ஜூன் 1985,
கடையைச் சற்று முன்னதாகவே அடைத்துவிட்டு ஏரிக்கரைக்குச் செல்வதாக இருவரும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார்கள். அருமையான கோடை வானம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீலமாக மிளிர்ந்தது. காரை பார்க் செய்துவிட்டு காம்பிங் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் பீச் மரம் ஒன்றின் கீழ் ஒரு பிளாங்கெட்டை விரித்து இருவரும் படுத்துக்கொண்டார்கள். டாம் காதில் ஹெட்போன் பொருத்திக் கொண்டு ஏரியைப் பார்த்தபடி அவனுக்கு மிகவும் பிடித்த ஆல்மேன் பிரதர்ஸ் பாடல்களைக் கேட்கத் தொடங்கினான். ஜென்னி அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்திருந்தாள். இம்மாதிரியான டே அவுட்டிங்குகளில் அவர்கள் அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஒன்றும் பேசாமல் அகண்ட வானத்தின் கீழ் தங்களின் அருகாமையை உணர்ந்தபடி படுத்திருப்பதே அவர்களிருவருக்கும் பிடித்திருந்தது. இசையில் லயித்திருக்கும்போது டாமின் கண்கள் ஒரு கணம் செருகிப்பின் விழித்தெழும். எங்கோ நெடுந்தூரம் பயணித்து வந்தது போல் அவன் முகத்தில் ஒரு தொலைவு தென்படும். அந்த தொலைவுப் பார்வையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் சிரித்துவிடுவாள். இப்போதும் லேசாக சிரித்துவிட்டுதான் புத்தகம் படிக்கத் தொடங்கினாள்.
முப்பது பக்கங்களுக்கு மேல் அவளால் படிக்க முடியவில்லை. டாம் பக்கம் திரும்பி அவன் தலையை வருடினாள். டாம் ஹெட்போனை காதிலிருந்து எடுத்துவிட்டு அவளைப் பார்த்து முறுவலித்தான்.
“நான் என்ன படித்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா ?”
புத்தகத்தின் அட்டையை ஒரு முறை பார்த்துவிட்டு “தெரியாது” என்பது போல் சமிக்ஞை செய்தான்.
“சொன்னால் நம்பமாட்டாய், இந்த அற்புதமான கோடை நாளில், லிஸ்ஸி போர்டென் என்ற கோடாலிக் கொலைகாரியைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.”
“லூஸர்,” டாம் கேலி செய்வது போல் பாவனை செய்தான்.
“ஆமாம். நிச்சயமாக…. சரி சற்று நேரம்.ஜாகிங் செய்துவிட்டு வருகிறேன். ஹாண்ட் பாக் பத்திரம்… தூங்கி விடாதே.” ஜென்னி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நீர்ப்பரப்பை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
ஓடும் வேகத்திற்கேற்ப எண்ணங்கள் ஒரு தாளக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுவதை அவள் உணர்ந்தாள். உதிரி எண்ணங்கள் அனைத்தையும் உதறிவிட்டு மனம் உடலின் குவியத்துடன் இணையும் ஒருவித மோன நிலை… நீரின் அருகே ஓடக்கிடைத்தவர்கள் அனைவருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் என்று நினைத்துக் கொண்டாள்.
பாதை புதர்களும் மரங்களும் மண்டிக்கிடந்த பகுதிக்குள் வளைந்து சென்றது. வெட்டவெளியில் நீரருகே ஓடிக்கொண்டிருக்கையில் இருந்த பாதுகாப்பு மரங்களிடையே மறைந்துவிட்டதை உணர்ந்தபடியே ஓடினாள். ஏதோ உதிரி எண்ணத்தைப் போல் பார்வையின் விளிம்பில் ஓர் உருவம் திடீரெனத தோன்றி அவளைத் திடுக்கிடச் செய்தது. அதைப் பார்க்காததைப் போல் ஓடிச்செல்ல முயற்சித்தாள்.
“நைஸ் டே, நன்றாக அனுபவியுங்கள்” என்று அவ்வுருவம் வாழ்த்தியது. ஓட்டத்தை நிறுத்தாமலே தலையை மட்டும் ஒரு கணம் திருப்பி “தேங்ஸ், யூ டூ” என்ற சம்பிரதாயமாக பதில் சொல்லிவிட்டு வேகத்தை அதிகரித்தாள். கிட்டத்தட்ட மூன்று மைல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓடியது அவளுக்கு வியப்பளித்தது. பின்னர் அதிக தூரம் ஓடிவிட்டோமோ என்ற பயம் ஏற்படவே வந்தவழியே திரும்பி ஓடத் தொடங்கினாள்.
சரிந்து விழுந்த பெரும் கருவாலியொன்றின் அடிமரத்திற்குப் பின்னிருந்து எழும்பிய உருவத்தின் லெதர் ஜாக்கெட் அவளுள் எச்சரிக்கை மணிகளைத் தட்டிவிட பாதையை ஒட்டியிருந்த சரிவிலிறங்கி மனலை நோக்கி விரைந்தாள். மணலில் ஓடும்போதுதான் தன் தவற்றை உணர்ந்தாள். வேகம் குறையக் குறைய அவ்வுருவம் வெகு அருகே வந்துவிட்டதை அவள் உணர்ந்த அதே கணத்தில் அது முதுகில் பாய்ந்து அவளைக் கீழே தள்ளியது. நீந்தத் தெரியாத ஒருவர் முதல் முறையாக மணலில் நீந்த முயல்வது போல் கைகால்களை ஒருங்கிணைவின்றி தாறுமாறாக இயக்கி முதுகிலழுந்திய பாரத்தை உதறித்தள்ள முயற்சித்தாள். அது முதுகில் முட்டியிட்டு பிடறியைப் பிடித்து முகத்தை மணலில் அழுத்தி அவளை மூச்சுத் திணற வைத்தது. அதன்பின் கயிற்றைக் கொண்டு ஒரு கட்டுமரத்தை மணலில் இழுத்துச் செல்வது போல் தலைமுடியைப் பற்றி அவ்வுருவம் அவளை மணல்குன்றுகளுக்கு இழுத்துச் சென்றது.
“இப்போது நான் சுகப்படும்படியாக சில காரியங்களை நீ செய்யப் போகிறாய்,” என்று கூறியபடி அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி இறங்கின. கொடுங்கனவொன்றை அழிக்க முயற்சிப்பது போல் கண்களை இறுக்க மூடியிருந்தாள், பற்கள் கீழுதட்டைக் கவ்வியிருந்தன. முகத்தில் வழிந்த வியர்வையை அவன் நக்கியதால் ஏற்பட்ட அருவெறுப்பின் உந்துதலால் முட்டியை சட்டென உயர்த்தி அவன் குறியை பலம் கொண்ட மட்டும் தாக்கினாள். “பிட்ச்” என்று அலறியபடி அவள் உடலிலிருந்து சரிந்து வலப்பக்கம் உருண்டான். அந்த அன்னிய உடல் தன் மீது இப்போது படர்ந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அவள் எழுவதற்குள் அவன் கை ஒரு கத்தியுடன் அவள் கழுத்தை வளைத்தது .“இப்போது நீ சாகப் போகிறாய்” என்று கூறி அவள் முகத்தை அருகிலிருந்த பாறையொன்றில் பலமாக மோதினான். ரத்தம் வழிந்தோடியதைப் பொருட்படுத்தாமல் அவன் உதடுகள் அவளை முத்தமிட முயன்றன. ரத்தத்துடன் சுயநினைவும் சிறிது சிறிதாக வடிந்து செல்வதை உணர்ந்தவுடன் அவன் முகத்தை ஒரு முறையேனும் சரியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற சிந்தனை மட்டும் அவளுள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்த்து. “பிளாண்ட் முடி, காக்கேசிய இனம், மொழுக்கையான விரல்கள், மீசை….” என்று அவன் அங்க அடையாளங்களை மனதில் பட்டியலிட்டுக் கொண்டாள். அவன் கைகள் அவள் ஆடைகளைக் களையத் தொடங்கின….
oOo
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய முதல் இரண்டு நாட்களுக்கு அவளால் ஆண் சகவாசத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் சுயத்தின் அந்தரங்கத்தை நடுச்சந்தியில் அம்மணப்படுத்தி அதன் மீது எவனோ மலம்கழித்துவிட்ட அருவெறுப்பை அவள் நாள்தோறும் உணர்ந்தாள். டாம் அவளுக்குத் தேவையான உணவைப் படுக்கையறைக்கு வெளியே வைத்துவிட்டு சோஃபாவில் நாள் முழுதும் டிவியை வெறித்தபடி கிடந்தான். மூன்றாவது நாள் ஷெரீஃப் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்த்து.
ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே பார்க்கக்கூடிய அறைக் கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அறையினுள் ஒன்பது நபர்கள் எண்களிடப்பட்ட பலகைகள் கழுத்தில் தொங்க நின்று கொண்டிருந்தனர். இடதுவலமாக ஒவ்வொரு முகத்தையும் உன்னிப்பாகப் பார்க்கத் தொடங்கினாள். நான்காவது முகத்தின் பிளாண்ட் கேசத்தையும், மீசையையும் கண்டவுடன் அவள் பிடரிமயிர் சிலிர்க்கத் தொடங்கியது. குரோதமும் வலியும் கலந்த ஏதோ ஓன்று அவள் அடிவயிற்றிலிருந்து எழும்பியது. வாந்தியெடுத்தபடியே அவனை அடையாளம் காட்டினாள். ஷெரீஃபின் ஆட்கள் ஸ்டீபென் பாட்ரியை ஏற்கனவே கண்காணித்து கொண்டிருந்திருந்தார்கள். இதற்கு முன் சிறு சிறு திருட்டுகளுக்காகவும், ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டியதற்காகவும் அவன் சிறைக்குச் சென்றிருந்தான். டி.ஏ அலுவலகம் உடனடியாக மூன்று குற்றங்களுக்காக அவன் மீது வழக்குத் தொடுத்தது . விரைவில் ஜுரி விசாரணை துவங்கும் வகையில் தேதியும் குறிக்கப்பட்ட்து.
வழக்கு முடிந்தபின் அளித்த பேட்டியொன்றில் நீதிபதி டேவிட் ஹேன்ஸ், ஜென்னியை ஒரு “வலுவான சாட்சியாளர்” என்று குறிப்பிட்டார். எவ்விதக் குழப்பமுமின்றி அவளால் கோரமான அந்நிகழ்வை மிகத் தெளிவாக கோர்ட்டில் ஜூரியிடம் காட்சிப்படுத்த முடிந்தது. பாட்ரி தரப்பில் அளிக்கப்பட்ட அலிபிக்களுக்கான (சம்பவ தினத்தன்று குடும்பத்தாருடன் சிமெண்ட் கொட்டும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக டிபென்ஸ் தரப்பு வாதாடியது) சாட்சிகள் அனைவருமே அவன் குடும்பத்தாராக இருந்ததால் அவை ஜூரியிடம் எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை. மேலும் அவன் அன்று அணிந்திருந்த ஆடைகளில் ஒரு துளி சிமெண்ட் துகளுக்கான ஆதாரம்கூடக் கிடைக்காதது அவ்வாதத்தை மேலும் பலவீனமாக்கியது. மூன்று குற்றங்களுக்காக ஜூரி அவனுக்கு முப்பத்திரெண்டாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கியது.
oOo
குற்றவாளி தண்டிக்கப்பட்டபிறகும் குற்றத்தின் பற்றிழைகள் எக்காலத்திற்கும் நீண்டு செல்வதை அவள் உணர்ந்தாள். டாம் தன்னை அரவணைத்துச் செல்லவேண்டும் என்று விரும்பினாலும் அவன் அவள் மீது அக்கறையாக இருக்கும் வேளைகளில் “விலகி இரு. என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று அவன் மீது விஷம் கக்கினாள். சாலையில் எவரேனும் அவளருகே சீட்டியடிக்க நேரிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிடுவாள். ஆண்கள் மீதான கோபமும் அருவெறுப்பும் எப்போது வேண்டுமானாலும் வெடித்தெழக்கூடிய ஓர் எரிமலையாக அவள் மாறிவிட்டதைத் தடுக்க வழி தெரியாமல் டாம் திணறினான்.
1986-ல் சமூக சேவகரொருவர் அளித்த ஆலோசனை அவளுக்கு ஒரு தெளிவை அளித்தது. அதன் உந்துதலால் மறுநாள் கிராஸ் கண்ட்ரி ஸ்கீக்களை மாட்டிக் கொண்டு சம்பவம் நடந்த அதே இடத்துக்குச் சென்று. “ஸ்டீவ் நீ இனிமேலும் என்னை பாதிப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு வீடு திரும்பினாள். ஆனால் அவள் கட்டுப்படுத்த இயலாத புறவுலகுச் சம்பவங்கள் ஸ்டீவை மீண்டும் மீண்டும் அவள் வாழ்க்கையில் புகுத்தியது. ஸ்டீவ் ஆதாரத்தை மறு ஆய்வு செய்யுமாறு மேல்முறையீடுகள் செய்தான். ஓவ்வொரு முறையீடும் நிராகரிக்கப்பட்டது என்றாலும் அவன் விடாப்பிடியாக முயற்சித்தது அவளை நெருடியது.
oOo
செப்டம்பர், 2003.
அவனை ஒரு போதும் முற்றிலும் மறந்துவிட முடியாது என்றாலும் ஜெனீன் காலையில் தொலைபேசியில் அழைத்தது அதை மீண்டும் நேரடியாகவே நினைவுபடுத்தியது. பதினெட்டாண்டுகளில் எத்தனை சிறைச்சாலைகளுக்குச் சென்றிருப் பாள், எத்தனை கைதிகளுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருப்பாள், எத்தனை உளவியல் நிபுணர்கள், எத்தனை பெண்ணியக் கூட்டங்கள்…. இவை அனைத்தையும் மீறி எப்போதோ நடந்த பிரபஞ்ச நிகழ்வின் அதிர்வுகள் பல யுகங்களுக்குப் பின் வந்தடைவதைப் போல் அச்சம்பவத்தின் வன்மம் சில இரவுகளில் ஏதிர்பாராத விதங்களில், ஒரு முறை டாமுடன் உடலுறவு கொண்டிருக்கும்போதும்கூட, அவளை ஸ்தம்பிக்கச் செய்துவிடும். ஜெனீன், மீட்பு நீதி முயற்சியொன்றைப் பற்றி பேச வருவதாகக் கூறினாள். டாம் வேலை விஷயமாக இரண்டு நாடகள் வெளியூர் சென்றிருந்தான்.
டாம் ஜெனீன் இருவரும் ஒன்றாக வாசலில் நுழைந்தது அவளுக்கு ஆச்சரியம் அளித்தாலும் அவர்களின் பேயறைந்த முகங்கள் அவள் உள்ளுணர்வின் ஆழத்தில் சட்டென ஜெனீன் சொல்லவந்ததை அவள் வாய் திறப்பதற்கு முன்னதாகவே இவளுக்குப் புலப்படுத்தியது.
“ஜென்னி நான் சொல்லப்போவதை தயவு செய்து ஆவேசப்படாமல் கேள். சம்பவ தினத்தன்று போலீஸ் சாட்சிப் பொருளாகக் கைப்பற்றிய ஆடைகளிளிருந்து கிடைத்த தலைமயிர்ச் சுருள்களை சில நாட்களுக்கு முன் டிஎன்ஏ பரிசோதனை செய்தார்களாம்.”
“ம்ம்… ?”
“…டிஎன்ஏ ரிஸல்ட்ஸ் அவை கண்டிப்பாக ஸ்டீவ் பாட்ரியுடையது அல்ல என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டன. மேலும் அவை தற்போது 60 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கிரெக் மேசனுடையது என்பதையும் அப்பரிசோதனை நிரூபித்து விட்டது. அவனுடைய பட்டப்பெயர் சாண்ட்மேனாம், அவன் பெரும்பாலும் மணல் குன்றுகளில் தனது பலிக்காகக் காத்திருப்பதனால் அந்தப் பெயர் வந்திருக்கலாம்… சொன்னால் நம்ப மாட்டாய், பத்தாண்டுகள் சிறைக்கு வெளியே இருந்த சமயத்தில் கிரெக் ஸ்டீவின் ஒவ்வொரு மேல்முறையீட்டைப் பற்றிய தகவலையும் ஒரு “ஸ்கிராப்” புத்தகத்தில் சேகரித்திருக்கிறான். நீ இரண்டு வாரங்களில் க்ரீன் பே சிறைச்சாலையில் பெண் வதையைப் பற்றி பேசப் போகிறாயே, அதே கூட்டத்தில் உன்னிடமிருந்து பத்து இருபது அடி தூரத்தில் அவனும் அமர்ந்திருக்கலாம். ஹவ் க்ரீப்பி இஸ் தட் ? “
ஜென்னி நிற்பதற்குத் திராணியில்லாமல் சோபாவில் அமர்ந்துகொண்டாள். சில கணங்கள் அவளுக்கு எதையுமே பேசத் தோன்றவில்லை. பிறகு இனியும் பேசாதிருந்தால் அழுதுவிடுவோம் என்று தோன்றியது.
“18 ஆண்டுகள் 1 மாதம் 13 நாள் ஜென்னி, அநியாயமாக ஒரு நிரபராதியை என் பழிவாங்கும் வெறிக்குக் காவு கொடுத்துவிட்டேன். அதற்கும் மேல் ஒரு செக்ஸ் பெர்வர்ட் பத்தாண்டுகள் சுதந்திரமாக வெளியே திரிவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்…அதனால் எத்தனை பெண்கள் பலியானார்களோ “
அழக்கூடாது என்ற வைராக்கியத்தையும் மீறி அவள் அழத் தொடங்கினாள்.
“என்ன பைத்தியக்காரத்தனம் ஜென்னி, உனக்கே தெரியும் இது நீ வேண்டுமென்றே செய்த தவறில்லையென்று… எத்தனை நேரம் சிறைச்சாலைகளில் வேலை செய்திருப்பாய், எத்தனை பெண்களுக்கு தைரியத்தையும் ஆறுதலையும் நீ அளித்திருக்கிறாய்…. தயவுசெய்து உன்னையே நொந்துகொள்ளாதே…” டாம் அவளை தேற்ற முயன்றான்.
“இல்லை டாம், நான் பிறந்ததிலிருந்து செய்த அத்தனை நற்செயல்களையும் தராசின் ஒரு தட்டிலிட்டால்கூட அது மறு தட்டிலிருக்கும் ஸ்டீவின் இழப்பை ஈடு செய்யாது. இந்தச் சிலுவையை நான் வாழ்நாள் முழுதும் சுமந்துதான் தீரவேண்டும்…. “
செப்டம்பர் 11 அன்று ஸ்டீவ் பாட்ரி விடுதலை செய்யப்பட்டான். அவனது விடுதலை விஸ்கான்சனில் பரபரப்பு ஏற்படுத்தியது. செனடர் ஒருவர் அவனுக்காக ஸ்டீவ் பாட்ரி டிரஸ்ட் ஃபண்ட் ஒன்றைத் தொடங்கினார். பேப்பரிலும் ரேடியோவிலும் அவனைப் பற்றிய தகவல்களும் பேட்டிகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. ஜென்னி மீண்டும் கலவரமடைந்தாள். டாம் தன்னால் முடிந்தவரையிலும் அவளைத் திசைதிருப்ப முயன்று தோற்றுப்போனான். தான் தனியே இருக்க வேண்டுமென்பதற்காக ஜென்னி அவனை ஒரு பிரயாணம் மேற்கொள்ளச் சம்மதிக்க வைத்தாள். டாம் விடைபெற்றுச் சென்றபிறகு உபயோகிக்கப்படாத ரயில் தண்டவாளப்பாதை ஒன்றில் மணிக்கணக்காக ஓடினாள். ஸ்டீவ் குற்றம் செய்யவில்லை என்பதை அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டாலும் பதினெட்டாண்டுகள் கொடுங்கனவுகளில் மீண்டும் மீண்டும் எதிர்கொண்ட அந்த முகத்தை அவளால் உணர்வுபூர்வமாக மன்னிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் எதிரே ஒரு ரயில் வராதா என்று ஏங்கியபடியே ஓடினாள்.
பேப்பரில் ஸ்டீவின் படத்தைப் பார்த்தபோதெல்லாம் பிடரிமயிர் சிலிர்க்க தன்னை ஒரு குற்றவாளியாகவே அவள் உணர்ந்தாள். ஆனால் அதே பேப்பரில் கிரெக்கின் படம் அவளிடம் எந்த ஒரு எதிர்வினையையும் ஏற்படுத்தாதது அவளை மிகவும் குழப்பியது. ஸ்டீவ் பற்றிய அவளது வன்ம உணர்வுகளை அவளால் ஒருபோதும் கிரெக்கை நோக்கித் திசைதிருப்ப முடியாதென்றும், ஸ்டீவை நிரபராதியாக பார்க்கப் பழகிக்கொள்வதுதான் இப்பிரச்சினைக்கான ஒரே தீர்வென்றும் உளநோய் மருத்துவர் உபதேசித்தார். அதன்படி, தான் அவனைச் சந்திக்க விரும்புவதாக ஸ்டீவிற்கு ஒரு கடிதமெழுதினாள். பதில் வராததால் மீண்டும் மீண்டும் எழுதினாள்.
oOo
2004-ஆம் ஆண்டில் ஒன்றரை வருடத்திற்குப் பிறகு ஸ்டீவிடமிருந்து பதில் வந்தது. சந்திப்பதில் ஆட்சேபணையில்லை என்று எழுதியிருந்தான். சட்டப்பேரவைக் கட்டிடத்தில், இரண்டு அறைகள் கொண்ட அலுவலகம் ஒன்றில் அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இன்னோசென்ஸ் பிராஜெக்ட்டின் வழக்கறிஞரொருவரும் உடனிருந்தார். பிடரிமயிர் சிலிர்க்கத் தொடங்குவதை உணர்ந்து ஜென்னி சட்டென்று பேச்சைத் தொடங்கினாள்.
“ஸ்டீவ், உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்றால் நாம் முதலில் கைகுலுக்கிக் கொள்வோமா ?”
ஸ்டீவ் பதிலேதும் கூறாமல் அவளது கையை தனது பெரிய கரங்களில் பற்றியபடி சில கணங்களுக்கு மௌனமாய் பார்த்திருந்தான். முதலில் தயங்கினாலும் ஸ்டீவ் சகஜமாகவே பேசினான். சிறையிலிருந்த சமயம் மருமகன் ஒருவனை கார் விபத்திற்கும் பாட்டியை வயோதிகத்திற்கும் இழந்ததைப் பற்றியும் அவர்கள் இறுதிச் சடங்குகளுக்குக் போக முடியாத வருத்தத்தைப் பற்றியும் பேசினான். மனைவி தன்னை விவாகரத்து செய்ததையும் குழந்தைகள் தன்னை விட்டு விலகியதையும் நினைவுகூர்ந்தான்.
ஜென்னி அழாக்குறையாக அவனுடைய ஒவ்வொரு இழப்பிற்கும் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.
“ நான் உங்களைக் குறை கூறவில்லை. எனக்கு போலீசின் மீதுதான் கோபம். அவர்கள்தான் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள். தயவு செய்து உங்களை நீங்களே தண்டித்துக் கொள்ளாதீர்கள். “
பாலியல் குற்றத்திற்காக ஏற்கனவே சிறைக்குச் சென்றுவந்த கிரெக் மேசனை இரண்டு வாரமாக போலீஸ் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். சம்பவ தினத்தன்று காலையில் ஒரு முறை அவனைக் கண்காணித்துவிட்டு, வேலைப் பளு காரணமாக மதிய கண்காணிப்பைத் தவறவிட்டார்கள். அந்த இடைவெளியில்தான் கிரெக் ஜென்னியை கற்பழித்திருக்கிறான். இப்படிப்பட்ட ஒருவனை “லைன்–அப்பில்” நிறுத்தாததுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய குற்றம் என்று ஸ்டீவ் வருத்தப்பட்டுக் கொண்டான். பின்னர் ஜென்னியையும் அவளது கணவனைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தான்.
வழக்கறிஞர் கைக்கடிகாரத்தை இருமுறை பார்த்தபோதுதான் இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்தார்கள். விடைபெற்றுக் கொள்வதற்கு முன் ஜென்னி ஸ்டீவை ஒரு முறை அணைத்துக் கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொண்டாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்
“ஸ்டீவ் நான் உங்களுக்குச் செய்த மிகப் பெரிய தவறுக்காக என்னை தயவுசெய்து மன்னித்து விடுங்கள்”
“அது நடந்து முடிந்த கதை. அதை நீங்கள் மறந்து விடுங்கள்” என்று ஸ்டீவ் ஆறுதல் அளிக்கையில் அவள் கண்களில் நீர் ததும்பியது.
oOo
நவம்பர், 2006.
குளிரலாமா வேண்டாமா என்று குழம்பியிருந்த ஒரு காலை. ஜென்னி அலைபேசியில் அழைத்தாள்.
“சற்றுமுன் விசித்திரமான ஒரு தகவல் கிடைத்தது. ஸாண்டி ஹண்டர் என்ற பெண் புகைப்படக்காரரை அக்டோபர் இறுதியிலிருந்து காணவில்லையாம். விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு காரை போட்டோ எடுப்பதற்காக அவள் கடைசியாக ஒரு இல்லத்திற்குச் சென்றிருந்தாளாம். அது யாருடைய இல்லம் தெரியுமா? ஸ்டீப் பாட்ரியுடையது. போலீஸ் அவன் இல்லத்தை இப்போது சோதனை செய்து கொண்டிருக்கிறது . அன்ஃபக்கிங் பிலீவபிள், ரைட்? அது எப்படியாவது போகட்டும், நீ இதில் தலையிடாதே ஜென்னி, ஜஸ்ட் ஸ்டே அவுட் ஆஃப் இட், ஒகே ? “
“ஓகே” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து விட்டு போனை அணைத்துவிட்டாள். ஆனால் தான் என்ன செய்யவேண்டும் என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. உள்ளூர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டாள். தனக்கு இழைக்கப்பட்ட மாபெரும் தீங்கைக்கூட பெருந்தன்மையுடன் மன்னிப்பதற்கான கருணை கொண்ட எந்த ஒரு மனிதனாலும் இப்படி ஒரு குற்றத்தைச் செய்திருக்க முடியாது என்று வாதாடினாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஸ்டீவ் பாட்ரி ஆட்டோ ரிப்பேர் கடையின் புழக்கடையில் ஸாண்டி ஹண்டரின் சிதைவெச்சத்திலிருந்து தீய்ந்து கருகிய எலும்புகளையும் பற்களையும் போலீஸ் கண்டெடுத்தபோது போலி ஆதாரத்தை முன்வைத்து ஜோடனை கேஸ்களைத் தயாரிக்கும் போலீஸ் அராஜகத்திற்கு எதிராக நடந்த கண்டன ஊர்வலங்களில் பங்கேற்றாள். ஸ்டீவின் வக்கீல் அவன் நிரபராதி என்றும் அவனை மீண்டுமொருமுறை போலீஸ் தவறுதலாக குற்றம் சாட்டுவது இரக்கமற்ற “கொடூரமான ஜோக்” என்றும் அறிக்கை வெளியிட்டார்.
ஆனால் ஒரு வாரம் கழித்து ஸ்டீவின் மருமகன் ஒருவனை போலீஸ் விசாரணை செய்தபோது அவன் கூறியது ஜென்னியை இருண்மையில் ஆழ்த்தியது.
“நவம்பர் 12 அன்று நான் மாமா\வின் ஆட்டோக் கடைக்குச் சென்றேன், புழக்கடையில் அவரது டிரெய்லர் வண்டி நின்றிருந்தது. அதிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டதால் கதவைத் தட்டி மாமாவை அழைத்தேன். ஜட்டியுடன் வேர்த்து விறுவிறுத்திருந்த மாமா கதவைத் திறந்தார். உள்ளே கட்டிலில் ஒரு பெண் நிர்வாணமாகக் கிடந்தாள். அவள் கைகள் கட்டில் தலைப்பலகையில் பிணைக்கப்பட்டிருந்த்து. மாமா என்னையும் அவளுடன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தினார். இரண்டு மணி நேரம் நானும் அவரும் அவளைப் பலமுறை கற்பழித்தோம். பின்னர் அவளைக் கொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதும் புலப்படவில்லை. அவள் சவத்தை துண்டம் செய்து எரித்தோம். எரிந்த சடலத்தின் மிச்சத்தை புழக்கடையிலேயே புதைத்துவிட்டோம். “
ஸாண்டி ஹண்டரைக் கற்பழித்துக் கொலை செய்த குற்றத்திற்காக ஸ்டீவன் பாட்ரிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
செய்யாத குற்றத்திற்காக பதினெட்டாண்டுகள் சிறையிலிருந்தவனின் மனநிலை எவ்வாறு சிதிலப்பட்டிருக்கும் என்ற கேள்வி அவளைப் பல இரவுகளில் விழித்திருக்கச் செய்தது. உலகை எதிர்கொண்டு அதில் உண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் தனது பகுப்புணர்வை சந்தேகிக்கத் தொடங்கினாள். மீள்சுழற்சியில் சிக்குண்டுத் தவிக்கும் சிந்தனைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ஓடினாள். இலக்கின்றி நெடுந்தூரம் நீண்டு செல்லும் வழக்கொழிந்த தண்டவாளத்தில் ஓடினாள். அவ்வப்போது தொலைவில் ஒளி தெரிவது போல் ஒரு பிரமை ஏற்படும். ரயிலாக இருக்குமோ என்று யோசனை செய்தபடி அதை நோக்கி ஓடினாள்.
oOo
*பாஸ்டனில் காரில் சென்றுகொண்டிருக்கும்போது ரேடியோவில் கேட்ட, ஒரு உண்மைச் சம்பவம் பற்றிய கலந்துரையாடலை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.