கதவு
சரியாக பொட்டில்தான்
அறைந்தது – பெரிய கதவு!
அதன் கைப்பிடி என் கண்ணருகே
வந்து விழுந்தது.
கதவருகே அப்படியென்ன
விளையாட்டு?
யார் வருவதற்கான
காத்திருப்பு?
வெயிலும் மழையும் நிழலும்
இங்கேதான் பொழிகிறது.
விழிப்பும் உறக்கமும் கனவும்
இங்கேதான் நிகழ்கிறது.
இருந்தும்,
கதவருகே அப்படியென்ன
விளையாட்டு?
எங்கு செல்வதற்கான
எதிர்ப்பார்ப்பு?
தொட்டால் விழுந்துவிடும் கதவு
எங்கு நின்றுகொண்டிருக்கிறது?
– அனுகிரஹா
oOo
நிறுத்தம்
பாதையில் பழுதென
நின்று போயிருந்தது ரயில்.
உயர்ந்தும் தாழ்த்தும்
ஊஞ்சலாடிக் கொண்டிருந்த
மரக்கிளைகளின் ஊடாக
சாமர்த்தியமாகப் புகுந்து
கண்ணாமூச்சி ஆடிக் கவருகிறது
மாலை வெயில்.
சட்டெனச் சிறகு விரித்த
சிட்டுக்குருவியின் புறப்பாடில்
திடுக்கிட்டுச் சலசலக்கின்றன இலைகள்.
நெளிந்தோடிய சிற்றோடையில்
சிறகு நனைத்தபடி சில காக்கைகள்.
பச்சைக் கம்பளத்தில் முளைத்த
மஞ்சள் முகங்களாய் சூரிய காந்திகள்.
யாருமற்ற பாதையில்
நெடு நிழல் துணை செல்ல
தலையில் கோணிப்பையுடன்
தளர்வாக நடந்த பெரியவர் முகத்தில்
ஆதித் தகப்பனின் சாயல்.
அத்தனை காட்சிகளினின்றும் என்னை
வலுவில் பிரித்தெடுத்துக் கொண்டு
கிளம்புகிறது ரயில்.
அந்த மாலைக்கதிர்
ஊஞ்சற்கிளை, மஞ்சள் மலர்கள்
அந்தச் சிற்றோடை
சிறுகுருவி, காக்கைகள்
காணக் கிடைக்கலாம்
மீண்டும் எப்போதேனும்
உலகில் எங்கேனும்.
காணவே முடியாதெனத் தோன்றியது
அந்தப் பெரியவரை
அவரது முதுமை, தனிமை
தலைச்சுமை மற்றும் நிழலை.
இரண்டுமே நல்ல கவிதைகள்..வாழ்துக்கள் கவிஞர்களே… பத்மநாபபுரம் அரவிந்தன் –