எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்

ஜூன் 26, 1975 எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. அதன் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவுகூறும் விதமாக ஸ்வராஜ்யா உட்பட பல பத்திரிகைகள் சிறப்பு கட்டுரைகளும், பத்திகளும் வெளியிடுகின்றன.
எமர்ஜென்சி தினங்களில் எனக்கு நேரடி அனுபவம் இல்லாததால், அந்த நெருக்கடி காலத்தில் வாழ்ந்த சிலரின் பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன்:

எமர்ஜென்சி தின நினைவுகள் – இரா.செழியன்

மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட ஜெயப்பிரகாசர் (ஜே.பி.) எதிர்த்தரப்பு அணியை அமைத்தார். அதில் மூத்த அரசியல் தலைவர்களான ஆச்சார்ய கிருபளானி, மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், என்.ஜி.கோரே, எஸ்.எம். ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, மது லிமாயி, வாஜ்பாயி, அத்வானி போன்ற பலர் இருந்தனர்.

1971 பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை சாந்திபூஷண் நடத்தினார்.
நான்கு ஆண்டுகள் ஆமை நடைபோட்ட அந்த வழக்கில், 1975 ஜூன் 12}ஆம் தேதியன்று, நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா, சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அத்துடன் ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜூன் 26-ஆம் தேதி காலையில் முதலாவதாகக் கிடைத்த செய்தி: அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள்கள் எதுவும் கிடைக்காது என்பதுதான். இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள், அவைகளை அச்சிட முடியாதபடி, முதல் நாள் இரவில் அவைகளுக்கான மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

1975-77 நெருக்கடி காலத்தில் அரசாங்கம் இழைத்த அநீதிகளை விரிவாக ஆராய்ந்த நீதிபதி ஜே.சி.ஷா விசாரணைக் குழு தந்த அறிக்கையில், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்கள் – சிறைச்சாலைகள் – நீதிமன்றங்கள் ஆகியவைகளிடமிருந்து திரட்டப்பட்ட விவரங்களின்படி, விசாரணை எதுவுமின்றி சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கிடந்தவர்களின் எண்ணிக்கை 1,10,806.

oOo

நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி

பண்டிட் ஜவஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட ‘தெ நேஷனல் ஹெரால்டு’ ஆங்கில நாளிதழில் ஒரு தலையங்கம் வெளிவந்தது. தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஒரு கட்சி ஆட்சிமுறையைப் புகழ்ந்து அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. பல கட்சி ஜனநாயகத்தை விட ஒரு கட்சி ஆட்சிமுறை வீரியம் குறைந்தது அல்ல என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘இங்கிலாந்து பாணி ஜனநாயகம்தான் மிகவும் சிறப்பானது என்று சொல்லமுடியாது. ஆப்பிரிக்க நாடுகள் சில, ஜனநாயகத்தின் வெளிப்புறம் எவ்வாறு இருந்தாலும் மக்களின் குரல் நேர்த்தியாக பிரதிபலிக்கும் வகையில் இயங்கிவருகின்றன.
மத்தியில் உள்ள ஆட்சி வலுவானதாக இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்கமுடியும். இதைப் பிரதமர் வற்புறுத்தியுள்ளார். மத்திய அரசு பலவீனமடைந்துவிட்டால் தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளையும். அதுமட்டுமல்லாமல் சுதந்திரத்திற்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். சுதந்திரத்திற்கே ஊறுவிளையும். ஆனால், ஜனநாயகம் எப்படி உயிர்ப்புடன் இருக்கமுடியும்? என்று பிரதமர் இந்திராகாந்தி எழுப்பியுள்ள கேள்வி ஆழ்ந்த அர்த்தச் செறிவு மிக்கது.’ என்று தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

ஆகஸ்டு 11ம் தேதி ‘நேஷனல் ஹேரால்டு’ இதழில் ஒரு கட்சி ஆட்சிமுறை குறித்து தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது. இரண்டு வாரத்திற்குள், அதாவது ஆகஸ்டு 25ஆம் தேதி அதே பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கத்தின் தொனி மாறிவிட்டது.
‘ஒரு கட்சி ஆட்சிமுறையை கொண்டுவரும் உத்தேசம் எதுவும் கிடையாது’ என்று பிரதமர் அறிவித்துவிட்டார். புதிதாக அரசியல் சாசன சபையை அமைக்கும் எண்ணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துவிட்டார். ‘ஒரு கட்சி ஆட்சி முறையில் சில நல்ல அம்சங்கள் உள்ளன என்றபோதிலும் அது திணிக்கப்பட மாட்டாது. அது படிப்படியாக இயல்பாக வருவது தான் நல்லது. தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை’ என்பதுதான் ஆகஸ்டு 25ஆம் தேதி வெளிவந்த நேஷனல் ஹெரால்டு இதழில் பிரசுரிக்கப்பட்ட தலையங்கமாகும்.
‘ஆகஸ்டு 11ஆம் தேதிக்கும், ஆகஸ்டு 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன?’ என்று உமா வாசுதேவ் என்னிடம் கேட்டார். அதற்கு ‘ஆகஸ்டு 15ஆம் தேதியன்று முஜிபுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார்’ என்று நான் பதிலளித்தேன்.

oOo

வேலூர் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளராக இருந்த திரு வி.சுப்ரமணியன்

தினசரி காவல்துறையின் இடையூறுகள். கோஷம் எழுப்பக்கூடாது. சேர்ந்து போகக்கூடாது. கூட்டம் நடத்தக்கூடாது. வாயிற்கூட்டம் கூடாது. ஜனநாயக நாட்டின் சர்வாதிகார ஆட்சி.
ஆனந்த விகடன் பத்திரிக்கை முத்திரைக்கதைகள் போல இருபது அம்ச திட்ட சிறுகதைகளை வாராவாரம் வெளியிடும்.
பொதுவாக தப்பு நடக்கும்போது எல்லோரும் சொல்லக்கூடிய வார்த்தை, மீண்டும் Emergency வரணும் என்று. தவறு. விளையாட்டாகக் கூடச் சொல்ல வேண்டாம். பட்டால்தான் தெரியும்.

oOo

பிரெண்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜயசங்கர் ராமச்சந்திரன்

எந்த நேரமும் போலீஸ் அப்பாவை கைது செய்யலாம் என்ற நிலையில் நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு தெளிவானது. ஏற்கெனவே உதிர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த கதவு தட்டப்பட்டது. அம்மா எழுந்து சென்றார். ”டிஎஸ்பி சேதுராமலிங்கம் வந்திருக்கிறேன். ராமச்சந்திரன் இருக்கிறாரா” என்று கதவுக்கு வெளியிலிருந்தே கேட்டார். “கோத்தாரி சர்க்கரை ஆலை தொழிற்சங்க பேச்சுவார்த்தைக்காக நேற்றிரவே மலைக்கோட்டை எக்ஸ்பிரசில் சென்னை சென்றுவிட்டார்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார்.

oOo

இந்திய சினிமாவின் 40 ஆண்டு மவுனம் : தேவிபாரதி

இந்தித் திரைப்பட இயக்குநரான குல்சார் 1975-ல் சர்ச்சைக்குரிய திரைப்படமொன்றை வெளியிட்டார். சூறாவளி என்னும் பொருள்படும் ‘ஆந்தி’ என்ற அந்தத் திரைப்படம்தான் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயமாக வர்ணிக்கப்படும், 1975-77ஆண்டுகளில் அமலில் இருந்த 21 மாத கால நெருக்கடிநிலைக் காலத்தில் தடைசெய்யப்பட்ட முதல் திரைப்படம். நாயகன்- சஞ்சீவ் குமார், நாயகி- சுசித்ரா சென்.
1977-ல் வெளிவந்த ‘கிஸ்ஸா குர்ஸி கா’ என்ற திரைப்படம் நெருக்கடி நிலையை விமர்சித்ததற்காகத் தடை செய்யப்பட்ட மற்றொரு இந்தித் திரைப்படம். இதன் இயக்குநர் அம்ரித் நஹாதா அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். படத்தின் அரசியல் பகடிகள் காங்கிரஸுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. சஞ்சய் காந்தியின் தலைமையில் ஒன்றுதிரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளை அடித்து நொறுக்கினார்கள். படத்தின் பல பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு இந்தச் செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அவர்களில் யாரும் தொழில்முறை குண்டர்கள் அல்ல. சஞ்சய் காந்தி தவிர, இந்திராவின் செயலாளர் ஆர்.கே. தவன், அவரது செய்தி ஒலி/ஒளிபரப்பு அமைச்சர் வி.சி. சுக்லா ஆகிய மூவரும் அப்போது இந்திய அரசியலின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்டவர்கள்.
நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு இந்தச் செயலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. அவர்களில் யாரும் தொழில்முறை குண்டர்கள் அல்ல. சஞ்சய் காந்தி தவிர, இந்திராவின் செயலாளர் ஆர்.கே. தவன், அவரது செய்தி ஒலி/ஒளிபரப்பு அமைச்சர் வி.சி. சுக்லா ஆகிய மூவரும் அப்போது இந்திய அரசியலின் நம்பிக்கை நட்சத்திரங்களாகக் கருதப்பட்டவர்கள்.
இந்திராவுக்கு ஆதரவாக இல்லாததால் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களை ஒலிபரப்புவதை அகில இந்திய வானொலி நிறுத்திக்கொண்டது.
2004-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் பற்றிய ஒரு திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மறுத்தது.

oOo

Indira_Gandhi_Ministers_Cabinet_Emergency_Prime_Minister_Room_One_Woman

காலச் சுவடுகள் – மாலை மலர்

நெருக்கடி நிலைக்கான அஸ்திவாரம்
1975 ஜுன் 12ஆம் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி ஜெகன்மோகன் சின்கா தீர்ப்புக் கூறினார். “இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது”.
தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்ததாவது: “மத்திய அரசின் கெஜட் பதவி பெற்ற அதிகாரியான யஷ்பால் கபூரை, இந்திரா காந்தி தன் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். யஷ்பால் கபூர் முன்னதாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தபோதிலும் ஜனவரி 25 ஆம்தேதிதான் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தத் தேதி வரை இந்திரா காந்தியின் தேர்தல் பணிகளை யஷ்பால் கபூர் கவனித்தது சட்ட விரோதம். இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு உத்தரபிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. போலீசாரும் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்திரா காந்தி பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது.”
அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திரா காந்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் பல்கிவாலா தாக்கல் செய்தார். மனுவை ஜுன் 23ஆம் தேதி நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, மறுநாள் தீர்ப்புக் கூறினார். தீர்ப்பு விவரம் வருமாறு: “அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு கூறப்படும் வரை அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு நிறுத்தி வைக்கிறோம். அதாவது, இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராகச் செயல்படலாம். அவர் பிரதமராக நீடிப்பதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் சட்டங்கள் தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது, ஓட்டுப்போட அவருக்கு உரிமை இல்லை.”

Indian_Express_Blank_Editorial_Empty

எமர்ஜென்சி கால செய்தித்தாள் எப்படி இருக்கும்?
தலையங்கத்தை தணிக்கைக்கு உட்படுத்தி வெளியிடுவதற்கு பதில் காலியாக வைக்கப் போவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் உணர்த்தியது. பி.பி.சி.யின் இந்தியா கிளை மூடப்பட்டது. பிபிசி.யில் பணிபுரிந்த மார்க் டல்லி மீண்டும் இங்கிலாந்துக்கே அனுப்பப்பட்டார். குல்தீப் நய்யார் ஜெயிலில் தள்ளப்பட்டார்.
அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். ஒழுங்காக வேலை பார்த்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. கள்ள மார்க்கெட் ஒழிந்தது.
இந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
thuglak-emergency-coverஅந்த இருபதில் இருந்து என்னுடைய சிறப்பு ஐந்து அம்சம் என்று சஞ்சய் காந்தி சிலவற்றைத் தேர்ந்தெடுத்தார்:
1) முதியோர் கல்வி
2) வரதட்சிணை ஒழிப்பு
3) ஜாதியை முற்றிலும் அழிப்பது
4) மரம் நடுவது
5) கருத்தடை
கொத்தடிமைக் கூலி முறையை நீக்குவது, அவ்வாறு கடன் பத்திரம் கொடுக்கப்பட்டு, அடிமைகளாக வேலை செய்வோருக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவது, பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி புத்தகங்களை வழங்குவது போன்றவையும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்று இருந்தன. சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத்திட்டத்தில் குடிசை வாற்று மாரியமும் முக்கிய இடம் பிடித்திருந்தது. ஆனால், குடிசைகளையும் சேரிகளையும் நீக்குகிறேன் என்னும் பெயரில் வீடற்றவர்களை நசுக்குவதற்கான திட்டமாக அது ஆகிப் போனது. முக்கியமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் சஞ்சய் காந்திக்கு ஆர்வம் இருந்தது. அதற்கான இடையூறுகளை, பழைய வீடுகளை, ஆக்கிரமிப்புகளை நீக்குவதில் அசுரத்தனமான செயல்பாட்டோடு அவர் இயங்க ஆரம்பித்தார். அதுவே, மக்களின் அதிருப்திக்கு இட்டுச் சென்றது.

மிசாவிற்குப் பிறகு
ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்டு, லோக்தளம் ஆகிய நான்கு பெரிய கட்சிகளும் “ஜனதா கட்சி” என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. இ.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகஜீவன்ராம் (மத்திய விவசாய மந்திரி) விலகினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெரிய தலைவராக விளங்கிய ஜெகஜீவன்ராம் அதுவரை இந்திரா காந்தியின் வலது கரமாக விளங்கியவர். ஜெகஜீவன்ராமை பின்பற்றி மத்திய மந்திரிகள் எச்.என். பகுகுணா, நந்தினி சத்பதி (ஒரிசா முன்னாள் முதல் மந்திரி), கே.ஆர்.கணேஷ், டி.என்.திவாரி ஆகியோரும் இ.காங்கிரசை விட்டு விலகினர்.
ஜனாதிபதி கனவுகள்
நேருவின் தங்கையும், பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவருமான விஜயலட்சுமி பண்டிட், இந்திரா காந்தியைத் தாக்கி அறிக்கை விடுத்தார். “நெருக்கடி நிலை பிரகடனம் செய்து தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வந்த ஜனநாயகத்துக்கு களங்கம் உண்டாக்கிவிட்டார் இந்திரா காந்தி. இந்தியாவில் மீண்டும் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் ஜனதா கூட்டணி வெற்றி பெறவேண்டும்” என்று அறிக்கை விடுத்தார். ஜனதா வெற்றி பெற்றால் தனக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்ததார்.
தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, நவம்பர் 2, 1977ல் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். தேர்தலை தள்ளிப்போடும்படி இந்திரா காந்தி வற்புறுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியால் ஜனாதிபதி மரணம் அடைந்ததாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.

6695573_orig

கட்டாயக் கருத்தடை
நெருக்கடி நிலை அமலுக்கு வந்த ஐந்து மாத காலத்திற்குள் 37 லட்சம் பேர் கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்கும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
சஞ்சய் காந்தி தேர்தல் பிரசாரம் செய்யப்போன சில இடங்களில் அவருக்கு எதிராக விதவைப் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். “கட்டாய கருத்தடையால் கணவரை இழந்தோம். நீ குற்றவாளி!” என்று அவர்கள் குரல் எழுப்பினர். சஞ்சய் காந்தி தான் பேசிய கூட்டங்களில் கட்டாய கருத்தடை திட்டத்தை நியாயப்படுத்திப் பேசினார்.
புதிய ஆட்சி
1966 ஜனவரி மாதம் லால்பகதூர் சாஸ்திரி திடீர் என்று காலமானதால், பிரதமர் தேர்தல் நடந்தது. அதில், இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு, தேசாய் தோல்வி அடைந்தார். 14 ஆண்டுகளாக தேசாய் கண்டு வந்த “பிரதமர் பதவி கனவு” 1977 மார்ச் 24ஆம் தேதியில் பலித்தது.
ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், “என் கடமை முடிந்துவிட்டது” என்று அறிக்கை வெளியிட்டார். அடுத்த நாளே அவர் உடல் நலம் மிகவும் மோசமானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்துவிட்டதால், ரத்தத்தை சுத்திகரிக்க “டயாலிஸ்” சிகிச்சை அளிக்கப்பட்டது.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா. ராமச்சந்திரன், மத்திய மின்துறை அமைச்சராக பதவியேற்றார். அவருடைய முயற்சியால் தேங்கிக் கிடந்த தூத்துக்குடி அனல் மின் நிலையப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 1979 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தூத்துக்குடியின் முதல் 210 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் தன் உற்பத்தியை தொடங்கியது.
தமிழகக் கூட்டணிகள்
நெருக்கடி நிலையின்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. நெருக்கடி நிலையை முதலமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். இதன் காரணமாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு 1976 ஜனவரி மாதம் 31ஆம்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நான்கு மாதத்தில் (1975 அக்டோபர் 2) காமராஜர் காலமானார்.
அதன் பிறகு 1977 தேர்தலில், அ.தி.மு.க, இ.காங்கிரஸ், வ.கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், இ.கம்யூனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் அதிமுக + இந்திரா காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. திமுக வடசென்னை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அங்கு ஆசைத்தம்பி வெற்றி பெற்றார்.
சிறைப் படலம்
உள்துறை மந்திரி சரண்சிங் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று சி.பி.ஐ. டைரக்டரை அழைத்தார். “இந்திராவைக் கைது செய்யத் தயாராகுங்கள்” என்று கட்டளையிட்டார்.
அரசாங்க வக்கீல் தமது வாதத்தில் கூறியதாவது: “தேர்தல் பிரசாரத்திற்கு பல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஜீப்களை இந்திராவும் அவர் மகன் சஞ்சய்காந்தியும் பயன்படுத்தினார்கள். பம்பாயில் பெட்ரோல் கிணறுகள் தோண்ட பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.
இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இதற்கு பதிலளித்து கூறியதாவது: “இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இவ்வாறு பிராங்க் அந்தோணி கேட்டார். முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே இந்திரா காந்தியை நீதிபதி விடுதலை செய்தார். ஒரே நாளில் விடுதலை ஆவோம் என்று இந்திரா காந்தியே நினைத்திருக்கமாட்டார்.
மன்னிப்பு படலம்
சுதந்திரப் போராட்டத்தின்போது நேருவும், ஜெயப்பிரகாசரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். நேருவின் மனைவி கமலாவும், ஜெயப்பிரகாசரின் மனைவியும் உயிர்த்தோழிகள். இந்திரா காந்தி சிறு குழந்தையாக இருந்தபோது ஜெயப்பிரகாசர் செல்லமாகத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார். ஜனதா கட்சியை உருவாக்கிய ஜெயப்பிரகாசர் உடல் நிலை மோசம் அடைந்து, பீகார் தலைநகரான பாட்னாவில் படுத்த படுக்கையில் இருந்தார். அவரை இந்திரா காந்தி போய் பார்த்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“இந்து! அதையெல்லாம் மறந்து விட்டேன்! மன்னித்து விட்டேன்” என்றார் ஜெயப்பிரகாசர்.
லண்டன் பயணம்
இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு வசதியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் டி.பி.சந்திர கவுண்டர் தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அங்கு 1978 நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்திரா காந்தி 1978 நவம்பர் 12ஆம் தேதி லண்டன் சென்றார். அவருடைய பாஸ்போர்ட்டை ஜனதா அரசு முடக்கி வைத்திருந்தபோதிலும், லண்டனுக்கு மட்டும் போய்வரக்கூடிய குறுகிய கால பாஸ்போர்ட்டை வழங்கியது.
ஆனால், மத்தியில் ஆளும் ஜனதா கட்சி விசாரணை குழு, பாராளுமன்ற உரிமை மீறல் குற்றத்தை இந்திரா செய்திருப்பதாக தீர்ப்புக் கூறியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு இந்திரா காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்வது என்றும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அவரை சிறையில் அடைப்பதென்றும் ஜனதா கட்சி முடிவு செய்தது.
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் – எம்.ஜி.ஆர்.
இந்த சமயத்தில் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.டி.சோமசுந்தரம் அமைச்சராகப் பதவி ஏற்றதால் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆதரவுடன் அங்கு இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார்.
இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ஆனால் இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் ஆவதை மொரார்ஜி தேசாய் விரும்பவில்லை. உடனே அவர் எம்.ஜி.ஆருடன் தொடர்பு கொண்டு, “இந்திரா காந்தியை ஆதரிக்காதீர்கள்” என்று கூறினார். இதனால் எம்.ஜி.ஆருக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டது. “பிரதமரே வேண்டாம் என்று கூறுவதை எப்படி செய்வது?” என்று யோசித்தார். பின்னர், “தஞ்சை தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவருக்குப் போதிய பாதுகாப்பு கொடுப்பது இயலாத காரியம்” என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் தஞ்சையில் போட்டியிடும் திட்டத்தை இந்திரா கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஷா கமிஷன்
“நெருக்கடி நிலை”யின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியை ஷா கமிஷன் நேரில் அழைத்து விசாரித்தது. நீதிபதி கேட்ட எந்தக் கேள்விக்கும், இந்திரா பதில் அளிக்க மறுத்தார். “நான் பிரதமராகப் பதவி ஏற்கும்போது, ரகசியக் காப்பு பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறேன். எனவே, பதில் அளிக்க இயலாது” என்றார். ஷா கமிஷன் தனது 500 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்தது. அதில், நெருக்கடி நிலையின்போது நடந்த பல அத்துமீறல்கள் நடந்தது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திரா காந்தி மீது குறிப்பிட்ட எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை.
அங்கே சஞ்சய் காந்தி – இங்கே இன்னொரு மகன்
இந்த சமயத்தில், மொரார்ஜி தேசாய் மகன் காந்தி தேசாய் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டன. இது பற்றி விசாரணை நடத்தவேண்டும் என்று, மொரார்ஜிக்கு சரண்சிங் கடிதம் எழுதினார். “வெறும் வதந்தியை மட்டும் அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தமுடியாது” என்று தேசாய் பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் பதவியை சரண்சிங்கும், சுகாதார அமைச்சர் பதவியை ராஜ்நாராயணனும் ராஜினாமா செய்தனர்.

ஒரு சில எண்ணங்கள்

குடிமகனாக உரிமை இல்லாத காலம் என்பதை ‘நெருக்கடி நிலைக்காலம்’ எனலாம். பத்தொன்பது மாதங்களாக ஜனநாயகப் பண்பற்ற ஆட்சி நிலவி வந்திருக்கிறது. பாடபுத்தகத்தில் ஓரிரு பத்திகள் இடம் பெற்றிருக்கும்.
இப்போது அமெரிக்காவில் இடம்பெறும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மீதான கருப்பு என்னும் இனம் மீதான காவல்துறை அடக்குமுறைகளைப் பார்க்கிறோம். சுதந்திர நாட்டில் இருப்பதால், அந்த சிக்கல்களை சுதந்திரமாக ஊடகத்தில் பேசமுடிகிறது. சமூக மிடையங்களில் எழுத முடிகிறது. விழியத்தில் பதிவு செய்து யூ டியூபில் பலரோடு பகிர முடிகிறது. அந்தப் பிரச்சினை குறித்த பேச்சை முன்னெடுத்து சென்று, தீர்வுகளைக் காண உதவும் அத்தாட்சிகளை, பொது இடங்களில் வைக்க முடிகிறது.
அது போன்றதோர் குடியாட்சிக்கு ஒவ்வாத நிலை நிலவினால், அந்தக் காலம் எப்படி இருக்கும்? எமர்ஜென்சி காலம் போல் இருக்கும்.
தமிழகத்தினருக்கு நெருக்கடி காலப் பிரச்சினைகள் என்னவென்று தெரியாத நிலை இருந்திருக்கும். எனக்கு நினைவு தெரிந்து கவர்னர் (பி.சி. அலெக்ஸாண்டர்) ஆட்சி அமலில் இருந்த போது ஒரு நடுத்தர மனநிலை எப்படி இருந்தது? 1980களில் என் தந்தையும் அவருடைய நண்பர்களும் அரசியலைப் பற்றி பேசும்போது, தேர்தல் நடக்காத மக்களரசு இயங்காத அவசரகால நிலைதான் இந்தியாவிற்கு சிறந்தது என்று கூறுவார்கள். “நெருக்கடி நிலையில் எல்லா இரயில்களும் சரியான நேரத்தில் இயங்கின.”
மத்திய அரசின் கிடுக்கிப்பிடி ஒவ்வொரு விஷயத்திலும் நீடித்தது. பங்களூரில் உள்ள சாதாரண ஓட்டலின் சாப்பாட்டை ஒரு ரூபாய்க்கு தருமாறு கட்டாயப்படுத்தினார்கள். கல்யாணத்தில் அளவு சாப்பாடு போடாவிட்டால், திருமணங்கள் பாதியில் நிறுத்தப்படும் என்று பயமுறுத்தும் தமிழக கவர்னர் ஆட்சி செலுத்தினார். சாதாரண மக்களுக்கு இத்தனை நெருக்கடி என்றால், நட்சத்திர ஓட்டல் விருந்துகளுக்கோ, டெல்லியில் நடக்கும் உபசரிப்புகளுக்கோ எந்த வஞ்சகமும் வைக்காமல், நெருக்கடி இல்லாத நிலை நீடித்தது.
இந்திரா காந்தி தேர்தலில் ஜெயித்தது செல்லாது என்பதுதான் எமர்ஜென்சிக்கு முக்கிய காரணம் என்றாலும், அதற்கான மைய வித்து வேறெங்கோ விதை விட்டிருந்தது. பருவமழை பொய்த்த இரண்டு வருடங்கள் விவசாயத்தைக் கடுமையாக பாதித்து இருந்தது. உலக அளவில் பெட்ரோல் விலை சரசரவென்று விலை உயர்ந்து கொண்டிருந்தது. வளைகுடா நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டணி தோன்றி சர்வதேச வர்த்தக உறவுகளையும் அணிசாரா நாடுகளின் கூட்டணியையும் ஆட்டிக் கொண்டிருந்தது. பணவீக்கம் பதினைந்து சதவிகிதமாக அதிரடியாக ஏறியது.
பருப்பு வாங்கவும் அரிசி வாங்கவும் வீடு வாடகை பிடிக்கவும் செலவு அதிகமாகிய அதே சமயம், சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. போர் முடிந்த பொருளாதாரத் தேக்கம் பொதுமக்களை நேரடியாக பாதித்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நினைத்த மைய அரசு, தனது ஊழியர்களுக்கான ஊதியத்தை உச்சவரம்பு போட்டு முடக்கியது. புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. வருமான வரி கட்டும் அனைவரிடமும் கட்டாய சேமிப்பாக, பெரும்பங்கை, வங்கிக் கணக்கில் எடுத்துக் கொண்டது. இதனால், வர்த்தகர்களின் அதிருப்தியும், நடுத்தர மக்களின் கோபத்தையும், அடித்தள மக்களின் வருமான இழப்பையும் சம்பாதித்தது.
தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. இரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அந்த வேலை நிறுத்தங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. பணி நீக்கமா அல்லது மீண்டும் பாதி சம்பளமா என்று பயமுறுத்தலில் போராட்டக்காரர்களின் ஒற்றுமை பிசுபிசுத்தது.
இந்தியாவில் மூன்று வகையான நெருக்கடி நிலைகளை பிரயோகிக்க முடியும்:
1. பொருளாதாரக் காரணங்களுக்காக – இதுவரையில் இந்தியாவில் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதில்லை.
2. மாநில அளவில் – கவர்னர் ஆட்சி: மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவது.
3. பொது – வேற்றுநாட்டு அச்சுறுத்தல் காரணமாகவோ அல்லது அன்னிய நாட்டு படையெடுப்புகளினாலோ அல்லது உள்நாட்டு கலவரங்களினாலோ அறிவிக்கலாம்.
1975 முதல் 1977 வரை நிலவிய ‘பொது’ நெருக்கடி, பல அதிகாரங்களை நடுவண் அரசிற்கு அளித்தது. தனி மனித சுதந்திரங்களைக் குறைப்பது, ஊடகத்துறையை தணிக்கைக்கு உள்ளாக்குவது, ஹேபியஸ் கார்ப்பஸ் மனு கூட தாக்கல் செய்யவியலாமல் காலவரையற்ற சிறைவாசத்திற்கு உள்ளாக்கல் போன்றவற்றை நெருக்கடி நிலைக்கால சட்டங்கள் வசதியாக்குகின்றன. 1962 முதல் ஆறு ஆண்டுகளுக்கு இதே ‘பொது’ நெருக்கடி நிலை அமலில் இருந்தது. ஆனால், அப்பொழுது இந்தியாவை சீனா முற்றுகையிட்டு போர் புரிந்து கொண்டிருந்தது.
எமர்ஜென்சி காலகட்டம் முடிந்த பின், அந்தக் காலம் குறித்து பல கலைப் படைப்புகள் உருவாகின. இந்தியாவைக் குறித்த எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கவும் நெருக்கடி நிலைக் காலம் உதவியது. சல்மான் ருஷ்டி, ’மிட்நைட் சில்ரன்’ எழுதினார். வி எஸ் நைபால், ‘இந்தியா: ஒரு அடிபட்ட தேசம்’ (India: A wounded Country) எழுதி நோபல் பரிசு வாங்கினார். ‘கிஸ்ஸா குர்ஸி கா’, நஸ்பந்தி, ஆந்தி என்று தடைசெய்யப்பட்ட படங்கள் வெளியாகின.
மேலும்:
1. ஸ்வராஜ்யா – எமர்ஜென்சி நாற்பதாம் ஆண்டு நிறைவு நினைவுகள்
2. Emergency:A bureaucrat recalls the dark months : Ajit Mozoomdar
3. எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் – எம்.ஜி.தேவசகாயம் (தமிழில் : எம்.ராம்கி)
4. Indira Gandhi and the Emergency as Viewed in the Indian Novel By Dr. O. P. Mathur

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.