எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்

Offshore North Sea sunset

நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு ஸ்வாரஸ்யமான மனிதர்.  செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. இவரைப்பற்றி வலைத்தளங்களில் நிறையப்படிக்கலாம். அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை  வைத்து இலவச மின்சாரம் வழங்குவதுnikola-tesla மாதிரியான  அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய  கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால்  இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்! அப்படிபட்ட ஒரு உடோபியன் (Utopian) உலகில் வாழ்வது எவ்வளவு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று யோசித்தால் வியப்பாய் இருக்கிறது.
அந்தக்கனவுலகில் இருந்து நினைவுலகுக்கு திரும்ப வந்து, நடைமுறையில் என்ன சாத்தியம் என்று பல குழுக்கள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. 5% மக்கள் தொகையை வைத்துக்கொண்டு உலகின் 25% ஆற்றலை உபயோகித்துக்கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா என்று சொன்னோம். அவ்வளவு ஆற்றலை உபயோகிப்பதை திடீரென்று குறைத்துக்கொள்வதென்பது கடினம் என்றாலும், தேவையான ஆற்றல் அனைத்தையும் படிம எரிபொருள்களை (Fossil Fuel) உபயோகிக்காமல் புதுப்பிக்கத்தகுந்த இயற்கை வளங்களில் (Renewable Energy Sources) இருந்து மட்டும் பெற முடியும் என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வுக்குழுவினர்  அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களையும் ஒவ்வொன்றாக அலசி, ஆங்காங்கே  நிலவும் இயற்கை வளங்கள், தட்பவெப்ப நிலை முதலியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, புதுப்பிக்கத்தகுந்த இயற்கை வளங்களில் இருந்தே செலவை அதிகரிக்காமல் எப்படி 100% தேவையான மின்சாரத்தை தயாரிப்பது என்ற திட்டத்தை அவர்களின் வலைதளத்தில் முன் வைத்திருக்கிறார்கள்.  உதாரணமாக நான் குடியிருக்கும் பென்சில்வேனியா மாநிலத்தை எடுத்துக்கொண்டால், சுமார் 73% தேவைகளை சூரிய ஒளியில் இருந்தும் 20%ற்கு மேல் காற்றாலைகளில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். இப்படி ஒரு திட்டத்தை அமல் படுத்தினால், 2.7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு இறுதியில் சுற்றுப்புற சுகாதார சூழலை மாசு படுத்துவதை தடுப்பதன் மூலம், வியாதிகளை குறைத்து, பணமும் சேமிப்போம் என்கிறது இந்த வலைத்தளம்!

100RenewablePA

இதே போன்ற அலசலை ஒவ்வொரு மாநிலத்துக்கும் செய்து தங்கள் பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறார்கள். சுற்றுப்புற சூழலில் அக்கறையுள்ள சில சினிமா நட்சத்திரம் போன்ற பிரபலங்கள் முடிந்த அளவு இந்த திட்டத்தை விளம்பரப்படுத்தி  நடைமுறைக்கு கொண்டுவர முயன்றும் வருகிறார்கள். பிற்காலத்துக்கு நல்லது என்றாலும் உடனடியாக நாம் செய்ய வேண்டிய செலவு இந்த மாதிரியான திட்டங்களை அமல் படுத்துவதில் உள்ள பெரிய தடைக்கல். எனவே எண்ணெய் விலை இப்போதைக்கு குறைவாக இருக்கிறதென்றால், நாம் எண்ணெய்யை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டோம்.
அந்தக்கோணத்தில் இருந்து பார்த்தால், இந்தத்தொடரில் நாம் அலசி வந்த வழியில் கச்சா எண்ணெய்யின் விலை இன்று வரை பயணித்து, இப்போது பீப்பாய் $43 என்ற கடந்த பத்தாண்டுகளில் தொடாத அடிமட்ட விலையை தொட்டிருக்கிறது. உலகின் எண்ணெய் தேவையை நிர்ணயிக்கும் சமன்பாடு மிகவும் சிக்கலானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. சீனாவின் பொருளாதாரம் சரிந்தாலோ, ஃப்ராகிங் உற்பத்தி தொடர்ந்தாலோ எண்ணெய் விலை இன்னும் குறையலாம். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்தாலோ, ஃப்ராகிங் உற்பத்தி  வற்ற ஆரம்பித்தாலோ இன்னும் சில வருடங்களில் விலை திரும்பவும் ஏறவும் கூடும். இப்படி எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால், விலையை அவ்வளவு சுலபமாய் பழையபடி $140க்கு போய் விடாமல் பார்த்துக்கொள்ள இந்தத்தொடரில் பார்த்த மின்சாரத்தில் ஓடும் காரில் இருந்து, களை தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிப்பு,  ஃப்ராகிங் என்று  பல்வேறு முயற்சிகள் உலகெங்கிலும் தொடர்வது தெரிகிறது. ஐன்ஸ்டைனின் சமன்பாடுகளில் இருந்து பலவிதங்களில் வேண்டிய அளவுக்கு உலகில் ஆற்றல் என்னவோ கொட்டிக்கிடக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்தி விடலாம். ரொம்ப பணச்செலவில்லாமல், சிரமும் படாமல் அதை எப்படி நம் தேவைகளுக்கு பயன்படும்படி மாற்றி அமைத்து உபயோகிப்பது என்பதில்தான் சிக்கல். வளர்ந்து வரும் பல்வேறு தொழில் நுட்பங்கள் இந்த கேள்விக்கு விடையளித்து பீப்பாய் விலையை அழுத்தி வைக்க உற்சாகமாய் முயன்று கொண்டிருக்க போவது நிச்சயம். எனவே நாம் திரும்ப ஒரு நடை ஹெலிகாப்டரில் ஏறி பிளாட்பார்ம் பக்கம் போய் வருவோம்.

mi8

அந்த முறை ஜூஹூ ஹெலிபேசில் இருந்து பிளாட்பார்ம் சென்றபோது எங்களை தூக்கிச்சென்றது ஒரு ரஷ்யன் Mi-8 ஹெலிகாப்டர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் crew change என்று சொல்லப்படும் பணியாளர்கள் மாறும் தினம். எங்கள் கருவியியல் ஆய்வகத்தில் (Instrumentation Lab) மட்டுமின்றி பிளாட்பார்ம் முழுதும்  பல்வேறு பராமரிப்பு துறைகளில் பணிபுரியும் பொறியாளர்களில் பாதிப்பேரை ஊருக்கு அனுப்பிவிட்டு அதே எண்ணிக்கையில் மாற்றுப்பணியாளர்களை பிளாட்பார்முக்கு கொண்டு போய் சேர்க்கும் நாள் அது. அடுத்த வெள்ளிக்கிழமை  மறுபாதி பணியாளர்கள் மாற்றப்படுவார்கள். இதே போல் புதன் கிழமைகளில் ப்ரொடக்க்ஷன் துறையில் பணி புரியும் பொறியாளர்களுக்கு crew change நடைபெறுவது வழக்கம். வெவ்வேறு பிளாட்பார்ம்களுக்கு இந்த பொறியாளர்கள் மாற்றம் வெவ்வேறு தினங்களில் நடைபெறலாம் என்றாலும், பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் ஹெலிபேசில் நிறைய கூட்டம் இருக்கும்.
இப்படி நிறைய பேரை கூட்டிச்சென்று விடவோ அல்லது கொண்டுவந்து சேர்க்கவோ தேவை இருந்தால் நாம் ஆரம்பத்தில் பார்த்த ஐந்தாறு பேரை மட்டுமே தூக்கிச்செல்லக்கூடிய தாஃபின்  (Dauphin) ஹெலிகாப்டர் போதாது. எனவே இருபது பேருக்கு மேல் ஏற்றிச்செல்லக்கூடிய ரஷ்யன் Mi-8 ஹெலிகாப்டரிலோ அல்லது வெஸ்ட்லாண்ட்-30 என்ற ஹெலிகாப்டரிலோ கிளம்பிப்போவோம். இந்த இரண்டும்  பல குணாதிசயங்களில் இரண்டு துருவங்கள்.  எண்பதுகளில் ராஜீவ் காந்தியும் மார்கரெட் தாட்சரும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் கம்பெனிக்கு உயிர் பிச்சை போடுவதுபோல் இந்தியா  நிறைய வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டெர்களை வாங்கியது. பார்ப்பதற்கு அழகாக புதிய விமானங்கள் போல் தோன்றிய அவற்றின் உள்ளேயும் விமானங்களில் இருப்பது போல் அழகாக  வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட புதிய சீட் எல்லாம் உண்டு.  ஆனால் வந்த நாள் முதல் இந்த மாடல்  ஹெலிகாப்டெர்கள் நிறைய தொந்தரவுகள் தந்து கொண்டிருந்தன. நாங்கள் பிளாட்பார்ம்முக்கு பறந்து கொண்டிருக்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தால்  ஹெலிகாப்டரின் உள்ளே தண்ணீர் ஒழுக ஆரம்பிக்கும்! பல சமயங்களில் பாதி வழியில் இஞ்ஜின் ரொம்ப சூடாகி விட்டது என்று அவசர அவசரமாக அருகில் இருக்கும் பிளாட்பார்மில் போய்  ஹெலிகாப்டெரை  இறக்க வேண்டிய அவசியம் பைலட்டுக்கு ஏற்படும்! எனவே  வெஸ்ட்லாண்ட்-30  ஹெலிகாப்டரில் ஏறினால், ஒழுங்காய் போக வேண்டிய இடத்திற்கு இன்று போய் சேருவோமா மாட்டோமா என்று எல்லோரும் பெட் வைக்க ஆரம்பித்து விடுவார்கள்!
Mi-8 ஹெலிகாப்டர் வெஸ்ட்லாண்ட்-30க்கு எதிர்மாறாய், பார்ப்பதற்கு ஒரு பெரிய எருமை மாடு போல் இருப்பதாய் எனக்குத்தோன்றும். நான் பயணித்த Mi-8 ஹெலிகாப்டெர்கள் இந்திய மிலிட்டரிக்கு சொந்தமானவை. எனவே  பளிச்சென்ற வெள்ளை-ஆரஞ்சு நிறங்கள் எதுவும் இல்லாமல், மிலிட்டரிக்கே உரித்தான ஒரு அழுக்கு பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும். உள்ளே போனால் குஷன் வைத்த சீட்டுக்கு பதில்  ஓரடி அகலம் மட்டுமே உள்ள நீண்ட பலகை  நீள வாக்கில்  அமைக்கப்பட்டு  ஒரு பெஞ்ச்  மாதிரி காட்சி தரும். வெஸ்ட்லாண்ட்-30யில் இருக்கும் விமான ஸ்டைல் திறக்க முடியாத  பளபள நீள்சதுர ஜன்னல்களுக்கு பதில் Mi-8ல்  வட்டவட்டமாய்  வெட்டி எடுத்தது போன்ற  ஜன்னல்கள். பறக்கும்போதும் இந்த ஜன்னல்கள் பெரும்பாலும் மூடப்படாமல் திறந்தே கிடக்கும்.  ஹாலிவுட்  மிலிட்டரி சினிமாவில் வரும்  காட்சியைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, நாங்கள் பக்கத்துக்கு ஒரு டஜன் இஞ்ஜினியர்களாய்  24 பேர், ஜன்னல்களுக்கு எங்கள் முதுகை காட்டியபடி உட்கார்ந்திருப்போம். ஒருமுறை  Mi-8ல் பயணித்தபோது, எங்களுக்கு நடுவே  வினோதமாய்  பளிச்சென்று  மஞ்சள்  பெயிண்ட் அடித்துக்கொண்டு ஒரு பெரிய பீப்பாய்  படுத்துக்கொண்டு இருந்தது. இதென்ன சம்பந்தம் இல்லாமல் நட்டநடுவே ஒரு பீப்பாய் என்று எங்கள் விமானியை கேட்டேன். ஹெலிகாப்டெரின் பெட்ரோல் டாங்க் ஏதோ ரிப்பேர் ஆகி இருந்ததால், இப்போதைக்கு அந்த பீப்பாய்தான் பெட்ரோல் டாங்க் என்று விளக்கி, அதிலிருந்து மேலே இருந்த இஞ்ஜினுக்கு குழாய்கள் போவதை சுட்டிக்காட்டினார்! சரிதான் போ என்று நினைத்துக்கொண்டேன்!  இப்படி இயங்கும் இந்த Mi-8 ஹெலிகாப்டெர்கள் மேலே பறக்கும்போது, மழை பெய்தால் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியே உள்ளே நிறையவே சாரலடிக்கும். ஆனால் ஏதோ மிலிட்டரி  ஹெலிகாப்டரில் நாட்டின் எல்லைப்புறத்திற்கு போவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அந்த பயணத்தில் அது ஒரு விஷயமாகவே தோன்றாது! Mi-8 ஹெலிகாப்டரில் கிளம்பினால் பேய் மழையோ, சூறாவளியோ என்ன வந்தாலும் கவலை இல்லை, சரியாக போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விடுவோம் என்ற பொதுக்கருத்து எங்களுக்கே வேடிக்கையாக இருக்கும்!
வெஸ்ட்லாண்ட்-30 ஹெலிகாப்டெர்கள் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றனவா என்று வலையில் தேடிப்பார்த்தேன். மொத்தம் 41  ஹெலிகாப்டர்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதில் பாதிக்கு மேல் இந்தியாவுக்குதான் வந்து சேர்ந்திருக்கின்றன. அடுத்து உள்ள படம் இப்போது இந்த விமானங்களின் நிலை என்ன என்று  எளிதாய்   சொல்லி விடுகிறது!

Westlands

எனக்கு நன்கு தெரிந்த, பாம்பேஹை பிளாட்பார்ம்களுக்கும் ஜூஹூ ஹெலிபேஸுக்கும் இடையே நிறைய பறக்கும் ஒரு ஹெலிகாப்டர் பைலட்டிடம் கேட்டபோது, Mi-8 ஹெலிகாப்டர்களும் ஓய்வு பெற்று பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதை தெரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் காண்ட்ராக்ட் கம்பெனிகளுக்கு சொந்தமான AW 139, பெல் 412 போன்ற ஹெலிகொப்டெர்கள்தான் ONGCக்காக பறந்து கொண்டிருக்கின்றன. எனக்கு நன்கு பரிச்சயமான தாஃபின் ஹெலிகாப்டெர்களுக்கு பதில் ஏறக்குறைய அதே போல் தோற்றமளிக்கும் N3 என்கிற மாடலை உபயோகிக்கிறார்கள். பாம்பேஹை எண்ணெய் எரிவாயு களம் இன்னும் விரிந்திருப்பதால், கடலுக்கடியில் இருந்து எரிபொருள்களை வெளிக்கொண்டு வருவதில், அங்கே பணி புரியும் பல கப்பல்களுடன், இந்த ஹெலிகாப்டெர்களுக்கும் இன்றியமையாத பங்குண்டு.  
அந்தமுறை போய் இறங்கியபோது பிளாட்பார்மில் இருந்த மின்சார  ஜெனரேட்டர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பராமரிப்பு வேலை துவங்கி இருந்தது.  சாதாரணமான 14 நாள் ஷிப்ட்டை விட இந்த மாதிரி வேலைகள் நடைபெறும் சமயங்கள் பிளாட்பார்ம் வாழ்வில் இன்னும் சுவையானவை. ஒவ்வொன்றும் ஒரு மெகாவாட் திறனுள்ள  நான்கு  ஜெனரேட்டர்கள் பிளாட்பார்மில் இருந்தன. எப்போதும் மூன்று ஓடிக்கொண்டிருக்க, நான்காவது  ஓடத்தயாராக நின்று கொண்டிருக்கும். ஓரிரு வாரங்களுக்கு ஒரு முறை ஓடும்  ஜெனரேட்டர் ஒன்றை நிறுத்திவிட்டு, ஸ்டாண்ட் பையில் இருக்கும் ஜெனரேட்டரை முடுக்கி விடுவோம். இந்த ஜெனரேட்டர்கள் எரிவாயுவிலேயே ஒடும்படி வடிவமைக்கப்பட்டு இருப்பதால், எண்ணெய் எரிவாயு கிணறுகளில் இருந்து கிடைக்கும் எரிவாயுவைக்கொண்டே இவைகளை ஒட்டி தேவையான மின்சாரத்தை தயாரித்துக்கொள்வோம்,
ரஸ்டன் என்ற UK கம்பெனியால் தயாரிக்கப்பட்ட இந்த ஜெனரேட்டர்கள் அடியில் இருந்து முடிவரை எல்லா பாகங்களும்  ரஸ்டன் கம்பெனியாலேயே தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தன. எனவே அந்த கம்பெனியில் இருந்து வந்த ஓரிரண்டு பொறியாளர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டு, மிக மிக தீர்க்கமாக வரையறுக்கப்பட்ட முறைகளின்படி அந்த  ஜெனரேட்டரை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி, சுத்தம் செய்து, சில பல பாகங்களை  மாற்றி, திரும்பவும் திரும்ப பூட்டி ஓட வைப்போம். ஒரு ஜெனரேட்டரை  கழற்றி மாட்ட 8 பேர்  வேலை செய்யும்போது சுமார் ஐந்து நாட்கள் ஆகும். விஷயங்களை கற்றுக்கொள்ள வேறு பிளாட்பார்ம்களில் இருந்து பொறியாளர்கள் வந்து, கழற்றி கிடக்கும் ஜெனரேட்டரை  பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு, விரிவுரைகளை கேட்டுவிட்டு போகும் வழக்கமும் உண்டு.
இப்படிப்பட்ட ஒரே கம்பெனியால் தயாரிக்கப்பட்ட ஜெனரேட்டர்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் எரிவாயு அழுத்தத்தை அதிகரித்து மும்பைக்கு அனுப்பி வைக்கும் கம்ப்ரஷர்கள், It Takes A Village என்று சொல்லப்படும் முறையில், பல கம்பெனிகளின் ஒத்துழைப்பால் உருவாகி இருந்தன!  நான் பணிபுரிந்த பிளாட்பார்மில் இருந்த கம்ப்ரஷரை மூன்று பெரிய பகுதிகளாக பிரிக்கலாம்.
ஒன்று, எரிவாயுவை எரித்து ஜெட் என்ஜின் போல மிக அதிக அழுத்தத்தில்  சூடான காற்றை டர்பைனுக்கு அனுப்பும் என்ஜின். எங்கள் பிளாட்பார்மில் இது நிஜமாகவே ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கம்பெனியால் விமானங்களில் உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஜெட் என்ஜின். இது காற்றை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும் பக்கம் சென்றால் ஒரு ஆளை இழுத்து ஸ்வாஹா செய்யும் அளவு பலம் பெற்றதென்பதால் அந்தப்பகுதி, ஒரு பத்தடிக்கு பத்தடிக்கு பத்தடி சைஸில் இருக்கும் பெரிய அறை போல அமைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். கம்ப்ரஷர் ஓடும்போது தப்பித்தவறி இந்த அறையின் கதவு திறக்கப்பட்டால், அழுத்த வேறுபாடுகளை கவனிக்கும் உணர்வி இந்த என்ஜினை உடனே நிறுத்தி விடும். என்ஜின் ஓடாதபோது அந்த அறைக்கு சென்று பராமரிப்பு வேலைகள் செய்வோம். கம்ப்ரஷர் ஓடிக்கொண்டிருந்தால் அது போடும் சத்தத்தில் அருகே இருக்கும் யாரும் நம் காதில் வந்து கத்தினாலும் எதுவும் கேட்காது. எனவே காதுகளை பாதுகாக்க தேவையான சத்த அமுக்கிகளை (Ear Muff) அணிந்து கொண்டு அங்கே வேலைகள் செய்யும்போது சைகைகள் வழியாகவே பேசிக்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த என்ஜினில் இருந்து வெளிவரும் காற்றில் சுழலும் டர்பைன் கூப்பர் என்ற கம்பெனி தயாரித்தது. இது இரண்டாவது பாகம். இந்த டர்பைன்  நிமிடத்திற்கு  ஆயிரம் முறைக்கு மேல் சுற்றும் என்றாலும் சுழலும் பிளேடின் விளிம்புக்கும் சுற்றுச்சுவருக்கும் இடையே உள்ள இடைவெளி ஓரிரண்டு மில்லிமீட்டர்கள்தான் இருக்கும்.

gasturbine

நிறைய இடைவெளி இருந்தால், அழுத்தங்கள் சரிவர அதிகரிக்காது. இந்த புரிதல்கள் அந்தக்காலத்தில் எனக்கு பிரமிப்பூட்டின. அத்தனை வேகமாக அவ்வளவு எடை உள்ள டர்பைன் சுற்றும்போது, வெப்பத்தினால் விரிவடைந்தோ அல்லது மையவிலக்கு விசைகளாலோ (Centrifugal Force) அது சுற்றுச்சுவற்றை தொட்டு பெரிய விபத்தில் போய் முடிந்து விடாதோ என்று முதலில் தோன்றும். அதற்காகவே தயாரிக்கப்பட்ட பிரத்தியோக உலோக கலவை, வடிவமைப்பின்போது நடக்கும் ஆய்வுகள் எல்லாம் அத்தகைய அசம்பாவிதங்கள் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் என்பது பின்பு புரிந்தாலும், வியப்பு என்னவோ முற்றிலும் விலகாது.
மூன்றாவது பாகம் அடுத்து இந்த டர்பைனால் சுற்றப்பட்டு, எரிவாயுவை அழுத்தம் அதிகரிக்கச்செய்யும் கம்ப்ரஷர். அது கவாசாகி கம்பெனியால் தயாரிக்கப்பட்டிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஷரை  அடியில் இருந்து ஆரம்பித்து முழு வேகத்தில் ஒட்டி மும்பைக்கு எரிவாயுவை  அனுப்பிவைக்கும் நிலைக்கு கொண்டுவர ஐந்து மணி நேரம்வரை ஆகும். அதில் இருந்து  இந்த ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின் + கூப்பர் டர்பைன் + கவாசாகி  கம்ப்ரஷர்  மூன்றும் சேர்ந்த அமைப்பு எவ்வளவு சிக்கலானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

GasCompressor

இவைகளை தவிர, யோககாவா  கம்பெனியின் பல்வேறு  உணர்விகள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கம்ப்ரஷரை இயக்க  உபயோகிக்கப்பட்ட டெக்சாஸ்  இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கம்பெனியின் லேடர் லாஜிக் டெர்மினல் என்று இந்த மொத்த அமைப்பில் சம்பந்தப்பட்ட இன்னும் ஒரு டஜன் கம்பெனிகளின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முன்பு ஒருமுறை சொன்னதுபோல், பிளாட்பார்மில் சேர்ந்த புதிதில், “இந்த கம்ப்ரஷர்  பற்றி முழுதும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் கையேடு எங்கே இருக்கிறது?”, என்று நான் கேட்டபோது, ஒரு சீனியர் பொறியாளர் சிரித்தவாறு ஒரு பெரிய அலமாரி நிறைய இருந்த புத்தகங்களை காட்டினார். அது முதலில் கொஞ்சம் மலைப்பு தட்ட வைத்தாலும், பின்னால் பல மாதங்களுக்கு என் தீராத தொழில்நுட்ப தாகத்திற்கு மில்க்ஷேக்  வார்த்தது.

offshoresunset

இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் இன்றும் பிளாட்பார்மை நினைத்தால், குதித்துக்கொண்டு வரும் நினைவுகள் அப்போது உருவாகி இன்றும் தொடரும் சில நட்புக்களும், நிறைய தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களும்தான். சமயம் கிடைக்கும்போது இந்தக்கட்டுரையை படித்துப்பாருங்கள். நான் அந்த சில வருடங்களை எப்படி சொர்கவாசம் போல் அனுபவித்திருக்கிறேன் என்பதற்கு அது ஒரு நல்ல சான்று.
அந்தக்கட்டுரையின் பார்வையில் இருந்து யோசித்தால், 1980களில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு என்பது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய லட்சியமாய் இருந்தது என்பதும், IT போன்ற துறைகள் தேசத்தின் ராடரிலேயே இல்லாததும் நினைவுக்கு வருகிறது. ஒரு விதத்தில், எண்ணெய்/எரிவாயுவை பம்ப்புகளையும் கம்ப்ரஷர்களையும் உபயோகித்து அழுத்தி அழுத்தி குழாய்களின் வழியே செலுத்தி வெகுதூரம் அனுப்புவது சம்பந்தமான அந்த வேலைக்கும், தொடர்பாடல் செயலிகளை உபயோகித்து ஏகப்பட்ட தகவல்களை அழுத்தி அடைத்து ஃபைபர் ஆப்டிக் குழாய்கள் வழியே அனுப்பும் எனது தற்போதைய வேலைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது அசை போட சுவையான விஷயமாய் இருக்கிறது! அந்த வேலையில் இருந்தபோது கம்ப்ரஷர்களின் சிக்கலான அமைப்புகளை வெறும் கண்களாலேயே பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இப்போதைய வேலையில் 4 பில்லியன் டிரான்சிஸ்டெர்களை ஒரு சதுர செண்டிமீட்டருக்குள் அடைத்து வைத்துக்கொண்டிருக்கும் தொலைதொடர்பு செயலிகளை புரிந்துகொள்ள மின்னணு நுண்ணோக்கிகளுக்கு (Electron Microscope) மேல் மனக்கண்ணின் தயவும் வேண்டும். எப்படியோ எல்லாம் ஒழுங்காய் இயங்கி, நாம் எக்கச்சக்கமாய் உற்பத்தி செய்து அழுத்தி அடைத்து அனுப்பும் சமாசாரங்கள், எண்ணெய்யோ தகவலோ, உருப்படியாய் அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்தால் கிடைக்கும் மனநிறைவு ஒரு தனி சுகம்தான். பின் வரும் தலைமுறைகளும் இந்தத்துறைகளில் வெறும் உபயோகிப்பாளர்களாக மட்டும் இல்லாமல் உருவாக்குபவர்களாகவும் இருப்பதில் உள்ள பல்வேறு சந்தோஷங்களை ஆழ்ந்து அனுபவிப்பார்களாக!
இந்த திரைப்படத்தின் கடைசி காட்சியாய் இதை வைக்கலாம்.  அந்த ஷிப்டில் ஒரு வாரம் முடிந்திருந்த தருணம். ஜெனரேட்டர் பராமரிப்பு வேலை நன்றாக போய் கொண்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு கேண்டீனை சேர்ந்த ஒரு பணியாளர் நாங்கள்  வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்கு வழக்கம் போல் காஃபி கொண்டு வந்து கொடுக்கவும், எல்லோரும் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு சூரியாஸ்தமனத்தை பார்த்தபடி காஃபி குடித்துக்கொண்டிருந்தோம். இதமான காற்று. விடாத அலைகளின் ஓசை பிளாட்பார்ம் இயந்திரங்களின் சப்தத்துடன் கலந்து எங்கும் விரவி இருந்தது. தூரத்தில் கடலில் ஒரு கும்பலாய் நீந்திக்கொண்டு போனது டால்பின்களா இல்லையா என்று ஒரு சிலர் விவாதிக்க, நான் அணிந்திருந்த கண்ணாடியில் சூடான காஃபி  டம்ளரில் இருந்து வந்த  நீராவி படிந்து கடலையும், சூரியனையும் அவுட் ஆப் ஃபோகஸில் காட்டியது. பக்கத்தில் என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்த UK இஞ்சீனியர் ஜெனரெட்டரின் எரிவாயு  எரியும் வேகத்தை பராமரிக்கும் கருவியின் (Gas Burn Rate Governor) தத்துவத்தை விளக்க விளக்க, அது இயங்கும் விதம் துல்லியமாக புரிந்த அதே சமயம், கண்ணாடியில் படிந்த நீராவி மெல்ல மறைந்து சூரியனும் கடலும் டால்பின்களும் துல்லியமாக தெரிய ஆரம்பித்தன.

(முற்றும்)

5 Replies to “எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்”

 1. ஆழ்கடல் எண்ணைக்கிணறுகளில் பொறியாளராக இருப்பது மிகவும் திருப்தி அளிக்கும் தொழில். கோடிக்கணக்கில் முதலீடு. கோடிக்கணக்கில் வருமானம் தரும் இயந்திரங்கள். எல்லாம் உன் கையில். கடனுக்கு உழைக்காமல் ஆரவத்துடன் வேலை செய்தால் அது எல்லோருக்கும் தெரியும், மரியாதையை சம்பாதித்துத்தரும். அந்த வேலை சம்பாதித்துத் தந்த தன்னம்பிக்கை இந்த தொடரில் தெளிவாகத் தெரிகிறது. ஆர்வத்துடன் செய்த எதுவும் மனதில் என்றும் நிறைவு தரும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
  1980 களில் தகவல் தொழிற்நுட்பம் இந்தியாவின் ராடாரிலேயே இல்லை என்பது சத்தியமான வார்த்தை. யாருக்காவது 20 அம்ச திட்டம் எனும் சொற்றடர் நினைவில் உள்ளதா? அல்லது அந்த “மேரா பாரத் மகான்”? அதில் தகவல் தொழில் நுட்பம்?
  காபி ஏற்றுமதி வாரியம் என்று ஒன்று நூறு வருடம் செயல் பட்டு வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் எந்தக் கடையிலாவது “இந்திய காபி” என்று சிறப்பாக விற்கிறார்களா? கொலம்பியா தான்சானியா சுமாத்ரா அராபிக்கா கோனா … இந்தியா மட்டும் கிடையாது. இந்தியாவைக் கெடுக்க நினைக்கும் எதிரிகள் “மென்பொருள் ஏற்றுமதி வாரியம் ” என்று ஒன்று தொடங்க வைத்திருந்தால் போதும் அத்துறையில் நம் சாதனைகள் தொட்டிலிலேயே செத்திருக்கும்.

 2. அண்ணா, தொடர் அருமை. நாங்களும் அங்கே ரசித்து வேலை பார்த்த அனுபவம் போல இருந்தது. சென்ற வாரம்தான் சொல்வனம் பற்றி தெரிந்து தங்கள் அனைத்து கட்டுரை, தொடர்களையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து படித்து முடித்தேன். முக்கியமாக சிந்தனை சோதனைகள், தொடர்பாடல் செயலி அருமையாக இருந்தது.
  நன்றி அண்ணா. தொடர்ந்து எழுதினால் மகிழ்ச்சியடைவோம்.

 3. Apologies for the delayed response.
  It was indeed a pleasure to read all the episodes written by Sundar.I liked the the way the complicated technical jargons were made simple in Tamil.Though every day I and on these platforms, My knowledge on offshore drilling was limited.Now I can proudly say I am much more knowledgeable.Thanks to Sundar.My sincere and heasrtiest congratulations to you for the wonderful effort.Wish you all the best for the next project.
  Warm regards
  Ramesh

 4. I like to thank for elaborating each and every detail about the extraction of black gold and its influences on world economies in a simple manner. Your article is highly recommendable to all starters entering for jobs in oil & gas sector.
  Above all, it was a immense pleasure to read this article in tamil. Thanks to your strong memory which enabled to write this article.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.