பிரெஞ்சுக் குடும்பம்

French_France_Paris_Statues_Art_Public_Family_Husband_Wife_Kids

இன்றிருக்கிற சராசரி பிரெஞ்சுக்குடும்பமொன்றின் கூறுகள் உலகெங்குமுள்ள எல்லா நாடுகளிலும் படித்த மேல்தட்டு மக்களுக்குரியவைதான்.  புலன்களுக்கு அறிவைக்காட்டிலும் வீரியம் அதிகம். தங்களுடனான மோதலில் வீழ்ந்த அறிவை அத்தனை எளிதாக நெஞ்சுயர்த்த அவை அனுமதிப்பதில்லை. எளிதில் சோர்வுறும் குணங்கொண்ட அறிவும், புலன்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்கிறது. ஆற்றல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள், உணர்ச்சி அறிவைக்காட்டிலும் பலசாலி. உலகமனைத்தையும்  மேற்கத்தியர்கள் அறிவால் வெல்ல முடிந்தது, உணர்ச்சியிடம் தோற்றுப்போனார்கள். உலகத்தின் வீழ்ச்சி உணர்ச்சிவசப்படுதலில்தான் தொடங்குகிறது. உணர்ச்சியைக் கண்கள், காது, வாய், மனம் என்று தனித்தனியாக அனுமதித்தால் தப்பித்தோம் – பிரித்தாளவேண்டும்.  அவற்றைக் கூட்டாகச் (உடலை) செயல்படவிட்டால் ஆபத்து. மேற்கத்தியர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதது என்று ஒன்றிருக்குமானால் இன்றைய அவர்களுடைய குடும்ப அமைப்பைச் சொல்வேன். சமூகப் பண்பாடுகளில் ஒன்றான குடும்ப அமைப்புமுறை இன்று மேற்கத்திய நாடுகளில் குலைந்துவருகிறது – எச்சரிக்கையாக இல்லாதுபோனால் நம்மையும் ஒரு நாள் தின்று தீர்த்துவிடும்.
குடும்பம் என்றாலென்ன?  பொதுவானதொரு மூதாதையர் வழிவந்த இரத்த உறவுகளில் இறந்தவர்போக மிஞ்சியவர்கள், சமூக அறத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வது. ஒருவருக்கொருவர் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்வது, நெருக்கடி காலங்களில் தமது குடும்பத்தைசேர்ந்தவர்களுக்குத் துணை நிற்பது. இந்த இலக்கணங்களுக்குப் பொருந்துகிற குடும்பம்தான், ஒரு நல்ல சமூகத்தையும், தொடர்ந்து நாட்டையும் கட்டமைக்க முடியும்.
பிரான்சு நாட்டில் குடும்ப அமைப்பு நேற்று எப்படி இருந்தது?
இந்த நேற்று இரு பொருளைக்கொண்டது, முதலாவது நேற்று 30 வருடங்களுக்கு முன்பாக இந் நாட்டிற்கு (பிரான்சுக்கு) வந்த காலத்தைக் கணக்கில் கொள்ளவேண்டிய நேற்று, மற்றது ஒரு வயதான (70?) பிரெஞ்சுக்காரரிடம் நினைவில் இருக்கிற சுமார் ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்தைய பிரான்சு. எனது பார்வையில் ஒரு பிரெஞ்சுக் குடும்பம் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் அப்படியே இருப்பதுபோல இருக்கிறது. ஆனால் பிரெஞ்சுக்காரர் புலம்புகிறார்.
இன்றைய பிரெஞ்சு சமூகத்தில் – குடும்பத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பார்க்கிறபோது நவீன பிரெஞ்சுக் குடும்பம், பாரம்பர்யப் பிரெஞ்சுக் குடும்பத்தைக்காட்டிலும் மேம்பட்டதென்கிற பொதுவானதொரு தோற்றத்தைத் தரும். நவீனப் பிரெஞ்சுக் குடும்பம் கட்டற்ற சுதந்திரத்தின் பெயரால் வானமே எல்லையென்று இருக்கின்ற கூரைகளை பிய்த்தெறிந்ததின் பலன், குடும்பம் என்ற அமைப்பு இன்று மழையிலும் வெயிலிலிலும் பாதுகாப்பற்று துன்புறுவதை சுகமென்று வர்ணிக்கிறபோது எரிச்சல் வருகிறது. பிரெஞ்சுக்காரிடம் கேட்டேன், “குடும்ப அமைப்பு என்பது பண்பாட்டுச் சின்னம், அதனைக் கட்டமைப்பது ஒரு சமூகத்தின் அறங்கள், இந்நிலையில் உங்கள் குடும்பம் என்ற குறியீடு அல்லது ஒழுங்குமுறை (system)  ஐரோப்பியர்கள் என்கிற பொதுகுணத்திற்கு உரியதா, அல்லது உங்களுடையதா?” எனக்கேட்டேன்.  இரண்டொரு நிமிடங்கள் யோசித்தார், என்ன சொல்வதென யோசித்திருப்பார்போல, நுணி மூக்கைச் சொரிந்தபடி, ” மேற்கத்திய பண்புகளோடு, சாப்பாட்டு மேசையில் ‘பொர்தோ’ ஒயினையும், கமாம்பெர் பாற்கட்டியையும் (Le fromage Camembert), சேர்த்தீர்களானால் அதுதான் இன்றைக்கு பிரெஞ்சு பண்பாடு, என்பதுபோல, ஐரோப்பியருக்குரிய பொதுப்பண்புகளும், எங்களுடையதும் கலந்ததுதான் ” எனப் பதிலிறுத்தார், சமாளித்துவிட்டோம் என்கிற திருப்தி முகத்தில் தெரிந்தது.
இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் மனதில் என்ன தோன்றியதோ: ” உங்கள் பண்பாடு என்ன? இங்கே நீங்கள் எங்களைப் போலத்தானே வாழ்கிறீர்கள்?”  எனச் சீண்டினார். 30 ஆண்டுகால புதுச்சேரி தமிழர்களின் பிரெஞ்சுப் பண்பாடென்று எதைச்சொல்வது? எனத் தயங்கினேன்.அவருக்குப் பதில் சொல்வதுபோல, “சோறு சாப்பிடுகிறோம், மனைவி புடவை உடுத்துகிறாள், சிறுவயது பிள்ளைகள் என்றால் அவர்கள் விஜய் அல்லது ரஜனியின் ரசிகர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம், வளர்ந்ததும் குலம் கோத்திரம் பார்த்து நாங்கள் கைகாட்டுகிற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்று பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறோம், உழைத்தோ உழைக்காமலோ (பிரான்சில் முடியும்) இங்கேயோ ஊரிலோ  வீடோ, அப்பார்ட்மெண்ட்டோ வாங்கவேண்டுமென்று நினைக்கிறோம்” – எனக்கூறினேன். அவர் சிரித்தார். சிறிது தாமதித்து  “எங்களுக்கு இதுபோன்ற பண்பாட்டுக் கவலைகள் இல்லை” எனக்கூறியவரிடம் மறுபடியும் ஓர் எள்ளல் சிரிப்பு.
“2015ல் தமிழ்ப் பண்பாடு என்றுசொல்லிக்கொள்ள இருப்பதென்ன?”  என்னிடமே கேட்டுக்கொண்டு அதற்குப் பதிலையும் கூறிப்பார்த்தேன். கன்னியாகுமரியில் ஆரம்பித்து தமிழர்களின் புண்ணிய ஸ்தலமான சென்னைவரை நம்மிடம் நான் நினைத்தைவிட கலந்துகட்டிய பண்பாடுகள் வரிசையில் நிற்கின்றன. கிராமங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் வெளியிற் செல்ல உகந்த நேரம் பொழுது புலர்வதற்கு முன்பாக அல்லது பொழுது சாய்ந்தபின். மற்ற நேரங்களின் சன்னற்கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்பார்கள். கணவன் மனைவியாக ஆன பிறகும் உழைக்கும் மக்களிடம் பிரச்சினைகளில்லை, ஆனால் சில வீட்டுப் பெண்கள் நான்கு சுவருக்குள்தான் அடைந்து கிடக்கவேண்டும், வெளியிற் போனால் கணவருக்குப் பின்னால் பத்தடி தள்ளிதான் மனைவிபோகவேண்டும், அதுதான் நல்ல (?) குடும்பத்துப் பண்பாடு என்பார்கள். புதுச்சேரிக்கு வந்தபோது அங்கே திருமணமான புது ஜோடியொன்று ரிக்ஷாவில் சேர்ந்து  சினிமாவுக்குப் போனதை எங்கள் தந்தை வழி பாட்டி, “இதென்ன கலிகாலம், கொஞ்சங்கூட வெட்கமில்லாம!” என்றது நினைவில் இருக்கிறது. சென்னையில் சபையர் தியேட்டரில் படம் தொடங்கியதும் காதல் ஜோடிகளுக்கு மெரீனா பீச்சில் கிடைக்காத பண்பாட்டுச் சுதந்திரமுண்டு. இது போக சற்று ஒரிஜினலாக செட்டியார்களுக்கென காரைக்குடிப்பக்கம் சில தமிழ்ப்பண்பாடுகள், நாஞ்சில் நாடனைகேட்டால் நாஞ்சில் நாட்டுப்பண்பாடு என ஒரு புத்தகமே எழுதுவார், பிறகு கி.ரா.வின் கரிசல் காட்டுப் பண்பாடு,  திருநெல்வேலி, மதுரை, தஞ்சையென்று திசைக்கொரு  பண்பாடு இருக்கிறது. இதுபோக நாயக்கர்கள், மராத்தியர்கள், நவாபுகள், நிஜாம்கள், ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்கள் விட்டுச்சென்ற பண்பாடுகள் இருக்கின்றன. இவைகளைப் புடைத்து தூற்றினால் பதர்போக தமிழகக் களத்துமேட்டில் மணப்பந்தல், தாலி, சோறு, பொங்கல் பண்டிகை, ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்குப் புடவை,  கீழ் சாதி, மேல் சாதி, தலைவர்களுக்கு அடிமட்டத் தொண்டரென்றால் உயிர்த் தியாகமும் அமைச்சரென்றால் தீச்சட்டியும்; நடிகர்களுக்குப் பாலாபிஷேகமும், பொழுது சாய்ந்தால் நல்ல குடிமகன்களாக இருப்பதும் தமிழ்நாட்டுப் பண்பாடு. பிறகு இருக்கவே இருக்கிறது பீஜித்தீவில் ஆரம்பித்து மொரீஷியஸ் வரை உலகமெங்கும் தீமிதித்தல், காவடி எடுத்தல்..ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறவற்றை யோசித்தபோது பிரெஞ்சுக் காரர் குறுக்கிட்டு “என்னிடத்தில்  பகிர்ந்து கொள்ளேன்!” – என்றார்.
நான், அடுத்தவரிடம் குறைகாண்பது சுலபம் என்பதால் “உங்கள் குடும்ப அமைப்பு எப்படி முன்பு போலவே இருக்கிறதா? மாற்றம் தெரிகிறதா?”, எனக்கேட்டேன்
“முன்பெல்லாம் மரபான பிரெஞ்சுக் குடும்பம் என்பது கணவன் மனைவி பிள்ளைகள் என்று வாழ்ந்தக் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம், சில குடும்பங்களில் இரண்டு மூன்று சந்ததியினர் கூட இருப்பார்கள்” பிள்ளைகளுக்குத் திருமணத்தைப் பெற்றோர்களே நடத்திவைத்தார்கள்; வருகின்ற பெண் அல்லது பிள்ளை நல்ல குடும்பமா? அவர்களால் குடும்பத்திற்கு என்ன இலாபம்; என சகலத்தையும் யோசித்தே திருமணங்கள் நடந்திருக்கின்றன” என்றார். அதேவேளை கடந்த காலத்திலிருந்த ஒரு வைதீகப் பிரெஞ்சுக் குடும்பம் ( La famille traditionnelle française) உலகின் பிற பகுதிகளைப்போலவே தந்தை வழிமுறைக்கு முக்கியத்துவம் தருகிற ஓர் ஆனாதிக்கக் குடும்பம்:   ஆண்கள் வேலை செய்தார்கள் ஆண்கள் யுத்தம் செய்தார்கள், ஆண்கள் அரசியல் செய்தார்கள்; பெண்கள் எச்சில் எடுத்தார்கள், பத்துப்பாத்திரம் தேய்த்தார்கள், பெருக்கினார்கள் வாரினார்கள், பிள்ளைகளைச் சீராட்டினார்கள்,  உடன் கட்டை மட்டும் ஏறவில்லை, மற்றபடி இந்தியபெண்களுக்கிருந்த அதே நிலமைதான். சங்க காலத்திலேயே பெண்கவிஞர்களைச் சந்தித்திருக்கிற நமக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிரெஞ்சுப் பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத விஷயம் வியப்பை அளிக்கலாம்.

நவீன பிரெஞ்சுக் குடும்பம்

இன்று நிலைமை வேறு சமூக அமைப்பில் மதத்தின் தலையீடு குறைந்ததும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றமும் வைதீகப் பிரெஞ்சுக் குடும்ப அமைப்பைப் புரட்டிப்போட்டது. இந்தியாவைப் போலவே பதிவுத் திருமணம், சம்பிரதாயத் திருமணம் பிரான்சு நாட்டிலும் உள்ளன. தமிழில் நாம் அறிந்த பதிவு திருமணத்தைத்தான் இங்கே  ‘le mariage civil’ என்ற பெயரில் நகரசபைகளிலும், மாநகராட்சிகளிலும் மேயர்களால் நடத்தி வைக்கபடுகின்றது.  மதத்தின் பேரால் தேவாலயங்களில் ‘le mariage religieux’ நடத்திவைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் அரசே வழிவகுத்துக்கொடுத்த ஆண் பெண் கைகோர்த்தல் மேற்குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் உதறிவிட்டது அல்லது செல்வாக்கைக் குறைத்துவிட்டது எனலாம். கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித உறுத்தலுமின்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கம், குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதும் 80 விழுக்காடு பெண்கள் கல்விபெற்றவர்களாக இருப்பதும், 25 வயதிலிருந்து -45 வயது வரையிலான பெண்கள் பிறரைச்சார்ந்திராமல் சொந்தச் சம்பாத்தியத்தில் வாழ்வதும், தனித்திருக்கும் துணிச்சலை கொடுத்துவிடுகிறது. தவிர புதிதாக கொண்டுவரப்பட்ட ‘Le PACS’ (Pacte Civil de Solidarité -1999) சட்டம் தகுந்த வயதை அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி சகபாலினம் அல்லது எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தியோடு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ அனுமதிக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இன்றைக்கு ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான கணவன் -மனைவி பந்தம் PACS முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மூன்று தம்பதிகளில் ஒரு ஜோடி பிரான்சு நாட்டில் விவாகரத்து செய்துக்கொண்டதாக இருக்கிறது. ஒப்பந்தந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நவீன பிரெஞ்சு குடும்ப அமைப்பை அணுக் குடும்பம் ( la famille nucléaire ) என்றும், கலப்புக்குடும்பம் (la famille composée ou recomposée) என்றும் வகைபடுத்தலாம். ‘அணுக்குடும்பம்’ என்பது ஏற்கனவே கூறியதுபோல பாரம்பர்ய திருமணச் சடங்கினால் இணையும் தம்பதிகள். ‘கலப்புக் குடும்பம்’ என்பது தம்பதிகளில் ஒருவர் தனது பிள்ளைகளுடன் தனித்து வாழ்வது அல்லது மணவிலக்குப்பெற்ற கணவனோ மனைவியோ விவாகம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது ஆகும். இவ்வகைக்கு Le PACS முதுகெலும்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2013) ஓரினத் திருமணத்தையும் சட்டப்படி அங்கீகரித்து, தீவிர சமய வாதிகள், வலதுசாரிகள் கோபத்தை  பிரெஞ்சு இடதுசாரி அரசாங்கம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.
நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையை மாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அமைப்பு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.