இருத்தல்

Birds_Seagulls_Flutter_Ocean_Water_Escape_Fly_Heart

கண்களை மூடி சம்பிரதாயமாய் முனகிக் கொண்டிருந்தான். இன்றோடு 29 வயதாகிறது ஜீவாவுக்கு. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? என்ற சந்தேகம் உறுத்தினாலும் பாசாங்காய் இந்த வாழ்வை எதிர்கொள்ள முனையும் பாவனைகளில் இதுவும் ஒன்று. சின்ன வளைவுகளில் பெரிதாகி தம்புராவிலிருந்து எழும் நாதம் போல் ஊதுவத்தி எரிந்து கொண்டிருந்தது. இப்பவோ அப்பவோ அழிந்து விடுவது போல திருநீற்று கீற்றைக் இட்டுக் கொண்டான்.
கதவைப் பூட்டிக்கொண்டு நடந்தான், எதிர் வீட்டில் குழந்தைகள் துரத்தி விளையாண்டு கொண்டிருந்தன. கீழ்வீட்டைக் கடக்கும் போது சின்னதாய் ஒரு தயக்கம்;ஸ்ரீலஸ்ரீவெங்கடகிருஷ்ணனை தரிசித்து விடக் கூடாது; இல்லையானால் மூன்றுமாத வாடகை பாக்கியிலிருந்து, பாகவதம்,ஞானம் என்று  போய்விடுவார். வீட்டுக்காரர் என்பதற்காக அவர் சொல்லும் “நேதி நேதி “ – இது இல்லை இது இல்லை- என தேடும் வேத விசாரணைகளில் மாட்டிக் கொள்வது அவனுக்கு உதறலாய் இருந்தது.
ஆனால் இன்று அவரிடம் மாட்டிக்கொள்வது ஓரளவு உறுதியாகி விட்டிருந்தது. வாசலிலேயே உட்கார்ந்திருந்தார். பட்டையாய் இருந்த சந்தன கீற்றின் நடுவே குங்குமம் வைத்திருந்தார். பஞ்சகச்சம் இல்லாமல் வெள்ளை வேட்டியை நீளமாக உடுத்தி இருந்தார். வெற்றிலையை குதப்பிய வாயை ஊதுவது போல் குவித்து மென்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார். இடை இடையே ஜீவன், ஆத்மா, மனம் என்று பேசுவது கேட்டது. பக்கத்தில் வேறு யாரோ ஒருவர் உட்கார்ந்து உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தார்.  அரவமில்லாமல் சென்று விடலாம் என்று தான் நினைத்தான். அதற்குள் புதியவர் அவனை நிமிர்ந்து பார்க்கவும் வீட்டுக்காரர் அவனை பார்க்கவும் சரியாக இருந்தது.
”வாடா… ஜீவா!  இப்படி வா நீயும் இத கேளு”
“விச்சு என்ன சொல்லிண்டிருந்த்தேன் ?
ஆஹான்…ஆ….இந்த காலத்தில் ஆளாளுக்கு ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ஸுண்டு; அதை கொறைக்கிறேனுட்டு என்னவெல்லாமோ பண்றா. ஆனால் கொள்ளியைப் பிடுங்கினாத் தானே உலை அடங்கும்?  அப்படியே அந்தரமாய் நிக்கிற இந்த மனசை அறியாம என்ன பண்ணி என்ன?.
பித்தளைச் செம்பிலிருந்த நீரில் ஒரு மிடறு குடித்துக்கொண்டார்.
”க்ஹம்”
”இந்த மனசு இருக்கே வண்டில கட்டின சக்கரம் மாறி சுத்திண்டே இருக்கு.
”யார் சுத்தறா ? ;
” நீயா ?”.
”சொல்லுடா ?”.
‘’ “
”இல்லை ?”
”யாருன்னு சொல்லு ? “.
ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பேசும் போது ஆடிக்கொண்டிருந்த குடுமியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அதுவா சுத்தறது. நீயும் பின்னாடியே சுத்தற; பின்ன அந்த சக்கரம் அதிவேகமாய்ச் சுற்றி  வண்டியே உடைஞ்சி போய்டறது. இந்த மனவோட்டத்தாலே நீயும் அழிஞ்சு போற”.
பக்கத்திலிருந்த வெற்றிலைச் செல்லத்தை நோக்கி கை நீண்டது. காம்புகளை கிள்ளி முக்கோண வடிவமாய் மடிக்கையில் நடுவிரல் மோதிரம் மின்னிற்று.
“க்ஹம்” என அரற்றிக்கொண்டார். வெற்றிலையின் முதல் சாறு சற்று காரமாய் இருந்திருக்கலாம்.
“இப்போ உன் வேலையென்ன நீ சக்கரமும் அல்ல வண்டியுமில்லனு உணரனும். பின்னே சக்கரமும் வண்டியுமாய் நிக்கிற ப்ரக்ஞை இருக்கு பார். அதான் எல்லாம்”.
உள்ளே இருந்து அவர் பேரன் ஒடி வந்தான்.
“தாத்தா பாட்டி கொடுத்தா”
பூஜையறையிலிருந்து பிரசாதம் வந்தது. நெய் மணமே அருமையாய் இருந்தது. ஸ்ரீலஸ்ரீயின் பேரன் கண்களை அகற்றி கேள்வியுமில்லாது பதிலுமில்லாது ஒரு பார்வை பார்த்து விட்டு வெடுக்கென உள்ளே ஒடினான்.
“ஜீவா எதில விட்டேன்”
”சார் லேட்டாகுது பஸ்ஸை பிடிக்கணும்”
“போடா ஞான சூன்யம்!. என்னடா பெரிய பஸ்! இப்படி ஓடி ஒழச்சி என்னத்த பண்ட்ற? இத்தோட மூணுமாச வாடகை பாக்கி. இந்த அவசரத்த அதில காட்டணும் போ”.
முகத்தை திருப்பி யாரையோ கூப்பிடுவது போல் உள்ளே பார்த்தார்.
மாதம் பன்னிரெண்டாயிரம் வருகிறது. வீட்டு வாடகைக்கும், கரண்டு பில்லிற்கும் போக நாடார் கடை அளவு சப்பாட்டிற்கும் மணி கடை டீ பட்டர்  பிஸ்கட்டிற்குமே சரியாய் இருக்கிறது. திரும்பி நடந்து படிகளில் இறங்கும் போது இந்த உலகமும் சேர்த்து அவன் கூடவே இறங்கியது. தரை தட்டி நின்ற போது கண்களில் நீர் பொங்கிற்று. வழியாமல் உள்ளேயே அமிழ்ந்து எதிரே வரும் வாகன ஊர்வலமும் நகரமும் ஒன்றுமே இல்லாத ஒளிக்கீற்றுகளாய் கோடுகளாய்த் தெரிந்தது.
கோடுகள் மறைந்து கண்களை மூடியபோது அத்தையும் மாமாவும் பேசினார்கள்.
“அதான் இவ்ளோ தூரம் படிக்க வச்சாச்சில்ல.. இதுவே போதும் எதுனா வேலைக்கு போனா என்னவாம்?”
அதுல்லைடி….நல்ல படிக்கிறான். இதுக்கு மேல படிச்சா நல்ல உத்யோகம் கிடைக்கும் அப்புறம் நமக்கும் ஒத்தாசையா இருக்குமில்லயா?. அவனுக்குனு வேற யார் இருக்கா?”
“ஆமா ஆமா அப்படியே நம்ம பொண்ணையும் கட்டி வைங்க, ரொம்ப நல்ல இருக்கும். இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்.”
“அதில்லடி”
“ம்”.
அதன் பின்பு இதோ இந்த நகரம் தான் அவனை வாரி அணைத்துக்கொண்டது. வருடம் எட்டாயிற்று. இதோ இன்று கணக்கு எழுதிக்கொண்டிருக்கிறான்.
கணக்குடன் சேர்த்து மேனேஜரின் வீர ப்ரதாபங்களுக்கு மவுனமாயும், பின்பு இளிப்புடன் கேட்கும் வார இறுதி சினிமா டிக்கட்களையும், காய் கறி, கரண்டு பில் என இன்ன பிற உபரி வேலைகளையும் செய்ய வேண்டும்.
மேனேஜரின் அழைப்பு மணி ரீங்கரித்தது.
”ஜீவா நீ வீட்டுக்கு போ மீனா உன்னட்ட ஏதோ வாங்க சொன்னா”
”சார்…” என இழுத்தான்.
“என்ன ?” அவர் கேள்வியில் அடுத்த மாத வாடகை பாக்கியும் , நாடாரும், பெட்டிகடை மணியும் நர்த்தனம் ஆடினார்கள்.
கடைக்குப் போனுமானால் போக வேண்டியது தானே. நடந்தால் நூறு அடி கூட இருக்காது. ஸ்கூட்டியில் போனால் ஐந்து நிமிஷம் தானாகும். பின்னே கடைக்கு மட்டுமா… டெய்லர் கடை, ஃபார்மஸி எல்லாத்துக்கும் நானே போகணும். போனாலும் ஐம்பது பைசா சில்லறைக்கு கூட மேனேஜரிடம் உயர் மட்ட விசாரணை உண்டு.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பு மவுனமாய் இருந்தது. படிக்கட்டை நெருங்கும் பொது காவலாளி கூப்பிட்டு நிறுத்தினார்.
“தம்பி ! நில்லு ! யார் நீ?”
“அண்ணே என்னைத் தெரியலயா?  போன வாரம் கூட வந்திருந்தேனே?.
“தெரியலயே”
“யாரா இருந்தாலும் இந்த நோட்டுல கையெழுத்து போட்டுட்டுத் தான் போகனும்”.
”என்னண்ணே ?”.
“இல்ல தம்பி கையெழுத்து போட்டுருங்க” கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
அவரைப் பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் தோன்றியது; ஒன்று அவருக்கு அவன் மீது நம்பிக்கையில்லை அல்லது அவர் ஒரு ஜென் ஞானியைப் போல ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பொருளையும் புதியது போல பார்த்துத் தன் கடமையைச் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
படியேறி மூடிய கதவுகளை கடந்து நடந்தான். உள்ளே ஆள் இருந்தாலும் எப்போதும் இந்த கதவுகள் மூடியே இருப்பது போலிருந்தது. மூன்று முறை காலிங் பெல்லை அழுத்தினான். சங்கிலி போட்ட கதவின் இடுக்கு வழியே மீனா நின்றாள். அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்து செல்போனை காதில் ஒற்றியபடியே உள்ளே போய் வை என்று சைகை காட்டினாள்.
அவமானமாய் இருந்தது ஜீவாவுக்கு. ஒரு நாள் கூட மனிதனாக மதிக்கவில்லை அவள்.  வேலை செய்து பிழைப்பவர்கள் உணர்ச்சியற்ற எந்திரங்கள்; வாய் பேசும் ஊமைகள்; கணக்கிலே வராதவர்கள்; மீதமானவர்கள்….இன்றோ நாளையோ அழியப்போகும் ஜீவன்கள். பூச்சிகளை போல… புழுக்களை போல.
ஹாலைக் கடந்து கிச்சனில் வைத்து விட்டு திரும்பிய போது பள பளப்பாய் ஏதோ கண்ணை உறுத்தியது.கத்தி. அகலமான அடிப்பகுதியுடன் நுனியில் வளைவாய் குறுகிச் சென்றது. ஜன்னல் வழியே வந்த வெயிலில் இன்னும் அதிகமாய் மின்னியது. அதை பார்த்தவுடன் ஜீவாவின் கை நடுங்கியது. இதயம் இரையான பறவையின் இறகு போல பட படவென அடித்துக் கொண்டது. ஒரு முறை தலை சுற்றுவது போல் இருந்தது. அவசரமாய் கிச்சனிலிருந்து வெளியே வந்தான். மீனா சரி போகலாம் என்பது போல் தலையாட்டினாள். செல் போன் இன்னும் காதிலேயே தான் இருந்தது.
போன மாதம் அந்த நாளிலிருந்து தான் அந்த நடுக்கம் ஆரம்பித்தது. வாழ்வை முற்றாக மறுக்கும் ஒரு நடுக்கம். தனதையும், பிறரையும். ஆனால் அதற்கான காரணங்கள் இந்த நகரத்திற்கு வந்தது முதலே ஆரம்பித்திருக்க வேண்டும்.
அன்று.
கவிழ்ந்து விடும் போல வந்த பஸ்ஸில் மழ மழ வென குமபல் ஏறியது. ஜீவா உள்ளே நகர்ந்து சென்று இல்லை நகர்த்தப்பட்டு மத்தியில் வாகாய் நின்றிருந்த கம்பியில் சாய்ந்து கொண்டான். வெளியே பரபபரப்பாய் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வியர்வை நாற்றத்தினூடே சில சமயம் பலவித செண்ட் வாசனைகளும் கலவையாய்ச் சேர்ந்து தலை வலியை இன்னும் அதிகமாக்கியது.
ஜன்னலுக்கு வெளியே எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை தான் பட்ட இகழ்ச்சிகளும் அவமானங்களும் நினைவில் ஓடியது. மனிதர்களின் அவசரமும் பரபரப்பும் ஆயாசத்தை தந்தது.போலித்தனமும், துரோகமும் வாழ்வை அர்த்தமற்றதாக்கின. ஏன் ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? என்ற கேள்வி மூளையைக் குடைந்தது. வாயைத் திறந்து “ஆ” வென்று அலற வேடும் போல் இருந்தது.
”வீல்”என்று ஒரு சத்தம், சிந்தனை கலைந்து பார்க்கையில். ஜன்னலோர சீட்டிலிருந்த ஒருத்தி ஜீவாவைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்.
“ஏண்டா நாயே ! ஏண்டா இப்பிடி அலையிரீங்க !”
ஜீவா குழம்பியபடி என்ன என்று கேட்பதற்கு வாயெடுத்தான்.
“என்னம்மா ஆச்சு ?” கூட்டத்திலிருந்து யாரோ கேட்டார்கள்.
“தூங்கிட்டிருந்த போது சேலை வெலகிடுச்சு; இவன் என்னையே பாத்துட்டுருக்கான் சார்” அழுவது போன்ற பாவனையில் சொல்லி முடித்தாள்.
அடுத்து நடந்தததெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் தொடங்கி முடிந்தது.
எங்கிருந்தோ வந்த கரங்கள் கன்னத்திலும் முதுகிலும் இடித்து தார்மீக நீதியை நிலை நாட்டிக் கொண்டிருந்தன. உண்மையில் அவளை கல்மிஷமாய் பார்த்தவர்களும் அடித்திருக்கலாம். இடைவெளியில் எங்கே இறங்கினோம் என்று தெரியவில்லை. உடம்பெல்லாம் தகிப்பது போலிருந்தது. முகமெல்லாம் எரிந்தது.  எண்ணங்களெல்லாம் புள்ளியாய் சுருங்கி மனமே வெற்றிடமாய்த் தோன்றியது. நடை பாதையில் உட்கார்ந்து சாலையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். வாகனங்கள் இருட்டையும் வெளிச்சத்தையும் மாறி மாறி இறைத்து விட்டுப் போயின. எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. நினைவு வந்து எழுந்து நின்றான். தலையைக் கோதி கசங்கிய சட்டையை இழுத்து விட்டுக் கொண்டான். சாலையின் குறுக்கே நடந்து பஸ் ஸ்டாப்பில் நின்றான்.
நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மறக்க முயற்சி செய்தாலும் சக்கரம் போல மனம் அந்த நாளையே சுற்றி வந்தது. இதுவரை ஆயிரம் முறையாவது நினைத்துப் பார்த்திருப்பான். மாலை வேலை முடிய தாமதமாயிற்று. நிமிர்ந்து பார்த்த போது யாருமேயில்லை அனாதையாய் கிடந்த மேஜைகளில் காற்றினால் காகிதங்கள் பரபரத்துக் கொண்டிருந்தன. வாட்ச் மேனிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்.
தெருமுனை நாடார் கடையில் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார்கள். மணி கடை இன்னும் மூடவில்லை. சிகரெட் வாங்க நினைத்து திரும்பி மனதில்லாமல் வீட்டை நோக்கி நடந்தான்.
அன்று நடந்ததைப் பற்றி யோசித்தான். வாழ்வின் அவலத்தை, அது தரும் கசப்பை, நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் பிழைப்பை, நொடிக்கொரு தரம் நடிக்கும் நாகரீகமெனும் மாயையை, விடை தேடித் தீராத தேடலை , அந்தக் கேள்வியே மறந்து போன நிலையை, வந்தது போல செல்லுமிடம் தெரியாமல் உழலும் பிறவியெனும் நோயை நினைத்தது குற்றமா ? இல்லை இந்த பிறவியே குற்றமா ?.
நினைக்க நினைக்க தொண்டை அடைத்தது. கண்ணில் நீர் பெருகி வழிந்தோடியது. பின்னாலிருந்து யாரோ அழைப்பது போல் இருந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டே யாரென்று பார்த்தான். யாருமில்லை. நாயொன்று விளக்கு கம்பத்தினடியில் நின்று கொண்டிருந்தது.
படியேறும்போது ஸ்ரீலஸ்ரீயின் வீட்டைப் பார்த்தான். பூட்டியிருந்தது. அவருக்கென்ன உலகம் என்பது வேதத்தில் உள்ளது. உபன்யாசமும், பிரம்மமும் போதும் இந்த வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கு.
 
சுவிட்சை தட்டி விளக்கை போட்ட போது ஏதோ ஒன்று ஊர்வது போல் இருந்தது. சொர சொர வென ஊர்ந்து பறந்து சுவரோரமாய் விழுந்தது.
கரப்பான் பூச்சிகள்.
கூட்டமாய் அங்கும் இங்கும் ஓடின. அதில் ஒன்று அவன் காலில் மோதி பின்னே ஏதோ ஒன்றென நினைத்து சட்டென்று தூரம் போய் நின்றது. ஈர்க்குச்சியின் நுனி போன்ற அதன் உணர் நீட்சிகளை நீட்டி மேலும் கீழும் ஆட்டியது. இன்னொன்று காலிலே ஏறி கணுக்காலின் மயிர்க்கூட்டத்தின் ஊடே விர்ரென்று மேலே ஏறியது. இதற்கு எந்த சந்தேகமும் வரவில்லை போல. ஜீவா மின்னல் போல வந்த அருவருப்பினால் உடம்பை குலுக்கி காலை உதறினான். கரப்பான் பூச்சி உணர்வு வந்தது போல வெடுக்கென பறந்து ஓரமாய் விழுந்து உணர் நீட்சிகளை நீட்டி எக்கலிப்பது போல ஆட்டியது.
வெறுப்பும் கோபமும் வந்தவனாய் கட்டிலோரமாய் கிடந்த கட்டையை எடுத்து ஒவ்வொன்றாய் தலையில் தட்ட ஆரம்பித்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கபால மோட்சம் அடைந்து கொண்டிருந்தன. தலை நசுங்கிய ஒன்று வெள்ளையாய் தரையோடு ஒட்டிக்கொண்டு பின்னங்கால்களால் உந்தித் தலையை எடுக்க பிரயத்தனம் செய்தது. அவற்றைக் கொல்வது ஜீவாவுக்கு இப்போது தேவையாய் இருந்தது.
சுவரோரமாய் இருந்ததை அடிக்கையில் நழுவி நடு வயறு பிதுங்கிக் கொண்டது. பிதுங்கியதை இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது. உண்மையில் அது அவனிடமே மறுபடியும் மறுபடியும் ஓடி வந்தது.
”தட்” இப்போது கட்டை அதன் தலையை இடித்திருக்கும். ஆனால் உணர் நீட்சிகளில் ஒன்று உடைந்து தொங்கியது. இருந்தும் அது அவனை நோக்கியே நகர்ந்தது.இந்த முறை பலமாய் இடிக்கப்போனவன் சட்டென்று நிறுத்தினான். இப்போது அவன் காலை ஒட்டி நின்று பிதுங்கிய வயிறினால் ஒரு அரை வட்டம் போட்டது. ஒற்றை நீட்சியால் அவன் கால்களை நிரடியது. சட்டென்று கட்டையை கீழே போட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான். திக்கற்ற வெளியை துழாவிக்கொண்டே முன்னே நகர்ந்து கொண்டிருந்தது.
கரப்பான் பூச்சிக்கு கண்ணில்லையா அல்லது கண்ணிருந்தும் என்னைப் போலவே மீண்டும் மீண்டும் என் மீது ஊர்ந்து மாய்வதில் இந்த வெற்று வாழ்வை மறுக்கும் தீவிரமா? அல்லது அதன் சின்னஞ்சிறு உலகில், அற்பமான, இந்த வாழ்தலின் மீதான குதூகலமா ?  பரிணாமச்சக்கரத்தில் அவை எப்பொழுதோ வந்து விட்டன. கண்ணில்லாதது போல் தட்டித் தடவி, இந்த உலகில் இத்தனை யுகங்கள் இவை தாண்டி வந்ததே மலைப்பாயிருந்தது. யார் கொல்வார்கள் ? யார் எவரென தெரியாமலே கொல்பவனையே நோக்கித் திரும்பும் அவைகளின் உள்ளுணர்வு அவனை உலுக்கியது. ஓடி, ஆடி, பறந்து; தெரிந்த வித்தையெல்லாம் செய்து நரபேய்களுடன் மோதி அழியும் அவை ஏதோ சொல்வது போலிருந்தது. இது வரை அவை சாதித்தது என்ன?அதன் வாழ்வின் பொருளென்ன? அவை மனிதனைப் போல அன்றிலிருந்து இன்று வரை நித்தமொரு புது  சிந்தனை செய்து கல்வி கற்று விஞ்ஞானம் பயின்று தத்துவம் சொல்லி மாயவில்லையே? பின்னே அவை என்னதான் செய்தன? அன்றிலிருந்து இன்று வரை எது அவற்றை இத்தனை தூரம் கொண்டு வந்தது.
வெகு நேரம் அந்த கரப்பான் பூச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். முன்னிருந்த சுறுசுறுப்பும் எக்காளமும் காணவில்லை. அதற்காக அது நின்று விடவுமில்லை. அது இப்போது தன்னை இழுத்துக் கொண்டே முன்னே சென்று கொண்டிருந்தது. மெதுவாய் உணர் நீட்சியால் முன்னே தடவிக் கொண்டே சென்றது. நிச்சயம் அது வெகு தூரம் செல்லும் என தோன்றியது.
ஏனென்றால் இப்போதும் அது கரப்பான் பூச்சியாகவே இருப்பது தெரிந்தது. கண்களில் துளிர்த்த நீர்த்துளி காட்டாற்று வெள்ளமாய் மாறி மனதை துடைத்து விட்டுப் போனது.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.