எம்எஸ்வி – 1 இசையும் காலமும்

பின்னணி

திரையிசை ரசிகர்களால் எம்எஸ்வி என்று அன்புடன் அழைக்கப்படுபவரும், தமிழ்த் திரையிசையுலகில் எக்காலமும் நீங்கா இடம் பெற்ற இசையமைப்பாளருமான எம். எஸ். விஸ்வநாதன் அண்மையில் காலமானார். அதைத் தொடர்ந்து செய்தித்தாள்களிலும், சமூக ஊடங்களிலும் அஞ்சலியாக ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு தலைமுறையினர் மீது முழுமையான தாக்கம் ஏற்படுத்திய இசையமைப்பாளர் அவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அஞ்சலி கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருந்தது, ஒவ்வொன்றும் ஒரு பாடலை நினைவுகூர்ந்தது, மிக முக்கியமாக ஒவ்வொன்றிலும் இதயத்தில் அதுவரை மறைந்திருந்த ஒரு நினைவு உயிர்பெற்று வெளிப்பட்டது. அவரது இசைக் கோவைகள் நேயர்கள் மனதில் ஏற்படுத்திய உணர்வுத் தாக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள இதுவெல்லாம் உதவினாலும், அவரது சாதனைகளை விரிவாகச் சித்திரித்த கட்டுரைகள் மிகக்குறைவு.
இந்தக் கட்டுரை, எம்எஸ்வியின் பாடல்களைக் கொண்டு அவரது இசைப்பயணத்தின் பாதையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறது- திரையிசையில் அவரது பங்களிப்பு என்ன, அவர் விட்டுச் செல்லும் தாக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் காண முயற்சிக்கிறது.
இப்படியொரு பெரிய ஆசை கொண்ட பயணத்தில் புறப்படும்முன் சில உரிமை துறப்புகள் செய்வது தேவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அறுபதுகள் என் நேரடி அனுபவமல்ல, பிற்காலத்தில் நான் கேட்ட பாடல்களின் அடிப்படையில்தான் அறுபதுகளைப் புரிந்து கொள்கிறேன். எனவே, அக்காலத்தில் வாழ்ந்த பொதுமக்கள் மனதில் அவரது பாடல்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தின என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டாவதாக, என் மனச்சாய்வுகள் காரணமாக பொதுமைப்படுத்தப்பட்ட சில கூற்றுகளும் இருக்கலாம். அவற்றைப் பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டவும். மூன்றாவதாக, இதிலுள்ள பல தகவல்கள் இணையத்தில், அதிலும் குறிப்பாக விக்கிப்பீடியாவில் பெறப்பட்டவை. இவற்றில் தகவல் பிழைகள் இருப்பது தெரிந்தால் திருத்திக் கொள்கிறேன்.
தமிழ்த் திரையிசையில் எம்எஸ்வி தனித்தும் டி கே ராமமூர்த்தியுடன் இணைந்தும் செலுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள, ஐம்பதுகளில் தமிழ்த் திரையிசை முழுக்க முழுக்க கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்திருந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது அதை உடைத்த பாடல்கள் இருந்தன என்றாலும் ஐம்பதுகளின் திரையிசை கர்நாடக சங்கீதத்துக்கு உரியது. கர்நாடக இசையை ரசிப்பவர்கள் பலர் இன்றும் ஐம்பதுகள்தான் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் திரைப்படத்தின் தேவையும், செவ்விசையின் தேவையும் வெவ்வேறானவை என்பதுதான் இப்படிப்பட்ட அணுகலின் சிக்கல். வேறு சொற்களில் சொல்வதானால், இவ்விரண்டின் நோக்கமும், இயக்க முறைகளும் முற்றிலும் வேறுபட்டவை. நாத சாத்தியங்களை வெவ்வேறு ராகங்களைக் கொண்டு உணர முற்படுவது செவ்விசை என்றால் திரையில் தோன்றும் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து பரவலான பார்வையாளர்களைச் சென்று சேர்வதுதான் திரையிசையின் நோக்கம். ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இதை நாற்பதுகளின் பிற்காலத்திலும் ஐம்பதுகளின் துவக்கங்களிலும் புரிந்து கொண்டு தம்மொழி திரையிசையை நவீனப்படுத்திக்கொண்டு விட்டனர். அவர்கள், தம் இசையின் செவ்வியல் வேர்களை விட்டு விலகி, தமக்கென்று புதிய ஒரு இசையிலக்கணம் அமைத்துக் கொண்டனர். ஆனால் செவ்வியல் இசையின் கண்ணிகளை உடைக்க முடியாமல் தமிழ்த் திரையிசை மட்டுமே பின்தங்கி இருந்தது.
இது ஏன் என்றும், இது எப்படிப்பட்ட வேறுபாடு என்றும் பார்க்கலாம்.
முதலில் சொன்னதுபோல், ஒரு ராகத்தின் ஸ்வரூபத்தில் நிற்பதும், அந்த ராகத்தைத் தெளிவாக நிறுவுவதும்தான் செவ்விசையின் முக்கியமான தேவை. அந்த ராகத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்தவும் சாகித்யகர்த்தா முயற்சிப்பார். திரையில் தோன்றும் காட்சி பார்வையாளர் மனதில் எழுப்பக்கூடிய உணர்ச்சிதான் திரையிசைக்கு மையம், அதன்பின்தான் ராக வியாபகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால்தான் ராக இலக்கணத்தில் இல்லாத சுவரங்களை திரை இசையமைப்பாளர் சேர்த்துக்கொள்ள முடிகிறது. இது தவிர ஒரு ராகத்தின் அத்தனை இயல்புகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை திரையிசையமைப்பாளருக்கு இல்லை. காட்சிக்குத் தேவைப்பட்ட உணர்வை வெளிப்படுத்தினால் போதும்.
விளங்கிக் கொள்ள, ஐம்பதுகளில் வெளியான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களைப் பார்த்தால் இவற்றுக்கு இடையிலான வேறுபாடு புலப்படும்.
உத்தம புத்திரன்” படத்தில் ஜி ராமநாதன் இசையமைத்த “முல்லை மலர் மேலே” என்ற பாடலை முழுதாகக் கேட்டுப் பார்க்கலாம்- கானடா ராகத்தில் அமைந்த பாடல் இது.

மிக அருமையான கானடா என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால் இசையமைப்பாளரைப் பொருத்தவரை, எல்லாவற்றுக்கும் மேலாக இது கானடா ராகத்தில் அமைந்த பாடல் என்பதுதான் முக்கியம். காதல் பாடல் என்பது இரண்டாம்பட்சம்தான். சரணத்தில், “மின்னல் உருமாறி மண் மேலே” என்பதன் ஆரோகணத்தை டிஎம்எஸ் எப்படி பாடுகிறார் என்பதை கவனித்துப் பாருங்கள். கானடா ராகத்தை ஜி ராமநாதன் நேசிப்பது நன்றாகத் தெரிகிறது. பாடகர் டிஎம்எஸ்ஸின் திறமை முழுமையாக வெளிப்பட வேண்டும் என்று  விரும்புகிறார் அவர், குறிப்பாக உச்ச ஸ்தாயியில் அவர் பாடுவதன் அழகை இந்தப் பாடலில் நன்றாகக் கொண்டு வருகிறார்  ஜி ராமநாதன். திரைப்படப் பாடல்களில் கானடா ராகத்தில் அமைந்த சிறந்த பாடல்கள் எவை என்று கேட்டால் உடனே இந்தப் பாடல் நினைவுக்கு வரக்கூடும். ஆனால், மிகச் சிறந்த காதல் பாடல் எது என்று கேட்டால், இது நினைவுக்கு வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
அல்லது ‘ஏரிக்கரையின் மேலே‘ – இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம். பாடலின் இசையமைப்பாளர் கே வி மகாதேவன் ஆரபியின் அத்தனை அழகையும் பல்லவியிலேயே வாரியிறைக்க ஆசைப்படுகிறார். இந்தப் பாடலின் மெட்டின் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று எதை எழுதினாலும் அது பக்திப் பாடலாகவே ஒலிக்கும். காட்சியின் உணர்ச்சியோடு பொருந்தாத பாடல் இது.

இதற்கு மாறாக, “ஷவுக்காரு” என்ற தெலுங்குப் படத்தில் வரும் பாடலைப் பாருங்கள்.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்தான் அது, ஆனால் அது செவ்வியல் தன்மையைவிட்டு அப்போதே விலகிவிட்டது (“முகத்தில் முகம் பார்க்கலாம்” என்ற பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்). திரையில் தோன்றும் பாத்திரத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் இந்தப் பாடலும் மென்மையாக ஒலிக்கிறது. மேலும், கண்டசாலா டிஎம்எஸ் மற்றும் சீர்காழியைவிடச் சிறந்த செவ்வியல் பாடகர் என்றில்லாவிட்டாலும், அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல, அவர்கள் அளவு செவ்வியல் இசையில் பயிற்சி உள்ளவர் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளரும் அவரே. இருந்தாலும் சரணங்களில் அவர் அடக்கி வாசிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கல்யாணியின் முழு உருவம் வெளிப்படுவதில்லை. அவரது வேலை திரையில் தோன்றும் காட்சிக்கு தகுந்த இசையமைப்பதுதான், அதற்குத் தேவையான அளவில் மட்டும் கல்யாணி ராகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது அறுபதுகளில் வந்த பாடல் என்று யாரிடமாவது சொன்னால் அதை உடனே நம்பிவிடுவார்கள்.
அடுத்தது, 1948ல் வந்த இந்திப் படம் – அநோகர் பியார். அனில் பிஸ்வாஸ் இசையமைத்த இந்தப் பாடல் இளம் லதா குரலில் ஒலிக்கிறது. இந்தி திரையிசையில் பல புதுமைகளைச் செய்வதவர் என்ற பெருமை அனில்-‘தா’வுக்கு உண்டு. குலாம் ஹைதருடன் இணைந்து அவர் இந்தித் திரை இசையை நவீனப்படுத்தியவர். இந்தப் பாடலில் லதாவின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களைப் பாருங்கள். இந்தப் பாடலுக்கு ஒரு செவ்வியல் அமைப்பு இருந்தாலும் திரைக்காட்சியின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதுதான் முக்கியம் என்றும், இது முழுக்க முழுக்க செவ்வியல் பாடலாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் அனில்தா எவ்வளவு கவனமாக இருக்கிறார் எனபதையும் பாருங்கள்.

அக்காலத்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் இடையே இருந்த வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் (மிகக் குறைவான பாடல்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் ஐம்பதுகளில் தமிழில் வந்த பாடல்களை கேட்டுப் பாருங்கள், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். உரத்த குரலில் பாடுவது, பாத்திரத்தின் உணர்ச்சியைவிட ராகத்துக்கு முக்கியம் தருவது, இதெல்லாம்தான் முக்கியம்.
இந்தச் சூழலில்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி பணியாற்றினார்கள். ராஜா அல்லது ரகுமான் போல் அவர்கள் மிக வேகமாக புகழின் உச்சியைத் தொடவில்லை. 52ல் அறிமுகம் ஆனாலும், பத்தாண்டுகளுக்குப பிறகே முதலிடம் பிடிக்க முடிந்தது. துவக்க காலத்தில் இவர்கள் இசையமைத்த படங்கள் பிற படங்கள் போல்தான் இருந்தன. ‘புதையல்‘ என்ற படம் 1957ல் வந்தது. அருமையான பாடல்கள், ஆனால் எல்லாம் ராமநாதனை நினவுபடுத்துகின்றன. “விண்ணோடும் முகிலோடும்” என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள் – ஜி. ராமநாதன் பாடல் என்றுதான் வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன் (சி எஸ் ஜெயராமன் பாடியதால் இப்படி நினைத்திருக்கலாம்)

பாகப்பிரிவினை” படத்தில்தான் இவர்களின் தனித்துவம் வெளிப்பட துவங்கியது. இதில் உள்ள சில அருமையான பாடல்களைப் பின்னர் பார்க்கலாம். இது 1959ல் வந்த படம். 1960ல் வந்த “தங்கப்பதுமை”, “மன்னாதி மன்னன்” போன்ற படங்களிலும் முந்தைய படங்களின் சாயம்1961 இருந்தது. அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் கண்ணிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட ஆண்டு 1961. என்ன ஒரு ஆண்டு அது! அந்த வருடம்தான் தமிழ்த் திரையிசை நவீன காலங்களுக்குள் பிரவேசித்தது, இந்திப் பாடல்களைவிட பத்து வருடம் பின்தங்கி.
1961 இல் என்ன ஆயிற்று என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Ilaiyaraja_MSV_Visvanadhan_Music_Directors_IR_Visvanathan

1961- திருப்புமுனை ஆண்டு

விஸ்வநாதன்- ராமமூர்த்திக்கு 1961ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாய் இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் திரையிசையின் முதலிடத்தில் அவர்கள் தங்களை நிறுவிக் கொண்ட ஆண்டு அது. இந்த ஆண்டில்தான் அவர்களுக்கேயுரிய ஓசை தீர்மானமாக உருவானது- இந்த ஓசை அடுத்த ஐந்தாண்டுகள் திரையிசை நேயர்களைக் கட்டிப் போடுவதாய் இருந்தது.
முந்தைய தலைமுறைகளைச் செர்ந்தவர்காளிடம் 1961ஆம் ஆண்டு வந்த இந்தப் படங்களின் பெயர்களைச் சொல்லிப் பாருங்கள், அவர்கள் முகம் சந்தோஷத்தில் மலர்வதைக் காணலாம். அந்த மாதிரி இப்பல்லாம் படம் எடுக்கறதில்லை, என்ற வருத்தத்தையும், ஒழுக்கம் கெட்டுப் போயிடுச்சு, என்ற அங்கலாய்ப்பையும் கூடவே கேட்கலாம் என்பதில் ஆச்சரியமில்லை. “பாசமலர்“, “பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“. இந்த ஒவ்வொரு படமும் இப்போது ஒரு கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. பீம்சிங் இயக்கிய “பா” வரிசை படங்கள் இவை. எதிர்கால தமிழ்த் திரை வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மூன்று படங்களை ஒரு இயக்குனர் ஒரே ஆண்டில் வெளியிடுவது என்பது திகைக்க வைக்கும் விஷயம் (பாசமலர் திரைப்படம் அண்ணன்- தங்கை உறவை எவ்வளவு உறுதியாக வரையறை செய்தது, அதன்பின் எத்தனை எததனை இயக்குனர்கள் இந்த உறவை ஒரு தங்கச் சுரங்கமாய் கண்டனர்!). மூன்று படங்களிலும் சிவாஜி கணேசன்தான் நாயகன்.
மேலே சொன்னது போல், விசுவநாதன்- ராமமூர்த்தியின் முத்திரை ஓசை தாங்கி வந்த முதல் படம் “பாகப்பிரிவினை“. 1959ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியதும் பீம்சிங்தான். இதிலிருந்து ஒரு பாடலை எடுத்துக் கொண்டு, முத்திரை ஓசை என்று நான் எதைச் சொல்கிறேன் என்று பார்க்கலாம்- “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்” என்ற பாடல்.

ஐம்பதுகளில் வந்த பாடல்களோடு ஒப்பிடும்போது இது எவ்வளவு நவீனமாக இருக்கிறது என்பதைதான் நாம் முதலில் கவனிக்கிறோம். அதற்கு இதன் ட்யூன் ஒரு முக்கியமான காரணம். சுசிலாவின் குரலும் அடங்கி ஒலிக்கிறது, அக்காலத்துக்குரிய பிற பாடல்கள் போல் உரக்க ஒலிப்பதில்லை.
இது ஒன்று மட்டுமல்ல, விஸ்வநாதன்-ராமமூர்த்தி முத்திரை. அவர்களின் தனித்துவம் என்று தேடினால், முதலில் இந்தப் பாடல் ஒரு அமைதியான நதியின் அழகும் நளினமும் கொண்டிருப்பதை உணர்கிறோம். சரணத்தில் உச்சம் தொட்டாக வேண்டும் என்ற வேகம் இல்லை. மாறாய், சரணத்தின் முடிவில் மிக மென்மையாய் ஒலித்து பல்லவியுடன் இயல்பாய் இணைகிறது. இரண்டாவதாக, இந்தப் பாடலின் தடையற்ற ஓட்டத்தில் ரிதம் எப்படிப்பட்ட பங்களிப்பு கொடுக்கிறது பாருங்கள். இதுவும் நவீனமாக இருக்கிறது. முன்னெல்லாம் ஒரு பாடலில் மிருதங்கம் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது கர்நாடக இசையை அடிப்படையாய் கொண்ட பாடலாய் இருக்கும், மிருதங்கமும் கர்நாடகமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாம் ஆச்சரியப்படும் வகையில் இந்தப் பாடலில் மிருதங்கம்தான் நவீனத்துவம் கூட்டுகிறது. இப்படியொரு தனிப்பட்ட வகையில் மிருதங்கத்தைப் பயன்படுத்துவதில் விஸ்வநாதன்- ராமமூர்த்தியின் மேதைமை வெளிப்படுகிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பெண்குரலில் ஒலிக்கும் பாடல்கள் பலவற்றில் சுதந்திரமாய்ச் செல்லும் ட்யூனும் மிருதங்கம் அல்லது தபலாவின் நிலையான ரிதமும் இணைந்திருப்பதை ஒரு பொதுத் தன்மையைப் பார்க்க முடிகிறது.
பாக்யலக்ஷ்மி (1961) படத்தில் வரும் பாடல் இந்தப் பொதுத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது பாருங்கள் –

பாடல் எவ்வளவு இயல்பான ட்யூனில் அமைந்திருக்கிறது என்பதையும் அதன் அற்புதமான ரிதத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. மிருதங்கம் இந்தப் பாடலுக்கு ஒரு நவீன ஒலி கூட்டுவது மட்டுமல்ல, அது எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது பாருங்கள்.
இவர்கள் இசையில் உள்ள வேறொரு முக்கியமான தனித்தன்மையைக் காட்ட 1961ஆம் ஆண்டு வந்த இரு பாடல்களை எடுத்துக் கொள்கிறேன்.
பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும் “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” என்ற பாடல் இது-

ப்ரிலூடில் வேகமாய் ஒலிக்கும் வயலின்களும் கிதாரின் மெல்லிய அதிர்வும் இந்தப் பாடலின் நவீனத்துவ உணர்வை விரைவில் நிறுவி விடுகின்றன. ஜி ராமநாதன் சகாப்தத்தைக் கடந்து எவ்வளவு தூரம் இந்த இரட்டையர் வந்திருக்கின்றனர் என்பதை உணர்த்த இதுவே போதும். இங்கு தபலா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனித்திருப்பீர்கள், அது நிலையான ரிதம் ஒன்றில் இப்பாடலை நிறுவுகிறது. சமவெளியில் பாயும் நதி போல் தங்கு தடையின்றி இப்பாடல் ஒலிக்கிறது, இது மலையிலிருந்து பிரவகிக்கும் வெள்ளமல்ல. இப்போது ஒரு கேள்வி கேட்கிறேன்- இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது? பலரையும் இந்தக் கேள்வி தோற்கடித்து விடுகிறது. அது ஒரு காரணத்துடன் கேட்கபப்ட்ட கேள்விதான், இதற்கு பதில் எதுவும் நான் எதிர்பார்ப்பதில்லை. இந்தப் பாடலின் பின்னணியில் செவ்விசையின் தளம் இருந்தாலும், அதன் ராகம் முழுமையாய் வெளிப்படுவதில்லை. மாறாய், நமக்குக் கிடைப்பது ஒரு ட்யூன். அது நம் இதயத்தில் நுழைந்து நம் உணர்வுகளைத் தொட்டு மறக்க முடியாத தாக்கத்தை விட்டுச் செல்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையின் முக்கிய இயல்பாக இது இருந்தது, பின்னர் எம்எஸ்வி இசையின் தனித்தன்மையாகவும் ஆனது. வேர்களை இழக்காமல், ஆனால் அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் ட்யூன் கம்போஸ் செய்யும் திறமை செவ்வியலுக்கு புது நிறம் சேர்க்கிறது. பல சமயம் இவர்கள் பாடல்களின் ராகத்தை அடையாளம் காண்பது கடினமாக இருக்கிறது, அது முக்கியமும் அல்ல.
பாசமலர் படத்தில் வரும் பாடல் இது- பல தலைமுறை திரையிசை ரசிகர்களின் மேல் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய பாடல் என்ற வகையில், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மிகச் சிறந்த பாடல் என்றால், அது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடும். ஆம், “மலர்ந்தும் மலராத பாதி மலர் போன்ற” என்ற பாடல்தான் இது. ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த பாடல் என்று ஒப்புக்கு ஒரு அடையாளம் கொடுக்கலாம், ஆனால் யாருக்கு அதில் அக்கறை- இந்தப் பாடல் எவ்வளவு வலுவாக நம்மைத் தாக்குகிறது பாருங்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இந்தப் பாடல் ரசிக நெஞ்சங்களை வெற்றி கொண்டது. மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரன் தனக்கு இந்தப் பாடல் அளித்த உந்துதலைப் பேசியிருக்கிறார்.

இவை 1961ல் வெளிவந்த வேறு இரு பாடல்கள். இதுவரை நான் சொன்ன இயல்புகள் இந்தப் பாடலிலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இவர்கள் இசையின் இன்னொரு தனித்தன்மையைப் பார்க்கலாம்.
இது, “பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும், “நான் பேச நினைப்பதெல்லாம்“, என்ற பாடல்.

இதிலும் நிலையான ரிதம், இயல்பான ட்யூன், ஒப்புக்கு சிவரஞ்சனி ராகத்தின் சாயல்.
பாவ மன்னிப்பு” படத்தில் வரும், “காலங்களில் அவள் வசந்தம்“-

இங்கும் முத்திரையாய் ஒலிக்கும் ரிதம், அதே முத்திரையோடு ட்யூன், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத செவ்வியல் இசை.
இத்தனை பாடல்களில் நான் சொன்னதற்கும் மேலே இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்- இந்தப் பாடல்களில் இழையோடும் சோகம். நான் பட்டியலிட்டுள்ள எல்லா பாடல்களிலும் சோகத்தின் சாயல் இருக்கிறது. மேற்சொன்ன பாடல்களில் உள்ளது போல், காதல் பாடல்களிலும் ஒரு மெல்லிய சோகம். இவை மலையாளப் படங்களின் பெருஞ்சோகம் அல்ல- நம்மைத் தொய்வடையச் செய்யும் பாடல்கள் அல்ல இவை. இங்கு உற்சாகம் கெடவில்லை, ஆனாலும் மிகத் தேர்ச்சியான முறையில் சோகத்தின் நிழல் படிந்திருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை என்றால் இந்த மென்சோகம்தான் மேலோங்கி நிற்கிறது.. மேலோங்கி என்றுதான் சொல்கிறேன், அது மட்டுமே இருக்கிறது என்று சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும் (பிற ஒலிகளைப் பின்னர் பார்க்கலாம்). இந்தச் சோகத்தின் நிழலே நம்மைப் பாடலோடு என்றென்றும் கட்டிப் போடுகிறது. அறுபதுகளின் குழந்தைகள் இந்த மென்சோகமும் நாஸ்டால்ஜியாவும் கூடிய நினைவுகூர்தலில், அந்தக் கால படங்கள் போல் நல்ல படங்கள் எப்போதும் வந்ததில்லை, என்று சொல்வது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.
சோகத்தில் இவர்களின் ஆற்றல் முழுமையாய் வெளிப்பட்டதால் இவர்கள் மிகச் சுலபமாகவும் இயல்பாகவும் சோகப் பாடல்கள் அமைத்தனர், அவையே இன்றும் இவர்கள் பேர் சொல்லும் பாடல்களாக இருக்கின்றன.
திரைப்பாடல்களில் மிக உயர்ந்த தத்துவம் பேசும் பாடல் இது- பாலும் பழமும் படத்தில், போனால் போகட்டும் போடா

பாவ மன்னிப்பு படத்தில், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

நான் சொன்ன அத்தனை சுபாவமும் இந்தப் பாடலில் உண்டு (கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயம்- எண்பதுகளில் சிவாஜி நடிப்பில் இயக்குனர்கள் விரும்பி வரவேற்றதை ஒற்றை வரியில் விவரிக்கிறது இந்தப் பாடலின் துவக்கம்)
கண்ணதாசனைப் பேசாமல் அறுபதுகளின் துவக்கத்தைப் பேச முடியாது. எத்தனைச் சிறந்த பாடலாசிரியர்- எம்டியும் பாடலாசிரியரும் இணைந்து கோலோச்சிய காலத்தில் எழுதியவர். ஒற்றை பத்தியில் கண்ணதாசன் பற்றி பேச முடியாது. இன்னும் நிறைய எழுத வேண்டும்.
1961க்குப்பின் விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதையும் அவர்கள் பின்னர் அளித்த பாடல்களையும் இனி பார்ப்போம். இப்போதைக்கு, 1961ஆம் ஆண்டின் வேறு சில பாடல்கள்.
பாசமலர் படத்தில் வரும் யார் யார் யார் என்ற பாடல்

பாவமன்னிப்பு படத்தில் பாலிருக்கும்

படம், பாலும் பழமும். பாடல், என்னை யார் என்று.

ஆதிக்கம்

1961ஆம் ஆண்டு திருப்புமுனையாக இருந்தால், அதைத் தொடர்ந்த இரு ஆண்டுகளில் எம். எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி தங்களைத் திரையிசையின் முன்னணி கலைஞர்களாக நிறுவிக் கொண்டனர். அதன்பின் 1964ஆம் ஆண்டு அவர்களுக்கு மகத்தான ஒன்றாக அமைந்தது.
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உள்ள ஒலி பற்றி பேசினோம். அதில் ஒரு மெல்லிய சோகம் கலந்திருந்தது என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு முக்கியமான காரணம், 1961ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு அப்படிப்பட்ட ஓசை தேவைப்பட்டது என்பதாகவும் இருக்கலாம். அவற்றில் பல மிகையுணர்ச்சியை வெளிப்படுத்திய படங்கள்- ‘பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“, “பாசமலர்”, “பாக்கியலட்சுமி“. இந்த நான்கு படங்களில் மூன்றை இயக்கிய பீம்சிங் உணர்ச்சிகரமான திரைப்படங்களை இயக்குபவர் என்று புகழ் பெற்றவர். எனவே இந்தப் படங்களில் தேவைகளுக்கு ஏற்பவே இசையும் அமைந்திருந்தது.
பீம்சிங் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேலும் சில மிகச்சிறந்த திரைப்பாடல்களைத் தருவார்கள். ஆனால் 1962ஆம் ஆண்டுதான் இயக்குனர் ஸ்ரீதர் இவர்களோடு இணைந்த ஆண்டு. முதலில் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடனும் பின்னர் எம்எஸ்வியுடனும் இணைந்து ஸ்ரீதர் மறக்கமுடியாத பல பாடல்களை அளித்தார். 1962களிலேயே இவர்களின் இசையில் ஸ்ரீதரின் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன- “சுமங்கலி“, “நெஞ்சில் ஒரு ஆலயம்”, “போலீஸ்காரன் மகள்“. 1961ஆம் ஆண்டு ஐந்து படங்களுக்கு இசையமைத்திருந்த இவ்விருவரும் அடுத்த ஆண்டு பதினான்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். அவர்களது வளரும் புகழுக்கும் முக்கியத்துவத்துக்கும் இதுவே போதுமான ஆதாரமாகிறது.
விஸ்வநாதன் ராமமூர்த்தி தேர்ந்த மெலடியில் இசையமைக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்ட பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பலர் களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்றாலும் எம்ஜிஆர் திரைப்படங்களே அவர்களுக்கு விதவிதமான பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அளித்தன. எம்ஜிஆர் படங்களிலும் சிறந்த மெல்லிசைப் பாடல்கள் இருந்தன என்றாலும், அவற்றில் துள்ளிப் பாயும் உற்சாகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மிகப்பெரிய ஆளுமையாக எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றியது ஒரு காரணம் என்றாலும் அவர் அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம். முன்னதாகவே எம்ஜிஆர் இவர்களுடன் பணியாற்றியிருந்தார் என்றாலும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கே வி மகாதேவனுக்கு சம வாய்ப்புகள் அளித்தார் (பின்னரே அவர் எம்எஸ்வி பக்கம் சாய்ந்தார்).
1960ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆருக்கு மறக்க முடியாத ஒரு பாடல் அமைத்திருந்தனர்- “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் வரும், “அச்சம் என்பது மடமையடா,” என்ற பாடல். இன்றும் இது கழக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதன் ட்யூன் நன்றாக இருக்கிறது என்றாலும் ஐம்பதுகளுக்கு உரிய பாடல்தான் இது- விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகளில் மிகக் குறைவாகவே இதில் இருக்கிறது. அக்காலத்துக்கே உரிய பாடல்-

பாசம் (1962) என்ற திரைப்படத்தில் ஏறத்தாழ இதே போன்ற தாளம் மற்றும் பாடல் அமைப்பு இப்போது நவீனமாக ஒலிக்கிறது. இதன் துவக்கத்தில் வரும் கிதாரின் அதிர்வுகள் மற்றும் வயலின், இன்டர்லூடில் வரும் அக்கார்டியன் ஓசை, டிஎம்எஸ் பாடும் முறை இந்த மாட்டு வண்டி முன்பிருந்த ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றன- “உலகம் பிறந்தது எனக்காக

அரசியல் பாடல்கள் மட்டுமல்ல, எம்ஜியாரின் காதல் பாடல்களும் உற்சாகமாக இருந்தன. இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீத ராகங்களின் கட்டுக்களைத் தளர்த்டில், மேலும் நவீன வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. இது, “பணத்தோட்டம்” படத்தில் வரும் “பேசுவது கிளியா,” என்ற பாடல்..

இந்த பாடலின் முன்னிசை எவ்வளவு நவீனமாக ஒலிக்கிறது பாருங்கள். பல்லவியின் துவக்கத்தில் பாங்கோக்கள் சேர்ந்து கொள்கின்றன. “சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா” என்று எவ்வளவு அழகாக பல்லவி நிறைவடைகிறது பாருங்கள்.
பணத்தோட்டம்” பாடல் நவீன பாடலாக இருந்தாலும் அது தமிழ் மெலடியாகதான் இருக்கிறது, சரணத்தில் தபலாதான் பாடலைக் கொண்டு செல்கிறது. இதன்பின் “பெரிய இடத்துப் பெண்” படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று முழுக்க முழுக்க மேலை நாட்டுப் பாணியில் ஒரு பாடல் செய்தார்கள். இதில் தபலா கிடையாது. முழுக்க முழுக்க சா சா நடனத்தைத் தழுவிய மேற்கத்திய இசைப்பாணி. இங்கு நாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி நம் எல்லைகளுக்கு அப்பால் சென்று உலக இசையை நமக்கு அளிக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறோம் (1990ஆம் ஆண்டுதான் உலக இசை தமிழ் திரைப்பாடல்களில் ஒலித்தது என்று நினைப்பவர்கள் தம் கருத்தைப் பரிசீலித்துக் கொள்ளலாம்)-

இதே படத்தில் “பாரப்பா பழனியப்பா” என்ற கிராமிய மெட்டில் ஒரு பாடலை ‘ஏழைப்பங்காளன்’ எம்ஜிஆருக்கு இசையமைத்திருந்தது இவர்களுடைய திறமைக்குச் சாட்சி. முன்சொன்ன பாடல் இளமையான, கம்பீரமான எம்ஜிஆர் பாடுவது.

பலவகைப் பாடல்களுக்கு இசையமைக்கக்கூடியவர்கள் என்று சொல்வதை நம்பாதவர்கள் இதைக் கேட்கலாம்- “கட்டோடு குழலாட
(1963ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “ஆனந்தஜோதி” படப்பாடல்கள் சிவாஜி/ ஜெமினி படப்பாடல்கள் போலிருக்கும்- “நினைக்கத் தெரிந்த மனமே“, “பனி இல்லாத மார்கழியா” முதலிய பாடல்கள்).
எம்ஜிஆர் படங்களில் மட்டும்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி வெவ்வேறு வகை பாடல்களில் இசையமைத்தனர் என்றில்லை- சிவாஜியின் “பலே பாண்டியா” ஒரு முக்கியமான படம். இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். நகைச்சுவைப் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது- “நீயே உனக்கு என்றும் நிகரானவன்”

இதன் ட்யூனில் நகைச்சுவை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இது. முடிவில் வரும் சுவரங்களும் ஜதிகளும், அதைப் பாடி நடிக்கும் நடிகர்களும் (குறிப்பாக எம் ஆர் ராதாவின் மிகைநடிப்பு)- நகைச்சுவை விருந்து அளிக்கிறது.
இதே படத்தில்தான் “நான் என்ன சொல்லிவிட்டேன்,” “அத்திக்காய் காய் காய்” என்ற பாடல்களும், நொந்துபோன கணங்களில் நம்பிக்கையூட்டும், “வாழ நினைத்தால் வாழலாம்” பாடலும் இருக்கின்றன.
இந்தப் பாடல்கள் அவர்களுடைய தனித்திறமைக்கு விளம்பரம் என்றால், அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் இசையமைத்த பாடல்கள் இவர்களைச் சிறந்த பாடல்கள் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றன. சோகப் பாடல்களுக்கும் இவர்கள் பெயர் பெற்றனர்.
இதைவிடச் சோகமான பாடல் கேட்க முடியுமா? “ஆலயமணி” படத்தில் வரும், “சட்டி சுட்டதடா” பாடல்.

அல்லது, நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில், “சொன்னது நீதானா“-

பார் மகளே பார்” படத்தில் “அவள் பறந்து போனாளே” மற்றொன்று-

இந்த இரு ஆண்டுகளில் அவர்கள் அளித்த அருமையான பாடல்கள்தான் எத்தனை எத்தனை!. “ஆலயமணி“, “பாத காணிக்கை“, “நிச்சய தாம்பூலம்“, “படித்தால் மட்டும் போதுமா“, “பார்த்தால் பசி தீரும்“, “சுமைதாங்கி“, “நெஞ்சம் மறப்பதில்லை“, “கற்பகம்” என்று மிகச் சிறந்த பல படங்கள் அந்த இரு ஆண்டுகளில் வெளிவந்தன.
இதோ “போலீஸ்காரன் மகள்” படத்தில் இரண்டு பாடல்கள்- இவை அவர்களின் இசையின் வேறொரு இயல்பை வெளிப்படுத்துகின்றன-
கானடா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல்-

பிபிஎஸ், ஜானகியின் குரல்கள் இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமானவை. என்ன ஒரு மெலடியில் அமைந்த பாடல் இது. “முல்லை மலர்” பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் கானடா ராகத்தை எப்படி மாறுபட்ட முறையில் அணுகியிருக்கிறார்கள், இப்போது.திரைப்பாடலில் ராகத்தின் அழகு கெடாமல் அதைப் பயன்படுத்துவது எப்படி என்று பாடம் நடத்துவது போலிருக்கிறது.
இது கல்யாணி ராகம். இதுவும் பிபிஎஸ், ஜானகிதான். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரும் வெற்றி பெற்ற பாடல்.

இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருப்பது முக்கியமில்லை- எவ்வளவு சிறந்த திரைப்பாடலாக வந்திருக்கிறது பாருங்கள்-
இது எழுபதுகளின் கடைசியில் “வியாமோகம்” என்ற பெயரில் மலையாள மொழி திரைப்படமாக வெளிவந்தது. அதற்கு இசையமைத்தவர் இளையராஜா. விஸ்வநாதனின் கல்யாணி ராஜாவுக்கு ஒரு உத்வேகம் அளித்திருக்கக்கூடும். ராஜாவின் முற்றிலும் மாறுபட்ட கல்யாணி இது-

போலீஸ்காரன் மகள்” படத்தின் இரு பாடல்களைக் கொண்டு நான் சொல்ல வந்த விஷயம் இதுதான்- பாடல் அமைப்பு எவ்வளவு எளிமையாக இருக்கிறது பாருங்கள். பல்லவி எப்போதுமே எளிமையாக இருக்கும், சரணங்களும் இங்கு எளிமையாக இருக்கின்றன. இவற்றில் எதிர்பாராத திருப்பம் எதுவும் கிடையாது. எனவே யாரும் இந்தப் பாடலுடன் இணைந்து பாட முடியும், நம்மாலும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். தவிர, கண்ணதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாமல் செய்கின்றன. எனவேதான் இன்றும் இந்தப் பாடல்களை இன்றும் தடுமாற்றமில்லாமல் பாட முடிகிறது.
ட்யூன்கள் மாறும் சிக்கலான பாடலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. “பராக்” படத்தில் வரும் சலீல் சௌதுரி பாடல், ஆண்டு 1960

சென்ற இதழில்: எம்எஸ்வி – ஓர் அஞ்சலி

(தொடரும்)

3 Replies to “எம்எஸ்வி – 1 இசையும் காலமும்”

  1. திரு.எஸ்.சுரேஷின் திரையிசை குறித்த கட்டுரைகள் எப்போதுமே நல்ல ஆழமான அலசலைக் கொண்டிருப்பவை. இந்தக் கட்டுரையும் அப்படியே. இது போன்ற கட்டுரைகள் எம் எஸ் வி வாழும் காலத்தில், அவர் தனது ஆற்றலின் உச்சத்தில் இருந்தபோதே வந்திருக்க வேண்டியவை. அந்தத் தலைமுறையின், இசையறிந்த, அதை எழுதும் திறமை படைத்த படைப்பாளிகளின் திரைப்பட இசை குறித்த உதாசீனமே இப்படியொரு ஆழமான அலசலை முன்வைக்க முடியாமல் செய்தது என்பது குறித்து எனக்கு ஒரு பெரிய ஆதங்கம் உண்டு இருப்பினும் நல்ல கலைஞர்கள் ஒருபோதும் அவர்களுக்குரிய புகழினை, மரியாதையினை அடையாமல் போவது இல்லை.
    கட்டுரையின் அடுத்தப் பகுதிகளுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.