மெலிதான மர்மம் & மழை – சில குறிப்புகள்

rain-painting

(1)

மணியடித்து மழையில் பஞ்சு மிட்டாய் விற்றுப் போவான் ஒரு
சின்னப் பையன்
மணியின்
ஒலி
மிதந்து மிதந்து போகும் மழையில் நனைந்து அவனோடு.

(2)

இந்த அடை மழையிலும் துயிலும் அவன் கனவில்
மழை பெய்கிறதா?
எந்த மழை நிஜம் அவனுக்கு?

(3)

குளிப்பாட்டிய பிணம்
குத்த
வைத்து
உட்கார்ந்திருப்பது போல்
நடு நிசி மழையில் ஊறி நிற்கும் சுடுகாட்டில் ஒரு பட்டமரம்
ஒளிந்து.

(4)

விழும்
ஒரு
மழைச்
சொட்டிலிருந்து
தப்பிக்கும்
எறும்பொன்று.
அடுத்த மழைச் சொட்டு அதன் மேல் விழும் முன் அதன் தொலைவு கடக்க வேண்டும்

(5)

பகல் இருளாகப் படை திரளும் மேகங்கள் கறுத்து வானம் திறந்த மழையைக்
கறுப்பாய்ப் பெய்கிறதா என்று காகம் ஒரு வேளை வேடிக்கை பார்த்தாலும் பார்க்கலாம்.
தன் கறுப்பு மழையில் கரையாது என்பது மட்டும் நிச்சயம் தெரியும் அதற்கு.
 
கு.அழகர்சாமி

oOo

மெலிதான மர்மம்

உங்கள்
செல்லப்பிராணி
என் தூக்கத்தைக்
கெடுக்கிறது

உங்கள்
தொலைக்காட்சி ஒலியில்
மேலடுக்கில் உள்ள
என் வீடே
அதிர்கிறது
உங்கள் வாகனம்
என் வண்டியை
சில
சமயம்
நகர விடாமல்
செய்து விடுகிறது

உங்கள்
உடல் மொழியா
என்
மறதியா
கடந்து செல்லும் போது
நிறுத்திப் புகார் செய்ய
நேர்வதில்லை

போதாக் குறைக்கு
இன்று
அழைப்பு மணியை
அழுத்தி
ஒருவன்
உங்கள்
பெயரைக் கேட்கிறான்

நான் பின் தொடராத
மெலிதான
மர்மம் அது

தெலுங்கில்
உங்கள் மனைவியும்
நீங்களும் சண்டையிடுவது
மட்டும்
நினைவில் மினுக்கி மறைகிறது

உங்கள்
பெற்றோர்
என்றேனும் வந்து
பெயர் சொல்லி
அழைக்கும் போது
மர்மம் விடுபடும்
சத்யானந்தன்