[stextbox id=”info” caption=”ஈரானா? அர்ஜென்டீனாவா? பயமா?”]
ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுத்து, அவரின் அரசியல் சூழ்ச்சிகளை ஆராய்ந்தால் என்ன நடக்கும்? அது அர்ஜென்டீனாவாக இருந்தால் அந்த மாதிரி துப்பு துலக்கியவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார். அப்படிச் செய்தவருடைய பெயர் நிஸ்மன். அவரை தற்கொலை செய்து கொள்ளுமளவு எது தூண்டியது அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று கேள்விகள் கேட்கத் துவங்கிய நியு யார்க்கரின் டெக்ஸ்டர் ஃபில்கின்ஸ், நிஜமான நிருபர் வேலையைச் செய்திருக்கிறார்.
2008 மும்பை குண்டுவெடிப்பில் நரிமன் ஹவுஸ் தாக்கப்பட்டு யூதர்கள் கொல்லப்பட்டது மாதிரி அர்ஜென்டீனாவிலும் தற்கொலைத் தாக்குதல் நடந்திருக்கிறது. 1994ல் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 85 பேர் இறந்திருக்கிறார்கள். முன்னூறுக்கும் மேற்பட்டவர் காயமடைந்திருக்கிறார்கள். லெபனானின் இஸ்லாமிய இயக்கமான ஹெஸ்பொல்லா துணையுடன் இரான் அரசாங்கமே இந்த படுகொலையை நிறைவேற்றியது என்னும் ஆதாரங்களை, 2006ல் நிஸ்மான் வெளியிடுகிறார். ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் வெளியுறவுத்துறை அமைச்சரும் குற்றவாளிகள் பட்டியலில் முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்படுகிறார்கள். ஈரானை விட்டு வெளியே வந்தால் கைதாவோம் என்னும் நிலையில் பெருந்தலைவர்கள் முடக்கப்படுகிறார்கள்.
அர்ஜெண்டீனாவின் இப்போதைய ஜனாதிபதியான கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் (Cristina Fernández de Kirchner) பதவிக்கு வருவதற்கு முன்பு அவருடைய கணவர் நெஸ்டர் (Néstor Kirchner) அரியணையில் இருந்தபோதும், இந்த வழக்கில் நிஸ்மானுக்கு பூரண ஆதரவு கிடைத்து வந்தது. ஆனால், 2013ல் ‘எல்லாவற்றையும் மறந்து விட்டு புது வாழ்க்கையைத் துவங்கலாம்’ என ஈரானுடன் கிட்டத்தட்ட சமரசத்தை கிறிஸ்டினா மேற்கொள்கிறார். அர்ஜென்டீனாவின் ஜனாதிபதி ஏன் அந்தர் பல்டி அடித்தார் என நிஸ்மேன் ஆராய்ந்து அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அது தொடர்பாக, அவரை சாட்சி சொல்லவும் விசாரிக்கவும் சட்டமன்றம் அழைக்கிறது, நேரில் வந்து விளக்குவதற்கு முந்தின நாள் கையில் துப்பாக்கியுடன் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார் நிஸ்மன்.
அவரை யார் கொன்றார்கள்?
http://www.newyorker.com/magazine/2015/07/20/death-of-a-prosecutor
[/stextbox]
[stextbox id=”info” caption=”வேதியியலின் புகையிலை”]
பார்வைக்கண்ணாடியில் இருக்கும் மேற்பூச்சு; தண்ணிர் புகமுடியா ஆடை; டென்னிஸ் மட்டை; சிந்தினால் கறையாகாத தரைவிரிப்பு; அழுக்கு பட்டால் எளிதில் துடைத்துவிடக் கூடிய மேஜைப் பூச்சுகள்; தீயணைப்பில் உதவும் நுரை; துரித வகை உணவுகளை மூட உதவும் மேலுறை; பார்கார்னை நுண்ணலை அடுப்பில் சமைப்பதற்கான பைகள்; சைக்கிளில் உராய்வுகளை நீக்கும் மசகெண்ணெய்; செயற்கைக் கோளுக்கான உதிரி பாகங்கள்; தொலைத்தொடர்பிற்கான வடங்களும் கயிறுகளும்; பீட்ஸா அட்டைப்பெட்டி…
இதெல்லாம் பயன்படுத்தினால் என்ன வரும்?
உயர் இரத்த அழுத்தம் தோற்றுவிக்கும்; இரத்தக் கொழுப்பு (கொலஸ்டிரால்) உயரும்; குடற்புண்கள் (ulcerative colitis) உண்டாகி மலக்குடல் புற்றுநோய்க்கு இட்டுசென்று ஆசனவாய் நீக்கப்படலாம்; கேடயச்சுரப்பி (தைராய்டு) பாதிப்பு வரும்; விரைப் புற்றுக்கட்டி நோய் உண்டாகும்; சிறுநீரகப் புற்றுநோய் வரலாம்…
சொல்லிக் கொண்டே போனால், இரண்டு பட்டியல்களும் முடியாது. இவற்றில் எல்லாம் ஊடுருவி நிறைந்திருக்கும் மூலப்பொருள் என்ன? சி8 என்று சொல்லப்படும் perfluorooctanoic acid, அல்லது PFOA. போபாலில் விஷவாயுக் கசிவு ஏரற்படுத்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய டியுபாண்ட் இந்த மூலப்பொருளை பெருமளவில் தயாரிக்கிறது. டெஃப்லான் விற்பனையின் மூலமாக மட்டுமே ஒரு நாளைக்கு 95 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறது
பத்தாண்டுகளுக்கு மேலாக 3,500க்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தாலும் இந்த கரிமப் பொருள்களின் இரசாயன பின்விளைவுகளையும் வேதியியல் அபாயங்களையும் டௌ, ட்யூபாண்ட் போன்ற வேதித்தொழிற்சாலைகள் கசியவிடவில்லை. சோதனைச்சாலைகளில் எலிகளும் முயல்களும் இந்த கார்பன் பொருளை பயன்படுத்துவதால் புற்றுநோயும் இன்ன பிற வியாதிகளும் உண்டானதை முழுக்க மறைத்துவிட்டன. அந்த ஆராய்ச்சி குறித்த தகவல்களும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களையும் தெளிவாக்கும் கட்டுரை இங்கே கிடைக்கிறது.
https://firstlook.org/theintercept/2015/08/11/dupont-chemistry-deception/
[/stextbox]
[stextbox id=”info” caption=”நீதியும் நிதியும்”]
கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் எத்தனை பேர் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்? விடை: ஒரே ஒருவர். கிரெடிட் சுயிஸ் வர்த்தர்கராக இருந்த கரீம் என்பவருக்கு முப்பது மாத சிறைவாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
2009ல் இருந்து 49 நிதி நிறுவனங்கள் 190 பில்லியன் டாலர்களை அபராதத் தொகையாகவும் நஷ்ட ஈடாகவும் அரசாங்கத்திற்கு செலுத்தியிருக்கின்றன. வீழ்ந்த பொருளாதாரத்தை நிலைநிறுத்த கொடுக்கப்பட்ட ஆயிரம் பில்லியன் டாலர் கடனோடு ஒப்பிட்டால், இந்தத் தொகையின் கடுகளவு புரியும். இந்த 190பிலியன்களைக் கூட தவறு செய்த தனி மனிதர்களிடமிருந்து மீட்கவில்லை. நிறுவனங்களே, குற்றங்களை ஒப்புக் கொள்ளாமல், தங்களின் சந்தாதாரர்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் தண்டல் வசூலித்து, அரசிற்கு தந்திருக்கின்றன. இந்தத் தொகைக்கு உபரி சலுகையாக வரிவிலக்கு கிடைத்திருக்கிறது. உதாரணத்திற்கு, இந்த மாதிரி ஒப்பந்தம் போட்டத்திற்காக ஜேபி மார்கன் சேஸ் வங்கியின் இயக்குநர் சபை, தங்களின் செயற்குழு தலைவருக்கு 74% சம்பள உயர்வு கொடுத்து, அவருடைய வருமானத்தை இருபது மில்லியனாக உயர்த்திப் பாராட்டியும் இருக்கிறார்கள்.
1980ல் இதே போன்ற பொருளாதார தகிடுத்தத்தங்களை அமெரிக்கா எதிர்கொண்டபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கியாளர்கள் கம்பியெண்ண அனுப்பப்பட்டார்கள். அப்படியானால், இந்த தடவை மட்டும் ஏன் எவரையுமே கைது செய்யவில்லை? இந்தக் கட்டுரை ஆராய்கிறது:
http://www.theatlantic.com/magazine/archive/2015/09/how-wall-streets-bankers-stayed-out-of-jail/399368/
[/stextbox]
[stextbox id=”info” caption=”செத்தும் வாழ்வது”]
நம் வாழ்க்கையில் புதிய விஷயங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், இறந்த பிறகு நடப்பனவற்றில் என்ன புதுமைகள் உருவாகி இருக்கின்றன?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழியாக, ஈமச்சடங்குகளும் மாறுகின்றன. இறந்தவரின் உடலை மண்ணிற்கே திரும்பச் செலுத்தும் முறையில் இயற்கைௐகு அனுசரணையான வழிகளும் வர ஆரம்பித்திருக்கின்றன. பூதவுடலை மணமூட்டிப் பேணி வைக்கும் தைலங்களைக் குறைத்து, அவற்றில் இரசாயன நச்சுக்கள் இல்லாமல் எளிதில் மண்ணோடு மண்ணாக உதவும் மருந்துகள் போடுவது பரவலாகி இருக்கிறது. காலாகாலத்திற்கும் கல்லறையின் கீழே நிலைத்திருக்கும் சவப்பெட்டிகளுக்கு பதில் மக்கிப் போகும் பெட்டிகளுக்கு மவுசு வந்திருக்கிறது. அது தவிர வானில் இருந்து விண்வெளியில் அஸ்தியைத் தூவுவது, கல்லறைக்கல்லில் QR என்னும் அடையாளக் குறியீடுகளை இடுவது, இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர் செலவில் இறந்த உடலை வெப்பவழி பளபளப்பாக்கம் வழியாக என்றென்றும் சேமித்து பிற்காலத்திற்கான தொழில்நுட்பத்திற்காக சேமித்து வைப்பது என்று 21ஆம் நூற்றாண்டு சடங்குகளை இங்கு பார்க்கலாம்:
http://www.hopesandfears.com/hopes/city/city/215745-the-future-of-cemeteries
[/stextbox]
[stextbox id=”info” caption=”காதோடு பேசாதே… கணினியோடு கொந்து”]
உள்ளடி தரகு என்பது பிரசித்தமானது. சுருக்கமாக இப்படி விவரிக்கலாம்.
நிறுவனங்கள் வாங்குவதையும் விற்பதையும் தொழிலாகக் கொண்ட வங்கியில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். யாருடன் எப்பொழுது எந்த அமைப்பு இணைய வேண்டும் என்பதை பரிந்துரைப்பவர், அந்த இரகசியத்தை உங்கள் காதில் ஓதுவார். அதை ஒரு கைக்குட்டையில் கிறுக்கி, குறிப்பிட்ட முக்குச் சந்தில், பங்குத்தரகராகிய உங்களின் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுப்பீர்கள். அவரும் அதைப் படித்துவிட்டு, அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்வார். குறிப்பிட்ட நிறுவனத்தின் செய்தி, தொலைக்காட்சியில் வந்தவுடன், அதன் பங்குகள் எகிறும். உடனடியாக, அந்த சகோதரி, நிறுவனத்தின் பங்குகளை விற்று இலாபம் அடைவார். உங்களுக்கு ஐம்பது சதவிகிதம் மாமூல் கொடுத்துவிடுவார். தெருமுக்கு என்றில்லை… இதை கோல்ஃப் விளையாட்டின் நடுவே கூட நிறைவேற்றலாம்.
ஆனால், இப்போது எங்கே பார்த்தாலும் உளவு பார்க்கிறார்கள். இந்த மாதிரி ஜாலியாக உள்ளடி தரகுவேலை செய்ய இயலுவதில்லை. இங்கேதான் கீழ்வரும் செய்தியின் கதாநாயகர்களாகிய உக்ரெய்ன் நாட்டு கொந்தர்கள் உள்ளே நுழைகிறார்கள். மேற்குலகின் முக்கிய செய்தி விநியோகஸ்தர்களான மார்க்கெட் வொயர், பி.ஆர். நியுஸ் வைர், பிஸினஸ் வொயர்ட், நிறுவனங்களை, அவர்களுக்குத் தெரியாமல் தாக்கி, இருட்டுச் சந்தில் நின்று, ஒட்டுக் கேட்க ஆரம்பிக்கிறார்கள் உக்ரய்ன்காரர்கள். அவர்களுக்கு வரும் தகவல்களை, அதிகாரபூர்வமாக நிறுவனங்களே வெளியிடுவதற்கு முன்பே, அத்துமீறி தரவிறக்கி, தரகர்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்களும், கொள்ளைப் பணம் அடிக்கிறார்கள்.
ஒரு நிறுவனத்தின் செய்கையை முன்கூட்டியே அறிந்து, பங்கை வாங்கி, திருடுவது என்பது அந்தக் காலம். 150,000 நிறுவனங்களின் நடவடிக்கைகளைத் திருடி, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து, நூறு மில்லியன் டாலர் கள்ளத்தனம் செய்வது இந்தக்காலம் என்கிறது ப்ளூம்பெர்க் கட்டுரை:
http://www.bloombergview.com/articles/2015-08-11/why-not-insider-trade-on-every-company-
[/stextbox]