கவனத்தைக் கட்டும் கயிறு

Focus_Thoughts_Cog_Wheels_Brain_Human_Think_Stray_ADD

இக்கட்டுரை டேனியல் கோல்மெனின் ஃபோகஸ் புத்தகத்தை அணுகும் விதமும், அது எனக்குத் தந்த சிந்தனைத் தொடரின் பதிவும் பற்றியது. எந்த வகையிலும் இது உளவியல் உத்திகள் பற்றியோ, அதன் நுட்பங்களை விவரிக்கும் அறிவியல் கட்டுரையோ அல்ல. இது, ஒரு வகை சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் விதமும், அப்படியான ஒரு வாசிப்பின் பாதிப்பும் பற்றியது மட்டுமே.
1994ல் ஒரு அறிவியலாளரைச் சந்திக்க மும்பையின் கொலாபா பகுதிக்கு நானும் மேனேஜரும் சென்றிருந்தபோது, மதிய உணவில் அவரது ஏழு வயது மகளும் சேர்ந்துகொண்டாள். உணவின் இடையே ’தண்ணி வேணும்”என்றாள். அவள் தாய் ஒரு புதிய தண்ணீர் புட்டியை எடுத்து அவள் முன்னேயே திறந்து தந்தார். உணவு மேடையில் பல டம்ளர்களில் நீர் இருந்த நிலையில் எதற்கு புதியதாய் ஒரு புட்டி? என்ற ஒரு கேள்விக்குறியுடன் மீண்டும் உணவருந்தத் தொடங்கியபோது, அச்சிறுமி திடீரென ’மூச்சடைக்கிறது’ என்றாள். பதறாமல், அவள் பெற்றோர் மெல்ல அவளை அங்கேயே தரையில் கிடத்தினர். ”மூச்சை மெல்ல இழுத்து விடு”, என்று திரும்பத் திரும்ப அமைதியாகச் சொன்னபடியே, ஒரு கரடி பொம்மையை அவள் கையில் கொடுத்தனர். கரடி பொம்மை, அவளது சிறு நெஞ்சில் ஏறித் தணிந்தது. ஒரு பதைபதைப்புடன் பார்த்திருந்த எனக்கு, ஏன் அவசரமாக மருத்துவமனையை அவர்கள் நாடவில்லை என்பது புதிராக இருந்தது. ஐந்து நிமிடங்களில் அவள் தூங்கிவிட்டாள்.
“தொடர் குண்டு வெடிப்புல, ஒரு குண்டு இவ பள்ளிக்கூடத்துப் பக்கமா வெடிச்சது. பிள்ளைங்க வரிசையா வெளிய வந்தபோது, முன்னாடி போன ஒரு பையனோட வாடடர் பாட்டில் தரையில விழ, அதுல தரையிலே இருந்த ரத்தக்கறை ஒட்டிறுச்சு. அதை எவ்வளவு நேரம் பார்த்தாளோ? தெரியாது, அன்னிலேர்ந்து, வாட்டர் பாட்டில், டம்ளர்ல தண்ணி குடிக்க மாட்டேன்னுட்டா. வாட்டர் பாட்டிலை நீட்டினாலே அவளுக்கு வாந்தி வரும். புது பாட்டில்ல மட்டும்தான் தண்ணி சுத்தமா இருக்கும்னு ஒத்துக்கறா. தண்ணி பத்தி அவளுக்கு நினைவு போனாலே, இந்த மூச்சடைப்பு வந்திரும். ” என்றார் அவள் தந்தை.
”கவுன்ஸிலர்கள் ஏதாவது மருத்துவ சிகிக்சைன்னு போகலியா?” கேள்வி எனக்கே முட்டாள்தனமாகப் பட்டது. செல்வந்தர்கள், நிறையப் படித்தவர்கள்.அவர்கள் அறியாததா?
“போனோம். அதைவிட, என் மாமனார் சொன்ன முறைதான் பயன்படுகிறது. அவள் சிந்தனை தண்ணீரை நோக்கிக் குவியும்போது, அதனை கலைத்து, வேறு ஒரு ரிதமான இயக்கத்தில் கவனத்தைச் செலுத்தப் பயிற்சி கொடுத்திருக்கோம். அவளது மூச்சையே கவனிப்பது என்பது எளிது, எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். அதோட, அரவணைப்பும், அன்பும் காட்ட அவளது கரடிப்பொம்மையும் அவளோடு சேர்ந்து மூச்சு விடுகிறது என்று நம்ப வைத்திருக்கிறோம். அவள் மீது கிடந்து பொம்மையின் உடல் ஏறி இறங்குவது, அவளது படபடப்படைந்த மூளையை அமைதிப்படுத்துகிறது. மொத்தத்தில் சிந்தனைக் குவியத்தைக் கலைத்து, வேறிடத்தில் குவிய வைப்பதுதான் இந்த உத்தி”. என்றார் அவர்.
டேனியல் கோல்மனின் “ஃபோகஸ்” என்ற புத்தகத்தை பதினைந்து வருடங்கள் கழிந்தபின் படித்தபோது, அதில் Breathing Buddies என்ற அத்தியாயம் இந்நிகழ்வை நினைவுபடுத்தியது. Breathing buddies , மூச்சுவிடும் நண்பர்கள் என்ற உத்தியைக் கையாண்டு, மிக பதட்டமான, அபாயமான சூழல்களில் வளரும் குழந்தைகளின் மனப் பதட்டத்தை அடக்கவும், மன ஆளுமைத்திறனை அதிகரிக்கவும், கல்வியியல்வல்லுநர்கள் சிலர் அமெரிக்காவிலும், பதட்டம் நிறைந்த சூழல் கொண்ட நாடுகளிலும் முயன்றிருக்கின்றனர். உலகமெங்கும், அனுபவமிக்க மனிதர்கள், மனத்தின் குவியம், கலைதல், மன ஆளுமை கொண்டு, கவர்வனவற்றைத் தவிர்த்தல் என்பதன் முக்கியத்துவத்தை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உணர்ந்திருக்கின்றனர். மரபணு வழியாக மன ஆளுமை வருமென்றால் அது மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார் கோல்மன். ஆனால், அது அவ்வாறு வருவதில்லை என்பதே உண்மை.
கோல்மனின் சிந்தனைகள் பெரும்பாலும் நாம் அறிந்தவைதாம். சிந்தனை என்பதன் பல அங்கங்களாக, அனுபவத்தின் உணர்வு, பகுத்து அறிதல், திட்டமிடுதல், பண்டைய அனுபவத்துடனான ஒப்பீடு, எதிர்கால நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்று அனுபவத்தைக் கொண்டு நீட்டித்து கற்பனையில் உணர்தல் என்பனவற்றைச் சொல்லலாம். இதில் உணர்வு , இறந்தகால அனுபவ அறிவு, எதிர்கால நீட்சிக்கற்பித்தல் என்பனவற்றை தற்பொழுது தவிர்த்துவிடுவோம். அவற்றை தருக்க வழியாக,அறிய முடியும். , உணர்வுகளின் காரணிகளை மாறாக அறிதல், அவை தூண்டும் உணர்வுகளை தவறாக செயலாக்குதல், காரணிகள் இன்றியே, பழைய அனுபவங்களின் போலி நிகழ்வுகளை மனதுள் நிகழ்த்தி, சிந்தனைகளை வளர்த்தல் என்பன, குவியம் குலைந்த சிந்தனைச் சிதறல்கள். இவற்றை தருக்க ரீதியாக மட்டும் அறிவது கடினம். வெகு சுலபமாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடலாம் “அடுப்பில் பால் வைத்ததும் நினைவிருக்கிறது. அது பொங்க இரு நிமிடங்கள் ஆகும் என்பதும் நினைவிருக்கிறது. டி.வியை இயக்கும்போதும் அடுப்பில் பால் இருப்பது நினைவிருக்கிறது. ஐந்து நிமிடம் கழித்து பால் தீய்ந்த வாடை வரும்போது மட்டுமே நினைவு வருகிறது. இரு நிமிடங்களில் எப்படி நினவு தப்புகிறது? “ மனம் குவிதல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஏன்? என்ற கேள்விக்கு பதில் எளிதில் சொல்லிவிட முடியாது. காரணிகளும், காரணங்களும் பலவாக இருப்பது மட்டுமல்ல. பல வேளைகளில் , சிந்தனை சிதற ஒரே ஒரு காரணி போதுமானது.
டேனியல் கோல்மன் ஃபோகஸ் என்ற புத்தகத்தில் இதற்கு பல கோணங்களைக் காட்டுகிறார். சிந்தனைக் குவியத்தைக் கூர்மையாக்குவது எப்படி? என்றோ, சிந்தனை சிதறாமல் இருக்க பத்து முறைகள் என்றோ அவர் இதை அணுகவில்லை. மாறாக , மருத்துவம், மூளை, நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம், மூளையில் சில வேதிப்பொருள்களின் இயக்கம், நாம் நடைமுறையில் செய்யக்கூடிய செய்முறைகள் அவற்றின் அறிவியல் காரணங்கள், பயன்கள் என எடுத்துக்காட்டுகளுடன் காட்டிச் செல்கிறார். “இதுல பத்து செயல்முறைகள் இருக்கு. அதன்படி செஞ்சீங்கன்னா, ஒரு மாசத்துல மனம் குவித்தலில் பெரும் வெற்றி பெருவீர்கள்” என்றெல்லாம் அலட்டாத, யதார்த்தமான, அறிவியல் கூறுகள், ஆக்கக்கூறுகள் நிறைந்த ஒரு புத்தகம் இது. இவரது பல புத்தகங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.
கற்கால மனிதனின் சிந்தனை என்பது நிகழ்காலச் சிந்தனையாகவே பெருமளவு இருந்திருக்கிறது. உணவு தேடிய புலன் உணர்வு, அபாயத்தில் இருந்து தப்பும் உணர்வு, இனப்பெருக்கத்திற்கான உணர்வு என்று உந்துதல் உணர்வுடனே அன்று மிருகங்கள் போலச் செயல்பட்டிருக்கிறான். அந்த உணர்வுகள் தந்த அனுபவம் மூளையில் நிரந்தரமான நரம்பு இணைவுகளாக பொறிக்கப்பட்டு, நாளடைவில், நிகழ்வுகளூக்கான பதில் இயக்கம், ஆக்க நிலை அனிச்சைச் செயலாக நடைபெற்று வந்தது. அபாயங்கள் குறைய, உணவு தேடித்திரியும் நிலை குறைய, இனப்பெருக்கத்தின் தேவை குறைய, அவன் மூளை, வேறு தூண்டுதல்கள் இன்றி, தன்னிலேயே பழைய நினைவுகளை அசைபோடவும், சமூக அளவில் அதனைப் பகிரவும் நிகழ்காலம் சாதகமாக ஆனது. இக்காலக் கட்டத்தில்தான் , கற்பனை என்பதும், தன் அனுபவம் என்பதும் மீண்டும் மீண்டும் அவன் மூளையை ஆக்ரமிக்கத் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் இந்த நிலை தற்காலிகமானது. அவன் சுயக் கழிவிரக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் ஒரு சிங்கம் பாய்ந்து வந்தால், காங்கிலியா மனத்தையும், மூளையையும்மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இந்த கற்பனை ஆக்ரமித்த நிலை சில கணங்களினுள்ளே கலைந்து போய், மூளையில் நிரந்தர இணைவுகள் தரும் உடனடி ஆணையில் அவன் உடல் துள்ளி எழுந்து, ஓடுகிறது. நாளமில்லாச் சுரப்பிகள் அட்ரினலின், கார்ட்டிஸோல், போன்றவற்றை மிகுதியாகச் சுரந்து அவனது உடல் மிக வேகமான இயக்கத்தைக் கொள்ளக் காரணமாக அமைகின்றன.
இருபது வருடங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவில், ஓநாய்கள் துரத்த ஓடிய ஒரு மனிதன் ஒரு மரத்தில் துள்ளி ஏறித் தப்பித்தான். அவனுக்கு உதவி செய்ய வந்தவர்கள் கவனித்தபோதுதான் தெரிந்தது, அவன் கிட்டத்தட்ட 12 அடி மேல்நோக்கிப் பாய்ந்திருக்கிறான் என்பது. மனித உடல் அமைப்பில் இவ்வளவு உயரம் துள்ளுதல் அசாத்தியம். அவனது பாய்ச்சலின் பின்னே ஹார்மோன்கள் மட்டுமல்ல, காங்கிலியாவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய அவனது மூளையின் நிரந்தர இணைப்புகள் உரிய நேரத்தில், உடலுக்குத் தந்த கட்டளைகள், அவற்றை சரிவர இயக்கிய உடல் உறுப்புகள், பயத்தினால் ஹார்மோன்களைச் சுரக்க வைத்த அமைக்டிலா, இவையும் காரணம். சில நொடிப்பொழுதே நடைபெற்ற இந்த, உடல் + மனக்குவியலின் ஆக்க சக்தி, மனிதனால் சாதாரணமாகச் செய்ய முடியாததைச் செய்ய வைத்திருக்கிறது.
சாதாரண பொழுதுகளில் குவியம் இந்த அளவு சாதனைகளைச் செய்வதில்லை. ஆனால் கட்டுப்பாடான , பெருமளவு பயன் தரக்கூடிய செயல்களை , மூளையின் பல பகுதிகளை இயங்க வைத்தும், சிலவற்றை இயங்காது வைத்துமாக, குவியத்திற்கான உழைப்பு பயன் தரலாம். தருகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவு.
மனத்தின் குவியம் என்பது கவனத்தினின்று வேறுபட்டது ( Focus is different from attention). குவியம் என்பது, ’பல தூண்டுதல் காரணிகள் இருக்கையில், ஒருவர் தானாக, ஒரு செயலைச் செய்வதால் வரப்போகும் பயனின் உணர்தலோடு அச்செயலின் தூண்டுதல் காரணியின்மேல் அல்லது காரணியின் இயக்கத்தின் மேல் மட்டும் தன் உணர்தலைச் செலுத்துதல்’ என்று ஒரு வகையில் வரையறுக்கப்படுகிறது. செயலைச் செய்யத் தொடங்கி, திசைதிருப்பும் ஒரு காரணியின் வசப்பட்டு,கற்பனையிலோ, பல எண்ணங்களின் தொடர்விலோ, தொடங்கிய செயலின் உணர்வற்று, கனவில் நிற்பதை உணர்ந்து, மீண்டும் செயலில் மனம் செலுத்துவது பெரும் சவாலாக பலருக்கும் உள்ளது. இவ்வாறு ‘ மனம் திருப்பிக் குவிப்பது’ என்பதும் குவியத்தின் ஒரு நிலை. தடுமாற்றம் ஏற்படுத்தும் காரணிகளை முதலிலேயே அடையாளம் கண்டுகொண்டு, மனத்தை அவற்றிலிருந்து விடுபடவைக்கும் உத்திகளை, இயக்கப் பணிகளாக, ஒரு சடங்கின் நீட்சியாக (மூச்சை இழுத்து விடுதல், நிதானமாக சில சொற்களை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்) செய்தல், குவியத்துடன் பணி செய்தால் வரும் பயனை முன்கூட்டியே நினைவில் நிறுத்திக் கற்பனை செய்து அதனை நோக்கி மனதை முடுக்குதல் என்பனவும், பல மதங்களில் (ஆசார, நிராசார) காணக்கிடைக்கின்ற ஒன்றுதாம். இம்மதங்கள் குறிப்பாக இந்தியாவில் ( இந்து, பவுத்த, சமண மதங்கள், தாந்த்ரீகம் போன்ற மறைக்கட்டு சடங்குகள்) வளர்ந்தவை. கோல்மன் இந்தியாவின் ஆன்மீக உணர்வில் தாக்குண்டவர். எனவே அவரது சிந்தனைகளிலும், புத்தக அடுக்குமுறையிலும் இந்திய தாக்கம் விரவி வருவதைக் காணமுடிகிறது. அழிநிலை உணர்ச்சிகள் Destructive Emotions என்ற புத்தகத்தில் அவர் தலாய் லாமாவுடனான உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, புத்த, இந்து மத சிந்தனைகள் குறித்த மேற்கோள்கள் ஃபோகஸ் புத்தகத்தில் சில இடங்களில் வருகின்றன.
இதெல்லாம் நாம் அறியாததா என நாம் சந்தேகிக்கலாம். இதனைச் சொல்ல ஒரு புத்தகம் எதற்கு?
கோல்மனின் வெற்றி, இப்படி முறைகளைச் சொல்லுவதில் இல்லை. அதனை மருத்துவ, மனோதத்துவ, மூளை-மருத்துவ, ஆய்வு நிலைகளின் வளர்ச்சித் தகவல்களுடன் சேர்த்துச் சொல்லுவதில் இருக்கிறது. உதாரணமாக, கோபம், பயம் போன்ற உணர்வுகளின் கருவூலமான அமைக்டலா எவ்வாறு சிந்தனைகளில் தாக்கமடைகிறது என்பதையும், அவ்வுணர்வுகள் தூண்டப்பட்டால், செயல்நிலை எவ்வாறு தடுமாற்றமடைகிறது என்ப்தையும் அறிவியல் நுணுக்கத்தோடு விளக்குகிறார் கோல்மன். இப்படி தடுமாற்றமடையச் செய்யும் அமைக்டலாவை அமைதிப்படுத்துவதுதான் சரியான வழியென தருக்க வாதத்தில் நமக்கு தெளிவித்துவிட்டு, அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் விளக்குகிறார். மூளையின் முன்பகுதியான pre-frontal cortexல் அமைதிப்படுத்தும் கட்டளைகளை நரம்புகள் மூலம் செலுத்துவதன் மூலம் (தாக்கம் தரும் உணர்வுகளைத் தூண்டும் காரணிகளைத் தவிர்த்தல், புலன்களை அடக்கி, ஒரு சீரான, மீண்டும் மீண்டும் அடுத்து வருகின்ற செயல்களில் புலன்களைச் செலுத்துதல், தருக்க ரீதியாக, நாம் பாதிப்படையவில்லை என்று மூளையின் அமைக்டலாக்களுக்கு Pre frontal cortex மூலம் அறிவித்தல்) அமைக்டிலாவை அடக்கலாம் என்று நிறுவுகிறார். இவ்வாறு புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அறிவியல் சான்றுகளும், அவற்றைத் தொடர்ந்து தருக்க ரீதியான இயக்க ஆலோசனைகளும் செயல்முறைப் படிகளாகக் கிடைக்கின்றன.
இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவத்தில், தான் அறிந்த படிகளை எவ்வாறு கைக்கொள்வது? என்பது வாசிப்பவரின் சிந்தனை மற்றும் செயலாற்றப் பங்களிப்பில் இருக்கிறது. கோல்மனின் படைப்புகள் ஒவ்வொன்றும் , ஒவ்வொரு விதமான பாதிப்பை வாசகரிடம் ஏற்படுத்துகின்றன, வெற்றியளவை நிர்ணயிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.