கார்ஸன் கழிமுகம்

Dunes_Clouds_Sun_Black_White_Inlet

காலையில் மீண்டும் நடந்தேன் குன்றுகளின் மீது
கடலை நோக்கி,
பின்னர் நேராகத் திரும்பி
  அலை அலம்பும் கரைவழிச் சென்று
             நிர்மூலமான தலைவரையைச் சுற்றித்
             திரும்பி வந்தேன்
கழிமுகத்தின் கரை வழியே:
புழுங்கும் வெக்கை, பலமான நிலைத்த கடற்காற்று
ஓடும் மணலில் சுறுசுறுப்பாக விரைந்தபடி,
வெயிலின் கண்ணாமூச்சி விளையாட்டு
அதன் பின்:
தொடர்ந்து மேகமூட்டத்தின் கம்மிய இருள்.
நடை தளைநீக்க, உருவங்கள்,
செங்குத்துகள்,
நேர்கோடுகள், கட்டங்கள், பெட்டிகள் மற்றும் கட்டிப்பிணைக்கும்
எண்ணங்கள் யாவையும்
விட்டு விடுதலையாகி
பார்வையின்
வண்ணங்கள், நிழற்பாடுகள், எழுச்சிகள், மற்றும் ஓடிச்செல்லும்
வளைவு சுளைவுகளில் இழந்து :
என்னுள் பல அர்த்தச் சுழல்களுக்கு இடமளிப்பேன்:
முக்கியத்துவத்தை எட்டும் திசைகளுக்கிணங்கி
ஓடுவேன்
ஓடையைப் போல் என் படைப்பின் பூகோளத்தினூடே:
என் நுவற்சிகளில்
நீங்கள் காணலாம்
           கழிமுகத்தின் தறிவாயை ஒத்த
          செயல்பாட்டின் பிறழும் வளைவுகளை:
         அசைவியக்கத்தின் குன்றுகள்
புற்களாலான அமைப்புகள், நினைவின் வெண்மணற் பாதைகள்
யாவும் உள்ளன
பிரதிபலிக்கும் சித்தத்தின் ஒட்டுமொத்தமான அலைவுகளில்:
ஆனால் ஒட்டுமொத்தமென்பதோ என்னறிவிற்கு அப்பால்:
என்னால் கணக்கிட இயலாத
சம்பவங்களின் கூட்டுத்தொகை, பதிவுசெய்ய முடியாத பேரேடு, கணக்கைக்
கடந்த கணிப்பு:
இயற்கையில் ஒரு சில கூர்கோடுகளே : முட்செவ்வந்திப்
பரப்புகள்
  ஏறக்குறைய சிதறியபடி;
ஒழுங்கின்றி வளரும் பேபெரி வகைகள்; குன்று
வரிசைகளுக்கிடையே
சீரற்ற நாணல் சதுப்புகள்,
நாணல் மட்டுமல்ல, புல், பேபெரி, காரப்பூடு, எல்லாம்...
தலையாய் நாணல்கள் :
நான் எந்த முடிவுகளுக்கும் வரவில்லை, புறத்தைத் தடுத்து
அகத்தை ஒடுக்கி, அவற்றைப் பிரிக்கும்
வரம்புகளை எழுப்பவில்லை ,
வரையவுமில்லை எல்லைக் கோடுகளை
பலதரப்பட்ட மணல் நிகழ்வுகள்
மாற்றும் குன்றுருவை, உருமாறும் அவ்வுருவு
மறுநாளும்.
ஆதலால் வருவதை வரவேற்கிறேன், ஏற்கிறேன்
உருவாகும்
எண்ணத்தை, ஆரம்பங்களையோ முடிவுகளையோ அடையாளப் படுத்தாமல்
சுவர்களை எழுப்பாமல்:
நிலைமாற்றங்கள் வழியே புல்படர்ந்த குன்றுகளிலிருந்து நிலம் வீழ்கிறது கழிக்கும்
அடிகழிக்கும், எல்லைக்கோடுகளின்றியும் நிலைமாற்றம்
நிகழ்கிறது தெளிவாகவே,
எதற்கும் நிகரான கூர்மையுடன், ஆனால் கற்பனைக் கோடுகளால்
தாக்குப்பிடிக்க இயலாத விரிந்த வெளியில் படரும்
ஒரு வகையான பரந்த கூர்மையுடன்
நேற்றிரவு முழுநிலவு: இன்றோ, கடல் வற்றத்தால்,
காற்றிற்கும், அதற்கு முன்னே வெயிலின்
அபாயத்திற்கும் உட்படுத்தப்பட்ட
ஏரல் கருந்திரள்கள் முன்னும்பின்னும்
நீர்க்கோட்டுடன் அலையப்பட்டு, நீர்க்கோடோ நுட்பமின்றி,
எப்போதும் மாற்றத்தின் நிகழ்வுகளில் சிக்கிக் கொண்டு:
புள்ளிகளிட்ட கடல் புறா திடல்களில் கவலையில்லாமல்
உண்டது
வாந்தியெடுக்கும் வரை: மற்றொரு புறா போட்டிக் கூக்குரலிட்டு ஒரு நண்டை விண்டு
குடலைக் கோதி, மெல்லோட்டில் உறைந்த கால்களை விழுங்க, கல்திருப்பி
உள்ளானொன்று வெடுக்கென ஓடி வந்தது மிச்சமீதிகளுக்காக:
முற்றிலும் அபாயம் : வாழ்வதனைத்தும்
முற்றுகைக்குட்பட்டு: கோரிக்கை உயிருக்காக, உயிரைத் தக்கவைப்பதற்காக: சிறிய
கருங்கால் வெண் நாரை, எவ்வளவு அழகாய், சத்தமின்றி பின்தொடர்ந்து, நீர்த்திடலில்
ஈட்டிப்பாய்த்து, கரைக்கு விரைகிறது
கொத்துவதற்காக – எதை ? – இருண்ட
மண்புற்றுகளின் பின்புலத்தில் எனக்குச் சரியாகத் தெரியவில்லை – பயந்த
துறவி நண்டையா ?
இடதே, குன்றுகள், நாணல் மற்றும்
பேபெரிப் பற்றைகளுக்கு மேலே
இலையுதிர்காலம்: ஆயிரக்கணக்கான குருவிகள்
பறப்பதற்காக கூடுகின்றன:
நிரந்தரமாக மாறிக் கொண்டிருக்கும்
ஓர் ஒழுங்கமைப்பு : சிதற வளம்
 நிறைந்த சபை: எனினும், பிரிக்கக்கூடியதாக, ஒரே நிகழ்வாய்
கண்டுகொள்ளும்படியாக,
   ஒழுங்கின்மையாய் அல்லாது பறத்தலுக்கானதொரு
   ஆயத்தமாய்.
கீ, கீ, கீ, கீ, பச்சைப் பற்றைகளில் சிறகடிப்பு,
பேபெரிகளில்
அலகுகள்,
  காற்று, பறத்தல், வளைவு மற்றும்
  ஒலி நிரம்பிய நுண்ணுணர்வு.
  ஒழுங்கிண்மையின் கூட்டுத் தொகையாக ஒழுங்கு உருவாகும் சாத்தியம்
வினையின் “களம்”
கணக்கிட முடியாத அசையும் மையத்துடன்:
குறுநோக்கில், உருவுடன் இறுங்கிய ஒழுங்கு
இலையில்லா களையில் சின்னஞ்சிறு நீல மலர்கள், நண்டின் மேல்தோடு:
நத்தையின் ஓடு :
   கெண்டைகளின் வயிறுகளில்
    ஒழுங்கின் நாடித்துடிப்புகள்: ஒழுங்குவரிசைகள் விழுங்கப்பட்டு
.   உடைபட்டு, சவ்வுவழி பெயர்க்கப்படுகின்றன
பெருவரிசைகளை வலுப்படுத்துவதற்காக: எனினும் பரந்த நோக்கில்
கோடுகளும் மாறாவுருவகளுமின்றி : கோடானுகோடி நிகழ்வுகள்
உள்ளும் வெளியும் கூடி எதிர்த்து இயங்குவது:எல்லாம் இதற்காகத்தான்
     உருவின்மைக்கு
      நான்
     உருவளிக்காமலிருக்க:
ஒழுங்குகளைச் சுருக்கங்களாக்க, ஏனெனில் வினைகளின் விளைவுகளே முன்னுரிமை கோரும்,
அல்லது முடிவை ஒருவகையில் நிர்ணயிக்கும், முன்னறியாதபடி (நான்
குன்றின் மேலே வருவதைக் கண்டு
குருவிகள்
பறந்து செல்லலாம் – வேறு பேபெரிப் களங்கள்
இலையுதிர் காலமெட்டலாம்
பெரிக்கள் இல்லாமலே) -  தெளிவான அமைதியே:
முன்னேற்பாட்டின் பேரச்சங்கள், வலிந்து திணிக்கப்பட்ட படிமங்கள், திட்டங்கள்,
எண்ணங்கள்,
பிரச்சாரங்கள், மற்றும் மெய்ம்மையை நியமனத்திற்கடக்கும் கீழ்மைகள்
எதுவுமின்றி :
பேரச்சம் ஊடுருவிப்பரந்தாலும் முன்னேற்பாடோடல்ல, தப்புவதற்கான
சாத்தியக்கூறுகள் கட்டற்று, பாதைகளெதுவும் அடைபடாமல், பாதைகள்
அனைத்தையும் திடீரென இழக்கும் விதிவிலக்கைத் தவிர :
குறுகிய ஒழுங்குகளைக் காண்கிறேன், வரையறுக்கப்பட்ட இணக்கத்தையும் கூட ,ஆனால்
சுலபமான அந்த வெற்றியை நோக்கி ஓட மாட்டேன்:
    இன்னமும் சுற்றிவர தளர்வுற்ற பரந்த விசைகளின் இயக்கம்:
    முனைவேன்
விரிவுறும் ஒழுங்கின்மையின் கிரகிப்பை ஒழுங்குடன் இணைக்க:செயற்பரப்பை
விரிவாக்கி, ஆனால் சுதந்திரத்தில் நான் திளைக்கையில்
நழுவிச்செல்கிறது பரப்பின் மீதான எனது கிரகிப்பு,
தரிசனத்தின் அறுதி முடிவின்றி
எதையுமே முழுதாக உணராமல் :
நாளைய புது நடைப்பயிற்சியும் புத்தம்புது நடைப்பயிற்சியாக....

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.