எனக்கேயுரிய வாழ்க்கை

குணப்படுத்த முடியாத புற்றுநோயால் தான் பீடிக்கப்பட்ட செய்தியறிந்தது குறித்து ஆலிவர் சாக்ஸ் இவ்வாண்டின் துவக்கத்தில் எழுதிய கட்டுரை

(ஆலிவர் சாக்ஸ் இன்று இறந்த செய்தி எத்தனை பேரை பாதித்திருக்கும் என்று தெரியவில்லை. நரம்பியல் குறித்து பொது வாசகர்களிடையே சுவாரசியமான அறிமுக கட்டுரைகளை எழுதிய அவரது மரணம், மனித குலத்துக்கு ஒரு பேரிழப்பு என்று சொல்வது பிழையல்ல. கருவிகளையும் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் அடிப்படை மருத்துவ முறைமைகளாகக் கொள்ளும் போக்கு மேற்கத்திய மருத்துவத்தில் வலுத்து வரும் காலத்தில், உயிரும் உணர்வும் கொண்ட தனிமனிதனைத் தன் மருத்துவக் கட்டுரைகளைக் கொண்டு தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவர் அவர். 82 ஆண்டுகள் வாழ்ந்துதான் மறைந்தார் என்றாலும் ஆலிவர் சாக்ஸின் மறைவை ஒரு வகையில் மருத்துவத்துறையின் ஆன்ம இழப்பாகக் கொள்ளலாம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்தபின் அவர் இந்த ஆண்டின் துவக்கத்தில், நியூ யார்க் டைம்ஸில் எழுதிய கட்டுரையை மொழியாக்கம் செய்து பதிப்பிக்கிறோம்)

Neurologist_oliver_sacks_author_Science

ஒரு மாதத்துக்கு முன் நான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன், திடகாத்திரமாக இருப்பதாகவும் நினைத்தேன். எனக்கு இப்போது 81 வயது, இன்றும் தினம் ஒரு மைல் தூரம் நீந்துகிறேன். ஆனால் என் அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்து விட்டது- சில வாரங்களுக்கு முன்னர், என் கல்லீரலில் பல இடங்களில் புற்றுநோய் பரவியிருக்கும் செய்தியை அறிந்தேன்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன், என் கண்ணில் ஓர் அபூர்வ ட்யூமர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது, ஒக்யூலர் மெலானோமா. கண்ணில் உள்ள கட்டியை அகற்ற எனக்கு அளிக்கப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் இறுதியில் அந்தக் கண்ணின் பார்வையைப் பறித்துச் சென்றன. ஒக்யூலர் மெலானோமா வந்தவர்களில் ஐம்பது சதவிகிதத்தினரின் புற்றுநோய் வேறு இடங்களுக்கு பரவுகிறது என்றாலும், எனக்கேயுரிய பிரத்யேக நிலையைக் கணக்கில் கொள்ளும்போது அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால் இப்போது அதிர்ஷ்டமில்லாதவர்களில் ஒருவனாகி விட்டேன்.
புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நாளிலிருந்து ஒன்பது ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தோடும் பயனுள்ள வகையிலும் வாழும் வாழ்வு எனக்கு அருளப்பட்டிருக்கிறது. அதை நன்றியுணர்வோடுதான் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் இப்போது மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன். என் கல்லீரலில் மூன்றில் ஒரு பகுதியை புற்றுநோய் ஆக்கிரமித்திருக்கிறது. அது மேலும் பரவும் வேகத்தைக் குறைக்க முடியும் என்றாலும், இவ்வகைப் புற்றுநோயைத் தடுத்து நிறுத்த முடியாது.
இனி எனக்கு மிச்சமிருக்கும் மாதங்களை நான் எப்படி வாழ வேண்டும் என்று முடிவு செய்வது மட்டுமே என் தேர்வு. என்னால் எவ்வளவு செறிவாகவும், ஆழமாகவும், மிகப்பயனுள்ள வகையிலும் வாழ முடியுமோ, அவ்வகையில் வாழ விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான தத்துவவியலாளர், டேவிட் ஹ்யூமின் சொற்கள் இங்கு என்னை ஊக்குவிக்கின்றன. நோய்மை தன்னை இறுதி நாட்களுக்குக் கொண்டுவந்துவிட்டதைத் தனது 65ஆவது வயதில் அறிந்த அவர், 1776ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு சிறு சுயசரிதையை ஒரே நாளில் எழுதினார். அதற்கு அவர் சூட்டிய தலைப்பு, “எனக்கேயுரிய வாழ்க்கை
விரைவில் நான் மறைவேன் என்று கணிக்கிறேன்,” என்று அவர் எழுதினார். “என் நோய்மையால் எனக்கு மிகக் குறைந்த வலியே ஏற்பட்டிருக்கிறது.அதைவிட வினோதமான விஷயம் இதுதான்- என் உடல்நிலை மிகவும் சீரழிந்துவிட்டபோதும், கணப்பொழுதும் நான் மனதளவில் துன்பப்படவில்லை. வாசிப்பில் எனக்கு எப்போதும் இருக்கும் நாட்டம் இப்போதும் இருக்கிறது, நண்பர்களின் சகவாசம் எப்போதும் போல் இப்போதும் எனக்கு சந்தோஷம் தருகிறது“.
ஹ்யூமின் 65 ஆண்டுகளுக்கு அப்பால் எனக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் அளிக்கப்பட்டு நான் எண்பது ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்திருக்கிறேன். எனக்குக் கூடுதலாகக் கிடைத்த பதினைந்து ஆண்டுகளும் முந்தைய ஆண்டுகளைப் போலவே படைப்பூக்கத்திலும் நேசத்திலும் செறிவானவையாக இருந்திருக்கின்றன. இந்த ஆண்டுகளில் நான் ஐந்து புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறேன். ஹயூமின் சொற்ப பக்கங்களைக் காட்டிலும் நீண்ட ஒரு சுயசரிதையையும் எழுதி முடித்திருக்கிறேன். அது இவ்வாண்டு இளவேனிற் பருவத்தில் பதிப்பிக்கப்பட இருக்கிறது. இன்னும் சில புத்தகங்கள் முடிவடையும் நிலையில் இருக்கின்றன.
தன் சுயசரிதையில் ஹ்யூம் மேலும் தொடர்ந்தார், “நான்… விருப்பு வெறுப்புகளில் மிதமானவன், உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன், வெளிப்படையாகப் பேசுபவன், நண்பர்களின் சகவாசத்தில் நாட்டம் கொண்டவன், உற்சாகமானவன், உறவின் இணக்கத்தில் வசப்படக்கூடியவன், சிறிதளவும் பகைமை பாராட்டாதவன், என் ஆசாபாசங்களில் மிகவும் நிதானத்தைக் கடைபிடித்தவன்“.
இங்கு நான் ஹ்யூமிலிருந்து வேறுபடுகிறேன். எனக்கும் அன்பு நிறைந்த உறவும் நட்பும் வாய்த்திருக்கின்றன, நானும் உண்மையில் பகைமை பாராட்டியதில்லை. ஆனால் நான் மிதமானவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். என்னை அறிந்தவர்களும் என்னைக் குறித்து அப்படிச் சொல்ல மாட்டார்கள். மாறாக, நான் தீவிர உணர்வுகளுக்கு ஆட்படக்கூடியவன், மிகவும் வலிமையான உற்சாகங்களுக்கும் மிதமிஞ்சிய உணர்ச்சிகளுக்கும் வசப்படக்கூடியவன்.
ஆனால்கூட ஹ்யூம் எழுதிய கட்டுரையில் ஒரு வாக்கியம் குறிப்பிடத்தக்க உண்மை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது: “இது மிகக் கடினம்,” என்று அவர் எழுதினார், “இப்போதிருப்பதைவிடக் கூடுதலாக என்னால் வாழ்வை விலகி நின்று பார்க்க இயலாது“.
கடந்த சில நாட்களாக நான் வாழ்வை வெகு உயரத்திலிருந்து பார்ப்பது போலிருக்கிறது. என் வாழ்க்கை பரந்த நிலத்தோற்றமாய் விரிந்து கிடக்கிறது, அதன் உறுப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதை நாள்தோறும் நான் மேலும் மேலும் ஆழமாய் உணர்ந்தவாறிருக்கிறேன். இதனால் என் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என்று பொருளல்ல.
மாறாய், நான் மிக உக்கிரமாய் என் உயிர்ப்பை உணர்கிறேன். எனக்கு மிச்சமிருக்கும் காலத்தில் என் நட்புகள் மேலும் ஆழச்செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன். என் நேசத்துக்கு உரியவர்களிடம் விடைபெற விரும்புகிறேன். இன்னும் அதிகம் எழுதவும், பலமிருந்தால் பயணம் செய்யவும், புதிய தளங்களில் புரிதல்களையும் தரிசனங்களையும் அடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
இதைச் செய்ய துணிச்சலும் தெளிவும் ஒளிவுமறைவற்ற பேச்சும் தேவைப்படுகின்றன. உலகத்தோடு எனக்குள்ள கணக்கை நேராக்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் எனக்குச் சிறு கொண்டாட்டத்துக்கான நேரமுமிருக்கும் (சில முட்டாள்தனங்களுக்கும் நேரமிருக்கும்).
இதை அக்கறையின்மை என்று சொல்ல முடியாது. இது விலகல்தான்- இப்போதும் நான் மத்திய கிழக்கு நிலவரம் பற்றியும், உலக வெப்பமயமாதல் பற்றியும், அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் மிகவும் கவலைப்படுகிறேன். ஆனால் இவை எதுவும் இனி என் பொறுப்பல்ல. இவை எதிர்காலத்துக்கு உரியவை. திறமை வாய்ந்த இளைஞர்களைப் பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது- என் புற்றுநோய் இடமாறிப் பரவி விட்டதைக் கண்டறிந்து சொன்னவரைப் பார்க்கும்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. நம் எதிர்காலம் உரிய கரங்களில் இருப்பதாக உணர்கிறேன்.
என் சமகாலத்தவர்களின் மரணம் குறித்து கடந்த பத்து ஆண்டுகள் போல் நான் அதிக அளவில் அறிந்து வந்திருக்கிறேன். என் தலைமுறை வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மரணமும் என்னைத் துணிப்பதாய் இருந்திருக்கின்றன, என்னில் ஒரு பகுதியை வெட்டி எடுத்தது போல் இருந்திருக்கின்றன. நாங்கள் சென்ற பின் எங்களைப் போல் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் போல் இன்னொருவர் எப்போதும் இருந்ததில்லை. இறந்தவர்களை ஈடு செய்ய முடியாது. நிறைக்க முடியாத வெற்றிடங்களை அவர்கள் விட்டுச் செல்கின்றனர். ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவனாய் இருந்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது- மரபணுக்களும் நரம்பு மண்டலமும் கட்டமைத்த விதி. நாம் ஒவ்வொருவரும் நம் பாதையை நாமே கண்டறிந்தாக வேண்டும், நாம்தான் நம் வாழ்வை வாழ்ந்தாக வேண்டும், நாம் மட்டுமே நம் மரணத்தை எதிர்கொள்ள முடியும்.
எனக்கு அச்சமில்லை என்று நான் நடிக்கப் போவதில்லை. ஆனால் என் உணர்வுகளில் நன்றியுணர்வே மேலோங்கி நிற்கிறது. நான் நேசித்திருக்கிறேன், எனக்கு நேசம் கிடைத்திருக்கிறது. எனக்கு எவ்வளவோ அளிக்கப்பட்டிருக்கிறது, பதிலுக்கு நானும் சிறிது கொடுத்திருக்கிறேன். நான் வாசித்திருக்கிறேன், பயணம் செய்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன், எழுதியிருக்கிறேன். நான் இந்த உலகோடு உறவு கொண்டிருக்கிறேன்- இவ்வுலகோடு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமே வாய்க்கும் பிரத்யேக கலவி அனுபவம் எனக்குக் கிட்டியிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நான் உணர்வுள்ள உயிராக இருந்திருக்கிறேன், சிந்திக்கும் மிருகமாய் இந்த அழகிய கோளில் வாழ்ந்திருக்கிறேன்- தன்னளவில் இதுவே ஒரு மகத்தான கௌரவமும் சாகசமும் ஆகிறது.

(தமிழாக்கம் அ. சதானந்தன்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.