’மிதுனம்’ திரைப்படம் மூன்று காரணங்களால் என் ரசனைக்கு தீனி போட்டது.
1. ஏ ஆர் ரெஹ்மான் இசையமைத்த The Hundred-Foot Journey, ஜூலியட் பினாச்செ நடித்த Chocolat போல் உணவும் உணவு சார்ந்த வழிமுறைகளும் செய்முறைகளும் பேசியதால் சுவைத்தது.
2. இந்தியக் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு, திராவிட வாழ்க்கைமுறை என்று பிரஸ்தாபிக்கும் விஷயங்களை நெருடாமல் முன்னிறுத்திய விதத்தால் கவர்ந்தது.
3. இரண்டே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சுவாரசியமான சினிமா எடுக்க முடியும் என்று நிரூபித்ததால் அதிசயிக்க வைத்தது.
மனதிற்கு நெருக்கமான கதை அமைந்திருப்பது நேர்மையான காரணமாக இருக்கும். என்னுடையப் பெற்றோரை இந்தப் படத்தில் பார்த்து இருப்பதால் பிடித்து இருக்கும். அல்லது எங்களையே, இன்னும் சில பத்தாண்டுகள் கழித்து இப்படி பார்ப்பதால் கூட இருக்கலாம். இந்தியாவில் தன்னந்தனியே விடப்பட்டிருக்கும் அனாதைப் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அந்த மகன்/ள்கள் ஐவரும், சௌக்கியமாக அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், இன்ன பிற பரதேசங்களிலும் குடிபுகுந்து விட்டார்கள். அப்பாதாஸ் என்னும் தந்தையாக எஸ்.பி.பி. புச்சி லஷ்மி என்னும் தாயாராக லஷ்மி. இந்த இருவரும் சேர்ந்து மிதுனம்.
மிதுனம் என்றால் இராசி, அல்லது ஆண் பெண் இரட்டை, அல்லது புணர்ச்சி என்று அகராதி விளக்கம் சொல்கிறது. திரைப்படத்தில் தம்பதியர் இருவரின் வாழ்வு அர்த்தநாரீஸ்வர இருப்பாக அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமே இரண்டு. எதிரெதிர்ப்பதங்கள் இரண்டு. மேலே x கீழே; பாசம் x வெறுப்பு; மேற்கு x கிழக்கு; பிறப்பு x இறப்பு; நட்பு x காமம்; அன்பு x சண்டை… இப்படி.
மிதுனம் படத்தின் இயக்குநர் தனிகேல பரணியை (తనికెళ్ళ భరణి) ’வீட்ல விசேஷங்க’வில் துவங்கி பல தமிழ்ப்படங்களில் பார்த்திருக்கிறேன். அழகிய தமிழ்மகனில் விஜய்யின் அப்பாவாக, பிரகாஷ்ராஜின் தோனியில் பக்கத்துவீட்டுக்காரராக, கில்லியில் பிரகாஷ்ராஜின் தந்தையாக, பாஹுபலியில் சாமியாராக, வில்லனாக, மாமனாராக அறிந்து இருக்கிறேன். இதில் முற்றிலும் இன்னொரு பரிணாமம்.
ஸ்ரீ ரமணா எழுதிய ‘மிதுனம்’ (Gemini) நாவலை படமாக எடுத்து இருக்கிறார். தெலுங்கு சிறுபத்திரிகை ‘ரசனா’ வெளியீடாக 1998இல் தொடர்கதையாக ’ஒகே ஒக்க மிதுனம்’ நாவலாக மாறி இருக்கிறது. ஏழெட்டு சிறுகதைகளில் ஒரே கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதைகளின் பிராந்தியமாக கடலோர ஆந்திரப் பிரதேசம் இருக்கிறது. கோலாகலமான திருமணத்தில் நடக்கும் சம்பாஷணைகள் ஒரு சம்பவம்; அயல்நாட்டில் வாழும் பேரன், பாட்டியின் மீது காட்டும் பாசம் ஒரு சம்பவம்; உணவு பதார்த்தங்களின் சமையற்குறிப்பாக இன்னொரு சம்பவம்.
மிதுனம் கதைத் தொகுப்பில் கீழ்க்கண்ட கதைகள் இருக்கின்றன:
1. அரதிபுவு சாமுலாறு (ஆந்திர பிரபா, ’96)
2. தேனெலோ சீமா (ஆந்திர பிரபா, ’95)
3. வரஹாலபாவி (ஆந்திர ஜோதி, ’94)
4. தனலஷ்மி (இந்தியா டுடே, ’95)
5. சோடா நாயுடு (ஆந்திர ஜோதி, ’95)
6. பங்காரு முருகு (ஆந்திர ஜோதி, ’93)
7. பெல்லி (ஆந்திர பிரபா, ’97)
8. மிதுனம் (ஆந்திர பூமி, ’97)
ஸ்ரீரமணா ஆந்திர ஜோதியில் எழுதிக் கொண்டிருந்தபோது பகிடி எழுத்தாளராக, நகைச்சுவையாளராக மிளிர்ந்தார். இவற்றில் தேதிவாரியாக வரிசைப்படுத்தினால், ’பங்காரு முருகு’ முதல் கதையாக வெளிவந்தது. இந்தக் கதையில் கதைசொல்லிக்கும் பாம்மா என்னும் கதாபாத்திரத்திற்கும் இடையே உள்ள உறவின் சிக்கல்களைச் சொல்கிறார். நாஞ்சில் நாடனின் கதைகளில் வரும் கும்பமுனி போல் ‘பாம்மா’வை அணுகலாம். பாம்மா வயதானவர். அம்மாவைப் போன்றவர். பாரம்பரியங்களை உதறுபவர். பிரும்மத்தைப் போன்றவர். உலகத்தை உணர்த்துபவர். முட்டையைப் போல் வித்தாகவும், அதே முட்டை எளிதில் உடைவது போல் சல்லிசாக சுக்கு நூறாகுபவர்.
இந்தியா டுடேயில் வெளியான ’தனலஷ்மி’ கதையில் கிராமத்தில் பெட்டிக்கடை வியாபாரம் செய்யும் தம்பதியரை அறிமுகம் செய்கிறார். வீட்டில் விளையும் காய்கறிகளையும், தாங்களே செய்த பொருள்களை விற்பதற்கும் அந்தக் கடை இருக்கிறது பல்பொருள் அங்காடிக்கும் வீட்டுத்தெருமுக்கில் உள்ள பலசரக்கு கடைக்கும் உள்ள வித்தியாசம் உணர்த்தப்படுகிறது. கடனுக்கு வாங்குதல், நாள்பட இருந்த பழங்களை தள்ளிவிடுதல் என்று உள்ளூர் நாடார் கடையின் அன்னியோன்யம் தெரிகிறது. தச்சர், செருப்பு தைப்பவர், தையல்காரர், பருத்தி விவசாயி என்று அனைத்துமாக இயங்கும் கணவனும் கூட்டுறவாக இயங்கும் கிராமமும் தெரிகிறது.
இந்தத் தொகுப்பின் நீண்ட கதையாக மிதுனம் இருக்கிறது. இருபத்தியாறு பக்கங்கள் நீளம். அண்டைவீட்டாரின் மகன் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. முதியவர்களின் சண்டைகளும் ஊடல்களும் சமாதானங்களும் பரஸ்பர முட்டுக்கொடுத்தல்களும் சம்பவங்கள் வழியாக காட்சியாக்கம் பெறுகிறது.
உங்களுக்கு சாமர்செட் மாம் எழுதிய மகிழ்ச்சியான தம்பதியினர் (The Happy Couple) சிறுகதை நினைவுக்கு வரலாம். சாமர்செட்டின் கதையும் நதிக்கரையோரம் துவங்குகிறது. பக்கத்துவீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் வேலைக்காரியின் பார்வையில் சொல்லப்படுகிறது. ஆங்கிலக் கதையிலும் வயதான காதல் ஜோடியைப் பார்க்கிறோம். அவர்களிடையே நிகழும் பாசப்பிணைப்புகளைப் பார்க்கிறோம். ஆனால், ஒற்றுமைகள் அங்கேயே நின்றுவிடும். மாம் எழுதிய சிறுகதையில் அவர்களுக்கு ஒரு வயது குழந்தை உண்டு. அதன் பிறகு இதில் அவர்களுக்கு பூர்வ கதையும் கொலைக்குற்றப் பின்னணியும் காதலுக்கு கொஞ்சம் போல் சொத்து மேல் ஆசை முலாமும் கொடுக்கப்படுகிறது.
இந்தத் தொகுப்பைக் குறித்த ஆராய்ச்சி செய்தபோது சம்பந்தமில்லாமல் கவிஞர் வைரமுத்துவும் நினைவிற்கு வந்தார். குமுதம் இதழில் வைரமுத்து வாராவாரம் சிறுகதை எழுதுகிறார். இதே போல், ஒரே கதாபாத்திரங்கள் கிடையாது என்றாலும், பாரம்பரிய தமிழ்ச் சின்னங்களும் கலாச்சாரங்களும் வந்து போகின்றன. கவிப்பேரரசின் கதைகள் மொழிமாற்றமும் காணும். குறும்படங்களாகவும் மாறும். பரவலாகப் பேசப்படும். குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியமாக இந்திய அளவில் அறியப்படும். ஆனால், தமிழ்ச்சூழலில் அவரை விட, இந்த சிறுகதைகளை விட முக்கியமான ஆக்கங்கள், அதே போல் பக்கத்து மாநிலக்காரர்களைச் சென்றடைகிறதா?
மிதுனம் தொகுப்பில் ஸ்ரீரமணா எழுதிய இன்னொரு சிறுகதையை எம்.டி.வாசுதேவன் நாயர் ”ஒரு சிறு புன்சிரி” (ഒരു ചെറു പുഞ്ചിരി) என்று மலையாளப் படமாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட ‘மிதுனம்’ படத்தின் கதையேதான் எம்.டியின் படமும். நகரத்திற்கு அழைக்கும் குழந்தைகளின் கோரிக்கையை உதாசீனம் செய்யும் வயதான பெற்றோர்கள் உண்டு. எழுபதிலும் காதலுடன் அன்றாட வேலைகளை ஆசையுடன் நடத்தும் கணவன் + மனைவி உண்டு. விளையாட்டும் விவசாயமும் ஆக பொழுதுபோக்கும் முதியவர்கள் உண்டு. அந்தப் படத்தில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையும் காண்பிக்கிறார்கள். ’மிதுனம்’ படத்தில் ‘பூவே பூச்சூடவா’ பத்மினியைப் படுத்தும் வால் குழந்தைகள் போல் கதவைத் தட்டி தொல்லை செய்யும் சிறார்களையேப் பார்க்கிறோம்.
வயதான தம்பதியரின் நேசம் குறித்து பண்ணையாரும் பத்மினியும் முதல் ஒகே கண்மணி தொட்டு, ஃப்ரென்ச் அமூர் வரை பல படங்கள் பார்த்திருப்போம். இந்தப் படம் தெலுங்கு பண்பாடுகளையும் அந்தக் கால நினைவுகளையும் அடிநாதமாக ஒலிக்கவிட்டு, நம் அப்பா அம்மாவின் பாசப்பிணைப்பை அசை போடுகிறது
Excellent review: This has kindled the interest in me, wanting to see this movie desperately. Who has released it and is it in Tamil? Please let me know.
மிதுனம் கதையை அதே தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து, “இருவாட்சி இலக்கிய துறைமுகம்” பொங்கல் சிறப்பு வெளியீடு 6,(bookudaya@gmail.com) தொகுப்பாசிரியர் எஸ். சங்கரநாராயணன், இந்த வருடம் வெளியாகி உள்ளது. மிக அருமையான கதை.திரைபடத்தில் அதன் பரிமாணம் சற்று விலகி விட்டது போல் இருந்தது. நான் மொழி பெயர்த்த கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை.
There are flaws in this article.
First “Mithunam” is not a novel. It is just a story. It moved the artist Baapu and he himself written it with his own handwriting. Baapu has a unique style of script. So, the Rasana published that script(that one story) in the name of “Okay oka mithunam”(meaning ‘only one mithunam’) It is like a Sempathippu(Collectors editon) of Mithunam-the story.
That’s all. Not novel. I have seen Jeyamohan’s “Yaanai doctor” story in this same way.
I think the essay writer, Boston Bala, followed the cinema websites propoganda who says it as a novel and not checking himself.
And,
In “Mithunam” Book, all the stories are different. Not at all weaved by same characters. See the story “Pelli” it is about the conversation between a contractor and a Govt. Official. All other stories going their own way.
“Bangaru Murugu” is a superb one. Here also “Baama” is not a name as the essayist(Boston Bala) saying. Here, Baama is a grandma. And, there is no comparison with Nanjil’s Kumbamuni.
Kumbamuni is a versatile character with an excellent satire on society and self-digging. Bangaru Murugu baama is a any other grandma in our home with her own love on grandchildren. The climax of the story will mist our eyes.
– Raju