறகு எந்த எழுத்தாளர்கள் எந்த பகுதிகளை (அல்லது எந்த கதாபாத்திரங்களை / எவ்வித உணர்ச்சிகளை – காதல், தத்துவ விவாதம் போன்ற அம்சங்களை) எழுதப் போகிறார் என்று எல்லோரும் கலந்தாலோசித்ததின் அடிப்படையில் தலைமைப் படைப்பாளி முடிவு எடுப்பார். ஒரு எழுத்தாளர் ஒரு எபிசோடை எழுத இரண்டு அல்லது முன்று வாரங்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் அவர்கள் அந்த அத்தியாயத்திற்கான உரையாடலையும் காட்சியமைப்பையும் எழுதிவிட வேண்டும். பிறகு இவர்கள் அனைவரும் மறுமடியும் இரண்டு மாத காலம் கூடி எழுதியவற்றில் திருத்தங்கள் செய்து, தலைமைப் படைப்பாளியின் முழு ஒப்புதலைப் பெறுகிறார்கள். பிறகு படப்பிடிப்பு தொடங்கும்.
இந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது. நான இந்தத் தொடர்களின் உருவாக்கும் முறையைப் பற்றிக் குறிப்பிடும் விஷயங்கள் மேலோட்டமானவை. இவற்றைப் பற்றி நீங்கள் இன்னும் விரிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் “Difficult Men: Behind the scenes of a creative revolution” என்ற புத்தகத்தை பரித்துரைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற சில தொடர்களை எடுத்துக் கொண்டு அவை எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கமாக சொல்கிறார்கள். திரைத்துரையில் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்த தொடர்களை பார்ப்பதற்கு பொறுமையும் நேரமும் உங்களுக்கு மிக அவசியம். இந்த தொடர்கள் தமிழகத்தில் பிரபலம் அடையாததற்கு இது ஒரு காரணம் என்று நினைக்கிறன். ஒரு பகுதிக்கு ஒரு மணிநேரம், ஒரு பருவத்திற்க்கு பதிமூன்று பாகங்கள் ஆக ஒரு வரிசையைப் பார்ப்பதற்கு பதிமூன்று மணி நேரம் தேவை. இரண்டாவது காரணம், பொருளாதாரம் சார்ந்தது. இந்த தொடர்கள் அனைத்துமே பணம் கட்டிப் பார்க்க கூடிய சானல்களில் வருகின்றன. நமது உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் யாரும் இது போன்ற அலைவரிசைகளுக்கு பணம் கட்டுவதில்லை. ஆனாலும் ஒரு சிலர் தனியாக பணம் கட்டி, இந்த தொடர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு முறை இந்த தொடர்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால் பிறகு உங்களால் அதை நிறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு உங்களை இவை வசீகரித்துவிடும். இந்த தொடர்களுக்கு அவர்கள் செய்யும் கள ஆய்வுகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.
என்னை மிகவும் கவர்ந்த மூன்று தொடர்களைப் பற்றிச் சற்று விரிவாக பார்ப்போம்.

தி சொப்ரானோஸ் (The Sopranos)

அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திய தொடர் சொப்ரானோஸ். தமிழ்த் திரைப்படத்தை எப்படி ”16 வயதினிலேக்கு முன்… பின்” என்று பிரிக்கிறோமோ அதே போல் சொப்ரானோஸைச் சொல்லலாம். அமெரிக்காவில் ஒரு இத்தாலியன் மாஃபியா கும்பலின் புதிய தலைவனாக டோனி சொப்ரானோ பொறுப்பேற்கிறான். அதன் பின் அவன் எப்படி தன் குடும்பத்தையும் கட்டப்பஞ்சாயத்துத் தொழிலையும் சமநிலையில் பார்த்துக கொள்கிறான் என்பதுதான் கதை.
நியூ ஜெர்சியில் இத்தாலிய-அமெரிக்க சட்டவிரோதக் குடும்பங்கள் எப்படிச் செயல்படுகின்றன? அவர்களின் அன்றாட வாழ்வு எப்படி இருக்கும்? அதில் வரும் சிக்கல்கள் என்ன என்று அந்த சமூகத்தைப் பற்றிய ஒட்டு மொத்த கற்பனைப் பார்வையை இந்தத் தொடர் நமக்கு தருகிறது. இந்த மாஃபியா குடும்பம் கிட்டத்தட்ட ஒரு நிறுவனம் போல் செயல்படுகிறது. ஒவ்வொருக்கும் தனித் தனி பொறுப்புகள் உண்டு. அவர்கள் மாதம் இவ்வளவு பணம் ஈட்ட வேண்டும் என்று இலக்குகள் உண்டு. பணத்தைக் கொடுக்கத் தவறினால் அபாராதம். இப்படி மாநிலங்கள் முழுக்க வெவ்வேறு குடும்பங்கள் அவர்களுக்குள் புவியல் ரீதியாக எல்லைகளைப் பிரித்துக் கொண்டு ஒரு ராணுவ ஒழுங்குடன் அவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக சிரத்தையாக இயங்குகிறார்கள்.
இந்தத் தொடர் அமெரிக்க தொலைக்காட்சியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தத் தொடரில் எழுத்தாளராக பணியாற்றியவர்கள் அதன் பிறகு மிக முக்கியமான சில தொடர்களின் தலைமைப் படைப்பாளிகளாக செயல்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக Mad Men தொடரை உருவாக்கிய மாத்யூ வெய்னர் மற்றும் போர்ட்வாக் எம்பயரை உருவாக்கிய டெரென்ஸ் விண்டர் (இவர்தான் தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்). இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிகிற நேரடி பங்களிப்புகள். தி சொப்ரானோஸ் மிகச் சிறந்த ஒரு எதிர்மறை கதாநாயகனை (வில்லனே ஹீரோவாக வருதல்) உருவாக்கிய தொடர்.
அதன் பின் பல தொடர்கள் இதே போல் சிறந்த எதிர்மறை நாயகர்களை உலவவிட்டன. ட்ரூ டிடெடிக்டிவ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ் என எல்லாவற்றிலும் வில்லன்களும் வில்லிகளும் வெறும் கெட்டவிஷயம் மட்டும் செய்யாமல் மனிதர்களாக, சாதாரணர்களின் குணாதிசயத்தை பிரதிபலித்து, சலனங்களுடனும் அச்சங்கொண்டும் வாழ்வதைக் காட்ட ஆரம்பித்தன. இதில் பிரேக்கிங் பாட் (Breaking Bad) சொப்ரானோஸிற்கு பிறகு அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்தது. இதை உருவாக்கிய வின்ஸ் கில்லிகன் அந்தத் தொடரின் நாயகன் வால்டர் வைட் பற்றி இப்படி குறிப்பிட்டார் “டோனி சொப்ரானோ இருந்திருக்காவிட்டால், வால்டர் வைட் வந்திருக்க மாட்டார்”.

டெக்ஸ்டர் (Dexter)

மயாமி மெட்ரோ காவல் நிலையத்தில்  பரிசோதனைப் பிரிவில் ரத்தச் சிதறல்களை ஆராயும் (forensic Blood Spatter Analyst) வேலை பார்ப்பவன் டெக்ஸ்டர் மார்கன் (Dexter Morgan). இவன் ஒரு தொடர் கொலையாளி (Serial Killer). இவன் கொலை செய்வது குற்றவாளிகளை மட்டும் தான். நவீன ராபின் ஹூட் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இவனால் கொலை செய்யாமல் இருக்க முடியாது. கொலை செய்யாமல் இருந்தால் இயல்பு நிலையில் இருந்து மாறிவிடுவான்.
இவன் தங்கையும் அதே காவல் நிலையத்தில் டிடெக்டிவாக வேலை பார்ப்பவள். அவளுக்கு இவனைப் பற்றி தெரியாது. அவன் அப்பாதான் அவனுக்கு மாட்டிக் கொள்ளாமல் கொலைச் செய்யும் வித்தையை கற்றுக் கொடுப்பார். அவரும் ஒரு போலிஸ் அதிகாரி. காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதால் இவனால் மிக எளிதாக குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்ட முடியும். இது பலம். ஆனால், எளிதில் மாட்டிக் கொள்ளும் அபாயமும் உண்டு. இப்படி ஒரு களத்தை அமைத்து இருபது வருடங்கள் அவன் எப்படி மாட்டிக் கொள்ளாமல் கொலை செய்கிறான் என்பது தான் மொத்த தொடரின் சாரம்.
இது மிகவும் நேர்த்தியாக தர்க்கப் பிசிறலே தெரியாத அளவு சொல்லப்பட்ட தொடர். இது போன்ற தொடர்களை பார்க்கும் போது எனக்கு ஏற்படும் ஆச்சரியம்: இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு. ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் என்றால் என்ன? அது காவல் நிலையத்தில் எப்படி கையாளப்படுகிறது என்பதை முழுமையாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் அவன் எப்படி புத்திசாலித்தனமாக கொலை செய்கிறான், எப்படி சிக்கலான தருணங்களில் இருந்து தப்பிக்கிறான் என்பதைப் பார்த்தால் நீங்கள் பிரமித்துப் போவீர்கள். இது வெறும் குற்றத்தொடர் மட்டும் அல்ல; இதனுள் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல் கையாளப்படுகிறது. குறிப்பாக அண்ணன் – தங்கை உறவு.
இந்த தொடரில் வரும் உரையாடல்களை மிக முக்கியமாகப் பார்க்கிறேன். இவ்வளவு கச்சிதமாகவும், அடர்த்தியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் எழுதப்பட்ட உரையாடலை வேறு எந்த தொடரிலும் நான் பார்த்ததில்லை. இந்தத் தொடரின் கடைசி அத்தியாயத்தை பார்த்தவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. அவ்வளவு உணர்வு பூர்வமான, கவித்துவமான முடிவு. இது போன்ற தொடர்களை நீங்கள் பார்க்கும் போது அது மேலும் உங்களை வளப்பமாக்கிறது. விதவிதமான பதின்மூன்று புத்தகங்களை வாசித்து முடித்த திருப்தியை ஒரேயொரு பகுதியில் மட்டும் கொடுத்தால், அது நல்ல தொடருக்கான அடையாளம். கிட்டத்தட்ட நூறு ஆகச்சிறந்த க்ரைம் நாவல்களை படித்த உணர்வை இந்த ஒரு தொடர் உங்களுக்கு நிச்சயம் தரும்.

ப்ரேக்கிங் பேட் (Breaking Bad)

என் வாழ்வில் நான் பார்த்த ஆகச் சிறந்த தொடர் என்று இதைச் சொல்லுவேன். ஐம்பது வயது வேதியல் ஆசிரியருக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன் அவர் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது . ஒரு சாதாரண ஆசிரியர் எப்படி போதைப் பொருள் தயாரிப்பவராக மாறுகிறார் என்பதுதான் கதை. ஐந்து சீசன்கள் கொண்ட தொடர் இது. ஒவ்வொரு பகுதியையும் கதையம்சத்துடனும் பரபரப்புடனும் நம்பகத்தன்மையுடனும் எடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சற்றே பொறாமை எழுந்து தொடருக்குள் தொலைந்து போகவைத்தது. நம் எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்க கூடிய சம்பவங்களோ என்று தோன்ற வைக்கும் கற்பனை துருத்திக் கொண்டு இடிக்காத கதை. இது ஏதோ போதனைத் தொடர் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு க்ரைம் திரில்லர். இந்த தொடரைப்பற்றி எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் அந்தத் தொடரைப் பார்க்கும் போது சுவாரசியம் இல்லாமல் போய்விடும். திரைப் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய தொடர் இது.
——————————————————
[1] அமெரிக்க கேபிள் நிறுவனமான ‘ஷோடைம்’ என்பதின் தொலைக்காட்சித் தொடர் இது. தகவலுக்குப் பார்க்க: http://www.sho.com/sho/dexter/home

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.