கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும், இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும் குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை மல்லியின் வாசனையே அலாதி. தெருவில் அந்த மலர்களின் பக்கம் நடந்தாலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வாசனை. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் என் உறவினர் ஒருவருக்கு வயது 80க்கு மேல். அவருக்கும் அவரது மனைவிக்கும் மாலை வேலைகளில் ஒரு முக்கிய பொழுது போக்கு உதிரி மல்லியை தொடுப்பது – மறு நாள் கடவுள் படங்களுக்கு சாற்றுவதற்காக. அதுவும் அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் சாத்தாரத் தெருவில் ஆழாக்கில் அளந்து வாங்கி வந்து கூடையில் போட்டுக்கொண்டு பெரியவர் காம்பை ஆய்ந்து கொடுக்க மனைவி வாழைநாரில் அருகருகே பூக்களை வைத்து லாகவகமாக தொடுப்பார். இருவரும் இணைந்து செய்யும் அந்த காட்சி பார்க்க மனதுக்கு இதமாக இருக்கும். வாழை நாரை சரியானதாகப் பார்த்து வாங்கி வரவேண்டும் என்று தினமும் ஒரு முறை கணவருக்கு சொல்லி அனுப்புவார் மனைவி ! அந்த வயதில் இந்தப் பூத்தொடுக்கும் வேலை இருவருக்கும் ஒரு சுவாரசியமான நேரம். அந்த நேரத்தில்தான் குடும்பம், அக்கம்பக்கம் அல்லது நாட்டு நடப்பு என்று பலதும் அவர்களுக்குள்ளே அலசப்படும். பூத் தொடுப்பது விரல்களுக்கு அருமையான பயிற்சி என்பது தவிர, மனசுக்கும் ஒரு சிநேகம் பரவியிருக்கும் தருணம் அது. இன்று நகர்புறங்களில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது. சாலையில் பூக்கட்டி விற்கும் பெண்களுக்கு வியாபாரம் அதிகரிக்கிறது என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
மல்லிகைப் பூ தமிழ் நாட்டுத் தமிழர்கள் தினசரி வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கம். நீண்ட சரங்களை தொங்கவிட்டுக்கொண்டு செல்வதில் பலப் பெண்களுக்கு மிக ஆர்வம். மல்லிகையைச் சூடுவதில் ஒரு பெரிய Fashion Statement அடங்கியிருக்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றும்! என் தோழியின் வீட்டில் வீட்டு வேலைகளில் உதவ அமர்த்தப்பட்ட ஒரு பெண் போட்ட ஒரே கண்டிஷன், சம்பளம் தவிர, அவருக்கு தினமும் ஒரு முழம் மல்லிகைச் சரம் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான். சில சமயம் மல்லிகை விற்கும் விலையில் இது சம்பளத்திற்கு ஈடாகவே அமைந்துவிடும் என்பது வேறு விஷயம். கல்லூரிகளில் கொஞ்சம் பாரம்பரியமாக உடை உடுத்தும் பெண்களுக்கு “மல்லிப்பூ” என்று செல்லப்பெயரும் உண்டாம். இது கல்லூரி பரி பாஷையாம்!
ஆனால் இப்போதெல்லாம் நல்ல மல்லிகைப்பூ வாங்குவதற்கும் ஒரு சாமர்த்தியம் அல்லது கொடுப்பினை வேண்டும் என்று தோன்றும் எனக்கு. விதம் விதமான பூக்கடைகளை அலசியாகிற்று. ஆனால் நல்ல அருமையான குண்டு மல்லியின் வாசனையுடன் இருக்கும் மல்லிகைப்பூ கிடைப்பது சில சமயம் அரிதாகி விடுகிறது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்பதுபோல், வெண்மையாக இருப்பதெல்லாம் மல்லிகைப்பூவல்ல என்று சொல்லத் தோன்றுகிறது.
மல்லிகையின் அருமை பெருமை மற்றும் வணிகம் பற்றி 1992ல் நான் எழுதிய ஒருக் கட்டுரை இங்கே.
வருடம் 1992
தமிழகத்தைப் பலவித ருசிகளும், ரசனைகளும் பல திசைகளிலிருந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. வடக்கேயிருந்து சோலே பட்டுரே, கிழக்கிருந்து சைனீஸ் நூடுல்ஸ், மேற்கேயிருந்து பீட்ஸா என்று எல்லா ருசிகளும் தெற்கே குடியேறிவிட்டன. உடையிலும் பல மாறுதல்கள். புடவை, தாவணி, சூரிதார் துப்பட்டாவுக்கு வழி விட்டுவிட்டது. வேட்டி துண்டு, பேண்ட் சர்ட்டாக மாறி பல காலம் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று மட்டும் தமிழகத்தில் மாறவேயில்லை. பூக்களுக்கு இருக்கும் தேவை – அதிலும், குறிப்பாக மல்லிப்பூவிற்கு. இருக்காதா பின்னே? இலக்கியத்திலிருந்து தற்கால காதல் வரைக்கும் மயக்கும் மல்லி என்றே பெயர் பெற்றிருக்கிறதே! தமிழ் சினிமாக்களிலும், கதைகளிலும் வீடு திரும்பும் கணவன் மல்லிகைப்பூ வாங்கி வருவது பல எழுத்தாளர்கள் உபயோகிக்கும் வர்ணனை.
எது எப்படியிருந்தாலும் தமிழக வாழ்வில் பூக்களுக்கு அலாதி முக்கியத்துவம் இருக்கிறது. பெண்களுக்கு ஒரு அலங்கார பொருள் என்பது தவிர, மங்களமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் ஒரு கிணுக்கு மல்லிகைப் பூச்சரம் கொடுத்தால் பரம திருப்தியாவார்கள். தமிழ்ப் பெண்களுக்கு மல்லிகைப்பூவின் – பொதுவாக மலர்களின் இந்த மங்கள அம்சம் மிக முக்கியமானது. பூக்காரப் பெண் வாசலில் வந்து பூ விற்கும்போது, தங்களுக்குத் தேவையில்லையென்றால் “வேண்டாம்” என்று வாய் வார்த்தையாகக் கூட சொல்ல மாட்டார்கள். மங்கலப் பொருளாச்சே – “நாளைக்கு வாம்மா” என்பார்கள் !
சென்னையில் பாரிஸ் கார்னரில் இருக்கும் பூக்கடை பகுதி சென்னையின் முக்கியப் பகுதியாக இருக்கிறது. அந்தப்பக்கம் போனால் மூட்டை மூட்டையாகவும் பந்துகளாகவும் கொட்டிக்கிடக்கும் மல்லிகைப்பூவின் தேவை பிரமிக்க வைக்கும். மொத்த வியாபாரம் நடக்கும் இடம் குறுகலான சந்துதான். கால் வைத்து நடக்க இடம் இருக்காது. பல முறை லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் செய்ய வேண்டி வரும். ஆனாலும் மக்கள் ஆர்வமாக வியாபாரத்தில் முனைந்து இருப்பார்கள். மல்லிகைப் பூ தவிர, கனகாம்ரம், மரு, ரோஜா தாமரை, சம்பங்கி தாழம்பூ, என்று வண்ண வண்ணமாக பூக்கள் பார்க்க ரம்மியமாக இருக்கும். இவைக் கலந்து கட்டிய கதம்பம் தனி அழகுடனும் வாசனையும் மூக்கைத்துளைக்கும்.
“பெரும்பாலான பூக்கள் வெளியேயிருந்துதாங்க வருது. இங்கே மெட்ராஸ் பக்கம் இத்தனை வகை பயிரிடறது இல்லை.” என்கிறார் மாரிமுத்து என்கிற மொத்த விற்பனையாளர். “திண்டுக்கல், சேலம், ஹோசூர் பகுதிகளிலிருந்து இங்கே வரவழைக்கிறோம். தினமும் காலை 8 மணிக்கு அங்கே தோட்ட ங்களிலிருந்து பூக்கள் பறிக்கப்படும். பின்னர் அவை வகைப் பிரிக்கப்பட்டு, தனித் தனி மூட்டைகளாகக் கட்டப்படும். இப்படி மூட்டைக் கட்டும்போது, உள்ளே நிறைய புல், இலைகள் போன்றவை சேர்த்து கட்டப்படும். பூக்கள் வாடாமலும் அவற்றின் வடிவம் சிதயாமலும் இருக்க இந்த ஏற்பாடு. மதியத்துக்குள் இந்த மூட்டைகள் அனைத்தும் தயாராகி லாரிகளில் ஏற்றப்படும். இரவு இந்த லாரிகள் அனைத்தும் கிளம்பி, பொழுது விடிகையில் இங்கே வந்தடைந்து விடும்.” என்கிறார் இந்த வியாபாரி.
பூக்களின் விற்பனையில் முதல் இடம் மல்லிகைப் பூவிற்குதான். எப்படிப் பார்த்தாலும், ஒரு நாளைக்கு குறைந்தது 1000 கிலோ வியாபாரம் ஆகிவிடும். வியாழக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விற்பனையளவு கணிசமாக உயரும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் நடக்கும் விசேஷ பூஜைகள்தாம் காரணம். தவிர, வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிகளுக்கு பூ முக்கியத்துவம் என்பதால் பெண்களிடையே இதற்கு அதிக டிமாண்ட் இருக்கும். விற்பனை விகிதத்தைப் பார்த்தால் இதரப் பூக்கள் ஒரு பங்கு என்றால் மல்லிகை 4 பங்கு விற்கிறது.
சென்ற வருடம் வரையில் மதுரை மல்லி மதுரையிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்டது. இதற்கென்றே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மதுரைக்கும் மெட்ராசுக்கும் போய் வந்து கொண்டிருக்கும். மல்லிகைப் பூ வண்டி என்றே ஏர்லைன்ஸ் பணியாளர்கள் இதை வேடிக்கையாக அழைப்பார்கள். ஆனால் இப்படி செய்வது நாளடைவில் கட்டுப்படியாகவில்லை. ” ஒரு பக்கம் மல்லிகைப்பூவின் விலை ஏறிவிட்டது. இப்படி விமானச் செலவு செய்து இங்கே வரவழைப்பது மிகவும் செலவாகிறது. தவிர, பல நாட்கள் விமானம் வந்து சேர மிகவும் தாமதமாகி விடும். பூக்கள் வாடி, இது விற்பனையைப் பாதித்தது. குண்டு மல்லிகை மொக்காக இருக்கும் வரையில்தான் அதுக்கு மதிப்பு. மலர்ந்து விட்டால் யாரும் வாங்க மாட்டார்கள். விற்பனை சரிந்து விடும். மலர் வியாபாரத்தில் சிறிது கூட நேரம் வீணாகக்கூடாது. பூக்கள் மலர்ந்துவிடும் மல்லிகைப் பூ இரவில் படு மலிவாக விற்கப்படும். நல்ல மொக்கு பூக்கள் கிலோ 50 ரூபாய் என்றால் மலர்ந்தவை கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும்.” என்கிறார் மாரிமுத்து. ஆனால் இன்றும், பம்பாய், டெல்லி, போன்ற நகரங்களுக்கு குண்டு மல்லிகை மதுரையிலிருந்து விமானம் முலம்தான் அனுப்பப்படுகிறது.
இன்று மெட்ராஸின் சுற்று வட்டாரங்களில் குண்டு மல்லிகைத் தோட்டங்கள் நிறைய உள்ளன. இங்கே பயிரப்படும் செடிகளிலிருந்து ஓரளவு நகரின் தேவைக்குப் பயன் படுகிறது. நகரைச் சுற்றி சுமார் 100 கிராமங்களில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப் பயிரடப்படுகிறது. ஒரு ஏக்கரில் சுமார் 30 கிலோ பூக்கள் கிடைக்குமாம். இந்தச் செடிகள் பயிரிடத் தேவையான இளம் நாற்றுகள் தெற்கில் ராமேஸ்வரம் போன்ற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. இந்தக் கிராமங்களில் இருக்கும் மக்கள் மல்லிகைப் பயிரிடுவதை ஊக்குவிக்க மொத்த வியாபாரிகள் கடனுதவி அளிக்கிறார்கள். இதர காய்கறி மற்றும் தான்ய வகைகளைப் போலவே மல்லிகையின் விற்பனையும் விளைச்சலைப் பொறுத்தது. பூக்கடையில் பூ வாங்கி மல்லிகை விற்கும் பெண் ஒருவர் கூறுகிறார். “நல்லா விற்பனையிருக்கும்போது, ஒரு நாளைக்கு எனக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும். பூக்கடையிலேயே அதிகம் பூ இல்லையென்றால் நானும் அதிகம் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதை ஈடுகட்ட, நான் விற்கும்போது அதிக விலை வைத்தால் என் வாடிக்கையாளர்கள் அதிக விலைக்கு வாங்கத்தயங்குகிறார்கள். அப்ப என் விற்பனை மந்தமாகிறது. அதனால் அது போன்ற சமயங்களில் நான் அதிகம் பூ வாங்க மாட்டேன்.”
தனி மனித தேவை தவிர, பூக்கள் மாலையாகவும் நிறைய விற்பனையாகிறது. அரசியல் கட்சிகளின் தேவையை பூர்த்தி செய்யவே பல கிலோக்கள் பூ தேவைப்படும். ஆளுயர மாலைகள் விற்பனை அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ப அதிகரிக்கும். கோவில்களில் திருவிழாக் காலங்கள், திருமணக் காலம், விசேஷ நாட்கள், என்று வருடம் முழுவதும் பூக்களின் தேவையும் விற்பனையும் சுழன்று கொண்டே இருக்கும். இந்த சமயங்களில் பூக்கடை பகுதியில் ஒரு நாள் விற்பனை 3 லட்சத்திற்கும் அதிகமாகவே இருக்கும். சாதாரண நாட்களில் விற்பனை 1 லட்சம் வரையில் இருக்கும்.
பல வணிகர்கள் இந்தப் பூ வியாபாரத்தில் பரம்பரையாக இருக்கிறார்கள். மாரிமுத்துவின் அப்பாவும் மலர் வியாபாரியே. மாரிமுத்துவே சுமார் 40 வருடங்களாக இந்த வியாபாரத்தில் இருக்கிறார். சிவகுமார் என்ற மற்றொரு வணிகர் 50 வருடங்களாக இந்த வியாபாரத்தில் இருக்கிறார்.
விற்பனைக்கு வரும் அத்தனையும் விற்கப்படும் ஒரு வியாபாரம் என்றால் அது இந்தப் பூ வியாபாரம்தான். எத்தனை மூட்டைகள் வந்தாலும் நகரின் தேவை அதிகரித்துக்கொண்டே போவதால் அத்தனையும் விற்பனையாகி விடுகின்றன. மதியம் ஆரம்பித்து, மாலை சூரியன் மறையும் வரையில் படு பிசியாக இந்தப் பூக்கடைப் பகுதியில் வியாபாரம் ஆகும். அப்படி ஒரு வேளை ஏதாவது பூக்கள் மிஞ்சி விட்டால்….?
“உடனே, இப்படி மிஞ்சியப் பூக்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டுவிடும்” என்று முத்தாய்ப்பு வைக்கிறார் மொத்த வியாபாரி, சிவகுமார்.
வருடம் 2015.
பாரிஸ் கார்னரில் இருந்த கொத்தவால் சாவடி கோயம்பேட்டுக்கு இடம் பெயர்ந்தபோது பல பூக்கடை வியாபாரிகளும் தங்கள் கடைகளைப் கோயம்பேட்டுக்கு மாற்றிக் கொண்டனர். ஆனால் பெரும்பாலோர் அருகிலேயே பத்ரியான் தெருவில் தங்கள் கடைகளை போட்டுக்கொண்டனர். இன்று பழைய பூக்கடைபோல் இந்த பத்ரியான் தெருவில் மலர்களின் வாசத்துடன் விற்பனை பரபரப்பாக இருக்கிறது. அதேபோல் கால் வைக்க இடமில்லாமலும், பூ வாங்குபவர்களும், பூ வியாபாரிகளும் – பெரும்பாலும் சில்லறை வணிகர்கள் – பரபரப்பாக ஓடிக் கொண்டும் பழையக் காட்சி அப்படியே இருக்கிறது.
அவ்வப்போது இந்த பத்ரியன் தெருவில் உள்ள இந்தப் பூக்கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை கார்பொரேஷன் முயற்சிகள் எடுத்தாலும், இங்குள்ள வியாபாரிகள் சில்லறை வணிகர்கள்தாம், மொத்த வியாபாரிகள் அல்ல என்று வாதம் செய்து பூக்களின் வியாபாரம் இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் “பூக்கடை” என்ற பெயர் அறியப்படுகிறது. பூக்கடை பஸ் நிலையம், பூக்கடை போலீஸ் ஸ்டேஷன்…. எல்லாமே காலத்தில் உறைந்து போனவை. இன்றும் தமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்து பூக்கள் மூட்டை மூட்டையாக வந்து இறங்குகின்றன. பேசிக்கொண்டும், வாடிக்கையாளர்களைத் தேடியபடியும் கைகள் மட்டும் பூத்தொடுத்தபடி இருக்கும் பெண்களும் மாறவில்லை.
மொத்தத்தில் மல்லிகைப் பூவிற்கு இன்றைய சென்னையில் அன்றைய மெட்ராசில் இருந்த அதே மகிமைதான்.