கொற்கை – புத்தக அனுபவம்

joe_d_cruz_Korkai_Tamil_Novels_Fiction

கொற்கை நாவலைப் பற்றி எழுதும் முன் அதை வாசிக்க நான் எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களைக் குறிப்பிடுவது சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என் வாசிப்பு வேகம் சராசரியாக மணிக்கு சுமார் நூறு பக்கங்கள். ஆயிரம் பக்கங்களுக்குச் சற்று அதிகமாக இருந்த சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தை வாசித்த அனுபவம் இருந்ததால் அதைக்காட்டிலும் சுமார் நூறு பக்கங்களே அதிகம் கொண்ட கொற்கை நாவலை ஒரு பொருட்டாகக் கருதாமல் வாசிக்க ஆரம்பித்தேன். ஆயினும் முதல் ஐம்பது பக்கங்களுக்குள் வாசிப்பைக் கைவிட்டுவிட இருமுறை உந்துதல் ஏற்பட்டது உண்மை. பாய்மரக் கப்பலில் ஏதோ நடக்கிறது என்பதைத் தவிர காட்சிகள் மனத்திரையில் துலக்கமாகத் தெரியவில்லை. காரணம் முற்றிலும் அன்னியமான ஒரு மொழி. இதற்குமுன் கேள்விப்பட்டிராத – இது தமிழ்தானா என்று சந்தேகிக்கக்கூடிய – வார்த்தைகள். பிறகு ஏதோ பொறிதட்டி கடைசிப் பக்கங்களைப் பார்த்ததும்தான் நம்பிக்கை பிறந்தது. அங்கு பாய்மரக் கப்பலின் படம் வரைந்து பாகங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. வட்டாரச் சொல்லகராதி ஒன்றும் தரப்பட்டிருந்தது. இவைகளை உள்வாங்கிக் கொண்டபின்தான் காட்சிகளைக் கற்பனை செய்வதில் ஓரளவு முன்னேற்றம் வந்தது. அப்போதும் எல்லாமும் விளங்கிவிடவில்லை. அடுத்த கட்டமாக நாவலின் ஆசிரியர் ஜோ டி குருஸை ஃபேஸ்புக் நண்பராக ஆக்கிக் கொண்டு மெஸஞ்சரில் அவ்வப்போது எழும் சந்தேகங்களை அனுப்பினேன். ரத்தினச் சுருக்கமாக பதில்கள் வந்தன. உதாரணமாக ‘பர்னாந்து என்பது Fernandes லிருந்து வந்ததா?’ என்ற கேள்விக்கு, ‘பர்னாந்து Fernando விலிருந்து வந்ததுதான்’ என்ற பதில் கிடைத்தது. கொஞ்சங் கொஞ்சமாக அற்றது அளவறிந்து நாவலை வாசித்து முடிக்கும்போது முழுதாக இரண்டு மாதங்கள் நிறைவுற்றிருந்தன! ஆயினும் அவ்வாசிப்பில் காணக்கிடைத்த முற்றிலும் புதுமையான ஓர் உலகமே இதை எழுதச்செய்கிறது.
1914ல் ஆரம்பிக்கும் நாவல் 2000ம் வருடத்தில் முடிகிறது. இந்த காலகட்டத்தில் – நான்கு தலைமுறைகளும் சேர்த்து – இருநூறுக்கும் மேற்பட்ட கொற்கையின் பரதவர் சமூக மனிதர்கள் வந்து போகிறார்கள். கொற்கையின் முகம் மட்டுமே வாசகர்களிடம் பதியவேண்டும் என்றோ என்னவோ பாத்திரங்களின் தோற்றம் குறித்து நாவலில் பெரும்பாலும் வர்ணனைகள் ஏதும் கிடையாது. ஆகவே அவர்கள் முகமில்லா மனிதர்களாகவே நம் கற்பனையில் நடமாடுகிறார்கள். நாவலில் வசை வார்த்தைகளாகப் பயன்படுத்தப்படும் ‘கெட்ட’வார்த்தைகளின் புழக்கம் அதிகம். கிலுக்கு தண்டல் என்பவரின் பாத்திரப்படைப்பு முற்றிலுமே அவ்வார்த்தைகளை அவர் சரளமாகப் பயன்படுத்துவதில்தான் உண்டாகி வருகிறது. நிச்சயம் அவரைப்போல ஒரு மனிதரை நிஜத்தில் காண்பது அரிதில்லையாயினும் இவ்வளவு கெட்டவார்த்தைகள் கலந்த வாக்கியங்களை அச்சில் படிக்கும்போது ஒருவகையான அதிர்ச்சி ஏற்படாமலில்லை. ஆனால் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்பட்ட வார்த்தைகள் என்று குறைசொல்ல மனம் ஒப்பவில்லை என்பதே அவற்றை ஓரளவுக்கு நியாயப்படுத்தவும் செய்கிறது. இது ஆசிரியரின் முதல் நாவலான ஆழி சூழ் உலகிலும் காணப்பட்ட அம்சம்தான். ஒரு சமூகத்தின் பல்வேறு கூறுகளை வெளிக்காட்ட அதன் மனிதர்களை நகாசு வேலைப்பாடுகள் செய்யாமல் எழுத்தில் அப்படியே படம்பிடிக்கும் வேலையையே ஆசிரியர் தொடர்ந்து செய்துவருகிறார்.
ஒவ்வொரு அத்யாயமும் தலைப்பில் அது நடக்கும் வருடத்தைக் கொண்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் கொற்கை மீனவர்கள் வாழ்வில் சில இடங்களில் நேரடியாக பிரதிபலித்ததை கதை எடுத்துக்காட்டுகிறது. ராஜாஜியிடம் சொல்லாமல் நேரடியாக காந்திஜியிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டு செல்வதால் ஏற்படும் சாதக பாதகங்களைக் கூட ஒரு பாத்திரம் சில வரிகளில் குறிப்பாகப் பேசிச் செல்கிறது. ‘செதம்பரம்புள்ள’ய கைது செய்ததற்காக வெள்ளையர்களின் துணியை வெளுக்க மறுத்த ஒரு சலவைத் தொழிலாளிக்கு கிடைத்த அடி உதையைப் பற்றி ஒரு பாத்திரம் பேசுகிறது. படிக்கும் நாம் வெள்ளையர்களின் அராஜகத்தை நினைத்து கொதிக்க முற்படுகையில், ‘அடிச்சது நம்ம சுதேசிகதான்; வண்ணானுக்கு என்னடா சொதந்திரம்னு….’ என்ற வரிகள் அதிர்ச்சியை உண்டுபண்ணி விடுகிறது. இன்னோரிடத்தில், ‘பேசாம வேதத்துல சேந்துருவமா? பர்னாந்துமார் வேதமில்ல. வெள்ளைக்கார வேதம்’ என்றொரு வசனம். இது வாசகரிடம் கிருஸ்துவமும் அதன் பிரிவுகளும் குறித்த தேடலுக்கு அடிகோலக் கூடியது. இதன் பொருள் ‘கிருஸ்துவர்களாகி விடுவோமா? கத்தோலிக்க மார்க்கமல்ல. Anglican (கிட்டத்தட்ட protestant) மார்க்கம்’ என்பதுதான். இது போன்ற தூண்டல்களினால் உந்தப்பட்டு வேறு விஷயங்களுக்குள் எளிதில் சென்றுவிடுவதாலும் சன்னஞ் சன்னமாகக் கொற்கையைப் படித்து முடிக்க அதிக நாட்கள் தேவைப்படக்கூடும். ‘கப்ப நடைத்தோணி’ கட்டும் ஓர் அத்யாயத்தில் புழங்கும் தொழில் சார்ந்த சொற்களும் அதன் நுட்பங்களும் இனவரைவியல் பொக்கிஷங்கள். இதைப் பதிவுசெய்யக் கீழிரங்கி வேலை செய்திருக்கவும் வேண்டும், கவனக் கூர்மையும் எழுத்தாளுமையும் பெற்றிருக்கவும் வேண்டும். ஆசிரியருக்கு இவை வாய்த்திருப்பதால் ஓர் இனத்தின் வரலாறு இன்று கடலிலிருந்து கரைக்கு வந்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பாத்திரத்திற்கு வலு ஏற்றிக் கொண்டே போகாததாலோ என்னவோ கதைத் தன்மை குறைவாகவும் ஆவணத் தன்மை மிகுந்தும் காணப்படுவதுபோல் தோன்றினாலும் இடையில் வரும் ஒரு கடற்கொள்ளைச் சம்பவம் நம்மை மீண்டும் கனவுலகுக்கு இட்டுச் செல்கிறது. பிலிப் பாத்திரம் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஆரம்பத்தில் வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவனாக அறிமுகமாகி, உழைப்பால் திறமை மிக்க தண்டலாகிக் கடைசி வரியில் நொய்ந்த கிழவனாக உயிர் துறக்கிறது. வருடங்களை மனதிற்கொண்டு சம்பவங்களுக்கிடையில் வாசிப்புத் தொடர்பை ஏற்படுத்த இயலாதவர்களுக்கு பிலிப் தண்டல் பாத்திரம் ஒரு reference line-ம் கூட. வாரக்கணக்கில் கடல்பயணம். அதுவும் காற்றின் திசையை, வேகத்தைப் பொறுத்து பயணத்தின் கால அளவுகள் வெகுவாக வேறுபட்ட அந்தப் பாய்மரத் தோணிகள் காலத்தில் பயணம் தொடங்கிவிட்டால் பெண்வாசனை கிடையாது; கிடைக்காது. விளைவாக ஓரினச் சேர்க்கை வழக்கத்தில் இருந்ததை பாசாங்கில்லாமல் பதிவுசெய்கிறது கொற்கை. ‘சுடுதான்பையன்’ எனப்படும் சமையல் வேலை செய்யும் சிறுவர்கள் இதில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதனால் இது ‘பொடியஞ்சோக்கு’ என்றும் அறியப்படுகிறது. நாடார்கள் கணிசமான அளவில் வேதத்துக்கு மாறிவந்த காலத்திலும் அவர்களின் சாதி ஒற்றுமை குறித்து வரும் பகுதி விரிவான ஆய்வுக்குரிய ஒன்று. அதாவது கணிசமாக மதம் மாறிய போதிலும்கூட கிறிஸ்தவ-இந்து நாடார்களுக்கு இடையில் திருமண உறவுகள் ஏற்படுவதில் ஏதும் பிரச்சனையில்லாமல் பாரத்துக் கொள்கிறார்கள். வியாபாரத்தில் பிரகாசிக்க ஆரம்பித்திருந்த நாடார்கள் தங்கள் சமூகத்தின் தொழில் விருத்திக்காக வேறு எந்த காரணத்தினாலும் தங்களுக்குள் பிளவு வந்துவிடக் கூடாது என்று தொலைநோக்குப் பார்வையுடன் ஆரம்பத்திலேயே யோசித்திருந்தது வியப்பளிக்கிறது. சாதியும் மொழியைப்போல் ஒரே நேரத்தில் ஒன்றுபடுத்தவும் பிளவுபடுத்தவும் செய்கிறது.
1950களின் மத்தியிலிருந்து கதை வேகம் பிடித்தது போன்ற உணர்வு. காரணம் அந்த காலகட்டத்திற்குப் பின் வந்த தமிழக அரசியல் மாற்றங்கள். காமராஜ், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என்று வரிசையாக கதைமாந்தர்களின் வழியாக அரசியல் காட்சிகளும் ஆங்காங்கே மின்னலடிக்கின்றன. இந்த இடங்களில் Forrest Gump திரைப்படம் நினைவில் மீண்டது. நாவலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் (soliloquy) உத்தி. அனேக பாத்திரங்கள் இதைச்செய்கின்றன, பெரும்பாலும் அத்யாயங்களின் இறுதியில். எந்தத் தொடர்புமில்லாத பல விஷயங்கள் வரிசையாக எழுத்தாளர் மூளையில் மோதிச் செல்கையில் அவற்றை எழுத்தில் வடிக்க இதுதான் நல்ல வழியாக இருக்கும்போலும். ஓரளவுக்கு சம்பவங்களின் பரபரப்பைக் குறைத்து வாசகரைச் சமநிலைப்படுத்துவதிலும் இது உதவியிருக்கிறது. ஒரளவு பைபிள் வாசிப்பு உள்ளவர்களுக்கு ஆங்காங்கு நுட்பமான வாக்கியங்கள் தென்படும். உதாரணமாக, “…மூத்த மகனாய் இருந்தும் உண்டு குடித்துச் சந்தோசித்து இருந்தாரேயல்லாமல் தொழில் காரியங்களில் ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை” என்ற வரியை வாசிக்கும் ஒருவர் “Eat, drink and rejoice” என்ற விவிலிய வரிகளை வாசித்திருந்தால் கூடுதல் களிப்புண்டாகும்.
இது சரளமாக வாசிக்கும்படியான அமைப்பிலுள்ளதா? இதை எழுதினால் வாசிப்பவரக்கு உவக்குமா? ஓர் அத்யாயத்தின் முடிவு அடுத்த அத்யாயத்தை வாசிக்கத் தூண்டுகிறதா? போன்ற எந்தக் கேள்விகளைப் பற்றியும் ஜோ டி குருஸ் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. பரதவர் வாழ்வியலின் சிறு தகவல்கூட விடுபட்டுப் போய்விடலாகாது என்பதில்தான் அதீத கவனமும் உழைப்பும் செலுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கும் பொதுவாக தன் படைப்புக்காக வாதாடுவதிலோ படைப்புக்குள் புகுந்து மேலதிக விளக்கம் அளிப்பதிலோ எந்த விருப்பமும் இல்லை என்பதை இருமுறை நேரடி அனுபவத்தில் கண்டேன். முதலாவது என் கடிதத்துக்கு கிடைத்த ஒரு பதில். கொற்கையைத் திரைப்படமாக எடுத்தால் அதன் வசனங்களில் கெட்ட வார்த்தைகள் கட்டாயம் தணிக்கை செய்யப்பட்டுவிடும். ஆனால் அதையே புத்தகமாக எழுதினால் இலக்கியத்தின் பகுதியாகிவிடுகிறது என்று எழுதி, மற்ற படைப்பாளிகளின் கதைகளிலிருந்தும் சில உதாரணங்களை மேற்கோள்காட்டி படைப்பிலக்கியவாதிகள் எந்த அளவுக்கு கெட்ட வார்த்தைகளைப் பதிவுசெய்யலாம் வேண்டும் என்பதற்கு அளவுகோல் ஏதுமுண்டா என்று கேட்டிருந்தேன். அவரிடமிருந்து வந்த பதில், “You are a good reader and writer. You are able to express and impress”. கேள்விக்கு இது நிச்சயம் பதிலில்லை என்றாலும் ஆசிரியர் குறிப்பாக இந்த விஷயத்தைக் குறித்துப் பேச விரும்பவில்லை என்பதாக நான் அதை அப்போது எடுத்துக்கொண்டேன். ஆனால் இரண்டாவது சம்பவமே என்னை முற்கூறிய முடிவுக்கு வரச்செய்தது. கடந்த மார்ச் மாதம் ஜோ டி குருஸ் சிங்கப்பூர் ஓர் இலக்கிய விழாவில் பங்கேற்க வந்திருந்தபோது ஒரு வாசகர் கொற்கையின் முத்துச்சிலாபம் பற்றி ஒரு கேள்வி கேட்டார். ‘நாவலிலேயே அனைத்தும் இருக்கிறது. கவனமாக வாசித்துப் பாருங்கள்’ என்பதே ஆசிரியரது பதில். எனக்கு “எழுதுவதோடு என் வேலை தீர்ந்தது” என்று ஜெயகாந்தன் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. தன் படைப்புகள் அதன் இலக்கியத் தன்மைக்காகவோ தகவற்செறிவுக்காகவோ விவாதிக்கப்படுவதை விட படைப்பின் மூலம் பரதவ சமூகம் குறித்த புரிதல் மற்றவர்களிடையே மேம்படும் விதத்தில் விவாதிக்கப்படுவதையே ஆசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது.
கொற்கை நாவலை வாசித்துவிட்ட ஒருவருக்குக் கடற்கரையை இனி காணும்போதெல்லாம் கடற்கரைச் சமூகத்தின் நினைவலைகளும் வந்து மோதிச்செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.