”பதினோரு மணிக்கா ஆபீஸூக்கு வருவது?”
“அது ஒரு பெரிய கதை. எல்லாம் என் மகன் குமாரால் வந்தது.”
“நீங்க லேட்டா வந்துட்டு, பையனை ஏன் குறை சொல்றீங்க?”
”குமாருக்கு இன்னிக்குப் பள்ளிச் சுற்றுலா. காலை 6:00 மணிக்கு வீட்டிற்குப் பஸ் வந்து அழைத்துச் சென்றது.”
“அதுக்கு என்ன?”
“அவன், தெரியாமல் என்னுடைய திறன்பேசியை எடுத்துச் சென்று விட்டான். என்னுடைய கார் அந்த திறன்பேசி இல்லாமல் கிளம்பாது. நம் ஆபீஸ் செக்யூரிட்டிக்குச் செல்லும், கண்ணும் வேணுமே.”
“8:00 மணிக்குத்தான் தெரிய வந்து, அவனுடைய சுற்றுலா தளத்திற்கு டாக்ஸி பிடித்துச் சென்று, திறன்பேசியை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.”
oOo
தனியார் போக்குவரத்திற்கு வாகனங்களை உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இத்துடன், பைக்குகள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் என்று பலவித இரு சக்கர ஊர்திகளும் இன்று பயனில் உள்ளன. இன்றைய கார்களில், பல புதியக் கருவிகள் இணையத்துடன் முழுவதும் இணைக்கப்படாவிட்டாலும், சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் புதிய கருவிகள் பெரும்பாலும் காரின் கணினி உதவியுடன் இயங்குகின்றன.
1. புதிய கார்களில், காமிராக்கள் காரை நிறுத்த உதவி புரிகின்றன
2. சில கார்களில், தானே காரை நிறுத்தும் வசதியும் வந்துவிட்டது. காமிரா உதவியுடன், கார் தானே சரியான இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. அதிக இடம் இல்லாத பெரு நகரங்களில் இது மிகவும் உதவியாக உள்ளது
3. சில விலை உயர்ந்த மாடல்களில், மிக அருகே இன்னொரு கார் இருந்தால், ஓட்டுனரின் காட்சிப் பெட்டியில், எச்சரிக்கை மற்றும் அலாரம் அடித்து உதவுகிறது. நெடுஞ்சாலைகளில், இது மிகவும் உதவுகிறது. இரவு கார் ஓட்டுபவர்கள், சற்று சோர்வால், கவனமிழந்து பக்கத்து சாலைப் பிரிவிற்கு வழுக்கினால், அதற்கும் எச்சரிக்கை உண்டு
4. 2007 –க்கு பிறகு வந்த ஏறக்குறைய எல்லா கார்களிலும், புளூடூத் முறையில் சாலையிலிருந்து கவனத்தை சிதறாமல், திறன்பேசியில் பேச முடிகிறது. பல மாடல்கள், ஓட்டுனரின் குரல் ஆணையை வைத்து அலுவலகத்தையோ, வீட்டையோ அழைக்கும் வசதி வந்து விட்டது
5. இன்று, ஓட்டுனர்கள் ஜி.பி.எஸ். வசதி திறன்பேசியில் வந்துவிட்டதால், எங்கு செல்ல வேண்டுமானாலும், கூகிளின் வரைபட மென்பொருளுடன் பேசியே ஆணை பிறப்பிக்கலாம்
இது இவ்வாறிருக்க, அடுத்தக் கட்டத் தனியார் வாகன முயற்சிகள், சில வெற்றிகளையும் இன்று பார்த்து விட்டது. டெஸ்லாவின் மின் கார், கூகிளின் தானியங்கிக் கார்கள், தனியார் வாகனங்களின் அடுத்தக் கட்ட முன்னோட்டத்தை உணர்த்துகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் செயல்திறனில் மிகவும் முன்னேறிய கார் டெஸ்லாவினுடையது. உலகின் மிகப் பயனுள்ள மின்கார் இது – ஒரு மின்னேற்றத்தில் 600 கி.மீ. வரை பயணம் செய்யலாம். மேலும், இதில் எண்ணெய் சமாச்சாரம் எதுவும் கிடையாது.
முக்கியமாக, எஞ்சின் ப்ளாக் இல்லாததால், எடையும் குறைவு. சாமான்களைக் காரின் முன்னும், பின்னும் வைத்துக் கொள்ளலாம். கார் கண்ணாடியைத் துடைக்க உதவும் சோப்புத் தண்ணிரைத் தவிர எந்த திரவமும் இக்காரில் இல்லை. காரின் மின்சார மோட்டார், காரின் அடியே அமைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னேற்றம் செய்தால், அடுத்த நாள் காரை ஓட்டலாம். இக்காரை இயக்குவதெல்லாம் மனிதராக இருந்தாலும், அதன் மோட்டரைக் கட்டுப்படுத்துவது, எப்பொழுது மின்னேற்றம் செய்வது, ஓட்டுனருக்குப் பல வகை அளவுகளைக் காட்சியளிப்பாக வழங்குவது, என்பதை எல்லாம், கருவிகள் மூலமாகப் பெற்று, காரின் கணினி முடிவிற்காக ஓட்டுனருக்கு முன்வைக்கும், கருவி இணைய முன்னேற்றம். முக்கியமாக, உலகில் முதன் முறையாக, ஓடும் காருக்கு மென்பொருள் மாற்றங்கள் செய்யும் வசதியுள்ள கார் டெஸ்லா. ஓட்டுனரின் ஒப்புதல் பெற்றே இந்த மாற்றங்கள் செய்யப்படும். இதற்காக, டீலரிடம் ஓடத் தேவையில்லை.
கூகிளின் தானியங்கிக் கார், கருவிகளின் வாயிலாகத் தன்னைச் சுற்றியுள்ள பயண உலகைக் கணிக்கிறது. ஜி.பி.எஸ். கருவி, லேசர்கள் மூலம், குறுக்கே வரும் பாதைசாரிகள் மற்றும் சாலைப் பழுது வேலையினால் உருவாகும் மாற்று வழிகளைக் (street diversions) கூடச் சமாளிக்கிறது.
கூகிள் தானியங்கிக் கார், சில வருடங்களாகச் சோதனையில் உள்ளது. கூகிள் நிரலர்கள், இதன் மென்பொருளை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், சாலை விபத்துக்கள் குறைய, நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிளும் இவ்வகை காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2015 –ல் பி.எம்.டபிள்யூ, சாம்சங்குடன் இணைந்து திறன்பேசி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கார் ஒன்றை செய்முறை விளக்கம் காட்டியது.
இன்னும் இத்தகைய கார்கள், எல்லோரும் ஓட்டுவதற்காகச் சந்தைக்கு வரவில்லை. சில ஆண்டுகளில் இது சாத்தியம். இன்று கார்களில், சாலையைப் பார்த்து ஓட்டிக் கொண்டே புளூடூத் கொண்டு செல்பேசியில் பேச வசதியுண்டு. அனைத்து புதிய பைக்குகள்/கார்களிலும் ஜி.பி.எஸ். வசதியும் வந்துவிட்டது. இயக்கம் என்னவோ தப்பு செய்யும் நம் போன்ற ஓட்டுனர்கள் கையில்தான் உள்ளது. இன்றையக் காருக்குள்ளும், பலவகை உணர்விகள் உள்ளன. கண்ணாடியைச் சுத்தம் செய்யும் சோப்புத் தண்ணீரின் அளவு, எஞ்சினில் மோட்டார் எண்ணையின் அளவு, டயரில் காற்றழுத்த அளவு போன்ற விஷயங்களை அளந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய, பல விலை உயர்ந்த கார்களில், தக்க அளவை விட ஏதும் குறைந்தால் அதை ஓட்டுனருக்கு அறிவிக்கும் காட்சியளிப்பை வாகனத்தின் கணினி செய்கிறது. ஆனால், இவை யாவும் ஓர் ஆரம்ப நிலையே. சமீப காலமாக, கார் நிறுவனங்கள், மின்னணுக் கருவிகளைப் புதிய மாடல்களில் அள்ளி வீசுகின்றன. காரின் எஞ்சினை கட்டுப்படுத்தும் கணினியும் மென்பொருளும் ஏராளமாக முன்னேறியுள்ளன. இதனால், நம்மூர் கபாலி மெக்கானிக்கிடம் காரை எடுத்துச் செல்ல முடிவதில்லை என்று சிலர் அலுத்துக் கொள்வதும் சகஜமான விஷயம்.
கார் ஓட்டுனர்களிடம், அவர்களுக்குப் பெரும் உதவியாகக் கூடியக் கருவிகள் யாவை என்று ஆய்வு செய்ததில், இவற்றை மிக முக்கியம் என்று 2015 –ல் கூறியுள்ளார்கள்:
• ஓட்டுனர் சோர்வடையும் பொழுது, கவனச் சிதறல் ஏற்படும். இதைக் கருவி ஒன்று கணித்து, ஓட்டுனரை ஓய்வெடுக்கச் சொல்லுமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
• பெரும்பாலும் விபத்துக்களில், நடக்குமுன் 30 நொடிகள் மிகவும் முக்கியம். ஓட்டுனரின் உயிரைக் காக்க இந்த 30 நொடிகளில் சரியான எச்சரிக்கையை வாகனம் அளித்தால், 60% உயிர்களைக் காக்க முடியும். 30 நொடிக்குள் வாகன வேகத்தைக் குறைப்பதுடன் எச்சரிக்கையும் கருவிகள் மூலம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
• போக்குவரத்துத் தடங்கள் (traffic lanes) மாற்றுவதைக் கருவிகளே செய்தால் கார் ஓட்டுவது பாதுகாப்பாக இருக்கும்
• கார் பழுதாகியதும் என்ன செய்ய வேண்டும் என்பதை விடியோ அல்லது குரல் மூலம் கருவிகள் வழிகாட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதைத் தவிர, சில செளகரிய விஷயங்களையும் ஓட்டுனர்கள் எத்ரிபார்க்கிறார்கள்:
• காருக்குள் ஒரு குட்டி இணையதள வசதி (internet hot spot) – இது இன்றைய டெஸ்லா காரில் உண்டு
• காருக்குள் வெவ்வேறு பயணிகள் கேட்க, தனிப்பட்ட ஒலிக் கற்றைகள் (நம்முடைய உதாரணத்தில், மனோகருக்கும், செல்விக்கும் தனித்தனி ஒலிபரப்புகளைப் பார்த்தோம் – கணேஷ் குமரேஷின் வயலின் குழந்தைகள் பாடல்களோடு காருக்குள் அவரவர் காதுகளை எட்டியது)
• காரின் கண்ணாடி ஜன்னல்கள் கணினித் திரையாகப் பயன்பட வேண்டும்
• நகரும் காரின் ஜன்னலின் வெளியில் தெரியும் காட்சிகள், கணினி விளையாட்டுடன் தேவைப்பட்டால், இணைந்து கொள்ள வேண்டும்
இன்று, இத்தகையப் புதிய கார்களுக்காக நாம் காத்திருக்கையில், கருவி இணைய முயற்சிகளைப், பல புதிய நிறுவனங்கள் செய்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில், ஒன்று, நாவ்டி (NavD) என்ற நிறுவனம். திறன்பேசி மூலம், ஓட்டுனரின் கவனத்தைச் சிதறடிக்காமல், பல வேலைகளையும் செய்து முடித்துக் கொள்ளக் கூடிய ஒரு நுண் ஒளிப்படக்காட்டி (micro projector) அடக்கம். இதனால், விடியோ உரையாடல்கள், சைகை மூலம், பல ஆணைகளைப் பிறப்பிக்க வழி செய்துள்ளார்கள்.
பொதுவாக, மூன்று விஷயங்கள் கார் சம்பந்தப்பட்டக் கருவி இணையத்தின் மையமாகச் சொல்லலாம்:
1. காரை ஓட்டுபவர் எவ்வளவு பாதுகாப்பாகக் காரை ஓட்டுகிறார்? ஓட்டுனரின் பாதுகாப்புக்கு (safety) என்ன வழிகள்?
2. காரின் பாகங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது?
3. கார் பயணிக்கும் சாலைகளில், என்ன நடக்கிறது? சாலையில் நடக்கும் நிகழ்வுகளைக், கார் எப்படிச் சமாளிக்கிறது?
மேலே குறிப்புகள் ஒன்று மற்றும் மூன்று, ஓட்டுனரைச் சார்ந்த விஷயங்கள். பெரும்பாலும், சாலை விபத்துக்கள், ஓட்டுனரின் கவனக் குறைவு மற்றும் வேகத்தினால் நிகழ்கின்றன என்பது பல ஆய்வுகளின் முடிவு. கருவி இணைய நிறுவனங்கள் இதில் பெரும் ஈடுபாடு காட்டுகின்றன. மற்றபடி, வசீகரத்திற்காக, பல சின்னச் செளகரிய மென்பொருள் கொசுறுகளையும் நுகர்வோருக்கு அள்ளி வீசுகிறார்கள்.
இதை எல்லாம் கருவிகளின் இணையம் மூலம் சாதிக்க முடியும் என்று நம்ப வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, எந்த ஒரு விபத்தும், நடக்கும் முப்பது வினாடிகளுக்கு முன் தடுக்கப்பட்டால், மிகப் பெரிய உயிர் சேதம் இன்றிக் காக்க முடியும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அத்துடன், சாலையில் சட்டப்படி உச்ச வேக அளவிற்கு மேல் பயணம் செய்வது, இன்னொரு காரணம். கருவிகள் தாங்கிய கார்கள், ஓட்டுனர் அதிக வேகம் பயணிக்க நினைத்தாலும், அவரைத் தடுக்கும் சக்தி கொண்டவை. சிலருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிடிக்காவிட்டாலும், பலரின் பாதுகாப்பான பயணத்திற்கு இது அவசியம்.
கார்களின் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில், நேரும் பழுதுகளை, இரு வகையாகப் பிரிக்கலாம்:
1. பழுது பார்க்கும் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பழுதுகள்
2. காரின் கணினியின் மென்பொருள் மாற்றங்கள்
இன்றே நமது கார்களில் ஏராளமான கணினி மென்பொருட்கள் பல உணர்விகளைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்காலக் கார்கள், எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், மென்பொருள் மாற்றங்களை காருக்கு நேராக கார் நிறுவனம் அனுப்பிவிடலாம். இதற்காக, டீலரிடம் செல்ல வேண்டியதில்லை.
பயணிக்கும் பொழுது காரே, அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் காமிராக்கள் மூலம், காரின் கணினிக்கு அனுப்பி, மென்பொருள் மூலம், அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் முடிவெடுக்கிறது. இவ்வகைக் காமிராக்கள் எல்லா கார்களிலும் பொருத்தப்படத் தேவையில்லை. கூகிள் தானியங்கிக் காரின் விடியோவில் பார்த்தது போல், பாதசாரிகளையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் சமாளித்துச் செலுத்தும் தொழில்நுட்பம், இன்று உள்ளது.
எந்த ஒரு காரும் சுற்றியுள்ள சிக்னல், நிறுத்துமிடம் போன்ற விஷயங்களைச் சார்ந்தே வேலை செய்யும். இதைப் பற்றி விவரமாக, கட்டமைப்புகளில் கருவிகளின் இணையத்தின் தாக்கம் பற்றி விவரிக்கையில் பார்ப்போம்.
கீழே ஹோண்டா நிறுவனத்தின் கருவி இணைய விடியோவைக் காணலாம்:
இந்தப் பகுதியில் நாம் அலசிய பல எதிர்பார்ப்புகள் வேறு விதமாக எதிர்காலத்தில் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால், பாதுகாப்பான பயணத்திற்கு, இத்தகைய முன்னேற்றங்கள் மிகவும் அவசியம். எத்தனை கார்கள் தானியங்கிக் கார்களாகும் என்று பல வித கணிப்புகள் இருந்தாலும், இன்னும் 10 வருடங்களில், ஒரு 5% கார்களாவது தானியங்கிக் கார்கள் ஆக வாய்ப்பு உள்ளது. அத்துடன், மின் கார்கள் இத்தகையக் கருவி இணைய உலகிற்குச் சரியான வாகனங்கள். இன்றைய மின்கலம் மற்றும் மின்னேற்றப் பிரச்னைகளைச் சரி செய்ய என்றும் இல்லாத அளவிற்கு இன்று அவசியம் அதிகமாகி வருகிறது. ஏனென்றால், புதிய கணினி மற்றும் மின்னணுக் கருவிகள் அனைத்திற்கும் இத்தகைய சக்தி எப்பொழுதும் தேவைப்படுகிறது.
கார் என்றவுடன் காப்பீடு உங்களது நினைவுக்கு வந்தால், அது சரியானதே. காப்பீடு நிறுவனங்கள், மனித ஓட்டுனரின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள். இளைஞர்/இளைஞிகள் அதிக விபத்துகளில் சிக்கினால், இவர்களின் காப்பீடு அதற்கேற்றவாறு உயரும். அதே போல, கார் எத்தனை புதிதோ அத்தனை காப்பீடு உயரும். புதிய கார்களின் பாகங்களின் விலை, பழைய கார்களை விட அதிகம். கருவி இணைய முயற்சிகள் காரின் பாதுகாப்பை அதிகரித்து, காப்பீடு என்ற விஷயத்தையே தலை கீழாக்கி விடுகின்றன. டெஸ்லா போன்ற இன்றைய கார்கள், நெடுஞ்சாலை மற்றும் நகரின் வீதியில் ஓட்டுனரின் பாதுகாப்பிறகாக காரின் இயக்கத்தை மற்ற கார்களின் வேகத்தைப் பொறுத்துக் கட்டுப் படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டன. காப்பீடு நிறுவனங்களுக்கு இதனால், சற்று ஜுரம் வந்து, அவை பலவித புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஓட்டுனர்களின் கார் ஓட்டும் பழக்கங்களைப் பதிவு செய்யப் புதிய கருவிகள், சில இலவச ஊக்க அளிப்புகள் என்று தங்களைத் தயார் படுத்தத் தொடங்கி விட்டன.
தானியங்கிக் கார்கள் காப்பீடு நிறுவனங்களைப் பெரிதாக பாதிக்கும். இதனால், சில சட்டச் சிக்கல்களை இந்த நிறுவனங்களே ஏற்படுத்தும் என்றும் நம்பலாம். குறிப்பாக, டெஸ்லாவின் முயற்சிகள், கார் தொழிலையே மாற்றிவிடும் சக்தி கொண்டவை என்று பல வல்லுனர்களாலும் இன்று சொல்லப் படுகிறது. முழுக் கருவி இணைய வீச்சை இன்னும் எவராலும் இத்துறையில் கணிக்க முடியவில்லை. இணையத்துடன் தொடர்புடைய ஒரே காரினால், இத்தனை பயம், எதிர்பார்ப்பு, மற்றும் ஆதங்கம் இத்துறையில் இன்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பரவப் பரவ, காரகளைச் சார்ந்த பல உப தொழில்கள், குறிப்பாக, காப்பீடு மற்றும், பராமரிப்பு சார்ந்தவை, மிகவும் கவலைப்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் நுகர்வோரைச் சார்ந்த விஷயங்கள்; பாதிக்கப்பட்ட உப தொழில்களைச் சார்ந்தன அல்ல. உதாரணத்திற்கு, விடியோ டேப் எந்திரத்தைச் சார்ந்த தொழில்கள் இன்று இல்லை என்று யாரும் கவலைப் படுவதில்லை. மாறாகப், புதிய தலைமுறையினர், விடியோ பார்க்கும் பொழுது இணைய வேகம் சரியில்லாததைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்:
மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. மிக எளிதாகச் சொல்லப் பட்டுள்ளது. ஆங்காங்கே நகைச்சுவை இழையோடுகிறது. ஓட்டுனர்கள் இல்லாத கார்கள் ஒஎரும் புரட்சியை ஏற்ப்டுத்தும்.
நல்ல விஞ்ஞான கட்டுரைகள் த்ருவத்ற்கு நன்றி! வாழ்த்துக்கள்.