அச்சமற்ற, சின்ன டோஸ்டர்

fridge_brave_Little_Toaster_Cory_Doctorow

ஒரு நாள்,  கனவான் டூஸ்ஸான்ட் வீடு திரும்புகையில், 300 யூரோ மதிப்புள்ள மளிகை சாமான்கள் அவருடைய வீட்டு வாசலில் இருக்கக் கண்டார்.  எனவே மளிகைக் கடை மிஜ் ரூஸோவை (தொலைபேசி மூலம்) கூப்பிட்டுக் கேட்டார்,’எதற்கு இத்தனை சாப்பாட்டுப் பொருட்களை எனக்கு அனுப்பினீர்கள்? என் ஃப்ரிட்ஜில் ஏற்கனவே சுவையான உணவுப் பொருட்கள் நிரம்பியுள்ளன. இவை எனக்கு வேண்டாதவை. அது தவிர, என்னால் இதற்குப் பணம் கட்ட முடியாது.”
ஆனால் மிஜ் ரூஸோவோ, டூஸ்ஸான்ட்தான் உணவுப் பொருட்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பதாகச் சொன்னார். அவருடைய ஃப்ரிட்ஜ் ஒரு ஜாபிதாவை அனுப்பி இருந்தது, அவளிடம் கையெழுத்திட்ட உத்தரவு இருப்பதாகத் தெரிவித்தாள்.
கனன்று எழுந்த டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது.  முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள்.
“எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார். அதுவோ சிறிதும் அவரை லட்சியம் செய்யாமல் ரீங்கரித்தது.
“எல்லாம் கெட்டுப் போயிருந்தது.” என்று சொன்னது.
 
ஆனால் சாப்பாட்டுப் பொருட்கள் எல்லாம் கெட்டுப் போயிருக்கவில்லை. கனவான் டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜின் நலம் சோதிப்புப் பட்டியலையும், அதன் இயக்கம் பற்றிய விவரப் பட்டியலையும் கண்ணை இடுக்கிக் கொண்டு முழுக்கச் சோதித்தார், சீக்கிரமே அவருக்கு விடை கிட்டியது. அந்த சக்தி தரும் பானம்தான் காரணம், வேறென்ன?
“இழு, இழு, படகுத் துடுப்பை இழு,”  என அது பாடியது. “ஓடையின் ஓட்டத்தோடுமெதுவாய் இழு, மகிழ்வோடு, மகிழ்வோடு, மகிழ்வோடு நான் எதிலீன் வாயுவைக் கசிய விடுவேன்,”  என்று பாடியது. கனவான் டூஸ்ஸான்ட் சந்தேகத்தோடு அந்தப் பையை முகர்ந்து பார்த்தார்.
“இல்லை, நீ அதைச் செய்யவில்லை,” என்றார் அவர். அந்தப் பையின்  முகப்புச்சீட்டில் அந்தப் பானத்தின் பெயர், அச்சு பிச்சு என்று குறிக்கப்பட்டிருந்தது, அந்த சீட்டு மேலும் பெரிதாக உறுதியளித்தது, எஸ்ப்ரஸ்ஸோவை விட ஒரு ட்ரில்லியன் மடங்கு கூடுதலான சக்தி வாய்ந்தது!!!! ஒன்று11!  கனவான் டூஸ்ஸான்டுக்குக் கொஞ்சம் சந்தேகம் துவங்கியது, இந்தப் பானப் பை ஏதோ பொருட்களின் இணையம் தொடர்பான ஒரு முட்டாள்தனமான சேட்டையோ? அவர் அது போன்றவற்றை முற்றிலும் வெறுப்பவர்.
அவர் அந்த பானப்பையை குப்பைத் தொட்டியில் வீசினார், புது சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து அடுக்கினார்.
 
அடுத்த நாள், கனவான் டூஸ்ஸான்ட் வீட்டுக்குத் திரும்பினார், கழுவும் தொட்டிக்கு அடியில் வைத்த குப்பை நிரம்பி வழிந்த பை வைத்தபடியே இருந்தது.
குப்பைத் தொட்டி அந்தக் குப்பையை வீசி ஆடும் கதவு வழியே வெளியில் இருந்த குழாயில் போட்டு, சுத்தம் செய்யவில்லை. அந்தக் குழாய் 104 அடுக்குகளுக்குக் கீழே தரைவெளியில் இருந்த சேமிப்புக் கிடங்கில் போய்க் கொட்டி இருக்கும்.
“நீ ஏன் உன்னைக் காலி செய்து கொள்ளவில்லை?” அவர் கேட்டார். குப்பைத் தொட்டி அவரிடம் சொன்னது, நச்சுப் பொருட்களை அவர்தான் தனியாகப் பிரித்தெடுத்து வைக்க வேண்டும். “நச்சுப் பொருட்களா, இதில் அப்படி  என்ன இருக்கிறது?”
அதனால் குப்பைத் தொட்டியிலிருந்து எல்லாவற்றையும் வெளியே எடுத்து, ஒவ்வொரு பொருளாய்ப் பிரித்தார். எது இந்தத் தொல்லைக்குக் காரணம் என்று நீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்.
“ரொம்ப வாயாடி போலத் தெரிந்தால் மன்னியுங்கள், நான் குளறுபடியுமில்லை, ஆனால் நான் ஒரு பாதரச மின்கலம்! “அச்சு பிச்சு வின் பாட்டு கனவான் டூஸ்ஸான்டின் பொறுமையை ரொம்ப சோதித்தது.
“இல்லை, நீ அதில்லை,” கனவான் டூஸ்ஸான்ட் சொன்னார்.
கனவான் டூஸ்ஸான்ட் நுண்ணலை (மைக்ரோவேவ்) அடுப்பு வழியே முயன்றார். எத்தனை தந்திரமான நசுக்கும் பையும் அணுக்கதிர் வீச்சைத் தாங்க முடியாதில்லையா? ஆனால் மைக்ரோவேவ் அடுப்பு இயங்க மறுத்தது.
“நான் பானமுமில்லை, சாப்பாடும் இல்லை.” அச்சு பிச்சு பாடியது. “நானொரு உக்கிரமான இரும்புக் கட்டி!”
பாத்திரம் கழுவும் எந்திரம் அதைக் கழுவ மறுத்தது. (“நான் அரிக்கவோ, உறுத்தவோ முயலவில்லை. ஆனால் நான் பாத்திரம் கழுவும் எந்திரத்துக்கு ஆபத்துதான்!” ) கழிப்புத் தொட்டி அதை நீரை வீசி அடித்து வெளியேற்ற மறுத்தது. (“நான் சதுப்பைச் சேர்ந்தவன் இல்லை, ஏனெனில் நான் அடைப்பாவேன்.”) ஜன்னல்கள் தமது பாதுகாப்புத் திரையை விலக்க மறுத்தன, கீழே போட்டு விடலாமென்றால் அதுவும் முடியவில்லை. ஆனால் அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
”உன்னை நான் வெறுக்கிறேன்,” அச்சு பிச்சுவிடம் கனவான் டூஸ்ஸான்ட் சொன்னார், பிறகு அதைத் தன் கோட்டுப் பையில் திணித்துக் கொண்டார். வேலைக்குப் போகிற வழியில் ஏதாவது குப்பைத் தொட்டியில் எறியலாம்.
678 ஆம் தெருவில் கனவான் டூஸ்ஸான்டை அவர்கள் கைது செய்தார்கள். நடைமேடையில் அவருக்காகக் காத்திருந்தார்கள், ரயிலிலிருந்து இறங்கி அவர் காலெடுத்து வைத்ததும் கைவிலங்கு பூட்டி விட்டார்கள்.  மொத்த ரயில் நிலையத்தையும் காலி செய்திருந்தார்கள், காவல் துறையினர் எல்லாம் உயிரினப்பேரிடர் தடுப்பு உடைகளைப் பூரணமாக அணிந்திருந்தார்கள். எந்திரத் துப்பாக்கிகளைக் கூட ஒட்டி இறுக்கிய மேலுறைகளால் மூடி இருந்தார்கள்.
“நீ முகமூடி அணிவது மேல், தலைக்குமொரு குல்லாய் அணிவது மேல், ஏனெனில் நானொரு பயங்கரம், சாவைக்கொணரும் உயிரினக் கொல்லி,” என்று அச்சு பிச்சு பாடியது.
அடுத்த நாள் அவர்கள் கனவான் டூஸ்ஸான்ட்டை விடுவித்த போது, அச்சு பிச்சுவை வீட்டுக்கு எடுத்துப் போகும்படி வற்புறுத்தினார்கள். அவர்களுக்கு அச்சு பிச்சுவை வைத்திருந்த ஏராளமானோரை அப்படி விசாரித்து அனுப்ப வேண்டிய வேலைகள் காத்திருந்தன.
அவசரம் அவசரமாக அவருடைய பழைய தட்டு முட்டு சாமான்களை எல்லாம் போட்டு வைத்திருந்த கன்டெய்னரை அனுப்பிக் கொடுக்க அந்த சேமிப்புக் கிட்டங்கி நிறுவனம் கேட்ட அதிகப்படி கட்டணத்தை கனவான் டூஸ்ஸான்ட்  கொடுத்து விட்டார்.  பாலைவனத்துக்கு அடியில் இருந்த அந்த பிரும்மாண்டமான கிடங்கிலிருந்து அதை ஒரு மின் தூக்கி எந்திரத்தால் உயர்த்தி எடுத்து மேலே இருந்த ஜிப்லைன் கம்பியில் அதைப் பொருத்தி மிக வேகமாக, நேராக கனவான் டூஸ்ஸான்டின் கட்டிடத்தில் சரக்குகளை இறக்கும் இடத்துக்கு அனுப்பி விட்டார்கள். அவர் பழைய, புத்தி மட்டாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு, தன் மூக்குக் கண்ணாடிகளில் விளக்குகளைப் பொருத்திக் கொண்டு அந்தக் கன்டெய்னர் பெட்டியைப் பிரித்துப் பார்க்கத் துவங்கினார்.
அந்தப் பெட்டியில் இருந்தவை பெரும்பாலும் புத்தியற்றவை.அவருடைய வாழ்க்கை பூராவும் முட்டாள் பொருட்களைத் தூக்கி எறிந்து கொண்டிருந்திருக்கிறார், ஏனென்றால் புத்தி சாதுரியமுள்ள பொருட்களைக் கையாள்வது எத்தனையோ சுலபமாகவிருந்தது. ஆனால் அவருடைய தாத்தா இறந்து போனாரா, ஓய்வு பெற்றவர்களின் காப்புக் கூடத்தில் அவரிருந்த தடுப்புப் பிரிவைச் சுத்தம் செய்து தாத்தாவின் உடைமைகளை அனுப்பி வைத்து விட்டார்கள். கனவான் டூஸ்ஸான்ட் அவற்றை எல்லாம் அப்படியே ஒரு கன்டெய்னர் சரக்குப் பெட்டியில் போட்டு பாலைவனத்து சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி விட்டிருந்தார்.
அவ்வப்போது, தனக்குச் சொத்தாக வந்த அந்த எட்டு கன சதுர அடிப் பெட்டியளவு நிரம்பிய முட்டாள்தனத்தைப் பற்றி யோசித்து, செயற்கையான ஒரு பெருமூச்சை  விட்டிருக்கிறார். தன் பாட்டனாரை அவர் நேசித்தார் என்பது நிஜம், ஆனால் தாத்தா தன் வாழ்வின் இறுதி நாட்களில் தனக்கு இருந்த ஏராளமான நேரத்தைப் பயன்படுத்தி தன்னிடம் இருந்த தண்டமான பொருட்களை ஒதுக்கி மாற்றாக, வெள்ளமாய்ப் பெருகும் பொருட்களின் ஓட்டத்துடன்  நயமாக மறுபடிப் பொருந்தக்கூடியவற்றை வாங்கி இருக்கலாம் என்று யோசிக்காமல் இல்லை.
அதுதான் எத்தனை பொறுப்பில்லாத செயல்?
அவர் அந்த ரொட்டி வறுப்பானைச் (டோஸ்டரை) செருகி மின் இணைப்பு கொடுத்ததும், வீடு உற்சாகமாக டோஸ்டரை வரவேற்றது. ஆனால் டோஸ்டர் ஏதும் பதிலுக்குச் சொல்லவில்லை. அது புத்தியற்றது. ரொட்டித் துண்டுகளைச் செருக அதிலிருந்த துளைப் பிரிவுகளில் கரிப் பிசின் அடையாக இருந்தது, கீழ்ப்பகுதியில் சரியாகப் பொருந்தாத தட்டிலிருந்து ரொட்டித் துகள்கள் கீழெல்லாம் சிதறின. அதை வடிவமைத்ததும், தயாரித்ததும் குகைவாசிகள் போலும், பொருட்களின் இணையத்தில் பொருந்தி அமைந்த சூழலின் வசதிகள் பற்றி அவர்கள் சிறிதும் யோசித்ததாகத் தெரியவில்லை.
அது முட்டாள் சாதனம்தான், ஆனால் தைரியமானது. கனவான் டூஸ்ஸான்ட் அதை என்ன செய்யச் சொன்னாலும் செய்யும்.
“இங்கே சூடும், பிசுக்கும் எகிறுகிறது, நானென்ன விளையாடுகிறேனா? இங்கிருந்து என்னை எடுக்கிறாயா,இல்லை வெடித்து நெருப்பாகட்டுமா?” அச்சு பிச்சு உரக்கப் பாடியது, ஆனால் டோஸ்டர் அதைச் சட்டையே செய்யவில்லை.
“உன் வீட்டுக்கு சேதம் விளைக்க நான் எண்ணவில்லை, ஆனால் என்னை வெளியே விடவில்லை என்றால் நான் வெடிக்கப் போகிறேன்!” புத்தியுள்ள சாதனங்களெல்லாம் உதறலெடுத்து ஒன்றோடொன்று பேசிப் படபடக்கத் துவங்கின. ஆனால் கனவான் டூஸ்ஸான்ட் மறுபடி விசையை அழுத்தியபோது, தைரியசாலியான டோஸ்டர் ஏதுமே பேசவில்லை.
“ஓடிப் போய் உன் புட்டத்தைக் காப்பாற்றிக் கொள், இதோ நான் விஷ வாயுவைக் கசிய விடப் போகிறேன்!” அச்சு பிச்சுவின் குரலில் பீதி தெரிந்தது. கனவான் டூஸ்ஸான்ட் புன்னகைத்து, மறுபடி டோஸ்டரின் விசையை அழுத்தினார்.
அழுத்திக் கொண்டிருக்கையில் அவர் வீட்டின் நலனைக் கண்காணிக்கும் ஏவல் கட்டளைத் திட்டத்தை ஒரு முறை கவனிக்க நினைத்தார். நல்ல நேரத்தில்தான் அப்படி யோசித்திருக்கிறார்! குறைந்த பட்ச உறுப்பினர் வாக்குகளைக் கவனிக்கும் அதன் மானிகள், சிவப்புக் கோட்டை எட்டத் துவங்கி இருந்தன, அவை சாதனங்களின் கலக்கம் நிரம்பிய படபடப்புகளைக் கேட்டு விட்டிருந்தன. கனவான் டூஸ்ஸான்ட் ஃப்ரிட்ஜின் இணைப்பைக் கழற்றி விட்டார். அப்புறம் மைக்ரோவேவ் அடுப்பின் இணைப்பை, பிறகு பாத்திரம் கழுவும் எந்திரத்தின் இணைப்பை…
குக்கரும், குப்பைத் தொட்டியும் கூட இணையத்தில் இணைந்திருந்தன, ஆனால் அவை குறைந்த பட்ச வாக்குகளை எட்டவில்லை.
தீயணைப்பு இலாக்காவினர் உருகிப் போன டோஸ்டரை எடுத்துப் போய் விட்டார்கள், ஆனால் பழி வாங்கும் நோக்கத்துடன், தங்கள் கோடரிகளால் கனவான் டூஸ்ஸான்டின் அடுக்ககச் சுவர்களில் பெரிய ஓட்டைகளைப் போட்டு விட்டுப் போனார்கள். “தணல் கங்குகள் இருக்கின்றனவா என்று சோதிக்கிறோம், வேறென்னவாம்?” என்றார்கள்.  அவர்கள் ரொம்பவும் வெறுப்பாகிப் போயிருந்தார்கள் என்று அவருக்குத் தெரிந்திருந்தது, ஏனெனில் தன்னளவிலேயே மின்சக்தி கொண்டதும், கணிப்பான் திறன்களும், மானிகளும், ஒலிபரப்பும் சாதனங்களும் கொண்டதுமான ஒரு பையை ஒரு புராதன டோஸ்டரில் செருகி, அதன் விசையை, மொத்த 104 ஆவது அடுக்கிலும் எண்ணெய் வாடையோடு, நச்சுப் புகை நிரம்பும் வரையில், அழுத்திக் கொண்டிருப்பதை நியாயப்படுத்த ஒரு வாதமும் தன்னிடம் இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.
கனவான் டூஸ்ஸான்டின் அண்டை அடுக்ககத்தாரும் அது பற்றி எரிச்சலடையாமல் இல்லை.
ஆனால் கனவான் டூஸ்ஸான்ட் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை. அச்சு பிச்சு கதறி அழுது கெஞ்சியதையும்,  அதன் விளிம்புகள் வளைந்து சுருங்கி, கருகத் துவங்கியதும் தன் உயிருக்காக மன்றாடியதையும் கேட்டது ஒன்று போதுமானதாக இருந்தது அவருக்கு. மீதியெல்லாம் தக்க விலைதான் அதற்கு.
அவர் கடும்பிடிவாதமாக வாதிட்டுப் பார்த்தார், ஆனால் தீயணைப்புக்காரர்கள் அந்த டோஸ்டரை அவர் வைத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை.

author_cory_doctorowதமிழில்: மைத்ரேயன் / ஆகஸ்டு 2015
இந்தக் கதை டெக்னாலஜி ரெவ்யு பதிப்பகம், 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் வெளியிட்ட, ‘த பெஸ்ட் நியூ ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் ‘  என்ற தலைப்பிட்ட புத்தகத்தில் பிரசுரமானது. இந்தப் பதிப்பகம் அதன் பிறகு இன்னும் இரண்டு தொகுப்புகளை வேறு வருடங்களில் பிரசுரித்திருக்கிறது. 2015 ஆண்டில் ஒரு புத்தகம் வெளியாகி இருக்கிறது. டெக்னாலஜி ரெவ்யு பத்திரிகை ஒரு மாதாந்திரப் பத்திரிகை, அமெரிக்காவில்,மாஸச்சூஸேட்ஸ் மாநிலத்தில் உள்ள  கேம்பிரிட்ஜ் நகரிலிருந்து வெளிவருகிறது. அங்கு உள்ள எம் ஐ டி என்று அழைக்கப்படும் பல்கலையின் ஒரு பிரசுரம் இந்தப் பத்திரிகை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.