இன்னும் கொஞ்சம் (நிறைய) எம்.எஸ்.வி – கேட்டவரெல்லாம் பாடலாம்

(உதவி – வ. ஸ்ரீநிவாசன்)

MS_Visvanadhan_Musician_MD_VR_Tamil_Isai

பாலக்காட்டுக்கு அருகே எலப்புள்ளி எனும் கிராமத்தில் பிறந்த எம்.எஸ்.வி. தனது 25வது வயதில் 1953ல் ‘ஜெனோவா’ என்கிற படத்துக்கு முதன் முதலாக இசை அமைத்தார். பாடல்களைக் கேட்ட கதாநாயகன் எம்.ஜி.ஆர்., ஆபீஸ் பையனாக இருந்து இசை அமைப்பாளர் ஆன எம்.எஸ்.வி.யை வாழ்த்தி மேலும் பல சந்தர்ப்பங்களை அளிப்பதாக உறுதி கூறினார்.
1955ல் திரையிசையைக் கேட்க ஆரம்பித்த எனக்கு சி. ஆர். சுப்பராமன், எஸ். வி. வெங்கடராமன், ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு, தட்சிணாமூர்த்தி, ஆர். சுதர்ஸனம், ஆர். ராஜேஸ்வர் ராவ், ஆதி நாராயணராவ், சலபதி ராவ், கே. வி. மஹாதேவன் மற்றும் பலரின் இசையில் இசைத் தேடல் தொடர்ந்தது.
தமிழ்த் திரையிசை மட்டுமின்றி ஹிந்திப் பட இசை, கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையிலும் தொடர்ந்த  இந்த 60 வருட இசை கேட்கும் அனுபவத்துடன் எம்.எஸ்.வி.யின் இசையை உள்நோக்கி அஞ்சலி செலுத்த முற்பட்டுள்ளேன்.
ஐம்பதுகளில் ஹிந்தித் திரையிசை உலகில் அனில் பிஸ்வாஸ், குலாம் மொஹம்மத், ஹேமந்த் குமார், சி. ராம்சந்தர், சித்ரகுப்த் போன்ற மூத்த இசையமைப்பாளர்களைத் தொடர்ந்து நௌஷாத், ரோஷன், எஸ். டி. பர்மன், மதன் மோஹன், ரவி, சங்கர் – ஜெய்கிஷன், ஓ.பி. நய்யர், சலீல் சௌத்ரி, வசந்த் தேசாய் நல்ல இசையை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முந்தைய காலகட்டத்து மாமேதை குந்தன்லால் சைகலின் இசை இந்தியா முழுவதும் பரவியிருந்தது.
இத்தகைய இந்தியத் திரையிசைச் சூழலில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி (வி.ரா.) புதிதாய் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்களின் பிரக்ஞையில் புக ஆரம்பித்தார்கள்.
மூத்த பின்னணிப் பாடகி ஆர். பாலசரஸ்வதி தேவி (நீல வண்ணக் கண்ணா வாடா புகழ்) ஒரு பேட்டியில் “எல்லா பாட்டுக்களும் ஹிந்தி மெட்டுகள்தான்” என்று சொன்னார். அது அப்போது தமிழ்த் திரையுலகில் இருந்த எல்லா இசையமைப்பாளர்களையும் பற்றிய அவரது கருத்து.
மற்ற மொழிகளில் வரும் நல்ல இசையைத் தமிழ் மக்கள் கேட்டு மகிழும் அனுபவத்தைக் கொடுக்க காப்பி அடித்தால்தான் முடியும். வி.ரா.வின் திறமை என்னவென்றால் மெட்டுகளைத் தன் வசப்படுத்தி பாடல்களை அமைத்தனர். பின்னணி இசை சில சமயங்களில் அப்படியே ஒலிக்கும்.
இவர்களது இசையில் ஆரம்ப காலப் படங்களில் நினைவில் நிற்கும் சில பாடல்கள் :
எங்கே தேடுவேன் (பணம்), உனக்கெது சொந்தம் (பாசவலை, பட்டுக் கோட்டையார் பாடல்), கண் மூடும் வேளையிலே (மஹாதேவி), வருந்தாதே மனமே (போர்ட்டர் கந்தன், எஸ். சி. க்ருஷ்ணனின் அருமையான குரலில் ஒரு ரயில் பாட்டு),  சின்னச் சின்ன இழை, விண்ணோடும் முகிலோடும், உனக்காக எல்லாம் உனக்காக, ஆசைக்காதலை மறந்து போ – சுப பந்து வராளி ராகம் (புதையல்),  என் வாழ்வில், முகத்தில் முகம் பார்க்கலாம், வருகிறார் உனைத் தேடி, இன்று நமதுள்ளமே, மனிதன் ஆரம்பம் ஆவதும் (தங்கப் பதுமை).
1958ல் வி.ரா.வின் இசையில் வெளிவந்த ‘பதி பக்தி’ படத்தில் உடனடியாக உள்ளத்தைக் கவர்ந்தது புதுமையாக இசையமைக்கப் பட்ட ‘ராக் அண்ட் ரோல்’ பாட்டு (சந்திரபாபு, வி. என். சுந்தரம்). ஆனால் பட்டுக் கோட்டையாரின் வரிகளில் வந்த அப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே(1) உயிரோட்டம் மிக்கவை.
ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், வி. ரா. இசை என்கிற வலுவான கூட்டணியில் வரிசையாகப் படங்களும், சூப்பர் ஹிட் பாடல்களும் வெளி வந்தன.
பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், பழனி என்று அக் கூட்டணி நீண்டது.
சாத்தனூர் அணையில் ஒரு மஃப்ளரை மாலையாகப் போட்டுக் கொண்டு, பி.பி.எஸ். குரலில் ஜெமினி நடித்த “காலங்களில் அவள் வசந்தம்” திரை இசைக்கு ஒரு ‘பொன் வசந்தம்’. பாவ மன்னிப்பு படத்தின் பாடல்களின் வெற்றியைக் கொண்டாட ஒரு விழா எடுத்தது ஏ.வி.எம். சாந்தி திரையரங்கில் அதன் சொந்தக்காரரான சிவாஜியின் முதல் படமும் அதுவே.
தொடர்ந்து மலர்ந்த ‘பாச மலர்’(2) ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்’ அல்ல. வி.ரா.வின் இசையில் மலர்ந்த முழு மலர்.
பாலும் பழமும் படத்தின் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ (சிவரஞ்சனி) என்றென்றும் தமிழகத்தின் ‘தாம்பத்ய’ சங்கீதம். ‘போனால் போகட்டும் போடா’ பாடல் நெடுக ‘ஓஹோஹோ’ என்று வரும் மயான பயத்தை ஏற்படுத்தும் ஹம்மிங் இசையமைப்பின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இப்படத்தின் ஹிந்தியாக்கமான ‘சாத்தி’யில் நௌஷாத் இந்த உணர்வைத் தரவில்லை.
ஜெயகாந்தனின் (பீம்சிங்) சில நேரங்களில் சில மனிதர்களில் கண்டதைச் சொல்லுகிறேன், வேறு இடம் தேடிப் போவாளோ பாடல்கள் அப்படத்தின் தரத்துக்கு இணையாக அமைந்தன.
பழனி படத்தில் வந்த ‘ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்’ ஹரி காம்போதியில் அமைந்த தெம்மாங்கு. 1970ல் வெளிவந்த ‘பாதுகாப்பு’ படத்தில் ஜெயலலிதா நடனமாடும் ‘ஏனிந்த மயக்கம்’ தனஸ்ரீ ராகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பாடல்.
ஆனால் கர்நாடக வெள்ளம் கரை புரண்டு ஓடியது பி. ஆர். பந்துலு – வி.ரா. இணையில் உருவாகி, இவர்களால் முடியுமா என்ற டி.எம்.எஸ் உட்பட பலரின் பலத்த சந்தேகங்களுக்கு இடையே வந்த ‘கர்ணன்’ படத்தில்.

  • என்னுயிர்த் தோழி ( அமீர் கல்யாணி),
  • உள்ளத்தில் நல்ல உள்லம் ( சக்ரவாகம்)
  • கண்ணுக்குக் குலமேது ( பஹாடி)
  • கண்கள் எங்கே? (சுத்த தன்யாசி)
  • இரவும் நிலவும் ( ஹம்ஸநாதம்)
  • போய்வா மகளே ( ஆனந்த பைரவி)
  • மஹாராஜன் உலகை (கரஹரப்ரியா)
  • மரணத்தை எண்ணி (நாட்டை)
  • மன்னவன் பொருள்களை ( மோஹனம் – டி. எம்.எஸ்.),
  • மழை கொடுக்கும் கொடை (ஹிந்தோளம் – சீர்காழி),
  • நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் (கானடா – திருச்சி லோகநாதன்),
  • என்ன கொடுப்பான் (ஹம்ஸாநந்தி – பி. பி. எஸ்.),
  • ஆயிரம் கரங்கள் நீட்டி (சக்ரவாகம்)
  • சங்கினால் பால் கொடுத்தால் (நீலாம்பரி – பி. பி. எஸ்.)

பந்துலுவுக்கு மிகவும் பிடித்த மஹாகவி பாரதிக்கு மிகவும் பிடித்த வாழ்த்துச் சொல்லைப் பெயராய்க் கொண்டு வந்த ‘பலே பாண்டியா’விலும் வி.ரா பந்துலு கூட்டணி வெற்றி பெற்றது.
சிவாஜியை விட்டு எம்.ஜி.ஆரோடு இணைந்த பந்துலுவின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ (3) படத்தின் இசையும் வி.ரா.தான். “ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை; நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” என்ற வரிகளுக்கு இசையமைத்த வி.ரா. நிரந்தரமாகப் பிரிந்தார்கள். ஏன்? ‘நான் என்ற எண்ணம்?’
பந்துலுவோடு எம்.எஸ். வி. தொடர்ந்தார். அவர் தனியாக இசையமைத்த நாடோடி, ரகசிய போலீஸ்115, தேடி வந்த மாப்பிள்ளை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பாடல்களும் ஒப்பற்றவை.
கே.சங்கரின் இயக்கத்தில் ஜாவர் சீதாராமனால் மெருகேற்றப் பட்டு வந்த ‘ஆலயமணி’ க்கு மேலும் நாதம் ஊட்டியவர் எம்.எஸ்.வி. ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ வில் வந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங்தான் முதன் முதல் பெண் குரலின் ஹம்மிங்கோடு வந்த டூயட் என்று நம்புகிறேன்.
‘பணத் தோட்டம்’ படத்தில் வந்த ‘பேசுவது கிளியா’ மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சான்றிதழை ஏ.வி.எம்.மின் ஒலிப்பதிவாளர் கொடுத்தார். ‘ஒரு நாள் இரவில்’ நடிகர் ஷம்மி கபூரைக் கவர்ந்த பாடல் என்று பி. சுசீலா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டங்களில் வெளி வந்த கலங்கரை விளக்கம் (பொன்னெழில் பூத்தது – பஞ்சு அருணாசலம்), சந்திரோதயம், (எங்கிருந்தோ ஆசைகள்) குடியிருந்த கோவில் (ஆடலுடன் பாடல், துளுவதோ இளமை), இது சத்தியம், படகோட்டி, ஆண்டவன் கட்டளை படங்களிலும் எம்.எஸ்.வி. ஒளிர்விட்டார்.

ஸ்ரீதரும் வி.ரா.வும்

கல்யாண பரிசு (ராசி கருதி ‘ப்’பை விட்டு விட்டார்கள்), தேன் நிலவு, விடிவெள்ளி படங்களுக்கு வெற்றிகரமாக இசையமைத்த ஏ. எம். ராஜாவை விட்டு விட்டு ‘நெஞ்சில் ஓர் ஆலயத்து’ (4)க்காக வி.ரா.வை நாடினார் ஸ்ரீதர். ‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?” என்று ஸ்ரீதரிடம், வி.ரா. கேட்ட கேள்விக்கு ‘தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தை அமைக்கத்தான்’ என்று காலம் பதில் சொல்லிவிட்டது.
பி.பி.எஸ்., ஜானகி குரல் சேர்ந்த போலீஸ்காரன் மகள் (5), சுமைதங்கி (6) நெஞ்சம் மறப்பதில்லை (7) ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்ரீதர் – வி.ரா. இணையின் மாபெரும் இசை வெற்றியான ‘காதலிக்க நேரமில்லை’ (8)
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ‘தில் ஏக் மந்திர்’ ஆனபோது இணையாக இசையமத்தார்கள் சங்கர் – ஜெய்கிஷன். ஆனால் ‘காதலிக்க நேரமில்லை’ ‘ப்யார் கியே ஜா’ ஆனபோது லக்ஷ்மிகாந்த் – ப்யாரிலாலால் அசலின் 20 % தரத்தைக் கூட எட்ட முடியவில்லை.

எம்.எஸ்.வி.யின் சொந்தப் படமான கலைக் கோவில் காதலிக்க நேரமில்லை வெள்ளி விழாவிற்குப் பிறகு வெளிவந்த வீணைக் கலைஞர்களின் கண்ணீர்க் கதை. பாலமுரளி க்ருஷ்ணா (ஆபோகி, வலஜ்ஜி கலந்த ராகத்தில்) திரை இசைக்குப் பாடியமுதல் பாட்டாக ‘தங்க ரதம் வந்தது’. கூடவே நான் உன்னைச் சேர்ந்த செல்வம், தேவியர் இருவர் முருகனுக்கு (ஸ்ரீ ராகம்) மற்றும் முள்ளில் ரோஜா (பி.பி.எஸ். குரலில்) கள்ளூறும் ரோஜா.
தொடர்ந்து
வெண்ணிற ஆடை (ஜெயலலிதாவின் முதல் படம், என்ன என்ன வார்த்தைகளோ, கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல, அம்மம்மா காற்று வந்து, நீ என்பதென்ன. இதில் நீராடும் கண்கள் இங்கே என்கிற கதாநாயகியின் மனவேதனையைத் தெளிவாக வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் படத்தில் இடம் பெறவில்லை)

  • கொடிமலர்
    • (மௌனமே பார்வையாய்,
    • மலரே மலரே நீ சொல்ல,
    • சிட்டாகத் துள்ளி),
  • நெஞ்சிருக்கும் வரை (பூ முடிப்பாள் – சிம்மெந்திர மத்யமம்,
  • முத்துக்களோ கண்கள் (மத்யமாவதி – பிருந்தாவனி),
  • எங்கே நீயோ (சிந்து பைரவி),
  • நினைத்தால் போதும் ஆடுவேன் (ஹம்சாநந்தி)
  • நெஞ்சிருக்கும் எங்களுக்கு (சித்ராலயா நிறுவனத்துக்கு வாலி எழுதிய முதல் பாட்டு)
  • ஊட்டிவரை உறவு
    • (பூமாலையில்,
    • அங்கே மாலை மயக்கம்,
    • ஹேப்பி,
    • தேடினேன் வந்தது,
    • ராஜ ராஜ ஸ்ரீ)
  • சிவந்த மண்
    • (ஒருன் ராஜா ராணியிடம்,
    • பார்வை யுவராணி,
    • ஒரு நாளிலே,
    • பட்டத்து ராணி)
  • அவளுக்கென்று ஒரு மனம்
    • (மலர் எது (இளையராஜா ஆர்கன் வாசித்த பாடல்),
    • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,
    • மங்கயரில் மஹராணி)
  • உரிமைக்குரல் (விழியே கதை எழுது)
  • மீனவ நண்பன் (கொஞ்சும் அலை ஓசை – வாணி ஜெய்ராம்)

என்று திரை இசைக் கொடியை ஸ்ரீதரும் எம்.எஸ்.வியும் மேலும் மேலும் உயர்த்தியபடியே இருந்தார்கள்.
இதைத் தவிர ஸ்ரீதரின் உதவியாளர்களாக பிரகாசித்த கோபு-ராஜேந்திரன் படங்களிலும் அனுபவம் புதுமை, நில், கவனி, காதலி, உத்தரவின்றி உள்ளே வா, சுமதி என் சுந்தரி, திக்குத் தெரியாத காட்டில், கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், வீட்டுக்கு வீடு என்று எம்.எஸ்.வி.யின் முத்திரை அழுத்தமாகப் பதிந்தது.
வீட்டுக்கு வீடு படத்தில் நாகேஷுக்காக (அவரது காதலிக்க நேரமில்லை அப்பா மேதை டி.எஸ். பாலையாவின் நிஜ வாழ்வு மகன்) சாய்பாபா பாடும் “அந்தப் பக்கம் பார்த்தால் ரோமியோ” திரை அரங்குகளை கலகலக்க வைத்தது. அதே போல் கோபுவின் இயக்கத்தில் வந்த ‘காசேதான்கடவுளடா” வில் வந்த சாமியார் தேங்காய் சீனிவாசன் சீடர்கள் முத்துராமனும், ஸ்ரீகாந்த்தும் ஒத்து ஊதப் பாடும் “ஜம்புலிங்கமே ஜடாதரா” இசையாலும், காட்சியாலும், நடிப்பாலும், வரிகளாலும் அட்டகாச வரவேற்பைப் பெற்றது.
ஸ்ரீதரின் இன்னொரு உதவியாளரான பி. மாதவன் தனியே இயக்கிய மணி ஓசை, பட்டிக்காடா பட்டணமா, ஞான ஒளி, கண்ணே பாப்பா, குழந்தைக்காக, ராமன் எத்தனை ராமனடி, தங்கப் பதக்கம், மன்னவன் வந்தானடி படங்களிலும் சிறப்பாக இசை வலு சேர்த்தவர் எம். எஸ். வி யே.
பாலாஜியின் தயாரிப்பில் ஏ. சி. திருலோக் சந்தர், சி. வி.ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி நடித்த பல படங்களில் குறிப்பிடும்படியாக என் தம்பி, திருடன், ராஜா, நீதி, எங்கிருந்தோ வந்தாள், என் மகன். மற்றும் ஏ. சி. திருலோக்சந்தரின் தெய்வ மகன், எங்கமாமா, இரு மலர்கள், தர்மம் எங்கே, பாரத விலாஸ் படங்களிலும் எம். எஸ். வி. யின் இசை மெருகூட்டியது.
கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படங்களான மாலையிட்ட மங்கை (செந்தமிழ்த் தேன் மொழியாள் – டி. ஆர். மஹாலிங்கம்) கவலை இல்லாத மனிதன் (பிறக்கும் போதும் – ஜே. பி. சந்திரபாபு, சிரிக்கச் சொன்னார் ), கருப்புப் பணம் (எல்லாரும் எல்லாமும் – சீர்காழி, அம்மாம்மா, ஆடவரலாம் – எல். ஆர்.ஈஸ்வரி) சிவகங்கைச் சீமை (கனவு கண்டேன், சாந்துப் பொட்டு, கன்னங்கருத்த கிளி) லட்சுமி கல்யாணம் (ராமன் எத்தனை ராமனடி – சிந்து பைரவியில் அமைந்த ராமநாமாவளி) அனைத்துக்கும் எம். எஸ். வி யே இசை.
சோ அவர்களின், பல தடைகளையும் மீறி வெளிவந்து  சரித்திரம் படைத்த ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்துப் பாடிய ‘அல்லா அல்லா’ அந்த காலகட்டத்தில் ‘இல்லாத இடமேயில்லை’.
ஏ. வி. எம். படங்களில் இசை நன்றாக இருக்கும் என்பது எம்.எஸ். வி. ராமமூர்த்தியோடும், தனியாகவும் அவர்களுக்காக இசை அமைத்த போதும் தொடர்ந்தது. சர்வர் சுந்தரம் ( அவளுக்கென்ன), குழந்தையும் தெய்வமும் அன்புள்ள மான் விழியே), வீரத்திருமகன் (ரோஜா மலரே, பாடாத பாட்டெல்லாம்), ராமு (நிலவே என்னிடம், கண்ணன் வந்தான், பச்சை மரம்), அன்பே வா (ராஜாவின் பார்வை, நான் பார்த்ததிலே)
அதே போல் ஜெமினி நிறுவனத்துக்கும் இருந்த பெருமையை முதலில் வி.ரா.வும் பின்னர் எம்.எஸ்.வியும் தக்க வைத்தனர். வாழ்க்கைப் படகு  (வி.ரா. ஜெமினி நிறுவனத்துக்கு இசையமைத்த முதல் படம். பாடல்கள் – ஆயிரம் பெண்மை மலரட்டுமே, உன்னைத்தான் நானறிவேன், நேற்றுவரை நீ யாரோ, சின்னச் சின்னக் கண்னனுக்கு – சூப்பர் ஹிட்), மோட்டார் சுந்தரம் பிள்ளையும் (காத்திருந்த கண்களே, துள்ளித் துள்ளி விளையாட, மனமே முருகனின் மயில் வாகனம்) அப்படியே.
விஜயா வாஹினியின் எடுத்த ஒரு படம், மாபெரும் வெற்றி பெற்ற கல்ட் படம். அதற்கும் இசை வி.ரா. எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டில் அனைவருக்கும் ‘எங்க வீட்டு பிள்ளை’யானதில் வி.ரா. வுக்கும் பங்குண்டு.
ஆர். ஆர். பிக்சர்ஸ் டி. ஆர் ராமண்ணா படங்கள் (குலேபகாவலி, பாசம், பெரிய இடத்துப் பெண், மணப்பந்தல், பறக்கும் பாவை, சொர்க்கம்) பாடல்களுக்குப் பிரசித்தம். வி.ரா.வின் பங்கு இவற்றிலும் கணிசம்.
ஜெமினி கணேசன் படங்களுக்கும் காத்திருந்த கண்கள், ஹலோ மிஸ்டர் ஜமீந்தார், பாக்யலக்ஷ்மி, வாழ்க்கை வாழ்வதற்கே, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர், கற்பகம், சாந்தி நிலையம் என்று வி.ரா. வின் இசை செழுமை சேர்த்தது.
இப்போது கே. பாலசந்தர் எம். எஸ். வி இணையைப் பார்ப்போம்.
ஸ்ரீதர் ஏ. எம். ராஜாவிடமிருந்து மாறியதைப் போலவே நீர்க்குமிழியிலிருந்து, இரு கோடுகள், வெள்ளி விழா வரை அனைத்துப் படங்களுக்கும் இசையமைத்த வி. குமாரை விட்டு கே. பி. எம். எஸ். வி. க்கு மாறினார்.
பாமா விஜயம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதையைத் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் என்கிற இசைக்கு முக்யத்துவம் தரும் படத்தை எடுத்தார். சிங்கப்பூர், கமல் – ரஜினி இணை என்று பெரும் எதிர்பார்ப்பு. மகுடமாக எம். எஸ். வி. யின் இசை அமைந்து மிகப் பெரிய வெற்றியாக ஆகியிருக்க வேண்டும். இரண்டு ஆர். டி. பர்மன் ட்யூன்களை ஏன்தான் தெர்ந்தெடுத்தாரோ? விமானத்தில் பறக்கும் பாட்டு “வானில் மேடை அமைந்த ஆனந்த வாலிபத் திருவிழா” ஹம் கிசி ஸே கம் நஹீன் படத்தில் வரும் ‘மில்கயா’ வையும், “சிவசம்போ” ஷோலேயின் ‘மெஹபூபா’ வையும் நினைவூட்டின. எதிர்பார்ப்போடு ஒப்பிடுகையில் எனக்கு ஏமாற்றம்தான். இது என் தவறாகவும் இருக்கலாம்.
அதே போல் காவியத்தலைவியின் இசை மம்தாவில் ரோஷன் நிர்ணயித்த உயரத்தை எட்ட முடியவில்லை.
கே. பி. படங்களில் அதிசய ராகம் (மஹதி பைரவி) இலக்கணம் மாறுதோ (சரஸ்வதி) மௌனத்தில் விளையாடும் (சாமா) முதலிய பாடல்கள் மற்றும் வான் நிலா நிலா அல்ல ( பட்டின பிரவேசம்) மான் கண்ட சொர்க்கங்கள் ( 47 நாட்கள்), வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி, சிப்பி இருக்குது, எழு ஸ்வரங்களுக்குள், தெய்வம் தந்த வீடு முதலிய பாடல்கள் எம். எஸ். வியின் பெயர் சொல்லும்.
சத்யா மூவீஸின் தெய்வத் தாய், நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், இதயக்கனி ப. நீலகண்டன் இயக்கத்தில் வந்த திருடாதே, நேற்று இன்று நாளை, நீதிக்குத் தலை வணங்கு, ஒரு தாய் மக்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் வெளியாகி மகத்தான வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் படங்களின் வெற்றியிலும் பாடல்களின் பங்கு பெரியது.
சிவாஜி தயாரித்த முதல்படம் ‘புதிய பறவை’ இசை யுலகில் ஒரு சரித்திரம் படைத்தது. உன்னை ஒன்று கேட்பேன் (ஹரி காம்போதி), சிட்டுக் குருவி, (நட பைரவி) பார்த்த ஞாபகம் இல்லையோ – இவற்றை வரிசைப் படுத்தச் சொன்னால் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வரிசையைத் தேற வாய்ப்புண்டு. ஆனால் எல்லாமே முதல் தரம்.
எம். ஜி. ஆரின் நூறாவது படமான ஒளி விளக்கில் இடம் பெற்ற “ஆண்டவனே உன் பாதங்களில்” பாடல் எம். ஜி. ஆர் 1984-85ல் நோய் வாய்ப்பட்ட போது ஒலிக்காத இடமோ திரையரங்குகளோ இல்லை. அவர் பிழைத்தும் வந்தார்.
சிவாஜியின் 125வது படம் உயர்ந்த மனிதனில் ‘நாளை இந்த வேலை பார்த்து” (சாருகேசி ராகம்) பி. சுசீலவுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.
சிவாஜியின் 150 வது படமான சவாலே சமாளியில் இடம் பெற்ற ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப் பாடு’ பாடலுக்காக பி. சுசீலா மீண்டும் தேசிய விருது பெற்றார்.
அபூர்வ ராகங்களில் ராக மாலிகை ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்” (பந்து வராளி, ரஞ்சனி, காம்போதி) வாணி ஜெய்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.
எனவே எம். எஸ். விக்கு விருது கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டாம். விருது பெற்றவர்களையே உருவாக்கியவர் அவர்.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த பாடல்களில் வருடிய மெலடியை அவர்கள் தனித்தனியாக இசையமைத்த போது உணர முடியவில்லை. குறிப்பாக பின்னணி இசையில் சப்தம் அதிகமாக இருந்தது. ஹிந்தியில் ஜெய்கிஷன் இறந்த பிறகு சங்கரின் இசைக்கும் இதே நிலை ஏற்பட்டது.
எம். எஸ். வியே ஹம்மிங் செய்த பாடல்கள் பிரபலமானவை. ஒரு வினோதத்தோடு நம் மனதை ஈர்க்கும். பாலிருக்கும் (பாவ மன்னிப்பு), நான் நன்றி சொல்வேன் (குழந்தையும் தெய்வமும்), கொடுக்கக் கொடுக்க (நான் ஆணையிட்டால்).
பின்னணி இசை ஒரு படத்துக்கு எவ்வளவு உயிர் கொடுக்கிறது என்பது டி.வி.யை ம்யூட் செய்து விட்டு ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தால் புரியும். அதே போல் பாடல் காட்சிகள் அதில் உள்ள பாடலின் வரிகளால் மட்டுமின்றி இசையால் மிகச் சிறப்பாக மேம்படுத்தப் படுவதும் எம். எஸ். வி போன்றவர்களின் திறனால் பலமுறை நிகழ்ந்ததுதான்.
உதாரணத்துக்கு :
(i) ‘ராமு’ படத்தில் கே. ஆர். விஜயா ‘நித்திரையில் வந்து நிம்மதியைக் கெடுத்த உத்தமன் யாரோடி” என்று விரகதாபத்துடன் என். சி. வசந்த கோகிலத்தின் கிளாசிக் பாடலை இசைக்க, அதை வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் ஜெமினியின் மறுமொழியாக பி.பி.எஸ். பாடும் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ (பாகேஸ்ரீ) பாடல் காட்சி.
(ii) ‘குலேபகாவலி’ படத்தில் எம்.ஜி.ஆர். மயக்கும் மாலைப் பொழுதே பாடலில் வரும் ஹம்மிங்கைக் கேட்டு , பாட்டு வரும் திசையை நோக்கி காதல் வசப்பட்டு விரைவார். விந்தனின் வரிகளில் கே. வி. மகாதேவன் (கூண்டுக் கிளிக்காக போட்டு அப்படத்தில் இடம் பெறாத) மெட்டில் வி.ரா. போட்ட பாட்டு காட்சிக்குக் கச்சிதமாகப் பொருந்தும்.
(iii) ‘சுமைதாங்கி’யில் என் அன்னை செய்த பாவம் (பேஹாக்) (தன்னை நோகும் காதலி, குற்ற உணர்வில், தோல்விகளின் சுமையைத் தாங்க முடியாமல் பரிதவிக்கும் காதலன், வின்சென் டின் ஒளிப்பதிவு, ஸ்ரீதர் இயக்கம். ஜெமினியின் சூபர்ப் நடிப்பு, தேவிகா. அனைத்துக்கும் பொருத்தமாய் இந்த மரண அவஸ்தையை திரையில் தத்ரூபமாக உணரச் செய்யும் எம்.எஸ்.வியின் இசை.
(iv) ‘படித்தால் மட்டும் போதுமா’ வில் ஏ.எல்.ராகவன், பி.பி.எஸ்., சதன் பாடிய “கோமாளி, கோமாளி’ பாடல் மனைவியின் அலட்சியத்தால் கோமாளி ஆக்கப்பட்ட கதாநாயகனின் நிலையை இயக்குனர், இசையமைப்பாளர், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள், கச்சிதமான சிவாஜி மற்றும் இதர நடிகர்களின் கூட்டு முயற்சியில் மிகப் புதுவிதத்தில் சித்தரித்த காட்சி.
(v) ‘புதிய பறவை’ யில் வரும் ‘எங்கே நிம்மதி’, சிவந்த மண்ணின் ‘பட்டத்து ராணி பாடல்கள் வரும் பிரும்மாண்டமான காட்சிகளும் இசையின் பொருத்தம் அது ஏற்படுத்தும் பூரண உணர்வு அதனால் மேம்படும் காட்சியமைப்பு ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
எம். எஸ். வி. தவப் புதல்வன் படத்தில் “லைஃப் ஈஸ் ஃபைன் டார்லிங் வென் யூ ஆர் மைன்” என்கிற பிரபல ஆங்கிலப் பாடலுக்கு இசை அமைத்துள்லார். இயற்றியவர் – ராண்டர்கை. பாடியவர் அஜித் சிங் (எல். ஆர். ஈஸ்வரி)
பல ஹிந்துஸ்தானி ராகங்களைத் திறம்பட கையாண்டுள்ளார். சில முக்கியமான பாடல்களை பிலாஸ்கானி தோடி என்கிற அபூர்வ ராகத்தில் இசையமைத்துள்ளார். தான்சேன் மாண்டு கிடந்தபோது சோகமே வடிவாக அருகில் இருந்த அவரது புதல்வர் பிலாஸ்கான் திடீரென்று இந்த ராகத்தைப் பாட ஆர்ம்பித்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த ராகத்தில் அமைந்த எம். எஸ். வி.யின் பிரபல தமிழ்ப் பாடல்கள்.

  1. படைத்தானே (நிச்சய தாம்பூலம்)
  2. தேரேது சிலையேது (பாசம்)
  3. சட்டி சுட்டதடா (ஆலய மணி)
  4. பேசுவது கிளியா (பணத் தோட்டம்)
  5. எங்கே நிம்மதி (புதிய பறவை)
  6. அவள் பறந்து போனாளே (பார் மகளே பார்)
  7. வீடு வரை உறவு (பாத காணிக்கை)

மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் 1963ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சிவாஜி அவர்களால் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு வழங்கப் பட்டது. ஸ்ரீதர், பீம்சிங், ஜெமினி, சாவித்திரி, கண்ணதாசன், டி.எம்.எஸ்., பீ. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சந்திரபாபு பங்கேற்றாஆர்கள். வி.ரா.வின் மெல்லிசைக் கச்சேரியும் நடைபெற்றது. திருவல்லிக்கேணி என். கே. டி. கலாமண்டபத்தில் திருவல்லிக்கேணி கல்சுரல் அகாதமி சார்பில் நடந்த இந்த விழாவை முன்னின்று நடத்தியவர் சித்ராலயா கோபு அவர்கள். இதே நாளில் நடக்கவிருந்த மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை இந்நிகழ்ச்சிக்காக வேறு தேதிக்கு அப்போது திரையுலகில் பிரபலம் ஆகாத கே. பி. மாற்றி உதவினாராம்.
எம். எஸ்.வி. என்கிற மனிதரின் சமூக அக்கறைக்கு ஓரு சான்று
ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் எம்.எஸ்.வி. ஸ்பெஷலாக நடக்கையில் ஒரு சிறுமி “அடி என்னடி உலகம்’ என்ற பாட்லைப் பாட “உனக்கு இந்தப் பாட்டெல்லாம் எதுக்கு? வேறு நல்ல பாட்டெல்லாம் நான் போட்டிருக்கேனே” என்று அன்பாக கடிந்து கொண்டார்.
வி,ரா வின் இசையில் எனக்கு பிடித்த ஐந்து பாடல்களை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்,
1, முகத்தில் முகம் பார்க்கலாம் தங்கப்பதுமை (கல்யாணி- டி,எம்,எஸ் பி, சுசிலா – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம். விநோதமான கற்பனை பாடலின் இசை தெரிக்கும் சிவாஜி தானே பாடுவது போன்ற பிரமையை ஏற்படுத்திருப்பார்.
2, ஆடாத மனமும் உண்டோ! மன்னாதி மன்னன் (லதாங்கி – டி,எம்,எஸ் எம்,எல்,வி, – கண்ணதாசன்) ஆடுவோர் ஆடினால் பாடத்தோன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும்.
3, மாலை பொழுதின் மயக்கத்திலே பாக்கியலெஷ்மி (சந்திரகவுன்ஸ் – பி, சுசிலா. கண்ணதாசன்) பாட்டிற்கு வீணை மீட்டியவர் வித்வான் பிச்சுமணிஐயர், வீணை இசையை மட்டும் கேட்டுவிட்டு எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்.
4, நானன்றி யார் வருவார் மாலை இட்ட மங்கை – (டி,ஆர் மகாலிங்கம் ஏ,பி, கோமளா – கண்ணதாசன்) மகாலிங்கம் ஆபோகியில் பாட கோமளா வலஜ்ஜியில் பதில் கொடுப்பார், இசை சங்கமம், அற்புதப் பாடகரான டி. ஆர். மகாலிங்கம் தன் வழக்கத்துக்கு மாறான ஆச்சர்யப்படுத்தும் மென்மையான குரலில்(!) இனிமையான கவிதையை பாட கோமளா ஈடுகொடுத்து இசைப்பார்.
5, அன்பு மனம் கனிந்த பின்னே (ஆளுக்கொரு வீடு – பி,பி ஸ்ரீனிவாஸ் பி,சுசிலா. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) பாட்லை சத்தியனும். எல், விஜயலெஷ்யும்  அன்யோன்யமாக அரங்கேற்றியிருப்பார்கள், பாடல் மென்மையாக மலரும். சத்தியன் நடிப்பை பார்க்கும்போது ஜெமினிகணேசனை நினைக்க தோன்றும், சத்தியனுக்குப் பிடித்த தமிழ் நடிகர் ஆயிற்றே அவர்.
60 வருடங்களாக ஆசையுடனும், ஆச்சர்யத்துடனும், ஆனந்தத்துடனும் எம். எஸ்.வி. அவர்களின் திரையிசையை ஆத்மார்த்தமாகத் தொடர்ந்த  ஒரு ரசிகன் நினைவில் அவர் என்றென்றும் நிற்கப்போவது  இப்படித்தான் :

“இசைகேட்டால் புவி அசைந்தாடும்
இறைவன் அருளாலே
ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்”

 
***************
 
(1) திண்ணைப் பேச்சு வீரரிடம், சின்னஞ்சிறு கண் மலர், கொக்கரகொக்கரக்கோ சேவலே, இறை போடும் மனிதருக்கே, வீடு நோக்கி ஓடி வந்த என்னையே.
(2) எங்களுக்கும் காலம் வரும், பாட்டொன்று கேட்டேன், யார் யார் யார் இவர் யாரோ (பஹாடி ராகம்).
(3) அதோ அந்த பறவை போல, ஓடும் மேகங்களே, உன்னை நான் சந்தித்தேன் (சுப பந்துவராளி), நாணமோ
(4) சொன்னது நீதானா, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், எங்கிருந்தாலும் வாழ்க, முத்தான முத்தல்லவோ, ஒருவர் வாழும் ஆலயம் (டி.எம்.எஸ். ஸ்ரீதருக்காகக் குரல் கொடுத்த முதல் பாடல்)
(5) இந்த மன்றத்தில் ஓடி வரும், பொன் என்பேன், நிலவுக்கு என்மேல், கண்ணிலே நீர் எதற்கு.
(6) என் அன்னை செய்த பாவம், மாம்பழத்து வண்டு (இளையராஜாவைக் கவர்ந்த பாடல்), ராதைக்கேற்ற கண்ணனோ, எந்தன் பருவத்தின் கேள்விக்கு, மனிதன் என்பவன், மயக்கமா, கலக்கமா (மன அழுத்தத்தில் சிக்கியிருந்த வாலியை மீட்ட பாடல்)
(7) நெஞ்சம் மறப்பதில்லை (எம்.எஸ்.வி. அதிக நேரம் எடுத்துக் கொண்டு இசையமைத்த மாண்ட் ராகப் பாடல்), நிலவுக்கும், மலருக்கும் ஜாதியில்லை.
(8) நாளாம் நாளாம் திருநாளாம் (ராகேஸ்ரீ / பாகே ஸ்ரீ) ஸ்ருதி சுத்தம் நிறைந்த பாடல் என்று கர்நாட்க இசை விமர்சகர் சுப்புடு பாராட்டியுள்ளார். என்ன பார்வை, உங்கள் பொன்னான கைகள்,காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா..தா, அனுபவம் புதுமை.

6 Replies to “இன்னும் கொஞ்சம் (நிறைய) எம்.எஸ்.வி – கேட்டவரெல்லாம் பாடலாம்”

  1. மிக மிக அருமையான தொகுப்பு, ரசிகன் மனதில் எம்.எஸ்.வி.என்றென்றும் இருப்பார் என்பதற்கு, ‘இசை கேட்டால்………….இசை என்னுடன் உருவாகும்’ என முடித்திருப்பது மிக சிறப்பு, வாழ்த்துக்கள்

  2. “வி.ரா. நிரந்தரமாகப் பிரிந்தார்கள். ஏன்? ‘நான் என்ற எண்ணம்?”
    ரசிகர்கள் அனைவரின் மனதில் எழுந்த ஆதங்கம்! மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இருவரும் சேர்ந்து போட்ட மெட்டுக்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்! இருவரும் ஜீவியத்தில் இருக்கும்போது மைய அரசு அவர்களுக்குச் சிறப்புச் செய்ய மறந்தது! தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழா எடுத்தார், தன் முயற்சிகளுக்கு மத்திய அரசு மதிப்புத் தரவில்லை என்று வருத்தப்பட்டுச் சொன்னார்! விருது பெற்றவர்களைத் தயார் செய்த எம்.எஸ்.வி. மற்றும் டி.கே.ஆர். அவர்களுக்கு அதனால் குறை ஏதும் இல்லை! இறைவனிடம் இணைந்து விட்ட இந்த மகா கலைஞர்கள் அவரிடம் தங்கள் இசைத் திறமையை அர்ப்பணித்துக் கொண்டு இருப்பார்கள்! அதி அற்புதமான கட்டுரை! வாழ்க மெல்லிசை மன்னர்கள் இசைத் திறம்!

  3. செவ்வியல் இசையில் தனக்கு இருக்கும் ஞானம்,இந்தி மற்றும் தமிழ் திரை இசையில் தனக்கு இருக்கும் ஆழமான ரசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் திரு.பார்த்தசாரதி எம்.எஸ்.வி என்னும் இசை சாகரத்தில் விளைந்த நல்முத்துக்களை தெரிந்து பட்டியலிட்டிருக்கிறார்.அவரின் தேர்வு எல்லாருக்கும் உடன்பாடன ஒன்றுதான்.ஆனால் எம்.எஸ்.வி.யின் படைப்புகள் இசை என்ற ஒற்றை பரிமாணத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை.மொழி,மொழி சார்ந்த பண்பாடு,மனித மனங்களின் பல்வேறு உணர்ச்சிகள் ஆகியவற்றை இசை வடிவாக உரு மாற்றும் ரசவாதமே அவரின் படைப்பு பாணி.தனது பாடல்களின் மெட்டுகள் பாடல் வரிகளிலேயே உள்ளன என்றும்,அவற்றை கண்டறிந்து வெளிக்கொண்டுவரும் வேலையை மட்டுமே தான் செய்வதாக அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.இசைக்காக வார்த்தைகளை சிதைக்காமை,தெளிவான உச்சரிப்பு ஆகியவற்றில் அவர் மிக உறுதியாக இருந்தார்.செங்க மலம் சிரிக்குது என்று நரகல் நம் காதுகளில் விழுந்தது போன்ற அவலமோ–மானாமதுரை மாமரக்கிளையிலே என்பது மானாமதுரை மாமரக்கு ரயிலே என நம் காதுகளில் தடம் புரண்டது போன்ற அவலமோ அவரது இசையமைப்பில் நிகழவில்லை.ராகங்களை அவர் வலிந்து தேடிப்போகவில்லை.கமகங்களையும்,பிர்காக்களையும்,சங்கதிகளையும் திணிக்கவில்லை.அவை மிக இயல்பாக பாடல்களின் சொற்களிலிருந்தே உருவாவதை உணர்ந்து ரசிக்கலாம்.பாடல்களின் சொற்கள் தரும் பொருளையும்,அநுபவங்களையும் இசையாக மாற்றம் செய்த அவரின் படைப்பின் வீச்சை முழுமையாக உணர இசையறிவு மட்டும் போதாது;இசையோடு ஒன்றாகும் அத்வைத நிலை வேண்டும்.அப்போது இந்த பட்டியல் நீளும்.

  4. MSV and Ramamurthy the pair has created millions of of musical ears and made a cultural amalgamation across the palk straight. Tamils on the mail land and the island have reaped the essences of what is good tamil, what is good ESAI !! The classical and aesthetic listening has grown overwhelmingly
    during the period of our great MSV , that is 60 long years. we are able to get the Musical trinity’s today because of their outstanding outpourings i the 18th century, which are being carried out even today by the great sishya paramparas. I wish MSV and Ramamurty’s works will live long, with our successive generations listen to , by singing and appreciating
    this is being very much felt in todays SUPER Singer Shows by Vijay TV effectively.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.