செறிவான இலக்கியச்சூழல் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இணையத்தில் தொடர்கின்றன. இதுவரையுள்ள இணைய இதழ்களின் வரிசையில் சென்ற வாரம் கபாடபுரம் சேர்ந்திருக்கிறது. அருமையான வடிவமைப்பு கொண்ட இந்த இணைய இதழ் இன்னொரு நம்பிக்கைப் புள்ளியாக மலர்ந்திருக்கிறது.
தமிழ் இணையத்தில் இலக்கியச் சூழல் என்ற ஒன்று உண்டா என்ற கேள்வியே வருந்தச் செய்வதாக இருக்கிறது. இலக்கியம் பற்றி பேசுகிறோம். தனிநபர் தளங்களில் எழுதுகிறோம், இணைய இதழ்களும் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒன்றுகூடி இலக்கியச் சூழல் அல்லது, இலக்கியச் சமூகம் என்ற ஒரு பொதுவெளி உருவாகியிருக்கிறதா? இலக்கியச் சூழல் என்று ஒன்று இருந்தால், இங்கு உருவான படைப்புகளின் எண்ணிக்கை என்ன, தரம் என்ன என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலக்கியச் சமூகம் என்று சொன்னால், அங்கு ஒரு எழுத்தாளனின் இடம் என்ன, அவனது படைப்பு எவ்வாறு கண்டுகொள்ளப்படுகிறது, எப்படிப்பட்ட விமரிசனத்துக்கு உட்படுத்தப்படுகிறது, இலக்கியச் செயல்பாட்டால் அவன் பெற்ற பயன் என்ன என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லாவற்றுக்கும் மேல், இலக்கியத்தின் தேவை இங்கு உணரப்பட்டிருக்கிறதா, அதைப் படைப்பதற்கான கோரிக்கை எழுகிறதா, விரிவான விமரிசனங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் மகிழ்ச்சியான பதில் காண்பது அவ்வளவு சுலபமாக இல்லை. எது எப்படி இருந்தாலும் அத்தனை ஆறுதல்களையும் தாண்டி மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம் இருக்கிறது- இணையத்தில்கூட ஆங்கில தளங்களில் நிகழும் உரையாடல்களோடு ஒப்பிட்டால் நம் இலக்கியச் சூழலின் வறுமை வெட்கப்பட வைப்பதாக இருக்கிறது.
சென்ற வாரம் ஆங்கில இலக்கியச் சூழல் குறித்து ஒரு சுவாரசியமான விவாதம் இணையத்தில் நடைபெற்றது. டானியல் கிரீன் எழுதிய ஒரு பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்காட் எ\ஸ்போசிடோ.எழுதியிருந்தார். இரு கட்டுரைகளும் முழுமையாய் தமிழில் மொழிபெயர்க்கத்தக்கவை. ஆனால் அவர்கள் எழுதியுள்ள விஷயங்களில் சில தமிழுக்குப் பொருந்தாது என்பதால் சற்றே தளர்வான மொழியில் அந்தக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.. தொடர்புடைய கட்டுரைகள் இவை
முதலில் டான் கிரீன் என்ன எழுதினார் என்று பார்க்கலாம்- Lori A. May என்பவர் எழுதிய, The Write Crowd: Literary Citizenship and the Writing Life (2015), என்ற புத்தகத்தில் உள்ள லிடரரி சிடிசன்ஷிப் என்ற கருத்துருவாக்கத்தை எடுத்துக் கொள்கிறார் அவர் (லிடரரி கம்யூனிட்டி என்பதன் நேரடி தமிழாக்கம் இலக்கியச் சமூகம் என்பதாக இருந்தாலும், ஆங்காங்கே இலக்கியச் சூழல் என்று மொழிபெயர்க்க இருக்கிறேன்).
எழுத்தாளர்கள் இலக்கியத்துக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்பதில் தொடங்கி, அவர்கள் இலக்கிய நலனைக் கருத்தில் கொண்டு, “இலக்கியச் சமூகத்தின்” நல்ல குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் முடிந்திருக்கிறது. இலக்கிய குடியுரிமை என்பதைப் பல எழுத்தாளர்களும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் பயன் என்ன? உரையாடல்களைக் கொண்டு இலக்கியச் சூழலுக்கு வளமூட்டி, அதன் நலனை மேம்படுத்தி, தனி மனிதனின் ஆற்றலை பிறர் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. நம் நல்லெண்ணத்தையும் திறமைகளையும் பிரதிபலன் பாராமல் பிறருக்காகச் செலவிடச் செய்கிறது. இலக்கியக் சூழலுக்கு நாமளிக்கும் பங்களிப்பு பிறர் கற்றுக் கொள்ளவும், உரையாடலில் பங்கேற்கவும், கூட்டு முயற்சியால் வளரவும் துணை செய்கிறது. இதை எப்படிச் செய்ய முடியும் என்று யோசித்தால் முயற்சியிலும் விளைவிலும் பல்வகைச் சாத்தியங்கள் தென்படுகின்றன. ஆனால் இலக்கிய குடியுரிமை என்ற கருத்தின் மையத்தில் ஒரு விஷயம் நிலையாக இருக்கிறது- நம் உடனடி தேவைகளுக்கு அப்பால் இலக்கியச் சூழலுக்கு நாம் ஏதேனுமொரு பங்களிப்பு செய்ய வேண்டும்..
இலக்கியப் புலத்தில் நம் உடனடி தேவைகள் எவை? நம் எழுத்து பிரசுரமாக வேண்டும், நாம் எழுதியது வாசகர்களைச் சென்றடைய வேண்டும், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நாம் முழு நேர எழுத்தாளராவது சாத்தியப்படலாம். இன்று இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது, எழுதுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. பதிப்புத் துறையிலும் இலக்கிய உலகிலும் அச்சிடு அல்லது அழிந்து போ என்பதுதான் சட்டமாக இருக்கும் நிலையில் “இலக்கிய குடியுரிமை“, “இலக்கியச் சமூகம்” போன்றவை வசீகரமான மாற்றுகளாய் இருக்கின்றன. இலக்கிய குடியுரிமையின் நோக்கம் என்பது நம் சுயநலனுக்கு அப்பால் நாம் இலக்கியக் சூழலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அதன் நன்மைகள் நம்மையும் வந்து சேர்ந்தாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் ஏன் இதில் பங்கேற்க வேண்டும்? நம் நீண்டகால கனவுகளும் நம் உடனடி தேவைகளும் ஒன்றாயிருக்க வேண்டியதில்லை.
இலக்கிய குடியுரிமையைக் கொண்டு இலக்கியச் சூழல் ஒன்றை உருவாக்குவது பற்றிய இணக்கமான பார்வையில் நாம் அதற்குச் சாதகமாக என்ன சொல்ல முடியும்? இன்று புத்தக வியாபாரம் என்ற முரட்டு வணிகத்தைத் தவிர வேறெங்கும் இலக்கியச் செயல்பாட்டில் பயனில்லை. மிகுந்த ஊக்கத்துடன் இயங்கும் முதலிய பொருளாதார அமைப்பு சமூக, வணிக விழுமியங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இதிலிருந்து முழுமையாகத் துண்டித்துக்கொள்ள முடியாவிட்டாலும், இதை முழுமையாகச் சார்ந்திருப்பதிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு இலக்கிய வெளியை அமைக்க இலக்கியச் சமூகமும் அதற்கு உருவம் கொடுக்கும் இலக்கிய குடியுரிமையும் உதவுகின்றன. இப்படிப்பட்ட ஒரு பார்வையில், இலக்கியத் தோட்டத்தை நாம் பராமரிப்பது பின்னொரு காலத்தில் அறுவடை செய்ய நமக்கும் ஒரு இடம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் செயல்பாடு ஆகிறது.
அது சரி. இலக்கிய மதிப்புக்காக மட்டுமே இலக்கியத்தைக் கொண்டாடுவது என்பது நல்ல விஷயம்தான், அது அவசியமும்கூட. ஆனால் இலக்கிய குடிகளாய் வாழ விரும்புபவர்களில் எத்தனை பேர் இலக்கியத்தை அருவ வழிபாடு செய்யத் தயாராக இருக்கின்றனர்? என் படைப்புக்கு இடமில்லை என்றாலும்கூட நான் தோட்டப் பராமரிப்பில் பங்கேற்க வருவேன் என்று சொல்லக்கூடியவர்கள் எத்தனை பேர்? அப்படிப்பட்ட ஒரு நிலையில் இலக்கியச் சூழல் வெறிச்சோடிப் போய்விடும் என்று நான் நினைப்பது ஒரு நம்பிக்கை வறட்சியாகத் தெரியலாம். ஆனால் இலக்கியம் என்பது ஒரு கருத்துருவாக்கமாக மட்டுமே இருக்குமென்றால் இலக்கியம் என்ற சுதந்திர வெளியைப் பாதுகாக்கப் போராட வருபவர்களுக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது என்று தோன்றுகிறது. சரி, இலக்கிய குடிமகனாக தீவிரமாகப் போராடுவது என்பது குறுகிய வணிக பார்வையில் தொழில்முறை முன்னேற்றத்துக்காக மட்டுமே என்பது உண்மையல்ல என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும்கூட இலக்கிய குடிமகனாகச் செயல்படுவதன் தூய நோக்கங்களை அதன் மூலம் கிடைக்கக்கூடிய புகழுக்கும் அந்தஸ்துக்கும் ஆசைப்படுவது களங்கப்படுத்தாமல் போய்விடுமா என்ன?
இப்படி ஒரு கேள்வி எழுப்புவதால் இலக்கியக் குடிமக்களாய் இருக்க வாரீர் என்ற அழைப்பு அர்த்தமற்றுப் போய்விடுவதில்லை. மானுட நோக்கங்கள் தூய்மையாய் இருக்கவே முடியாது. இலக்கிய கூடுகைகளுக்குச் செல்லுதல், சிற்றிதழ் துவக்குதல், மதிப்புரைகள் எழுதுதல், இலக்கிய அமைப்பில் சேர்த்தல் போன்றவை இலக்கிய குடிமக்களின்கடமைகளாகச் சொல்லப்படுகின்றன. இலக்கியப் புலத்தின் கண்கண்ட அவதாரம் இலக்கிய கூடுகையே என்று பேசப்படுவது குறித்து மட்டும் கேள்வி கேட்கலாம் என்பதைத் தவிர இதில் எதையும் நாம் கண்டிப்பதற்கில்லை. ஆனால் எந்தச் சந்தையின் கட்டாயங்களுக்கு எதிராக இலக்கிய குடிமக்கள் என்ற கருதுகோள் உருவாக்கப்படுகிறதோ அதற்கு உதவுவதாகவே எழுத்தாளனின் கடமை என்று ஒன்று சொல்லப்படுகிறது, அதை மட்டும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் பதிப்பகங்கள் ஏற்கனவே பெரும்பாலான மார்க்கெட்டிங் மற்றும் விளமபரப் பொறுப்புகளை எழுத்தாளர்கள் பக்கம் தள்ளி விட்டுவிட்டன- இப்போதெல்லாம் எழுத்தாளர்களே தங்கள் படைப்புகளை முன்னிருத்தி ஊர் ஊராகப் போய் பேச வேண்டியிருக்கிறது, சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிருக்கிறது. இதை எல்லாம் இலக்கிய குடிமக்கள் என்ற பெயரில் விரும்பிச் செய்யவும் வேண்டுமா என்ன?
“முன் எப்போதும் இருந்ததை விட இப்போது எழுத்தாளர்கள் தம் படைப்புகளைச் சந்தைப்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் அதற்கான ஊதியமோ பலனோ பெரிய அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படிதான் நம்மைப் “பழக்கப்படுத்துகிறார்கள்”, அவ்வளவுதான்” என்று சொல்கிறார் பெக்கி டச்.
“தனி மனித ஆற்றலை பொதுவாக அனைத்து எழுத்தாளர்களும் பயன்படுத்திக் கொள்ளூம் வகையில்” இலக்கிய குடிமக்கள் என்ற கருதுகோள் பயன்படுகிறது என்றால், பதிப்பாளர்களுக்கும் விளம்பர அமைப்புகளுக்கும் உள்ள மிகப்பெரிய ஆற்றலுக்கு என்ன வேலை? “உரையாடல்களைக் கொண்டு இலக்கியச் சூழலுக்கு வளமூட்டி, அதன் நலனை மேம்படுத்த” இவர்களால் இன்னும் நன்றாகச் செயல்பட முடியும். பதிப்பக யுகம் முடிவுக்கு வந்து விட்டது என்பதைத்தான் இலக்கிய குடிகளாய் நாம் மாற நினைப்பது காட்டுகிறதா? இலக்கிய குடிமை என்பதை தர்க்கப்பூர்வமான நீட்சி, நம்மை நாமே பதிப்பித்துக் கொள்ளவும், நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்ளவும் கொண்டு செல்லப் போகிறதா? இனி இப்படிதான் புத்தகங்கள் விற்பனையாகப் போகிறதா? இலக்கிய குடிமை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இலக்கியச் சூழலை அமைக்க வேண்டும் என்று சொல்பவர்களின் நேர்மையை ஏற்றுக் கொண்டால், இலக்கியச் செயல்பாட்டின் மையம் வணிகமாக இருக்காது- தோழமையும் திறனுமே கூலியாகக் கிடைக்கும், அதைப் பெற்றுக் கொள்வதால் அனைவருக்கும் “கற்றுக் கொள்ளவும், உரையாடலில் பங்கேற்கவும், வளர்ச்சியடையவும்”. வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் தோழமை மட்டும்தான் கிடைக்கும் என்றால் அது உண்மையான வளர்ச்சியாக இருக்குமா? தொழில்நேர்த்தி கூலியாகப் பெறப்படுகிறது என்று சொல்கிறார்கள்- அது விமரிசனத் திறனாகவும் இருக்குமா? ஒரு எழுத்தாளரின் படைப்பு குறித்து எதிர்மறை விமரிசனத்தை முன்வைக்கக்கூடிய நேர்மையான மதிப்பீட்டும் இடமுண்டா? மே எழுதிய புத்தகத்தின் துணைத்தலைப்பு சொல்வது போல் குறிப்பிட்ட ஒரு வகை இலக்கிய வாழ்வை உறுதி செய்வதுதான் இலக்கிய குடிமக்களின் பணி என்றால் எது இலக்கியம் என்ற விவாதத்துக்கு இடமுண்டா? ஏனெனில், சில இலக்கியப் படைப்புகளை நாம் தீவிரமாக அணுகும்போது பிறவற்றைவிட இவை வெற்றி பெற்ற இலக்கிய முயற்சிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பழைய பதிப்புத்துறை அமைப்பு காலத்துக்கு ஒவ்வாததாகப் போன காலத்தில் நம் லட்சியவாதத்தால் உருவாகும் இலக்கியப்புலத்தில் இலக்கிய விமரிசகர்களின் இடம் என்ன? அவர்கள் பலமுறை இரக்கமற்றவர்களாய்ச் சித்தரிக்கப்படுகின்றனர், ஆனால் அவர்களிடம் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது. வெளிப்படையான, கறாரான விமரிசனங்களுக்கு இடமில்லாத இலக்கியச் சூழல் நம்பகத்தனமையற்றது, நேர்மையற்றது.
லோரி மே எழுதியுள்ள புத்தகத்தில் வாசகர்களுக்கு இலக்கியச் சூழலில் குடியுரிமை இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் குடியுரிமை எழுத்தாளர்களால்தான் நிறைவேற்றப்படுகிறது. வாசகர்களைத் தொடர்பு கொள்ள வழி காண வேண்டும் என்றெல்லாம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பதிப்பாளர்களின் ஆதரவு குறைந்துவிட்ட நிலையில் வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதால்தான் இலக்கியக் குடிமை, இலக்கியச் சமூகம் போனற விஷயங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. இதனால்தான் எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும் என்றும் பிறர் படைப்புகளின்பால் கவனமான வாசிப்பை நிகழ்த்தி, வாசிப்பு அனுபவத்தோடு நில்லாமல் சமூக ஊடகங்களில் மதிப்பீடு செய்து பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நூலாசிரியர் பங்கேற்கும் இலக்கிய கூடுகைகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் பல விஷயங்கள் இலக்கியக் குடிகளிடம் எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தாளர்கள் ஊக்கமருந்து உட்கொண்ட வாசகர்களாய் இயங்க வேண்டும்- இவர்களே இலக்கியச் சூழலை உயிர்ப்புள்ளதாய் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கனமான புற கடமைகளை ஏற்றுக்கொள்ளும் விருப்பம் கொண்ட வாசகர்களைக் கண்டடைவது பெரும்பாலான எழுத்தாளர்ககளுக்கு முடியாத காரியம்.
பிடிவாதத்தாலோ அல்லது எழுத்தாளன் வேலை எழுதினால் போதும், கூட்டம் கூட்டுவதல்ல என்ற நேர்மையான நம்பிக்கை காரணமாகவோ இலக்கிய குடியுரிமையை ஏற்க மறுக்கும் எழுத்தாளன் நிலை என்ன? எழுத்தாளனின் முதல் கடமை எழுதுவதுதான் என்று லோரி மே திரும்பத் திரும்ப கூறுகிறார் என்பது உண்மைதான். ஆனால் எழுத்து வாழ்வுக்கு இலக்கிய குடிமை ஒரு அடிப்படைத் தேவை என்று சொன்னால் அதன் பிற கடமைகளை மதிக்காதவர்கள் வெறுப்புக்கு ஆளாவார்கள். இலக்கிய வாழ்வை விளிம்பு நிலையிலேனும் வாழ உதவும் கொஞ்ச நஞ்ச அமைப்புகளையும் தோள் கொடுத்து தூக்கி நிறுத்த வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுத்தோடு நிறுத்திக் கொள்பவர்கள்மீது சுமத்தப்படலாம். இதைவிட முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது- இலக்கியச் சூழலின் விதிகளுக்குப் புறம்பாக இயங்குபவன் நிலை என்ன? மிகச் சிறந்த இலக்கியக் குடிகளும் புரிந்து கொள்ள முடியாத, கொண்டாட முடியாத படைப்புகளை இயற்றுபவன் நிலை என்ன? ஒரு சாமுவேல் பெக்கட்டோ வில்லியம் எஸ் பரோஸ்ஸோ அல்லது பிலிப் லார்கின்னோ இலக்கியக் குடிமைக்குரிய கடமைகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
பெக்கெட்டும் பரோஸ்ஸும் எழுத்யது அப்போதிருந்த வாசகர்களுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாததாக இருந்தது, சிலரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்போதிருந்த இலக்கியச் சூழல் அவர்களுக்கு ஓரளவு ஆதரவு தெரிவித்தாலும் அவர்களது படைப்புகள் நிராகரிக்கப்படுவதும் கண்டுகொள்ளாமல் மறக்கப்படுவதும் உறுதி என்பது போலவே இருந்தது. இன்று இவர்களுக்கு நாம் இடம் தருவோம் என்று நாம் நம்பக்கூடும். ஆனாலும் எந்த ஒரு இலக்கியச் சமூகத்திலும் அதன் உறுப்பினர்கள் நல்ல இலக்கிய குடிமக்களாய் நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்போது, எதை ஆதரிக்க வேண்டும், எது இலக்கியம் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும், என்ற விஷயங்கள் நெறிப்படுத்தப்படுவதைத் தவிர்க்க முடியாது. வளரும் எழுத்தாளர் கூட்டத்துக்கு இணக்கமாய்ச் சங்கமிக்கும் அழைப்பை அலட்சியப்படுத்தும் பொறுப்பற்ற இலக்கிய குடிகள் இருக்கவே செய்வார்கள். இருந்தாலும்கூட அவர்கள் மகத்தான இலக்கியப் படைப்புகளை எழுதவும் செய்வார்கள்,.
oOo
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்காட் எஸ்பொஸிடோ எழுதினார்-
இலக்கிய குடிமை குறித்து டான் கிரீன் சில முக்கியமான கேள்விகள் எழுப்பியிருக்கிறார், அவற்றில் நியாயமானவையும்கூட. இலக்கியச்சூழலில் மதிப்புக்குரிய சிலரில் அவரும் ஒருவர். அவரது அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது என்றாலும் சிலவற்றுக்கு எதிர்வினையாற்ற இயலும்
முதல் விஷயம். இலக்கிய குடிமை என்பது மிக எளிய விஷயம். நீ இருக்கவும் செழிக்கவும் இடம் கொடுக்கும் சூழலில் மாசுபடுத்தாதே. நீ வாழும் இடத்தில் மலம் கழிக்காதே. உன் மக்களுக்கு சில நன்மைகள் செய். நீ இருக்கும் இடம் வரும்போது இருந்ததைவிட நல்ல இடமாக விட்டுப்போ. எதற்கு இல்லை என்றாலும் நீ இருக்கும் இடத்தை அழகான, சுவாரசியமான, ஆரோக்கியமான இடமாக வைத்திருப்பது உனக்கே நல்லது.
இதில் ஒட்டுண்ணிகள் போலிருப்பவர்கள் பற்றி- எந்த ஒரு சமூகத்திலும் சுயநலத்தின் அக்கறை கொண்ட ஒரு சிறுபான்மை எண்ணிகையில் சிலர் இருப்பார்கள். தங்களைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் பிறருக்கு நன்மை செய்வதில் சலிப்பு தட்டாத புனிதர்களும் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். எதிலும் நம்பிக்கை இல்லாதவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொண்டு தவிர்த்து விட முடியும், புனிதர்களுக்கு எப்போதும் இடமுண்டு. நமக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளும்போதே கொஞ்சம் நல்லது செய்யும் கணிசமான எண்ணிக்கையில் உள்ள நாம் என்ன செய்யலாம் என்பதுதான் கேள்வி.
சமூக அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் சமூக ஊடகங்கள் முக்கியமாக இருக்கின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் மாறி விட்டன. எனவே இது போன்ற சில விஷயங்கள் மிகையாகத் தெரிகின்றன-
“கார்ப்பரேட் பதிப்பகங்கள் ஏற்கனவே பெரும்பாலான மார்க்கெட்டிங் மற்றும் விளமபரப் பொறுப்புகளை எழுத்தாளர்கள் பக்கம் தள்ளி விட்டுவிட்டன- இப்போதெல்லாம் எழுத்தாளர்களே தங்கள் படைப்புகளை முன்னிருத்தி ஊர் ஊராகப் போய் பேச வேண்டியிருக்கிறது, சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிருக்கிறது. இதை எல்லாம் இலக்கிய குடிமக்கள் என்ற பெயரில் விரும்பிச் செய்யவும் வேண்டுமா என்ன? ” முன் எப்போதும் இருந்ததை விட இப்போது எழுத்தாளர்கள் தம் படைப்புகளைச் சந்தைப்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் அதற்கான ஊதியமோ பலனோ பெரிய அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படிதான் நம்மைப் “பழக்கப்படுத்துகிறார்கள்”, அவ்வளவுதான்” என்று சொல்கிறார் பெக்கி டச். “
முதலில், “கார்ப்பரேட் பதிப்பகங்கள் ஏற்கனவே பெரும்பாலான மார்க்கெட்டிங் மற்றும் விளமபரப் பொறுப்புகளை எழுத்தாளர்கள் பக்கம் தள்ளி விட்டுவிட்டன-” என்று சொல்வதே தவறு. விளம்பரத் துறையில் இருப்பவர்களது உழைப்பும் தன் புத்தகம் குறித்துப் பேச பயணம் செய்யும் எழுத்தாளன் உழைப்பும் மிகப்பெரிய அளவில் மாறுபட்டவை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது எழுத்தாளன் தனது புத்தகம் சந்தைப்படுத்தப்படுவதில் அதிகம் பங்கேற்க வேண்டியிருக்கிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் விளம்பரத்துறையில் இருப்பவர்கள் செய்யும் எந்த வேலையும் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்போதும் ஊர் பேர் தெரியாத எழுத்தாளர் ஒருவரை அனைவர்க்கும் கொண்டு சேர்க்கும் வேலையை விளம்பர அமைப்புகளே செய்கின்றன. இது இரண்டையும் குழப்பிக் கொள்வது யாருக்கும் நன்மை செய்யாது என்று நினைக்கிறேன்.
சமூக ஊடகம் பற்றி பேசுவதானால், சில எழுத்தாளர்கள் சமூக ஊடகங்களை விரும்புகிறார்கள், கணிசமான பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள். ஆனால் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களை டிவிட்டரில் எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள் என்று பாருங்கள். அவர்களில் பலர் டிவிட்டரில் இருப்பதே சந்தேகம். இந்த எழுத்தாளர்களைப் பின்தொடற்பவர்களின் எண்ணிக்கையை அவர்களது பதிப்பகத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இன்றைய ஊடகம் நிறைய மாறியிருக்கிறது, ஆனால் இன்றும் விளம்பர அமைப்புகளே அவற்றில் பெரும்பங்களிப்பு செய்கின்றன, எழுத்தாளர்கள் அல்ல. அது தவிர டிவிட்டர் ஒரு எழுத்தாளருக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதை நாம் மிகைப்படுத்தக்கூடாது. சிறிது உதவலாம், ஆனால் விற்பனைக்கும் விளம்பரத்துக்கும் அது சர்வரோக நிவாரணியல்ல.
சமூக ஊடகங்களில் அதிகம் பங்கேற்கும் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்துவதற்காக அங்கில்லை. அதைச் செய்தாலும் தப்பில்லை. டிவிட்டரில் பேசிக் கொண்டிருப்பது அவர்களுக்கு பிடித்திருக்கலாம். அது அவர்கள் மனநிலையை பாதிப்பதில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆயிரக்கணக்கானவர்களுடன் நல்ல நல்ல புத்தகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு பிடித்த வேலையாகக்கூட இருக்கலாம்.
ஆனால் பதிப்புத்துறை அனுபவத்தில், “முன் எப்போதும் இருந்ததை விட இப்போது எழுத்தாளர்கள் தம் படைப்புகளைச் சந்தைப்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் அதற்கான ஊதியமோ பலனோ பெரிய அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்படித்தான் நம்மைப் “பழக்கப்படுத்துகிறார்கள்”, அவ்வளவுதான்” என்று பெக்கி டச்.சொல்வதில் கொஞ்சமும் உண்மையில்லை. நிஜ உலகம் இப்படியில்லை. சமூக ஊடகங்களைக் கொண்டு இலக்கியச் சூழலில் பங்கேற்பவர்கள் ஊடகங்களை விரும்புகிறார்கள், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பதிப்பாளர் கட்டாயப்படுத்தி சமூக ஊடகம் வந்திருக்கிறார் என்பது அது அனைத்தையும்விட கடைசி காரணமாகவே இருக்கும்.
டான் கிரீன் இன்னும் சில முக்கியமான கேள்விகள் கேட்கிறார்-
“இலக்கிய குடிமை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இலக்கியச் சூழலை அமைக்க வேண்டும் என்று சொல்பவர்களின் நேர்மையை ஏற்றுக் கொண்டால், இலக்கியச் செயல்பாட்டின் மையம் வணிகமாக இருக்காது- தோழமையும் திறனுமே கூலியாகக் கிடைக்கும், அதைப் பெற்றுக் கொள்வதால் அனைவருக்கும் “கற்றுக் கொள்ளவும், உரையாடலில் பங்கேற்கவும், வளர்ச்சியடையவும்”. வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால் தோழமை மட்டும்தான் கிடைக்கும் என்றால் அது உண்மையான வளர்ச்சியாக இருக்குமா? தொழில்நேர்த்தி கூலியாகப் பெறப்படுகிறது என்று சொல்கிறார்கள்- அது விமரிசனத் திறனாகவும் இருக்குமா? ஒரு எழுத்தாளரின் படைப்பு குறித்து எதிர்மறை விமரிசனத்தை முன்வைக்கக்கூடிய நேர்மையான மதிப்பீட்டும் இடமுண்டா?”
இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்பதாகவேய் இருக்கும். முன்னைவிட இப்போது மிகப்பெரிய எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட பெரும் பதிப்பகங்கள் சிறு பிரசுரகங்களைக் கண்டு கொள்கிறார்கள், அவர்களுக்கு நல்ல கவனமும் கிட்டுகிறது. இதற்கு காரணம், இணையத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிறுபதிப்பகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்ததுதான். அங்குள்ள பலர் பெரிய பதிப்பகங்களில் நுழைந்திருக்கின்றனர், தமது நண்பர்களையும் அங்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். என்னைப் போலவே ஒன்றுக்கும் உதவாத ப்ளாக் எழுதிக் கொண்டிருந்த ஊர் பேர் தெரியாதவர்கள் பலர் இன்னும் அதிகாரமும் கௌரவமும் உள்ள பதவிகளில் இருக்கின்றனர். இன்னும் அவர்கள் தமது பழைய நண்பர்களை மறக்கவில்லை, தாம் எந்தச் சூழலில் எழுதத் துவங்கினார்களோ அதன் உறுப்பினர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். இப்போதெல்லாம் எப்படிப்பட்ட புத்தகங்களும் எழுத்தாளர்களும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர், கவனம் பெறுகின்றனர் என்பதில் இதெல்லாம் பெரிய அளவில் தாக்கம் செலுத்துகின்றன..
நேர்மையைப் பேசுவதானால்- ஆம், இதில் நிறைய ஏமாற்று வேலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தலைப்பைத் தாண்டி வாசிக்காத கட்டுரைகளின் சுட்டிகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்கின்றனர், சில சமயம் தாமே படிக்காத புத்தகங்களை விளம்பரப்படுத்துகின்றனர். இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. இணைய ஊடகம் பட்டியலிடத் தூண்டுவதாலும், நல்ல குடிமகனகாக இருக்க வேண்டும் என்ற உந்துததாலும் அவர்கள் இதை ஓரளவுக்குச் செய்யலாம். இது சரியில்லை என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்காது. ஆனால் ஒன்று- இணையத்துக்கு முன்னரே இப்படிதான் இருந்தோம், இணையம் இதை மிகைப்படுத்தி பொதுவெளிக்குக் கொண்டு வந்திருக்கிறது. மற்றொன்று, இதுபோன்ற பம்மாத்து வேலைகளுக்கு இடையில் உண்மையான விமரிசனத்தையும் விவாதத்தையும் பார்க்கவும் முடிகிறது.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. நீங்கள் ஒரு சிறுபிரசுரம் துவங்கி அதைத் தொடர்ந்து நடத்த விரும்பினால், உங்களுக்கு உண்மை பேசுபவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் நீங்கள் எப்போதோ இழுத்து மூடியிருக்க வேண்டிய நிலை வந்திருக்கும். அதேபோல், நீங்கள் உண்மையாகவே நல்ல எழுத்தாளராக விரும்பினால், உங்கள் படைப்பு குறித்த நேர்மையான விமரிசனங்களை எதிர்கொண்டாக வேண்டும். அதைச் செய்யத் தவறினால் உங்கள் எழுத்து மோசமடையும், பேஸ்புக்கில் என்ன யார் என்ன சொன்னாலும் சரி, உண்மையில் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள்.
உண்மையில் நானிருக்கும் இலக்கியச் சூழலில் நேர்மையான எதிர்வினையைக் கேட்டுப் பெறுபவர்களை அதிக அளவில் பார்க்க முடிகிறது. மேம்போக்கான புகழ்ச்சியை குவித்து வைத்துக் கொள்வதைவிட தம் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலோட்டமான புகழ்ச்சி சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுத் தரலாம், ஆனால் ஒரு வாரத்துக்குப்பின் எல்லாரும் மறந்து விடுவார்களே தவிர அதனால் எல்லாம் புத்தகம் விற்காது. உண்மையில் புத்தக விற்பனையில் உதவுவது ஆழமான, நீடித்த உரையாடலே- மாதக்கணக்காக, பல ஆண்டுகளுக்கு வாய்வழிச் செய்தி பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும். புத்தகம் பற்றிய உரையாடல்கள் ஆழமாக இருப்பதால் அதை வாசிக்க வேண்டியது அவசியம் என்ற உணர்வு ஏற்படுவதுதான் புத்தகங்களை விற்கச் செய்கிறது. தேசிய எல்லைகளைக் கடந்து இதைப் பல வழிகளில் செய்ய சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இப்படி ஒரு நிலையை நாம் நினைத்தே பார்த்திருக்க முடியாது.
டான் கிரீன் எழுப்பும் கேள்விகள் அத்தனைக்கும் என்னிடம் பதில் கிடையாது. ஆனால் இலக்கிய புரட்சியாளன் என்ற பிம்பம் வெறும் பிம்பம்தான் என்று நினைக்கிறேன். அது சில சமயம் கவனமாக வளர்த்துக் கொண்ட பிம்பமாகவும் இருக்கிறது. சாமுவேல் பெக்கெட் போன்ற ஒரு மேதையும்கூட அமெரிக்காவில் அறியப்படாமல்தான் இருந்தார். அவரது பதிப்பாளர்தான் அவரை எப்படி சந்தைப்படுத்துவது என்பதைக் கண்டறிய வேண்டியிருந்தது (அவரும் அந்த அளவுக்கு இலக்கியச் சூழலுக்கு வெளியே இருந்தவரல்ல. அதுவும் ஒரு பிம்பம்தான்).. யாரோடும் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பாத தாமஸ் பெர்ன்ஹார்ட் போன்ற ஒருவரும்கூட மனிதர்கள் ஒருவரோடொருவர் உறவாட வேண்டியதன் அவசியத்தை அறிந்திருந்தார். ஆம், எழுத்தாளர்கள் தனிமைவிரும்பிகள்தான். இலக்கியச் சூழலின் சில பகுதிகள் எழுத்தாளர்களுக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ஆரோக்கியமான அவநம்பிக்கை கெட்ட விஷயமல்ல- அதே போல், உங்களைப் புரிந்து கொள்பவர்களோடு உரையாடி அவர்களுடன் உறவு கொண்டாடுவதும் கெட்ட விஷயமல்ல. எல்லாவற்றையும்விட எது முக்கியம் என்று யோசித்தால், இலக்கியச் சமூகம் என்று சொன்னால் தொண்ணூறு சதவிகிதம் எனக்கு இந்த உறவாடல்தான் அர்த்தமாகிறது.