குணம் நாடி, குறை தவிர்த்து

மாற்றங்கள் ஒரு புள்ளியில் தொடங்குகின்றன
உலக நடப்பு மற்றும் பொதுவாக சமூக சூழ்நிலைகள் பற்றி 90 களில் சில வருடங்கள் ஒரு பத்திரிகையில் தொடர் ஒன்று எழுதிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது வரும் செய்திகள் எழுப்பிய கேள்விகள், சிந்தனைகள் என்று அன்றைய வாழ்முறையின் மீது ஒளி பாய்ச்சும் விதமாக இருந்த இந்தக் கட்டுரைகளை இன்று திரும்பிப்பார்த்தால் சமூகத்தில் தொழில் நுட்ப ரீதியாக பல மாற்றங்கள் இருக்கின்றனவே தவிர, அடிப்படையில் சில விஷயங்கள் – சில சமூக நெறிகள் கால, தேச, வர்த்தமான, குறியீடுகளைக் கடந்து, என்றும் நிலைத்து நிற்பவை என்று தோன்றுகிறது. நாம் அனைவருமே வாழ்க்கையில் விரும்புவது அமைதியும் சந்தோஷமும். காரணங்களும், இவை நமக்கு கிடைக்கும் ஆதாரங்களும் (Sources) நாம் தேடும் வழிமுறைகளும் மாறுபடலாம். ஆனால் உணவு, உடை, மற்றும் உறைவிடம் தவிர நம் அடிப்படைதேவை, மன நிறைவும் சந்தோஷமும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இவற்றைத்தேடும் நம் வாழ்க்கை பயணத்தில் நம்மை நாமே பல வழிகளில் மேன்படுத்திக்கொள்கிறோம்; நற்குணங்கள் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறோம்; குறைகளைக் களைய முற்படுகிறோம். ஜப்பானிய மேலாண்மைக் கலையில் “Kaizen” என்ற ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு. முன்னேற்றத்துக்கான தொடர்ந்த முயற்சி என்ற இந்தத் தத்துவம் இன்று உலகெங்கும் மேலாண்மைக் கலையில் முக்கியப் பாடம். நம் வாழ்க்கைப் பயணத்தில் தனி மனிதர்களாக, ஒரு சமூகமாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள முயலும் சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரைகள் என்னுள் எழுப்பும் சிந்தனைகளை சில மாற்றங்களுடன் இந்தத் தொடரில் வழங்குகிறேன்.
இனி, குணம்நாடி, குறைதவிர்த்து…….
dandy
கற்றுகொள்வதும் உதவிகள் பெற்றுகொள்வதும் ஒரு கலை. கற்பது என்பது நம்மைவிட வயதானவர்களிடமிருந்துதான் என்றில்லை; நல்ல விஷயங்கள் யாரிடமிருந்தாலும் கற்றுகொள்வதில் தவறில்லை.
கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். இருந்தாலும் சிலருக்கு சட்டென்று உதவி கேட்கவோ அல்லது உதவி செய்யவோ தோன்றாது. உதவி கேட்பது சுய கௌரவத்திற்கு இழுக்கு என்பது இவர்கள் நினைப்பு. தெரியாததைத் தெரியாது ; ஆனால் கற்றுகொள்கிறேன் என்பதற்கும், தனக்கு உதவி தேவை படும் சமயத்தில் கௌரவம் பார்க்காது ஏற்றுகொள்வதற்கும், ஒரு விசாலமான மனம் வேண்டும். பிறரிடமிருந்து தேவைப்பட்டபோது உதவி பெறும்போது நமக்கும் சட்டென்று பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும். கொடுக்கல் வாங்கல்; பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அங்கே வளர்ச்சிக்கு இடம் ஏது?
“நமக்கு எல்லாமே தெரியும்; பிறர் உதவி தேவையில்லை” என்ற ஒரு எண்ணம் சிலருக்கு உண்டு. தமக்கு தெரியாதது ஒன்றுமேயில்லை; அல்லது தெரியாது என்று சொன்னால் தன்னை மற்றவர்கள் தாழ்வாக மதிப்பார்களோ என்றெல்லாம் இவர்களுக்கு தோன்றும். இதனால் தங்களுக்கு உண்மையாகவே உதவி தேவையிருந்தாலும் பிறரை அணுக தயங்கி தங்கள் குறையுடனேயே வாழ்வார்கள். ஒரு பொய்யான சுய கௌரவத்திற்காக முன்னேற்றத்தைக் கோட்டைவிடுபவர்கள் இவர்கள். இதுபோல் வாழ்க்கையை அன்றாடம் புதிதாக வாழ கற்றுகொள்வதும் ஒரு கலைதான். சமீபத்தில் ஒரு பிரபலம் மன அழுத்தத்தில் மூழ்க நேர்ந்ததைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது. வாழ்க்கையில் ஓரளவு வெற்றிகரமாகவே இருந்திருப்பவர். அவருக்கு கவலைக்கு காரணம்…? ஏதோ சில தோல்விகள். வெற்றிகள் வந்தபோது சந்தோஷமாக இருந்த அவரால் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. துவண்டு விட்டார். ஒரு தியான வகுப்பில் சேர்ந்து அங்கு வகுப்பில் பலரிடம் பழகியதிலும், சங்கோஜப்படாமல் பயிற்சியின் ஒரு அங்கமாக பந்து விளையாடியதிலும் அவர் மனம் லேசாகியது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட பந்து விளையாட்டுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி கிடையாது. ஆனால் அந்த பந்து விளையாட்டு இதுவரை அவர் வாழ்க்கையில் அவ்வளவாக கவனிக்காத அம்சமாக இருந்திருக்கலாம். அல்லது பந்து விளையாட நாமொன்றும் இளைஞர் இல்லையே….என்று தனக்குள் கட்டுபாடு இருந்திருக்கலாம். ஆனால் மனதைத் தளரவிட்டு, பந்து விளையாட்டில் சிறுவர்கள்போல் லயித்தது சட்டென்று அவரது மனப் பாரங்களை நீக்கி விட்டது.
ஓரளவு வயதாகிவிட்டாலே அல்லது ஒரு வேலையில் சில வருடங்கள் அனுபவம் ஆனவுடனேயே பலருக்கு இந்த “எல்லாம் தெரியும்” எண்ண ரேகை ஓட ஆரம்பித்துவிடும். மன அழுத்தம் வளர இந்த எண்ணப்போக்கும் ஒரு காரணமாகிறது. வாழ்க்கையில் ஒரு தேடலும் ஆச்சரியமும் இருக்கும்போதுதான் ஒரு உந்துதலும் வருகிறது. சரி….. நாம் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது என்ற உணர்வு வரும்போது ஒரு வெறுமையும் விரக்தியும் சூழ்ந்துகொள்கிறது. தினசரி நாம் படுக்கையைவிட்டு எழும்போதே இன்று ஒரு புதிய நாள் என்ற எண்ணத்துடன் எழுந்தோமானால் அன்று முழுவதும் ஒரு புத்துணர்ச்சி இருப்பதைக் கவனிக்கலாம்.
ஆழ்ந்து நோக்கினால் நம் ஒவ்வொருவரும் எத்தனை விதமான பளுவை சுமக்கிறோம்…? விதம் விதமான கோபங்கள், ஏமாற்றங்கள், தவிப்புகள், அவ்வபோது சின்ன சந்தோஷங்கள்… இந்த சந்தோஷங்கள் அப்படியே தொடரக்கூடாதா என்ற எதிர்பார்ப்புகள்…. இப்படி மூட்டை மூட்டையாக தினம் சேரும் இந்த எண்ணக்குவியல்களை நாம் அன்றன்றே குப்பைத்தொட்டியைக் காலி செய்வதுபோல் உடனுக்குடனே காலி செய்து விட்டு ஒவ்வொரு நாளையும் – ஒவ்வொரு கணத்தையும் புதிதாக வரவேற்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள முடியுமானால் வாழ்க்கையில் என்றுமே ஒரு புதிய காற்று வீசும் அல்லவா?
ஜப்பானின் ஜென் குருக்கள் தினம் எழுந்து, குளித்து, உண்டு,வயலில் வேலை செய்வது போன்று எல்லா வேலைகளையும் ஏதோ அன்றுதான் முதன் முதல் செய்வது போன்ற ஒரு பிரமிப்புடன், ஆர்வத்துடன் செய்வார்களாம். ஜென் சித்தாந்தத்தில் இது ஒரு சிறப்பு அம்சம்.
ஒரு தொழிலதிபர் தன் வாழ்க்கையில் நிம்மதியில்லை. வியாபாரம் நிமித்தம் உலகம் முழுவதும் சுவாரசியமில்லாமல் சுற்ற வேண்டியுள்ளது என்று அலுத்துக்கொண்டாராம். ஒரு ஜென் குரு அவரை ஒரு நிமிடம் வியந்து பார்த்துவிட்டு, “உலகம் எப்படியப்பா சுவாரசியமில்லாமல் இருக்கும்…?” என்று அமைதியாக கேட்டாராம்.
“எல்லாம் தெரியும்” என்ற மனப்பான்மையைக் கழற்றிவிட்டு, ” அட…. என்ன அற்புதம்….” என்று உள்ளுக்குள் ஒரு வியப்பும் பிரமிப்பும் இருந்து கொண்டே இருந்தால் எப்படி சுவாரசியம் இல்லாமல் இருக்கும் என்று கேட்டார் அந்த குரு. உன்னைச் சுற்றி இருக்கும் இயல்பான வாழ்க்கையை கவனி. சாரி சாரியாக நகரும் எறும்புகள்…. கோடு இழுத்து வரைந்தாற்போல் பூக்கள், கிரீடம் போல் தண்ணீரில் விழும் மழைத்துளிகள்….முகம் மலர சிரிக்கும் குழந்தை….. வாழ்க்கையில் பிரமிப்புக்கா பஞ்சம்…..? என்ன….. சற்று கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்; என்று சிரித்தாராம் அந்த குரு.
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு புள்ளி மட்டுமே என்ற உணர்வு இருந்தால் நம் கவலைகள் பெரிதாக தெரியாது. எதை எதையோ பலமாகப் பிடித்து கொண்டு நாம் தொங்குகிறோம். ஆங்கிலத்தில் “Let go…” என்பார்கள். அதுபோல் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் மனதில் உதயமாகையில் அவற்றை பிடித்து வைத்துக்கொள்ள முயலாமல் விட்டு விடுங்கள். நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால் அது தானே உங்களைத் தேடி வரும். பகவத்கீதை பலனை எதிர்பாராதே என்கிறது. அதெப்படி ஆசையேயில்லாமல், எப்படி எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்க முடியும்? ஆசையில்லாமல் முடியாதுதான். ஆனால் ஆசைப்படுவதுடன் இல்லாமல் உண்மையான மனதுடனும், ஆராய்ந்த அறிவுடனும் முயலவும் வேண்டும். முயற்சிகளின் விளைவு அதற்கேற்றாற்போல் தானே வரும் என்ற விவேகத்துடன் இருக்க வேண்டும். விவேகானந்தர் கூறுகிறார். “ஆசையே இல்லாமல் இருந்தால் வாழ்க்கை வெறிச்சோடியல்லவா – ஒரு வெற்றுச் சுவர்போல அல்லவா இருக்கும்? ஆசைகள் அவசியம். ஆனால் தேவை ஏற்பட்டபோது சமயத்துக்கு ஏற்றாற்போல் அவற்றை எளிதாக விட்டுவிடவும் பக்குவம் வேண்டும். அதுதான் விவேகம்” என்றார்.
பிரபல கிரேக்க இசைக் கலைஞர் யானி ஒரு முறை தாஜ்மஹால் அருகே மேடைப் போட்டு இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். நிகழ்ச்சியின் நடுவே நடுவே ஒன்று குறிப்பிட்டார். “மனித குலத்தின் ஆரம்ப நாள் தொட்டு, இதுவரை உலகில் நடந்த எந்த ஒரு சாதனையும் முதலில் யாரோ ஒருவரின் மனதில் ஒரு சிறு எண்ணப்பொறியாகதான் உருவாகிறது. அதனால் சாதனைப் படைக்கும் சக்தி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் புதைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…” என்றார்.
சமீபத்தில் ஒரு கிராமப்புறத்துக்கு பயணம் செய்தபோது இப்படிபட்ட ஒரு “விதையை” அடையாளம் காணமுடிந்தது. நண்பர்களாக நாங்கள் பயணம் செய்த அந்த பஸ்ஸில் ஜாலியாக பேசிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் பயணித்தோம். சாப்பிட்டு முடிந்தவுடன்தான் உணர்ந்தேன், சாப்பிட்ட காகித தட்டுகளைப் போட குப்பைத்தொட்டியில்லை என்று. ஆனால் கூட பயணம் செய்தவர்கள் பலர் அதைப் பற்றி கவலைப்படாமல் ஓடுகிற பஸ்சிலிருந்து சாலையில் விட்டெறிந்தவாறு பயணம் செய்தனர். எனக்கோ சாலையில் இப்படி விட்டெறிவதா என்று உடல் முழுவதும் ஒரு கூச்சம். என்ன செய்வதென்று ஒரு கணம் விழித்தவண்ணம் இருந்தபோது சட்டென்று ஒரு இளம் பெண் எழுந்து நின்று ” எல்லோரும் தயவுசெய்து இந்த பிளாஸ்டிக் பைகளில் உங்கள் குப்பைகளைப் போடுங்கள்,” என்று நீட்டியபடி நடந்து வந்தார். எனக்கு ஆச்சரியமான மகிழ்ச்சி. நானும் குப்பைப் போடத் தயங்கினேன். உண்மை. ஆனால் சட்டென்று இப்படி ஒரு வழி எனக்கு தோன்றவில்லையே? மிகச் சிறிய விஷயம்தான். ஆனால் மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை அந்த இளம் பெண் உணர்த்தியுள்ளாரே? இவர் ஏன் என்னை மிகவும் சிந்திக்க வைத்தார் என்பது விளங்க பின் வருவதைப் படியுங்கள்.
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி.ஆனால் இன்று இந்தியாவில் பல கிராமங்களில் கிராமப்புறத்தின் பழைய வாழ்க்கை முறைகள் மறைந்து நாகரிக உலகின் வேண்டாத தாக்கங்கள் படிந்து, ஆனால் அதே சமயம் நகர்புறத்தின் வசதிகள் முழுவதுமாக இன்னும் எட்டியிருக்காமல் கிராமிய மணம் சுத்தமாக காணாமல் போயிருக்கும். இதனால் சமீபத்தில் தமிழகத்தில் ஒரு கிராமப்புற பகுதிக்கு பயணம் செல்ல நேர்ந்தபோது என் மனதில் அத்தனை உற்சாகம் இருக்கவில்லை.
ஆனால் பிரதான சாலையைவிட்டு நடுவில் பிரிந்த ஒரு மண் பாதையில் எங்கள் வாகனம் செல்ல ஆரம்பித்த சில நிமிடங்களில் என் முகத்தில் ஒரு சில்லென்று காற்று தொட்டு சென்றது; என் மனதிலும்தான். சென்ற பாதை மேடு பள்ளம். ஒரே புழுதி. இருந்தாலும் பாதையின் இரு புறமும் கண் சென்ற தூரம் வரை பசுமை! வயல் வெளிக்கே உரித்தான வாசனையும், சத்தங்களும்…. ( அவை என்னவென்று கேட்காதீர்கள். சில விஷயங்களை அனுபவித்துதான் ரசிக்க முடியும்!) ஆங்காங்கே வயல்களில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் ஒரு புறம்; மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு திரும்புவர்கள் இன்னொருபுறம்; சாலை ஓரத்தில் நின்று எங்களையும் எங்கள் வாகனத்தையும் வேடிக்கைப் பார்க்கும் அவர்களின் முகங்களில் ஒரு ஆர்வ குறுகுறுப்புடன் ஒரு விச்ராந்தியான (எந்த கவலையும் இல்லாத) மனோபாவமும் தெரிந்தது. கடைகள் இன்றும் அன்று போல் சின்னப் பெட்டிக்கடைகள்தாம். அதே போல் கண்ணாடி பாட்டில்களில் தின்பண்டங்களும் ஒரு கயிற்றிலிருந்து சரம் சரமாக வாழைப்பழமும். ஆனால் பாட்டில்களில் உள்ள தின்பண்டங்கள், நாகரிக உலகின் சாக்லேட்டுகள் ( வெளி நாட்டு உற்பத்தியும் கூட!) கோலி சோடாவும் “கலர்” என்று சொல்லப்படும் கிராமப்புற பானமும் இருந்த இடத்தில் கோகோ கோலா. தொங்கும் வாழைப்பழம் அருகே கயற்றில் நவீன பாக்குப் பொட்டலங்கள்.
இப்படி மாடுகளுடன் நின்றவர்களை நோட்டம் விட்டபோது சட்டென்று ஒரு மாற்றம் புரிந்தது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் எண்ணிக்கை இதில் கணிசமாக குறைந்து காணப்பட்டது.முன்பு ஒரு காலத்தில் சரியாக படிக்கவில்லையென்றால் “இரண்டு மாடு வாங்கி மாடு மேய்க்க அனுப்ப வேண்டியதுதான்…” என்று பெரியவர்கள் பயமுறுத்துவது உண்டு. ஆனால் கிராமப்புறங்களிலேயே இன்று முன்பு போல் சிறுவர்களை மாடு மேய்க்க அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது ஒரு சந்தோஷமான நிஜம்.( ஏறிவரும் கல்வி மேம்பாட்டுக் குறியீடு இதை மேலும் நிரூபிக்கிறது.)
கிராமீய மணத்திலும், கிராம வாழ்க்கையில் தெரியும் முன்னேற்றத்தின் ரசித்து பயணம் செய்யும்போது நெருடும் சில விஷயங்களில் ஒன்று சாலையின் இரு புறங்களிலும் குப்பையாக குவிந்திருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பயணிகள் தூக்கியெறியும் நாகரிக உலகின் அடையாளங்கள். இரண்டாவது விஷயம், கிராமத்தில் பல இடங்களில் சரியான கழிவு நீர் செல்ல சரியான வசதிகள் இல்லாமல், ஆங்காங்கே சாக்கடையும் அசிங்கத்துக்கும் இடையில் அவற்றை பற்றி துளிக்கூட கவலைப்படாமல் இருக்கும் மக்கள்.
இவற்றுக்கிடையே கண்களை உறுத்தும் மற்றொரு சமாசாரம் சுவரொட்டிகள். சுவரொட்டிகள் தவறென்று சொல்லவில்லை. நான் சொல்ல வருவது தனி மனிதர்களைத் தெய்வமாக்கி – குறைந்த பட்சம் கதாநாயகர்களாக்கி வழிபடும் நமக்கே உரித்தான ஒரு குணம். தனி மனித வழிபாடு நம்மிடம் நிறையவே இருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் சட்டசபைத் தேர்தல் என்பதால் சுவரொட்டிகள் பலவிதம் – வழிபாடுகளும் பலவிதம்.
ஒரு பக்கம் அரசியல், சினிமா கதாநாயகர்கள் வழிபாடு என்றால் இன்னொருபக்கம் சந்நியாசிகள்,மத குருக்கள், மற்றும் இதிகாச கதைகள் அல்லது ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்களின் புகழ் பாடும் சுவரொட்டிகள். அரசியல்வாதியாகட்டும், ஆன்மீகவாதியாகட்டும் அவர்கள் பேச்சுக்கு மக்கள் பெருவாரியாக கூடுகிறார்கள். அவர்கள் சொல்வதை ஆர்வமுடன் கேட்கிறார்கள்; கைத்தட்டுகிறார்கள்.
இந்த அரசியல் மற்றும் ஆன்மீகவாத்களின் செல்வாக்கைப் பார்க்கும்போது கூடவே சாலையோர குப்பையும், சாக்கடைகளும் கூடவே மணக்கண் முன் ஓடிற்று. இவர்கள் பேச்சை மக்கள் ரசிக்கிறார்கள். இவர்களை மக்கள மிக மதிக்கிறார்கள். மக்களிடையே இவர்களின் சக்தி அளவிடமுடியாதது. தங்கள் கொள்கைகளைப் பரப்பவோ, பதவிகளைப் பிடிக்கவோ பிரசாரம் செய்யும் இவர்கள் தங்கள் சொற்பொழிவுகளுக்கு நடுவே ஏன் சுத்தம், சுகாதாரமான வாழ்க்கையின் மேம்பாடுகளையும் அவசியத்தையும் எடுத்து சொல்லக்கூடாது? இவர்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் மக்கள், இவர்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வலியுறுத்தினால் நிச்சயம் ஓரளவாவது பின்பற்றுவார்களே?
நான் சென்ற அந்த கிராமத்தில் ஒரு குளத்தங்கரையில் நின்றிருந்த அந்த கிராமப்பெண் ஒருவர் குளத்தின் கரையில் இருந்த அசிங்கத்தைக் காண்பித்து என்னிடம் குறைபட்டார். நான் உடனே கேட்டேன்.
” ஏன் உங்கள் ஊரில் கதைசொல்லும் அந்த மகான் இதைப்பற்றியெல்லாம் தன் சொற்பொழிவில் எடுத்து சொல்வதில்லையா?” என்றேன்.
“அவரை ஏனம்மா குறை சொல்ல வேண்டும்? அவர் சொல்லதான் செய்கிறார். ஆனால் சில விஷயங்களை ஜனங்கள் கேட்பதில்லையே…” என்றார்.
குறை யாரிடத்தில்? சொல்பவரிடமா? பெறுபவரிடமா? எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
இந்தியாவில் நிகழும் – நிகழப்போகும் மாற்றங்கள் இப்படிபட்ட அரசியல், ஆன்மீக மற்றும் இதர முக்கியபுள்ளிகள் மூலம் நடப்பதில்லை; நடக்கபோவதில்லை. மாற்றங்கள் மேலே சொன்ன பஸ்ஸில் குப்பையை வாங்க வந்த சாதாரண இளம்பெண் போன்றவர்களின் மனங்களில் உதிக்கும் எண்ணப்பொறிகளில்தாம் மாற்றங்களின் ஆரம்பம் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.