பிரான்சு: நிஜமும் நிழலும் – 2

கேள்வி ஞானம் என்ற சொல்லை பலரும் அறிந்திருக்கிறோம். இக் கேள்விஞானம் அவரவர் பெறமுடிந்த தகவல்களின் அடிப்படையிலும், அத்கவல்களைப் பெற்ற நபரின் கற்பனை வளத்தைப் பொறுத்தும் உருவாவது. பிரான்சு நாட்டைப்பற்றியும் அப்படியொரு கருத்தினை நீங்கள் வைத்திருக்கலாம். அக்கருத்திற்கு வலு சேர்ப்பதோ அல்லது அதனைப் பலவீனப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. கிராமங்களில் பையன்கள் விளையாட உத்தி பிரிக்கும் போது, தன்னோடு வந்திருக்கும் புதிய பையனை அறிமுகப்படுத்த நினைக்கிற ஒருவன் ” கூழுப்பிள்ளை (உபயம் -கந்தர்வன் சிறுகதை) வீட்டுக்கு வந்திருக்காண்டா” என்பான். அந்தப் பையன் ‘கூழுப்பிள்ளை’ வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருப்பான், இருந்தும் பையன்கள் பார்வை சட்டென்று அவன் வயிற்றில் இறங்கும். அவன் வயிறும் கூழுப்பிள்ளை வீட்டு ஆண்களைப்போலவே பெருவயிறாக இருக்கவேண்டும் என்று அவர்கள்மனது தீர்மானித்ததை, பார்வையால் உறுதிசெய்துகொள்ளும் முனைப்பு அக்கண்களில் தெரியும். “கூழுப்பிள்ளை வீடு” என்ற அடைமொழி சிறுகச் சிறுகக் கட்டிய குளவிக்கூடு. அப்பையனைப்பற்றிய அசலான புரிதல் அவர்களிடத்தில் நிகழும் வரை அவ்விடத்தைக் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்ற சொல் நிரப்பும்.
நாடுகளும் அதுபோன்றவைதான். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஆகிருதியை, தனித்தன்மையை, பலத்தை, பலவீனத்தை முதலிற் கட்டமைப்பதில் சமூகத்தைப்போல அவன் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பங்கிருக்கிறது. பிரான்சு என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பார்த்த திரைப்படங்கள், படித்தப் புத்தகங்கள், மேற்கு நாடுகளில் அதுவுமொன்று என்ற உண்மையையொட்டிய கற்பனைகள்; புதுச்சேரிவாசியாக இருந்து பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்களிடம் உரையாடிய அனுபவமிருப்பின் அவர்கள் திரித்த கயிறுகள், உங்கள் சொந்தக் கற்பனை என அனைத்தும் சேர்ந்து ஒருவகையானச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும். பின்னர் சித்திரத்தின் பருமனைப் பெருக்கிப் பார்ப்பதும், குறைத்துப் பார்ப்பதும் உங்களின் கற்பனையையும் அக்கற்பனைக்கான சூழலையும் பொறுத்தது. பிரெஞ்சுக்காரன், அமெரிக்கன், இந்தியன், போலந்துவாசி, உகாண்டாக்காரன், பாகிஸ்தானியன் என்கிற நாட்டு அடையாளம் மனிதர்கள் பற்றிய முதல் புரிதலைத் தொடங்கிவைக்கின்றன. ஒரு மண்ணின் பெருமையும் சிறுமையும், அதன் வரலாறும் அறிவியல் முன்னேற்றமும், சாதனைகளும், சாபங்களும் அம்மண்ணின் குடிகளை நிழல்போல சாகும் வரை துரத்துகின்றன. இதற்கு வேர் எது? பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான கல்யான குணங்கள் எங்கிருந்து வந்தன. Rome wasn’t built in a day என்பதுபோல சிறுக சிறுக அதனைக் கட்டியெழுப்பியவர்கள் வேறுமல்ல அவர்களும் அந்நாட்டின் குடிகள்தான். இன்றைய இந்தியனின், பாகிஸ்தானியன் அல்லது பிரெஞ்சுக்காரனின் பெருமை சிறுமை இரண்டிற்குமே அவரவர் முன்னோர்கள் தான் பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

Cafe Le Bonaparte on St Germain des Pres in Paris, France
Cafe Le Bonaparte on St Germain des Pres in Paris, France

பிரெஞ்சு மக்களும் பண்பாடும்
உலகில் எப்பகுதியில் வசிக்க நேரினும் மனிதர்களுக்கான அடிப்படை உயிரியல் தேவைகளில் பேதமில்லை. பசிவந்தால் உண்பதும், இயற்கை உபாதைகளுக்கு வழி செய்து கொடுப்பதும், புலன்களைப் பயன்படுத்துவதிலும் மனித விலங்குகளிடை பேதமில்லை. எனினும் பண்பாடு வேறு, அது வாழ்வியக்கத்தின் விழுமியம். மனிதனுக்கு மனிதனுக்கு அது வேறுபடுவதைப்போலவே, சமூகம், இனம், நாடு சார்ந்து அது வேறுபடுவதுண்டு. ஓர் இடத்தில் நிலையாய் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் தங்களிடத்தில் ஏற்படுத்திக்கொள்கிற வாழ்க்கை நெறிகளின் தொகுப்பென்றும் கூறலாம். கல்வி, சிந்தனை, அவன் சார்ந்த சமூகத்தின் தேவைகள், புவிசார் காரணிகள் என ஒன்றிணைந்து உருவாக்கிய மரபு.. உண்பது உயிரியல் தேவையெனில், எதை உண்பது? எப்படி உண்பது? எவருடன் உண்பது, உண்ணும்போது செய்யவேண்டியதென்ன செய்யக்கூடாதது என்ன? என்பதெல்லாம் பண்புகளாகப் பார்க்கப்டுகின்றன. ஆக மானுடத்திற்குப் பொதுவான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பண்பாடுகள் குறுக்கிடுகின்றன. ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றொரு சமூகத்திற்கு வியப்பைத் தரலாம், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டை மற்றொரு சமூகத்தின் பண்பாட்டின் அடைப்படையில் உயவென்றோ தாழ்வென்றோ முடிவுக்குப் பொதுவில் வரமுடியாது. செவ்விந்தியர்களுக்கும், மலைவாழ்மக்களுக்கும் நகர சார் மக்களின் பண்பாடுகள் தாழ்ந்தவை என நினைக்க உரிமைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகால காலனி ஆதிக்கம், அறிவியல் முன்னேற்றத்தின் அசுர வளர்ச்சி, ஊடகம், தகவல் மற்றும் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகமயமாக்கல் என பலவும் அண்மைக்காலங்களில் ஒற்றை பண்பாட்டை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருக்கக் காரணமென்ற சூழலில் பிரெஞ்சு பண்பாட்டில் நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறதென பார்க்கலாம்:
மரியாதை, நாகரீகம், உபசாரம்:
ஓர் அந்நியனாக இருந்துகொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் நான் பார்க்கும் குணம்: நேரம் தவறாமை, சட்டத்தை மதித்தல், எளிமை, வேலை நேரத்தை வேலைக்கென மட்டுமே செலவிடுதல், செய்யும் பணியில் அல்லது தொழிலில் அக்கறையுடனும், அற்பணிப்பு மனத்துடன் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல், மனதிலுள்ள வெறுப்பையோ கசப்பையோ துளியும் வாடிக்கையாலரிடமோ, நோயாளியிடமோ, நுகர்வோரிடமோ வெளிப்படையாகக் காட்டிகொள்ளாதது ஆகியவை. பேரங்காடியாக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம், அரசு அலுவலகங்களாக இருக்கலாம், தனியார் நிர்வகிக்கும் காப்பீடு நிறுவனங்களாக இருக்கலாம், மருத்துவ மனையாக இருக்கலாம் உங்களுக்கு உரிய நேரத்தை உங்களோடு செலவிட சம்பந்தப்பட்டவர் காத்திருப்பவார், இங்கே அது சேவை, தொழில் அல்ல. எதிர்பாராவிதமாக ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடக்கலாம், ஆனால் அது அபூர்வமாக நிகழக்கூடியது. மூன்று ஐரோப்பியர் இருக்குமிடத்தில் ஒருவர் மட்டும் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் பிரெஞ்சுக் காரராக இருப்பார் – (இது ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களைக் குறித்து வைத்திருக்கும் அனுபவத்திற்கு நேர்மாறானது ) ஆங்கிலேயரும், ஜெர்மன்காரரும் என் அனுபவத்தில் சிரித்து பார்த்ததில்லை. பிரெஞ்சுக் காரர் நம்முடன் சட்டென்று கை குலுக்குவார், வளவளவென்று பேசுவார். அவரைப்பற்றிக் கூடுதலாக நம்மிடம் தெரிவித்திருப்பார். எத்தனை வெளிப்படை, எவ்வளவு நெருக்கம் என்றெல்லாம் நினைத்து மனதிற்குள் பாராட்டிக்கொண்டிருப்பீர்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் கண்ணெதிதே காப்பியோ தேநீரோ வாங்கிப் பருகுவார். பிரெஞ்சு நண்பர் ரெஸ்ட்டாரெண்டுக்கு சாப்பிடப் போகலாம் என அழைப்பார் நீங்கள் இரண்டு பேர் எனில் பிரச்சினையில்லை. அதிக எண்ணிக்கையில் இருப்பீர்களெனில் அவரவர் பில்லுக்கு அவரவர்தான் பணம் கொடுக்கவேண்டும். இந்த அணுகுமுறையில் எவ்விதச் சங்கடமும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்காது. பிரான்சுக்கு வர நேரிட்டால் உங்கள் ஆங்கிலத்திற்கு எல்லா இடங்களிலும் கதவு திறக்கும் என நம்பாதீர்கள், இந்தியாலோ அல்லது ஆங்கில மொழி பேசுகிற நாடுகளிலோ தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் பிரெஞ்சுக்காரர்கள், உள்ளூரில் தமக்கு ஆங்கிலம் வராது, தெரியாது என்பார்கள். நெப்போலியனுக்கு ஆங்கிலேயரால் நேர்ந்த தோல்வியை சகித்துக்கொள்ள இன்றளவும் பிரெஞ்சுக்காரர்கள் தயாரில்லை. எனவே குறைந்த பட்சம் பிரெஞ்சுக் காரர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ‘merci’ (நன்றி) என்ற வார்த்தையையாவது சொல்லப்பழகிக்கொண்டு பிரான்சுக்குள் வருவது நல்லது.
அ. நீ அல்லது நீங்கள் – tutoiement ou Vouvoiement
தமிழில் உள்ளதுபோல நீ என்ற சொல்லும் நீங்கள் என்ற சொல்லும் பிரெஞ்சில் இருக்கிறது. நீ என்று அழைப்பதை tutoiement என்றும் நீங்கள் என்று அழைப்பதை Vouvoiement என்றும் பிரெஞ்சில் சொல்வதுண்டு . அந்நியர்கள், புதிய மனிதர்கள், பரிச்சயமற்ற மனிதர்கள் ஆகியோரிடம் ‘நீங்கள்’ என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. மாறாக ‘நீ’ என்ற சொல்லை சிறுவர் சிறுமியரிடமும், உறவினர்கள், நண்பர்கள் தோழிகள் ஆகியோரை அழைக்கவும் பயன்படுத்துகிறார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் ‘நீ’ போட்டே அழைக்கிறார்கள். வயது ஒரு தடையே இல்லை. முன்பின் தெரியாதவர்கள் பழக நேரும்போது ‘நீங்கள்'(Vous) எனத் தொடங்கி பின்னர் நெருக்கம் ஏற்படுகிறபோது ‘நீ'(Tu) என ஒருவர்க்கொருவர் அழைத்துக்கொள்வது சகஜம். இருவரில் ஒருவருக்கு 15 வயதும், மற்றவருக்கு 90 வயது என்றாலும் ஒருமையில் அழைத்துக்கொள்வது அவர்கள் பார்வையில் இடைவெளியைக் குறைக்கிறது. இங்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், தற்போதும் பழகிய நண்பர்களை முதல் நாளில் விளித்ததைப்போலவே ‘நீங்கள்’ போட்டு அழைக்கிறேன். ‘ நீ’ என்று அழைக்க தயக்கமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் தள்ளாடும் வயதிலும் கூட வயதிற் சிறியவர்களை ‘வாங்க போங்க’ என அழைக்கும் பெரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மனிதர் உயர்வு தாழ்வு இடைவெளியைக் குறைக்க பிரெஞ்சுக் காரர்களின் ‘நீ’ க்கு உரிய நியாயங்கள் சரியானவையென்றே நினைக்கிறேன்.
Bonjour – வணக்கம்
பிரெஞ்சுக்காரர்களின் வெற்றிக்கு அவர்கள் முகமனுக்காகச் செலவிடும் வார்த்தைகளுக்கும் சமிக்கைகளுக்கும் பெரும் பங்குண்டு. இருமனிதர்களின் பார்வைகள் சந்தித்தால் முகமன் இன்றிதமையாததென்பது அடிப்படை நாகரீகம். அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கேற்ப ( அந்நியர், நண்பர், உறவினர் எனபதைப்பொறுத்து மாறுபடும்) எனினும் வார்த்தைகள், முறுவல்கள், கை குலுக்கல்கள் இரு கன்னங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள், தழுவல்கள், கட்டி அணைத்து முதுகில் தட்டுதல் என்று பிரான்சு நாட்டில் முகமனுக்குப் பல வடிவங்களுண்டு.
வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் பக்கத்து வீட்டிற்குச் செல்ல படியேறி வருகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ற வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு. இதப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது: அவர் ஆணோ பெண்ணோ, சிறுவரோ சிறுமியோ; கிழவனோ கிழவியோ; நாயுடன் நடதுபோகிறவரோ அல்லது காதலனின் தழுவல் பிடியிலிருந்து சட்டென விடுபட்டவளோ எவராயினும் உங்களுக்கு ஒரு ‘Bonjour” சொல்லாமல் கடந்து செல்லமாட்டார் பெரிய அங்காடிக்குள் நுழைகிறீர்கள், ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள், வாங்குவதா வாங்க வேண்டுமா எனக் குழப்பத்திலோ அல்லது வெறுமனே, மனைவியைத் திருப்திபடுத்தவேண்டியும், பர்சைக் காப்பாற்றும் யோசனையுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வாங்கும் ஆசாமிகளா, கடைதோறும் இப்படி நுழைந்து நேரத்தை செலவிடும் தம்பதிகளா என்பதை விற்பனையாளர் உங்கள் முகங்களைப் பார்த்ததும் அறிந்திருப்பார், எனினும் உங்களை நெருங்கி “உங்களுக்கு உதவட்டுமா?’ எனக்கேட்பதற்கு முன்பாக விநயமாக இரண்டு ‘Bonjour’ களை பிள்ளையார் சுழிபோல செலவிட்டபிறகே விற்பனை உரையாடலைத் தொடங்குவார். பொருளை எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தவருகிறீர்கள், காசாளரும் ஒரு ‘Bonjour’ க்குப் பிறகே பொருளுக்குரிய பணத்தை பெறுவார். அன்றைய தினம் அவர் இரு நூறு வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் அனைவருக்கும் முறுவலுடன் கூடிய ‘Bonjour’ ஒன்றை காசாளர் பெண்மணி செலவிடுவாள். பிரான்சு நாட்டில் இரயிலில் பயணம் செய்த அனுபவமிருப்பின், பரிசோதகர் பயணச்சீட்டை வாங்கி சரிபார்க்கும் முன்பாக ‘Bonjour’ தெரிவிக்காமல் உங்கள் கையிலிருந்து டிக்கெட்டை வாங்கமாட்டார். ஒரு இரயிலில் குறைந்தது நூறுபேருக்கு என்றாலும் ஒரு நாளைக்கு 500 பேருக்காவது அவர் ‘Bonjour தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரில் போகிறீர்கள், அல்லது நடந்து போகிறீர்கள் உங்களிடம் உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப்பார்க்க போலிஸார் நினைத்தாலும் மேற்கண்ட வார்த்தைதான் முதலில் வரும். ஆக நாடு முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல லட்சக்கணக்கான வணக்கங்கள் மனிதர்களிடையே பரிமாறிகொள்ள நேரிடுகிறது: முறுவலோடும் வணக்கத்தோடும் தொடங்கும் உரையாடல், இரு நபர்களுக்கிடையேயான இடைவெளியை குறைக்கிறது, உரையாடலை இலேசாக்குகிறது.
(தொடரும்)

One Reply to “பிரான்சு: நிஜமும் நிழலும் – 2”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.