முன்னே சொன்ன 12 விஷயங்களும் நம்முடைய அன்றாட நிகழ்வுகள். இதையே கருவிகளின் இணையம் எப்படி மாற்றி அமைக்க வல்லது என்று அடுத்து பார்ப்போம் – ஒரு 10 ஆண்டுகள் முன்னோக்கிச் செல்வோம். நிகழ்வுகளை விளக்குவதற்கு முன், சில அறிமுகங்கள் அவசியமாகிறது. மனோகரின் வீட்டு கணினியின் பெயர் ‘நெல்லை’. அவருடைய கார் கணினியின் பெயர், ‘சக்தி’. அவருடைய அலுவலக கணினியின் பெயர், ’மாலன்’. இந்த மூன்று கணினிகளும் மனோகரின் குரல் கேட்டு இயங்கக் கூடியவை.
- காலை 6:00 மணியாகியவுடன், ‘நெல்லை’ மனோகர் மற்றும் செல்வியின் படுக்கையறை பக்கத்தில் உள்ள விளக்கை உயிர்பெறச் செல்துவிட்டது! மேலும் மெலிதாக சுப்ரபாதம் இசை படுக்கையறை மற்றும் சமையலறைகளில் பரவ, ஜன்னல்களின் திரைகள் முனைவு மாறி (polarization) வெளிச்சம் உள்ளே வரத் தொடங்கியது. நேற்று (ஞாயிறு) ஒழுங்காக 9:00 மணிக்கு எழுப்பிய அதே ‘நெல்லைக்கு’ இன்று வேலைநாள் என்று தெரியும்
- அகிலா நேற்றிரவு வைத்த ரொட்டியை டோஸ்டரை ‘நெல்லை’ பதமாக வாட விட்டது. சமையலறையில் இருக்கும் காபி மெஷினை இயக்கிவிட, காபி தயாராகிக் கொண்டிருந்தது
- செல்வி தயாராகி, அனைவரும் காலை உணவை அனைவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் பொழுது மணி, 7:50
- மனோகரின் தானியங்கிக் கார் அருகே வருகையில் அவருடைய செல்பேசியை வைத்து, அவருக்கு சரியான இருக்கை அமைப்பை சரி செய்து வைத்திருந்தது ‘சக்தி’. அவர் உள்ளே அமர்ந்ததும், வழக்கம் போல செல்வியின் பள்ளி மற்றும் அவரது அம்பத்தூர் தொழிற்சாலைக்குப் போக வேண்டுமா என்று கேட்டுக் கொண்டது ’சக்தி’. அவருக்குப் பிடித்த ‘கணேஷ் குமரேஷ்’ வயலின் ஒலிக்க, பயணம் தொடங்கியது. காரோ, பின் சீட்டில் அமர்ந்திருந்த செல்விக்காக அவளுக்கு பிரியமான குழந்தைகள் பாட்டையும் ஒலிக்கச் செய்தது!
- முதல் சிக்னலை அடைந்தவுடன், சிக்னலுடன் தொடர்பு கொண்ட ‘சக்தி’, பாதையில் வேலை நடப்பதால், சற்று வேறு பாதையில் செல்வியின் பள்ளியை 8:30 மணிக்கு அடைய முடியும் என்று மனோகருக்கு அறிவித்தது. காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியுடன் தொடர்பு கொண்டு, வேறு பாதையையும் அமைத்துக் கொண்டது. சரியாக, 8:32 மணிக்கு, செல்வியை பள்ளியில் விட்டு விட்டுப், பயணம் தொடர்ந்தது
- ஒரு மணி நேர பயணத்தில், மனோகருடைய தானியங்கிக் கார், மற்ற மனிதர்கள் ஓட்டும்/தானியங்கி கார்களுடன் பல சாலைகளை/ சிக்னல்களைக் கடந்ததை, வேடிக்கைப் பார்க்க மனோகரிடம் நேரமில்லை. அன்றைய செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்று பயணம் தொடர்ந்தது. காலை, 9:28 மணிக்கு தொழிற்சாலையில் அவரை விட்டு விட்டு, வழக்கமான இடத்தில் தானே நிறுத்திக் கொண்டது. அவருடைய தானியங்கி மின்சாரக் கார், சென்னையின் சுட்டெரிக்கும் வெய்யிலில் முழுகி மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கியது
- மனோகர் அலுவலகத்தை அடைய, உடல் வருடல் (biometric scan) மூலம், அவரை அக்கருவி வழிவிட்டது. அவருடைய கையில் ஒட்டப்பட்ட செயலியை அவரது அலுவலக வருடிக்கு, கதவருகே வந்தவுடன், எதையும் தொடாமலே மனோகர் வந்திருக்கிறார் என்று தெரியும். அலுவலகம் சென்றவுடன் அகிலா அழைத்தாள். அவளுடைய செல்பேசியில், ’நெல்லை’ வீடு பூட்டப்பட்டச் செய்தியை அனுப்பியதாகச் சென்னாள். மனோகரும், செல்வியை பள்ளியில் விட்டதை சொல்லி, அடுத்த வேலையைப் பார்க்கப் போனார்
- ’மாலன்’ பூனே மற்றும் சென்னை உற்பத்தி விவரங்களைக் காட்டியது. சென்னையில் உள்ள அழுத்த எந்திரம், இன்னும் 5 மாதத்திற்குள் பழுது பார்க்கப்பட வேண்டும் என்று பராமரிப்பு விவரங்கள் சொல்வதாக, ’மாலன்’ சொன்னது. பழுது பார்க்கும் ஜப்பானிய கம்பெனி விவரங்கள் அத்துடன் காட்டி, அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்ற ஒரு வேண்டுகோள் அனுப்பலாமா என்றது. அடுத்த 45 நாட்களின் உற்பத்தி எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு உதவி ரிப்போர்ட்டும் காட்டியது. நாளை தெரிந்துவிடும் என்று மனோகர் வேண்டுகோளுக்குச் சரி சொன்னார்
- பகல் 12:30 -க்கு உணவுக்காக கேன்டீன் சென்றபோது, மூன்று முக்கிய மின்னஞ்சல்கள். வீட்டைச் சுத்தம் செய்யும் ரோபோ எல்லா அறைகளையும் சுத்தம் செய்து விட்டதாக, ‘நெல்லை’ செய்தி அனுப்பியிருந்தது. செல்வியின் பள்ளியிலிருந்து அவள் எவ்வளவு தண்ணீர் குடித்தாள் என்று அவளுடைய தண்ணீர் பாட்டில் செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகியிருப்பதை அவருடைய உடையில் பொருத்தப்பட்ட மானிட்டர் ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் நர்ஸுக்கும் இந்தச் செய்தி எட்டியிருக்கும்
- ’சக்தி’ 420 கிலோவாட் சூரிய ஒளி மூலம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் காரில் சேமிக்கப் பட்டிருப்பதாகவும், அதை விற்று விடலாமா என்று சொன்னதோடு, தலா கிலோவாட்டிற்கு 20 ரூபாய் மூலம் 8,400 ரூபாய், 2:00 மணிக்குள் விற்றால் கிடைக்கும் என்று ஆசை காட்டியது!
- மாலை, அம்மாவைச் சந்திக்க ‘சக்திக்கு’ தன் செல்பேசி மூலம், செய்தி அனுப்பினார் மனோகர். மாலை 4:45 மணிக்கு அம்மாவின் மாம்பலம் வீட்டிற்கு தானியங்கிக் கார் விரைந்தது. டீ நகரில், காப்பிப் பொடி மற்றும் திண்பண்டங்கள் வாங்க வேண்டியது நினைவுக்கு வர, ‘சக்தியிடம்’, அடுத்த பயணத்தில் இதை சேர்த்துக் கொள்ளும்படி மனோகர் சொன்னார். அங்கு, நர்ஸ் ஏற்கனவே வந்திருந்தார். கடந்த 1 வார ரத்த அழுத்த விவரங்களை ஆராய்ந்து, அம்மாவின் மருந்தை சற்று மாற்றி அமைத்துவிட்டு, மருந்துகடைக்குப் புதிய ஆணையை அனுப்பிவிட்டார். இந்த விதப் பரிசோதனை வருகைக்கு, அடுத்த மாதம் காய்ச்சி விடுவாள்.
- பள்ளி திரும்பிய செல்வி, தனது பாட்டியை அழைத்து, அவளுடைய பள்ளி வரைபடங்களை வீடியோ மூலம் காட்டினாள். அத்துடன். செல்வியின் ஆசிரியையின் விமர்சனமும் இருந்தது. தன்னுடைய புதிய தண்ணீர் பட்டிலின் மகிமையைப் பற்றி, பாட்டியிடம் சொல்லி சந்தோஷப்பட்டாள். அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறியதும், ‘சக்தி’, “டீ நகருக்குப் போக வேண்டுமா?’ என்று கேட்டு, அனுமதி பெற்று கடைக்குச் சென்றது. செல்பேசி மூலம் ஆர்டர் கொடுத்துவிட்டு காசையும் கட்டிவிட்டார், மனோகர். கடையை அடைந்த பொழுது, தயாராக இருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு பயணமானது கார். பயணிக்கும் பொழுது, ‘சக்தி’, ‘உங்களது பின் டயர்களில் இன்னும் 60 நாட்கள் மட்டுமே பத்திரமான பயணம் சாத்தியம். புதிய டயர்கள் மாற்ற முயற்சி எடுங்கள்’ என்றது.
அடடா, என்ன ஒரு பூச்சுற்றல் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதெல்லாம் இன்னும் 10 வருடங்களில் சென்னையில் சாத்தியமா? இதில், சில நிகழ்வுகள் சற்று ஓவராகத் தோன்றினாலும், மற்றவை, என் பார்வையில் சாத்தியமே. சென்னையில் இல்லாவிட்டாலும், மற்ற மேற்கத்திய நகரங்களில் சாத்தியம். கற்பனை என்பதால், ஏன் சென்னையில் நிகழக் கூடாது? உண்மையான பூச்சுற்றல், 10 வருடத்திற்குப் பின் தமிழர்கள் ஆங்கில மோகத்தைத் துறந்து தங்களுடைய குழந்தைகள், கணினிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள் என்று நம்புவது 🙂
இந்த நிகழ்வுகளில் தடிமனாகக் காட்டியிருப்பவை, கருவிகள் – மனிதர்களை விட ஏராளமாக அவை பேசுவதைப் போலத் தோன்றினால், அது உண்மையே. நம்முடைய உரையாடல்களில், சமயம், இடம் மற்றும், மனிதரை அறிந்து, அதற்கு தகுந்தவாறு உரையாடுகிறோம். கருவிகள் எதையும் பொருட்படுத்தாமல் பேசித் தள்ளும். அட, எப்பொழுது கருவிகள் பேசின? யாருடன் பேசின? எதன் வழியாகப் பேசின? இந்த உதாரண நிகழ்வுகளைக் கொண்டே என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.
முதல் புள்ளியில் உள்ள கருவிகள் எப்படி உரையாடின என்று பார்ப்போம். இதில் அடங்கியுள்ள கருவிகள்:
- பாட்டு இசைக்கும் கருவி (சுப்ரபாதம் இசையைத் தேடி இசைக்கும் வல்லமை படைத்தது)
- படுக்கையறை விளக்குகள் – கட்டளை கிடைத்தவுடன் இயங்க வல்லவை. சூரிய வெளிச்சம் பட்டால், அணைந்து கொள்ளும் வல்லமை கொண்டது
- ஜன்னல்களின் திரைகள் – இவற்றை இன்றையத் திரைச்சீலைகளாக நினைக்காதீர்கள். இவை முனைவாக்கத்தினால், வெளியே உள்ள வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கவும், தடுக்கவும் வல்லமை கொண்டது
எங்கே இவை பேசின?
- ‘நெல்லை’, முதலில் காலை 6:00 மணியானதும், இன்றைய செல்பேசி போல அலாரம் ஒலி மட்டும் எழுப்பவில்லை – மனோகர் மற்றும் செல்வியின் அறைகளில் இருந்த விளக்குகளுக்கு ‘உயிர்பெறு’ என்று செய்தி அனுப்பியது.
- அடுத்தது, மனோகர் மற்றும் செல்வி அறைகளில் உள்ள ஜன்னல்களுக்கு முனைவாக்க மாற்றம் செய்ய, ஆணை அனுப்பியது.
- கடைசியாக, ‘நெல்லை’, பாட்டு இசைக்கும் கருவிக்கு, ’இந்தப் பாடலை இசை’ என்று ஆணையும் அனுப்பியது.
- விளக்குகள் உயிர்பெற்று இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ‘நெல்லை’ ஜன்னல்களுக்கு ஆணை அனுப்பியது என்று வைத்துக் கொள்வோம்
- ஜன்னல்கள் ஒளியை உள்ளே அனுமதித்ததும், விளக்குகள் (இரு அறைகளில்) ‘நெல்லை’ –க்குத் ’தேவைக்கு அதிகமான ஒளியுள்ளது. 6:02 –க்கு, நான் அணைந்து விடுகிறேன்’ என்று ‘நெல்லை’ –க்குச் செய்தி அனுப்பியது
- சுப்ரபாதம் இசை முடிந்ததும், இசைக்கருவி, ‘நெல்லை’ – க்குப், பாடல் முடிந்துவிட்டது என்று 6:20 –க்கு இன்னொரு செய்தி அனுப்பும்
இவ்வளவு சின்ன விஷயத்திற்காக 6 உரையாடல்கள். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள கருவிகளின் ‘வளவள’ எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதுவும், இது ஒரு குடும்பத்தின் கருவிகளின் ஒரு நாள் உரையாடல். இதைப் பல கோடி குடும்பங்களாக எண்ணிப் பாருங்கள் – தலை சுற்றும் அளவிற்கு, கருவி உரையாடல்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இளைஞர்களின் இன்றைய ‘வாட்ஸ் ஆப்’ மிகச் சாதரணமாகப் படும்! சில இளைஞர்/ இளைஞிகளாவது கொஞ்சம் உரக்கச் சொன்னால் குறைவாகச் செய்வார்கள். கருவிகள், யார் பேச்சையும் கேட்காது. தேவையோ, இல்லையோ, கருவிகள், இயங்கிக் கொண்டே இருக்கும் (பழுதான சமயம் தவிர) – ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும்.
சொல்லப்போனால், இந்த உரையாடல் நமக்கு புதிதே அல்ல. இது போன்ற கருவி உரையாடல்கள், ஒவ்வொருவருடைய காரிலும் (2007 –க்கு பிறகு உள்ள பெரும்பாலான கார்கள்) ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நாம் பெரிதாகக் கண்டு கொள்ளுவதில்லை. உதாரணத்திற்கு, காரைக் கிளப்பி, நீங்கள் அதன் விசையை அழுத்துகையில் என்ன நடக்கிறது?. எந்த சிலிண்டருக்கு எத்தனை காற்றும், பெட்ரோலும் தேவை என்பதை ஒரு கணினி முடிவெடுக்கிறது. பயணத்தின் ஒவ்வொரு கணமும் இந்த முடிவை பல்வேறு அளவுகளை வைத்து முடிவெடுக்கிறது. எஞ்சினுக்குள் எரியும் எரிபொருளின் வெப்பம் குறைக்க எண்ணை எஞ்சினை குளிர்விக்கிறது. எண்ணையின் வெப்பம் மற்றும் பாகுநிலையை (viscosity) அதே கணினி கண்காணித்துப் பெட்ரோல் மற்றும் காற்றின் அளவைக் கட்டுப் படுத்திக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நொடியும், பல நூறு முறைகள் இந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் தான், இன்றய கார்கள் பெட்ரோல் விஷயத்தில் சிக்கனமாக இருக்கின்றன. கார் விஷயத்தில், எல்லா உரையாடல்களும், பின்னணியில், காருக்குள்ளே நடந்து முடிந்து விடுகிறது. எப்பொழுதாவது, முகப்புப் பெட்டியில் (dashboard), ‘கோளாறு’ என்று அலறும் வரை நாம் கண்டு கொள்வதில்லை.
சரி, எங்கே இதில் இணையம் வந்தது? இதுவரை நாம் பார்த்த உரையாடல்கள் யாவையும், காருக்குளேயோ, வீட்டின் கணினிக்குள்ளோ அடங்கிவிட்டது. நாம் பார்த்த உதாரணத்தில், ’மாலன்’ எந்திரங்களின் பல விவரங்களைச் சேகரித்து வைக்கும் என்று கொள்ளலாம். அத்தனை எந்திரக் கருவிகள் ஒவ்வொரு நிமிடம் அனுப்பும் அளவுகளையும் நிறுவனத்தின் ஒரு வழங்கி வயலில் திரட்டி வைக்கப்பட்டிருக்கும் என்றும் கொள்ளலாம். மேல்வாரியாகப் பார்த்தால், உதிரி பாகங்களை மாற்றும் முடிவை, இது போன்ற விவரங்களைக் கொண்டு கணினி முடிவுக்காக முன் வைக்கிறது.
சற்று ஆழமாக அலசினால், சில விஷயங்கள் தெளிவாகும்:
- கருவிகள், ஒரு எந்திரத்திலுள்ள சிறு செயலியுடன் (processor) தொடர்பு கொள்கிறது
- செயலி, தேவைக்கேற்ப, கருவியுடன் தொடர்பு கொண்டு, ஆணை பிறப்பிக்கும் வல்லமை கொண்டது
- ஒரு தொழிற்சாலையில், இது போல பல எந்திரங்களுக்கும், தலா ஒரு செயலி செயல்படும்
- எல்லா எந்திரச் செயலிகளையும் இணைக்கும் வேலையை நிறுவனத்தின் வழங்கி வயல் செய்கிறது
- இதைத்தான் கருவிகளின் இணையம் என்று சொல்லுகிறார்கள். நிறுவனத்தின் வழங்கி வயலுக்குப் பதில், இணையத்தில் ஒரு மேக சேகரிப்பு (cloud storage) மையத்திலும் சேகரிக்கலாம்
- முக்கியமாக, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு படியிலும், முடிவாற்றல் திறன் (இதை கணினி ஆசாமிகள் intelligence என்று குழப்புகிறார்கள்) அதிகரித்துக் கொண்டே இருக்கும். சில முடிவுகளை எந்திரச் செயலிகளே எடுத்து விடலாம். இன்னும் சில சிக்கலான முடிவுகளை, செயலிகளை இணைக்கும் மையத்தில் முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, சென்னைத் தொழிற்சாலை செயலிகள் ஒரு தொழில்பகுதி கணினியால் (plant computer) இணைக்கப்படலாம். அந்தத் தொழில்பகுதியில், 3 ஷிஃப்ட் இருந்தால், ஷிஃப்ட் இடைவேளையில் செய்யப்பட வேண்டிய சில செயல்களை தொழில்பகுதி கணினி முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, தொழிற்சாலைத் தரைகளைச் சுத்தம் செய்யும் ரோபோக்களை இயக்குவது, ஆட்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் , விளக்குகளை சன்னமாக்குதல் போன்ற முடிவுகளுக்கு நிறுவனத்தின் வழங்கிகள் தேவையில்லை
பல கோடி புதிய கருவிகள், உணர்விகள் இணையத்தையே ஒரு கேள்விக்குறியாக்கும் சக்தி படைத்தது. எனினும், இந்த முன்னேற்றம் தடுக்க முடியாதது. புதிய சிந்தனை, அணுகுமுறைகள் அவசியமாகிறது.
எப்படி, இங்கு திடீரென்று வழங்கி வயல் (server farm) பற்றிய பேச்சு அடிபட்டது? நாம் சொன்ன தொழிற்சாலை உதாரணத்தில், பல நூறு எந்திரங்களின் பல கருவிகள், நாள் முழுவதும், ஓயாமல் வெப்பம், ஒளி, அழுத்தம், எடை, அசைவு, சத்த அளவு, பருமன், நேரம் என்று அளவுகளை அனுப்பிய வண்ணம் இருக்கும், இதற்கான சேமிப்புத் தேவை இதுவரை நாம் காணாத அளவு அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ராட்சச சேமிப்பு மற்றும் செயல்படுத்தும் திறனுக்கு வழங்கி வயல்களை விட்டால் வேறு வழியில்லை. நல்ல வேளையாக, இத்தகைய வசதிகள் நாளுக்கு நாள் விலை குறைந்த வண்ணம் இருப்பதால், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விரைவில், என்றால், எத்தனை விரைவில்? இது மிகவும் கடினமான கேள்வி. ஜோஸ்யம் எல்லாம் இதற்கு ஒத்து வராது. ஒன்று மட்டும் தைரியமாகச் சொல்லலாம். மின்னணுவியல், கணினி மற்றும் மென்பொருள் துறைகள் என்றும் இல்லாத அளவு இந்தத் தொழில்நுட்பத்தை முன்னேற்றத் துடியாக வேலை செய்து வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் இந்த போக்கிற்கு மிகவும் ஒரு உந்துதலாய் அமைந்துள்ளது. ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.
இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள், இத்துறையின் பல்வேறு உபதுறைகளில், தங்களது கைவசத்தைக் காட்டி வருகிறார்கள். திடீரென்று, பல ஆண்டுகளாக எழுத்தாளர்கள் கனவு கண்டதைப் போல, பல சம்பந்தமில்லா நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டே ஒத்துழைக்கிறார்கள். இதை coopetition என்று சொல்லுகிறார்கள். உதாரணத்திற்கு, Samsung, Google, Apple, Microsoft, LG, SAP, Intel, GE என்று ஒரு விசித்திரக் குடும்பம் – இன்னும் சில குழந்தைகள், பேரன் பேத்திகளோடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உணர்ச்சிகளுடன் இந்தத் துறையில் முன்னேறத் துடிக்கிறார்கள். நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்களுக்கு (consumer electronics shows) இவர்கள் அனைவரும் படை எடுக்கிறார்கள. இதுவரை, ஆரகிளோ, எஸ்.ஏ.பி. –யோ, நுகர்வோர் மின்னணுவியல் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் நிறுவனங்கள்.
2015 –ல் நடந்த நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்கில், இந்த விநோத குடும்பத்தின், சில நிச்சயதார்த்த விடியோக்கள் இங்கே:
கருவி இணைய பில்ட் அப்
கணினி மற்றும் மென்பொருள் துறைகளில், தமிழ் சினிமா டைரக்டர்கள் போல, பில்டப் கொஞ்சம் அதிகம். வரலாறு படைக்கப் போகும் என்று விவரிக்கும் மொக்கைப் பட டைரக்டருக்கும், மென்பொருள் ஆசாமிகளுக்கும் சின்ன வித்தியாசம்தான். மொக்கைப் பட இயக்குனரின் கதி, படம் வெளி வந்தவுடன் தீர்மானமாகிவிடும் – அது ஒரு மாதமோ, இரண்டு மாதமோ ஆகலாம். கணினி மென்பொருள் துறையில் நுகர்வோரை ஒரு மென்பொருள் சென்று அடைந்து பயனுற ஒரு ஐந்து முதல் பத்தாண்டுகளாவது ஆகிறது. இதை hype cycle என்கிறார்கள், இன்று ஏராளமாக ஊதி வாசிக்கப்படும் விஷயம் (2014) கருவிகளின் இணையம். அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தத் தொழில்நுட்பத்திற்கு மிகவும் முக்கியம். பல ஊதி வாசிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் மறைந்து விடுகின்றன. இதை ஒரு மரணப் பாதாளமாகப் பார்க்கிறார்கள். இதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் தொழில்நுட்பமே நமக்கு நீண்ட நாள் பயன் அளிக்கிறது.
இத்துறையின் ஆரம்பம், 16 ஆண்டுகளுக்கு முன் 1999 –ல் தொடங்கியது என்று சொல்லலாம். கெவின் ஆஷ்டன் (Kevin Ashton) என்னும் ஆங்கிலேயர், சோப்பு மற்றும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் Procter and Gamble நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, RFID தொழில்நுட்பத்தை உபயோகிக்கையில் (இதைப்பற்றி விரிவாக சொல்வனத்தில், சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன்) கருவிகளின் இணைய தொடர்பு நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று முதலில் கருத்து வெளியிட்டார். அவர் அப்பொழுது சொன்ன விஷயம்தான் Internet of things – வழக்கம் போல, மார்கெடிங் வல்லுனர்கள், இணையத்துடன் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களுக்கு இந்தப் பெயரை சூட்டி குழப்புவது, இந்த தொழிலின் நீண்ட நாள் வழக்கம். ஆனால் இன்று, இது ஒரு மிகவும் சீரியஸான தொழில் முயற்சியாகவும் வளர்ந்துள்ளது.
உடனே, யாராவது, ”அடுத்த ஞாயிறு எல்லா கருவிகளும் கைகோர்த்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும். தயவு செய்து உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்” என்றால், ஓட்டம் பிடியுங்கள். இன்றையக் கருவிகளின் முடிவாற்றல் திறன், ஆரம்ப மற்றும் இடைப்பட்ட நிலைகளில் உள்ளது. இன்னும் இவை வளர, பலவித தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிறுவன ஒத்துழைப்பு தேவை. பொதுவாக, இன்றைய கருவிகள் பெரும்பாலும், ஒரு நிறுவனத்தின் படைப்புகளோடே வேலை செய்கின்றன. உதாரணத்திற்கு, ஆப்பிள் கடிகாரம், ஐஃபோன், மற்றும், ஐபேடுடன் நன்றாக வேலை செய்யும். அதே போல சாம்சுங்கின் பல கருவிகளும், சாம்சுங் உலகில், நன்றாக வேலை செய்யும். சில கருவிகளை ஒரு நிறுவனத்திடம் வாங்கி, மற்றவற்றை இன்னொரு நிறுவனத்திடம் வாங்கினால், உங்கள் பாடு திண்டாட்டம்தான்.
இப்படிப்பட்ட பல சிக்கல்கள், வளர்ந்துவரும் இத்துறையில் ஏராளமாக உள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், பல நிறுவனங்களும், ஒரு சாதாரண நுகர்வோர் பார்வையில், தங்களது முயற்சிகளை முன்னேற்றினால்தான் வாடிக்கையாளர்கள் கருவிகளை வாங்குவார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டன. எல்லாவற்றையும் ஒரே நிறுவனத்திடம் நுகர்வோர் வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவற்ற செயல். ஆனால், பிரச்சினை இதுவென்று ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. அதைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல, இத்தகைய தொழில்நுட்பப் பிரச்சினைகளை, விரிவாகப், பிறகு அலசுவோம்.
என்னதான் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பல கருவிகளும் கம்பியில்லா தொடர்பு (WiFi) அல்லது புளூடூத் (Bluetooth) மூலமாகவே தங்களது அளவுகளை அடுத்த நிலைச் செயலிக்கு அனுப்புகின்றன. இவை,பாதுகாப்பில் அவ்வளவு பலமற்றவை. இந்தப் பிரச்சினை, ஒரு காருக்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ பெரிதாக நாம் நினைப்பதில்லை. இவற்றை தாண்டி, இணையத்தில் இக்கருவிகள் தங்களது அளவுகளை பதிவு செய்ய வேண்டுமானால், கருவி பாதுகாப்பு, இன்னும் வளர வேண்டும். இதைப் பற்றி, விரிவாக இன்னொரு பகுதியில் பார்ப்போம்.
இன்னொரு முக்கியமான விஷயம், நுகர்வோரின் வழக்கங்கள் எப்படி மாறுமென்பது. சரியான தொலை பேசியே இல்லாத இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வசிக்கும் நுகர்வோர், செல்பேசிகள் மற்றும் நுண்ணறிபேசிகளை, மேலை நாட்டவர்களை விட, வேகமாக ஏற்றுக் கொண்டு, நன்றாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், புதிய கருவிகளை யார் விரைவில் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. எந்தக் கருவிகளுக்கு வரவேற்பிருக்கும் என்றும் சொல்வது கடினம். இந்தக் கருவி இணைய முயற்சிகள் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக, நுகர்வோரற்ற துறைகளில், இத்துறை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற துறைகளில் உள்ள முன்னேற்றங்கள் அடுத்தபடியாக நுகர்வோரைச் சென்றடையும் என்று நம்ப வாய்ப்புள்ளது. நுகர்வோர் துறைகளில் பல கோடி கருவிகள் விற்க வாய்ப்புள்ளதால் இதை முன் நிறுத்தி, பல காட்சியளிப்புகள் இன்று வந்த வண்ணம் உள்ளது. அத்துடன், இவ்வகை காட்சியளிப்புகள் சமூகத்தின் தொழில்நுட்ப மனப்போக்கையும் மாற்றும் முயற்சியில் ஒரு வழி என்று சொல்லலாம்.