ஒரு எக்ஸும் ஒரு ஒய்யும்

goat
”கொஞ்சம் கொறச்சிருங்க”
”அப்பிடியே கீழருந்து மேல மிலிட்டரி மாதிரி.“
சிவந்த கண்களை ஒருமுறை உருட்டி இறுக்கி முழித்துச் விட்டு சீப்பைக் கையில் எடுத்தார். நான் சொன்னது புரிந்தது போலத் தலையை மையமாய் ஆட்டினார். எப்போதும் அவர் அதிகம் பேசுவதில்லை. நான் அறிந்த வரையில் எல்லோரிடமும் இப்படித்தான். பெரும்பாலும் மௌனமான தலையாட்டுதலில் எல்லாம் முடிந்துவிடும். நேரம் அதிகமானாலும் திருத்தமாகவும், சரியாகவும் இருப்பதால் அவரிடமே வெட்டுவதுண்டு.
கல்லூரி நாட்களிலெல்லாம் யார் எவரென்று கணக்கில்லை, எங்கேயோ போவேன். முடிவு(யு)ம் அது போலவே இருக்கும். கால வெள்ளம் அவரை வெகுவாக மாற்றி இருந்தது. மூசு மூசென்று தொப்பை மெதுவாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இப்போது அவருடைய கைகள் மட்டும் சிறிது நடுங்குவது போலிருந்தது.
கண்ணாடியில் ஒருமுறை என்னைப் பார்த்துக் கொண்டேன். சற்றே அகலமான முகத்தில் நெற்றிப்பக்கம் உபரியாக வளைந்து வழுக்கையைக் காட்டியது. வலப்புறமும், இடப்புறமுமாய்த் தலா இரண்டு சுழிகள் சதா சர்வ காலமும் மயிர்க் கற்றையைச் சுழட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மனதையும்தான். அதிகமாய் வளர்ந்து விட்டாலோ, சுழிகளின் வேகம் அதிகமாகி, முன்னாலுள்ள கொத்து சுருண்டு கொள்ளும் எழுபதுகளின் நாயகர்களைப் போல. அப்போது அது தான் ஃபேஷன். மணிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு அல்லது புடைத்து சுருண்ட விக்குகளை ஆட்டி நாயகிகளை ஆமோதிப்பார்கள். ஆனால் இன்று அப்படியல்ல. முழுக்க நனைந்த கதிர்களைப் போலப் படிய வாரி விட வேண்டும். கொஞ்சம் ரசனையிருந்தால் பக்கங்களில் குறைத்து விட்டு நடுவில் மட்டும் நாகரீகக் களிம்புகளைத் தடவி அரிவாள் மணை போல் விட்டுக் கொள்ளலாம். அரிவாள் மணை விடும் அளவுக்கு நமக்கு ரசனை பீறிடவில்லையாதலாலும் களிம்புகளின் உபயத்தால் வழுக்கை வீதம் உயர்ந்திட வாய்ப்பிருப்பதாலும், முற்ற நனைத்துப் படிய விடுவதுண்டு.
இன்றைக்கு இருந்து நாளை அழியப் போகும் ‘ம—க்கா’ இவ்வளவு புராணமென்று இந்நேரம் நினைத்திருப்பீர்கள். எங்கோ கேட்ட செய்தி ஞாபகம் வருகிறது. இதைப் பற்றியும் இதிலிருந்து எழும் நறுமணத்தைப் பற்றியும் மதுரைக்காரர் கேள்வி கேட்க, இப்படித்தான் சாதாரணமாக ஒரு பதிலைச் சொல்லி நம்ம கபாலி அந்தக் கிழவரை எரித்துவிட்டார் தெரியுமோ? தலையையும் காலையும் வைத்தே ஒருவரை நாம் கணித்துவிடலாம் என்று பழக்கம் சார்ந்த உடலசைவியல்; அதாவது டமிழில் பாடி லாங்வேஜ் எனும் சாஸ்திரத்திலே இதைப்பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
என்னது! தலையப்பார்க்கும் போது இதைப் பார்க்காமல் இருப்பார்களா? கண்டிப்பாகப் பார்ப்பார்கள். அங்கேயே தானே இருக்கிறது! (இருந்தால்).ஆகவேதான் முகத்தில் தெரியும் அகத்தைக் காட்டுவதில் இதற்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்கிறேன். அதாவது படிய வாரிக் கொண்டு நீங்கள் பாங்கில் கொள்ளை அடிக்கலாம், ஆனால் சுருட்டைத் தலையுடன் பராக்குப் பார்த்தால் அவ்வளவுதான். என்ன செய்ய லோக நியாயம் அப்படி.
இதுபோலச் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த சிந்தனைக் கிளியின் கழுத்தை யாரோ சொலுக்கென்று திருப்பினார்கள். அவர் தான் தலையைத் திருப்பி வேகமாகக் கீழே அமிழ்த்து வைத்தார். லேசாக வலித்தது. கிர்ரென்று அலறிய மிஷினை அழுத்தும்போது பின்னந் தலையில் குறுகுறுப்பாய் இருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். கிளி மறுபடியும் பறந்தது.
லோக நியாயம் என்பது மாறிக் கொண்டே இருப்பது. ஆனால் எப்போதும் சரியாகவே இருக்கும் என்பது அனுமானம். லோகம் அழும், சிரிக்கும் நீங்கள் அதற்குச் சிரிக்க வேண்டும், அழவேண்டும். அது என்றும் போல வேலைக்குப் போகும்; வீதியில் இறங்கிக் கல்லெறியும்; தெருமுனைச் சண்டைகளில் கொடுந்தமிழ் வளர்க்கும். அதோ அந்த டீக்கடை பெஞ்சுகளில் உலக அரசியல் பேசும்; பஸ் ஸ்டாப்புகளில் கால் கடுக்க நின்று காதல் வளர்க்கும் அல்லது காதல் வெறுக்கும்; சில லோகங்கள் காரில் விழுந்த மில்லி மீட்டர் கோடுகளுக்கு யுத்தம் செய்யும்; சில சீசனுக்கு சீசன் கைகூப்பி நின்று பின்பு கையேந்த வைக்கும். அவையெல்லாம் மேலோகங்கள். இப்படியாகப்பட்ட இந்த லோகத்தின் நியாயத்தில் சந்தேகம் காண்பது பிழையே. லோகத்தின் நடத்தையில் எப்போதும் ஒரு பரபரப்புத் தெரிந்தாலும் அதற்கென்று ஒரு மோன நிலை உண்டு. சாலையைக் கடக்கும் எருமை மூத்திரம் பெய்வது போல அதில் லயித்து அது நிதானமாய்ச் செல்லும். நீங்கள் தான் பொறுத்துப் போக வேண்டும். இது தான் உலகத்துடன் ஒட்ட ஒழுகுவதென்பது.
சில்லென்று தண்ணீர் பட்டு சிற்சில இடங்களில் எரிந்தது.
”ஆ” முடிஞ்சிச்சி. சீவிப் பாத்துக்க,” என்றார்.
மூன்று பக்கங்களில் கீழிருந்து மேலாகக் குறைத்து முன் பக்கம் கொசுறு போல விட்டிருந்தார். குளித்துவிட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும் என்று கிளம்பினேன். ஒரு விபத்து போலத் தான் இந்த மிலிட்டரி கட்டிங் அமைந்தது. அன்று முதல் இதுதான். சுழிகளெல்லாம் வற்றிப் போய் சுமாராய் இருக்கும். இரண்டு நிமிடத்தில் தயாராகிவிடலாம். அற்புதமான இராணுவக் கண்டு பிடிப்பு. யுத்தகளத்தில் மனித ‘உயிரு’க்கே மதிப்பில்லை எனும்போது இதற்கு நேரம் செலவு செய்வதை அவர்கள் விரும்ப நியாயமில்லை.
நான் வேலை பார்ப்பது ஓர் அரசுக் காரியாலயம். விவசாயம் சம்பந்தப்பட்டது. திருப்புகலூர் மெயின் ரோட்டில் இறங்கி இடக்கை பக்கமாக நடந்து சென்றால் ஐம்பது மீட்டர் தள்ளி இருக்கும் அந்த ஓட்டுக் கட்டிடம்தான் அது. பைக்கை பஸ் ஸ்டாண்டில் டோகென் வாங்கி நிறுத்தி விட்டால் இருக்கும், இல்லையென்றால் வெறும் பைக் மட்டும் தான் இருக்கும் பெட்ரோல் இருக்காது. சில சமயம் பைக்கே இருக்காது. கேட்டைத் தாண்டி நடந்தேன், பின்னாலிருந்து யாரோ கூப்பிட்டார்கள். ஜானகிராமன் வந்து கொண்டிருந்தார். அவருக்கெப்போதும் படிய வரிய தலை தான். சற்றே நரையோடிப் போயிருக்கும். கூத்துக்காரர்கள் அடவுக் கட்டுவதைப்போல கைகளை இடவலமாய் ஆட்டி ஆட்டி நடந்து வந்தார்.
“சார் ஏதோ வித்யாசமாகத் தெரியுதே !”
”எங்கிட்டயா”
“ஆமா”
நம்முடைய புதிய கட்டிங்கைப் பற்றித்தான் ஏதாவது சொல்வார் என நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் யாராவது எதாவது சொல்வார்கள் பெரும்பாலும் பாராட்டாய்த் தானிருக்கும்.
”அப்படியா? தெரியலையே சொல்லுங்க “ என்றேன்.
”புது முயற்சியா ?” தலையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்.
சிரிப்பதைப் பார்த்துவிட்டு ”எதை சொல்றீங்க“ என்றேன்,
”தலையைப் பார்த்துக் கை நீட்டி இதைச் சொன்னேன் “ என்றார் இப்போது அவர் சிரிப்பது எரிச்சலாய் இருந்தது.
”குழப்பமாய் நான் இல்லை” என்றேன்.
இப்போது பதில் பேசாமல் வெறுமனே சிரித்துக் கொண்டிருந்தார். அவர் இன்னும் கொஞ்ச நேரம் சிரிப்பார் என்று தோன்றியது. வெயில் ஏறிக்கொண்டிருந்தது. முற்றத் தேய்த்த பிடரியில் பட்டு வேர்வை வழிந்து கொண்டிருந்தது. கைக்குட்டையை எடுத்துத் துடைத்து கொண்டேன்.
மௌனமாய் நடந்து வருவதைப் பார்த்துக் குறிப்பால் உணர்ந்தவரைப் போல “இல்லைங்க யாரோ வேலை தெரியாதவன் வெட்டிட்டான் போலிருக்கு. “ என்றார்.
அவர் சொல்லச் சொல்ல கோபம் கொப்பளித்தது. “ஏன் நல்லா இல்லையா. “
“இல்லைங்க அதனாலதான் சொல்றேன். நானாவது சொல்றேன் மத்தவங்க சொல்ல மாட்டாங்க சிரிப்பாங்க.”
“இங்க பாருங்க ஒரு “எக்ஸ்” இங்க ஒரு “ஒய்” என்று என் விரலைப் பிடித்துத் தொட்டுக் காட்டினார்.
அவமானமாய் இருந்தது. அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாமல் அவசரமாய் ஹாலைக் கடந்து இருக்கையில் உட்கார்ந்தேன். பின்னால் இருக்கும் கண்களெல்லாம் என்னையே பார்த்தது போல் இருந்தது.வெடுக்கெனெ யாரோ சிரித்தார்கள். வெறும் வாய்க்கு அவல் அல்ல முறுக்கு,சீடை போன்ற பட்சணங்களையெல்லாம் நானே கொடுத்துவிட்டேன். ச! என்ன ஒரு மடத்தனம். சாயந்தரம் லேட்டாய்த் தான் போகணும் வெளிச்சம் குறைந்து விட்டால் பின்பு ஒன்றும் தெரியாது.
ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்வி மனதில் சுழன்று கொண்டே இருந்தது. அவரிடம் சென்று கேட்டு விடலாம் என்று தான் போனேன். வீட்டில் ஆள் இல்லை வெளியே போயிருக்க வேண்டும். வெயில் சாய்ந்துவிட்டது. குளித்து விட்டு எங்கேயாவது ஆளில்லாத இடமாய் உட்கார்ந்து விட்டு வந்தால் பரவாயில்லை. நூலகசீட்டை எடுத்துக் கொண்டேன். அங்குதான் யாரும் இருக்கமாட்டார்கள்.
பொழுதுபோகாத கிழவர்கள் முழுவதும் கசங்கிப் போன நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். மூலையில் ஒரு சிறுவன் வண்ணப்பத்திரிக்கையை மடியில் வைத்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யாரும் நிமிர்ந்து பார்க்கவில்லை.விறுவிறுவென உள்ளே போனேன். நூலகர் சீட்டில் இல்லை.அப்பாடா என்றிருந்தது. அவரிடம் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன் எங்களூர்க்காரர் என்ற முறையில். அவ்வப்போது ஏதாவது கேட்பார் பதில் சொல்வதற்குள் அவரே பேசுவார். பெரும்பாலும் சமூகத்தைப் பற்றிய உடனடி சீர்திருத்த அங்கலாய்ப்புகளாய் தானிருக்கும். சரி சரி என்று தலையாட்டி விட்டு வருவேன். இன்று அவர் இல்லாமலிருந்தது ஆறுதலாய் இருந்தது. விடுமுறையாய் இருக்கலாம். அதனாலென்ன உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும் உதவியாளரிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.
உலக இலக்கியம் பக்கம் சென்றேன். அசடன் , குற்றமும் தண்டனையும், ஆம்லெட் கடைசியாக ஆஸ்கார் ஒயில்டின் “பிக்சர் ஆஃப் டோரியன் கிரேவை” எடுத்துக் கொண்டேன். முன்பக்க வழங்கு சீட்டைப் பார்த்தேன் மதிப்புரையெல்லாம் படிப்பதைவிட இதுவே நம்பகமாயிருக்கும். ஆனால் தேதிகளெல்லாம் இல்லாமல் சுத்தமாக இருந்தது. நிச்சயம் தீவிர இலக்கியமாக இருக்க வேண்டும். புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். கடைசி ரேக்கை கடந்து திரும்புகையில் ஸ்தம்பித்து நின்றேன். நூலகர் உட்கார்ந்திருந்தார். சிரிப்பது போல முகத்தைக்காட்டி தலையை அசைத்தேன். பதிலுக்குத் தலையசைக்காமல் பெரிதாய்ச் சிரித்தார்.
“என்னாச்சு” என்றார்.
மறுபடியும் இந்தக் கேள்வியை எதிர் கொள்ள வெறுப்பாய் இருந்தது. பதிலே சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தேன். விடுவது போலில்லை.
“எந்த கம்மனாட்டி சார் இப்படி வெட்டுனது. இப்படி பண்ணிருக்கான்”
“ஆமா சார் கொஞ்சம் தப்பா வெட்டிட்டார்.”
”கொஞ்சம் இல்ல சார்,” எனச் சத்தமாய் பேசிக்கொண்டே மேஜையைச் சுற்றி நடந்து வந்தார். ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு “எவன் சார் வெட்டுனான். சுத்த பட்டி காட்டான் மாதிரி,” என்றார். அவர் கத்தியதைப் பார்த்து வேறு யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்தேன், யாருமில்லை. அவர் பேசிக்கொண்டே இருந்தார். வேறு பல கடைகளைப் பற்றி விளக்கி வழி சொல்லிக் கொண்டிருந்தார். காதிலேறினாலும் மனமெல்லாம் ஏன் இப்படி ஆச்சு என்ற கேள்வியே எதிரொலித்தது. இன்னும் சில வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். கோபம் வெறியாகி டோரியன் கிரேவை முகத்தில் எறிய வேண்டும் போலிருந்தது.
“விடுங்க சார், ஒரு வாரம் போனால் சரியாகி விடும்” என்று சொல்லி, புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். மனம் கனன்று கொண்டிருந்தது. ஒரு முறையாவது அவரைப் பார்த்து கேட்டு விட வேண்டும், ” ஏன் இப்படி வெட்டினீங்க?” என்று. உள்ளேயிருந்து வேறு குரல் கேட்ட து. சீ ! மோசக்காரா ! வழக்கம் போலவே தன் தவறுக்கு பிறரை நோகும் உன் அற்ப புத்தி உன்னை விட்டுப் போகாதா?. கண்கள் சொருக மயக்கமாய் உட்கார்ந்திருக்கும் போதே ஒரளவு யூகித்திருக்க வேண்டும். வேறு ஏதாவது ஒரு கடைக்கு சென்றிருக்க வேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என அவசரப்படுத்தியிருக்கக் கூடாது. இது வரை வாங்கிய திட்டுகளையெல்லாம் நினைத்துக் கொண்டேன். ஒரு வகையில் இதற்கு நானும் காரணம் எனத் தோன்றிற்று. முகம் தெரியாதவர்கள் எல்லாம் பேசியாகி விட்டது. மறுபடியும் நாம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என நினைத்துக் கொண்டேன். ஏன் எதற்கு எனத் தெரியவில்லை.
சாப்பிட்டு விட்டு தூங்கப் போனபோது அப்பா கேட்டார்.
“யாரும் எதும் சொன்னாங்களா ?”.
“இல்லப்பா” எனப் பொய் சொன்னேன்.
மெதுவாகத் திரும்பி ஏதேதோ முனகிக் கொண்டே சென்றார். கைகள் இப்போது முன்பை விடக் கொஞ்சம் அதிகமாகவே நடுங்குவது போலிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.