மௌனத் திரைப்படயியலின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் படங்களின் பிரக்ஞையின்மை

silentmovies

1920-30 க்கு இடைப்பட்ட வருடங்கள் சினிமாவுக்கு பிளாட்டினமான கால கட்டம். மௌனப் படங்கள் உச்சியில் கோலோச்சியிருந்த நேரம் அது. அனைத்து மக்களும் மௌனப் பட ரசிகர்களாக இருந்தனர். உலகெங்கும் மௌனப் படங்கள் பிராந்தியம் வாரியாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருந்தன.
அதன் பின்னராக 40-களில் படங்கள் பேச ஆரம்பித்தன. அதுவரை மௌனப் படங்களையே நம்பி வாழ்க்கைப் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்த கலைஞர்களும், தொழிலாளிகளும் பேசும் படங்களின் வருகை மூலமாக பாதிக்கப்பட்டது ஒரு பெரிய கதை. அதை கதைப் பொருளாக வைத்து அழகான படங்கள் கூட எடுக்கப்பட்டுவிட்டது.
மௌனப் படங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வெளியிடப்பட்ட மௌனப் படங்கள் அவ்வளவு சிறப்பாக ஓடாமல் போனது. அதை காசு கொடுத்து வாங்கவோ, திரையிடவோ சினிமா சார்ந்த தொழில் முறை வல்லுனர்கள் தயக்கம் காட்டினர். வெகு சிறப்பாக வியாபாரம் கொடுத்துக் கொண்டிருந்த மௌன சினிமாவின் இடத்தைப் பேசும் படங்கள் பிடித்துக்கொண்டதோடு மக்களிடையே ஒரு புதுமையை நிகழ்த்திக் காட்டியதாக கருதப்பட்டு வந்ததும் உண்மைதான்.
மௌனப் படங்களுக்கு தங்களைத் தயார்படுத்திவிட்டிருந்த மக்கள் புதியதாக வந்த பேசும் படத்தைப் பிரமிப்பாக பார்க்க ஆரம்பித்திருந்தனர். தியேட்டருக்கு முன்பைவிட மக்கள் அலை அலையாக செல்லத் துவங்கியபோதுதான் பேசும் படம் அதன் விஸ்தாரமான ரூபத்தை எடுத்துக் கொண்டிருந்தது. படத்திலுள்ள மாந்தர்கள் பேசிக்கொள்வதும், கத்துவதும், அழுகை, சிரிப்பு சப்தங்கள் முதலானவையும் தங்களது இயல்பான வாழ்வினோடு ஒன்றிய நிகழ்வுகளாக வெளிப்பட்டதைப் போன்று இருந்ததையொட்டி அதன் மீதான ரசனை மக்களிடையே பல்கிப் பெருகியது. அப்போது மண்டியிருந்த நாடகங்களின் பாதிப்பால் பெரும்பாலான சினிமாக்கள் வெளிவர ஆரம்பித்தன. இதன் விளைவாக ‘வெகுசன ரசனை’ என்ற புதிய பதத்துக்குள் சினிமா கட்டுப்பட வேண்டிய கட்டாயமும், பெரும்பாலும் அனைவரையும் குஷிப்படுத்த வேண்டிய படங்களைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் திரைக் கலைஞர்களுக்கும், திரைத்துறை சார்ந்து இயங்கும் ஊடகங்களுக்கும் ஏற்பட்டன. சினிமா ரசிகர் மன்ற கலாச்சாரமாக இன்று உருமாறியிருப்பதற்கான அச்சாரம் இதிலிருந்துதான் ஆரம்பமாகியிருக்கலாம்.
மௌன சினிமாவை ரசித்து வந்த போக்கைவிட மக்கள் பேசும் படத்தை விரும்பி இயைந்து ஆழ ரசிக்க ஆரம்பித்தனர். மௌனப் படத்திலிருந்து முற்றிலுமாக ரசனை ரீதியாக விலகியிருந்த பேசும் படங்கள் சினிமா துறைக்கு உலகளாவிய வணிகத்தைப் பெற்றுத் தர காரணமானது. அதே சமயத்தில் பேசும் படங்களுக்கு நிகராக வியாபார ரீதியிலும், ரசனை தொடர்பாகவும் மௌனப் படங்கள் தோல்வியடைந்து வந்தன. அதற்கான கொஞ்ச நஞ்ச ரசிகர்களும் கலைஞர்களும் பேசுகின்ற படத்தில் பணியாற்ற சென்றனர். இதனால் மௌன சினிமாக்கள் எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் அந்த வகை சினிமா முழுமையாக அழிந்துபோனது.
சொல்லப் போனால் மௌன சினிமாவும் வெகுசன ரசிகர்களை மகிழ்வித்தது. எல்லோருக்கும் பிடித்தது போல வந்த மௌன வணிக திரைப்படங்கள் ஏராளம். பஸ்டர் கீட்டனின் முக்கால்வாசி படங்கள் இந்த வகைக்குள் அடங்கும். அதே சமயத்தில் பொடெம்கின், சன்ரைஸ், ஜோன் ஆஃப் ஆர்க், ஆந்தலூசியன் டாக் போன்ற உலகத் தரத்திலான படங்களும் அப்போது வந்து நல்ல மதிப்பைப் பெறத்தான் செய்தன.
நிசப்த கலைப் படங்களும், நிசப்த வணிகப் படங்களும் ஒன்றையொன்று பாதித்துக் கொள்ளாமல் மக்களிடையே சரிசமமாக வரவேற்பையும் பெற்றன.
இந்த போக்கு பேசும்பட காலகட்டத்தில் நிகழவில்லை. அதற்கென்று ஒரு தனி வியாபார உலகமும், மாற்றுப் படங்களுக்கென்று தனியான வியாபார சந்தையும் உருவாக ஆரம்பித்தது. மேலும், பெருவாரியான மக்களுக்கான சினிமா என்ற பதம் வணிக சினிமாவை அர்த்தப்படுத்துவதாக ஒரு புதிய கருத்தியல் ஒருபக்கம் தோன்றிக்கொண்டிருந்தது. 1930-களில் படங்கள் பேசிக்கொள்ளாதபோது கமர்சியல் சினிமா என்ற வார்த்தைப் பிரயோகமே உருவாகியிருக்கவில்லை. படங்களைப் பார்த்து நமக்கு நாமே பகுத்துக் கொள்ளலாம் (மேலுள்ள ஒரு பத்தியில் அவ்வாறுதான் பிரித்துக் காட்டியிருக்கிறேன்). உலகளாவிய ரசிகர்களிடையேயும், சினிமா கட்டுரையாளர்களிடையிலும் சாப்ளினை சிறந்த சமூகப் பிரக்ஞையும், அரசியல் கருத்துக்களும் கொண்ட படைப்பாளியாக இந்த சிந்தனையாக்கம்தான் நிறுவியது.
இந்த கமர்சியல் சினிமா என்ற புதிய கருத்தாக்கம் ஒரு குறிப்பிட்ட படங்களுக்கானதாக மாறிப்போனதற்கு நுட்பமான காரணங்கள் இருக்கின்றன.
மௌனப் படங்களைப் பார்க்கும் ரசிகன் தன்னை முழுமையாக திரையில் ஈடுபடுத்தினாலொழிய (Engage) படத்தைப் புரிந்துகொள்வது சிரமமாகப் போய்விடும். ஏனென்றால் படம் அவனோடு பேசுவது இல்லை. இதனால் அவனின் சிந்தனைத் தளம் தொடர்ந்து ஒரு இயக்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். உடம்பை மறந்து படத்தின் வெளியில் அவனால் சிரிக்க முடிவதில்லை. எனவே, மனோ ரீதியாக அவன்
நிகழ்வாழ்தலுக்குரிய குவியப்படுத்தும் சிந்தனை உள்ளவனாவதற்கு தற்செயலாக எவ்விதமான புற தொடர்புகளுமின்றி ஆட்படுகின்றான்.
சுருக்கமாக ஒரு நிசப்த சினிமா பார்வையாளனுக்கு அதிக வேலையைத் தந்துதவுகின்றது.
படங்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்குள் மக்களிடையே இந்த நிசப்த திரைப்பட அனுபவம் கரையேறியிருந்தது.
தற்போதைய ரசனைக் கணக்குப்படி, கதாப்பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். பேசும் திறமைதான் பார்வையாளனை படத்தோடு ஒன்று பிணைக்கும் ஒரே கருவி. ஆதலால், கதை மாந்தர்கள் பேசிக்கொண்டே இருந்தால்தான் சினிமா ஓடுவதாகவே உணர ஆரம்பித்தனர். இல்லையென்றால் தன்னை திரைப்படங்களிலிருந்து எளிமையாக அவர்களால் துண்டித்து வெளியேற்றிக்கொள்ள முடிந்தது. (இதைத்தான் “பார்வையாளன் காதை மட்டுமே கூர்மைபடுத்திக் கொண்டு திரையரங்கத்தில் நுழைகிறான்” என்று தி.பாஸ் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார்)
கால வருட கணக்கில் ஒரு விரிவான இடைவெளி மௌன யுகத்திற்கும், பேசும் காலத்திற்கும் ஏற்பட்டிருந்தது. இந்த இடைவெளியில் நவீன தலைமுறைகள் உருவாகி பேசும் படத்துக்கு புதிய ரசிகர்களும் வந்துவிட்டிருந்தனர். மேலும், மௌன திரைப்பட ரசனையிலிருந்து அகன்று உரையாடும் படத்துக்கு மக்கள் முழுமையாக பழக்கப்பட்டிருந்தனர். இதன் ஊடுபாவாக ஒற்றைத் தன்மை கொண்ட (பஸ்டர் கீட்டன், லாரல் ஹார்டி போன்றவர்களின் மௌனப்படங்களுக்கு ஒப்பான) பேசும் படங்கள் ‘கமர்சியல் படங்களாக’ வலம் வர ஆரம்பித்திருந்தன. இது பேசும் சினிமா நல்ல வருவாயை ஈட்டித் தரும் கமர்சியல் சினிமாவாக மாறியது.
இதன் தொடர்ச்சியாக கமர்சியல் சினிமாவாக எடுக்கப்பட ஆரம்பித்த அனைத்திலும் ஒருவகை திரைக்கதை உத்தியை கடைபிடிக்க 70-களில் சிட் ஃபீல்டு என்பவரால் உருவாக்கப்பட்ட, மேற்கில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் அடங்கிய நவீன திரைக்கதைமாதிரி படங்களில் பயன்படுத்தப்பட்டது. இதை மட்டும் கடைபிடித்தால்கூட படம் வெற்றி பெற 60 சதவிகத வாய்ப்புகள் இருப்பதை மேற்குலகு உணர்த்திக்கொண்டே வந்தபோது அது மெல்ல இந்திய தமிழ் சினிமாவிலும் காலடி பதித்தது. இது முழுமையாக இப்போது திரையுலகத்தை ஆக்கிரமித்துள்ளது.
மௌன வகையறா படங்களுக்கான வருகை இப்போது மிகவும் குறைவு. இரண்டு மாமாங்கங்களுக்கு ஒரு முறை ஒரு படம் என்ற வீதம் அரிதாகவே படங்கள் வருகின்றன. சொன்னபடி பேசும்படங்களுக்கு மக்கள் முழுமையாக பழக்கப்பட்டுவிட்டதால் வணிக நலன் கருதியும், அதன் மீதான அறிவின் போதாமையாலும் யாரும் மௌனப் படங்களை எடுப்பதே இல்லை. இரு தலைமுறைகளுக்கு அப்பாற்பட்ட நடப்பியலுக்கு ஒவ்வாததாக தோற்றம் ஏற்பட்டுவிட்ட மௌனப் படங்களை ஒருபக்கம் சாய்த்து ஓய்வளிப்போம்.
தொழில்நுட்ப விருத்தியினால் கண்டெடுக்கப்பட்ட பேசும் படங்களை வரவேற்காமல்போவது தவறான கருத்தாக அது வந்தபோதே சொல்லப்பட்டுவிட்டது. இஃது எல்லோரும் அறிந்த ஒன்று.
அந்த சமயங்களில் மௌன யுகம் இனி சாத்தியமேயில்லையென சிலர் யோசிக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவாக மௌனயுகப் படங்களின் வேறு வடிவமான குறைந்தபட்ச வசனங்களைக் கொண்ட, படிமங்கள், குறியீடுகள் போன்ற உத்திகளோடுகூடிய படங்களை அவர்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். அடூர், சத்யஜித், கட்டக், சென், பாலு மகி, கவுல், பெனகல், காசரவல்லி, சேஷாத்ரி, அரவிந்தன், பாஹ்ருயா, ஷாஜி எம் கருண், உதிரி ஃபிளவர் மகி, ஜான் ஆப்ஸ் என்று ஒரு பட்டியல் அதற்கு உண்டு.
இவர்களுடைய ஆக்கங்களின் மூலமாகவே, பேசிக்கொண்டிருக்கின்ற படங்களிலிருந்து தனித்துப் பார்க்கும்படியான – அளவாக பேசுகின்ற – அதே வேளையில் பார்வையாளனை வாசகனாக ஒரு கூர்மையான எண்ணவோட்டமுள்ளவனாக வைத்துக்கொள்ளும் வீழ்ச்சியடைந்த மௌனப் படங்கள் வேறொரு வடிவத்தில் மீட்டுரு செய்யப்பட்டது. குறைந்தபட்ச வருமானமும் சமயத்தில் முதலுக்கே டொக்கடிக்கும் இந்த படங்களுக்குக் கலைப் படங்கள் என்ற பெயர் வந்தது.
கலைப் படங்களைப் பொருத்தவரை மேற்குலகில் ஒரு தனித்த ஆதிக்கம் இருந்து வருகின்றது. அங்கும் பெர்க்மென், ஃபெலினி, ப்ரெஸ்ஸன், தார்க்கோவ்ஸ்கி முதல் இன்று வரையிலான அந்த பட்டியலிலுள்ள பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
கலைப் படங்கள் உருவான பிறகு சினிமா யதார்த்த வெளியை நம்பி இறங்கிய நேரத்தில் ஆங்காங்கு ஆவணப்பட திட்டங்களும் தோன்றி செயல்பட ஆரம்பித்தன. இதுதான் ஆவணப் படம் என்று தனித்து நிற்கும் அளவுக்கு அதன் பங்குகள் குறை சொல்ல முடியாதவை. அவை யதார்த்த சூழலை மட்டுமே சார்ந்தவை. அதன் பயன்பாடுகள் கருத்துச் செறிவை வெளிப்படுத்துபவையாகவும், அதிகம் சமூக தளத்துக்குள் அறியப்படாதவையாகவுமாக இருந்து வரும். மேலும் ஒரு ஆவணப் படத்தைத் தயாரிக்க பொருட்செலவும் குறைவு என்பதால் தன்னார்வத்தோடு பலரும் தயாரிக்க ஆரம்பித்தனர். இதே சமயத்திலும் அல்லது இதற்கு சற்று பிந்தைய கால கட்டத்தில்தான் மேற்குலகின் தாக்கம் மட்டுமற்ற தொன்மையான நாடகங்களிலிருந்து நவீன நாடகக் கலை மிகச் சிலரால் இயங்கத் தொடங்கியது.
மௌனப் படங்களின் ரசிக பாரம்பரியத்தின் தொடர்ச்சியே இவ்வாறு பல்வேறு கூறுகளில் கிளைத்துப் பிரிந்த அனைத்து வடிவங்களுக்கும் அமைந்து வந்தது. இவ்வடிவங்களினது தரத்தின்படி பேசும் படங்கள் மட்டுமே மிகச் சிறந்த வெற்றியை சமூக இயக்கத்தில் ஈட்ட முடிந்தது. சராசரியாக மற்ற வடிவங்கள் அனைத்தும் மேம்போக்கான ஆதரவுடன், திரையாடல்களிலும், மருந்துக்குக்கூட உயிரினங்கள் அல்லாத இடங்களிலும் நிகழ்த்து படைப்புகளாக மாறின. தூர்தர்சன், பி.எஸ்.பி.டி போன்ற மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவினால் கூட இதன் தரம் மக்களிடையே சென்றடையவில்லை.
பேசும் படங்களைப் பொருத்தவரை அனைத்துமே சோடை போகும் படங்கள் என்று மொட்டையாக சொல்லிவிடக்கூடாது. ஒரு நீண்ட செவ்வியல் வரலாறை உண்டாக்கிய திரைப்படங்கள் ஏராளம்.
இப்போதைய சிந்தனை தளத்திற்கு ஏற்ப பேசும் படங்களின் தரமும் வெகுவாக தேறியுள்ளது. இந்த நிலையில் படம் பேசுவதினால் தவறேதுமில்லை. ஆனால், சோடிக்கப்பட்ட உரையாடல்களுடன் படத்தில் பார்வையாளனுக்கு எந்த வாய்ப்பும் தராமல் உருவாகும் படங்களில்தான் கொஞ்சம் பிரச்சினை. அதற்கு மாறாக உருவாகும் திரை அனுபவங்களில் இந்த பிரச்சினை இருக்காது. உதாரணம், பாலு மகியின் ‘வீடு’ படம். பலதரப்பட்ட சாத்தியங்களைப் பார்வையாளனுக்கு வழங்கி தன்னோடு நெருக்கமாக்கிக்கொள்ளும் ஆகச்சிறந்த திரைப்படைப்பு. இதே சமயத்தில் புகழ்பெற்ற இயக்குனராக பேசப்படும் மணிரத்தினத்தின் படங்களில் இந்த தன்மை கிடைக்கப்பெறுவதில்லை. பெரும்பாலும் ‘ஸ்டைலிஸ்’ என்ற மாதிரியைக் கொண்டவை அவருடைய படங்கள்.
கருத்து ரீதியாக பாராட்டப்பட்டாலும், ஒரு சிறிய அனுபவ தளத்தோடும் கிளர்ச்சி தாகத்துக்குரிய பானம் என்ற சுருக்கத்தோடும் நின்றுவிடும் அவற்றை உலகத்தரம் வாய்ந்த படங்களில் ஒன்றாக சொல்ல முடியாது. அவருடைய படங்களுக்கு இந்த கருத்தை பொருத்திப் பார்த்துக்கொள்ள ஒரு பத்து பதினைந்து மாற்று திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடக்கூடியது.
கமர்ஷியல் படங்களையும் வகைமை செய்து பகுக்கலாம். ம.ர, ஷங்கு ஆகியோரின் படங்கள் உயர்தர வணிகப் படங்களில் அடங்குபவை. அதோடு இரைச்சலை ஏற்படுத்தி செவியைக் கிழிக்கும் படங்களை ஒப்பிட்டுவிடக்கூடாது. ஆனால், அதற்கென தனியாக பார்வையாளர்களும் உண்டு. மேலும், நடுத்தர வணிகப் படங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.
தற்போதைய இயக்குனர்கள், படம் முடிந்ததும் கையை உதறிக்கொண்டு வெளியில் செல்ல வைப்பது துரதிர்ஷ்டவசமானது. பார்வையாளனுக்கு அதில் என்ன பங்கு என்பதே படங்கள் ஏற்படுத்தும் கேள்வியாக இருக்க வேண்டும். அவன் புரிவதற்கு முயற்சி மேற்கொள்ளும் சினிமாதான் தேவை. படங்களில் கலைத் தன்மை அவசியமில்லை, இடைவெளிகள் தேவையற்றது போன்ற பேத்தல்கள்தான் தமிழ் சினிமாவுக்கான சனி பகவான். அதிலிருந்து மீள வழி வகுக்க ஏதாவது செய்ய வேண்டும். கமர்ஷியல் படங்கள் எடுப்பது, தாராளமாக விளம்பரம் செய்வது, அதை மக்கள் விரும்பிப் பார்ப்பது இவையனைத்தும் தவறானது என்பது கருத்தல்ல. மாற்றுப்படங்களுக்கும் முழுமையாக இல்லையென்றாலும் அப்படி ஒரு படம் வந்ததாக தெரியுமளவுக்காவது ஒரு மாற்றுப்பட பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
அனைவரும் வேண்டி விரும்பி மாற்றுக்கலைப் படங்களைப் பார்ப்பதில்லை. காரணம் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டதல்லவா? அது மௌனப்படயியலின் விரிவாக்கப்பட்ட வடிவம் என்று.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.