ரயில் சிநேகம்

Kid_Children_Train_Tracks_Play_Games_Childhood_Boy_Railways_Colors

அப்பாவிற்கு பஸ் ஒத்துக்கொண்டதில்லை. ஊருக்குக் கிளம்பவேண்டும் என்றால் முதலில் அவர் தேடுவது ரயில்வே அட்டவனையைத்தான்.  தவிர்க்கமுடியாத காரணங்களால் பஸ்ஸில் போக நேர்ந்தால் மாமியாரைப் பார்க்கப் போகும் அம்மாவைப் போல் ஆகிவிடுவார்.  அதனால் எனக்கு ரயில் மிக நெருக்கமானது.  3-7 வயது வரைக்கும் ஞாயிறு மாலை விழுப்புரம் சந்திப்புக்கு ஒரு நடை  இருக்கும்.
வாசலில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் தோப்புக்கரணம் போட்டுவிட்டு உள்ளே போவோம்.  மெதுவாக மாடிப்படி ஏறி வண்டிகளை மேலிருந்து பார்த்தபடி விளையாட்டாகப் பேசிக்கொண்டிருப்பார்.  அவரின் பேச்சில் ஆழ்ந்திருக்கும்போது இஞ்சின் ‘லபோதிபோ’ வென்று கூவும்.  இதுதான் நான் மிகவும் வெறுத்த ஒரு சத்தம்.  பயந்துபோய் காதுகளைப் பொத்திக்கொள்வேன்.  அப்பா சிரித்துக்கொண்டே ‘பெரிய வீரன்டா இவன்’ என்பார்.   என்னை விட 3 வயது சிறியவனான  தம்பி அந்த இஞ்சின் ஓலத்துக்கு சற்றும் அசராமல் இருப்பான்.  அது இன்னும் எனக்குக் கோபத்தைக் கிளறும்.
ஏழு மணி வாக்கில் வெளியே வருவோம்.  ஆச்சரியமாக  ஒரு தடவைக் கூட ஸ்டேஷன் மாஸ்டர் அப்பாவிடம் பிளாட்பாரம் டிக்கெட் கேட்டதில்லை.
கரி எஞ்சினைவிட டீசல் எஞ்சின் பிடிக்கும்.  அதையும் விட மின்சாரத்தில் இயங்கிய எஞ்சின் இன்னும் பிடிக்கும்.  அதன் விசில் சத்தம் டெசிபலில் குறைவாக இருந்ததாக ஒரு பிரமை (இன்றும் தொடர்கிறது).
அப்போது விழுப்புரம் மீட்டர் கேஜ்.  அப்பா பிராட்கேஜ் பற்றி பேசும்போது அவரின் கண்கள் சட்டென்று கனவுடன் தொலை நோக்குவதை எனக்கு விவரம் தெரிந்த பின் கவனித்திருக்கிறேன்.  அவர்  வளர்ந்த ஊர் பிராட்கேஜில் இருந்தது (இதெல்லாம் 1970-80-களில்.  இப்போது ஏறக்குறைய எல்லா இடங்களும் பிராட்கேஜ்).
ரயில் பெட்டிகள் காவி கலரில் இருக்கும்.  இரண்டு வகைகள்.  ஒன்று கன்னம் ஒட்டியது போன்று.  இன்னொரு வகை கன்னம் உப்பியது.  இரண்டாவதுதான் பிடிக்கும், எனக்கு கன்னம் ஒட்டியிருந்தாலும்.
இரயிலில் எப்போதும் கடைசி பெட்டியைத் தேடசொல்லி அப்பாவை பிடுங்குவேன்.  இஞ்சின் விசிலில் இருந்து தப்பிக்க.  மற்றொரூ காரணம் ரயில் வளைவில் திரும்பும்போது முழு வண்டியும் கண்ணுக்கு விருந்தாக இருக்கும்.  ஜன்னல் ஒர இருக்கைக்கு வலது கையை வெட்டித் தரத் தயாராக இருந்திருக்கிறேன்.  கரி இன்ஜினின் கரித்துகள் கண்ணில் விழுவதும்,  தன்னிச்சையாக கண்களைக் கசக்கும்போது ஏற்படும் எரிச்சலும் வெளியில் பார்க்கும்போது போய்விடும்.  பயணம் செய்யும் போது தந்தி கம்பிகள் நம் கூடவே வருவதைப் போன்ற பிரமையை உருவாக்கும்.  சில சமயம் தண்ணீர் சாரலாக முகத்தில் படும்.  அது யாரோ சாப்பிட்டபின் கை அலம்பியதாக இருக்கலாம் அல்லது எச்சில் துப்பியதாக இருக்கலாம்.
அரியலூரில் படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து ஒரு குறிப்பிட்ட மூலையிலிருந்து, தொலைவில் ரயில் செல்வதை பார்க்கமுடியும்.  15 ஆகஸ்ட்-ல் வைகை எக்ஸ்பிரஸைத் துவக்கினார்கள்.  பள்ளி முழுவதும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஸ்டேஷன் மாஸ்டர் வழியே வண்டி எத்தனை மணிக்கு அரியலூர்  தாண்டும் என்ற செய்தி கிடைத்தது.  இரண்டு நிமிடங்களுக்கு முன் நிறைய மாணவ மாணவிகள் வெளியே ஓடினோம்.
கண்முன்னால் தொலைவில் ஏதோ பச்சைத்தீற்றலாகப் பறந்தது.  அதுவரை காவி நிறத்தில் இருந்த வண்டி, பச்சையும், மஞ்சளுமாக மாறின.  வைகை எக்ஸ்பிரசை முதன் முதலில் பார்த்த Ecstasy-ஐ  இன்று வரை ஈடு செய்வது Pink Floyd-ன் Comfortably Numb-ல் வரும் கடைசி இரண்டு நிமிட கிதார் இசைதான்.
என்னுடைய பெரியப்பா ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால் கிட்டத்தட்ட இருப்புப்பாதை அருகிலேயே அவரின் வீடு.  கிராமம் வேறு.  பெரிய குடும்பம்.  என்னையும், என் தம்பியையும் அவர்களின் மகன்களாகவே நடத்துவார்கள்.  நகர வாழ்வில் சலித்து அங்கே ஓடுவேன்.  இரவு சென்னைக்கும் திருச்சிக்கும்  செல்லும் எல்லா வேக ரயில்களுக்கும் நான் வந்திருப்பது தெரியும்.  சரியாக அவர்கள் வீட்டைக் கடக்கும்போது இஞ்சின்கள் ஓலமிடும்..
பெரியப்பா ட்யூட்டியில்  இல்லாவிட்டாலும் அண்ணன்களோடு ரயில் நிலையத்தில் சுதந்திரமாக உலாவுவோம்.  சாதாரண மனிதர்கள் ‘ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்’ என்பார்கள்.  நாங்கள் எங்கள் பெரியப்பா போல அதை எண்களால் ‘த்ரி-நாட்-சிக்ஸ்’என்று அதற்குக் குறிக்கப்பட்ட ஒரு எண்ணில் மிதப்பாகக் குறிப்பிடுவோம். உலக மகாக் கவலையாக சில வண்டிகள் தற்சமயம் எந்த ஸ்டேஷன் அருகே வந்துக் கொண்டிருக்கின்றன என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.  ஊழியர்களும்  ரொம்ப தீவிரமாக எங்கள் கேள்விகளுக்குப் பதில் தருவார்கள்:
நாங்கள் : “த்ரி-நாட்-சிக்ஸ் இப்ப எங்கே இருக்கு?”
ட்யூட்டியில் இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் (சிரிக்காமல்): “தண்டவாளத்திலே”
அப்போதைய பிராட்கேஜ்  ரயில் நிலையங்களில் எஞ்சின் ட்ரைவர் வண்டி நிற்கும் முன் ஒரு வளையத்தை பிளாட்பாரத்தில் வீசுவார். இதை டோக்கன் என்பார்கள்.  ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எஞ்சின் ட்ரைவர் ஸ்டேஷனில்  டோக்கனைக் கொடுக்கவேண்டும். பதிலுக்கு அங்கே நிற்கும் ரயில்வே ஊழியர் அவருக்கு ஒரு வளையத்தைக் கையில் கொடுப்பார்.  எனக்குப் புரியாதது, வண்டி ஸ்டேஷனில் நிற்கப்போகிறது.  பின் எதற்காக டிரைவர் வீச வேண்டும், பதிலுக்கு பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்வே ஊழியர்  வளையத்தை அப்போதே தர வேண்டும் என்பது.  கேட்டதில்லை.
தண்டவாளங்கள் கவர்ந்ததைப் போல காதலிகள் கவர்ந்ததில்லை.  பிளாட்பாரத்தில் நிற்கும்போது தண்டவாளத்தில் இறங்கி நிற்கவேண்டும் என்று மனம் பதறும்.  அது தொலைவில் ஒன்றையொன்று தொடுவதைப் பார்க்கவேண்டும்.    இரண்டு முறை ரயில் ஸ்டேஷனில் நுழையும் போது அபாயகரமாக பிளாட்பார முனையில் நின்று எதிர்புறத்தில் தண்டவாளத் தொடுகையைப் பார்க்க முயன்று அப்பாவிடம் அறை வாங்கியிருக்கிறேன்.
தண்டவாளத்தில் ஒரு இரும்புத்துண்டு வைத்து அதன் மேல் எஞ்ஜின் ஏறினால் காந்தமாகும் என்று நண்பன் அன்சர் அலி சொல்ல அடுத்த முறை பெரியப்பா வீட்டில் அவர்களுக்குத் தெரியாமல் ஒரு இரும்புத் துண்டை கடத்தி வண்டி வரும் நேரம் தண்டவாளத்தில் வைக்க பாயின்ட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் தனபால் அசிங்கமாகத் திட்டியபடியே எங்களைத் துரத்திக் கொண்டு ஒடி வந்தார்.
கைக்காட்டி மரங்களை இயக்க ஒரு உயரமான கொட்டகை இருக்கும்.  அதில் ஒரு ரயிவே ஊழியர் எப்போதும் இருக்கவேண்டும்.  தொலைபேசியில் உத்தரவு கிடைத்ததும் சரியான கைக்காட்டி மரத்தின் லீவரை இழுத்து நிறுத்துவார்.  எந்த தண்டவாளத்தில் ரயில் வரப்போகிறதோ அதன் கைக்காட்டி 45 டிகிரி கோணத்தில் கீழ் இறங்கும்.  சில இடங்களில் 90டிகிரி மேலெழும்பும்.  இரவில் இந்தக் கோணத்தில் பச்சை கண்ணாடி விளக்குக்கு நேராக வரும்.  தண்டவாளத்தில் அசைவு ஏற்பட்டு ஒன்று சேரும்.
இரவு நேர கிராம ரயில் நிலையம் ஒரு மர்ம தேசமாக இருக்கும்.  நிலைய முகப்பில் விளக்கு மற்றும் பிளாட்பாரத்தில் இரண்டொரு விளக்குகள் மட்டுமே எரியும்.  மற்ற இடங்கள் மையிருட்டாக, தவம் செய்ய ஏற்ற இடம்போல் விதவிதமான கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளின் சத்தத்திலும் அமைதி காணலாம்.  அந்த இருட்டில் பிளாட்பாரம் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை நடப்பது அற்புதமான அனுபவம். உள்ளே பிரகாசமாக அலுவலகம் இருக்க, பெரியப்பா அடிக்கும் தொலைபேசியை எடுத்து சங்கேதம் பேசுவார்.  இது வண்டி புறப்பட்ட ஸ்டேஷனிலிருந்து வந்திருக்கும்.  பிறகு உதவியாளரிடம் சொல்ல அவர் வெளியே செல்வார்.   தண்டவாளங்கள் நேர்கோடாக இருந்தால் வண்டி தொலைதூரத்தில் வரும்போது ஒற்றை விளக்கு மட்டும் தரையின் அருகே தெரிய ஆரம்பித்து கிட்டே வர வர உயரத்தில் தெரியும்.  ஸ்டேஷனில் இரும்புத்துண்டில் மணி அடிப்பார்கள்  அப்போது பிளாட்பார விளக்குகள்  அனைத்தும் எரியும்.  குறைவான மக்கள் கூடியிருப்பார்கள்.    இந்த ஓசையைக் கேட்டபின் வீட்டிலிருந்து ஓடி வண்டி பிடித்திருக்கிறேன்.
தேவையான நேரம் நின்றபின், கார்ட் பச்சை விளக்கைக் காட்ட, நெடு நீள வண்டியாக இருந்தால் ட்ரைவர் அவர் தரப்பு விளக்கைக் காட்டுவார்.  ஸ்டேஷனில் இரும்புத்துண்டில் மணி அடிப்பார்கள்.  வண்டி நகரும்.  கார்ட்-ன் பெட்டி கடக்கும்போது பெரியப்பா கையில் இருக்கும் விளக்கை  ஆட்டி அவருக்கு ‘போய் வாங்க’ என்பார். பிறகு உள்ளே சென்று இன்னொரு தொலைப்பேசியை எடுத்து அடுத்த ரயில் நிலையத்தை தொடர்பு கொண்டு செய்தி சொல்வார்.  வண்டி ஸ்டேஷனிலிருந்து குறிப்பிட்ட தூரம் கடந்ததும் கைக்காட்டி மரத்தில் கைக்காட்டி மீண்டும் 90 டிகிரிக்கு திரும்பும்.  அதன்   சிகப்பு நிற கண்ணாடி இப்போது விளக்கின் வழியே ஒளிரும்.   வண்டி முழுக்க ஸ்டேஷனைக் கடந்ததும் உறவினர் வந்துவிட்டுப் போனபின் இருக்கும் வீட்டைப் போல ஸ்டேஷனில் ஒரு சோகமான அமைதி திரும்பும்.
பெரியப்பா ஸ்ரீரங்கம் மாறியவுடன்  ஸ்டேஷன் போவது குறைய  ஆரம்பித்தது. ரயில்களை மிக அருகில் பார்க்க முடிந்தாலும் ஏனோ கவரவில்லை. எஞ்சின் விசிலுக்கு கைகள் காதுகளைப் பொத்ததாதற்கு  பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் மட்டும் காரணமில்லை. நீராவி என்ஜினில் இருக்கும் கம்பீரத்தையும், ஓவியத்தன்மையையும் ரசிக்க ஆரம்பித்தபோது அதை எடுத்துவிட்டு வெகு சாதாரணமாகத் தெரியும் டீசல்  என்ஜினையும், மின்சாரத்தால் இயங்கும் என்ஜினையும் போட ஆரம்பித்தார்கள்.  பெரியப்பா வேலை செய்த கிராமத்து ஸ்டேஷன் இப்போது இல்லை.  பெரியப்பாவின் வீடும் ஸ்டேஷனிலிருந்து தொலைவில் இருக்கிறது.
இப்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்வது ஏறக்குறைய இல்லாமல் ஆகிவிட்டது.  பாஸ்டனில் இருந்து நியூயார்க்குக்கு அதி விரைவு இரயில் கட்டணம் விமான டிக்கெட் விலையாகிறது.  கார் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் கிளம்பி செல்லமுடியும்.  இப்போதும் இரயில் பாதையைக் கடக்கும்போது நின்று தண்டவாளம் வெகு தொலைவில் ஒன்றையொன்று தொடுவதைப் பார்க்காமல் கடப்பதில்லை.  தண்டவாளம் அருகில் நின்றால் அறைவதற்கு அப்பாவும் இல்லை.

3 Replies to “ரயில் சிநேகம்”

 1. எனக்குப் புரியாதது, வண்டி ஸ்டேஷனில் நிற்கப்போகிறது. பின் எதற்காக டிரைவர் வீச வேண்டும், பதிலுக்கு பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்வே ஊழியர் வளையத்தை அப்போதே தர வேண்டும் என்பது. கேட்டதில்லை.
  In single track sections, these sections are interlocked. Only the station that has the “token” can let a train enter that section. If there is a train in the “waiting” to enter that section they should get that token into that interlocking machine as soon as possible. They don’t want the train to slow down and stop to release the token. As soon as the train crosses “outer signal” the single track is free, they want to take the token to the locking machine. The token is simply a coin, inside a leather pouch attached to the badminton bat like cane carrier.

 2. Steam engines have always been majestic. We used to take the Sengotta Passenger from Thirunelveli to Madurai. Arrive at Madurai Jn at 5 AM or 6 AM. Appa would walk up to the engine ask for “கொழந்தைக்கு வெந்நீர்”. The driver will open a cock and release steam into the stainless steel jar, piping hot, the jar has to be held with several folds of the towel. Amma would use that hot water to dissolve milk powder to feed my younger brother or sister. I am sure I too must have drunk condensed steam from one of these engines!
  http://www.railpictures.net/viewphoto.php?id=408361&nseq=298
  Appa loved the steam engines. He was a train student riding trains everyday from Manamadurai to Madurai. To this day I love watching trains.

 3. Looks like the entire fleet of Madurai Jn.
  http://www.railpictures.net/viewphoto.php?id=384018&nseq=346
  That site has so many pictures of indian railways, I have spent hours looking at them. There are some videos too. In USA steam locomotives are limited to 80 mph max speed. There is a video of a huge steam engine articulated (was it really a 4-10-10-4 or just a 4-8-8-4?) double expansion double boiler monsters going full blast at 79.96 mph.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.