சமீபத்தில் ’குளிர்காலத் தூக்கம்’ (Winter Sleep) திரைப்படத்தை பார்த்தேன். திரைப்படங்களால் பார்வையாளனை சிந்திக்க வைக்க இயலுமா என்னும் கேள்விக்கு அந்தப் படம் விடையளிக்க எத்தனித்தது. நீண்ட உரையாடல்கள், எசகுபிசகான வாழ்க்கை அனுபவங்கள், மெதுவான நிகழ்வுகள், பூடகமான குறியீடுகள் என இன்னமும் அந்தப் படத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உள்ளை வெளியாக்கு (Inside Out) வேறு ரகம். குழந்தைகள் படம் என்னும் போர்வையில் பெரியவர்களுக்காக வந்திருக்கும் படம்.
இயற்கையை ரசிக்கும்போது இரண்டு விதமாக அனுபவிக்கலாம். முதலாவது வகையில் நின்று நிதானமாகப் புகைப்படம் எடுக்கலாம். அப்படியே நதியின் கரையோடு காலாற நடந்து சென்று நதிமூலத்தை அறியலாம். மெதுவாக கால் நனைத்து, உள்ளங்கால் வரை மூழ்கலாம். கங்கை போல் தலையில் தெளித்துக் கொள்ளலாம். ‘விண்ட்டர் ஸ்லீப்’ போன்ற திரைப்படங்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
இன்னொரு வகையில், ஒற்றை ஆளாகப் படகோடு நதியில் குதிப்பீர்கள். மலைமுகடுகளைப் பார்க்கும்போதே, ஆற்றின் சுழியில் சிக்குவீர்கள். அதன் சுழிக்கு ஈடுகொடுத்து விழுவீர்கள்; மீண்டு, நீஞ்சி, எழுவீர்கள்; தொப்பலாக நனைவீர்கள்; இவையெல்லாவற்றிற்கும் நடுவே சாந்தமான ஓட்டத்தின் லயத்தில் வீழ்ந்து எங்கோ காணாமல் போவீர்கள்; அதன் பின் வழி கண்டடைந்து வீடு திரும்புவீர்கள். அந்த அனுபவத்தை கண்டவரிடம் எல்லாம் விளக்குவீர்கள். கனவில் மீண்டும் மீண்டும் உலா வருவீர்கள். ஒரு ஒளிப்படம் கூட ட்விட்டரில் பகிராவிட்டாலும், புற அனுபவம் தாண்டி அக அனுபவமாக நிலைத்திருக்கும் அதே களிப்பில் திளைத்திருப்பீர்கள்.
’இன்ஸைட் அவுட்’ இந்த வகையைச் சேர்ந்தது.
’இன்ஸைட் அவுட்’ ஐந்து பேரின் கதையைச் சொல்கிறது:
1) சந்தோஷம்
2) பயம்
3) அருவருப்பு
4) கோபம்
5) சோகம்
இந்த ஐந்து பேரும் ரைலி என்னும் பெண்ணின் மண்டைக்கு உள்ளேயிருந்து ஆட்டிப் படைக்கிறார்கள். ரைலியின் மூளைக்குள்ளே இருக்கும் தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை. அவளை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பது ‘சந்தோஷம்’ வசம் இருக்கிறது. ரைலியை ஆபத்தில் இருந்து பாதுகாத்து, விபத்துகளில் இருந்தும் சிக்கல்களிலும் இருந்தும் தூர வைத்திருப்பது ‘பயம்’ வசம் இருக்கிறது. அவளை வேண்டத்தக்காத விஷயங்களில் இருந்து விலக்குவதற்காக ’அருவருப்பு’ பாடுபடுகிறது. நியாயத்திற்காகப் போராடவும், சரியென்று நினைப்பதை செய்து முடிக்கவும், அறச்சீற்றத்தை வேண்டும் போது ஊக்குவிக்கவும் ‘கோபம்’ உழைக்கிறது.
இந்த நாலும் சரி! அப்படியானால் ‘சோகம்’ என்ன செய்கிறது? மண்ணாந்தையாக, மூலையில் சோம்பேறியாக மருகி மல்க ’சோகம்’ இயங்குகிறதா? மூளையின் கட்டுப்பாட்டு அறையில் ‘சோகம்’ இருப்பதால் ரைலிக்கு என்ன இலாபம்?
அந்த முடிச்சை அவிழ்ப்பதுதான் திரைப்படத்தின் சூட்சுமம்.
பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும் ரைலிக்கு, மற்றொரு பிரச்சினையும் வந்து சேர்கிறது. அவர்களுக்குப் பழக்கமான சொந்த ஊரில் இருந்து புத்தம் புதிய நகரத்திற்கு குடிபெயர்கிறார்கள். வாசகசாலையில் படிக்கும் சக மாணவர்கள் புதியவர்கள். விளையாட்டு மைதானம் சென்றால் அங்கும் தோழிகள் புதியவர்கள். இந்தத் தருணத்தில் ரைலியின் தலைமையக நிர்வாகத்தில் இருக்கும் ‘சந்தோஷம்’ மற்றும் ‘சோகம்’ காணாமல் போய்விடுகின்றன. முக்கிய நிர்வாகிகள் இல்லாமல், ‘பயம்’, ‘அருவருப்பு’, ‘கோபம்’ தனியே இயங்க ஆரம்பிக்கின்றன.
ரைலியின் மூளையில் இயங்கும் நபர்களான ‘சந்தோஷம்’ மற்றும் ‘சோகம்’ விதவிதமான விஷயங்களை வழியில் சந்திக்கின்றன. ரைலியின் சிறுவயது கற்பனைத் தோழனான பஞ்சு மிட்டாயில் செய்த யானையுடன் கொஞ்ச தூரம் செல்கிறார்கள். எல்லோருமாக ’சிந்தனை ரயிலி’ல் ஏறி பயணிக்கிறார்கள். திரும்பும் வழியில் ’அந்தரங்கச் சிந்தனை’களை சந்திக்கிறோம். ’நீண்ட கால நினைவு’களைப் பார்க்கிறோம்.
அகத்திற்கு உருக்கொடுத்து, அகத்தை உருப்படியாக்குவதைக் காட்டுவது நோக்கம். ஆனால் பெதும்பைப் பருவத்தில் இருந்து மங்கையாக மாறுவது என்பது ஆதாரக் கரு. அந்த விதத்தில் இந்தப் படம் ஒரு சாமர்த்தியமான புதிரின் அமைப்பைக் கொண்டது. விடியோ விளையாட்டுகளில் இறுதி இலக்கைக் கைப்பற்றுவதுதான் விளையாட்டின் நோக்கம் என்றாலும், விளையாட்டின் பாதையில் பயணம் செய்வதுதான் அதன் வசீகரம். விளையாட்டின் தயாரிப்பாளர்களுக்கு அந்தப் பயணம்தான் நோக்கம். பங்கெடுப்பவருக்கு இலக்கு என்பது இருப்பதால்தான் பயணம் செய்ய உத்வேகம் வருகிறது.
கதைக்குள் கதை என்பது சினிமாவில் ரஜினியின் பன்ச் டயலாக் போல் அரதப் பழசான விஷயம். அதே விஷயத்தை இவ்வளவு புதியதாகக் கொடுத்திருக்கிறார்கள். மூளைக்குள் இருக்கும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களின் செயல்பாடுகளை உணருகிறோம். அதே சமயம், அவர்களால் இயக்கப்படும் ரைலி என்னும் பெண்ணுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் பயணிக்கிறோம். இலக்கியத் தரமான கதைக்குள் ஊடுபாவாக இன்னொரு இழையில் மற்றொரு கதையைச் சொருகுவது, தேர்ந்த எழுத்தாளரால் முடியும். அதை வாசித்தும் இருக்கிறோம். அதே போன்றதொரு சுகானுபவத்தை, இந்தத் திரைப்படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை என்னுடைய பதின்ம வயது மகள், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பத்து வயது சிறுவன், ஏழு வயதுச் சிறுமி எனப் பலருடன் சேர்ந்து பார்த்தேன். படம் முடிந்தவுடன் அவர்களின் வாயைப் பிடுங்கிக் கொண்டிருந்தேன். பதின்ம வயது மகளுக்கு – ரைலியும் அவளைப் போல் பருவ வயதுப் பிரச்சினைகளை சந்திப்பது, ரசிக்க வைத்தது. பத்து வயதுப் பையனுக்கு ‘சந்தோஷம்’ செய்யும் சாகசங்களும் ஃப்ரென்ச் ஃப்ரை காடுகளும் மனம் கவர்ந்தன. ஏழு வயதுப் பெண்ணிற்கு பஞ்சு மிட்டாய் யானை பிடித்திருந்தது. அது அழுதால், அதன் கண்ணீராக மிட்டாய்கள் சிந்துகிறது. அதை எல்லாம் அள்ளினால் ஐந்தாண்டுகளுக்காவது கவலையின்றி, சாக்லேட் சாப்பிடலாமே என்றாள்.
என் மனைவியிடம் கேட்டால், எல்லாவற்றையும் அளவாகக் காண்பித்தார்கள் என்றாள். ஒரு காட்சியில் அப்பாவின் மூளைக்குள் இருக்கும் ஐந்து இயக்கிகளும், அம்மாவின் மூளைக்குள் இருக்கும் ஐந்து இயக்கிகளும் தங்களுக்குள் உரையாடுவதைக் காண்பித்தார்கள். சாதாரணப் படமாக இருந்தால், தேவையில்லாமல், இதே கதாபாத்திரங்களை உலவ விட்டு சிரிக்க, விலா புடைக்க கிச்சுகிச்சு மூட்டி இருப்பார்கள். ஆனால், இங்கே ஒரே ஒரு காட்சி. சும்மா… தொட்டுக்க ஊறுகாய் போல். உங்களின் மண்டைக்குள் குரல்களை ஒலிக்கவிட்டு, அவர்கள் பாட்டிற்கு அடுத்த காட்சிக்குத் தாவி விட்டார்கள்.
எனக்கு இந்தப் படத்தின் சின்னச் சின்ன விஷயங்கள் கூட சொக்க வைத்தது. ஒரு காட்சியில், மூளையில் இருந்து தேவையற்ற விஷயங்களை நீக்கி, குப்பையில் வீசும் ’நினைவக வாயிற்காவலர்’களை அறிமுகம் செய்கிறார்கள்: “இந்தத் தொலைபேசி எண் எல்லாம், எதுக்கு ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்? அதுதான் ரைலியின் செல்பேசியில் இருக்குமே!” – அட இது நானேதான். என் மூளையில் பலர் இப்படி சொல்லி இருக்கிறார்கள். என் மகளின் செல்பேசி எண் கூட எனக்கு மனப்பாடம் கிடையாது. அது எல்லாம் கூகுள் வசமும் யாஹூ வசமும் மைக்ரோசாஃப்ட்காரர்களிடமும் இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிப்பது பிக்ஸார் (Pixar)காரர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தப் படத்தின் இயக்குநரான பீட் டாக்டெர் (Pete Docter) கைவைத்த மற்ற படங்களைப் பார்க்கலாம்:
- 2001ல் வெளிவந்த ’மான்ஸ்டர்ஸ் இன்க்’ (Monsters, Inc.), ‘உங்கள் படுக்கைக்கு அடியே ஒளிந்திருக்கும் இராட்சதர்கள் எல்லாம் நிஜமாகவே நல்லவர்களாக இருந்தால் எப்படியிருக்கும்?’ என்னும் கர்ண பரம்பரைக் கதையை உல்டா செய்து, கொஞ்சும் அரக்கர்களை நமக்கு அறிமுகம் செய்தது.
- ‘அப்’ (Up) திரைப்படத்தில் வாழ்ந்து முடித்த கிழவர், தன் வீட்டோடு கானகம் சென்று வனபிரஸ்தம் மேற்கொள்ளும் கதையைச் சொல்லிச் சென்றது.
- ‘வால்-இ (Wall-E) படத்தில் அறிபுனைக் களமான மின்குப்பை கிரகமாக, மனிதரற்ற பூமியில் பூப்பூக்க வைக்கும் ரோபாட்டின் கதையை காதலுடன் காட்டியது.
சொந்த வாழ்க்கையின் ஒரு துளியாவது திரைப்படத்தில் வரவேண்டும் என்பதை பீட் டாக்டெர் கொள்கையாகவே வைத்திருக்கிறார். அப்’ (Up) போல் மரக்கிளைகளுக்குள் தன் வீட்டின் ஒரு பகுதியை வைத்திருக்கிறார். ’இன்ஸைட் அவுட்’ போல் மின்னஸொட்டாவில் இருந்து குடிபெயர்ந்து இருக்கிறார். பதின்ம வயது வரை விளையாட்டுச் சிறுமியாக இருந்த மகள், வேற்று கிரகவாசி போல் மாறிப் போனதை படிப்படியாக உணர்ந்திருக்கிறார்.
இது போன்ற மனநெகிழ்ச்சியான தருணங்களை தன்னகத்தே வைத்துக் கொண்டு, அவற்றை கற்பனை ஊக்கத்துடன் படம் பிடிப்பதால்தான் ‘இன்ஸைட் அவுட்’ சுவாரசியமான படமாக மாறியிருக்கிறது.
மஹாபாரதத்தில் போர்தான் மையத்தில் இருக்கிறது என்றாலும் அதற்குப் பீடிகை பலமாக இருக்கும். அந்தம் அத்தனை ருசியாக இராது. ஆனால் செம்புராணம் (classical narrative) என்பதால், துவக்கம், இடைச் செடுக்கு, முடிச்சவிழ்ந்ததும் சோகம், புதுத் துவக்கத்திற்கான சுட்டல் என்று அமைப்பு. கரு என்றால் யுத்தமா கரு?
கதையில் process என்பது பேரியக்கத்தை (dynamism) கொடுக்கிறது, கொணர்கிறது, முடிவுக்கும் வழி சொல்கிறது. ஆனால் விதையும் வேறு, கனியும் வேறு, கனிக்குள் இருக்கும் வித்தும் வேறு. இழுபறியான போராட்டங்கள் வாழ்வே போன்ற சித்திரிப்பு. ஜனிதமும், மரிப்பும் அத்தனை பெரும் இலக்குகள் இல்லைதான், ஆனால் காலத்துக்கும் நிற்பது எதுவென்றால், தீமையை வெல்வதொன்றும் எளிதல்ல; தீமைக்கும் பன்முகங்கள், பரிமாணங்கள் உண்டு; தீமைக்கும் ஒரு தர்க்கம் உண்டு; அது அ-தர்க்கம் அல்ல; ஆனால் விடாப்பிடிவாதத்தின் ஒரு கோணல், திருகல், திருகலை நேர் என்றே நினைக்க வைக்கும் பிரமை ஆகியவற்றின் கலவை அது. நன்மை என்பது (தர்மம்) என்றும் தொடர்ந்து சங்கடங்களிலேயே, அநிச்சயத்திலேயே, முன்னெடுப்பை அத்தனை உறுதியாக நம்பாத தன்மையிலேயே நிற்கிறது, தேங்குகிறது. இருப்பைக் கைவிடாது பற்றவே எண்ணுகிறது. ஸ்வதர்மம் என்பதை நம்பும் பொதுத் தர்மம் அடிக்கடி இருமைகளில் சிக்கி மடியக் கூடிய நிலைக்கே கூட வந்து விடுகிறது. மீறி எழ தீமையின் வழிகளில் சிலவற்றையாவது கைக்கொள்ள நேர்கிறது. முடிவில் நன்மை களங்கமற்றதா என்றால், இல்லை, ஆனால் அதனால் அது தீமையே போன்றது என்று நாம் சொல்ல முடியுமா என்றால் இல்லை.
இது process and goals can’t exist by themselves, they are like the serpent and the staff. They are the same என்று சொல்லும் சிந்தனை அத்தனை பயனுள்ள சிந்தனை இல்லை. இரண்டிடையே மயக்கத்தை விட்டு விடுவதோடு, இந்த இருமையே மயக்கம் என்று ஒதுங்குவது என்ற கருத்து வாழ்வுக்கு உதவாதது.
இந்தப் படம் இந்த இருமைகளை வெளிப்படுத்தி நம்மை வசீகரப்படுத்தினாலும், கட்டமைப்பில் இது ஒரு செம்புராணக் கட்டமைப்பைத்தான் கொண்டிருக்கிறது என்று தோன்றியது. அதனால்தான் பயணம் இடையில் ஒரு தவிர்க்க முடியாத விஷயமாகவும், அதே நேரம் இடுக்கண்கள் நிறைந்த சாகச நிகழ்வாகவும் கொடுக்கப்படுகிறது.
கிரேக்கப் புராணங்களில் வரும் ஒடிசியஸின் சாகசம் போலத்தான் இருக்கிறது ரைலியின் பயணமும். ஆனால் செம்புராணத்தின் பிரும்மாண்டம், 21 ஆம் நூற்றாண்டின் சாதாரணருக்குத் தேவை இல்லைதானே? அவதார் படத்தின் பிரும்மாண்டம் அதன் பெரும் திரைக் கதை விரிப்புக்கு ஒத்தது. இங்கு அகவுலகினுள் பயணமே கூடப் பெரும் கதையாக முடியும் என்று காட்டி இருக்கிறதுதான் சூட்சுமம்.
தத்துவ விசாரணை என்ற ஒரு பேருலகு, பெரும்பாலும் புலப்பாட்டுக்கு முந்தைய நிலை பற்றித்தான் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் உண்டு. முடிவு என்ன என்று தெரியாத நிச்சயமின்மை சுவாரசியமானது. பாதையில் அடுத்து என்ன வரும் என்று தெரியாத வரைதான் திகில், கிளர்ச்சி. புலப்பட்ட பிறகு செயல் என்னவென்று தீர்மானமாகி விடும்.
அதனால்தான் நிச்சயத்தன்மையை நாடும் அறிவியல், தான் தொடர்ந்த அநிச்சயத்தையே துருவி நோக்குவதைத்தான் செய்வதாக சமீப காலங்களில் அறிவிக்கத் துவங்கி இருக்கிறது. 15-16 ஆம் நூற்றாண்டின் அறிவியலாளர்களின் கொள்கைகளையோ, நோக்கங்களையோ பார்த்தால், அவர்கள் அறுதியான அறிதலைத்தான் இலக்காக முன்வைக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் தொட வேண்டிய நாடா, ஓட ஓட, அணுக அணுகப் பின்னே போகிறது, தூரவே என்றும் இருக்கிறது என்பது 21ஆம் நூற்றாண்டு அறிவியலாளர்களுக்குத் தெரிந்திருப்பதோடு, அந்த அநிச்சயத்தை அவர்கள் ஆரத் தழுவவும் செய்கிறார்கள் என்றால் அதற்கு இன்றைய போஸ்ட்-மாடர்ன், போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிய தத்துவத்தின் ஆதிக்கம் ஒர் காரணம் என்று சொல்லலாமோ?
நீர்வளம், குளிர் நிறைந்த ஒரு சிற்றூரை விட்டு பாலையின் உஷ்ணமும், பல இன/ மொழிப் பண்பாடும், பெரும் கூட்டமும் நிறைந்த அழுக்கான பெருநகரத்திற்கு இடம் பெயரும் சிறுமியின் திக்பிரமிப்பு, மனச் சோர்வைத்தான் சொல்கிறது. ஆனால் இறுதியில் அவள் தடைகளை எதிர்க்க, புதுமையை ஏற்க முடிவு செய்கிறாள். அதற்கு சோகம் என்பது வாழ்வின் ஒரு தவிர்க்கவியலாத அம்சம் என்ற புரிதல் அவளுக்கு வருவதுதான் காரணம்.
இந்த சிறிய விஷயம் புரிபடாததால் புத்தர் என்ற ஒரு பெருந்தகை உலகையே வெறுத்து ஒதுக்கி வாழ்வையே நாசம் செய்து துறவறத்தை, வெறித்த பார்வையை, இனப்பெருக்கம் செய்வதை ஒழித்த நிலையை விடையாக முன்வைத்து அபத்தமாகப் பெரும் சாதனை செய்தவராகக் கொண்டாடப்படுகிறார். வாழ்வை வேண்டாம் என்று சொல்வது என்ன பெரிய சாதனை? எல்லாக் கிழவர்களும், கிழவிகளும் இதைத்தானே சொல்வார்கள்? ஏராளமான இடது சாரிகள் புத்தரைக் கொண்டாடுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் அவர்களுக்கு வாழ்வு என்பது பிடிக்காததுதான் காரணம். அழிப்பை வாழ்வின் ஆதார சுருதியாக, ஒரே வழியாக முன்வைக்கும் இடது சாரிகளுக்கு புத்தர் பிடிப்பதில் என்ன ஆச்சரியம்?
சிறுமிக்கு அவளது பெற்றோர் (இதர பல வயதில் மூத்த மனிதர்களைப் போலவே) இயல்பாகக் கொண்டிருக்கிற மன நிலைக்கு நகரச் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது, சிறிது உள்நோக்கிய விலகல் தேவைப்படுகிறது, மனச்சிக்கல்களை அவிழ்க்கத் தேவையான திறமை கைவசப்படத் தேவை சிறிது எழுகிறது.
இதைத்தான் நாம் வளர்வது என்று சுருக்கமாகச் சொல்கிறோம். இந்தச் சுருக்கத்தை, குழந்தைகளுக்கும் புரியும் வகையில் சாமர்த்தியமாக உருவகப்படுத்தி இருப்பது படத்தின் கதையாளர்களின் திறமை.
தனிப்பட்ட முறையில் இன்னொன்றும் இந்தப் படத்தின் இலாபமாக எனக்கு அமைந்திருக்கிறது. ”நான் இப்பொழுது சோகமாக இருக்கிறேன். ஏன் என்று கேட்காதே! ‘சோகம்’ இப்போது என் மண்டையை ஆட்சி செய்கிறது.” என்று வெளிப்படையாக, விளையாட்டாக, படுதீவிரமாக, சலனமின்றி அறிவிக்க இந்தப் படம் வாய்க்காலாக உதவி இருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சியாக, துள்ளி குதிக்கும் உற்சாகவாதியாக இருக்க வேண்டும் என்பதல்லாமல், நவரசங்களையும் பட்டவர்த்தனமாக தெரிவிக்க வைக்கிறது.
திரைப்படத்தில் சில சமயம் ‘சந்தோஷம்’ கொடூரமான வில்லனைப் போல் நடந்து கொள்கிறது. ஒரு கட்டத்தில், ஒரு சின்னஞ்சிறிய வட்டம் ஒன்றை வரைந்து, அந்த வட்டத்திற்குள் ‘சோகம்’ சிறைபட்டு கிடக்குமாறு சொல்கிறது. எதைப் பார்த்தாலும் கவலை கொள்ளாமல், எப்பொழுது பார்த்தாலும் கொஞ்சிக் கொண்டு, துள்ளல் நடையில் தன் வழியில் வருவதை மிதித்துக் கொண்டு நடக்கும் ‘சந்தோஷம்’ – நிஜமாகேவேத் தேவையா? மற்றவர் மீது கருணையும், சக உயிர்கள் மேல் ஜீவகாருண்யமும் இல்லாத சுயநலம் கலந்த திமிர் கொண்ட ‘சந்தோஷம்’ நமக்குள்ளே ஊடுருவி இருந்தால் உணர முடியுமா?
‘சோகம்’ என்னும் சபிக்கப்பட்ட ஜந்துவை இந்தப் படம் உயிரூட்டுகிறது. நட்பைக் கோர, சாய்ந்து கொள்ளும் தோளைக் கொணர, நமக்கு துக்கம் உதவுகிறது. அவமதிப்பை ஏற்றுக்கொண்டு, அதனால் ஏற்படும் நம்பிக்கையினமையையும் அச்சத்தையும் புறந்தள்ளி அகத்தில் சுடர் ஏற்ற துன்பமே தூண்டுகோலாக விளங்குகிறது. துன்பமே ‘சந்தோஷம்’ என்பது அளவற்ற காமதேனு அல்ல என்பதை உணர்த்தி, திருப்தியை நோக்கும் பாதையை அமைத்துத் தருகிறது.

நல்ல விமர்சனம் . நன்றி
அருண்
நல்ல கட்டுரை. பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி.
-வெங்கி
யானையை பார்த்த குருடர்கள் போலத்தான் எந்த ஒரு தத்துவத்தையும் எவரோருவரும் புரிந்துகொள்வது. நமக்கு சம்மதமானதை ஒத்து கொள்ளும் மனம் அதற்கு எதிரானதை எதிரியாகத்தான் கருதும். புத்தர் குறித்தும் இடதுசாரிகள் குறித்தும் தங்கள் கருத்து அத்தகையதே