“ஏன் பிர்ஜூவின் அம்மா! நாட்டியம் பார்க்கப் போக வேண்டாமா?”
வீட்டு முற்றத்தில் பிர்ஜூவின் அம்மா சீனிக்கிழங்கை வேக வைத்துக் கொண்டிருந்தாள். அவள் மனமும் புகைந்து கொண்டிருந்தது. ஏழு வயதுப் பையன் சீனிக்கிழங்குக்காக அடம்பிடித்து, அம்மாவிடம் அடி வாங்கி, முற்றத்தில் அழுது புரண்டு உடம்பெல்லாம் புழுதியாக்கிக் கொண்டிருந்தான். “சம்பியா தலையிலும் சனியன்தான் புடிச்சிருக்கு- முற்றத்திலே பாதிக்கு வெய்யில் இருக்கறப்பவே வெல்லம் வாங்கியார செட்டியார் கடைக்குப் போச்சு; இதோ விளக்கு வெக்கற நேரமாயிருச்சு, இன்னும் காணலே, வரட்டும் அந்தச் சிறுக்கி, சொல்றேன்.” ஆட்டுக் கிடாயின் உடம்பு பூரா ஈ மொய்த்துக்கொண்டு உபத்திரவம் செய்தது. அதனால் பாவம் ஆட்டுக்கிடாய் அடிக்கொருமுறை எம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. பிர்ஜுவின் அம்மா ஆட்டுக்கிடா மேல் தன் கோபத்தைக் காட்ட ஒரு காரணம் கண்டு பிடித்தாள். “கொல்லையிலே பூத்திருந்ததே மிளகாய்ச்செடி! இந்தச் சனியன்தான் அதை நாஸ்தா பண்ணியிருக்கும!” ஆட்டின்மேல் எறிவதற்காக அவள் களிமண் உருண்டையைக் கையில் எடுத்தாள். அப்போதுதான் பக்கத்து வீட்டுக் கிழவி மக்னி அத்தை குரல் கொடுத்தாள்- “ ஏன் பிர்ஜூவின் அம்மா! நாட்டியம் பார்க்கப் போக வேண்டாமா?”
“பிர்ஜூவின் அம்மாவுக்கு முன்னாலே மூக்குக் கயிறும் பின்னாலே கட்டற கயிறும் இல்லாட்டிப்போனாதானே, அத்தே!”
கோபத்தில் தோய்ந்த கூரான சொல்லம்பு அத்தையின் உடம்பில் குத்தி உறைத்தது. பிர்ஜுவின் அம்மா ஆட்டை அடிப்பதற்காக எடுத்த மண்ணாங்கட்டியை பக்கத்திலேயே எறிந்துவிட்டாள்- “பாவம் ஆட்டுக் கிடாயை ஈ மொய்ச்சுக் கொல்லுது- ஐயோ பாவம்!”
படுத்துக் கிடந்த பிர்ஜூ ஆட்டுக்கிடாயைப் பிரம்பால் அடித்தான். பிர்ஜூவின் அம்மாவின் கோபம் அவன் பக்கம் திரும்பியது. எழுந்து போய் அதே பிரம்பினால் அவனை நையப் புடைத்து அவன் தலையில் ஏறி இருக்கும் பேயை விரட்டலாமா என்று எண்ணினாள். ஆனால், இதற்குள்ளாக வேப்பமரத்தடியிலே தண்ணீர் எடுக்க வந்த பெண்களின் பேச்சரவம் கேட்டு பிர்ஜூவை அடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவனைப் பார்த்துச் சொன்னாள்-“இரு, இரு! உங்கப்பன் உன்னைக் கைமிஞ்ச வச்சுட்டாரு, யாரைப் பார்த்தாலும் கைமிஞ்சறே! இரு பார்த்துக்குறேன்!”
வேப்ப மரத்தடியிலுள்ள கிணற்றில் இடுப்பை வளைத்து குடத்தைப் போட்டு தண்ணீர் எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு மிடுக்காகச் செல்லும் இளம் பெண்களிடம் மக்னி அத்தைக்கிழவி, பிர்ஜுவின் அம்மா எகத்தாளமாய்ச் சொன்ன வார்த்தையைச் சொல்லிக் காட்டி நியாயம் கேட்கலானாள் – “பாருங்கம்மா இந்த பிர்ஜுவின் அம்மாவை! நாலுமணங்கு சணல் வித்துப் பணம் வந்துடிச்சில்லே, தரையிலே கால் பாவ மாட்டேங்குது. நீங்களே சொல்லுங்க, எட்டுநாள் முன்னாலே இருந்து தெருத்தெருவா அவதானே பீத்திகிட்டுத் திரிஞ்சா, ஆமா, இந்தத் தபா வில்வண்டியிலே ஏத்தி பலராம்புர் திருவிழாவுக்கு அழைச்சுட்டுப் போறேன்னு பிர்ஜூவின் அப்பா சொல்லுறாங்க. காளை நம்பகிட்ட இருக்குதே யார்கிட்ட கேட்டாலும் வண்டி இரவல் கிடைக்கும் அப்படீன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சுதுல்லே… அதனாலதான் நான் ஞாபகப்படுத்தப் போனேன். திருவிழா பார்க்கப் போறவங்க சீவிச் சிங்காரிச்சு புறப்படறாங்க, திண்டி- தீனி எல்லாம் தயார் பண்ணறாங்க, நீ கிளம்பலியான்னு கேக்கப்போனேன்…என் நாக்கிலே தீயை வைக்க, நான் ஏன் கேக்கப் போனேன்? கேட்டீங்களா, பிர்ஜூவின் அம்மா என்ன பதில் சொன்னான்னு!”
மக்னி அத்தை தன் பொக்கை வாயைத் திறந்து உதடுகளை ஒரு பக்கமாக வலித்துக் கொண்டு நீட்டி முழக்கிக் கூறினாள்- “ஏ-மா-ம்! பி-ர்ர்-ஜு அம்மா முன்னா-ல மூக்குக் கயிறும் பின்-னா-லே கட்டற கயிறும் இல்லாட்டித் – தா-னே – வேணு-ம்!”
ஜங்கியின் மருமகள் பிர்ஜுவின் அம்மாவுக்குப் பயப்பட மாட்டாள். அவள் தொண்டையைச் சற்று அதிகமாகவே திறந்து உரக்கப் பதில் சொன்னாள்- “அத்தே-! நல்ல கரைவெச்சு பூப்போட்ட சேலையைக் கட்டிகிட்டு சர்வே செட்டில்மெண்ட் ஆபீசர் ஐயா வூட்டுக்குப் போயி வழுதலங்காயைக் காணிக்கை வச்சிருந்தேன்னா நீகூட ரெண்டு பீகாநிலம் பட்டா எழுதி வாங்கியிருப்பே! பொறவு உன் வூட்லேயும் பத்து மணங்கு சணல் கிடக்கும். ஒரு ஜதை காளைமாடு வாங்கியிருப்பே. அப்ப முன்னால மூக்கணாங்கயிறும், பின்னாலே கட்டற கயிறும் தொங்கிக்கிட்டு ஆடுமில்லே!”
ஜங்கியின் மருமகள் வாயாடி. ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் குடிசை. ‘கண்ணாலம்’ முடிஞ்சு மூணுமாசம்தான் ஆச்சு, புது மருமகளாக வந்திருக்கிறாள். இதற்குள் ஊரிலே உள்ள பொல்லாத மாமியார்கள் அத்தனை பேருடைய மூக்கிலும் ஒரு முறையாவது விரலை விட்டு ஆட்டியிருந்தாள். அவளுடைய மாமனார் ஜங்கி பலமுறை சிறைக்குப் போய் வந்த கேடி, சி வகுப்பு ஜெயில் புள்ளி. அவள் புருசன் ரங்கியோ, ஊரிலேயே பெயர் பெற்ற சிலம்புக்காரன். அதனால் தினவெடுத்த மாடு எங்கே பார்த்தாலும் கொம்பைக் கொண்டு மோதுமே, அதுபோல எப்போதும் சண்டைக்கு அலைவாள் ஜங்கியின் மருமகள்.
பிர்ஜுவின் அம்மாவின் முற்றத்தில் ஜங்கி மருமகள் வாய்கிழியப் பேசிய பேச்சு கவணையிலிருந்து விடுபட்ட கல் போல வந்து விழுந்தது. பிர்ஜுவின் அம்மா அதிரடியாக ஒரு சொல்லம்பைத் தீட்டித் தயார் செய்தாள். ஆனால் பிரயோகம் செய்யவில்லை- “சாணத்தின் மேல் கல்லெறிந்தால் நம் மேலேதானே தெறிக்கும்!”
நாவில் வந்த எரிச்சலைத் தொண்டைக்குள் விழுங்கியவாறு பிர்ஜுவின் அம்மா தன்னுடைய பெண்ணைத் திட்டுவதுபோல உரக்கக் குரல் கொடுத்தாள் – “அடி சம்பியா- ஆ ஆ- திரும்பி வா நீ! இன்னிக்கு வச்சிருக்கேன் உன் தலையைத் திருகி அடுப்பிலே வெக்கப் போறேன். நாளுக்கு நாள் நடத்தை கெட்டுப் போறே. கிராமத்திலே இப்ப சினிமாப்பாட்டுக் கத்துகிட்டு இருப்பே – “பாஜே ந முரளியா’ அவளை மாதிரி ஓடுகாலியாகப் போறே. அடீ சண்டாளி சம்பியா- ஆ ஆ-!”
ஜங்கியின் மருமகள் பிர்ஜூவின் அம்மாவின் பேச்சை சுவாரசியமாக ரசித்தவாறு குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு மற்ற பெண்களிடம் இரைந்து பேசினாள்- “வா அக்கா! நம்ம போகலாம்! இந்தப் பேட்டை ஹாட்டின் ராணி (சீட்டுக்கட்டில் ஒரு வகைச் சீட்டு) வாழறா! தெரியாதா, இவ வூட்லே பட்டப்பகல்லேயும் நடுராவுக்கும் எல்ட்ரிக் பல்பு தகதகணு ஜொலிக்குது.”
‘எலெக்ட்ரிக் பல்பு’ ஜொலிக்கும் சமாசாரத்தைக் கேட்டு ஏனோ தெரியவில்லை, எல்லாச் சிறுசுகளும் கலகலவென நகைத்தன. அத்தைக் கிழவியின் உடைந்த பல்வரிசையின் நடுவிலிருந்து செல்லமாக ஒரு திட்டு விழுந்தது- ‘காட்டேரிக்குப் பாட்டி!’
பிர்ஜூவின் அம்மா அயர்ந்து விட்டாள். யாரோ அவள் கண்களுக்கு எதிரே பிரகாசமான டார்ச் ஒளியைப் பாய்ச்சியதுபோல உணர்வு ஏற்பட்டது. ‘தகதகணு ஜொலிக்கும் எலெக்ட்ரிக் பல்பு!’ மூன்று வருஷம் முன்னால், சர்வே காம்ப் நடந்து முடிந்ததும் ஊரிலுள்ள அசூயைக்காரப் பெண்பிள்ளைகள், சம்பியாவின் அம்மா முற்றத்திலே இராப்பூராவும் மின்சார விளக்கு ஜொலிக்கப் போட்டாள்! என்று ஒரு கதையைக் கட்டி விட்டார்கள். அப்புறம் சம்பியா அம்மா முற்றத்திலே பூட்சுக்கால் அடையாளம் தெரிந்ததாம். குதிரைக் குளம்பு போல! ‘வயிற்றெரிச்சல் படுங்க! நல்லா படுங்க! இன்னும் படுங்க! சம்பியா அம்மாவின் வாசலில் வெள்ளி கொட்டிக் கிடக்கிற மாதிரி சணல் காய்வதைப் பார்த்து வயிறு எரிஞ்ச பெண்டுக இப்ப களத்து மேட்டிலே தங்கம் போல நெல்லுக் காயறதைப் பார்த்து வயிறு எரியப் போறதுக. வயிறு எரிஞ்சு கத்தரிக்கா கொத்சு கணக்கா ஆவப் போவுதுக!’
மண் சட்டியிலிருந்து சொட்டும் வெல்லத்தை விரல்களால் சப்பிக் கொண்டே சம்பியா வந்தாள். வந்ததும் செம்மையாக செவிட்டில் அடி வாங்கி அலறினாள் – ‘என்னெ ஏ..ன் அடிக்கிறே..ஏ..ஏ! செட்டிம்மா சீக்கிரம் தரலே..ஏ..ங்..ங்!”
“ஏங்கிட்டயா அளக்கிறே சிறுக்கி! ஊரிலே ஒரு செட்டி கடைதான் இருக்குதா, அங்கே முத்து உதிந்துச்சாம், இவ பந்தல் கட்டிக்கிட்டு உக்காந்து கிடந்தாளாம்! கழுத்துமேலே உதைச்சு குரவளையை ஒடிச்சுப்புடுவேன் தெரிஞ்சுதா! இனிமே அந்த சினிமாப் பாட்டுச் சிறுக்கி கிட்ட குந்திக்கிட்டு பாட்டுப்படிச்சேன்னா – பாரு! அந்த டேசன்காரி பின்னால சுத்தினே, அவ ராங்கிதான் வரும்!”
பிர்ஜூவின் அம்மா தன் வசவை நிறுத்தி விட்டு காதைத் தீட்டிக் கொண்டு நிதானித்தாள். எதிரொலியைக் கொண்டு, தன் குரல் ரெயில்வே ஸ்டேஷன் குப்பம்வரை எட்டியிருக்கும் என்று அனுமானம் செய்துகொண்டாள்.
பிர்ஜூ நடந்த கதையை எல்லாம் மறந்துவிட்டு எழுந்தான். புழுதியைத் தட்டிக்கொண்டு சட்டியிலிருந்து சொட்டும் வெல்லப்பாகை ஆசை ததும்பும் கண்கலால் பார்க்கலானான்- அக்காவுடன் அவனும் கடைக்குப் போயிருந்தால், அக்கா அவனுக்கு நிச்சயம் வெல்லம் தந்திருப்பாள். அவன் சீனிக்கிழங்குக்கு ஆசைப்பட்டு வீட்டிலே இருந்து விட்டான். ஒரு கிழங்கு கேட்டதுக்கு அம்மா..
“ஏ- அம்மா, இம்புட்டு வெல்லம் தாயேன்!” பிர்ஜூ உள்ளங்கையை நீட்டியவாறு கெஞ்சினான்—“தரமாட்டியா அம்மா, இம்மாத்தூண்டு வெல்லம்!”
“இம்மாத்தூண்டு என்னாத்துக்கு, சட்டியோட எடுத்துக் கொல்லையில கொட்டறேன், விளுந்து நக்கிட்டு கிட! இனிப்பு ரொட்டியும் கிடையாது, ஒண்ணும் கிடையாது… இனிப்பு ரொட்டி திங்கிற மூஞ்சியைப் பாரு!” பிர்ஜூவின் அம்மா வேக வைத்த சீனிக்கிழங்கை அழுது கொண்டிருந்த சம்பியாவின் முன்னால் எடுத்து வைத்தாள் “இங்கன குந்திக்கிணு இத்த உரி, இல்லே இப்பவே..!”
சம்பியாவுக்கு பத்து வயதுதான் ஆகியிருந்தது. சிறுமி என்றாலும் நல்ல அனுபவசாலி. சீனிக்கிழங்கை உரிப்பதற்குள் அம்மாக்காரி பனிரெண்டு தடவையாவது அவளுடைய தலைமயிரை இழுத்து உலுக்குவாள் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். சின்னச் சின்னக் குற்றம் கண்டு பிடித்து கண்டபடி திட்டுவாள் – “எதுக்கு இப்பிடி கவட்டையைப் பிளந்து குந்திக்கிட்டிருக்கே, வெக்கம் கெட்டவளே!”சம்பியா தாயின் கோபத்தை நன்றாக அறிவாள்.
பிர்ஜூ இந்த நேரத்தில் கொஞ்சம் குழையடித்துப் பார்த்தான்- “அம்மா, நானும் உக்காந்துகிட்டு சீனிக்கிழங்கு உரிக்கட்டுமா?”
“ஒண்ணும் வாணாம்” அம்மா அதட்டினாள்- “ஒண்ணு உரிக்கறதுக்குள்ளாற மூணு வயதுக்குள்ளே போவும். இந்தா, ஓடிப்போயி சித்து மருமகள் கிட்டப்போ- ஒரு மணி நேரத்திலே தர்றேன்னு வங்கிட்டுப் போனியே சருவம், திருப்பித் தர மறந்திட்டியான்னு கேளு, ஓடு!”
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு முற்றத்தின் வழியாகப் போகையில் பிர்ஜூ சீனிக்கிழங்கையும், வெல்லத்தையும் ஏக்கத்துடன் பார்த்தான். சம்பியா பறந்து கொண்டிருந்த கேசத்தின் மறைவிலிருந்து தாயின் பக்கமாக ஒருமுறை நோட்டம் விட்டாள், பிறகு தாய்க்குத் தெரியாமல் ஒரு சீனிக்கிழங்கை பிர்ஜூவின் பக்கமாக எறிந்தாள்..பிர்ஜூ அதை எடுத்துக் கொண்டு ஓடினான்.
“சூரியனும் மறைஞ்சாச்சு. விளக்கு வெக்கற நேரமும் ஆயிடுச்சு. இன்னும் வண்டியை-“
சம்பா இடையிலேயே பதிலளித்தாள்- “காய்கறிச் சந்தையிலே யாரும் வண்டி குடுக்கலியாமா! அம்மாகிட்ட வேலையெல்லாம் முடிச்சு தயாரா இருக்கச் சொல்லு- மல்தஹியா தெரு மியான்கிட்ட இருந்து வண்டி வாங்கிகிட்டு வர்றேன்னு அப்பா சொன்னாங்க.”
இதைக் கேட்டதுமே பிர்ஜுவின் அம்மா முகம் தொங்கி விட்டது. குதிரை மேலிருந்து சேணம் திடீரென்று நழுவி விழுந்த மாதிரி. “காய்கறிச் சந்தையிலே யாரும் வண்டி இரவல் கொடுக்கலே. இன்னிக்கு வண்டி கெடச்சாப்புலதான்! நம்ம கிராமத்து சனங்க கண்ணிலேயே தண்ணி இல்லென்னா.. ஊரைத் தாண்டி மல்தஹியா தெரு மியான் வண்டி கெடைக்கும்னு என்ன உறுதி? திருவிழா பார்க்கப் போறது ஒண்ணும் நிச்சயமில்லே! இந்த லெச்சனத்துக்கு சீனிக் கிழங்கு உரிச்சு வச்சு என்ன ஆவணும் இப்ப? எடுத்து வையி- ! இந்த ஆம்புளை நாட்டியம் காட்டுவாராம்! வில் வண்டியிலே ஏத்திக்கிட்டு திருவிழா பார்க்கக் கூட்டிப் போவாராம்! எல்லாம் ஏறியாச்சு வண்டியிலே! பார்த்தாச்சு ஆசை தீர நாட்டியமும் நாடகமும்- நடந்து போற பொம்புளைங்க போய்ச் சேர்ந்து ஒரு சாமம் ஆகியிருக்கும்.”
பிர்ஜு சிறிய சருவத்தை தலையில் கவிழ்த்துக் கொண்டு திரும்பி வந்தான்- “பாரு அக்கா, மிலிட்டரி தொப்பி! இதுமேல லத்தியாலே பத்து சாத்தினாலும் ஒண்ணும் ஆவாது.”
சம்பியா விறைப்பாக உட்கார்ந்திருந்தாள், பேசவில்லை. லேசாக சிரிக்கக்கூட இல்லை. அம்மாவின் கோபம் இன்னும் தணியவில்லை என்று பிர்ஜு புரிந்து கொண்டான்.
குடிசையிலிருந்து ஆட்டுக்கிடாயை வெளியே விரட்டியவாறு பிர்ஜுவின் அம்மா படபடத்தாள்- “ராட்சசனே! நாளைக்கே உன்னை கசாப்புக்காரன் பஞ்சகௌடிக்கு குடுத்துட வேண்டியதுதான்.. எங்கே கண்டாலும் வாயை வெக்குது! சம்பியா, இதெப்பிடிச்சு கட்டுடீ.. கழுத்திலிருந்து சலங்கையை கழட்டி விட்டுரு. எப்பப் பார்த்தாலும் கிணிங்- கிணிங்.. எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கலே!”
“கிணிங்.. கிணிங்’ என்று கேட்டதுமே பிர்ஜுவுக்கு சாலையில் செல்லும் வண்டிகளின் ஞாபகம் வந்தது- “கொஞ்ச நேரம் முன்னாலே ஐயாமார் தெருவிலிருந்து வண்டிங்க திருவிழாவுக்குப் போயிட்டிருந்தது – கிணிங்.. கிணிங்னு காளைங்க சலங்கை சத்தம் – நீ கேட்…”
“அநாவசியமா உளறிக்கிட்டிருக்காதே!” ஆட்டின் கழுத்துச் சலங்கையைக் கழட்டியவாறு சம்பியா அவனை அடக்கினாள்.
“சம்பியா, அடுப்பிலே தண்ணியெ ஊத்து! அப்பா வந்தாக்க விமானத்துல போய் நாட்டியம் பார்த்துட்டு வாங்க அப்படீன்னு சொல்லிடு! எனக்கு நாட்டியமும் பார்க்க வேண்டாம், நாடகமும் பார்க்க வேண்டாம்.. என்னெ யாரும் எளுப்ப வேண்டியதில்லே! தலைவலி மண்டையைப் பொளக்குது!”
குடிசையின் வாயிலில் நின்றுகொண்டு பிர்ஜு கிசுகிசுத்த குரலில் கேட்டான் – “ஏன்க்கா, திருவிழாவிலே ஆகாயவிமானமும் பறக்குமா?”
பாயின்மேல் உட்கார்ந்து கந்தைத் துணிகளைச் சேர்த்து மெத்தைபோல தைத்த போர்வையைப் போர்த்திக் கொண்டவாறு சம்பியா பிர்ஜூவை பேசாமல் இருக்கும்படி சைகை செய்தாள், அம்மாவிடம் அனாவசியமாக உதை வாங்குவான் பாவம்!
பிர்ஜூ, அக்காளுடன் போர்வையைப் பங்கு போட்டுக் கொண்டு மோவாயைக் கால்முட்டுடன் சேர்த்து டகடகவென்று அடித்துக் கொண்டு குளிரைப் போக்கிக் கொண்டான். குளிருக்கு இவ்வாறு செய்வது வழக்கம். சம்பியாவின் காதருகே வந்து மெல்லிய குரலில் கேட்டான் – ‘ஏன்க்கா, நாம நாட்டியம் பாக்கப் போறோமா, இல்லியா? கிராமத்திலே ஒரு ஈ காக்கா கூட கிடையாது, எல்லாரும் போயாச்சு.”
சம்பியாவுக்கு தினையளவும் நம்பிக்கை இல்லை. அந்தி நேரத்து நட்சத்திரம் மங்கிக் கொண்டிருக்கிறது. அப்பா இன்னும் வண்டியே கொண்டு வரவில்லை. ஒரு மாசம் முன்னாலிருந்தே அம்மா சொல்லிட்டிருந்திச்சு, பலராம்புர் திருவிழாவன்னிக்கு இனிப்பு ரொட்டி பண்ணுவோம்; சம்பியா சுங்கடிச்சேலை கட்டிக் கொள்வாள்; பிர்ஜூ பேண்ட் போட்டுக் கொள்வான், வில்வண்டியிலே ஏறி-
சம்பியாவின் நனைந்த கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே உதிர்ந்தது.
குடிசைக்குள்ளே பிர்ஜுவின் அம்மா பாயில் படுத்தவாறு புரண்டு கொண்டிருந்தாள். “ஊ..ங், முதல்லேயே எதைப் பத்தியும் ஆகாசக் கோட்டை கட்டக்கூடாது! ஆண்டவன் அந்தக் கோட்டையைத் தகர்த்திட்டாரு. முதல்லே ஆண்டவனிடம் கேட்கணும், பரமசிவனே, எதுக்காக இந்தத் தண்டனை, அப்படி நான் என்ன தப்புச் செஞ்சேன்? தேவதைகள், பித்ருக்களுக்கு வேண்டிக் கொண்டதை அப்பப்போ நிறைவேத்தியாச்சு. சர்வே நடக்கையிலே நிலம் கிடைக்கணும்னு எத்தனை வேண்டுதல்கள்.. ஆமா, சரிதான்! அனுமாருக்குப் படையல் வைக்கிறேன்னு சொல்லியிருந்தேன், அதுதான் இன்னும் செய்யலே.. தெய்வமே, ஆண்டவனே! தப்பை மன்னிச்சுடுப்பா! வேண்டுதல இரட்டிப்பா நிறைவேத்திடுவேன்-“
பிஜூவின் அம்மா மனசில் ஜங்கி மருமகள் சொன்ன வார்த்தை அடிக்கடி குத்திக் கொண்டிருந்தது, ‘தகதகணு எலெக்டிரிக் பல்பு! களவாணிப் பய மருமக ஏன் எரிச்சல்பட மாட்டா? பிர்ஜூவின் அப்பாவுக்கு ஐந்து பீகா நிலம் கிடைச்சிருக்குன்னு கிராமத்து சனங்க – ஆம்புளை பொம்புளை ஒருத்தர் பாக்கி இல்லாமெ எல்லாருக்கும் வயத்தெரிச்சல். வயலிலே சணல் வெள்ளை வெளேர்னு நிக்கறதைப் பார்த்து நெஞ்சு வெடிச்சுப் போயிடிச்சி. பூமியைப் பிளந்துட்டல்லவா சணல் விளைஞ்சிருக்கு; ஐப்பசி மாசத்து மேகங்கள் போல பொங்கி வருது சணல் செடிங்க! தோலான் துருத்தி முதல் எல்லார் கண்ணும் பட்டுருச்சி! இத்தனை கண்களுடைய தீட்சண்யத்தை விளைச்சல் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்ளும்? பதினைஞ்சு மணங்கு உண்டாக வேண்டிய இடத்திலே – பத்து மணங்குதான் விளைஞ்சுது, ரபி பகத் வீட்டுத் துலாத்திலே நிறுத்தப்போ பத்து மணங்குதான் தேறிச்சு.
இதிலே வயித்தெரிச்சல்பட என்ன இருக்குது! பிர்ஜுவின் அப்பா ஒருத்தர் விடாமல் எல்லாருக்கும் எடுத்துச் சொன்னார்- ‘வாழ்நாள் முழுக்க கூலிவேலை செஞ்சிட்டே இருப்பீங்களா? சர்வே நடக்கப் போவுது. அவனவன் தடியை எடுத்திட்டு உஷாரா நில்லுங்க. அப்பத்தான் மூணு நாலு பீகா நிலமாவது கிடைக்கும்.’ ஒரு பயலும் கேக்கலே, ஜமீந்தார் ஐயாவுக்கு எதிராக தும்மக்கூட பயம்.. பிர்ஜூவின் அப்பாவுக்கு கொஞ்சமாவா சோதனை வந்தது? ஜமீந்தார் ஐயா கோபத்திலே சர்க்கஸ் புலி மாதிரி உறுமினாரு. அவருடைய மூத்த மகன் வீட்டுக்குத் தீ வைப்பேன்னு பயமுறுத்திட்டுப் போனான். கடைசியிலே ஜமீந்தார் ஐயா தன்னுடைய கடைக்குட்டியை அனுப்ப்பினாரு. பிர்ஜு அம்மாவை அவன் ‘சித்தீ’ன்னு அன்பொழுக அழைத்துக்கிட்டு வந்தான் – ‘இந்த நிலம் அப்பா என் பெயருக்கு வாங்கினது. என் படிப்புச் செலவு எல்லாம் இதன் வருமானத்தைக் கொண்டுதான் நடக்குது’ அப்படீன்னான். இன்னும் என்னவெல்லாமோ பேசிப் பார்த்தான். நல்லா மயக்கத் தெரிஞ்சிருக்குது இம்மாத்தூண்டு பையனுக்கு. ஜமீந்தார் பிள்ளையா, கொக்கா-?’
“சம்பியா, பிர்ஜு தூங்கிடிச்சா? பிர்ஜு! வா உள்ளே, நீயும் வா. அந்த மனுசன் வரட்டும் சொல்றேன் இன்னைக்கு!”
பிர்ஜுவுடன் சம்பியா உள்ளே நுழைந்தாள்.
“குப்பி விளக்கை அணைச்சிடு. அப்பா கூப்பிட்டாங்கன்னா பதிலே பேசாதீங்க. தட்டியைப் போட்டுடு.”
‘நல்ல ஆளுய்யா, சரியான ஆசாமிதான்- மூஞ்சியைப் பாருடான்னானாம். பிர்ஜுவின் அம்மா ராப்பகலா விரட்டலேன்னா நிலம் கெடச்சாப்பலதான் இவருக்கு! நெதம் வந்து தலையைப் பிடிச்சுக்கிட்டு குந்திப்பாரு – ‘எனக்கு நெலமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்; பிர்ஜு அம்மா! இதைவிட கூலி வேலைதான் தேவலாம்!’ பிர்ஜுவின் அம்மா நல்லா யோசிச்சு பதில் சொல்லுவா – ‘விட்டுத்தள்ளுங்க, அப்ப நெலம் வேணும்ங்கிற ஆசையை தாரை வார்த்துட வேண்டியதுதான். உங்களுக்கே மனசு கெட்டியில்லேன்னா என்னா நடக்கும்? பெண்டாட்டியும், நெலமும் கையிலே பலம் உள்ளவனுக்குத்தான் சொந்தம்; இல்லேன்னா அடுத்தவன் அடிச்சுட்டுப் போயிடுவான்! அப்படீன்னு வசனம் கேட்டதில்லையோ?
பிர்ஜுவின் அப்பா மீது கோபமான கோபம் வந்தது, கணத்துக்குக் கணம் ஏறிக் கொண்டே போயிற்று. ‘பிர்ஜுவின் அம்மா தலையிலே இதுதான் விதிச்சிருக்குது. இல்லேன்னா இப்படி ஒரு வக்கத்த புருசன் கிடைப்பானா? மண்ணும் இல்லே, சாணமும் இல்லேன்னு… இந்த ஆளைக் கட்டிக்கிட்டு என்ன சொகத்தைக் கண்டேன்! செக்குமாடு போல உழைச்சு உடம்பு ஓடாப் போயிடுச்சு. ஒரு நாளாவது ரெண்டு ஜிலேபி வாங்கியாந்து ‘இந்தா புள்ளே தின்னு’ அப்படீன்னு சொன்னதுண்டா? பகத் வீட்டிலேயிருந்து சணல் வித்த பணம் வாங்கிட்டு வந்து வாசல்லேயிருந்து அப்படியே காளை வாங்கப் போயிட்டாரு காளைச் சந்தைக்கு. பிர்ஜுவின் அம்மாவை நம்பர் அடிச்ச நோட்டைக் கண்ணாலெயாவது பார்க்கவிட்டாரா? காளை மாடு வாங்கிட்டு வந்தாரு. அன்னிக்குப் பிடிச்சு தெருவிலே தண்டோரா போட ஆரம்பிச்சாரு – ‘பிர்ஜுவின் அம்மாவை இந்தத் தடவை வில்வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போய் திருவிழா காட்டுவேன்! காட்டுவாரு, பெரிசா! மத்தவங்க வண்டியை நம்பிட்டு.. இவரா காட்டப்போறாரு..’
கடைசியில் அவளுக்குத் தன் பேரிலேயே கோபம் வந்தது. ‘நீயும் குறைச்சல் இல்லை. உன் நாக்கிலே தீயை வைக்க வேண்டாமா? வில் வண்டியிலே ஏறி திருவிழா பார்க்கப் போகிற ஆசையை எந்த நேரத்திலே முத முதல்லே வாயை விட்டுச் சொன்னியோ தெரியலே.. இன்னிக்கு விடிஞ்சதிலேருந்து மதியம் வரைக்கும் பேச்சுக்குப் பேச்சு பதினெட்டு தடவையாவது வில்வண்டியிலே ஏறிக்கிட்டு நாட்டியம் பார்க்கப் போறதைப் பத்திச் சொல்லிட்டே.. பாரு, நல்லாப் பாரு நாட்டியம்! உனக்கு நாட்டியம் ஒரு கேடா? கந்தை மெத்தையிலே படுத்துக்கிட்டு பட்டு துப்பட்டா வேணும்னு கனவா? நாளைக்கு விடியல்லே தண்ணி ரொப்பப் போறப்ப எல்லா வீட்டுப் பெண்டுகளும் சிரிக்கப் போவுது. எல்லாருக்கும் பிர்ஜு அம்மாவைக் கண்டா எரிச்சல். ஆமா, ஏன் வயிறு எரியாது. ரெண்டு பிள்ளைங்களைப் பெத்தபிறகு கூட அவள் உடம்பு அப்படியே கட்டுக் குலையாமல் இருக்கு.. புருசனோ அவ கிழிச்ச கோட்டைத் தாண்டுறதில்லை. அவ தலைக்குத் தேங்காயெண்ணேய் தடவிக்கிறா.. அவளுக்கு நிலம் இருக்கு சொந்தமா.. இந்தத் தெருவிலே ஒரு பயகிட்டெ ஒரு குப்பைக்குழி அளவாச்சும் நிலம் இருக்குதா? ஏன் எரியாது வயிறு, மூணு பீகா நிலத்திலே நெல்லுக்கதிரு நிக்குது, மார்கழி, தை மாசத்து விளைச்சல்: ஆண்டவனே, கண்ணுபடாம இருக்கணுமே!”
வெளியே காளையின் மணியொலி கேட்டது. மூன்று பேரும் உஷாரானார்கள். காலை நீட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தனர்.
“நம்ப காளைங்க மணிதான், இல்லே சம்பியா?”
சம்பியாவும், பிர்ஜுவும் ஒரே நேரத்தில் பதிலளித்தனர்- “ஊம்..ம்ம்..!”
“உஷ்! சத்தம் காட்டாதீங்க” பிர்ஜுவின் அம்மா மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்- “வண்டியும் வந்திருக்கு போலத் தெரியுது. கடகடன்னு சத்தம் கேட்டுது இல்லே!”
“ஊ..ம்..ம்” இரண்டு பேரும் மீண்டும் ஊம் கொட்டினார்கள்.
“பேசாதே! வண்டி ஒண்ணும் இல்லை. நீ போயி, சத்தம் காட்டாமெ தட்டி இடுக்கு வழியா பாத்திட்டு வா சம்பி! ஓடிப்போ, சத்தம் காட்டாதே.”
சம்பியா பூனை போல மெதுவாகக் காலடி வைத்து தட்டி இடுக்கு வழியாகப் பார்த்து வந்தாள்-“ஆமாம்மா, வண்டியும் வந்திருக்குது!”
பிர்ஜு வாரிப் புடைத்துக் கொண்டு எழுந்தான். அவனுடைய தாய் அவனைக் கையைப் பிடித்துக் கிடத்தினாள்- “பேசாதே! மூச்..”
சம்பியாவும் கந்தை மெத்தையினுள் பதுங்கினாள்.
வெளியே வண்டியிலிருந்து காளையை அவிழ்க்கும் அரவம் கேட்டது. பிர்ஜுவின் அப்பா காளைகளை உரத்த குரலில் திட்டும் குரல் கேட்டது- “ ஆ..மா! வந்திட்டோம்! வீட்டுக்கு வாறதுக்கு இவ்வளவு சண்டித்தனமா?”
பிர்ஜுவின் அம்மாவுக்குத் தெரிந்து விட்டது. ‘மல்தஹியா தெருவில் ஹூக்கா குடிச்சிட்டு வந்திருப்பாரு. கஞ்சா அடிச்சிருப்பாரு. அதனாலதான் குரல்லே இந்தக் கனகனப்பு!”
“சம்பியா..ஹ்..!” தகப்பன்காரன் வெளியிலிருந்தே கத்தினான்- “காளைங்களுக்கு வைக்கோல் எடுத்துப் போடு, சம்பியா..ஹ்..!”
உள்ளேயிருந்து பதிலே வரவில்லை. முற்றத்தில் வந்து பார்த்தான், ‘விளக்கு இல்லே, வெளிச்சமும் இல்லே.. என்ன ஆச்சு? நாட்டியம் பாக்குற ஆசையிலே நடந்தே போயிட்டாங்களோ..?”
பிர்ஜுவின் தொண்டை குறுகுறுத்தது, இருமல் வரும்போல். இருமல் வராமல் தடுப்பதற்கு அவன் எவ்வளவோ முயன்றான். ஆனால் இரும ஆரம்பித்ததும் ஐந்து நிமிடத்துக்கு அவன் தொடர்ந்து இருமினான்.
“பிர்ஜு! மகனே பிரஜ் மோகன்!” பிர்ஜுவின் அப்பா செல்லமாக அவனை அழைத்தார்,”அம்மா கோவத்துலே தூங்கிட்டாளா- அட, இப்பத்தானே எல்லாரும் போறாங்க!”
பிர்ஜு அம்மா வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ‘நாட்டியமும் வேண்டாம், திருவிழாவும் பார்க்க வேண்டாம். வண்டியைத் திருப்பிக் கொடுத்திடுங்க’ என்று பதில் கூற விரும்பினாள். வார்த்தை வாய் நுனிவரை வந்து நின்று விட்டது.
“சம்பியா-ஹ்! எந்திரிக்கப் போறியா இல்லியா? இதப்பாரு, புது தானியக் கதிரு. இதை எடுத்துவை.” தானியக் கற்றையை குடிசையின் வாசலில் வைத்தவாறு கூறினான்- “எந்திரிம்மா, விளக்கை ஏத்து!”
பிர்ஜுவின் அம்மா எழுந்து வாசலுக்கு வந்தாள். “ராத்திரி ஒண்ணரை சாமத்துக்கு வண்டி எதுக்குக் கொண்டாந்தீங்க? நாட்டியமும் திருவிழாவும் முடிஞ்சு போயிருக்குமே!”
குப்பி விளக்கின் வெளிச்சத்தில் புதுக்கதிரின் நிறத்தைக் கண்டதுமே பிர்ஜு அம்மாவின் கோபம் எல்லாம் தணிந்துவிட்டது. தங்க ரேக்கு போல நெற்கதிரின் நிறம் அவள் கண்கள் வழியாக இறங்கி ஒவ்வொரு மயிர்க்காலும் புளகாங்கிதமடைந்தது.
“நாட்டியம் இன்னும் தொடங்கியே இருக்காது. இப்பத்தான் பலராம்புர் பெரிய ஐயாவின் கம்பெனி வண்டி மோகன் ஓட்டல் பங்களாப் பக்கம் போயிருக்குது. அதிகாரியை அழைச்சிட்டுப் போக.. இந்த வருசம்தானே கடைசி முறையா நாடகம்.. தானியக் கதிரைத் தட்டியிலே செருகு, நம்ம வயல்லே விளைஞ்சது.”
“நம்ம வயல் கதிரா?” பிர்ஜுவின் அம்மா கேட்டாள், மகிழ்ச்சி பொங்க- “நல்லா விளைஞ்சாச்சா?”
“இல்லே, இன்னும் பத்து நாளிலே பாரு. மார்கழி மத்தியிலே கதிரெல்லாம் சிவந்து அப்படியே தலையைக் குனிஞ்சு நிக்கும். மல்தஹிதா தெருவுக்குப் போகையிலே நம்ம வயல் கதிரைப் பார்த்தேன். நிசம்மாச் சொல்றேன், கதிரை ஒடிக்கையில் கைவிரல் அப்படியே நடுங்கிச்சு!”
பிர்ஜு தானியக் கதிரிலிருந்து ஒரு நெல்லை எடுத்து வாயில் வைத்து மென்றான். அவனுடைய அம்மா இலேசாகக் கடிந்து கொண்டாள்- “அறிவு இருக்காடா உனக்கு? இந்தக் குட்டிச் சாத்தானை வெச்சிட்டு நமக்கு பூஜையும் கிடையாது, விரதமும் கிடையாது!”
“என்ன ஆயிடுச்சி, எதுக்காகத் திட்டுறே?”
“பொங்கலுக்கு முன்னாலே புது நெல்லை வாயிலே வெச்சு எச்சில் படுத்திட்டானே!”
“அட, குழந்தைகதானே, இதுக எச்சில் பண்ணினா பாவம் இல்லே. பறவைக் குஞ்சுங்க, பாவம்! பொங்கலுக்கு முன்னாலே இதுங்க புது நெல்லைத் தின்னப்படாதுன்னு சொல்லலாமா?”
இதைக் கேட்டதும் சம்பியாவும் கதிரிலிருந்து இரண்டு தானியத்தை பல்லுக்கடியில் வைத்து மென்றாள்- “அடி அம்மாடீ, எம்புட்டு இனிப்பா இருக்கு!”
“கமகமன்னு வாசனையும் அடிக்குதில்லே அக்கா?” பிர்ஜு இன்னும் இரண்டை மென்றான்.
“ரொட்டி-கிட்டி தயாராயிடுச்சா?” பிர்ஜுவின் தகப்பன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
“இல்லே”- செல்லமாகச் சிணுங்கியவாறு பிர்ஜுவின் அம்மா பதிலளித்தாள்-“போகப் போறமோ இல்லையோ- ரொட்டியாம்!”
“நல்லாத்தான் இருந்தே இப்படி! காளை இருந்தா வண்டி இரவல் கிடைக்காதா என்ன? வண்டி வச்சிருக்கிறவங்களுக்கும் நாளைக்கு காளைங்க தேவைப்படும்.. அப்ப பேசிக்கிடறேன், காய்கறிச் சந்தைக்காரங்க கிட்டே..! எந்திரி, சீக்கிரமா ரொட்டி சுடு.”
“நேரமாயிடாது இல்லே?”
“அட, கூடைக்கணக்கிலே ரொட்டி நிமிசத்துலே சுட்டுடுவே நீ. அஞ்சு ரொட்டி சுடறத்துக்கு எத்தினி நேரம் ஆவப் போவுது!”
இப்போது பிர்ஜு அம்மாவின் உதடுகளில் புன்னகையும் நன்றாகவே தவழ்ந்தது. அவள் ஓரக்கண்ணால் கவனித்தாள், பிர்ஜு அப்பா தன்னையே கண்கொட்டாமல் பார்ப்பதை.. சம்பியாவும், பிர்ஜுவும் மட்டும் அங்கே இல்லாமல் இருந்தால், இருவரும் மனதில் பொங்கி வரும் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டி இருப்பார்கள். சம்பியாவும், பிர்ஜுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். குழந்தைகளின் முகத்தில் உல்லாசம் பிரகாசித்தது – “பாத்தியா, அம்மா வீணாக் கோவிச்சுட்டு இருந்திச்சு, இல்லே!”
“சம்பி கொஞ்சம் வெளியே நின்னு மக்னி அத்தையைக் கூப்பிடு!”
“ஏ அ..த்..தே..காது கேக்குதா? அம்மா கூப்பிடுது.”
அத்தை நேரடியாகப் பதில் சொல்லவில்லை, ஆனால் அவள் தனக்குள் பேசிக்கொள்வது நன்றாகக் காதில் விழுந்தது- “ஆமா! இப்ப அத்தையைக் கூப்பிடறா! தெருவில ஒரு அத்தைதான் இருக்கேன், முன்னாலேயே மூக்குக் கயிறும் பின்னாலே கட்டற கயிறும் இல்லாமே!”
“அத்தே!” பிர்ஜுவின் அம்மா சிரித்துக் கொண்டே பதிலளித்தாள்- “நான் அப்படிச் சொன்னது தப்பாப் பட்டிருச்சா? மூக்குக் கயிறும், கட்டற கயிறும் உள்ளவங்களை வந்து பாருங்க, ராத்திரி ரெண்டு சாமம் ஆனபிறகு வண்டியைக் கட்டிட்டு வந்திருக்காரு! வாங்க அத்தே, எனக்கு இனிப்பு ரொட்டி பண்ணவே தெரியாது.”
அத்தை இருமிக்கொண்டே வந்தாள்- “அதனாலேதான் பகல்லேயே கேட்டேன், நாட்டியம் பார்க்கப் போகலியா அப்படீன்னு! கூப்பிட்டிருந்தா, அப்பவே வந்து அடுப்பைப் பத்த வெச்சிருப்பேனே!”
பிர்ஜுவின் அம்மா அத்தைக்கு அடுப்பைக் காட்டினாள். பிறகு சொன்னாள்- “வீட்டிலே கட்டிக் காக்க பெரிசா தானியம் இல்லே. ஒரு ஆட்டுக்கடா நிக்குது. நாலஞ்சு ஏனம் கிடக்கு. ராத்திரி முழுக்க தின்ன புகையிலை வெச்சுட்டுப் போறேன். ஹூக்கா எடுத்தாந்திருக்கே இல்லே அத்தை!”
அத்தைக்குப் புகையிலை மட்டும் கிடைத்தால் போதும், ராத்திரி முழுக்க என்ன, ஐந்து ராத்திரி உட்கார்ந்து கண்விழிக்கத் தயார். அத்தை இருட்டிலேயே தடவி புகையிலை எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக் கொண்டாள். “ஓ-கோ-கோ! பிர்ஜுவின் அம்மா கை நிறையத்தான் வெச்சிருக்கா புகையிலெ. அந்த ஸாஹு வீட்டிலெ, அன்னிக்கு ராத்திரி கஞ்சா உருண்டை மாதிரி இம்மாத்தூண்டு புகையிலை வெச்சுட்டு குலாப்-பாக் மேளா பார்க்கப் போயிட்டாங்க. அந்த அம்மா போகையிலே, டப்பா நிறைய புகையிலெ வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு வேற போனா மகராசி!”
பிர்ஜு அம்மா அடுப்பை ஊதிப் பற்ற வைத்தாள். சம்பியா வெந்த சீனிக்கிழங்கைப் பிசைந்து சின்னஞ்சிறு பந்து போல உருட்டினாள். பிர்ஜு தன் தலையில் சருவத்தைக் கவிழ்த்துக் கொண்டு அப்பாவுக்குக் காட்டினான்- “மிலிட்டரி தொப்பி! இதுமேலே பத்து லாத்தி சாத்தினாலும் ஒண்ணும் ஆவாது.”
எல்லாரும் உரக்கச் சிரித்தனர். பிர்ஜுவின் அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்- “தட்டு மேலே பெரிசு பெரிசா மூணு சீனிக்கிழங்கு கிடக்கு, பிர்ஜுவுக்கு எடுத்துக் கொடேன் சம்பியா! பாவம் சாயங்காலத்திலிருந்தே..”
“பாவம் என்ன பாவம், எல்லாம் பொல்லாதுதான்!” இப்போது சம்பியாவும் வக்கணையாகப் பேசலானாள்.”உனக்கு என்ன தெரியும் அம்மா, மெத்தைக்கு அடியிலே படுத்துகிட்டு சின்ன துரை வாய் வேலை செஞ்சிட்டே இருந்தது, ஆமாம்!”
“ஹீ-ஹீ-ஹீ..!”
பிர்ஜுவுக்குப் பற்கள் விழுந்து முளைக்கும் பருவம். முன்பற்கள் இரண்டும் விழுந்து விட்டிருந்தன. பல்லை இளித்தவாறே அவன் பேசினான்- “பிளாக் மார்ட்டிலே நாலு சீனிக்கிழங்கு தின்னுட்டேன்! ஹா-ஹா-ஹா!”
எல்லாரும் மீண்டும் கொல்லென்று சிரித்தனர். பிர்ஜுவின் அம்மா அத்தையைக் குளிப்பாட்டும் எண்ணத்தில் கிழவியிடம் சென்று பிரமாதமாக ஆலோசனை கேட்டாள்- “ஒரு கட்டி வெல்லம் இருக்குது. பாதி போடவா அத்தே!”
அத்தை மகிழ்ந்து போனாள்- “சீனிக்கிழங்கிலேயே இனிப்பு இருக்குது, அத்தனை என்னாத்துக்குப் போடறே?”
இரண்டு காளைகளும் புல்லும் தீனியும் தின்று ஒன்றையொன்று நக்கிக் கொள்வதற்குள் பிர்ஜுவின் அம்மா தயாராகிவிட்டாள். சம்பியா சுங்கடிச் சேலை கட்டிக் கொண்டாள். பிர்ஜு பொத்தான் இல்லாத பேண்டில் சணற்கயிற்றினால் பெல்ட்டு கட்டிக் கொண்டான்.
பிர்ஜு அம்மா முற்றத்தைத் தாண்டி கிராமத்துப் பக்கமாக காது கொடுத்துக் கவனிக்க முயன்றாள்- “ஊஹூம், நடந்து போறவங்க இம்மா நேரத்துக்குள்ளாற புறப்பட்டுப் போயிருப்பாங்க, இன்னமா காத்துக்கிட்டு இருப்பாங்க?”
பௌர்ணமி நிலவு தலைக்கு மேலே வந்து விட்டது. பிர்ஜுவின் அம்மா உடல் எல்லாம் புது மாதிரியான கிளுகிளுப்பு. அவள் வண்டியின் வில்லைப் பிடித்தவாறு கூறினாள்- “வண்டியிலே நிறைய இடம் இருக்குது. வண்டியை வலது கைப்பக்கமா ஓட்டுங்க கொஞ்சம்!”
காளைகள் ஓடத் தொடங்கின. சக்கரங்கள் கடகடவென்று உருண்டன. பிர்ஜுவுக்கு உற்சாகம் பிறந்து விட்டது- “ஏரோபிளேன் மாதிரி ஓட்டுங்க அப்பா!”
வண்டி ஜங்கி வீட்டின் பின்புறத்தை அடைந்தது. பிர்ஜுவின் அம்மா கேட்டாள்-“ஜங்கி கிட்டெ கொஞ்சம் கேளுங்க, மருமகள் நாட்டியம் பார்க்கப் போயிடிச்சா?”
வண்டி நின்றதும் ஜங்கியின் குடிசையிலிருந்து அழுகைக்குரல் தெளிவாகக் கேட்டது. பிர்ஜுவின் தகப்பன் கேட்டான்- “ஜங்கி அண்ணே, என்னா அது அளுகை- முற்றத்திலே?”
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஜங்கி பதிலளித்தான் – “என்னத்தைச் சொல்ல? ரங்கி பலராம்புரிலெயிருந்து இன்னும் திரும்பலே. மருமக எப்படி நாட்டியம் பார்க்கப் போகும்? ரங்கியை எதிர்பார்த்து இம்மா நேரம் கிடந்தா, ஊர் பூரா போயிடிச்சி.”
“அடீ டேசன்காரி, எதுக்கு அளுவறே?” பிர்ஜுவின் அம்மா அன்புடன் குரல் கொடுத்தாள்- “வா சல்தியா, புதுச்சேலையைக் கட்டிக்கிட்டு.. வண்டி பூரா எடம் கெடக்குது. வாடி கண்ணு! பாவம்!”
பக்கத்துக் குடிசையிலிருந்து ராதேயின் மகள் சுன்ரீ கேட்டாள்- “சித்தி வண்டியிலே இடம் இருக்குதா? நானும் வரலாமில்லே?”
மூங்கில் புதருக்கு அந்தண்டை லரேனா வீடு. அவனுடைய பெண்சாதியும் போகவில்லை. கில்ட்டு ஜிமிக்கியும் வளையும் அணிந்து ஒய்யாரமாக வருகிறாள்.
“வா, வா.. மீதி இருக்கிற எல்லாரும் வந்து ஏறிக்கிடுங்க ஜல்தியா!”
ஜங்கியின் மருமகள், லரேனா பெண்சாதி, ராதேயின் மகள் சுன்ரீ மூன்று பேரும் வண்டிக்கருகே வந்தார்கள்.
காளை பின்னங்காலைத் தூக்கி உதைத்தது. பிர்ஜுவின் தகப்பன் காளையைச் செல்லமாக வைதான்- “ஸாலா! என்ன எத்தறே? மருமகளை நொண்டியாக்கணும்னு நெனப்பா?”
இதைக் கேட்டு எல்லாரும் சிரித்தனர். சேலைத்தலைப்பால் தலையை மூடியிருந்த புதுமணப்பெண்களின் முகங்கள் நாணத்தால் குனிந்தன. பிர்ஜுவின் அப்பாவுக்கு தன்னுடைய வயலில் குனிந்து நிற்கும் கதிர்களின் நினைவு வந்தது.
மூன்று மாதம் முன்புதான் ஜங்கி மருமகளின் கௌனா (பெண் வயதுக்கு வந்ததும் கணவன் வீட்டுக்கு அனுப்புமுன் நடத்தும் முதலிரவுச் சடங்கு) முடிந்திருந்தது. கௌனாவுக்காக வாங்கிய வண்ணச் சேலையும், தலையில் தேய்த்திருந்த கடுகெண்ணையும், கஸ்தூரி மஞ்சள் குங்குமத்தின் வாசனையும் சேர்ந்து அலாதியான சூழலை உருவாக்கியது. பிர்ஜுவின் அம்மாவுக்குத் தன்னுடைய கௌனா ஞபகம் வந்தது. அவள் துணி மூட்டையைத் திறந்து மூன்று இனிப்பு ரொட்டிகளை எடுத்தாள்- “சாப்பிடுங்க மூணு பேரும். சத்திரத்துக்குப் போனதும் பைப்புத் தண்னி குடிக்கலாம்.”
வண்டி கிராமத்தைக் கடந்து வயல்காட்டுக்குப் பக்கத்திலுள்ள பாதைக்குத் திரும்பியது. பால்பொழியும் நிலவு! தானிய வயல்களில் பொழிந்து கிடக்கும் பூக்களிலிருந்து வரும் வாசனை மூக்கைத் துளைத்தது. மூங்கில்புதர் நடுவே இராப்பாலை பூத்திருந்தது. அதன் வாசனையும் சேர்ந்துகொண்டது. ஜங்கியின் மருமகள் ஒரு பீடியைப் பற்ற வைத்து பிர்ஜு அம்மா பக்கமாக நீட்டினாள். சம்பியா, சுன்ரி, லரேனா பெண்சாதி, ஜங்கியின் மருமகள் எல்லாருமே நல்லா சினிமாப்பாட்டுப் பாடுவாங்களே என்ற விஷயம் பிர்ஜுவின் அம்மாவுக்குத் திடீரென்று நினைவு வந்தது. ‘நல்லவேளை! இப்பவாச்சும் நினைவுக்கு வந்ததே’ என்று எண்ணினாள்.
இப்போது நெல் வயல்களுக்கு நடுவே அமைந்த பாதையில் வண்டி ஓடுகிறது. ஜல் ஜல், ஜல். நாலாபக்கமும் ‘கௌனா’ சேலையின் சலசலப்பு போன்ற ஒலி.. பிர்ஜுவின் அம்மா தலையில் சூட்டியிருந்த நெற்றிச் சுட்டியின் மேல் நிலவொளி மின்னுகிறது.
“ஒரு சினிமாப்பாட்டு பாடேன் சம்பியா! எதுக்குப் பயப்படறே! நடுவிலே மறந்து போனா, பக்கத்திலேயே வாத்தியாரம்மா இருக்கா இல்லே, எடுத்துத் தருவா!”
சம்பியாவும், சுன்ரியும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு பாட ஆயத்தமானார்கள். மற்ற இரண்டு இளம்பெண்களும் புதுமணப் பெண்களூக்குரிய நாணத்துடன் அமர்ந்திருந்தனர்.
பிர்ஜூவின் தகப்பன் காளைகளை உற்சாகப்படுத்தினான்- “ஓடு தம்பி ஓடு! வேகமா ஒரு பிடி பிடி! பாடு சம்பியா! இல்லேன்னா நான் காளைகளை மெதுவாப் போகச் சொல்லுவேன்!”
ஜங்கியின் மருமகள் சம்பியாவின் செவியருகே வந்து பாட்டின் அடியை முணுமுணுத்தாள். சம்பியா மெல்லப் பாட ஆரம்பித்தாள்-“சந்தா கீ சாந்த்னீ..”
பிர்ஜூவை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அவனுடைய அம்மாவின் மனதில் சம்பியாவுடன் கூடச்சேர்ந்து பாடவேண்டும்போல ஆசை எழுந்தது.
பிர்ஜூவின் அம்மா ஜங்கியின் மருமகளைப் பார்த்தாள். அவள் உதடுகளும் பாட்டை முணுமுணுக்கின்றன. எத்தனை அழகான மருமகள்! ‘கௌனா’ சேலையிலிருந்து புதுவிதமான மணம் வீசுகிறது.
‘இவ காலையிலே என்னை ஹாட்டின் ராணின்னு சொன்னா, அப்ப எதுவும் சொல்லலியே. சீட்டுக்கட்டிலே இருக்கிற செகப்புராணி போலத்தானே இருக்கேன். செகப்புச் சேலை கட்டிக்கிட்டு… தப்பா எதுவும் சொல்லலே..’
பிர்ஜுவின் அம்மா தன்னுடைய பார்வையை மூக்கு நுனியில் குவிக்க முயன்று தன்னுடைய அழகை ரசித்தாள்.
சிவப்புச் சேலை, அதன் சரிகைக்கரை. நெற்றிச் சுட்டியில் நிலவொளி.. இப்போது பிர்ஜுவின் அம்மா மனசில் இப்போது எந்தவிதமான ஆசையும் இல்லை. எல்லாம் நிறைந்து விட்டது. அவளுக்கு உறக்கம் வருகிறது.
(1957)
முந்தைய கதை: ஆத்ம சாட்சி
(நேஷனல் புக் ட்ரஸ்ட் அமைப்புக்கு நன்றி.)
இந்தக் கதை கீழ்க்கண்ட புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. பனீஷ்வரநாத் ரேணு கதைகள் மூல மொழி: ஹிந்தி மூலக் கதைகள்
தொகுப்பாளர்: பாரத் யாயாவர்
தமிழாக்கம் செய்தவர்: டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்
மூலப் புத்தகத்தின் தலைப்பு: பனீஷ்வர்நாத் ரேணு கி ஸ்ரேஷ்ட கஹானியான்
வெளியிட்ட வருடம்: 1997
வெளியீட்டாளர்: நேஷனல் புக் ட்ரஸ்ட், இந்தியா
இந்தப் புத்தகத்துக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புப் புத்தகம் என்ற சாஹித்ய அகதமி பரிசு 2002 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.