கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்

ஜய விஜயீபவ- பெயரின் இனிமை.           

Lord_Krishna_Kannan_Paintings_Yasoda_Feeding_Food_Kids_Govinda_Gopala_Balkrish

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். இதன் அடிப்படையில் உதித்த சுவாரசியமான ஒரு கருத்து: குழந்தையைத் தெய்வம் எனக் கொண்டாடுவது தாயின் அன்பு உள்ளம். தெய்வத்தைக் குழந்தையாகக் காண்பது கவிஞரும் புலவரும் கொண்ட தாய்ப் பாசம் மிகுந்த உள்ளம்! இல்லை என்றால் தெய்வங்களைக் குழந்தையாக்கிக் கொஞ்சிப் பாடிப் பரவசம் அடையும் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியங்கள் உருவாகி இருக்குமா? அதுவும் ஒன்றா இரண்டா? 500க்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
உலகத்தில் மிகவும் உயர்வாகக் கருதப்படும் ஒரு பொருளை (இறைவனை), அவ்வுலகில் நமக்கு மிகவும் பேரானந்தம் தரும் இனிய சிறு குழந்தை வடிவில் பாடிப் பரவினால் எய்தும் இன்பத்திற்கு எல்லையே இல்லை! அதனால் தான் பெரியாழ்வார் அந்த மணிவண்ணனுக்குப் பல்லாண்டு பாடிப் பேரானந்தம் கொள்கிறார் போலிருக்கிறது.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
                பலகோடி நூறாயிரம்
        மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
                சேவடி செவ்வித் திருக்காப்பு.
“நீ குறையொன்றும் இல்லாது பல்லாண்டுகள் வாழ்வாயாக! உன்னுடன் அடியார்களாகிய எங்கள் தொடர்பு பல்லாயிரம் ஆண்டுகள் தொடரட்டும். நாம் எம்பெருமானுக்கு வழிவழியாக ஏழு தலைமுறைகளுக்கு அடிமை. அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்,” என்றெல்லாம் உரிமையுடன் கண்ணபிரானை வாழ்த்துகிறார். அத்துணை உயர்வான தெய்வத்தை வாழ்த்த சிறியோர்களாகிய நாம் யார்? ஆனால், தெய்வத்தைக் குழந்தையாக்கி விட்டால், வாழ்த்தலாம், கொஞ்சலாம், சீண்டலாம், குறும்புகளை ரசிக்கலாம். ஆகவே குழந்தையாக்கிப் பார்ப்பதில் பேரானந்தம் கொள்கின்றனர் அடியார்கள்.
ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் லீலா சுகர் யசோதை தன் செல்லக் குழந்தையைத் துயிலெழுப்பும் அழகை விவரிப்பதை மனக்கண்களில் இன்றெல்லாம் கண்டு கண்டு களிக்கலாம்.
‘குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார்! நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் செல்லமே,எனப் பல்லாண்டு கூறி எழுப்புகிறாள். இவ்வாறாக யசோதையால் தினமும்  நீண்ட நாட்களுக்கு தரிசிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனான கிருஷ்ணனைப் பூஜிக்கிறோம்,’ என்கிறார் லீலாசுகர்.
 
வத்ஸ ஜாக்ருஹி விபாத-மாகதம்
        ஜீவ க்ருஷ்ண சரதாம் சதம் சதம் l
        இத்யுதீர்ய ஸுசிரம் யசோதயா
        த்ருச்யமான- வதனம் பஜாமஹே ll (2.67)
 
‘பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்! கருமணிக் குட்டனே
        தொழுதே னுன்திரு வடியைநீ பல்லாண்டு வாழ்க’ வென்றே
        அன்புடன் அசோதை யன்னை ஆசைமிகக் கண்டு நாளும்
        இன்பமுடன் களிகொண்ட கண்ணனையே வந்திப்போம்.
 
கார்க சம்ஹிதை என ஒரு நூல்; கார்க முனிவரால் இயற்றப்பட்டது. இம்முனிவர் ஜோதிடக் கலையில் மகா வல்லவராக இருந்தார்.
நந்தகோபனுக்கு  கோகுலத்தில் அழகான ஒரு குழந்தை பிறந்துள்ள விவரத்தினை வசுதேவர் கார்க முனிவருக்குக் கூறுகிறார்; குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகி உள்ளன. வசுதேவருக்கு மட்டும் அல்லவோ அந்தக் குழந்தையின் பிறப்பின் பின் ஒளிந்துள்ள ரகசியம் தெரியும்? ஆகவே அவர் கார்க முனிவரிடம், “மஹநீயரே! தாங்கள் சென்று, என் நண்பன் நந்தனின் குழந்தையைப் பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும். அக்குழந்தைக்கு ஒரு அழகான, பொருத்தமான பெயரையும் வைத்து அவன் ஜாதகத்தையும் கணித்துக் கொடுங்கள்,” என மிகவும் வேண்டிக் கொண்டு கேட்டுக் கொள்கிறார்.
பித்தான பெற்ற மனம், ‘ஏழு குழந்தைகளைக் கம்சன் கையால் இழந்தாயிற்று, இந்தக் குழந்தையாவது நன்றாக இருக்க வேண்டும்,’ எனப் பதறுகின்றது.
கார்க முனிவர் கோகுலத்திற்கு, நந்தகோபனின் இல்லத்திற்கு, யசோதையிடம் அவனுக்குப் பிறந்த குழந்தையின் (அவ்வாறு தானே உலகம் எண்ணிக் கொண்டிருக்கிறது) ஜாதகத்தைக் கணிக்கச் செல்கின்றார்!
யது குலத்திற்கு கார்க முனிவர் தான் ஜோதிடர்.
நந்தகோபன் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, ஆசனம் அளித்து அமரச் செய்கின்றான். பின் பணிவாக, “பெருமானே! தங்கள் வரவால் எனது இல்லம்  ஆசிர்வதிக்கப்பட்டது. தங்கள் எண்ணம் என்னவோ?” என வினவுகிறான். அவரது ஜோதிடத் திறனைப் பற்றி நந்தன் அறிவான். “ஐயனே! தாங்கள் எனது குழந்தைகளை ஆசிர்வதிக்க வேண்டும்; ச்ராவண மாதத்தில் அஷ்டமியில் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த இந்தக் குழந்தைக்குத் தாங்கள் ஒரு நல்ல பொருத்தமான பெயரைச் சூட்டுவீராக!” என வேண்டிக் கொண்டான்.
கார்க முனி சிந்தித்தார். மிகவும்  கோலாகலமாக இல்லாது ஒரு எளிய முறையில் இந்தப் பெயர் சூட்டு விழாவினை நடத்த வேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டார். கம்சன் சமீபத்தில் பிறந்த சிறு குழந்தைகளை எல்லாம் தேடி அலைந்து கொன்று வருவதனை அவர் நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் இந்தப் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்கு அதிக விளம்பரம் வேண்டாம் என எண்ணினார்.
‘கிருஷ்ண’ எனும் அழகிய, பொருள் பொதிந்த பெயரை நந்தகோபன்- யசோதையின் கருமணிக் குட்டனுக்காக அவர் தேர்ந்தெடுத்தார். இந்தக் குழந்தை மகாவிஷ்ணுவே என அவருக்கு ஞானதிருஷ்டியால் அறிய முடிந்தது. இந்த அவதாரம் எதற்காக எனவும் அவருக்குத் தெரியும். ஆகவே வெகு பொருத்தமான ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தார். அதுவே ‘கிருஷ்ண’ என்பதாகும்!

oOo

கர்ஷதி இதி கிருஷ்ண.
                        க்ருஷ்யதி இதி கிருஷ்ண.
                        குஷ்யதி இதி கிருஷ்ண.
என இவ்வாறு மூன்று ‘வ்யுத்பத்தி’ (சமஸ்கிருதத்தில் Root Expansion ) அமைந்த அரிய பெரிய பெயர் (மந்திரம்) இதுவாகும். பூர்வாச்சாரியர்கள் இவற்றிற்குக் கூறிய விளக்கங்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவையாக உள்ளன.
முதலாவதாக,  கர்ஷதி- என்றால் ஆகர்ஷிப்பது; காந்தம் போல எல்லோரையும் தன்னிடம் இழுப்பவன் எனப்பொருள் கொண்ட காரணப் பெயர். யாரைத்தான் கிருஷ்ணன் காந்தம் போலத் தன்னிடம் கவர்ந்து இழுக்கவில்லை?  கோபிகையர், எல்லா மனிதப் பிறவிகள், மாடு கன்று, மயில், மான் ஆகிய மிருகங்கள்,  அரசன் முதல் ஆண்டி வரை அவன் இனிய பெயரைக் கேட்டு மயங்காதவர் யார் உளர்?
இரண்டாவதாக, க்ருஷ்யதி– க்ருஷி என்றால், பயிர்களைப் பண்படுத்தி, களை பிடுங்கி வளர்ப்பவன் எனப் பொருள். நமது மனமாகிய வயலில் தகாத எண்ணங்களைக் களை பிடுங்குவது போலக் கிள்ளியெறிந்து நம்மைத் தூய்மைபடுத்துபவன் அவன். வெண்ணை எனத் திரண்டு வரும் நமது இருவினைப் பயன்களையும் திருடி எடுத்து (பிடுங்கி) கொண்டு நம்மைக் காப்பவன் கிருஷ்ணன். இது இரண்டாவது காரணப்பெயர்.
மூன்றாவதாக- குஷ்யதி- குஷி (உற்சாகம்) படுத்துபவன். பேரானந்த முடிவு நிலையைத் தருபவன் அவன். பாலில் தயிர் ஊற்றி உறவு ஊற்றுகிறோம். உறவு ஊற்றுதல் என்பது யாரிடம்? கிருஷ்ணனிடம் தானே? அவ்வாறு அவனிடம் உறவு கொள்ளுதலே முடிவு நிலை. அதுவே பேரானந்தம். தயிர் (ததி) ஆகும் நிலை. தத்யோன்னம் என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது. அதனைப் பெருமாள் கோவிலில் விநியோகிப்பதன் நோக்கமே இந்தப் பேரானந்த முடிவு நிலை பெறுவதை உணர்த்துவதற்காகவே தான்.

oOo

ஆகவே மோனத்திலாழ்ந்து சிந்தித்து, தெய்வ அருளால் தன் மனதில் தோன்றிய இந்த அழகான, பொருள் பொதிந்த பெயரை நந்தகோபனின் இளைய மகனுக்குச் சூட்டுகிறார் கார்க முனிவர். பின்பு நந்தனுக்குக் கூறுகிறார்:
” இந்தக் குழந்தை கிருஷ்ணன் மகாபுருஷனாகத் திகழ்வான்.  இவன் சாமானியக் குழந்தையல்ல நந்தா! இவனுக்கு யார் யாரெல்லாமோ என்னென்னவோ கெடுதல்களை விளைவிக்க முயலுவார்கள்: அத்தனையையும் மகாவிஷ்ணுவின் அருளால் வென்று விடுவான் இவன்.
“இவன் கிரிதாரி என்ற பெயரைப் பெறுவான். ஏனென்றால் இவன் தனது இளமைப் பருவத்தின் இனிய நாட்களை மலைகளில் மாடுகள் மேய்த்து, ஆடிப்பாடிக் கழிப்பான்.
“எல்லாருக்கும் இனிமையானவன் உன் குழந்தை நந்தா…. இருப்பினும் இவனைக் கொல்லப் பல முயற்சிகள் நடக்கும். அவற்றையெல்லம் கடந்து இவன் புகழ் பெறுவான். கவனமாக இருப்பாயாக,” என்றெல்லாம் பலப்பல கூறி கிருஷ்ணனை ஆசிர்வதித்தார்.
நந்தகோபனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முனிபுங்கவரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்தான். “தேவரீர் இருந்து விருந்துண்டு இளைப்பாறிச் செல்ல வேண்டும்,” எனக் கேட்டுக் கொண்டான்.
கோபிகையரின் மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லை. கிருஷ்ணனைக் கிடத்தியிருக்கும் மணித் தொட்டிலைச் சூழ்ந்து கொள்கின்றனர்.
“நீலமணி மாதிரி ஜ்வலிக்கிறானடி இவன்,” என்பாள் ஒருத்தி.
கிருஷ்ண, என்ன அழகான பெயர். யசோதை மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவாள் பார்,” என்கிறாள் இன்னொருத்தி.
கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண,’ எனப் பலமுறை கூறிக் களிக்கின்றனர் அவர்கள்.
மாடு மேய்ப்பதும், பால் கறப்பதும், தயிர் தோய்ப்பதும், வெண்ணை எடுத்துப் பின் இவற்றை எல்லாம் விற்பதும் ஆக ஒருவிதமான கற்பிக்கப்பட்ட  மோன லயத்தில்  இயங்கிக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கை இனி இந்தக் கிருஷ்ணனின் பிறப்பினால் எவ்வாறு வண்ணமயமாக மாறப் போகிறது எனத் தான் அவர்களுக்குத் தெரியுமா?
இப்போதைக்கு இன்னும் ஒன்றே ஒன்று!
லீலாசுகர் கிருஷ்ணனை குழந்தை வடிவில் உள்ள ஒரு பரதத்துவம்– எல்லாருக்கும் எல்லாவற்றையும் எங்கும் எப்போதும் அளிப்பவன் எனக் கொண்டாடுகிறார்.
‘ஸ்வர்க்க வாசிகளான தேவ மாதர்களின் கைகளினால், கற்பக மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கப் பட்டது; அதிசயமான வேணு நாதத்தின் பெருக்கினால் மெய்மறந்து அசைவற்றிருப்பது; தம் சேலைகள் நழுவிட அவற்றைக் கையினால் பிடித்துக் கொண்டுள்ள ஆயிரமாயிரம் இடைப்பெண்களால் சூழப்பெற்றது; தன்னை வணங்கியவர்களுக்காகக் கொடுப்பதற்குக் கையில் மோட்சத்தை வைத்துக் கொண்டுள்ளது; எல்லாருக்கும் (நியாயமாக) வேண்டிய எல்லாவற்றினையும் தருவது; ஒரு சிறு குழந்தை வடிவு கொண்டது- இப்படிப்பட்ட ஒரு தத்துவம் உள்ளது’ என்கிறார்.
அஸ்தி ஸ்வஸ்த்ருணீ- கராக்ர
                விகலத்கல்ப- ப்ரஸூநாப்லுதம்
        வஸ்து-ப்ரஸ்துத-வேணுநாத-
                லஹரீ-நிர்வாண-நிர்வ்யாகுலம்
        ஸ்ரஸ்த-ஸ்ரஸ்த-நிரித்த-
                நீவி-விலஸத்-கோபீ- ஸஹஸ்ராவ்ருதம்
        ஹஸ்த-ந்யஸ்த-நதாபவர்க-
                மகிலோதரம் கிசோராக்ருதி.
தொடர்ந்து அடுத்தடுத்து கிருஷ்ணன் வளர்ந்து வரும் அழகினையும் அவன்  விளையாட்டுகளையும் பெரியாழ்வார், லீலாசுகர், மற்றும் பல ஆன்றோர்கள் மொழியில் அவர்கள் பாடி வைத்தபடி ரசிக்கலாம்.

(வளரும்)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.