1
ஃபெப்ரவரி 1 2015. வருடாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வட அமெரிக்காவின் மிக முக்கியமான, சூபர் பௌல் (Superbowl) என்று அழைக்கப்படும் ஒரு கோப்பைக்கான, அமெரிக்க ஃபுட்பால் விளையாட்டின் இறுதி ஆட்டம். ஆட்டத்தில் இரு சிறந்த அணிகள் நியூ இங்க்லன்ட் பேட்ரியட்ஸ் (New England Patriots) அணியும், ஸியாட்டில் சூபர்ஹாக்ஸ் ( Seattle Superhawks) அணியும் மோதிக்கொண்டிருக்கிறார்கள். பேட்ரியட்ஸ் 28-24 என்ற கணக்கில் முன்னணி. ஆனால் ஸியாட்டில் அணியினர், எதிர் அணியின் எல்லைக்கோட்டிலிருந்து 1 கஜ தூரம் தொலைவில் இருக்கிறார்கள். இறுதி 20 வினாடிகள். ஸியாட்டில் செய்யவேண்டியது எல்லாம் எளிதாக தன் வீரர் ஒருவரிடம் பந்தைக் கையில் கொடுக்கவேண்டும். அந்த வீரர் எதிர் வீரர்களைத் தள்ளிவிட்டு 1 கஜ தூர இறுதிக்கோட்டைத் தொடவேண்டும். அவ்வளவுதான்.
ஆனால் ஸியாட்டில் அணியின் தளபதியான (quarterback) ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் அணியின் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற ஸியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. ஸியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார்.
தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணை கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.
இந்த வெற்றியை பேட்ரியட்ஸ் ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினாலும், ஒரு ஓரத்தில் கசப்பு இருந்தது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய மொத்த அணியிலும் முக்கியமானவர் டாம் ப்ரேடி (Tom Brady). அவர் மீது இரண்டு வாரங்கள் முன் சந்தேக நிழல் படிந்திருந்தது. அதை ஊடகங்கள் Deflategate என்று அழைத்தன.
Deflategate பற்றி பார்ப்பதற்கு முன் அமெரிக்கன் ஃபுட்பால் என்றழைக்கப்படும் விளையாட்டைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்துவிடுவோம்.
அமெரிக்கன் ஃபுட்பால் ரக்பியிலிருந்து வந்தது. இந்த விளையாட்டு 1869-ல் இரண்டு கல்லூரி அணிகளிடையே விளையாடப்பட்டது. இதன் வீச்சு அமெரிக்க மக்களிடையே மிக ஆழமாக ஊடுருவிய ஒன்று. பள்ளிகளில் 3ம் வகுப்புகளிலிருந்து ஆரம்பித்து, கல்லூரி வரையில் விளையாடப்பட்டு, பின் தொழில்முறை விளையாட்டாகவும் விளையாடப்படும் ஒன்று.
இந்த விளையாட்டில் முக்கியமானது விளையாட்டு வீரரின் உடலுறுதி. குறைந்தது 160 பவுண்டுகளாவது இருக்கவேண்டும். அதுவும் தடுப்பாட்ட வீரர்கள் (defense) சுலபமாக 200-லிருந்து 270 பவுண்டுகள் வரை இருப்பார்கள். திடலில் மோதிக் கொள்ளும்போது மலைகள் மோதுவதுபோல் இருக்கும். அதனால் இந்த விளையாட்டு மிகப் பிரபலம். பணவரவிலும் வருடத்திற்கு இது சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டுகிறது.
இந்த விளையாட்டில் வினோதமானது ஃபுட்பால் என்று அழைக்கப்பட்டாலும், பந்தை உதைப்பது என்பது ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கு செலுத்தும்போதுதான். அதன் பிறகு கைகளால் மட்டுமே விளையாட வேண்டும். கால்களால் தவறியும் உதைத்துவிட்டால் அது அபராதமாகிவிடும்.
விளையாட்டு விதிகள் சுலபம். பந்தை மொத்தம் 100 கஜங்களுக்கு (ஏறத்தாழ 300 அடிகள்) ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு செலுத்தவேண்டும். திறமை இருந்தால் ஒரு தவணையிலும் கடக்கலாம். அல்லது ஒவ்வொரு தவணைக்கும் குறைந்தபட்சம் 10 கஜங்கள் கடக்கவேண்டும். ஒவ்வொரு தவணையிலும் மூன்று முயற்சிகளுக்கு அனுமதி உண்டு. நான்காவது முயற்சியில் ஒன்று பந்தை காலால் உதைத்து மறுமுனைக்கு அனுப்பவேண்டும் அல்லது துணிந்து 10 கஜங்களைக் கடக்க முயலலாம். அவ்வாறு செய்யவில்லையென்றால் எந்த இடத்தில் பந்து நிறுத்தப்பட்டதோ அங்கிருந்து எதிரணி ஆரம்பிக்கும்.
உதைக்கப்பட்ட பந்து எதிராளியின் எல்லைக்கோட்டைக் கடந்தால் எதிரணி அவர்கள் பகுதியில் 20 கஜத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இதனால் திறமையான உதைவீரர்கள் பந்தை உதைக்கும்போது எதிராளியின் 1-20 கஜத்திற்குள் விழுமாறு பார்த்துக் கொள்வார்கள். எதிரணி வீரர் அதைப் பிடித்தால் அதை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார். அப்போது பந்தை உதைத்த அணி வீரர்கள் அவரைத் தடுக்கவேண்டும். எங்கே தடுக்கப்பட்டாரோ அங்கிருந்து விளையாட்டு ஆரம்பிக்கும்.
பந்து கையில் இருக்கும் அணியை தாக்கும் அணி (Offense team) என்றும், அவர்களைத் தடுக்கும் அணியை காக்கும் அணி (Defense team) என்றும் குறிப்பிடுவார்கள். காக்கும் அணி பந்தைக் கீழே விழுமுன் பிடித்து விட்டால் அதை மறித்துப் பறிப்பு (interception) என்பார்கள் (முதல் பத்தியில் பார்த்த மால்கம் பட்லரை நினைவு கூரவும்). அப்போது இரண்டு அணிகளும் வெளியேறி, தடுத்துப் பறித்த அணி இப்போது தாக்கும் அணியாக மாறி அதன் offense team உள்ளே வரும். அதைப் போல பந்தை இழந்த அணி இப்போது காக்கும் அணியாகி, அதன் காவல் படை (defense team) உள்ளே வரும்.
பந்து வைத்திருந்த அணி எதிராளியின் எல்லைக் கோட்டை (அதாவது 100 கஜங்கள்) தாண்டினால் அவர்களுக்கு 6 புள்ளிகள் கிடைக்கும். பின் பந்தை 25 கஜங்களில் இருந்து உதைத்து கோல் கம்பங்களுக்கு இடையில் செலுத்தி கூடுதலாக ஒரு புள்ளியைப் பெறலாம். அல்லது பந்தைத் தன் அணி வீரரிடம் தூக்கி எறிந்து, அவர் மீண்டும் எல்லைக் கோட்டைக் கடந்து (இது முக்கியம்) 2 புள்ளிகள் பெறலாம்.
இரு அணிகளும் தலா 11 வீரர்களை களத்தில் இறக்கும். விளையாட்டு 4 காற்பங்குக்ள். ஒவ்வொரு காற்பங்கும் 15 நிமிடங்கள் நடக்கும். ஆனால் மொத்த விளையாட்டு நேரம் 3 மணி நேரங்கள். மொத்தம் 32 அணிகள். ஒவ்வொரு அணியும் மற்ற 15 அணிகளோடு விளையாடும். ஒவ்வொர் அணியும் வாரம் ஒரு முறை விளையாடும். அதன் பிறகு playoffs. இறுதியாக சூபர் பௌல் என்ற திருவிழா கொண்டாட்டமான இறுதி ஆட்டம். சூபர் பௌலில் வெற்றி பெற்ற அணி அந்த வருட முதன்மையான அணி.
ஃபுட்பால் விளையாட்டுகள் ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் ஆரம்பித்து ஃபெப்ரவரி முதல் வாரத்தில் முடியும். பனிப்பொழிவானாலும், -20 டிகிரி ஃபாரன்ஹைட்டாக இருந்தாலும் விளையாட்டு நடக்கும்.
பந்து வைத்திருக்கும் அணியின் தலைவர் quarterback என்றழைக்கப்படுபவர். இவர் அணியின் முகம் என்றே சொல்லலாம். பேட்ரியட்ஸின் முகம் டாம் ப்ரேடி. ஆனால் அவரையும் விட முக்கியமானவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர். அணியின் மூளை அவர்தான். அவர் சொல் வேதம்.
பேட்ரியட்ஸ்-ன் மூளை பில் பெல்லிசெக் (Bill Bellichick). இவரின் தலைமையில் அணி சாதாரண நிலையிலிருந்து அமெரிக்க ஃபுட்பால் அரங்கில் சாம்ராஜ்யமாக மாறியது. தன் அபாரமான அறிவால் எந்த வீரரையும் திறமையான நிலையிலிருந்து அதி திறமைசாலியாக மாற்றுபவர். இவரைப் பற்றி ஒரு முழு புத்தகமே எழுதலாம்.
தலைமைப் பயிற்சியாளர் கீழ் பெரும் துணை பயிற்சியாளர்களின் ஒரு படையே இருக்கும். Offense, defense, quarterback, linebacker என்று பலதரப்பட்ட பயிற்சியாளர்கள் இயங்குவார்கள். இந்தப் பொறுப்புகளுக்குத் தலைமைப் பயிற்சியாளர் தனக்கு நன்கு தெரிந்த, முக்கியமான திறமையாளர்களை நியமிப்பார். தலைமைப் பயிற்சியாளர் வெற்றி பெற்றால் இவர்களும் செழிப்பார்கள். இவர்கள் சரியாக தன் வேலையை செய்தால் அணி வெற்றி பெறும். இல்லையென்றால் முதலில் அடி வாங்குவது தலைமைப் பயிற்சியாளர். அதன் விளைவாக அவர் நியமித்த உபபயிற்சியாளர்கள். அமெரிக்க விளையாட்டில் எல்லோருக்கும் பொறுப்பு உண்டு. பயிற்சியின்போது விளையாடுபவர்களுக்கு பானம் வழங்கும் பணியாளர்கள் உட்பட.
ஒவ்வொரு முயற்சியின் போதும், offense team ஒரு குறிப்பிட்ட அணிவகுப்பை மேற்கொள்வார்கள். இது அவர்கள் பயிற்சியில் எந்த அணியோடு விளையாடப்போகிறார்களோ அதன் பலவீனத்தைப் பொறுத்து அமையும். திறமையான defense பயிற்சியாளர்கள் அதைப் பார்த்தவுடன் தன் அணிவீரர்களுக்கு சைகை மூலம் அறிவிப்பார்கள். அதன்படி defense அணி தன் அணிவகுப்பை அமைத்துக் கொள்ளும். ஒரு அணியின் வீரர்கள் ஒவ்வொருவரையும் அதன் எதிரணி வீரர்கள் ஆக்ரமிக்கும் வண்ணம் களம் இருக்கும்.
Quarterback-க்கு முன்னால் இருக்கும் வீரர் (Center என இவரை அழைப்பார்கள்) சரியான நேரத்தைக் கணக்கிட்டு பந்தைக் கொடுப்பார். பந்து நகர ஆரம்பித்தவுடன் defense team பாய்வார்கள். Quarterback இப்போது முடிவு எடுக்கவேண்டும். தூக்கி எறியலாம்? அருகில் இருக்கும் running back நிலையில் இருக்கும் வீரரிடம் கொடுக்கலாம். அல்லது தானே பந்தைத் தூக்கிக் கொண்டு ஓடலாம். தூக்கி எறியலாம் என்றால் தன் அணி வீரர் யார் எதிரணி வீரரால் முடக்கப்படாமல் இருக்கிறார்? இது அத்தனையும் 2-3 வினாடிகளில் நடக்கவேண்டும். இல்லையென்றால் 99% எதிரணி வீரர்கள் quarterback அருகே வந்திருப்பார்கள். எந்த நேரமும் quarterback சாய்க்கப்படலாம் (sack என்பார்கள்).
Defense-ல் பலதரப்பட்ட பொறுப்புகள் இருந்தாலும் முக்கியமாக அவர்கள் குறி வைப்பது quarterback-ஐத்தான். Quarterback குழம்பினாலோ, தயங்கினாலோ, திறமை சற்று குறைவாகவோ இருந்தால் defense அணி எளிதாக அவரை வீழ்த்தும்.
இது வரையில் நீங்கள் பொறுமையாகப் படித்திருந்தால் புரிந்திருக்கும், ஏன் அமெரிக்கா இந்த விளையாட்டில் பித்து பிடித்து அலைகிறது என்று, எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். விளையாட்டின் 3 மணிநேரங்களிலும் விறுவிறுப்பு உறுதி. இது போர் போன்றது. ஆனால் போரைப் போலன்றி நேரக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.
32 அணிகளும் தலா 16 அணிகளாக இரண்டு பிரிவில் உள்ளன. இறுதி ஆட்டத்தில் தலா ஒரு அணி superbowl-ல் விளையாடும். இதனால் ஒவ்வொரு வார ஆட்டமும் மிக முக்கியம். இல்லையென்றால் playoff போகமுடியாது. போகவில்லையென்றால் அணி மோசமான அணியாகக் கருதப்படும். தலைகள் உருளும்.
இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தப்படும் பந்தைப் பார்ப்போம். இது soccer பந்தைப் போல உருண்டையானது அல்ல. ரக்பி (Rugby) விளையாட்டின் பந்தைப் போல நீள்வட்டமானது. Prolate Spheroid என்ற வடிவத்தில் ஆனால் முனைகள் கூர்மையாக இருக்கும். பந்தை ஒரு கூர்முனை எறியப்படும் திசை நோக்க, எறியப்படும்போது விரல்களைத் திறமையாக சுழற்றினால், அற்புதமாக பந்து காற்றில் சுழன்று செல்லும். அதுவும் நல்ல வேகத்தில் செல்லவேண்டும். இல்லையென்றால் எதிரணி அதை எளிதாகப் பிடித்துவிடும் அபாயம் உண்டு,
இந்தப் பந்து முதலில் பன்றித் தோலில் செய்யப்பட்டாலும், இன்றைய பந்துகள் விசேஷ ரப்பர், மற்றும் ப்ளாஸ்டிக் கலவையில் உருவாகின்றன. இதில் காற்றை நிரப்புவர். இந்தக் காற்றின் அளவு PSI என்ற அளவுகோலால் குறிப்பிடலாம். PSI என்பது pound per square inch-ன் சுருக்கம். அதாவது ஒரு square inch பரப்பளவில் ஒரு பவுண்ட் விசை கொடுக்கும் அழுத்தம் என்று வகுக்கலாம். ஒரு சைக்கிள் ட்யூப்-ல் 30 PSI வைக்கலாம்.
அமெரிக்க தேசிய ஃபுட்பால் சங்கம் (NFL) அனுமதித்த PSI அளவு 12.5-13.5. அதிகமாகவோ, குறைவாகவோ இருக்ககூடாது. இதுதான் டாம் ப்ரேடி-யைப் பிரச்னையில் சிக்க வைத்திருக்கிறது.
oOo
2
டாம் ப்ரேடி: வட அமெரிக்காவில் திறமையுள்ள ஒருவர், சரியான நேரத்தில் தன் திறமையை வெளிப்படுத்தினால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக இவரின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம்.
இத்தனைக்கும் ப்ரேடி சாதாரண கல்லூரியில், சாதாரண Quarterback-ஆகத்தான் இருந்தார். 2000-ஆம் ஆண்டில் ஒவ்வொரு அணியும் புது வீரர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஆறாவது சுற்றில் 199-வது வீரராக பேட்ரியட்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அணியில் இவர் நான்காவது நிலை Quarterback.
ஆனால் பிறர் அறியாதது அவரின் உழைப்பும், இயற்கையான விளையாட்டுத் திறமையும். சச்சின் டெண்டுல்கரின் திறமையும், ஸ்டீவ் வாஹ்-ன் இரும்புத்தனமான மனவுறுதியும் கலந்த கலவை. இவரைப் பற்றி ஒரு செவி வழி கதை உண்டு. பேட்ரியட்ஸ் அணி உரிமையாளர் டாம் ப்ரேடி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நடந்த முதல் சந்திப்பில் அவருக்கு நல்வரவு கூற, ப்ரேடி ‘என்னைத் தேர்ந்தெடுத்ததால் இந்த அணிக்கு நல் அதிர்ஷ்டம்’ என்று தன்னம்பிக்கையாக கூறினார் என்பது. தனக்கு எதிராக சவால் வரும்போது தன் அனைத்துத் திறமையையும் உபயோகித்து வெற்றி பெறும் மனிதர். இதுதான் பெல்லிசெக்-ஐக் கவர்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட வருட முடிவுக்குள், டாம் இரண்டாம் நிலை Quarterback ஆனார்.
2001-ம் வருடத்தில் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு வந்தது. முதல் நிலை Quarterback ட்ரூ ப்ளட்சோ ஆட்டத்தில் கடுமையாகக் காயம் அடைய, ப்ரேடி உள்ளே நுழைந்தார். சகுனம் சரியில்லை. முதல் முயற்சியில் எதிர் அணி வீரர் அவரின் பந்தை மறித்துப் பறித்தார் (intercept). ஆனால் ப்ரேடி தளரவில்லை. அந்த ஆட்டத்தில் அணி தோற்றாலும், அடுத்த வந்த ஆட்டங்களில் ப்ரேடி-யின் தலைமைப் பண்பும், ஆட்டத்திறமையும் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தன. ட்ரூ ப்ளட்சோ காயம் ஆறித் தயாரானாலும் பெல்லிசெக் தெளிவாக சொல்லிவிட்டார்: ‘டாம் ப்ரேடி அணியை வழிநடத்துவார்’. அந்த வருடம் யாராலும் நம்ப முடியாமல் பேட்ரியட்ஸ் superbowl சென்றது.
ஆனால் விளையாட்டு உலகம் பேட்ரியட்ஸ்-க்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. எதிர் அணி மிகப் பலம் வாய்ந்த அணி. எல்லோரும் அதன் மீதே பணத்தைக் கட்டினார்கள். ஆனால் அவர்கள் அறியாதது பெல்லிசெக் + டாம் ப்ரேடி இணைந்தால் அவர்களால் எதுவும் சாத்தியம் என்று. அந்த superbowl-ஐ பேட்ரியட்ஸ் வென்றது.
டாம் ப்ரேடி அதன் பின் ஃபுட்பால் சரித்திரத்தில் ஒரு மகத்தான நட்சத்திரம் ஆனார். மூன்று superbowl வெற்றிகளை சந்தித்தார்.
ஜனவரி 18 2015. பேட்ரியட்ஸ்-ம், Indiana Colts-அணியும் superbowl போட்டிக்கு செல்லும் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பேட்ரியட்ஸ் Colts அணியை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது காற்பங்கில் டாம் வீசிய பந்தை Colts அணி தடுப்பு அணி வீரர் பிடித்தார். அந்தப் பந்தை அவர் அணியின் பயிற்சியாளரிடம் கொடுக்க அவர் சந்தேகப்பட்டு அதன் காற்று அழுத்தத்தை சோதிக்க வைத்தார். அந்தப் பந்தின் அழுத்தம் ஏறத்தாழ 2 PSI அளவு குறைந்திருந்தது. சந்தேகம் அதிகமாகி மற்ற பந்துகளையும் சோதிக்க 12 பந்துகளில் 11 பந்துகள் அழுத்தம் குறைந்ததாக செய்தி வெளியாகியது.
அழுத்தம் குறைவதால் என்ன லாபம்? Quarterback எப்படி பந்தைப் பிடித்துத் தூக்கி எறிகிறார் என்று பார்த்தோம். அழுத்தம் குறைந்தால் கைகளால் நல்ல அழுத்தத்துடன் பிடிக்கமுடியும். எதிராளி Quarterback-ஐத் தாக்கினாலும் அழுத்தத்தில் கீழே விழாது. மொத்தத்தில் Quarterback-க்கும், அதனால் அவர் அணிக்கும் இது லாபம். விதிகளின்படி இது ஏமாற்று விளையாட்டு.
இதன் பிறகுதான் ஊடகங்களின் விளையாட்டு ஆரம்பித்தது. பேட்ரியட்ஸ் சார்பு ஊடகங்கள் இதன் தாக்கத்தைக் குறைக்கப் பார்க்க, அதன் எதிர் ஊடகங்கள் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி (முக்கியமாக நியூயார்க் ஊடகங்கள்) தாக்க ஆரம்பித்தன.
பேட்ரியட்ஸ் 2007-08-ல் ஏற்கெனவே எதிர் அணிகளின் பயிற்சியாளர்கள் சைகைகளை அவர்கள் அறியாமல் வீடியோவில் பதிவு செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். இப்போது இதுவும் சேர, பல பேட்ரியட்ஸ் ரசிகர்கள் தலையில் கைவைக்கவேண்டியிருந்தது.
அதற்கு ஏற்றாற்போல் நிருபர்களிடம் பில் பெல்லிசெக் பேசும்போது தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்றார். அதில் உண்மை இருந்தது. பந்தின் காற்றழுத்த விவரங்கள் தலைமை பயிற்சியாளர் அறிய வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவர் அலுப்புடன் சொன்ன ஒரு வார்த்தை எல்லாரையும் நிமிர வைத்தது: ‘பந்து எப்படி இருக்க வேண்டும் என்பது ப்ரேடி-யின் விருப்பம். அதைப் பற்றி என்னைவிட அவர் அதிக விவரங்கள் தரமுடியும்.’ சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பெல்லிசெக் ப்ரேடியைக் கைகழுவினார்.
டாம் ப்ரேடி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதித்தார். நிருபர்கள் கேட்ட எளிய கேள்விகளான, காற்று அழுத்த வித்தியாசத்தை உணர முடியவில்லையா என்பதற்கு சரியான பதில் சொல்லாமல் நழுவினார். அவரின் இந்த பதில்கள் கேட்பவர்களை இன்னும் சந்தேகம் கொள்ள வைத்தன. மொத்ததில் டாம் ப்ரேடி-யின் விளையாட்டு வாழ்க்கையில் இது ஒரு பெரும் கரும்புள்ளி.
அதன் பிறகு நான்காவது superbowl வெற்றி பெற்றாலும் ரசிகர்களிடையே ஒரு சோர்வு இருக்கத்தான் செய்தது. பலர் காற்று அழுத்தம் எந்த வெற்றி, தோல்வியையும் நிர்ணயிப்பதில்லை என்று வாதித்தார்கள்.
Indiana Colts தலைமை பயிற்சியாளர் ‘நாங்கள் தோற்றது காற்று அழுத்தத்தினால் அல்ல, அன்று நாங்கள் விளையாடிய மோசமான விளையாட்டும், பேட்ரியட்ஸ்-ன் அபாரமான ஆட்டமும். பேட்ரியட்ஸ் வெற்றி பெற எல்லா வகையிலும் தகுதியானவர்கள்,’ என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.
தேசிய ஃபுட்பால் கழகம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. Ted Wells அதன் தலைவர். அவரின் விசாரணையில் பேட்ரியட்ஸ் அணியின் பந்து தயார் செய்யும் இரு பணியாளர்கள் காற்றை இறக்கியிருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் டாம் ப்ரேடி-யோடு தொலைபேசி தொடர்பில் இருந்தார்கள் என்பதும் தெரிந்தது. அது தவிர அவர்கள் பரிமாறிக் கொண்ட text-களிலும் தெரிந்தது. ஆனால் விசாரணைக் குழு இதை வைத்து டாம் ப்ரேடி குற்றவாளி என்று சொல்ல முடியவில்லை. டாம் ப்ரேடி அவர்களிடம் காற்றைக் குறைக்கும்படி சொன்னதற்கான ஆதாரம் டாம் ப்ரேடி-யிடமிருந்து வரவில்லை. என்றாலும் டெட் வெல்ஸ் விரிவாக ஆராய்ந்து டாம் ப்ரேடி-க்கு இந்த ஊழலில் ’அவரின் பங்கு சாத்தியம்’ (probable cause) என்று சொல்லகூடிய நிலை இருக்கிறது என்றார். இது தவிர டாம் ப்ரேடி தன் கைத் தொலைபேசியை செயலற்றதாக்கியிருக்கும் செய்தியும் வெளிவந்தது. இதனால் இந்த விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் ’சூழ்நிலை சார்ந்தது’ (circumstantial evidence) என்று ஆனது.
கழகம் டாம் ப்ரேடியை 2015-ல் ஆரம்பிக்கப்போகும் விளையாட்டுகளில் நான்கு பந்தயங்களில் விளையாட தடை விதித்தது.
டாம் ப்ரேடி எதிர்த்து மேல் முறையீடு செய்ய அந்தத் தீர்ப்பு மீண்டும் கழகத்தால் உறுதி செய்யப்பட்டது. இப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. செப்டம்பர் 4-ஆம் தேதி முடிவு தெரியும்.
டாம் ப்ரேடி-க்கு இதில் பங்கு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. ஒரு Quarterback-க்கு பந்தில் காற்று அழுத்தம் குறைகிறது என்று நிச்சயம் தெரியும். ப்ரேடி-க்கு அதில் பங்கு இல்லையென்றால் இதை பெல்லிசெக்-இடம் சொல்லியிருப்பார். எனவே அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வது, ஒரு பொய்யை மறைக்க 10 பொய்களை சொல்வது.
காற்று அழுத்தம் குறைந்ததால் பேட்ரியட்ஸ்-க்கு வெற்றி விகிதம் அதிகமானதா? கண்டிப்பாக இல்லை. நூற்றுக் கணக்கான சாத்தியக்கூறுள்ள ஒரு விளையாட்டில் இது போன்ற ஒரு சிறு சீர்செய்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கப் போவதில்லை. அதுவும் எதிரணி வீரர்கள் கைகளால் பல சமயங்களில் பந்துகளைத் தொடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் சந்தேகம் கொண்டார் என்பது நம்பகூடியதல்ல.
ஆனால் டாம் ப்ரேடி இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமா? நிச்சயமாக. ஒரு பண்பட்ட விளையாட்டு வீரர் இது போன்ற விதிகளின் எல்லைகளைக் கடக்கும்போது அதற்குப் பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும். ஆனால் ப்ரேடி-யின் மனசாட்சி விழிப்படைந்தாலும் ஏற்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஏற்றுக் கொண்டால் அவரின் ஒட்டு மொத்த கனவு வாழ்க்கையும் குழிக்குள் போய்விடும்.
ஆனால் என்றைக்காவது இந்த விவகாரத்தைத் தெளிவுப்படுத்தும் தைரியம் அவரின் மனவுறுதி தரும் என்று நம்பலாம்.