மகரந்தம்


[stextbox id=”info” caption=”பத்தே நாள் கல்வியில் பத்து இலட்சம் சம்பாதிப்பது எப்படி?”]

code_Glass

அமெரிக்காவில் இப்போது எல்லோரும் கணி நிரலாளர் ஆக மாற அழைக்கிறார்கள். வருடத்திற்கு வெறும் 20,000 டாலர் சம்பளம் பெற்ற காபிக்கடை சிப்பந்தி ஒரு இலட்சம் அமெரிக்க வெள்ளி ஈட்ட ஆரம்பித்த கதை நியு யார்க் டைம்ஸில் வெளியானது:

http://www.nytimes.com/2015/07/29/technology/code-academy-as-career-game-changer.html

நான்காண்டுகள் கல்லூரி வேண்டாம். பத்தாண்டுகள் அனுபவம் வேண்டாம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே, இந்த மாதிரி ‘நிரலி கூடார’ங்களை ஆதரித்துப் பேசுகிறார். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் படித்தால் போதுமானது. இணைய வடிவமைப்பாளராகவோ, தரவுத்தள ஆராய்ச்சியாளராகவோ, புள்ளியியல் கணிவல்லுநர் ஆகவோ வேலை கிடைக்கும். உங்கள் ஊதியத்தை ஐந்து மடங்குப் பெருக்கலாம் என்னும் கவர்ச்சிகரமான கதையைச் சொல்லி இந்தக் கட்டுரை துவங்குகிறது. இந்தக் கட்டுரை என்றில்லை. சில மாதங்கள் முன்பு ‘ப்ளூம்பெர்க் பிஸினஸ்வீக்’ என்னும் வாராந்தரி, தங்களின் ஒரு வார இதழ் முழுக்க முழுக்க ஒரே ஒரு தலைப்பில் ஒரேயொரு கட்டுரையை நூறு பக்கங்களுக்கு வெளியிட்டது. அது இங்கே:

http://www.bloomberg.com/graphics/2015-paul-ford-what-is-code/

கணிப்பொறியாளர்களும் நிரலி எழுதுபவர்களும் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஏகப்பட்ட கிராக்கியான வஸ்துவாக இருக்கிறார்கள். ஆனால், ஏனிந்த திடீர் பாசம்?

இப்போது தானியங்கி கார்களும், பேசும் ஃப்ரிட்ஜ்களும், ஆளில்லா தூரயியங்கி விமானங்களும், தெருமுக்கு நாயர்கடை கூட வலையகமும் புழங்கும் காலம். ஒவ்வொருவருக்கும் பில்லியன் கணக்கில் தங்களின் வாடிக்கையாளரின் நுண் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றை சேமிப்பதற்கான இடமும், ஆராய்வதற்கான கணிசக்தியும் ஏராளமாய் தாராளமாய் கிடைக்கின்றன. இருந்தாலும், அதில் உருப்படியாய் உட்சென்று எவ்வாறு இலாபத்தை அதிகரிப்பது, எங்ஙனம் வாடிக்கையாளரை தக்க வைப்பது போன்ற செறிவான விடைகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை. இங்கேதான் தரவுத்தள ஆய்வாளர் வருகிறார். புதிய கணிமொழிகளைப் பேசி, புள்ளிவிவரங்களைப் புரிந்துகொண்டு, வருமானத்தைப் பெருக்க வைக்கிறார். அதற்குத்தான் அத்தனை பேரும் முண்டியடிக்கிறார்கள்.
இந்த மாதிரி திறமையை வளர்க்கும், கற்றுக் கொடுக்கும் ”செய்நிரல் முகாம்”களின் செயல்பாடுகளை இந்தக் கட்டுரை விவரிக்கிறது:

http://qz.com/452784/alternative-lenders-swoop-into-booming-coding-school-market/

இந்தக் கட்டுரைகள் எல்லாம் பசுமையான பாதையைக் காட்டுகிறது. ஆனால், வேலையில் சேர்ந்த பிறகு குடும்பத்துடன் நேரங்கழிக்காமல் அலுவலிலேயே அமையும் நீண்ட நாள்கள், 24 மணி நேரமும் மின்னஞ்சல் என எப்பொழுதும் வேலையிலேயே மூழ்கும் நிலை, சந்திப்புகளில் எளியோருக்கும் புரியும் வகையில் திறமையாக உரையாடுவது, தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருக்கும் தாகம், சக தொழிலாளர்களுடன் போட்டியில் மனந்தளரா ஊக்கம், புதிர்களை விடுவிக்கும் தாகம், பச்சோந்தி போல் தொழில்களை மாற்றும் இலாவகம் எல்லாம் எவ்வளவு அவசியம், பணம் மட்டுமே தேவையில்லை என்பதைச் சொல்வதில்லை.

[/stextbox]


[stextbox id=”info” caption=”கடலில் நடக்கும் பயங்கரங்கள்”]

OCEANS_CHASE_Water_Ships_Sea_Thunder_Bob_Barker_Sam_Simon_Shadows_Ian_Urbina

உலகத்தில் உபயோகிக்கப்படும் 90% பொருள்களை கப்பல்கள்தான் கொண்டு வருகின்றன. சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகவும் அனைத்துலக பொருளாதாரத்தின் ஆதாரமாகவும் விளங்கும் கடல்களில் சட்டமும் ஒழுங்கும் எப்படி இருக்கிறது?

புலம் பெயர்பவர்கள் காணாமல் போகிறார்கள். மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். விபத்துகள் மறைக்கப்படுகின்றன. பத்தாயிரக்கணக்கானோர் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாகவே தங்கள் முழு வாழ்க்கையையும் கடலில் கடத்துகின்றனர். எக்ஸான் – வால்டெஸ் எண்ணெய்க்கசிவையும் 2010ல் அமெரிக்காவின் கரையோரமாய் நடந்த Deepwater Horizon oil spillம் பிச்சை வாங்குமளவு கழிவுகளை கடலில் கொட்டுகிறார்கள். இதையெல்லாம் எவரும் கண்காணிப்பதில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து, விழியம் எடுத்து, புகைப்பட ஆதாரங்களுடன் செய்தியாளர்கள் வெளியிட்டாலும் கூட சர்வதேச விதிமுறைகளின் படி குற்றவாளிகள் மீது வழக்குப் பதிய முடியாத நிலை நிலவுகிறது.
எவ்வாறு ஒரு ஏற்றுமதி நிறுவனம் பத்து நாடுகளில் பதினைந்து நிறுவனங்களாக தங்களைப் பதிவு செய்து கொள்கிறது; தங்கள் சிப்பந்திகளையும் தலைமை மாலுமிகளையும் பல்வேறு தேசத்தவர்களாகக் காட்டி தப்பித்துக் கொள்கிறது; நடுக்கடலில் கப்பலுக்குள் இருக்கும் சாதிநிலை போன்ற அடுக்குமுறையில் கடைநிலை ஊழியர்களுக்கெதிரே எவ்வாறு அராஜகம் நிறைவேறுகிறது; கொலையே செய்தாலும் அந்தக் கொலையை சமூக ஊடகங்களில் முகத்தோடு உலவவிட்டாலும் கூட நிரபராதியாக எவ்வாறு திரிகிறார்கள்; என்பதை ஐயன் அர்பினா, நியு யார்க் டைம்ஸில் தொடர் கட்டுரைகளாகப் பதிகிறார்:

http://www.nytimes.com/interactive/2015/07/24/world/the-outlaw-ocean.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சந்திப்புகளில் ஓடி ஒளிபவரா நீங்கள்?”]

Introverts

கூட்டத்தின் நடுவே அன்னியமாய் உணர்பவர்களை அகமுகர் (introvert) என அழைப்பர். இந்த மாதிரி தங்கு தடையின்றி சமூகத்தில் பேச இயலாததையும், பலருடன் சகஜமாகப் பங்கு பெற முடியாததையும் குறைபாடாகவே ஆய்வாளர்கள் கருதிய காலமுண்டு. இவர்களுக்கு நேர் எதிராய் புறமுகர்கள் (extrovert) இருக்கிறார்கள். புறமுகர் என்றாலே விடாப்பிடியான தடாலடிக்காரர்கள் என்றும் உற்சாகமானவர்கள் என்றும் எண்ணப்பட்டது. ஆனால், இப்போது அகமுகர்களை பலவிதமாக பகுத்து நோக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். உள்முகச் சிந்தனையாளர், பதற்றமடைபவர், தனிமைவிரும்பி, தன்னடக்கத்காரர் என பல்வேறு பாதைகளில் அகமுகர்களை அளந்து குணாதிசயங்களை வரையறுக்கலாம். இங்கே சென்றால், நீங்கள் எந்த வகை என்பதை கண்டுணரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் ஆளுமையை அறியலாம்:

http://nymag.com/scienceofus/2015/06/apparently-there-are-four-kinds-of-introversion.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”தணிக்கைக் குழு”]

Moderator_Matturuthanar

உங்களுக்கு மட்டுறுத்தனர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? வலைவெளியில் நம்முடைய கருத்துகளும் புகைப்படங்களும் மறுமொழிகளும் கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உள்ளாகின்றன என்று அறியாத வரைக்கும் மட்டுறுத்தலில் நமக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. நமக்கு எதிரான எண்ணங்கள் தங்குதடையின்றி வெளியானாலோ, நம்மை அவதூறு செய்யும் பதிவுகள் ஓரிடத்தில் உலாவினாலோ, அந்த இடத்தில் மட்டுறுத்தலைக் கோருவோம்; முன்வைப்போம். அதே சமயம் நம்முடைய எழுத்துக்களோ, படங்களோ, பின்னூட்டங்களோ வெளியாகாமல் தடை செய்யப்பட்டால், சென்ஸாருக்கு உள்ளானால் சுதந்திரவெளியை முழங்குவோம்; கட்டற்ற இணையவெளியை நாடுவோம்.

சமீபத்தில் ரெடிட் வலையகத்தில் மட்டுறுத்தனர் சார்ந்த சிக்கல் பூதாகரமாக வெடித்தது. ரெடிட் போன்ற வலையகங்களில் மட்டுறுத்தனர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. பெரும்பாலானோர் தன்னார்வலர்களாக தங்கள் ஓய்வு நேரத்தை digg.com, reddit.com போன்ற இடங்களில் தங்களின் துறை சார்ந்த குழுமங்களிலோ, பொழுதுபோக்கு சார்ந்த மடலாடல் மையங்களிலோ செலவழிக்கிறார்கள். விளம்பரங்களை நீக்குவது, அசிங்கமான அவச்சொற்களுக்கு தடா போடுவது, இனவெறி, மதவெறி, பால்வெறி போன்றவற்றை கண்டிப்பது என இவர்கள் குழுமங்களை ஆரோக்கியமாகவும், அனைவரும் வந்து உலாவும் இடமாகவும் ஆக்குகிறார்கள்.
இது போல் ரெடிட் தளத்தில் மட்டும் 9,656 பேர்கள் பகுதி நேரமாக, தங்களின் தினசரி வேலை தவிர தன்னார்வத் தொண்டராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை மட்டுறுத்தனர் பாத்திரத்தில் இருந்து ரெடிட் நீக்கிவிட்டது. உடனே பிரச்சினை பெரிதாக எழுந்தது. மற்ற மட்டுறுத்தனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ரெடிட் தளத்தையே முடக்கிவிட்டார்கள். இன்றைய பொருளாதாரத்தில் சம்பளமில்லா ஊழியர்களை பெருநிறுவனங்கள் நாடுகின்றன. இலாபத்தை அதிகரிக்கவும் வேலைக்காரர்களுக்கான ஊதியம் வழங்காமல், எல்லோரும் சமூக ஊடகம் வழியாக தங்களுக்கு உழைப்பதையே ஃபேஸ்புக், கூகுள் போன்றவர்கள் விரும்புகிறார்கள். இந்த நிலையில் எவ்வாறு இந்த இடைத்தரக மட்டுறுத்தனர்களை நடத்துவது? மட்டுறுத்தனர்களின் செல்வாக்கு என்ன? ஏன் மட்டுறுத்தனர் ஆக இயங்கி, எட்டப்பராக மற்றவரைக் காட்டிக் கொடுக்கிறோம்?
இந்தக் கட்டுரை ஆராய்கிறது:

http://www.nytimes.com/2015/07/26/magazine/when-the-internets-moderators-are-anything-but.html
[/stextbox]