சார்லியோடு சென்ற பயணங்கள் – அமெரிக்காவைத் தேடி

ஜான் ஸ்டைன்பெக் 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சுமார் 10,000 மைல்கள் சுற்றிச் செய்த தரைவழிப் பயணம் பற்றி ஒரு பயணப் புத்தகத்தை 1961 இல் வெளியிட்டார். Travels with Charley எனும் அந்தப் புத்தகம் பிரசித்தி பெற்ற பயண நூல். அதன் முதல் இரு அத்தியாயங்களின் தமிழாக்கம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

travels-with-charley-coverஎன் இளம் வயதில் வேறெங்காவது இருக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எழும்போது, மன முதிர்ச்சி உள்ளவர்கள், முதிர்ச்சி வந்தால் இந்த அரிப்பு அடங்கி விடும் என்று எனக்கு உறுதி அளித்தார்கள். வருடங்கள் என்னை முதிர்ச்சி பெற்றவனாக உருவகித்தபோது, நடுவயது வருவதுதான் சிகிச்சை என்று சொல்லப்பட்டது. நடுவயதினனாக ஆனபோது, இன்னும் கூடுதலாக வயதானால் என் ஜுரம் தணிந்து விடும் என்று எனக்கு ஆறுதல் சொல்லப்பட்டது. இப்போது எனக்கு ஐம்பத்து எட்டு வயதாகி இருக்கையில், மூப்பினால் புத்தி குழம்பும்போது, ஒரு வேளை நிலைமை சரியாகும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதற்கெல்லாம் ஒரு பலனுமில்லை. ஏதோ கப்பலிலிருந்து பிளிறும் நான்கு சங்கொலிகளைக் கேட்டால் என் பிடரி முடிகள் இன்னும் சிலிர்த்து எழுகின்றன, என் கால்கள் தரையில் குதி போட ஆரம்பிக்கின்றன. துவங்கி, பிறகு சூடாக ஆகும் ஒரு ஜெட் எஞ்சினின் ஒலி, ஏன், சாலையில் இரும்பு லாடமடித்த குளம்புகளின் ஒலி கூட அந்தப் பண்டை நாட்களின் நடுக்கத்தை, வாய்க்குள் ஓர் உலர்ந்த உணர்வை, எங்கோ வெறிக்கும் பார்வையை, சூடாகும் உள்ளங்கைகளை, விலாவெலும்புகளுக்குச் சற்றே அடிவயிற்றில் ஒரு கலக்கலைக் கொண்டு வருகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், நான் சிறிதும் தேறவில்லை; அதற்கு மேலும் சொல்வதானால், ஒரு சமயம் ஓடுகாலியாக ஆகி விட்டால், அப்புறம் நிரந்தரமாக ஓடுகாலிதான். இந்த வியாதி குணமாகாது என்று நான் அச்சப்படுகிறேன். பிறருக்குப் புத்தி சொல்லவென்று இதை எழுதவில்லை, ஏதோ எனக்கே தெளிவாகட்டும் என்றே எழுதுகிறேன்.
இருக்கிற இடத்தில் நிலை கொள்ளாது போவது என்ற தொற்று நோய் ஒரு தறுதலை மனிதனைப் பீடிக்கத் துவங்கினால், இங்கே இருந்து தொலைந்து போகும் சாலை அகலமாகவும், நேரானதாகவும், இனிமையானதாகவும் தெரியத் துவங்கினால், அந்தப் பலிதானி முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், போவதற்கு ஒரு நல்ல, போதுமான காரணத்தைக் கண்டு பிடிப்பதைத்தான். செயல்திறன் உள்ள ஒரு ஓடுகாலிக்கு இது ஒன்றும் கஷ்டமானதே இல்லை. அவனிடம் தேர்ந்தெடுக்க ஒரு தோட்டமே நிறையுமளவு காரணங்கள் வளர்ந்து கிடக்கும். அடுத்தது அவன் காலத்தையும், இடத்தையும் கருதித் திட்டங்கள் தீட்ட வேண்டும். ஒரு திசையையும், அதில் இலக்காக ஒரு இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைசியாகப் பிரயாணத்தை அவன் நிகழ்த்திக் காட்ட வேண்டும். எப்படிப் பயணம் போவது, என்ன எடுத்துச் செல்வது, எத்தனை நாட்கள் தங்குவது. இந்தப் பகுதி என்றும் மாறாதது, சிரஞ்சீவியானது. இதை நான் இங்கு எழுதி வைக்கக் காரணம் எளியது, ஓடுகாலி வாழ்க்கைக்குப் புதுமுகமாக வருபவர்கள், முதல் தடவையாகக் கெட்ட காரியங்களைச் செய்யத் துவங்கும் பதின்ம வயதினரைப் போன்றவர்கள், ஏதோ தாம்தான் இதையெல்லாம் முதல் முதலாகக் கண்டு பிடித்ததைப் போலக் கருதாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அது.
பயணம் திட்டமிடப்பட்டு, தேவையான உபகரணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, எல்லாம் செயல்படத்துவங்கிய பிறகு ஒரு புது விஷயம் நுழைகிறது, அது ஆளத் துவங்கி விடுகிறது. ஒரு யாத்திரை, சுற்றுலா, தேடல், இது தனிவகை, மற்ற பிரயாணங்களிலிருந்து வேறுபட்டது. இதற்கு ஒரு சொரூபம், குணநலம், தனித்தன்மை, ஆளுமை எல்லாம் உண்டு. ஒரு யாத்திரை அதனளவில் ஒரு நபர் போல; ஒன்றைப் போல இன்னொன்று இராது. திட்டமிடுதல், முன் ஜாக்கிரதைகள், கண்காணிப்பு மேலும் வற்புறுத்தல் எதுவும் பலிக்காது. பல வருடங்கள் திண்டாட்டத்துக்குப் பிறகு நாம் கண்டு விடுகிறோம், நாம் யாத்திரை போகவில்லை, யாத்திரைதான் நம்மை இழுத்துப் போகிறது என்று. சுற்றுலா மேலாளர்கள், கால அட்டவணைகள், முன்னுரிமைப் பதிவுகள், உலோகத்தகட்டில் பொறிக்கப்பட்டது போல நிச்சயமானவை , தவிர்க்க முடியாதவை, மாறாதவை என்று நினைப்பதெல்லாம் ஒரு யாத்திரையின் ஆளுமையுடன் மோதி நொறுங்கித் துகளாகி விடுகின்றன. இதைப் புரிந்து கொண்டபின்னர்தான், என்றும் மாறாத தறுதலையான ஒருவன் சிறிது ஆசுவாசமடைந்து அதோடு போக முடிந்தவனாகிறான். அப்போதுதான் சலிப்புகள் உதிர்ந்து போகின்றன. இதளவில் யாத்திரை என்பது ஒரு திருமணம் போன்றது. நாம் அதைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நினைப்பதுதான் நிச்சயமாக பிழை செய்வதாகும். இதைச் சொல்லி விடுவதால் எனக்குச் சற்று சுகப்பட்ட உணர்வு கிட்டுகிறது, ஆனால் அனுபவித்தவர்களுக்கு இது புரியும்.

அத்தியாயம் – 2

என் திட்டம் தெளிவாகவும், சுருக்கமாகவும், நியாயமானதாகவும் இருந்தது, என்று நினைக்கிறேன். பல வருடங்களாக உலகின் பல பாகங்களில் நான் பயணம் போயிருக்கிறேன். அமெரிக்காவில் நான் நியூ யார்க் நகரில் வசிக்கிறேன், சில சமயம் சிக்காகோ அல்லது சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரங்களில் சிறிது வசிப்பதுமுண்டு. ஆனால் நியூ யார்க் என்பது அமெரிக்கா இல்லை, எப்படி பாரிஸ் மாநகர் ஃப்ரான்ஸ் இல்லையோ, லண்டன் மாநகரம் இங்கிலாந்து இல்லையோ அதேபோலத்தான். இப்படித்தான் நான் எனக்கு என் நாட்டைப் பற்றியே ஏதும் தெரியாது என்று கண்டு பிடித்தேன். நான், ஒரு அமெரிக்க எழுத்தாளன், அமெரிக்கா பற்றியே எழுதுபவன், நான் என் நினைவிலிருந்துதான் எழுதிக் கொண்டிருந்தேன், நினைவு என்பதோ அதன் உயரிய நிலையில் கூட பிழைபட்டதும், கோணல்கள் கொண்டதுமான ஒரு சேமிப்பு. நான் அமெரிக்காவின் பேச்சுகளைக் கேட்டிருக்கவில்லை, அதன் புல்லையோ, மரங்களையோ, சாக்கடைகளையோ முகர்ந்திருக்கவில்லை, அதன் மலைகளையும், நீர்நிலைகளையும், அதன் வண்ணங்களையும், ஒளியின் பல தரங்களையும் பார்த்திருக்கவில்லை. அங்கு நிகழும் மாறுதல்களை நான் செய்தித்தாள்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும்தான் அறிந்தேன். இதை எல்லாம் விட, இந்த நாட்டை இருபத்தி ஐந்து வருடங்களாக உணரவே இல்லை. சுருங்கச் சொன்னால், நான் எனக்குத் தெரியாத ஒரு விஷயம் பற்றி எழுதினேன், எனக்கு என்ன தோன்றியது என்றால், ஒரு எழுத்தாளன் இப்படி இருப்பது மோசமான குற்றச் செயல். என் நினைவுகள் இருபத்து ஐந்து வருட இடைவெளியால் உருக்குலைந்து போயிருந்தன.
முன்பொரு தடவை பேக்கரி வான் ஒன்றில் நான் ஊர்களைச் சுற்றி வந்தேன். இரண்டு கதவுகள் கொண்ட நிறைய சத்தம் போடும், உடலை உலுக்கும் அந்த வண்டியின் தரையில் படுப்பதற்கு ஒரு மெத்தையைப் போட்டிருந்தேன். ஜனங்கள் எங்கெல்லாம் குவிந்து நின்றிருந்தார்களோ அங்கெல்லாம் நானும் நிறுத்தி விட்டுப் பார்க்கப் போனேன். அவர்களுக்குச் செவி கொடுத்தேன், உணர்ந்தேன். இந்த வழியில் என் நாட்டைப் பற்றி எனக்கு ஒரு சித்திரம் கிட்டியிருந்தது, அதன் செம்மையான தன்மையை ஏதாவது குறைத்தது என்றால் அது என் குறைபாடுகளாகத்தான் இருக்கும்.
இப்படியாக, இந்த ராட்சத அளவு கொண்ட நாட்டை மறுபடி முயன்று அடையாளம் காண்பது என்ற நோக்கத்தோடு, நான் மறுபடியும் அதை நோட்டம் விடப் போக உறுதி பூண்டேன். இல்லையேல், எழுதுகையில், பெரும் உண்மைகளுக்கு அடிப்படைகளாக இருந்து அவற்றின் இயல்பைக் கண்டறிய உதவும் சிறு உண்மைகளைச் சொல்ல ஏலாதவனாக இருந்திருப்பேன். ஒரு கடும் பிரச்சினை இப்போது எழுந்தது. இடைப்பட்ட இருபத்தைந்து வருடங்களில் என் பெயர் ஓரளவு பரவலாகத் தெரிய வந்திருந்தது. என் அனுபவத்தில், நம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், அது நல்லதரமாகவோ, கெட்டதாகவோ எப்படி இருந்தாலும், ஜனங்கள் மாறி விடுகிறார்கள். கூச்சத்தாலோ, அல்லது விளம்பரத்தால் தூண்டப்படும் இதர குணங்களாலோ, சாதாரணமாக அவர்கள் இருப்பது போல அல்லாதவராக மாறி விடுகிறார்கள். இதனால், என் பயணத்தின் தேவைகள் என் அடையாளத்தை வீட்டிலேயே விட்டு விட்டுச் செல்வதை அவசியமாக்கின. ஊரூராகத் திரியும் காதுகளாகவும், கண்களாகவும், அலையும் ஒளிப்படப் பதிவுத் தகடாகவும் ஆக வேண்டி வந்தது. விடுதிகளில் என் பெயரைப் பதிவு செய்ய முடியவில்லை, எனக்குத் தெரிந்தவர்களைச் சந்திக்க முடியவில்லை, பலரைப் பேட்டி காண முடியவில்லை, அல்லது சந்திப்பவர்களிடம் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்க முடியவில்லை. மேலும், இரண்டு மூன்று பேர்களோடு போவது ஒரு இடத்தின் இயல்பான சூழலைப் பாதித்து விடுகிறதென்பதால், நான் தனியாகப் போக வேண்டி இருந்தது, என்னளவிலேயே போதுமானவனாக , தன் வீட்டைத் தன் முதுகிலேயே சுமந்தபடி, அலட்டல் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆமை போல ஆக வேண்டி வந்தது.
இதையெல்லாம் மனதில் கொண்டு, பார வண்டிகளை (Truck) தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமையலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். என் நோக்கத்தையும், தேவைகளையும் குறிப்பிட்டேன். எனக்கு ஒரு முக்கால் டன் அரை பார வண்டி (பிக்-அப் ட்ரக்) தேவை, அது என்ன விதமான கடுமையான தரையிலும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும், இந்த பாரவண்டியின் மீது ஒரு படகில் இருக்கும் கூண்டு போன்ற ஒரு சிறுவீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். ஒப்பீட்டில், ஒரு தொடர் வண்டி (ட்ரெய்லர்) மலைப்பாதைகளில் ஓடடுவதற்குக் கடினமானது, ஒதுக்கி நிறுத்தி வைக்க சிரமம் தருவதோடு, பல இடங்களில் நிறுத்துவது விதிகளை மீறுவதாக இருக்கும், நடைமுறையில் பல கட்டுப்பாடுகளுக்கும் அது உட்படுத்தப்படுவது. போதுமான காலம் கழிந்தபின், தங்குவதற்கான கூண்டு ஒன்றைத் தாங்கிய, வலுவான,வேகம் நிறைந்த, சௌகரியமான ஒரு வண்டிக்கான கட்டமைப்புத் திட்டங்கள் உருப் பெற்றன. அந்த கூண்டு ஒரு சிறு வீடு போல இருந்தது, அதில் இரண்டு பேர் படுக்கத் தோதுவான படுக்கை, நான்கு எரிப்பான்கள் கொண்ட அடுப்பு, ஒரு உஷ்ணப்படுத்தும் உலை, குளிரூட்டும் பெட்டி, இவற்றோடு விளக்குகள்- எல்லாம் பூடேன் வாயுவால் வேலை செய்வன, ஒரு ரசாயனக் கழிப்பறை, மூடக் கூடிய துணிஅலமாரி, பொருள்கள் வைக்க இடம், பூச்சிகள் நுழையாமல் தடுக்கும் வலைத்திரையோடு ஜன்னல்கள்- அனைத்தும் நான் கேட்டிருந்த வசதிகளேதான். லாங் ஐலண்ட் பகுதியின் எல்லையில், மீனவர் வாழும் ஒரு சிறிய பகுதியான ஸாக் துறைமுகம் என்ற என் ஊரிலேயே பாரவண்டி கொணரப்பட்டு, கோடை காலத்தில் கொடுக்கப்பட்டது. மொத்த நாடும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்புகிற காலமான தொழிலாளர் தினத்துக்கு முன் கிளம்ப எனக்கு விருப்பமில்லை என்ற போதும், இந்த ஆமை ஓட்டுக்குப் பழக வேண்டும் என்றும், அதற்குத் தேவையான உபகரணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும், அதை எப்படி இயக்குவது என்று தெரிந்து கொள்ளவும் நான் விரும்பி இருந்தேன். அது ஆகஸ்டில் வந்து சேர்ந்தது, அழகானதாக இருந்தது, சக்தி வாய்ந்ததாகவும் அதே நேரம் ஒயிலாகத் திவளக் கூடியதாகவும் இருந்தது. ஒரு சாதாரணக் கார் போல, கையாள எளியதாக இருந்தது. என் பயணம் நண்பர்களால் நையாண்டி செய்யப்பட்டிருந்ததால், அந்த பாரவண்டிக்கு ரோஸினான்டெ என்று பெயரிட்டேன், இதுதான் டான் கிஹோட்டேயின் குதிரைக்கும் பெயர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
என் திட்டத்தை நான் ரகசியமாக வைக்கவில்லை என்பதால், என் நண்பர்களிடையேயும், ஆலோசகர்களிடையேயும் பல சர்ச்சைகள் எழுந்தன. (வரப் போகிற பயணம் ஆலோசகர்களை குழுக்களாக த் தட்டி எழுப்புகிறது.) என் ஒளிப்படத்தை என் பதிப்பாளர் எத்தனை விரிவாக விநியோகிக்க முடியுமோ அத்தனை விரிவாகப் பரப்பி இருந்தனர் என்பதால், உடனே கவனிக்கப்படாமல் நான் எங்கும் செல்ல முடியாது என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. முதலிலேயே நான் சொல்லி விடுகிறேன், பத்தாயிரம் மைல்களுக்கும் மேலான பயணத்தில், 34 மாநிலங்களில், நான் ஒரு தடவை கூட அடையாளம் காணப்படவில்லை. ஜனங்கள் சூழ்நிலையைக் கொண்டுதான் எதையும் அடையாளம் காண்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். எனக்குஒரு பின்னணி இருப்பதாகக் கருதப்படுகிறதே, அதை வைத்து என்னைத் தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் கூட, ரோஸினான்டெயின் பின்னணியில் என்னை ஓரிடத்திலும் அடையாளம் காணவில்லை.
ரோஸினான்டெ என்ற பெயர், பதினாறாம் நூற்றாண்டின் ஸ்பானிய மொழி எழுத்துகளில் என் பாரவண்டியின் ஒரு புறத்தில் சாயத்தால் எழுதப்பட்டிருந்ததா, அது சில இடங்களில் கவனத்தைத் தூண்டி, கேள்விகளை எழுப்பும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எத்தனை பேருக்கு அந்தப் பெயர் தெரிந்திருந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக, ஒருவர் கூட என்னிடம் அது பற்றிக் கேட்கவில்லை.
அடுத்து, ஒரு அன்னியன் நாட்டின் பல பகுதிகளில் சுற்றித் திரிவது பற்றிக் கேள்விகள் எழும், சந்தேகம் எழும் என்று சொல்லப்பட்டது. அதனால்,  தயார் நிலையில் வைக்கப்பட்ஒரு குட்டைக் குழல் துப்பாக்கியையும், இரண்டு நீள் குழல் துப்பாக்கிகளையும், மேலும் சில மீன் பிடிக்கும் தூண்டில்களையும அந்த வண்டியில் வைத்தேன். என் அனுபவத்தில் வேட்டையாடவோ, மீன் பிடிக்கவோ ஒரு நபர் போகிறான் என்று தெரிந்தால் அவனுடைய நோக்கம் புரிந்து கொள்ளப்படுவதோடு, வரவேற்கவும் படுகிறது. நிஜமாகச் சொன்னால், நான் வேட்டையாடும் காலமெல்லாம் கழிந்து விட்டது. இப்போது ஒரு வறுக்கும் வாணலியில் போட முடியாத எதையும் நான் கொல்வதோ, பிடிப்பதோ கிடையாது. கேளிக்கைக்காக பிராணிகளைக் கொல்லும் வயதை எல்லாம் தாண்டி விட்ட வயசாளி நான். கடைசியில், இந்த நாடகத்துக்குத் தேவை இருக்கவில்லை.
என்னுடைய வண்டியின் நியூ யார்க் லைஸன்ஸ் தகடுகள் பிறர் ஆர்வத்தைத் தூண்டி, கேள்விகளை எழுப்பும் , ஏனெனில் அவை மட்டுமே என் அன்னியத்தனத்தை அடையாளம் காட்டுவனவாக இருந்தன என்று சொல்லப்பட்டது. அது நடக்கவே செய்தது- மொத்த யாத்திரையில் இருபது அல்லது முப்பது தடவைகள் இப்படி நேர்ந்தது. ஆனால் இந்த வகைச் சம்பவங்களுக்கு ஒரே மாதிரியான பாணி இருந்தது. அது இப்படி இருந்தது:
உள்ளூர் நபர்: “நியூயார்க்கா? ஹ!”
நான்: “ஆஹாங்”
உள்ளூர் நபர்: “நான் அங்கே ஆயிரத்தித் தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டுலெ இருந்தேன் – இல்லே, முப்பத்தி ஒம்பதா? ஆலிஸ், நாம நியூ யார்க்குக்குப் போனது முப்பத்தி எட்டுலயா, முப்பத்தி ஒம்பதுலயா?”
ஆலிஸ்: “அது முப்பத்தி ஆறுல. எனக்கு அது நெனவிருக்கு, ஏன்னா, அந்த வருசம்தான் ஆல்ஃப்ரட் செத்துப் போனார்.”
உள்ளூர் நபர்: “அதெப்படியோ போகட்டும், எனக்கு அந்த ஊர் சுத்தமாப் பிடிக்கல்லெ. நீங்க எனக்குப் பணம் கொடுத்தாக் கூட அங்க இருக்க மாட்டேன்.”
தனியாக நான் பயணம் போவதால், ஓரளவுக்கு நிஜமான கவலையும் இருந்தது, ஏதாவது கொள்ளை, தாக்குதல் எல்லாம் நடக்குமோ என்று அந்தக் கவலை. நம் சாலைகள் ஆபத்தானவை என்பது தெரிந்ததுதானே. இந்த ஒரு விஷயத்தில் எனக்குமே தேவையில்லாத கவலைகள் இருந்தன. நான் நண்பர்களில்லாது, பெயரில்லாத நபராக, தனியனாக ,குடும்பம், நண்பர்கள், கூட உழைப்பவர்கள் ஆகியோர் கொடுக்கும் பாதுகாப்பு இல்லாமல் வாழ்வதைச் செய்து பல வருடங்கள் ஆகி இருந்தன . உண்மையாகவே, அப்படி வாழ்வதில் ஒரு ஆபத்தும் இல்லை. முதலில் அது மிகவும் தனிமைப்பட்ட உணர்வையும், எந்த உதவியும் இல்லாத உணர்வையும் கொணர்கிறது- எல்லாம் அழிந்து விட்ட உணர்வு அது. அதனால், நான் இந்தப் பயணத்துக்கு ஒரு துணையைப் பிடித்தேன் –வயதான நாகரீகம் மிக்க கனவானான ஒரு ஃப்ரெஞ்சு சடைநாய்தான் அந்தத் துணை. சார்லி என்று தெரியவந்த அந்தக் கனவானின் முழுப் பெயரோ சார்ல்ஸ் லு ஷியான். அவன் பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில், பெர்ஸி என்கிற ஊரில் பிறந்தவன், ஃப்ரெஞ்சு மொழியில்தான் பயிற்சி பெற்றவன், சடைநாய் இங்கிலிஷ் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், ஃப்ரெஞ்சு மொழி ஆணைகள்தான் அவனுக்கு உடனே புரியும். இல்லையேல் நம் ஆணைகளை மொழி பெயர்த்துத்தான் அவன் புரிந்து கொள்ள வேண்டி வரும், அதற்கு அவனுக்கு நேரம் பிடிக்கும். அவன் ஒரு பெரிய சடை நாய், ப்ளூ என்ற ஃப்ரெஞ்சுச் சொல் வருணிக்கும் நிறமான நீல நிறத்தவன், அவன் சுத்தமாக இருக்கையில் தெரியும் நிறம் அது. சார்லி பிறப்பிலிருந்தே ஒரு ராஜதூதன். சண்டை போடுவதை விடப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை நம்புபவன், அதுவும் ஏற்ற வழிதான், சண்டை போடுவதில் சிறிதும் திறனற்றவன் சார்லி. அவனுடைய பத்து வருடங்களில் ஒரு தடவைதான் அவன் சிக்கலில் மாட்டிக் கொண்டான் – அவன் சந்தித்த அந்த நாய் சமரசப் பேச்சுகளுக்குத் தயாராக இல்லை. சார்லி தன் வலது காதில் ஒரு சிறு துண்டை அந்த முறை இழந்தான். ஆனால் அவன் ஒரு நல்ல காவல் நாய்- சிங்கம் போல பெரிய குரலெழுப்புவான், அது, ஒரு காகிதக் கூடைக் கூடக் கடித்து வெளி வரத் தெரியாது அவனுக்கு என்பதை இரவில் அலையக் கூடிய அன்னியர்களிடம் இருந்து மறைக்க உதவியது. அவன் ஒரு நல்ல நண்பன், பயணத் தோழன், எதையும் விட ஊர் சுற்றுவது அவனுக்குப் பிடித்த விஷயம். இந்தப் புத்தகத்தில் அவனைப் பற்றி நிறைய வந்ததென்றால், அது இந்தப் பயணத்துக்கு அவன் நிறைய கொடுத்துதவினான் என்பதால்தான். ஒரு நாய், அதுவும் சார்லியைப் போல ஒரு வினோதமான வகை நாய், முகமறியாதவர்களொடு தொடர்பு ஏற்படுத்த உகந்த வழி. போன பாதையில் நிறைய உரையாடல்கள், “என்ன மாதிரி நாய் இது?” என்றுதான் துவங்கின.
பேச்சைத் துவங்க மனிதர் பயன்படுத்தும் உத்திகள் உலகெங்கும் பொதுவானவைதான். எனக்கு வெகு நாட்களாகவே தெரியும் ஒரு விஷயத்தை இந்தப் பயணத்திலும் மறுபடி கண்டு பிடித்தேன், பிறர் கவனத்தை ஈர்க்கவும், உதவியைப் பெறவும், உரையாடலைத் துவக்கவும் சிறந்த வழி நாம் வழி தெரியாது தொலைந்து போனவராகக் காட்சி தருவதுதான். பட்டினியால் சாகக் கிடக்கும் தன் அம்மாவை உதைத்துத் தள்ளியும் தன் வழியைத் தேடக் கூடியவன் கூட, வழி தொலைந்தவனாகக் காட்சி தரும் ஒரு அன்னியனுக்குப் பல மணி நேரம் செலவழித்துத் தவறான வழியைக் காட்டி உதவி செய்ய முன் வருவான்.
[தமிழாக்கம்: மைத்ரேயன்]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.