மதுவிலக்கு சாத்தியங்களும் நிதர்சனங்களும்

madhuvilakku
 
2006 தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, “இந்தத் தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கை,” என்றார் ப. சிதம்பரம். ஆளும்கட்சியாக இருக்கும்போதைவிட எதிர்கட்சியாக இருக்கும்போது தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பது சுலபம்தான். அதனால்தானோ என்னவோ 2011 திமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இருந்தது என்றுகூட யாரும் பார்க்கவில்லை, அது வேறு விஷயம். இன்று 2015 தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கையிலேயே கலைஞர் திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான ஒரு பகுதியை வெளியிட்டுவிட்டார். அதுதான் மதுவிலக்கை அமல்படுத்தும் முடிவு. 2006 தேர்தலில் கலர் டெலிவிஷன், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி ஆகியவை பெற்ற வரவேற்பு போல் மதுவிலக்கும் ஒரு உத்தரவாதமான வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே, பல சமூக ஆர்வலர்களும் சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து மதுவிலக்கு பற்றி பேசிவந்தாலும், பள்ளி மாணவி மதுவருந்தி மயங்கிக் கிடந்த வீடியோ, 4 வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் வீடியோ மற்றும் இன்னும் வேறு சில காட்சிகளும் அண்மையில் பரவலாக இணையத்திலும் ஸ்மார்ட்போன்களிலும் பகிரப்பட்டு அதனால் எழுந்த அருவெருப்பும் இந்த மதுவிலக்கு வேண்டும் எனும் எண்ணத்திற்கு பெரும் வலு சேர்த்திருக்கிறது.
கலைஞர் அறிக்கையின் முதல் பகுதியும் இது குறித்த பரவலான எண்ணத்தை ஒரு கேள்வியாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. 2009 மே மாதத்திற்குப்பின் கருணாநிதியின் ஓர் அறிவிப்பு தமிழகத்தில் வரவேற்பு பெற்றிருக்கிறது. நிச்சயமாக 2016 தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியமான விவாதப்புள்ளியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை (ஆனால், அதற்கு முன்னரே அதிமுகவுக்கு ஆச்சரியமளிக்கும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது).
கிட்டத்தட்ட உலகத்தில் எங்குமே இல்லாத மதுவிலக்கு கொள்கை ஏன் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு பெரிய விவாதப்பொருள் ஆகிறது? இதற்கான தேவை இங்கு இருப்பதாக ஏன் இவ்வளவு பேர் கருதுகிறார்கள்? இவை வியப்பளிக்கும் வினாக்கள். எவ்வளவுக்கு எவ்வளவு குடியை விரும்புபவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு குடியை வெறுப்பவர்களும் தமிழகத்தில் அதிகமோ? இந்தக் கேள்விகளுக்கு விரிவான விடைதேடி சமூக, வரலாற்று பின்னணிக்குள் செல்ல இது இடமல்ல.
என்றாலும், தமிழகத்தின் மிகக் கணிசமான மக்கள் மதுப்பழக்கத்தைப் பிற எந்த, வேண்டுமானால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பிற பழக்கங்களைப் போல் ஆபத்தான, ஆனால் சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ளாமல் தீய பழக்கமாக பார்க்கிறார்கள் என்பது ஆராய்வுக்குரியது. அதில் இவ்வளவு குற்றவுணர்ச்சி ஏன் என்பதும் ஆழமான ஆய்வுக்குரியது.. மதுப்பழக்கம் அநேகமாக எல்லா மனித சமூகங்களிலும் இருந்தாலும், தமிழ்ச் சமூகம் அளவுக்கு இது எங்கும் இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகவில்லை என்றே தோன்றுகிறது. அதன் அறவியல் ஒழுக்கவியல் சார்ந்த பிரச்னைகள் ஒருபுறமிருக்க தமிழகத்தில் மதுப்பழக்கம் மற்றும் மதுவிலக்கு ஆகியவற்றின் சமீபகால வரலாற்றையும், அதன் அரசியல் பொருளியல் கூறுகளையும் பார்ப்பது சுவாரசியமானது (குடியின் அறவியல் ஒழுக்கவியல் பிரச்சினைகள் குறித்து நாஞ்சில் நாடன் அவர்களின், “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று” என்ற கட்டுரையைப் படிக்கலாம்).
தமிழ்ச்சமூகத்தில் சங்ககாலம் தொட்டு குடி இல்லாத ஒரு காலம் இருந்ததாகத் தெரியவில்லை. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் காந்திய சிந்தனைகளின் பாதிப்பில் காங்கிரஸ் இயக்க கொள்கைகளில் முக்கியமான ஒன்றாக மதுவிலக்கு அறிமுகமாகிறது. அதன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான ராஜாஜி தன் ஆயுட்காலம் முழுதும் அதில் உறுதியாக இருந்தார். பெரியார், சொல்லப்போனால் அந்தக் கொள்கைக்காக தனிப்பட்ட முறையில் அதிகம் இழந்தவராக இருந்தபோதிலும், பிற்காலத்தில் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார்.
அண்ணா, அவரது குறுகிய ஆட்சிக்காலதத்தில் மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்ததாகவே தெரிகிறது. ஆனால், அதை ரத்து செய்யச் சொல்லி நிறைய அழுத்தங்கள் அவருக்கு இருந்தன என்றும் தெரிகிறது. அந்த அழுத்தங்களின் தொடர்ச்சியாகத்தான் 1971ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்திருக்க வேண்டும். அது இன்றுவரை அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டாகவே சொல்லி வரப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு தலைமுறை தமிழர்கள் மறந்திருந்த ஒரு விஷயத்தை மறு அறிமுகம் செய்து வைத்தார் என்று தொடர்ந்து அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், அவரே மூன்றாண்டுகளுக்குப் பின்னர் 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வந்தார் என்பது அநேகமாக எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது. அவரது அரசியல் எதிரியான எம்ஜிஆர் தீவிர மதுவிலக்கு ஆதரவாளர் என்பதும், அந்தக் காரணத்தாலேயே அவருக்கு செல்வாக்கு (குறிப்பாக பெண்களிடம்) அதிகரித்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மதுவிலக்கு தொடர்கதையின் இன்னொரு முரணாக, அப்போது மதுவிலக்கைத் தீவிரமாக வற்புறுத்திய எம்ஜிஆரே பிற்பாடு 1981ல் அதை ரத்து செய்ய வேண்டிவந்ததையும் நாம் காண்கிறோம்.
இந்த வரலாற்றில் ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இல்லாத மதுவிலக்குக்கு எதிரான அழுத்தங்கள் ஏன் திமுகவுக்கும் பின்னால் எம்ஜிஆரின் அதிமுகவுக்கும் வரவேண்டும்? காங்கிரஸ் சோஷலிச கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சி புரிந்து வந்தாலும், காமராஜரின் மதிய உணவுத் திட்டம் என்கிற மிக முக்கியமான தேவையுள்ள இலவசத் திட்டத்தைத் தவிர மற்ற கவர்ச்சிகர இலவசங்களை, அரசின் நிதிச்சுமையை அதிகரித்து வரவுக்கு மிஞ்சி அளவில்லாமல் செலவு செய்யும் போக்கினைக் கொண்டு காங்கிரஸ் ஆட்சி செய்யவில்லை. ஆனால் திமுக மற்றும் அதிமுகவின் ஆட்சிகள் அப்படி அமையவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கே ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்ற சாத்தியமில்லாத, ஆனால் அரசியலின் ஆட்டவிதிகளை மாற்றுவதாக விளங்கிய திட்டத்தோடுதான் 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அந்த வாக்குறுதியை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் நிறைவேற்ற முடியாவிட்டாலும் படியரிசி ஒரு ரூபாய் என்று சில முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தினார்கள்.
அதிலிருந்து தொடங்கின, சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கழக அரசுகளின் கவர்ச்சிகர இலவசத் திட்டங்கள். குடிசை மாற்றுத் திட்டம், பிச்சைக்காரர் ஒழிப்புத் திட்டம், கைரிக்ஷாவுக்குப் பதில் சைக்கிள் ரிக்ஷாவை இலவசமாகத் தரும் திட்டம், கண்ணொளித் திட்டம் என்று அரசுக்கு எந்தவித வருவாயும் ஈட்டித் தராத, ஆனால் பெரும் செலவு வைக்கக்கூடிய திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. இவற்றில் சில, நிச்சயமாகவே ஒரு மக்கள் நல அரசு செய்ய வேண்டிய பணிகளாகவும் இருந்ததை மறுக்க இயலாது என்றாலும், அதற்கான போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமல் இவை துவக்கப்பட்டதும் விரிவாக்கப்பட்டதுமே அரசின் நிதிச் சுமையை அதிகரித்தது.
காங்கிரஸ் ஆட்சியின்போது உடனடியாக வருவாய் ஈட்டித்தராத போதிலும் நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களையும், விவசாயத்துக்கும் தொழிற்துறைக்கும் ஏற்றமளிக்கக்கூடிய வகையில் அமைந்த பெரிய அணைக்கட்டு திட்டங்களுக்கும், மனித வளத்தில் முதலீடு செய்த மதிய உணவுத்திட்டத்துக்கும், பின் வந்த திமுக அதிமுக அரசுகளின் பெரும் செலவு பிடிக்கும் திட்டங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டினை காண்பது எளிது. இது போன்ற திட்டங்களால்தான் அரசின் நிதிநிலையில் விழும் பெரும் துண்டினை சமாளிக்க மது விற்பனை வருவாய் மீது திமுக அரசின் பார்வை விழ நேர்ந்தது. அதன் விளைவே, 1971ல் கலைஞரின் மதுவிலக்கு ரத்து. பின் அரசியல் காரணங்களுக்காக அதை 1974ல் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிவந்தாலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த மதகின் கதவுகள் நிரந்தரமாய்த திறந்து கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
கவர்ச்சிகர இலவசத் திட்டங்களை ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டு சென்றது எம்ஜிஆரின் அதிமுக அரசு. 1977ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பற்பொடி, காலணிகள் என்று இலவசங்களை விஸ்தரித்துக் கொண்டே போனார். இதற்கான நிதி ஆதாரம் மதுவிலக்கு அமலிலுள்ள தமிழகத்தில் இல்லை என்பதை அவர் உணரவில்லை. அதனால் தன் தாய் மேல் ஆணையிட்டு வாக்குறுதி தந்ததற்கு மாறாக, 1981ல் மீண்டும் கள்ளுக் கடைகளையும், சாராயக் கடைகளையும் திறந்தார். இந்தச் செயலின் மூலம் கிடைக்ககூடிய வருவாயின் அடிப்படையிலேயே அடுத்து மிகப்பெரும் செலவு வைக்கக்கூடிய சத்துணவுத் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த சமயத்தில், அதை பிச்சைக்காரத் திட்டம் என்று விமர்சித்தக் கருணாநிதியால்கூட பின்னர் அதை ரத்து செய்ய முடியவில்லை. அதில் கூடுதலாக வாரம் ஒரு நாள் முட்டை வழங்கி அதைப் பலப்படுத்த வேண்டித்தான் வந்தது. அதிமுக- திமுக போட்டி அரசியலின் விளைவாக இலவசங்கள் போட்டி போட்டிக் கொண்டு அறிவிக்கப்பட்டன: தாலிக்குத் தங்கம், திருமண உதவி நிதி என்று பலப்பல திட்டங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன, வராதது ஒன்றுதான். இவற்றுக்கெல்லாம் ஈடு கட்டுவதற்குரிய அரசு வருவாய்.
இந்த மக்கள் நலத் திட்டங்களின் உண்மையான பயன் மதிப்பு எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்தாலும், சத்துணவுத் திட்டம் ஐநா சபையால் பாராட்டப்பட்டு இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டும். மேலும், இப்போது அம்மா உணவகம் போன்றவைகள் பிறமாநிலங்கலிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னும் இந்தத் திட்டங்கள் மறையவில்லை. இலவச மின்சாரத் திட்டம் வந்தது. மின்வாரியத்தின் நிதி ஆரோக்கியத்தின் மீது ஒரு மரண அடியாக வந்த திட்டத்தின் பாதிப்பிலிருந்து மின் வாரியம் எப்போதும் மீளவே முடியாமல் போனது.
இந்த இலவசங்கள் ஒருபுறமிருக்க ஒட்டு வங்கி அரசியலின் ஒரு முக்கியப் பகுதியாக, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துக் கட்டணங்கள், சொத்துவரி, தண்ணீர் உபயோக கட்டணங்கள் ஆகிய எதையுமே ஏற்ற முடியாத ஒரு நிலையையும், திமுக – அதிமுக போட்டி அரசியல் சூழல் உருவாக்கியது. ஒரே ஒரு முறை, ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, அன்றைய மிக மோசமான நிதிநிலையை சமாளிக்க சில சிக்கன நடவடிக்கைகளை, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைத்தல் போன்றவற்றோடு பேருந்துக் கட்டணங்கள், பால் விலை உயர்வு போன்றவற்றை அமல்படுத்தியதோடு, அரசின் செலவினங்களை குறைப்பதற்கும் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அது அரசு ஊழியர்களின் பெரும் வேலை நிறுத்தத்தில் முடிந்தது. இந்த வேலைநிறுத்தத்தை ஜெயலலிதா அரசு எதிர்கொண்ட விதமும், இதர கட்டண உயர்வுகளும், 2004 தேர்தலில் அவருக்கு பெரும் தோல்வி கொடுத்தன. அதற்கு சற்று முன்னதாகவே அவர் தான் எடுத்த சில கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திரும்பப் பெற்றதோடு, பெருகி வரும் செலவுகளை சமாளிக்க மதுக்கடைகளை அரசே ஏற்றுச் செயல்படுத்தும் திட்டத்தையும் கொண்டு வந்தார்.
அரசின் கூடிவரும் செலவினங்கள், எந்த வகையிலும் பெருக்கிக்கொள்ள முடியாத வருவாய் இனங்கள், வருவாய் இனங்களை பெருக்கிக்கொள்ள எடுக்கப்படும் மிகச்சிறிய நடவடிக்கைக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டப் போக்கு, மக்களின் அதிருப்தி ஆகியவற்றைச் சமாளிக்க அவர் கண்டடைந்த ஒரே வழி, மது விற்பனை மூலம் அரசின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதென எடுத்த அந்த முடிவுதான். பெருகி வரும் அரசின் செலவினங்களைச் சமாளிக்க மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் மட்டும் இருந்தால் போதாது, விற்பனைத் தொகையே வந்தால்தான் ஆகும் என்ற நிலையில் உருவானதே மதுக்கடைகளை அரசே நடத்தும் அவலம்.
மக்களுக்கு இலவச பொருள் கொடுத்து, அதன் செலவினங்களை ஈடு செய்ய அரசு மது விற்பனை வருவாயை எதிர்பார்ப்பதில் திருக்குறள் அறிந்தவர்கள் ஒரு முரண்நகை காணலாம்- “கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து/ மெய்யறி யாமை கொளல்,” என்ற திருக்குறள் மக்களைக் குறித்து எழுதப்பட்டது- இது அரசுகளுக்கும் பொருந்துவது வள்ளுவர் எதிர்பார்த்திருக்க முடியாத முரண்நகை.
இன்னொரு புறம் மணல் குவாரிகளையும் ஜெயலலிதா அரசுடைமையாக்கினார். இந்த நடவடிக்கைகள், ஓரளவு அரசின் வருவாய் நெருக்கடியை சமாளிக்க உதவின என்றாலும், இந்த வருவாயின் அடிப்படையில் மேலும் பல இலவசத் திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்படாமல் இல்லை.
2001-2006 காலகட்டத்தில் ஓரளவு சரியான நிதி நிலைமை, 2006லிருந்து திமுக கொண்டுவந்த இலவச கலர் டிவி, விவசாயக்கடன் தள்ளுபடி, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச எரிவாயு அடுப்பு, அரசு ஊழியருக்கான விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், புதிய சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கம் போன்றவற்றால் மீண்டும் தள்ளாடத் தொடங்கியது. 2011ம் ஆண்டு தேர்தலின்போது தமிழக அரசின் கடன் சுமை ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது. இதனைச் சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, இதை திமுக அரசின் ஊதாரித்தனத்துக்கும், நிர்வாகத்தின் திறமையின்மைக்கும் சான்றாக்கினார். இந்தப் பிரச்சாரம் அப்போது பத்திரிக்கைகளிலும், மக்கள் மத்தியிலும் வெற்றி பெறவும் செய்தது. கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி என்ற கருணாநிதியின் வழக்கமான வசனத்தை ஜெயலலிதா அன்று பேசினார்.
ஆனால், தேர்தல் போட்டி அரசியலில் வெற்றி பெற அவரும், மடிகணிணி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, கறவை மாடுகள் போன்ற “விலையில்லாப்” பொருட்கள் வழங்குவதாக வாக்குறுதிகளை அளித்தார். அதை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தின் நிதிச்சுமை மேலும் மேலும் வளர்ந்தது- வரவிருக்கும் நிதி ஆண்டின் முடிவில், இரண்டு லட்சத்து பதினோராயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் கடன்சுமை இருக்கும் என்று தெரிகிறது.
போக்குவரத்து கழகங்கள், மின்வாரியம் போன்ற தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் பள்ளிக் கல்வி, கால் நடை மருத்துவமனைகள் போன்ற மிகத் தேவையான கட்டுமானங்கள் அனைத்துமே அநேகமாக நபார்டு போன்ற வங்கிகளின் கடனாலேயே தொடர்கின்றன என்பது மற்றொரு உண்மை. இவற்றையெல்லாம் நாம் எந்தக் காலத்தில் அடைப்போம், அப்படி ஒரு எண்ணமாவது உண்டா, அதற்கான வழி என்ன என்பதெல்லாம் குறித்து யாரேனும் சிந்திக்கிறார்களா என்றே தெரியவில்லை.
இன்று தமிழக அரசு அதன் வருமானத்தில் ஏறக்குறைய 28 சதவிகிதத்தை மது விற்பனையின் மூலமே பெறுகிறது. இந்த வருமானமின்றி, இன்றைய நிலையில் நிச்சயமாக இவ்வளவு இலவசத் திட்டங்களைத் தொடர முடியாது என்பது ஒரு புறமிருக்க அதன் அன்றாட செலவினங்களுக்கே தடுமாற்றம் ஏற்பட்டாலும் வியப்பதற்கில்லை. மத்திய அரசும் எந்த விதமான நிதியுதவியையும் புதிதாக அறிமுகப்படுத்தும் மனநிலையில் இல்லை என்பதும் அது புதியதாக அறிமுகப்படுத்தவிருக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரிக் கொள்கை துவக்கத்தில் மாநில அரசின் நிதி வரவுகளை பாதிக்கும் என்ற நிலையும் மேலும் அச்சமூட்டுகிறது.
இதுவரை தமிழகத்தில் மதுவிலக்கை ஆதரிப்பதாக கூறிவரும் கட்சிகள் எதுவும் ஆட்சி பொறுப்பில் அமரும் நம்பிக்கையே அற்ற சிறு கட்சிகள். ஆனால் அவை அனைத்துமே அரசு அளித்து வரும் சேவைகளின் விலையை எந்த ஒரு சிறு அளவுக்கும் உயர்த்தக் கூடாது என்பதில் பிடிவாதமானவை. ஆட்சியில் அமர்ந்து நிதி நிலைமையை சமாளிக்கும்போதுதான் அவற்றின் உண்மையான முகங்கள் தெரியவரும், அதுவரை அவர்கள் எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரம் உள்ளவை. ஆனால் இதுவரை, தமிழகத்தை ஆளும், ஆண்ட மற்றும் ஆளப்போகும் கட்சிகளான அதிமுகவும் திமுகவும், மதுவிலக்கு குறித்து மௌனமே சாதித்து வந்திருக்கின்றன. இப்போது திமுக மதுவிலக்குக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இதுவரை அதற்கு அதிமுக எந்த ஒரு அதிகாரபூர்வ எதிர்வினையையும் ஆற்றவில்லை (ஆனால் இது தேர்தல் நெருங்க நெருங்க மாறக் கூடும்). மேலும், இன்னும் ஏறக்குறைய ஒரு வருடம் ஆட்சியை நடத்தவேண்டி இருக்கிறது. அடுத்த சம்பளக் கமிஷனும் நெருங்குகிறது. சிக்கலான நிலைதான்.
இந்த நிலையில் மதுவிலக்கு என்பது இலவசத் திட்டங்களின் முடிவாகவே இருக்கும் என்பது உறுதியாகும் நிலையில், இன்று மதுவிலக்கு வேண்டும் என்று வரவேற்கும் எவ்வளவு பேர் இலவசத் திட்டங்களின் நிறுத்தத்தை வரவேற்பார்கள் என்பதும் ஆயிரம் கோடி ரூபாய் கேள்வி. இன்றைய வரவேற்பு நாளைய கோபமாக மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம். அப்போது மீண்டும், கள்ளச் சாராயம், மக்கள் துயர், நிதி நிலைமை என்று அதே பழைய காரணங்களைத் திரும்பவும் கூறி மதுவிலக்கை ரத்து செய்து விட்டால் போயிற்று, அவ்வளவுதானே.

பின்குறிப்பு- இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபின், மதுவிலக்குக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தவரும், காந்தியருமான திரு. சசிபெருமாள் தன் போராட்டத்தின்போதே துர்மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வருகிறது. கன்னியாகுமரியில் அவர் பங்கேற்ற போராட்டத்தின் நீண்டகால இடர்ப்பாடுகள் மதுக்கடைகள் பள்ளிகளைக் காட்டிலும் வழிபாட்டுத் தலங்களைக் காட்டிலும் அரசுக்கு முக்கியமாக உள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பொருளாதார சமன்பாடுகளுக்கு அப்பால் தனிநபர் அறம் என்ற ஒன்று எப்போதும் உண்டு. எவ்வளவு மெலிதாக இருந்தாலும், அதன் குரலாக ஒலித்து வந்தவர் திரு சசிபெருமாள். அவரது மரணம் வருந்தத்தக்கது, தவிர்த்திருக்கப்படக்கூடியது. அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்.

One Reply to “மதுவிலக்கு சாத்தியங்களும் நிதர்சனங்களும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.